படித்தவை ரசித்தவை – 6 - அறுசுவை கட்டுரை பகுதி - 15877

Books Review

படித்தவை ரசித்தவை – 6

பகுதி 6

இந்த வாரம் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் லஷ்மி அவர்களைப் பற்றியும் அவருடைய நாவல்கள், நெடுங்கதைகள் பற்றியும் கொஞ்சம் பேச நினைக்கிறேன்.

Lakshmiசாந்தமான முகம், முன் நெற்றியில் சிறிது நரை, சற்றே பூசினாற்போன்ற உடல் வாகு, இவருடைய புகைப்படத்தைப் பார்த்தாலே ஏதோ நமக்கு மிகவும் தெரிந்தவர் என்ற எண்ணம் தோன்றும்.

முதல் முதலில் இவரது கதை என்று நான் படித்தது அத்தை என்ற தொடர்கதை. இது குமுதத்தில் வெளி வந்தது. அப்போதுதான் கதை, நாவல், சிறுகதை என்ற வார்த்தைகள் எல்லாம் கொஞ்சம் அறிமுகம் ஆகத் தொடங்கிய நேரம். கதையை விட மாருதி வரைந்திருந்த ஓவியங்கள் ரொம்பவும் கவனத்தை இழுத்தன. ஓவியர் மாருதி தான் வரையும் ஓவியங்களில் சிறிதேனும் தன்னுடைய சாயலை(அது ஆண், பெண் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்) கொண்டு வருவாராம்.

இந்தக் கதையை சில வருடங்கள் வெளிநாட்டில் தங்கி விட்டு பின் தாயகம் திரும்பும் நடுத்தர வயதுப் பெண்மணியின் பார்வையிலிருந்து சொல்வதாக அமைத்திருந்தார்.

தன்னுடைய காதலை அந்தஸ்தை காரணம் காட்டி அண்ணன் ஏற்காததால் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு பெண், சிறிது நாளில் கணவனையும் இழக்கிறாள். கணவனின் வைத்தியத்துக்காக அண்ணனிடம் கெஞ்சியும் அவர் இரக்கம் காட்டவில்லை. மனம் கசந்து, வைராக்கியத்துடன் ஒரு பணக்காரர் வீட்டில் வேலைகாரியாக பணிபுரிகிறாள். அவர்களுடன் வெளிநாட்டுக்கும் செல்கிறாள்.

பல வருடங்களுக்குப் பின்னர் தமிழ் நாட்டிற்கு வருகிறாள். எஜமானியம்மாவின் வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவளுக்கு. கடைத் தெருவிற்கு செல்லும்போது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு இளம்பெண்ணும் ஒரு வாலிபனும் அறிமுகம் ஆகிறார்கள்.

அந்தப் பெண் தன்னுடைய அண்ணன் மகள் என்று அறிகிறார். அந்தப் பெண்ணுக்கும் இளைஞனுக்கும் காதல். அவன் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன்.

தன் காதலை எதிர்த்தது போல தன் மகள் காதலையும் எதிர்ப்பாரா அண்ணன் என்ற கேள்வி எழுகிறது அவருக்கு. உடல் நலிந்த அண்ணனை ஒரு நாள் சந்திக்கிறார். இப்படிப் போகிறது இந்தக் கதை.

எந்த இடத்திலும் கொஞ்சம் கூட போர் அடிக்காத எழுத்து நடை அவருடையது. இதனாலேயே அவருடைய கதைகளை தேடித் தேடிப் படிக்கத் தோன்றியது. லைப்ரரிக்குப் போனால் முதலில் இவருடைய நாவல்களைத்தான் எடுக்கத் தோன்றும்.

பின்னர் வீட்டில் இருந்த பைண்ட் செய்யப்பட்ட கதைகளால் ஆன புதையல்களில் இருந்து, மிதிலா விலாஸ், நாயக்கர் மக்கள் இரண்டு நாவல்களும் கிடைத்தன.

அத்தை தொடர்கதை தொடங்கியதும், வீட்டிலிருந்தவர்கள் ரொம்ப நாளா எழுதாமல் இருந்தாங்களே, இப்ப சௌத் ஆஃப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்துட்டாங்களாம் என்று பேசிக் கொண்டது சரியாகப் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது, இவர் ஆனந்தவிகடனில் நிறைய தொடர்கதைகள் எழுதிய புகழ் பெற்ற எழுத்தாளர் என்று.

தொடர்ந்து லஷ்மியின் நாவல்கள், அவரது சுயசரிதை முதல் மற்றும் இரண்டாம் பாகம் எல்லாம் படித்தேன். அவரது ஒரு கதாசிரியையின் கதை (1 & 2). அவசியம் படியுங்கள். பெண்கள் படிக்கவே கூடாது என்றிருந்த காலத்தில், அவர் ஆண்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டது, அதற்குக் கிளம்பிய எதிர்ப்பு, பின்னர் அவர் மெடிக்கல் காலேஜில் சேர்ந்தது, பணக் கஷ்டத்தால் படிப்பு தடைப் படுமோ என்று பயந்தது, தைரியமாக விகடன் அதிபர் வாசனிடம் பேசி, தன்னுடைய கதைகளைப் பிரசுரிக்கக் கொடுத்தது என்று வியக்க வைக்கும் சம்பவங்கள். அவர் படித்த கால கட்டம் உலகப் போர் நடந்த நேரம் என்பதால் சில சரித்திர சம்பவங்களையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். மனதில் நின்ற ஒரு சம்பவ வர்ணனை மிகச் சிறிய வயதில் இவர் பாட்டியின் வீட்டில் வளர்ந்த போது, குடியானவப் பெண்களை ஏன் பாட்டி வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்கிறார் என்று கேட்டபோது, அவரது பாட்டி அவர்கள் நம்மைத் தொடக்கூடாது என்றாராம். பின்னர் பல வருடங்களுக்குப் பின்னாளில் தென்னாப்பிரிக்காவில் கணவருடன் பிக்னிக் சென்றபோது, வழியில் ஒரு வெள்ளைக்காரரை கார் ரிப்பேர் சம்பந்தமாக சந்தித்திருக்கிறார்கள், முதலில் அன்போடு அவர்களுக்கு தேனீர் கொடுத்தாராம். பின்னர் சிறிது நேரத்தில், பரபரப்போடு வந்து, தயவு செய்து வீட்டின் பின்புறம் சென்று அருந்துங்கள். என் நண்பர்கள் வருகிறார்கள், நீங்கள் இங்கு தேனீர் அருந்துவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்றாராம். கணவர் இது தென்னாப்பிரிக்காவின் இன, நிற பேத வெறி என்று சுட்டிக் காட்டியபோது, தனக்கு தன்னுடைய பாட்டியின் கிராமத்து சம்பவங்கள் நினைவுக்கு வந்ததாக எழுதி இருக்கிறார்.

அதே போல இவர் பிறந்த அன்று பிறந்த பெரியம்மாவின் மகள், வேறு ஊரில் நோய்வாய்ப்பட்டு இறந்தாராம். அவர் இறந்த அதே சமயம், ஹாஸ்டலில் இவரது அறைக் கதவைத் தட்டி, அந்த சகோதரி விடை பெற்றதாகத் தோன்றியதாம். வியப்பாக இருக்கிறது.

கண்டிப்பாக மிஸ் பண்ணி விடாமல் படிக்க வேண்டிய சுய சரிதை இது.

கல்கி, தேவன் போன்ற புகழ்மிக்க எழுத்தாளர்களின் காலத்தில் எழுத ஆரம்பித்தவர், பின்னர் சுஜாதா, அனுராதா ரமணன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ் குமார் என்று இளைய தலைமுறை எழுத்தாளர்களின் காலத்திலும் ஏராளமான மாத நாவல்கள் எழுதிக் குவித்தார். பின்னாட்களில் இவரைப் பற்றிய குறிப்புகளை படித்த பொழுது, இவர் எழுதிய காஞ்சனையின் கனவு, பெண் மனம் இரண்டு நாவல்களும் திரைப்படமாக வந்ததாக அறிந்தேன். இரண்டு நாவல்களையும் சமீபத்தில்தான் படித்தேன். இதில் காஞ்சனையின் கனவு சினிமாவின் விளம்பரத்தை கல்கியின் கதைகள் பைண்ட் செய்யப்பட்டிருந்த பழைய கல்கி பத்திரிக்கையில் பார்த்திருக்கிறேன்.(சாரி, அடிக்கடி பைண்ட் செய்தது என்று குறிப்பிடுகிறேன், என்ன செய்ய, என் இலக்கிய அறிவுக்கான(!) அறிமுகம் இப்படித்தான் ஆரம்பித்தது).

இருவர் உள்ளம், சிவாஜி கணேசன், சரோஜாதேவி நடித்தது. படம் பார்த்ததில்லை, ஆனால் முன்பு இலங்கை வானொலியில் (இந்தப் படத்தில் இடம் பெற்ற)பி.சுசீலா பாடிய இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா பாடலை அடிக்கடி ஒலிபரப்புவதைக் கேட்டிருக்கிறேன்.

லஷ்மியின் சமீப கால நாவல்கள் விறுவிறுப்பாக மட்டும் அல்ல, காலத்துக்கேற்ற ஒரு மெசேஜ் அதில் இருக்கும். ஒரேயடியாக தியாக தீபமாக இருக்கத் தேவையில்லை, கணவன் கொடுமைக்காரனாக இருந்தால் அவனிடமிருந்து விலகி புது வாழ்வு அமைத்துக் கொள்ளலாம் என்று சொல்லும் கதை வானம்பாடிக்கு ஒரு விலங்கு. இன்னொரு நெடுங்கதை - இவளா என் மகள் என்று தலைப்பு என்று நினைக்கிறேன் கதை இதுதான். திருமணமான மகள். ஏற்கனவே கல்லூரியில் படிக்கும்போது பொருத்தமில்லாத ஒருவனுக்கு காதல் கடிதம் எழுதி, பின் தப்பிக்கிறாள். பின் பணக்கார இளைஞன் ஒருவனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. அவனுக்கு அவன் தகப்பனாரைப் பற்றி விமரிசித்து அவள் கடிதம் எழுதப் போக, கல்யாணம் நின்று விடுகிறது. ஒரு வழியாக நல்ல மாப்பிள்ளை கிடைத்து, திருமணம் ஆகிறது. ஆனால் மகளுக்குப் பொறுப்பு வந்த பாடில்லை, வீட்டை ஒழுங்காகப் பார்த்துக் கொள்வதில்லை, அப்பாவும் பாட்டியும் ரொம்பவும் தாங்குவதால், அடிக்கடி அம்மா வீட்டுக்கு வந்து கொஞ்சுவது, தாம்தூம் என்று செலவு செய்வது என்று இருக்கிறாள். இது கூடப் பரவாயில்லை. கணவனின் நண்பன் அவளிடம் நெருங்கிப் பழகுகிறான். அந்த நண்பன் இவள் காரணமாக தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று பிதற்றித் திரிகிறான். லேடீஸ் கிளப்பில் தன் மகளைப் பற்றிய வம்புப் பேச்சுகளைக் கேட்டு மனம் நோகிறாள் தாய். கணவனிடமும் மாமியாரிடமும் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். மருமகன் ஆரம்பத்தில் தன் நண்பர்கள் வீட்டுக்கு வந்த போது பெருமையாகக் கருதியவன், இப்போது வெளிப்படையாக மனைவியை கண்டிக்க முடியாமல் தவிக்கிறான். அவன் கண்டித்தாலும் மகள் கேட்கிற மாதிரி இல்லை. பிற ஆண்கள் தன் அழகைப் புகழ்ந்து பேசுவதை பெருமையாக நினைக்கிறாளே தவிர, அது எதில் முடியும் என்று சிந்திக்கிற புத்தி இல்லை. இந்தப் பிரச்னைக்கு என்னதான் முடிவு? ஒரு முறை கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்த மகளை, இனி இங்கே வரக் கூடாது, பிற ஆண்களிடம் பரிசுப் பொருட்கள் பெற்றுக் கொண்டது தவறு, நான் உனக்கு சப்போர்ட் செய்ய மாட்டேன் என்று கண்டித்து (கிட்டத்தட்ட) துரத்தி விடுகிறாள்! ஆனால் மனசுக்குள் பயம்.. மகள் விபரீத முடிவு எதுவும் எடுத்து விட்டால் என்ன செய்வது என்று. ஒரு வழியாக மகள் தன்னுடைய விளையாட்டுப் போக்கு எந்த வினையாக முடியும் என்று புரிந்து கொண்டு, கணவனிடம் மன்னிப்புக் கேட்டு, மீண்டும் இணைகிறார்கள்.

திருமணமாகாத இளம்பெண்களைப் போலவே, திருமணம் ஆன பெண்களும், பிற ஆண்களுடன் பழகும் விஷயத்தில் நல்லது கெட்டது உணர்ந்து, ஜாக்கிரதையாகப் பழக வேண்டும் என்பதை அழகாக சொன்ன நெடுங்கதை இது.

இரண்டு பெண்கள் என்று ஒரு நெடுங்கதை. கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு எஜமானி அம்மா, அவர் வீட்டில் பல காலமாக வேலை செய்யும் ஒரு சமையல்காரம்மாள். எஜமானியால் தன்னுடைய மகன், மருமகளுடன் அனுசரித்துப் போக முடியவில்லை. சொத்தும் சுகமும் தனக்கு மருமகளிடம் இருந்து அன்பையும் மதிப்பையும் பெற்றுத் தரவில்லையே என்று பொருமுகிறார். அதே சமயம் தன்னுடைய வீட்டில் தன் நிழலில் இருக்கும் சமையல் வேலை செய்யும் பெண்ணின் மகனும், மருமகளும் தாயிடம் அன்பாக இருப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுகிறாள்.

இந்த நெடுங்கதை என்ற வார்த்தை மறைந்த எழுத்தாளர் அனுராதா ரமணனின் கண்டுபிடிப்பு. அவரது நெடுங்கதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். அந்தத் தொகுப்பின் முன்னுரையே அப்படி ஒரு சுவாரசியம். அதில்தான் மாத நாவல்களை நெடுங்கதை என்று குறிப்பிட்டு இருந்தார். சிறுகதையை விட கொஞ்சம் பெரிது, தொடர்கதை வடிவத்தில் வரும் நாவலை விட சிறிது. அதனால் மாத நாவல்கள் மீண்டும் புத்தக வடிவில் வெளிவரும்போது அவற்றை நெடுங்கதை என்றே சொல்லலாம் என்று எழுதியிருந்தார்.

நாயக்கர் மக்கள் நாவல் இராமசாமி நாயுடுவின் மகள், கிராமத்து இளம்பெண் சித்ரா, அவளை விரும்பித் திருமணம் செய்து கொள்ளும் பாஸ்கரன், இவனை கல்லூரியில் படிக்கும்போது ஒரு தலையாகக் காதலித்து, பின் அது நிறைவேறாமல் போனதால் சித்ராவின் சித்தப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படும் ரேவதி. கல்லூரி ஆசிரியராக வேலை பார்க்கும் சித்ராவின் அண்ணன் மோகனரங்கனும் அந்தக் கல்லூரி மாணவி சரோஜினியும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.

நாயக்கர் இந்தக் காதலை மிகக் கடுமையாக எதிர்க்கிறார். ரேவதி சித்ராவின் கல்யாணத்தைத் தடுத்து நிறுத்தப் பார்த்து, அது முடியாமல் போனதும், சித்ராவின் திருமண வாழ்க்கையில் எவ்வளவு குழப்பம் உண்டாக்க முடியுமோ அத்தனையையும் செய்கிறாள்.

வயதிலும் படிப்பிலும் குறைந்தவளான சித்ரா, ஆரம்பத்தில் சித்தியை முழுதுமாக நம்பியவள், பின் தன் உள்ளுணர்வால் சித்தியின் சதியைப் புரிந்து கொண்டு, அதை தைரியமாக எதிர்த்து, தன் கணவனிடம் உண்மைகளை விளக்கி, தன் வாழ்க்கையை சீராக்கிக் கொள்கிறாள். பல போராட்டங்களுக்குப் பிறகு, மோகனரங்கன் சரோஜினி திருமணமும் நடக்கிறது.

ஆபத்து என்று வந்தால், புழு கூட தலையைத் தூக்கிப் பார்க்கும் என்பார்கள். அது போல இந்த நாவலில் சித்ரா தன் சித்தியிடம் துணிச்சலாகப் பேசி வாதாடும் பகுதி ரொம்பவும் நன்றாக இருந்தது.

மங்களாவின் கணவன் என்றொரு நாவல். மங்களாவுக்கு இரண்டு முறை திருமணம் நிச்சயமாகி, இரண்டு முறையுமே மாப்பிள்ளையாக நிச்சயிக்கப் பட்டவர்கள் உடல் நலக்குறைவால் இறந்து விடுகிறார்கள். அவ்வளவுதான், மங்களா ராசியில்லாத பெண் என்று ஒதுக்கி வைக்கப் படுகிறாள்.(கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன் திரைப்படம் நினைவுக்கு வருகிறதா!) மகளை ரொம்பவும் செல்லமாக வளர்த்த அப்பாவும் கவலையில் இறக்கிறார். மங்களா இப்போது வேலைக்குப் போகிறாள். அண்ணன், அண்ணி ஆதரவில் இருக்கிறாள். அப்பா அவளது திருமணத்துக்கான பணம் நகைகள் எல்லாம் வைத்து விட்டுப் போயிருந்தாலும், கல்யாணத்துக்கான முயற்சியை எடுக்க அண்ணன் ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக, தன் மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துகிறார்! அண்ணி மங்களாவின் வைரத்தோடு சும்மாதானே இருக்கிறது, அது தன் மகளுக்கு வேண்டும் என்று வற்புறுத்தி கேட்கிறாள். ஏன் அண்ணி, உங்கள் வைரத்தோட்டை உங்கள் மகளுக்குப் போடலாமே என்று மங்களா கேட்க, அண்ணியின் பதில் சாதாரணத் தோடு போட்டுக் கொண்டு என் பிறந்த வீட்டுக்கு எப்படிப் போவது!! வீட்டை விட்டு வெளியேறி, தனியே தங்க அவளுக்கு தைரியமில்லை. அவ்வபோது மங்களாவிற்கு ஆறுதலாக இருக்கும் ஒரு தோழியும் திருமணமாகி வெளியூர் சென்று விடுகிறாள். அண்ணியோ வைரத்தோடு கொடுக்க இஷடமில்லாவிட்டால், மங்களா வீட்டை விட்டுப் போக வேண்டியதுதான் என்று மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் மங்களா ஹாஸ்டலில் தங்குகிறாள். அலுவலக மானேஜர் காசிநாத் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். திருமண ஏற்பாடுகள் நடைபெறும் சமயம் காசிநாத் வெளியூரில் விபத்தில் சிக்குகிறான். மங்களா நொந்து போகிறாள், காசிநாத்துக்கு தன் ராசியால்(!) எதுவும் ஆபத்து வந்து விடுமோ என்று பயம். நல்ல வேளை, எல்லாம் சுபமே!

இந்தக் கதையைப் படித்தபோது என் மனதில் தோன்றிய எண்ணம் என்ன தெரியுமா அப்பா அம்மா இருந்து நல்லபடியாக மகளின் கல்யாணத்தை நடத்தி விட வேண்டும், அப்படி இல்லாமல் மற்றவர்களிடம் கை காட்டி விடப்பட்டால், அது மிகப் பெரிய வேதனை என்று நினைத்தேன். ஏன் அப்படித் தோன்றியது என்று என்னால் விளக்கி சொல்ல முடியவில்லை, அல்லது ... எனக்கு சொல்லத் தெரியவில்லை.

இன்னும் நிறைய நாவல்கள், நெடுங்கதைகள்.. எல்லாவற்றையும் ரசித்து விமர்சிக்க ஆரம்பித்தால் பக்கங்கள் நீளும். டாக்டர் ரேவதி, சாரதா என்ற கதாபாத்திரங்களைப் படைத்து அவர்களை மையமாக வைத்து நிறைய கதைகள் எழுதி இருக்கிறார். அவருடைய படைப்புகளில் அரக்கு மாளிகை என்ற நாவல் என்னை அவ்வளவாகக் கவரவில்லை. தொடர்கதையாக எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நிறைய திருப்பங்கள், அதனாலேயே நாவலாகப் படித்தபோது, முடிவு சப்பென்று இருந்த மாதிரி இருந்தது.

பெண் மனம், காஞ்சனையின் கனவு இந்த இரண்டு நாவல்களையும் சமீபத்தில்தான் படித்தேன் என்று சொன்னேனல்லவா இந்த இரண்டு நாவல்களுமே வாசகர்களால் விரும்பிப் படிக்கப் பட்டவை, அரசாங்கத்தின் விருதுகளும் பெற்றவை. படிப்பதற்கும் விறுவிறுப்பாக இருந்தன. ஆனால் இவற்றைப் படித்த போது, எனக்கு சிறிது ஏமாற்றமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

பெண் மனம் கதாநாயகன் பெண்களை விளையாட்டுப் பொருளாக நினைப்பவன். கதாநாயகியை வற்புறுத்தி, அவளது விருப்பம் இல்லாமலே கல்யாணம் செய்து கொள்கிறான். முதலில் கணவனை வெறுக்கும் அவள், பிறகு அவன் செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப் படும்போது, மனம் மாறி, அவன் விடுதலைக்காக பாடுபட்டு, அவனிடம் அன்பு செலுத்துகிறாள். காஞ்சனையின் கனவு நாவலோ ஜமீந்தார் வீட்டுப் பிள்ளையான கதாநாயகன் ஒரு நடனப் பெண்ணை தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் தங்க வைத்து, அவளிடம் அன்பாக இருக்கிறான். பின்னர் ஜமீனைச் சேர்ந்த ஒரு ஏழைப் பெண்ணின் அழகில் மயங்கி, அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். இரண்டு பெண்களிடமுமே அன்பாக இருக்கிறான்.(அடக் கடவுளே). மனைவி அவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். நடனப் பெண்ணோ, தன்னை அவன் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை என்று அவனுக்காக தியாகங்கள் செய்து, இறந்தும் விடுகிறாள். கடைசியில் மனைவியைக் கண்டு பிடித்து, மன்னிப்பு கேட்கிறான். ரொம்ப ரொம்ப வருடங்களுக்கு முன்னால் எழுதப் பட்டவை என்று நினைக்கிறேன். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் எல்லாம் இப்படித்தான் கணவனுக்காக, காதலனுக்காக - மெழுகுவர்த்தியாக உருகி உருகி வழிந்தார்களோ என்னவோ தெரியவில்லை.

கால ஓட்டத்தில் லஷ்மி அவர்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும், அது அவரது எழுத்துகளிலும், அவர் படைத்த கதாபாத்திரங்களிலும் பிரதிபலிக்கவே செய்தன. இதை நான் முரண்பாடு என்று சொல்ல மாட்டேன், பார்க்கப் போனால், ஒரே விஷயத்தைப் பற்றி, 20 வருடங்களுக்கு முன்னால், 10 வருடங்களுக்கு முன்னால், இப்போது என்று நினைத்துப் பார்க்கும்போது நம்முடைய கருத்து அப்படியே இருக்காது, எல்லோருமே நிறைய மாறி இருக்கிறோம் என்றுதான் தோன்றுகிறது.

லஷ்மி அவர்கள் அவருடைய சிறந்த பண்பை பல பேட்டிகளின் மூலம் வெளிப்படுத்தி என்னை மிகவும் கவர்ந்திருந்தார். அவருக்கு சாதாரணமாகக் கோபமே வராதாம். பத்திரிக்கை அலுவலக்த்திலிருந்து கதைகளை வாங்கிப் போக வரும் ஆஃபிஸ் பையனிடம் கூட கனிவாகத்தான் பேசுவாராம். சமீபத்தில் ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் அவரைப் பற்றி திருமதி வாசன் கூறியிருந்ததைப் படித்தேன். தன்னுடைய தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்த பின்னரே அவர் திருமணம் செய்து கொண்டாராம். அவர் மீது மரியாதை இன்னும் கூடி விட்டது.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் ஒரு விமான விபத்து நடந்தது. நிறைய பிரபலமானவர்கள் பயணம் செய்த விமானம் அது. அந்த விமான விபத்தில் மிகப் பிரபல எழுத்தாளர் ஒருவரின் மாப்பிள்ளை காலமானார். பின்னர் தன் மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார் அந்த எழுத்தாளர். அதே விமான விபத்தில் மனைவியை இழந்தவருக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்தார் அவர். குமுதம் அட்டைப் படத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப் பட்டிருந்தது. அடுத்த வாரத்தில் வாசகர் கடிதம் பகுதியில் இதைப் பாராட்டி, கடிதம் எழுதி, வாழ்த்தியிருந்தார் லஷ்மி. (இதை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த ரிதம் படம் பார்த்திருப்பீர்கள்)

தன்னுடைய டாக்டர் ப்ரொஃபஷனில் சந்தித்த சம்பவங்களில் சிலவற்றை கையில் அள்ளிய மலர்கள் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

ஒரு காவிரியைப் போல நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. ஆப்பிரிக்காவில் சில தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பத்தை கதாபாத்திரங்களாக வைத்து எழுதியிருந்தார். அங்கே நிலவி வந்த அரசியல் சூழ்நிலை, நிற பேதம் எல்லாவற்றையும் கதையோடு ஒட்டி விளக்கியிருந்தார்.

அவருடைய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான, என்னை மிகவும் கவர்ந்த இரண்டு நாவல்கள் மிதிலா விலாஸ், மீண்டும் வசந்தம்.

இவை இரண்டையும் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

அன்புடன்
சீதாலஷ்மி
சீதாம்மா

சீதாம்மா

நீங்கள் மிகப்பெரிய புத்தக விரும்பியாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பழைய எழுத்தாளர்கள் ஒவ்வொருவரையும் எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறீா்கள். லஷ்மி என்ற எழுத்தாளரைப்பற்றி உங்கள் முலம் தான் நான் கேள்விப்படுகிறேன். பொதுவாக பிரபலமான ஒரு சில எழுத்தாளர்களை மட்டுமே தெரியும். ஆனால் திறமையான எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றனர் என்பது உங்களிடம் இருந்து தான் தெரிந்துகொள்கிறேன். அடுத்த பதிவிற்காகக்(மிதிலா விலாஸ், மீண்டும் வசந்தம்) காத்துக்கொண்டிருக்கிறேன்......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சீதாலஷ்மி மேடம்

மேடம்,

உங்கள் படித்தவை ரசித்தவை பகுதியய் தவறாமல் படிப்பேன்.
ஒவ்வொருமுறையும் எழுத்தாளர் லஷ்மி பற்றி கேட்க நினைத்து பதிவு எழுதி பிறகு தவிர்த்துவிடுவேன்.
இன்றும் இந்தப் பகுதியய் பார்க்க வரும்பொழுதும் இவராய் இருக்காது என்றே நினைத்தேன். படத்தோடு பார்த்ததும் மட்டற்ற மகிழ்ச்சி.

நான் முதன் முதலில் இவரது நாவலைத்தான் படித்தேன். என் அம்மாவின் அனுமதியோடு. முதன் முதலில் படித்ததனால் என்னவோ எனக்கு இவருடைய எழுத்துகள் என்றால் கொள்ளை பிரியம்.

அதிக அளவில் அவர் நாவல்களை நான் படிக்கவில்லை. மற்ற நாவல்களும் அவ்வளவாக விரும்பி படித்ததில்லை. இவர் எழுத்துகளைப் போல் மற்ற எழுத்துக்கள் இல்லாததாலே அல்லது பெண்களைப்பற்றிய பார்வை மற்ற எழுத்தாலர்களிடம் மாறுபட்டதாலோ இருக்கலாம்.

இங்கு புத்தகங்கள் வாங்கி படிப்பது என்பதும் இயலாத காரியம்.

மிதிலாவிலாஷ் பற்றி உங்களின் பார்வையில் படிக்க விரும்புகிறேன்.

Don't Worry Be Happy.

சீதாலக்ஷ்மி, ( சீதா அம்மா, சீதாலக்ஷ்மி மேடம்)

சீதாலக்ஷ்மி,( சீதா அம்மா, சீதாலக்ஷ்மி மேடம்)

உங்களுடைய படித்தவை ரசித்தவை - 6 இப்போது தான் படித்தேன். எழுத்தாளர் லக்ஷ்மி பற்றியும், அவரது நாவல்கள் மற்றும் கதைகள் பற்றியும் அழகாக எழுதி இருந்தீர்கள். லக்ஷ்மி அவர்களின் புகைப்படம் பார்த்தவுடன் தான் உங்கள் கட்டுரையை படிக்க ஆரம்பித்தேன். மன்னிக்கவும். எழுத்தாளர் லக்ஷ்மி அவர்களின் கதைகளை என் அம்மா விரும்பி படிப்பார்கள். என் சகோதரிகளும் அவ்வப்போது படிப்பார்கள். நான் அக்காவுடன் லைப்ரரிக்கு சென்று புத்தகம் எடுத்து வந்து கொடுப்பதோடு சரி. அவர்கள் படிக்கும் போது எழுத்தாளர் லக்ஷ்மி அவர்களின் ஃபோட்டோவை பார்த்து இருக்கிறேன். அவ்வளவு தான்.

உங்கள் கட்டுரை படித்தவுடன் தான், அடடா படிக்காமல் மிஸ் பன்னிட்டோமே, என்று தோன்றுகிறது. பள்ளியின் ஆரம்ப வகுப்பில் இருந்த எனக்கு அப்போது கதை படிக்கும் பொறுமையும், புரிந்து கொள்ளும் திறனும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் எழுத்தாளர் லக்ஷ்மி அவர்கள் எழுதிய கதைகள் பற்றி நீங்கள் விவரித்து இருப்பதும், சில நிகழ்வுகளை திரைப்படங்களுடன் ஒப்பிட்டதும் அருமை.

லக்ஷ்மி அவர்களின் சுயசரிதையை பற்றி எழுதி இருந்தீர்கள். அவர்களின் தைரியமும், பல ஆண்டுகளில் அவர்களின் மனமாற்றத்தைப் பற்றி நீங்கள் சொன்ன விதமும், லக்ஷ்மி அவர்களின் கதைகளை படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளன. இது போன்ற கட்டுரைகள் எழுதி, குறைந்து கொண்டு வரும் படிக்கும் பழக்கத்தை புதுப்பிக்கிறீர்கள். இது ஒரு வகையில் புத்தகங்களுக்கு செய்யும் சேவை தான்( இலக்கியப் பணி) . தொடரட்டும் உங்கள் சேவை.

நீங்கள் வீட்டில் நிறைய புத்தகங்கள் வைத்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் பிள்ளைகள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் மட்டுமல்ல, அறுசுவையில் உள்ள நாங்களும் தான்.

சீதாலக்ஷ்மி

சீதாலக்ஷ்மி

ஒரு நிமிடம்.. மூச்சு வாங்கிக் கொள்கிறேன்.. ;)
மிக பெரிய பகுதியை நல்ல தீனியாக கொடுத்துள்ளீர்கள்..

இந்த பகுதியில் அதிகமாக பெண்கள் சம்மந்தப்பட்ட கதையாகவும் , சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.. நிறைய எழுத்தாளர்களை தெரிந்து வைத்திருப்பதும், படிப்பதுமே ஒரு கலை தான்.. இப்படி ஒருவர் இருந்தாரா என நினக்கும் அளவு இருக்கும் என்னை போன்றவர்க்கு நிச்சயம் பயன்படும் பகுதி இது...

தொடர்க உங்களின் சேவை ;-) நன்றி...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ராதாஹரி

அன்பு ராதாஹரி,

எனக்குப் பிடிச்ச எழுத்தாளர்கள் இன்னும் நிறைய பேர் இருக்காங்க. எனக்கு இப்ப இருக்கும் ஆசை என்ன தெரியுமா? ஹாரி பாட்டர் கதை முழுவதும் படிக்கணும்கறதுதான். உலகம் பூராவும் சிறுவர் சிறுமியர் அவ்வளவு ரசிச்சுப் படிக்கிறாங்களே, அதை நாமும் படிச்சுடணும்னு நினைச்சுட்டு இருக்கேன்.

தொடர்ந்து பின்னூட்டம் கொடுக்கறீங்க,சந்தோஷமாக இருக்கு. நன்றின்னு சொல்ல வேணாம்னு சொல்வீங்க, ஆனா நான் நன்றி சொல்லியே ஆகணும் ராதா.

ஆரம்பத்துல நீங்க ஒரு தடவை அறுசுவைல மற்ற பகுதிகள் பார்க்கிறதில்லைன்னு சொன்னதும் எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. நான் கூட சொல்லியிருந்தேன், நினைவிருக்கா, எல்லாப் பகுதிகளும் ரொம்ப நல்லா இருக்கும், பாருங்கன்னு. இப்ப நீங்க எல்லா இழைகளிலும் ஆக்டிவ் ஆக இருக்கறது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஜெயலக்ஷ்மி

அன்பு ஜெயலக்ஷ்மி,

லக்ஷ்மி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச எழுத்தாளர். அவரோட எல்லா நாவல்களுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் பகுதி முதல்ல ஆரம்பிச்சப்போ எனக்குமே இதில் எதை எப்படி எழுதறதுன்னு கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. பின்னூட்டங்களில் உற்சாகப் படுத்தி தோழிகள் எழுதினப்புறம்தான் தைரியம் வந்தது. லக்ஷ்மியின் நாவல்களைப் பற்றி நிறைய எழுதணும்னு நினைச்சுட்டு இருந்ததால, நிதானமாக இப்பதான் எழுதியிருக்கேன். அதுவும் டைப் செய்துட்டு பார்த்தேன், பெரிய பதிவாக இருந்தது. அதனால இரண்டு பகுதியாக பிரிச்சு அனுப்பினேன்.

நீங்க பதிவு போடுகிறதுக்கு யோசிக்கல்லாம் வேணாம். உங்களுக்கு தோன்றுவதை இங்கே பகிர்ந்துக்கோங்க. இந்தப் பகுதியைப் பார்வையிடும் மற்ற தோழிகளும் உங்க பின்னூட்டத்தை விரும்பிப் படிப்பாங்க.

உங்களுக்கு பிடிச்சுருக்கு, எல்லா பகுதிகளையும் படிச்சீங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

நன்றி ஜெயலக்ஷ்மி,

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா

சீதாம்மா

நீங்க சொல்லித்தான் நான் எல்லா பகுதிக்கும் போனேன். நன்றி சீதாம்மா
நான் உங்களை நாளை தொடர்பு கொள்கிறேன்... சில அவசர வேலைகள்
சாரி..... தங்கள் மெயில் கிடைத்தது

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹர்ஷா

அன்பு ஹர்ஷா,

உங்க பின்னூட்டம் பார்த்து, ரொம்ப மகிழ்ச்சி.
உங்க சகோதரிகளிடம் நீங்க லக்ஷ்மி கதைகள்னு ஜஸ்ட் ஆரம்பிச்சுப் பாருங்க, போதும், நிச்சயம் நான் இங்கே எழுதியிருப்பதை விட, அற்புதமாக விவாதிப்பாங்க. ஏன்னா, லஷ்மி அவர்களின் எழுத்து அந்த அளவுக்கு அவருக்கு நிறைய வாசகர்களைப் பெற்றுத் தந்திருந்தது.

பொதுவாகவே எனக்கு எந்த சினிமாவைப் பார்த்தாலும், அட, இதே மாதிரி சம்பவம் நாவலில் படிச்சிருக்கோமே என்று தோன்றி விடும்.

புக்ஸ் நிறைய வைத்திருக்கிறேன். இப்பல்லாம் அனேகமாக லைப்ரரிதான். அதுவும் ஒரு வருடம் பூராவும் மாகஸின்ஸ் சேர்த்து வைத்து, ஜனவரி பிறந்ததும், எல்லாவற்றையும் பகுதி வாரியாகப் பிரித்து, பைண்ட் செய்து வைப்பேன். இப்ப எல்லாமே நெட்ல கிடைக்கிறது. வேணும்னா முந்தைய இதழ்கள் கூட பார்க்கலாம்தான். இருந்தாலும் அச்சில் படிப்பதுதான் பிடிக்கிறது.

தொடர்ந்து படிச்சு, உங்க கருத்துகளை சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ரம்யா

அன்பு ரம்யா,

லஷ்மியின் எழுத்துகளில் ஒவ்வொரு விஷயத்தையும் பற்றி நிறைய வித்தியாசமான கோணத்தில் எழுதியிருப்பார். அதனாலேயே எனக்கு அவர் ரொம்பப் பிடித்தமான எழுத்தாளர். அவருக்கு கோபமே வராதுன்னு சொல்லியிருந்தேன் இல்லையா, ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான் அவருக்கு கோபம் வருமாம். பெண்களை கேவலமாக சித்தரித்து எழுதுவது, மற்றும் மட்டமான எழுத்துகளைப் பற்றி ரொம்பக் கோபப்படுவாராம். அவரை நேரில் சந்திக்க முடியாமல் போய் விட்டதே என்று எனக்கு இன்னும் ஆதங்கம்தான்.

தொடர்ந்து படித்து, உங்க கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள், ரம்யா.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாலஷ்மி மேடம்

போன வாரம் முழுக்க லைப்ரரியிலிருந்து நான் எடுத்துப் படித்ததெல்லாம் லஷ்மி அவர்களின் நாவல்கள்தான். அவரது நிற்க நேரமில்லை, காஷ்மீர் கத்தி, இன்னும் ஒரு சீதை, அவள் ஒரு தென்றல் இப்படி நிறைய நாவல்கள் படித்தேன். நான் முதன்முதலில் படித்த லஷ்மி நாவல் தோட்ட வீடு. அப்போது 6 வது படித்துக் கொண்டிருந்தேன் என்று ஞாபகம். அப்போதிலிருந்தே அவரது நாவல்களை படிக்க பிடிக்கும். சொல்லப்போனால் ரமணிச்சந்திரன் பிடிப்பவர்களுக்கு பொதுவாக லஷ்மியும் பிடிக்கிறது. ஆனால் ரமணிசசந்திரன் போல் சந்தோஷ முடிவு அவரது எல்லா நாவல்களிலும் இருப்பதில்லை. அந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு அவர் நாவல்களில் பிடிக்காது. நாவல்கள் ஆனாலும் சரி, படமானாலும் சரி, சந்தோஷமான முடிவு இல்லாவிட்டால் அது மனதை கவலையடைய செய்யும். அதனாலேயே அப்படிப்பட்ட முடிவு கொண்ட கதைகளை படிப்பதைத் தவிர்ப்பேன்.

இப்போது படித்த காஷ்மீர் கத்தியும் அப்படிப்பட்ட சோக கதைதான். கதையின் ஹீரோ ராஜாபாதர் குப்பத்தில் இருந்தாலும், சுத்தம், ஒழுக்கம்னு வாழ்ந்து, சுற்றி இருப்பவர்களையும் அப்படியே வாழ சொல்கிறான். அவனது தாயை காதலித்து ஏமாற்றிய தனது அப்பாவை கொல்ல, அவர் காதலிக்கும்போது தனது அம்மாவுக்கு பரிசாக தந்த காஷ்மீர் கத்தியுடனேயே எப்பவும் இருப்பான். கடைசியில் கோடீஸ்வரரான அவன் அப்பாவிடமே வேலைக்கு சேர்ந்து, அவரை கொல்ல நினைக்கும்போது அவரே நெஞ்சு வலி வந்து இவன் மடியில் இறந்துவிடுவார். இவன் அம்மாவும் அந்த செய்தி கேட்டு இறந்துவிடுவார். தனது அப்பாவின் சட்டரீதியான மனைவிக்குப் பிறந்த மகளின் மானத்தை ஒரு சந்தர்ப்பத்தில் காப்பாற்றிவிட்டு, அந்தப் பெண்ணின் கல்யாணத்துக்கு அந்த கத்தியையே பரிசாக தந்துவிட்டு, அவர்களை விட்டு தான் யார் என்று சொல்லாமலேயே விலகிவிடுகிறான். இந்த கதையில், ஏமாந்து போன அவனோட அம்மா கடைசி வரை பரம ஏழையாகவே ரத்தவாந்தி எடுத்து இறக்கிறார். காதலித்தவளையே யாரோ பிச்சைக்காரின்னு தனது மனைவியிடம் சொன்ன அந்த அப்பாவுக்கு எந்த தண்டனையும் கிடைக்கல. அவருக்கு இப்படி ஒரு மகன் இருந்ததே தெரியாமல் செத்தும் போகிறார். அந்த ஹீரோ ராஜாபாதரின் காதலியும் மூளைக்காய்ச்சல் வந்து இறந்துவிடுகிறாள். இப்படி ஒரே சோகமயமான நாவல் அது. ஆனாலும் முடிவு தெரியாமல் படிச்சதால், படிக்கும்போது நல்லா இருந்தது. முடிச்சதும்தான் ஏண்டா படிச்சோம்னு ஆயிடுச்சு.

உரிமை உறங்குகிறதுன்னு ஒரு நாவல் சமீபத்தில் படிச்சேன். அந்த காலத்துலேயே எழுதியது என்றாலும், வித்தியாசமான முடிவோடு நல்லா இருந்தது. நீங்கள் சொன்ன நாவல்களில் சிலதுதான் படிச்சிருக்கேன். நேரம் கிடைக்கும்போது லைப்ரரியில் தேடிப்பிடித்து வாங்க வேண்டும். நல்ல நல்ல எழுத்தாளர்களை இங்கே சொல்வதோடு மட்டுமில்லாமல் அவர்கள் எழுதிய நாவல்களிலிருந்து சிறந்ததை தேர்ந்தெடுத்து முன்னோட்டமாக கதை சுருக்கத்தையும் எங்களுக்காக எழுதுவது ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து இன்னும் நிறைய எழுதுங்கள். படிக்க ஆவலோடு இருக்கிறோம். பொறுமையா எங்களுக்காக நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சொல்லும் உங்கள் பணிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.