
“அம்மா, அம்மா நாளைக்கு ஒனக்கு லீவு தான. எங்கயாவது வெளில போலாமாம்மா?” என்று அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த விமலாவைக்கேட்டான் மகேஷ்.
“என்ன மகேஷ், அம்மா இப்பதான் அலுவலகத்தில இருந்து உள்ள நுழையறாங்க. இப்பவே ஆரம்பிச்சுட்டயா?” என்று எதிர் கேள்வி கேட்டாள் வித்யா.
“போக்கா” என்றான் மகேஷ்.
“சரி சரி இதுக்காக ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க. நாளைக்கு சாயங்காலமா கண்டிப்பா எங்கயாவது போலாம்” என்றாள் விமலா.
“ஆனா ஒண்ணும்மா யார் வீட்டுக்கும் போக வேண்டாம்மா. வேற எங்கயாவது போலாம்மா” என்றாள் வித்யா. “ஆமாமாம் யார் வீட்டுக்கும் வேண்டாம்மா” என்றுஒத்து ஊதினான் மகேஷ் என்னவோ தெரிஞ்சமாதிரி.
”நீங்க ரெண்டு பேரும் வீட்டுப்பாடம் எல்லாம் எழுதி முடியுங்க. நான் போய் ராத்திரி சமையல முடிக்கறேன். நாளைக்கு எங்க போகலாம்ங்கறதை நீங்க ரெண்டு பேருமே முடிவு பண்ணுங்க. சரியா?” என்று சொல்லிவிட்டு புடவையை இழுத்து சொருகிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் விமலா. காலை அவசரத்தில் அப்படியே விட்டுச் சென்ற சமையலறையை நேர் செய்து வேலைக்காரி தேய்த்து பெரிய டப்பில் வைத்து விட்டுச் சென்றிருந்த பாத்திரங்களை எடுத்து அதனதன் இடத்தில் கவிழ்த்தாள்.
அப்படியே மனதில் நாளை செய்ய வேண்டிய காரியங்களைப் பட்டியலிட்டாள். ”முதல்ல கொஞ்சம் லேட்டா எழுந்திருக்கணும். நாளை சனிக்கிழமை. இவர் மதியத்திற்கு சாப்பாடு கொண்டு போக மாட்டார். அதனால் காலை சிற்றுண்டி மட்டும்தானே. இவரை அலுவலகத்திற்குக் கிளப்பி விட்டுட்டு குழந்தைகளுக்கு எண்ணை தேச்சுவிட்டு, நானும் தேச்சுக்கணும். அப்புறம் குழந்தைகளுக்குப் பிடித்த சமையல் செய்யணும். மிளகாய்ப் பொடி, அரிசி மாவு அரைக்க மிஷினுக்குப் போகணும். ஆ, மறந்துட்டேனே. பசங்களுக்கு கஞ்சி மாவு தயார் பண்ணணும். போன தடவை வாங்கின கேழ்வரகுல ஒரே கல். இந்த தடவை பாத்து வாங்கணும். வனஜா ஏதோ ஒரு பிராண்ட் பேர் சொன்னாளே. ஒரு பாக்கெட்ல கோதுமை, கேழ்வரகு, புட்டரிசி இன்னும் கஞ்சிக்கு தேவையானது எல்லாம் இருக்கும்,சுத்தமா இருக்கும்ன்னு அதைப்பாத்து வாங்கணும். வாங்கி வறுத்து கஞ்சி மாவு அரைக்கணும். கோடை ஆரம்பிச்சாச்சு, பருத்தி சேலைக்கெல்லாம் கஞ்சி போட்டு தேய்க்கக் கொடுக்கணும்” யோசிக்க யோசிக்க விமலாவின் பட்டியல் அனுமார்வால் போல் நீண்டு கொண்டே போனது.
மடமடவென்று ஒரு சாதம், ரசம், கூட்டு வைத்து அப்பளம் பொரித்து இரவு சமையலை முடித்து சாப்பாட்டு மேஜையில் எடுத்து வைத்துவிட்டு, அடுப்படியைத் துடைத்து சுத்தம் செய்து, குளித்துமுடித்து விமலா வரவும் ராகவன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது.
நான்கு பேரும் சாப்பிட்டதும் மகேஷ் தூங்கி விட வித்யா ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். விமலா படுக்கை அறைக்குள் வந்ததும் ராகவன், “விமலா, நாளைக்கு ரெண்டாவது சனிக்கிழமை. லீவு தானே. அம்மாவைப் பாத்துட்டு வரியா?” என்றான். விமலா காதில் விழாதது போல் பாவனை செய்துகொண்டு குழந்தைகள் மாடியிலிருந்து கொண்டுவந்து போட்டிருந்த காய்ந்த துணிகளை மடிக்கத் தொடங்கினாள். ராகவன், “விமலா உன்னைத்தான் கேக்கறேன். நாளைக்கு அம்மாவைப் பாத்துட்டு வரியா?” என்றான். வழக்கம் போல் சண்டை ஏதாவது வந்து விடுமோ என்று பயந்து இருவரையும் நிமிர்ந்து பார்த்த வித்யா மறுபடி எழுத ஆரம்பித்தாள்.
விமலா கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு மெல்லிய குரலில் “இல்லீங்க, நிறைய வேலை இருக்கு. இன்னொரு நாள் போறேன்” என்றாள்.
ராகவன், “உன்னால மாசத்துக்கு ஒரு தடவை கூட மாமியாரைப் பாத்துட்டு வர முடியாதா? இதே உங்கம்மா உள்ளூர்ல இருந்தா போகாம இருப்பியா?” என்றான்.
விமலா, “இங்க பாருங்க எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. இப்ப பேசக்கூட தெம்பு இல்ல. படுத்தா தேவலாம் போல இருக்கு. நாளைக்கு கார்த்தால பேசிக்கலாம். தயவு செய்து கொஞ்சம் புரிஞ்சுக்கங்க” என்றாள், வித்யா எதிரில் பேச வேண்டாமே என்ற அர்த்தத்தில். புரிந்து கொள்பவனாக இருந்தால்தான் தேவலாமே.
மறுபடியும் ராகவன், “எனக்கு பதிலை சொல்லிவிட்டு நீ என்ன வேணா செய் என்றான்”
விமலா “ஏங்க. என்னங்க நியாயம் இது? நமக்கு கல்யாணம் ஆகி 18 வருஷம் ஆகுது. இது வரைக்கும் ஒரே ஒரு வாரம் உங்கம்மா நம்ப வீட்ல வந்து இருந்து நம்ப குழந்தைகளுக்கு ஏதாவது செஞ்சிருக்காங்கன்னு சொல்லுங்க. நம்ப கஷ்டத்துக்கு எப்பவாவது வந்திருக்காங்களா? கேட்டா நீ பாட்டுக்கு பையைத்தூக்கிண்டு வேலைக்குப் போயிடுவ நான் என்ன உன் வீட்டுக்கு காவலான்னு கேக்கறாங்க. ஏதோ இன்னொரு பையன் இருந்து அவங்க வீட்டில இருந்தாலும் பரவாயில்லை. எப்பவும் பொண்ணு வீட்டிலேயே இருக்காங்க. இத்தனைக்கும் உங்க தங்கச்சி வேலைக்குக் கூட போகல. நீங்க என்னடான்னா எதையும் புரிஞ்சுக்காம பேசறீங்க. எனக்கும் மனசுக்குள்ள எவ்வளவோ இருக்குங்க. நாம்ப என்ன திருட்டுக்கல்யாணமா செஞ்சுட்டு வந்தோம். இவங்க பாத்து வெச்சதுதானே. கல்யாணம் ஆகி வந்தநாள்லேந்து அரிசின்னு அள்ளவும் ஆள் இல்ல உமின்னு ஊதவும் ஆள் இல்லங்கற மாதிரி இருக்கோம்” என்றாள்.
ராகவன் “அதெல்லாம் பத்தி நீ பேச வேண்டாம். போக முடியுமா முடியாதா அதை மட்டும் சொல்லு” என்று கோபமாகக் கேட்டான்.
விமலா ”இங்க பாருங்க என் வேலையெல்லாம் முடிச்சுட்டு நேரம் இருந்தா போறேன். என் பக்கத்து நியாயத்தையும் கொஞ்சம் கேளுங்க. போன மாசம் இரண்டாவது சனிக்கிழமை அன்னிக்கு நீங்க எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லே போய்ப்பாருன்னு சொன்னதால ரெண்டு குழந்தைகளையும் இழுத்துண்டு ரெண்டு பஸ் ஏறி இறங்கிப் போனா உங்கம்மா மாப்பிள்ளைக்குப் புடிக்கும்னு வடாம் போட்டிட்டிருந்தாங்க. மாவடு, ஆவக்கா எல்லாம் போட்டிட்டிருந்தாங்க. இதைப் பாத்து எனக்கு பிபி ஏறினதுதான் மிச்சம். குழந்தைங்களுக்கு சாப்பிடக்கூட ஒண்ணும் கொடுக்கல அவங்க. அப்புறம் ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப்போனேன் நான். இதைப்பாருங்க, இனிமே உங்க அம்மாவை பாக்கணும்ன்னா நீங்க அழைச்சிட்டுப்போங்க. உங்க கூட வரேன். நான் இனிமே தனியா எல்லாம் போய் அவங்கள் பாக்கறதா இல்ல. நம்ப குழந்தைகளுக்கு வேண்டியதை லீவு நாள்லயாவது நான் செய்து கொடுக்க வேண்டாமா?” என்று சொல்லிவிட்டு மடித்த துணிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
பதில் பேச முடியாமல் ராகவன் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தான்.
வித்யா அம்மாவின் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டு மெதுவாக, “ஏம்மா அப்பா இப்படி இருக்கார். எப்பப்பாரு உன்னை ஏதாவது சொல்லிண்டிருக்காரே”
விமலா ராகவன் தூங்கி விட்டான் என்று நினைத்துக் கொண்டு “அதுவா. அது ஒண்ணும் இல்ல வித்து. அப்பாவும் பாவம்தான். வெளியில போகும்போது உங்க அத்தை வீட்டுக்குப் போய் பாட்டிய பாத்திருப்பாரு. அவங்க என்னடா ஒம் பொண்டாட்டிக்கு என்னை வந்து பாக்கக்கூட முடியாதா, மரியாதை இல்லயா அப்படி இப்டின்னு ஏதாவது சொல்லி இருப்பாங்க. பாவம் அவர் என்ன பண்ணுவார். அங்க வாங்கி இங்க குடுக்கறார். நீ இதெல்லாம் காதில போட்டுக்காத. இந்த வருஷம் பொதுத் தேர்வில நல்ல மதிப் பெண் எடுக்கணும். அடுத்த வருஷம் நல்ல காலேஜ்ல சேரணும் இல்லயா?” என்றாள்.
விமலாவின் பேச்சில் உள்ள உண்மை ஒரு பக்கம் ராகவனை சுட்டாலும், “நல்ல வேளை மனைவியாவது நம்மைப் புரிந்து கொண்டிருக்கிறாளே” என்ற திருப்தியுடன் தூங்க ஆரம்பித்தான்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
மாமி!!! வீட்டுக்கு வீடு வாசப்படி!!! ஹஹஹா... ரொம்ப சூப்பர்!! உங்க எழுத்து நடை... சொல்லவும் வேண்டுமா?? அத்தனை அருமையா எப்பவுமே இருக்கே!!! 1000 கதை வந்தாலும் மாமி மாமி தான்!!!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஆஹா! நல்ல கதை மாமி.
இப்படியாவது பொண்ட்டாட்டியை புரிஞ்சுக்கிட்டா சரி தான்.
தொடர்ந்து உங்க கதைகளை கொடுங்க. படிக்க ஆவலாக இருக்கேன்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஜெ மாமி
நல்ல கதை ;)
விமலா செய்ற வேலையையும் பட்டியலையும் பாத்து எனக்கு டையர்ட் ஆயிடிச்சு ;)
வாழ்த்துக்கள்
Ramya Karthick B-)
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது
சூப்பர் கதை, வாழ்த்துக்கள், விமலாவின் பட்டியல் பார்க்கும்போது, என்னதான்னாலும் ஒரு நாள்ல இத்தனை வேலை செய்ய முடியுமான்னு தோணித்து.
அன்புடன்
பவித்ரா
இதெல்லாம் நாங்க செஞ்சுக்கிட்டுதானே இருக்கோம்.
இந்த கதையில் பாதி என்னோட சொந்த அனுபவம்
அன்புடன்
ஜெமாமி
மாமி, ஆண் பாவம் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். இங்கே பெண் தான் பாவம் போல் இருக்கிறாள். மாமி எந்த ஆண்தான் தன் பக்க நியாயத்தை ஒப்புக்கொண்டு இருக்கிறான். இதே நம்ம வீட்ல அம்மா எதுவும் பண்ணலைன்னா 100 தடவையாவது சொல்லி காட்டுவாங்க. தன்னோட அம்மா பண்ற 1000 குறைகளை ஒரு முறை கூட மூச்சு விட மாட்டாங்க. இது என்ன மாமி நியாயம்? நீங்க கதையோட தலைப்பு பெண்பாவம்னு வச்சிருக்கலாம் பொருத்தமாக இருந்திருக்கும் :) உங்களோடது கதையென்று சொல்ல முடியாது. நம் வீடுகளில் நடப்பதை எழுத்தில் தருகிறீர்கள் அவ்வளவுதான். தொடர்ந்து சொல்லுங்கள்.
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
நல்லா சொல்லியிருக்கீங்க கதை. எல்லா மகன்களுமே அம்மா பிள்ளைதான் அவங்க சும்மா கூட ம் ற கூடாது அப்படியே வீட்டயே மாத்தி போட்டுடுவாங்க போல. ஆனா அந்த கணவனையும் மனைவி புரிந்துக் கொண்டல் இல்லறம் எப்போதுமே நல்லறம் தான். பேஷான கதைஇ சொன்னேள் மாமி. இன்னும் நிறைய கொடுங்க மாமி படிக்க ஆவலா இருக்கு.
ஒரு குடும்பத்தை பெண்கள் எப்படி நல்ல குடும்பமாக முன் னெடுத்து செல்கிறார்கள், என்பதற்கு உங்கள் கதை ஒரு நல்ல சாட்சி. லஷ்மி அவர்களின் கதைகளில்தான் இது போன்ற கருத்துக்களை காண முடியும். எளிய நடையில் கதை நகரும் பாங்கு அருமை. நன்றி.
அன்புடன்
THAVAM
நம்ப பாவத்தை ஆண்கள் கொட்டிக்கறதால ஆண்பாவம்
சரியா
ஜெமாமி
ஜெயந்தி மாமி நல்ல கதை. காலச்சக்கரத்தில் இதுப்போல் இன்னும் பல கதைகள் படைத்திட வேண்டும். வாழ்த்துக்கள் மாமி
ஜெமாமி உங்க கதை படிக்க படிக்க சுவாரஸ்யமா இருக்கு, உங்கள் எழுத்து நடை அருமையா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு, கடைசியில்லாவது அவர் தன் மனைவியை புரிந்து கொண்டாறே அதுவே போதும் அது போல் மனைவுயும் புரிந்து கொள்ளுதல் அழகு.
தொடர்ந்து உங்கள் கதையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் ரசிகை.
அன்புடன்
நித்யா
மாமி நல்ல குடும்ப கதை..குடும்பத்தில் இதுபோன்று சகஜம்தானே என்றி நினைத்தாலும் அதை அழகாக எடுத்துச்சொன்ன விதம் அருமை!
சில பதிவுகள் அப்படியே காட்சிகளை கண்முன் கொண்டுவருகின்றன.நன்றி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
கதை நேரில் நடப்பதை பார்ப்பது போல இருந்தது. அவ்வளவு யதார்த்த நடை.
இவ்வளவு பொறுப்புக்களையும் ஒரு பெண் திரம்பட நிர்வாகம் பண்ண்ணினால்தான் வீடு, வீடா இருக்க முடியும். நல்ல கதை.
ஜெயந்தி மேடம் ,
என்ன சொல்வது உங்கள் கதை படித்து விட்டு ....?
கிரேட்..............
நிஜ வாழ்கையின் நிதர்சனங்களை உங்கள் எல்லா கதைகளிலும் காண முடிகிறது
மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி
வாழ்த்துக்கள்
அன்புடன்,
கவிதா
நல்ல ஒரு கதை வாசித்த திருப்தி
மேலும் உங்கள் கற்பனையில் தோன்றும் ஆக்கங்களையும், படைப்புக்களையும் இங்கே பதியுங்கள், அது தடை இன்றி பாயட்டும்,பாராட்டுகின்றேன் ஜெயந்தி மாமி
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
கதை ரொம்ப நல்லா இருக்கு மாமி. நிறைய நல்ல கருத்துக்களைத் தொடர்ந்து உங்களின் கதை மூலமாகச் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். கதையை வாசிக்கும்போதே உங்கள் எழுத்தின் அனுபவம் தெரிகிறது. அவ்வளவு நெர்த்தி. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இஷானி
ஜெ மாமி, நல்ல கதை. அழகான நடை. ஆண் பாவம் என்று தலைப்பு பொருத்தமா இருக்கு.
வாணி
யதார்த்தம்.
இயல்பு நடை.
அழகாகக் கதை சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் ஜெயந்தி.
இமா
மாமி உங்க கதை அருமை... படிக்கும் போது நீங்க வீட்ல உங்க பையன் பொண்ணு பத்தி சொன்னேளே அதான் ஞாபகம் வந்தது. உங்க சொந்த அனுபவமும் கை கொடுத்திருக்கு. வேலைக்குப் போற பல பெண்கள் வீட்ல நடக்கும் ஒரு சாதாரண விஷயத்தை அழகா எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள் மாமி
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ஜெ. மாமி கதை அருமை. மாமி உங்க பெயருக்கு முன்னால் தஞ்சைன்னு இருக்கே தஞ்சைக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். என் சொந்த ஊர் தஞ்சை அதன் கேட்டேன்
ponni
மாமி சூப்பர் கதை அது என்னவோ மாமி உங்கள் கதையை படிக்கும் போதே அப்படியே கதையோடு ஒன்றிவிடுகிறேன் ஏன் மாமி?
life is short make it sweet.
"கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் புரிந்துகொண்டாலே ஆனந்தம் அங்கு குடிகொண்டுவிடும்.
மிக நல்ல கதை.
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'
அருமையா சொன்னிங்க மாமி.......கணவன் மனைவி புரிதல் மிகவும் முக்கியம்.....இல்லையா
பூஸ்ட்டுக்கு நன்றி வனிதா.
ஆமாம் உங்க பாராட்டு எனக்கு பூஸ்டாக்கும்.
அன்புடன்
ஜெமாமி
நன்றி ஆமினா
அன்புடன்
ஜெமாமி
நன்றி
உங்களுக்கு டயர்டா ஆயிடுத்து.
நான் லீவு நாளில் செய்ய வேண்டிய வேலையை பட்டியலிட்டா எனக்கு மயக்கமே வந்துடும்.
அன்புடன்
ஜெமாமி
ஒரு குடும்பத்தில் மாமியாரும், மருமகளும் ஒத்துப்போயிட்டா ஆண், பெண் எல்லாருமே பாவமாயில்லாமல் இருக்கலாம்.
இந்தக்காலத்தில் முன்னைவிட பரவாயில்லை. எவ்வளவோ மாமியாரும், மருமகளும் ஒத்துப் போகிறார்கள்.
என் பெண் சொல்வது “மகன் மட்டும் இருப்பவர்கள் மருமகளை மகளாக ஏற்றுக் கொள்கிறார்கள். மகள் மட்டும் இருப்பவர்கள் மருமகனை மகனாக ஏற்றுக் கொள்கிறார்கள். மகன், மகள் இரண்டும் இருப்பவர்களுக்குத்தான் பிரச்னையே” என்று.
முழுக்க ஆண்களையே குற்றம் சொல்ல முடியாது. சில சமயங்களில் பெண்களிடமும் (மாமியார், மருமகள்) தவறு இருக்கிறது.
அன்புடன்
ஜெமாமி
மாமி எப்படி இருக்கிங்க இந்த கதை ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு.வாழ்த்துக்கள்.
நன்றி ரிஹானா
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்
ஜெமாமி
ஜெயந்தி..இப்போதுதான் இந்தக்கதை படித்தேன்.நறுக்கு தெறித்தாற்போல் வசனங்கள்.செம்மையான,இயல்பான நடை,தொய்வில்லாத போக்கு. ஒரு சிறுகதைக்கு இதை விட வேறு என்ன வேண்டும்?
பாராட்டும் மகிழ்வுடன்
தேன்மொழி
சிரிப்பே சிறந்த மருந்து