தொட்டி மரத்துக்கான பந்தல்

தேதி: August 18, 2010

5
Average: 4.8 (8 votes)

 

மெல்லிய நீண்ட பலகைச் சட்டங்கள் - 170 செ.மீ x 4 துண்டுகள்
இன்னும் மெலிதான சட்டங்கள் - 20 துண்டுகள் (அளவுகள் செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.)
ஆணிகள் - சிறியவை (கிட்டத்தட்ட 50)
சுத்தியல்
மெஷரிங் டேப் & பென்சில்
வாள்
மூலை மட்டம்

 

தொட்டி மரத்துக்கான பந்தல் செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
குறுக்குப் பலகைகளைக் கீழ்வரும் படங்களில் உள்ள அளவுகளில் அளந்து வெட்டி வைக்கவும். துண்டுகளை மூலை மட்டத்தைப் பயன்படுத்தி பென்சிலால் நேர் கோடுகள் வரைந்து அறுத்துக் கொள்ளவும்.
தொகுதி A க்கான அளவுகள் 16 செ.மீ, 17 செ.மீ, 18 செ.மீ, 19 செ.மீ, 20 செ.மீ என்ற அளவுகளில் படத்தில் உள்ளது போல் வெட்டி வைக்கவும்.
அடுத்து தொகுதி B க்கான அளவுகள் - 19 செ.மீ, 20 செ.மீ, 21 செ.மீ, 22 செமீ, 23 செ.மீ என்ற அளவுகளில் வெட்டி வைக்கவும். இந்த ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு செட் தேவைப்படும்.
170 செ.மீ நீளமான பலகை சட்டங்கள் நான்கையும் ஒன்றாகப் பிடித்து ஒரு பக்கம் நேராக வருமாறு அறுத்துக் கொள்ளவும். மறு பக்கத்திலும் இதேப்போல் ஒரே நேராக வருமாறு அறுத்துக் கொள்ளவும். (இது 168/169 செ.மீ நீளமாக இருக்கும்.) அங்கிருந்து உள்ளே 6 செமீ அளவுக்கு சரித்து ஆழமான 'V' வடிவம் வர அறுத்து விட வேண்டும். (இது தொட்டியுள் மண்ணின் உள்ளே சொருகப்படும் பகுதி.)
அறுத்த வைத்த பலகை சட்டங்களில் இரண்டை எடுத்து, அதில் சீராக வெட்டி வைத்திருக்கும் மேல் பகுதியில் தொகுதி A யில் இருக்கும் 16 செமீ அளவான துண்டைக் வைத்து ஆணி அடித்துக் இரு பலகையும் இணைத்து கொள்ளவும்.
முதலில் அடித்த பலகையிலிருந்து 30 செ.மீ கீழே இறக்கி 17 செ.மீ அளவான பலகை துண்டை அடிக்க வேண்டும்.
இதுப்போல் தொடர்ந்து 18, 19, 20 செ.மீ அளவான பலகை துண்டுகளை 30 செ.மீ இடைவெளியில் அடித்து முடிக்கவும்.
சட்டத்தைத் திருப்பிப் போட்டு மறுபக்கம் நீட்டிக் கொண்டு இருக்கும் ஆணிகளின் முனைகளை அடித்து மடித்து விடவும்.
மேற்சொன்ன அளவுகளில் இரண்டு சட்டங்களையும் இது போல் அடித்துக் எடுத்து கொள்ளவும்
இப்போது ஏணி போல் இருக்கும் சட்டத்தில் ஒன்றையும், தொகுதி B யில் இருந்து 19 செ.மீ அளவான துண்டையும் எடுத்துக் கொள்ளவும். சிறிய பலகையைச் சட்டத்தோடு படத்தில் காட்டியுள்ளபடி இணைத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து 20, 21, 22, 23 செ.மீ அளவான துண்டுகளையும் ஏற்கனவே இருக்கும் குறுக்குப் பலகைகளுக்கு நேராக வரும் விதமாக இணைக்க வேண்டும்.
தயாராக இருக்கும் அடுத்த சட்டத்தை இதனோடு சேர்த்துப் பிடித்துப் பொருத்தமான இடங்களில் ஆணி அடித்துக் கொள்ளவும்.
இப்போது படத்தில் காட்டியுள்ளபடி ஒரு 'ப' வடிவ அமைப்பு வந்திருக்கும்.
இனி இடைவெளியில் மீதமுள்ள பலகைகளையும் அடித்து முடிக்கவும். சிறியதில் ஆரம்பித்து அடுத்தடுத்த அளவுப் பலகைகள் வைத்து அடிக்கவும்.
செய்து முடிந்ததும் சட்டம் இவ்வாறு இருக்கும். இப்போது தொட்டி மரத்துக்கான பந்தல் தயார்.
இந்தப் பந்தல் அண்ணளவாக ஒரு 25 செ.மீ x 30 செ.மீ அளவான தொட்டிக்குப் பொருத்தமாக இருக்கும்.
தொட்டி மரத்துக்கான பந்தல் செய்முறையை திரு. கிறிஸ் அவர்கள் மிக நேர்த்தியாக செய்து காட்டியுள்ளார். தொழிலாக அல்லாமல், தச்சு வேலை செய்வதை தனது பொழுதுபோக்காக வைத்திருக்கும் இவர், வீட்டிற்கு உபயோகப்படும் சிறிய அளவிலான மரப்பொருட்களை, ஓய்வு நேரங்களில் இவரே செய்துவிடுகின்றார். இவர் தச்சு வேலை செய்யும் நேரங்களில், பலகைகளை பிடித்துக்கொள்வது போன்ற உதவிகளைச் செய்து வரும் இவரது துணைவியார் அறுசுவைக்கு புதியவர் அல்ல. அவரது பெயர் "இமா' :-)

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

தொட்டி மரத்துக்கான பந்தல் பார்ப்பதற்க்கு அழகாகவும் செய்வதற்கு எளிதாகவும் உள்ள்து. இது போன்ற மேலும் பல பொருட்கள் செய்து காட்டிட என் வாழ்த்துகள்

kavitha

மரங்களை வடிவாக வெட்டுவது ஆணிகளை ஒழுங்காக அடிப்பது போன்ற எளிய வேலைகள் செய்த க்றிஸ் அங்கிளுக்கு வாழ்த்துக்கள்.

ஃபோட்டோ எடுப்பது ஆணி எடுத்துக் கொடுப்பது மற்றும் மரப்பலகைகளை பிடித்துக் கொள்வது போன்ற கடினமான வேலைகள் செய்து பந்தலை அழகாக செய்த(?!) இமாம்மாவிற்கு பாராட்டுக்கள் :-).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


இன்னைக்கு காத்தாலதான் எங்காத்து நித்ய முல்லைகொடி படர பந்தல் போடனும்னு நெனச்சேன்!

ஒடனே இத பாத்து போட்டுடுவேன்.

எங்காத்து முல்லை கொடிக்கு பந்தல் கொடுத்த பாரி வள்ளல் திரு. கிறிஸ் அவர்களுக்கும்,இமாவுக்கும் சரித்திரத்தில் கட்டாயம் இடம் உண்டு!

இமா நமக்குள்ள டெலிபதி இருக்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நல்ல குறிப்பை அறுசுவைக்காக அளித்த க்ரிஸ் அங்கிளுக்கும், குறிப்பை தருவதற்கு அவருக்கு உதவிய இமா அம்மாவிற்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்
பவித்ரா

இமா... சூப்பரா செய்திருக்கார் :) குடும்பமே இப்படி கைவேலையில் கலக்கறீங்க !!! ரொம்ப அழகு... பார்க்கவே சூப்பரா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்பொழுதும் ஊரில் ஆள் கூப்பிட்டு அது ஒரு பெரிய வேலையாக இருக்கும்.ரொம்ப ஈசியாக செய்து அசத்திட்டீங்க.பாராட்டுக்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நல்ல ஒரு குறிப்பை அறுசுவைக்கு வழங்கிய இமா மற்றும் கிரிஸ் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இமா மேடம்
உங்க ஆத்துக்காரர் செய்த பந்தல் ரொம்ப எளிமையா இருக்கு... வீட்ல எல்லாம் ஒரு ஆள் கூப்பிட்டு தான் பண்ணனும். இல்லைண்ணா சும்மா ஒரு கம்பை மட்டும் நடுவுல ஊணிடுவாங்க... செடிக்கு இவ்ளோ அழகா வீடு கட்டி கொடுத்திருக்கீங்க... கொடுத்துவைத்த செடி....
வீட்டுக்கு வேலி தானே போட்டுக்கும் கொஞ்ச நாள்ல.... அறுசுவைக்காக இதை செய்து கொடுத்த உங்க ஆத்துக்காரருக்கு எங்கள் நன்றி.....
Krish sir thank you very much....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இம்மா அம்மா, தொட்டி மரத்துக்கான பந்தல் ரொம்ப நன்னா இருக்கு.
உபயோகமானதாவும் இருக்கு. நாமும் இப்படி பண்ணி பார்க்கனுனு இருக்கு.
ஆனா, லேடீஸால தனியா பண்ணமுடியும்னு தோனலை. வீட்டில் ஆண்
இருந்தாலும் இதுபோல பண்ணித்தரும் பொறுமையும் இருக்கனும் இல்லியா.
நீங்க ரொம்ப லக்கி.

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிஷினி. ;)

மிக்க நன்றி கவிசிவா. ;)))

//சரித்திரத்தில் கட்டாயம் இடம் உண்டு!// ம். ;) அது இல்லாட்டியும் பரவாயில்லை. கவிபாடிப் பாராட்டாத வரைக்கும் போதும் மோகனா. ;)

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி பவித்ரா. ;)

க்றிஸ் பொழுது போகாமல் செய்ததை, கூட நின்று நான் படம் எடுத்து அனுப்பினேன். அறுசுவை என்று ஒன்று இருக்கும் போது வீட்டில் செய்யப் படுபவை அனைத்தையும் விளம்பரம் செய்து வைக்காமல் இருந்தால் எப்படி!! ;)) பாராட்டுக்கு நன்றி வனிதா. ;)

சந்தோஷம். ;) மிக்க நன்றி ஆசியா.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி ரம்யா. ;)

//அறுசுவைக்காக// ம். ;)
இங்க ஆறு, குளம் எல்லாம் கிடையாது ராதா. ;) பாராட்டுக்கு எனது அன்பு நன்றிகள்.

‍- இமா க்றிஸ்

கோமு,
யார் சொன்னாங்க அப்படி! லேடீஸால தனியா நிச்சயம் பண்ண முடியும். இங்கு ஆட்கள் இருப்பதால் மட்டும் தான் நான் அந்தப் பக்கம் போகவில்லை.

இலங்கையில் ஒருமுறை ரூபவாஹினியில் ஒரு பெண் அழகாக மரக்கதிரைச் சட்டங்களில் செதுக்கு வேலை செய்து காண்பித்தார். அது அவர்கள் குடும்பத் தொழிலாம். அப்படி ஒரு நேர்த்தி. இது சாதாரண வேலை, முடியாதா? ;)

பாராட்டுக்கு நன்றி. முயற்சி செய்து பாருங்க.

‍- இமா க்றிஸ்


//கவிபாடிப் பாராட்டாத வரைக்கும் போதும் மோகனா. ;)//

இதை எதுல சேக்கறது!

வன் புகழ்ச்சியா!

இலலை பயமா!

நேக்கு தெர்லை!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இமா அம்மா, அப்பா பந்தல் ரொம்ப அழகா செய்து காண்பித்து இருக்காங்க. ரொம்ப நீட்டா செய்து இருக்காங்க. எல்லாம் நீங்க கொடுத்த ட்ரெயினிங்கா:-) ஆசியா அம்மா சொன்னது ரொம்ப சரி அம்மா இங்கே எதாவது பந்தல் போடனும் என்றால் வெளியே இருந்து ஆள் வரவழைத்து தான் செய்யனும்.ஆனா எங்க வீட்டு தோட்டத்தில் பாபுவே பந்தல் எல்லாம் போடுவாங்க, ஆள் தேவை இல்லை:-) இதுபோல் நிறைய க்ராப்ட் அறுசுவை நேயர்களுக்கு செய்து காட்டுங்கள் அப்பா வாழ்த்துக்கள்.

அன்பு மகள்
செண்பகா பாபு

senbagababu

//எல்லாம் நீங்க கொடுத்த ட்ரெயினிங்கா:-)// என்ன இது? எனக்கு உதை வாங்கித் தரப் பாக்குறீங்க செண்பகா. ;))

அனைவருக்கும் ஒரு அறிவித்தல்
அடுத்த பந்தல் குறிப்பு அட்மின் அவர்கள் செய்து காட்ட செண்பகா அழகாகப் படம் எடுத்து இங்கு வெளியிடுவார். ;)))
(செண்பகா செய்து காட்ட அட்மின் படம் எடுப்பார் என்று சொல்லப் பயமா இருக்கு, அதான்.) ;)

‍- இமா க்றிஸ்

இமா அம்மா, வணக்கம். நலமா? நான் உங்களிடம் பேசுவது இது முதல் முறை என்று நினைக்கிறேன். கிறிஸ் அங்கிள் சூப்பரா தொட்டி மரத்துக்கு பந்தல் பண்ணியிருக்காரு. என்னோட வாழ்த்துக்களை மறக்காம் சொல்லிடுங்க. எங்க அம்மாவுக்கு கார்டனிங் என்றால் கொள்ளை உயிர். அங்கிள் மாதிரி எங்க வீட்ல யாராவது இருந்தா விட்டுக்குள்ளயே சுத்தி சுத்தி பந்தல் கட்டிடுவாங்க. அப்படி யாரும் இல்லை அதனால நாங்க தப்பிச்சோம் :D

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இமா மேடம்,
அழகு பந்தல்
நல்ல சிந்தனை
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கிறிஸ் அண்ணாச்சி, சூப்பர் பந்தல். அப்படியே எனக்கும் ஒரு பந்தல் இப்பவே order செய்தாச்சு. இமா, அந்த பந்தலை அனுப்பி வைப்பது உங்கள் பொறுப்பு.
வாணி

;) நன்றி கல்பனா & கவிதா.

வாணி,
புதுசு!! ;)
என்ன நாட்டப் போறீங்கள் என்று சொல்லுங்கோ, அதுக்கு ஏற்ற மாதிரி செய்து அனுப்பச் சொல்லுறன். ;)

‍- இமா க்றிஸ்

நேர்த்தியா செய்து காட்டியிருக்கீங்க க்றிஸ் சார். இப்படி படத்துடனான விளக்கம் கொடுத்து செய்து காட்டினா நாமாளே இந்தல்லாம் செய்துடலாம்னு தோணுது. எதுக்கு இதுக்காக ஆட்களை எல்லாம் கூட்டிகிட்டு. பாராட்டுக்கள் க்றிஸ் சார். இமா உங்களுக்கும் தான்.

மிக்க நன்றி யாழினி. ;)

‍- இமா க்றிஸ்

கிறிஸ் மற்றும் இமா - பந்தல் செய்முறை மிகவும் அருமை. எளிதாக விளக்கியுள்ளீர்கள். “அண்ணளவாக” என்றால் என்ன. நல்ல தமிழ் வார்த்தையாக இருக்கும் என நினைக்கிறேன். எனக்குத்தான் தெரியவில்லை

அன்புடன்,
இஷானி

அண்ணளவாக = ஏறக்குறைய / கிட்டத்தட்ட ;)
பாராட்டுக்கு நன்றி இஷானி.

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta