Jey maami pages

கோடைத் திருவிழா

ராமுவின் கையில் மளிகை சாமான் பட்டியலைத் திணித்த வனஜா, ”நீங்க அலுவலகத்துக்குப் போகற வழியில இத மளிகைக் கடையில குடுத்துட்டு இன்னிக்கே சாமானை கொண்டு வந்து போட்டுடச் சொல்லிடுங்கோ, ஏன்னா மாசி மாசம் முடியறதுக்குள்ளயே வடாம் போட்டு முடிச்சாதான் சரியா இருக்கும்” என்றாள்.

அந்தப் பட்டியலைப் பார்த்த ராமு கிண்டலா, ”என்ன வனஜா, ஜவ்வரிசி 10 கிலோன்னு போட்டிருக்கியே? ஏதாவது மகளிர் சுய உதவிக்குழுவில சேர்ந்து வடாம், வத்தல் போட்டு வியாபாரம் பண்ணப்போறியா?” என்று கேட்டான்.

"நன்னாயிருக்கு. ஒரு வருஷத்துக்குக் காணறா மாதிரி வடாம், வத்தல், ஊறுகாய் எல்லாம் போட்டு வெச்சுக்க வேண்டாமா? உங்க அக்கா, தங்கைகள் நாலு பேருக்கும் குடுக்க வேண்டாமா? மிளகாய், பெருங்காயம்ன்னு ஒண்ணொண்ணா எதுக்குன்னு கேக்காதீங்கோ” என்று நொடித்தாள் வனஜா.

ராமுவுக்குத் தெரிந்து வனஜா ஒவ்வொரு வருடமும் நாத்தனார்களுக்கு சின்ன கவரில் வடாமும், ஸ்பூன் கூட உள்ளே போகாத சின்ன பாட்டிலில் மாவடுவும் போட்டு, “நான் கொஞ்சம்தான் வடாமும், மாவடுவும் போட்டேன். வீட்டுப்பொண்கள் சந்தோஷமா இருந்தாதான் வீட்டுக்கு வந்த பொண்களும் சந்தோஷமா இருப்பான்னு எங்கம்மா சொல்லுவா. ஏதோ பொன் வைக்கற இடத்தில பூ வைக்கிற மாதிரிதான்”னு சொல்லித்தான் கேட்டிருக்கான்.

ஆனா பிறந்த வீட்டுக்கு மட்டும் பெரிய பை நிறைய போட்டுக்கொடுப்பாள். அதற்கு வக்கணையா விளக்கமும் கொடுப்பாள். “எங்கம்மா பாவம். என்னோட ரெண்டு தம்பி பொண்டாட்டிகளும் வேலைக்குப் போயிடறா. அவா குழந்தேள கட்டி மேய்க்கணும். வயசான காலத்துல நாலு வால் குழந்தைகளை சமாளிச்சுண்டு வடாம் எல்லாம் போட முடியுமா? அதனாலதான் எங்கம்மாவுக்குக் கொஞ்சம் கூட கொடுத்தேன்”னு சொல்வாள்.

"அது சரி வனஜா. அது என்ன லெமன் சால்ட்” என்று கேட்டான் ராமு.

"அதுவா நாம என்ன ஹார்ட் ஆப் தி சிடிலயா வீடு கட்டியிருக்கோம். ஊர்க்கோடியில வீட்டைக் கட்டிட்டு ஒரு அந்த அவசரத்துக்குக் கூட தேவையானதை வாங்க முடியறதில்ல. போன தடவை இருபது எலுமிச்சம்பழம் வாங்கிப்போட்டு கூட உங்க அக்கா ‘என்ன வனஜா வடாத்துக்கு எலுமிச்சம்பழமே புழிய மாட்டியா’ ன்னு கேட்டா. எலுமிச்சம்பழத்துக்குப் பதிலாதான் லெமன் சால்ட். இது வெல கம்மி. உங்களுக்கு பணத்தை மிச்சம் பண்ணித்தான் குடுத்திருக்கேன்.” என்றாள் வனஜா.

எந்தப் பேச்சையுமே உங்கக்கா, உங்கம்மா என்றுதான் முடிப்பாள் வனஜா. ஒரு நாளைக்கு பத்து தடவையாவது ஊர்க்கோடியில வீட்டைக்கட்டியிருக்கேளேன்னு ராமுவை இடிச்சுக்காட்டுவா. அப்படி வீட்டைக்கட்டினதுக்கு வனஜா சந்தோஷப் படற ஒரே விஷயம் மாமியார் கமலத்தை கூட வெச்சுக்க முடியாததுக்குத்தான். நிரந்தர சர்க்கரை நோயாளியான கமலம் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருந்ததால் கோடம்பாக்கத்தில் இருக்கும் தன் மூத்த பெண் வீட்டிலேயே தங்கி விட்டாள். நல்லவேளையாக கமலம் தன் ஒரே தம்பிக்கே தன் மூத்த பெண்ணைக்கொடுத்திருந்ததால் ராமுவுக்கு அந்த விதத்தில் எந்த பிரச்னையும் இல்லை.

மாமா மிகவும் நல்லவர். ’நீ கவலைப்படாதேடா ராமு, எங்கக்காவை நான் பாத்துக்கறேன்’ என்பார். கமலமும் எதையும் பாராட்ட மாட்டாள். ஆனால் ராமுவுக்குத்தான் ஒரே மகனாக இருந்தும் அம்மாவைத் தன் கூட வைத்துக்கொள்ள முடிவில்லையே என்று வருத்தம். அதையும், வனஜா அழகாக மாமியாரிடம், ’அம்மா நீங்க ரொம்ப குடுத்து வெச்சிருக்கேள். இன்னும் பிறந்தாத்திலேயே இருக்கேளே’ என்பாள்.

இதற்குள் ராமுவின் பெண் வித்யா வந்து, “ஏம்மா, போன வருஷம் போட்ட வடாமே டப்பால நிறைய மிச்சம் இருக்கே. அப்புறம் ஏம்மா திரும்பியும் போடற. அப்பறம் கைவலி, கால் வலின்னு புலம்புவ” என்றாள். அவள் கவலை அவளுக்கு.

வனஜா மொட்டை மாடியில் போய் உட்கார்ந்துகொண்டு ‘வித்யா தண்ணி கொண்டுவா, ஒரு கரண்டி கொண்டுவா, அதைக்கொண்டுவா, இதைக்கொண்டுவா’ன்னு நச்சரிப்பா. போறாத்துக்கு வடாத்தை காக்கா கொத்தாம காவல் வேற இருக்கணும். இவ செய்யற அலம்பல் தாங்காம ராமுவின் பையன் சுரேஷ் நண்பர்களுடன் படிக்கப்போகிறேன் என்று கம்பி நீட்டி விடுவான்.

“மிச்சம் இருந்ததெல்லாம் தூள் வடாம்தான். கொஞ்சூண்டுதான் இருந்துது. கார்த்தால நம்ப கண்ணம்மாவுக்குக் குடுத்துட்டேன். அவளுக்கும்தான் பாவம் யார் வடாம் போட்டுக்குடுக்கப்போறா?” என்றாள் வனஜா.

"கொஞ்சூண்டா. கார்த்தால தோட்டத்துல செடிக்கு தண்ணி ஊத்திண்டிருந்தப்ப இதென்ன வேலைக்காரி கண்ணம்மா கையில இவ்வளவு பெரிய பை. பையில என்னதான் இருக்கும்னு யோசிச்சேனே. வடாம்தானா? அது சரி. இதுக்கு எண்ணெய் வாங்க கண்ணம்மாக்கு நீ குடுக்கற சம்பளம் போதாதே’ன்னு மனசுக்குள்ள நினைத்தான் ராமு. பின்ன வெளியே சொல்ல முடியுமா? இல்ல வனஜாவை கேக்கத்தான் முடியுமா?

ஒரு வாரம் வடாம் போடற வரைக்கும் வீடே அல்லோல கல்லோலப்பட்டுப் போயிடுத்து. தினமும் கார்த்தால ரசம், ராத்திரி மோர் சாதம். கேட்டா எப்பவும் போல ‘நான் என்ன பண்ணறது? ஒண்டியா எல்லா வேலையும் நானே செய்ய வேண்டி இருக்கு. ஒரு ஒருவாரம் பொறுத்துக்க முடியாதா? எப்பவும் தினுசு தினுசா சாப்டுண்டுதானே இருக்கோம்’ன்னு நீட்டி முழக்குவா. தேவையா இதெல்லாம். ராமு வாயே திறக்காம போட்டதை சாப்பிட்டுப் போயிண்டிருந்தான் எப்பவும் போல.

ஒரு வழியா வடாமெல்லாம் போட்டு முடிச்சு பத்துபடி டின்னுல பத்திரப்படுத்தி வெச்சா வனஜா. இன்னிக்காவது நல்ல சாப்பாடு கிடைக்குமா என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் ராமு.

வனஜா யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். “ஆமாமாம். அதெல்லாம் ரொம்ப சுலபம்தான். 10 கிலோ ஜவ்வரிசி வாங்கினேன். வடாம் போட்ட சிரமமே தெரியல. நிமிஷமா போட்டுட்டேன். ஆவக்கா, மாவடு எல்லாம் கூட போட்டுட்டேன். இதெல்லாம் கடையில வாங்கினா கட்டுப்படியாகுமா? அதோட எங்க வீட்டு நாக்கு நீண்ட தேவதைகளுக்கு கடையில வாங்கினா புடிக்காதே. அடுத்த வருஷம் இன்னும் நிறைய போடலாம்ன்னு இருக்கேன்” கணவன் வந்ததைக்கூட கவனிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்.

"ஆஹா என்னமோ தினமும் இவ பஞ்சபட்ச பரமான்னம் செஞ்சு போட்டு நாங்க வரிஞ்சு கட்டிண்டு சாப்பிடற மாதிரிதான் பேச்செல்லாம்’. இது ராமுவின் எண்ண ஓட்டம்.

"சரி நாழியாயிடுத்து. எங்காத்துக்காரர் வந்துடுவார். அப்புறமா பேசறேன் உமா. நானே போன் பண்ணறேன். உங்கிட்ட மட்டும்தான் பேசி இருக்கேன். இன்னும் ரமா, ராதா, பாமா எல்லார்கிட்டயும் பேசணும். ”

ஆஹா இப்படி இவ பேசிண்டே போனா இந்த மாசம் தொலைபேசிக்கட்டணம் எவ்வளவு வருமோ? என்று நினைக்கும்போதே அடுத்த வருடம் வனஜா நீட்டப்போகும் மளிகை சாமான் பட்டியல் கண் முன்னே வந்து மிரட்ட பொத்தென்று சரிந்து சோபாவில் விழுந்தான் ராமு.


3.714285
(14 votes)
Your rating: None






:) கதைக்கு ஏத்த செம தலைப்பு... எங்க வீட்டுல இந்த திருவிழாவை எல்லாம் ஏறக்கட்டி பல வருடங்கள் ஆச்சு :)

நட்புடன்
நாகை சிவா
http://tsivaram.blogspot.com
"Follow your heart and your dreams will come true."

அழகிய சிந்தனை மாமி!

வழக்கம் போல் கலக்கிட்டீங்க!

ஒவ்வொரு முறையும் மனைவி போடும் லிஸ்ட்டில் கணவன்மார்கள் சற்று தலைசுத்தி தான் போவார்கள்:)

கதை சொன்ன விதம் அருமை!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


கலக்கிட்டேள் போங்கோ!

நேக்கு நான் மொத மொதல்ல போட்ட வடகம் தான் ஞாபகத்துக்கு வரது.

கல்யாணம் ஆன புதுசு.நாத்தனார் (சித்தி) ஆத்துல போய் வடாம் போட்டு காக்கை கொத்தாம இருக்கறதுக்கு நான் பாட்ட பாடு. இப்போ நெனச்சாலும் ஒரே சிரிப்புதான் வரது.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அன்பு ஜெயந்தி மேடம்

கதை ரொம்ப நல்லா இருக்கு.

வடகம் போடும் வைபவமும் நல்லா நடந்திருக்கும்னு நினைக்கிறேன்:)

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மாமி,
கதை நன்றாக இருக்கு அருமையா இருக்கு
அம்மாவும் இப்படி தான் வரிஞ்சு கட்டிண்டு வடாம் போடுவாங்க
ஆனால் இடுற வேலை எனக்கும்,என் தம்பிக்கும் தான்
இப்போ பாவம் அவனுக்கு மட்டும் தான்...
நினைத்து பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கு
தொடரட்டும் உங்கள் பணி...
வாழ்த்துக்கள்...

அன்புடன்,
கவிதா

ஜெயந்தி மாமி, வணக்கம். கோடை திருவிழா கதை அருமையாக இருந்தது. எங்க வீட்லயும் என்னோட பாட்டி இப்படித்தான் அலம்பல் பண்ணிட்டு இருப்பார். பாவம் என் தாத்தா பாடு தான் திண்டாட்டமாக இருக்கும். பாவம் தாத்தா போய் சேர்ந்து 23 வருஷம் ஆச்சு. நம் குடும்பத்தில் நடப்பது போன்றே இருந்தது. கதையே ஒரு அன்னியோன்னியமாக இருந்தது. உங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)

நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது

இதில் நான் புதிதாய் சொல்ல ஒன்றுமில்லை..வழக்கம்போல் அழகான ஒரு கதை..தொடரட்டும் உங்கள் பணி.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஜெயந்தி மாமி கதை அருமை
எனக்கு அம்மா வடாம் போடற ஞாபகம் தான் கதை படிக்கும் போது வந்தது. வடாம் போடறதுக்குள்ள அத மாடில கொண்டு போய் போட்டு, காக்கா வராம பாத்துக்கறதுக்கு கருப்பு குடை, கண்ணாடி, கல்லு அப்படின்னு ஆத்துல பாதி சாமான் மாடிக்கு போயிடும். என்னைக்கும் இல்லாத திருநாளா ஆத்துல வடாம் போடற அன்னைக்குனு பாத்து மழை வரும். ஓடிப்போய் எடுக்கறதுக்குள்ள போறும் போறும்னு ஆயிடும். இன்னைக்கும் எங்கம்மா வடாம் போட்டு எனக்கு எங்கண்ணாக்குனு சப்ளை பண்ணின்டுதான் இருக்கா.... ரொம்ப அழகா கதையை சொல்லிருக்கேள். எல்லாராத்திலயும் நடக்கிறது தான் இது. வீட்டுக்கு வீடு வாசற்படி.... உங்களை வாழ்த்த வயசெல்லாம் போறாது. அனுபவமும் கிடையாது. மேலும் பல நல்ல கதைகள் தரணும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வணக்கம்,நான் செந்தமிழ்
உங்களின் சிறுகதைகளின் தொகுப்பினை படித்தேன்.
அனைத்து கதைகளும் அருமை,இந்த கோடைத்திருவிழா கதை நன்றாக உள்ளது.நகைச்சுவை உணர்வுடன் கதை எழுதுவது என்பது மிக அபூர்வம்.எனக்கு பிடித்திருக்கிரது.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

வழக்கம் போலவே ஜெயந்தி மாமியின் இன்னொரு முத்திரை.
வசனம் மிகவும் இயற்கையாகயிருந்தது. கதை மிகவும் அருமை. மிக்க பாராட்டு.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நாகை சிவா
அமினா முகமது
மோஹனா ரவி
சீதாலட்சுமி
கவிதா
கல்பனா சரவணன்
ஷேக் முஹைதீன்
ராதா ஹரி
தமிழரசி
யோகராணி
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

யோகராணி சென்னை வந்திருந்தீர்களாமே. போனிலாவது பேசி இருக்கலாம். என் போன் நம்பர் சாதிகாவிடம் இருக்கிறது. அடுத்த முறை வரும்போது முடிந்தால் சந்திப்போம்.

ஜே மாமி..

கல்யாணமெல்லாம் நல்ல படியா முடிந்ததா? நீங்க அந்த பிஸிலியும் நல்லா கவனிச்சீங்கனு சீதாலக்ஷ்மி சொன்னாங்க ஒரு பதிவுல.. ;) நல்ல கதை மாமி.. என்னை நியாபகம் இருக்கா உங்களுக்கு.?.

Ramya Karthick B-)

ஒருவரின் முதுகிற்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டுமே.

நல்லாருக்கீங்களா? கல்யாணம் நல்லபடியா நடந்ததா கேள்விபட்டேன் ரொம்ப சந்தோசம் உங்ககிட்ட பேசுவது இதுதான் முதல்முறை... கதை படிச்சேன் ரொம்ப அருமை. எல்லாரும் திருவிழான்னா ரொம்ப சந்தோசப்படுவாங்க ஆனா இந்த திருவிழாவை நினைச்சா எல்லாரும் கதிகலங்கிருவாங்க போலருக்கு, அந்த திருவிழா கொண்டாட்டம் இந்த திருவிழா திண்டாட்டம்... கதைக்கு பேரு சூப்பர்... நல்ல செலக்‌ஷன், இதே மாறி இன்னும் நிறைய கதைகளை அனுப்பி எங்களை குஷிப்படுத்துங்க... நன்றி.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

கல்யாணம் நல்லபடியா முடிந்தது. ஈரோட்டில் வசிக்கிறீர்கள். சரிதானே.

பல்சுவையில் ‘காலச்சக்கரம்’ பகுதியில் நான் எழுதிய மற்ற கதைகள் உள்ளன. படித்து விமர்சனம் செய்யுங்கள்.

நான் உங்களை ஜெயந்தி என்று கூப்பிடலாம் என்று நினைக்கின்றேன்.
உங்களை பற்றி பாபு அவர்கள் சொன்னார்கள். நான் சென்னை வந்த சமயம் நீங்கள் திருமண வேலையில் பிசியாக இருந்ததையும் நான் அறிவேன்.
அத்தருணம் சந்திக்க முடியவில்லை என கவலைதான். அடித்த முறை சென்னை வந்தால் நிட்சயம் சந்திப்போம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அடடா மிஸ் பண்ணிட்டோமே. சென்னையில் இருந்திருந்தால் 19 ஆகஸ்ட் வரவேற்புக்கு வந்திருக்கலாமே. ரொம்ப வருத்தமா இருக்கு. பரவாயில்லை அடுத்த முறை பார்ப்போம்.

நீங்கள் என்னை ஜெயந்தி என்றே அழைக்கலாம்.

ஜெ மாமி, நல்ல கதை. எங்கள் அம்மா வேப்பம்பூ வடகம் போடுவார்கள். ஆனால் இப்படி ஆரவாரம்/ அலப்பறை செய்ததில்லை. வேப்பம்பூ என்றபடியால் பறவைகளும் பெரிதாக ஆர்வம் காட்டியதில்லை என்றே நினைக்கிறேன். அதனால் பறவைகள் துரத்தும் வேலை நான் செய்ததில்லை. நல்ல நகைச்சுவையான நடை. இன்னும் தொடருங்கோ, மாமி.
அன்புடன் வாணி.

ஜெயந்தி மாமி எப்பவும் போல அசத்தலான கதை. //கோடை திருவிழா// ஒரு சில வீட்டுல வடாம் போடுவதற்குள்ள ஒரு திருவிழா வந்தமாதிரி இருக்கும். உங்க கதை மூலமா நல்லா சொல்லிருக்கீங்க. கதை ஏற்ற தலைப்பு. எங்க வீட்டுல வடாம் போடுறது வாய்ப்பே இல்ல. எல்லாம் சித்தி, பாட்டி வீட்டுல இருந்து பார்சல் தான்.

எங்க வீட்டில் எங்க அம்மாவும், பாட்டியும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வடாம் போடுவார்கள். அப்பளம் இடுவார்கள். ரொம்ப ஒற்றுமையாக இருப்பார்கள். அதுதான் இன்று எனக்கு மருமகளை நல்லபடியாக நடத்த ஒரு தூண்டுகோலாயிற்று.

கதையெல்லாம் என் கற்பனை தான்.
ஜெ.மாமி

நான் எப்பவும் கொஞ்சமா தனியாகத்தான் வடாம் போடுவேன். இந்த வருடம் மருமகள் வந்துவிட்டாள் ஜோடி சேர. ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான்.

என்னுடைய சிறு வயது ஞாபகம் வந்தது மாமி, முன்னாடியெல்லாம் சம்மர் லீவ்ல வடான் சாப்பிட வர காக்காவ விரட்டறதுதான் குட்டீஸ் வேலையா இருக்கும், அதுவும் அந்த வடாம் மாவை பச்சையா அம்மாக்கு தெரியாம பாட்டிய ஐஸ் புடிச்சு வாங்கி சாப்பிடறதே சுகம்.
(பச்சையா சாப்பிட்டா வயித்த வலிக்கும்ன்னு அம்மா தரமாட்டா, ஆனா பாட்டி, சின்ன பொண்ணுதான், ஓடற பாம்ப புடிக்கிற வயசுன்னு சொல்லி அம்மா வாய அடைச்சுடுவா)

மாமி இப்போல்லாம் எல்லாம் ரெடியா வாங்க வேண்டிருக்கு, அந்த காலத்தை ரொம்பவே மிஸ் பண்றோம்.

அடுத்த கதையை எதிர்நோக்கு உங்கள் ரசிகை

அன்புடன்
பவித்ரா

நமக்கு அப்புறம் வரப்போகும் சந்ததிகள் நம்மை விட மோசமாக இருப்பார்கள் இந்த விஷயத்தில். இப்பவே நிறைய பேர் சமைக்கறதே இல்லை.

பச்சை வடாத்து மாவுன்னு என் பெண்ணுக்கு உயிர். வடாம் போடாட்டாலும் கொஞ்சம் மாவு தயார் செய்து கொடுப்பேன்.

பாராட்டுக்கு நன்றி
ஜெமாமி

மாமி நானும் கதை படித்தேன் படிக்கும்போதே வடாம் போடும் கதாப்பாத்திரமாக மாரிவிட்டேன். ஆனால் லன்ச் எல்லாம் பக்காவாக செய்துவிடுவேன்.கதை,என்னை வடாம் போடும் நாளை நினைவு படுத்திவிட்டது.

life is short make it sweet.

மாமி நானும் கதை படித்தேன் படிக்கும்போதே வடாம் போடும் கதாப்பாத்திரமாக மாரிவிட்டேன். ஆனால் லன்ச் எல்லாம் பக்காவாக செய்துவிடுவேன்.கதை,என்னை வடாம் போடும் நாளை நினைவு படுத்திவிட்டது.

life is short make it sweet.

ரசித்தேன். ;)))
தலைப்பும் ரசிக்கிற மாதிரி இருந்தது. ;)

இமா

திருவிழா டென்ஷன் கண் முன்னே தெரிந்தது.நல்ல தலைப்பு

ஜெ.மாமி உங்க கதை நல்லா இருக்கு. இன்னும் நிறைய எழுதுங்க.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

கீதாஜீ
இமா
ப்ளோரா ஜீவா
ரங்கலக்‌ஷ்மி
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி

மாமி கதை அருமை...... தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்........

உன்னை போல பிறரையும் நேசி.