
அதிகாலை நேரம் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை கண்டு நாணி முகம் சிவக்கும் பெண்ணை போல வெட்கத்துடன் கிழக்கு திசையில் கொஞ்சமாக தன் முகம் காட்டி உதயமாக தொடங்கினான் காலைக் கதிரவன்
பார்வதி - பரசுராமன் இல்லம் வாசலில் பெரிய மாக்கோலம் போட்டு, சாம்பிராணி, ஊதுவத்தியோடு ஒரு தெய்வீக மணத்தோடு அன்றைய நாளை தொடங்கியது.
பார்வதி - பரசுராமன் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் தென்னவன் நகரத்தில் முன்னிலை வகிக்கும் ஒரு பெரிய கம்பெனியில் சீனியர் அக்கவுண்டன்டாக பணிபுரிகிறான். இளையவன் செழியன் பி.ஈ முடித்துவிட்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் இளநிலை பொறியாளராக பணிபுரிகிறான். பரசுராமன் ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர். தென்னவன் தன்னுடன் பணிபுரியும் அங்கமித்ராவை நான்கு வருடங்களுக்கு முன்பே பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து மணம் புரிந்தான். இதில் பார்வதிக்கு மன வருத்தம் இருந்தாலும், மகன் மேலுள்ள அளவுகடந்த பாசத்தால் சம்மதிக்க ஒப்புக் கொண்டாள். இருந்தாலும், அவளுக்கு மருமகள் மேல் ஒரு வெறுப்பு இருக்கத்தான் செய்தது.
அடுத்தவன் செழியன் பெற்றோர் மனம் கோணாமல் அவர்கள் பார்த்து வைத்த வசுந்தராவை மணம் புரிந்தான். அவர்களுக்கு போன தை மாதம் தான் திருமணம் முடிந்திருந்தது. வசுந்த்ராவும் செழியனுக்கு இணையாக பி.ஈ முடித்திருந்தாள். நல்ல வசதியான வீட்டு பெற்றோரின் ஒரே செல்ல மகள்.வசுந்த்ராவின் தந்தை சதாசிவம் தன் நண்பர் ஒருவர் வாயிலாக செழியனின் நற்குணங்கள் பற்றி தெரிந்துக்கொண்டு தனக்கு சமமான அந்தஸ்து இல்லையென்றாலும் அதை பொருட்படுத்தாமல் தன் மகளை அவனுக்கு கட்டிக் கொடுத்தார். இது ஆடி மாதம் என்பதால் மகளுக்கு ஆடி சீர் வைத்து அழைத்து சென்றிருந்தார் சதாசிவம்.
பார்வதிக்கு மருமகள் அங்கமித்ராவிடம் நிரந்தரமாக ஒரு வெறுப்பு இருந்தாலும் அவள் மூலமாக கிடைக்கக்கூடிய தன் குடும்ப வாரிசை கொஞ்சமுடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.பார்வதி அந்த 60 வயதிலும் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டாள். ஏதாவது ஒரு வேலையை இழுத்து போட்டு செய்துக் கொண்டே இருப்பாள். சமையல் வேலைகளை அங்கமித்ரா பார்த்துக் கொள்வாள்.
பரசுராமனுக்கு பூர்வீக நிலம் ஊரில் உள்ளதால் அதிலிருந்து வருடத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, புளி, மிளகாய் எல்லாம் வந்துவிடும். பார்வதி நேரம் கிடைக்கும் போது அவற்றை சுத்தம் செய்து பூச்சி பொட்டு வராமல் பாதுகாத்து வைப்பாள். அன்றும் அப்படித்தான், புளியை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்ய அமர்ந்தாள். அங்கு வந்த அங்கமித்ரா," அம்மா, உங்களுக்கு வெந்நீர் வெளாவி வச்சுட்டேன். நீங்க குளிச்சுட்டு பூஜையை முடிச்சுட்டு வர்றதுக்குள்ள நான் டிபன் எடுத்து வச்சிடறேன். உங்களுக்கு சுகர் இருக்கு, நேரம் கடந்து சாப்பிட்டா உடம்புக்கு ஆகாது" என்று பரிவுடன் கூறினாள்.
அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்துக் கொண்டே"எப்ப என்ன சாப்பிடனும்னு எங்களுக்கு தெரியும். பெரிய டாக்டர் மாதிரி சொல்ல வந்துட்ட. வருஷம் நாலாவுது ஒரு குழந்தையை பெத்து தர துப்பில்லை. என் உடம்ப பத்தி சொல்ல" என்று குதர்க்கமாக ஒரு பதிலை தந்துவிட்டு விட்ட வேலையை தொடர்ந்தாள் பார்வதி.
அங்கமித்ரா ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்தவள். ஆதலால், பிறந்ததிலிருந்து தாயின்முகம் தெரியாது. அனாதை இல்லத்தின் உதவியால் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி சொந்தமாக ஒரு வேலையை தேடிக்கொண்டு, அங்கு தென்னவனை பார்த்து அவனுடைய குணம் ஒத்து போக காதலித்து கைப்பிடித்தாள். அவள் பார்வதியை தன்னுடைய தாயாகவே பாவித்து பழகி வந்தாள். அவள் பார்வதியின் மேல் வைத்திருந்த பாசத்தின் குளிர்ச்சி, பார்வதியின் சுடு சொற்களை தணித்து விட்டன.
"பார்வதி, வீட்டுக்குள்ளேயே என்ன பண்ற, உன்னை வெளியவே பாக்க முடியறதில்ல" என்று கேட்டவாறே வீட்டுக்குள் நுழைந்தாள் எதிர்வீட்டு பங்கஜம்.
"வெளிய வந்து என்னத்த பண்ண சொல்ற பங்கஜம், பாக்குறவங்களுக்கும், கேக்கறவங்களுக்கும் பதில் சொல்லி மாளல, பெரியவனுக்கு கல்யாணம் முடிஞ்சு நாலு வருஷம் ஆச்சே, இன்னும் மருமக வயத்துல ஒரு புழு பூச்சி வரலயான்னு. இதுல பையன் கிட்ட குறையிருக்குமோன்னு முகத்துக்கு நேராவே பேசிக்கறாங்க. இதெல்லாம் கேக்கும் போது மனசுக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு. அதனாலதான் வெளியவே தலை காட்டுறது இல்லை" என்று கவலையுடன் பெருமூச்செறிந்தாள் பார்வதி.
"நம்ம கிட்ட என்ன இருக்கு பார்வதி, எல்லாம் அவன் செயல். இதுக்கு போய் ஏன் வருத்தப்பட்டுட்டு நீ விட்டுக்குள்ளயே முடங்கி கிடக்கற. நரம்பில்லாத நாக்கு எதுவேணாலும் பேசும். அத இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு போ. வாழ்ந்தாலும் வாயில அடிச்சிக்கும். செத்தாலும் வாயில அடிச்சிக்கிற உலகம் இது" என்று ஆறுதல் தரும் விதமாக பேசினாள் பங்கஜம்.
"எல்லாம் நான் பெத்த சீமந்த புத்ரன சொல்லனும். ஊர் உலகத்துல பொண்ணே இல்லைன்னு போய் புடிச்சான் பாரு, ஒரு அனாதை பொண்ண, அது குலம் என்னவோ, கோத்ரம் என்னவோ, அதோட ரத்தவழி உறவுல யாருக்கு இப்படி ஒரு குறை இருந்துச்சோ யாரு கண்டா? நான் தலைப்பாடா அடிச்சுகிட்டேன். சொந்தத்துல நிறைய பொண்ணுங்க இருக்காங்க. அதுல உனக்கு பொருத்தமான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கன்னு, கேட்டானா? சரியான மலடிய புடிச்சிட்டு வந்திருக்கான். அதனால எல்லார்கிட்டயும் இது மாதிரி பேச்சு கேக்க வேண்டியிருக்கு. எல்லாம் என் தலையெழுத்து" என்று தன் மனக்குமுறலை கொட்டி தீர்த்தாள் பார்வதி.
"சரி பார்வதி, நான் கிளம்பறேன், எங்க வீட்ல என் பேரன் மருமகள என்ன பாடு படுத்தறானோ தெரியல. உன்னை ஆள பாக்கமுடியலயே, என்னமோ, ஏதோன்னு விசாரிச்சுட்டு போகலாம்னு வந்தேன் என்று கிளம்பினாள் பங்கஜம்.
பங்கஜம், பார்வதியின் உரையாடலை சமையலறையில் இருந்து அங்கமித்ரா கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்கு இது பழகிப் போன ஒன்று. அதனால் இந்த உரையாடல் அவள் மனதில் பெரிய சலனத்தை ஏற்படுத்தவில்லை.
பங்கஜம் வாசலை தாண்டி போகவும், பரசுராமன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. "என்ன பாரு, பங்கஜம் வந்துட்டு போறா போல இருக்கு, அவகிட்ட எல்லாத்தையும் கொட்டி தீர்த்துட்டயா? மருமகள பத்தி குறை சொல்றத எப்பதான் நிறுத்தப் போறியோ தெரியல" என்றவாறே செருப்பை கழற்றி விட்டு வீட்டினுள் நுழைந்தார் பரசுராமன்.
"அம்மா,அங்கா, கொஞ்சம் தண்ணி கொண்டு வாம்மா, ஒரே தாகமா இருக்கு என்று அருகில் உள்ள நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தார். அங்கமித்ரா ஒரு டிரேயுடன் சமையலறையில் இருந்து வெளியில் வந்து "அப்பா, தண்ணி கொஞ்சமா குடிங்க, காபி போட்டு வச்சிருக்கேன். உங்களுக்கு பிடிக்குமேன்னு சூடா முந்திரி பக்கோடா செஞ்சேன் என்று கூறிக் கொண்டே சூடாக ஆவி பறக்கும் பில்டர் காபியோடு, மணக்கும் முந்திரி பக்கோடாவையும் ஒரு தட்டில் வைத்து மாமனாரிடம் தந்தாள்.
" நான் நம்ம தெருவுல நுழையும்போதே முந்திரி பக்கோடா வாசனை மூக்கை துளைச்சது. எனக்கு அப்பவே தெரியும், நம்ம அங்கா தான் அருமையா பண்ணி வச்சிருப்பான்னு" என்றபடி ஒரு சிறுவனின் துள்ளலோடு ஆசையாக முந்திரி பக்கோடாவை எடுத்து வாயில் போட்டார். பார்வதி தன் மருமகளை வெறுத்தாலும் பரசுராமன் தன் அன்பால் அதை ஈடு செய்தார். அவருக்கு பெண் குழந்தை இல்லையாதலால், அங்கமித்ராவை தன் மகளாவே நினைத்து பாசம் காட்டினார்.
சிறிய மருமகள் வசுந்த்ரா ஆடி மாதம் கழிந்து மாமியார் வீடு திரும்பியிருந்தாள். வீட்டில் ஒரே பெண் என்பதால் செல்லமாக வளர்ந்துவிட்டாள். ஒரு வேலையும் செய்ய மாட்டாள். இன்டர்நெட்டே கதி என்று கிடப்பாள். அது விட்டால் செல்போனில் எப்போதும் தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பாள். அவளுடைய கணவன் செழியனுக்கு வேண்டியதை கூட அங்கமிதரா தான் செய்து கொடுப்பாள். சீரோடும், சிறப்போடும் செல்வந்தர் குடும்பத்திலிருந்து வந்த பெண் என்பதால் பார்வதி அவளிடம் வாலாட்ட மாட்டாள்.
மாதங்கள் உருண்டோடின. அன்று காலை வசுந்த்ரா உமன்ஸ் எரா புத்தகத்தை புரட்டியபடி கால்மேல் கால் போட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தாள். திடீரென, காலுக்கு கீழ் உலகம் நழுவதை போல் உணர்ந்தவளாய், அடுத்த நொடி புத்தகத்தை தவறவிட்டு மயங்கி சரிந்தாள். அங்கு வந்த பார்வதி மருமகள் மயங்கிக் கிடப்பதை பார்த்து அதிர்ந்தவளாய் கணவர் பரசுராமுக்கு பதட்டமுடன் குரல் கொடுத்தாள்.
"ஏங்க, என்ன ஆச்சுன்னு தெரியல, வசு மயங்கி கிடக்கறா. நம்ம டாக்டருக்கு போன் பண்ணுங்க" என்று கத்தியபடி மருமகளை எடுத்து தன் மடிமீது சாய்த்துக் கொண்டாள். பரசுராமன் தன்னுடைய குடும்ப டாக்டர் நீலமேகத்திற்கு போன் செய்து விவரத்தை சொல்லி உடனே வருமாறு கேட்டுக் கொண்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த டாக்டர் வசுவின் மணிக்கட்டை பிடித்து பார்த்துக் கொண்டிருந்தார். பரசுராமனுக்கும், பார்வதிக்கும் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் செய்வதறியாது கவலையுடன் டாக்டரை பார்த்துக் கொண்டிருந்தனர். சோபாவின் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த அங்கமித்ரா வசுவுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.
வசுவை சோதித்து பார்த்த டாக்டர் புன்முறுவலுடன் நிமிர்ந்து, "பயப்படாதீங்க, எல்லாம் நல்ல செய்திதான். உங்கள பெண்டு எடுக்க ஒரு பேரன் வரப்போறான்" என்று கிண்டல் செய்தபடி ஒரு முறை வசுவை செக்கப்பிற்க்கு டிஸ்பன்சரிக்கு அழைத்து வரச்சொல்லி பரசுராமனிடம் சொல்லிவிட்டு தன்னுடைய மெடிக்கல் கிட்டை எடுத்துக் கொண்டு நகர்ந்தார். பரசுராம் அவரை வழி அனுப்பி வைக்க பின் தொடர்ந்து சென்றார்.
பார்வதிக்கு சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.அங்கமித்ராவை ஏளனமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, வசுந்த்ராவிற்கு திருஷ்டி சுற்றிப்போட்டாள். செழியனுக்கு சர்பிரைசாக இருக்கட்டும் என்று அவனுக்கு யாரும் சொல்லவில்லை. மாலையில் வேலை முடித்து வீடு திரும்பிய மகன்கள் இருவருக்கும் நெய் சொட்டச் சொட்ட பாதாம் அல்வாவை செய்து முதலில் வசுந்த்ராவிற்கு ஊட்டி விட்டு பின்பு தன் மகன்களுக்கு சிறு கோப்பைகளில் போட்டு ஒரு ஸ்பூன் வைத்து கொடுத்தாள் பார்வதி.
"அம்மா, இன்னைக்கு என்ன விசேஷம்? தடபுடலா அல்வாலாம் பண்ணி இருக்க, இப்ப யாருக்கும் பிறந்த நாள் கூட வராதே" என்று மகன்கள் இருவரும் கோரசாக ஒரே குரலில் கேட்டவாறே அல்வாவை எடுத்து வாயில் போட்டனர்.
"கல்யாணம் ஆகி நாலு வருஷமா சாதிக்காதத, 10 மாசத்துல சாதிச்சுட்டா என் சின்ன மருமக வசு. எனக்கு பாட்டியா பிரமோஷன் கொடுத்துட்டா. அதுக்குத்தான் இந்த தடபுடல் எல்லாம்" என்று தலையை நிமிர்த்தி பெருமிதப்பட்டாள் பார்வதி.
முதலில் இனித்த அல்வா, அம்மாவின் ஊசி போன்ற வார்த்தைகளால் தென்னவனுக்கு இப்போது கசந்தது. உள்ளுக்குள் தனக்கு தாயாகும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த சந்தோஷ தருணத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் அங்கமித்ரா.
தலைக் கவிழ்ந்து வெட்கத்துடன் தன்னை பார்த்த வசுந்த்ராவை கண்களில் காதல் வழிய பார்த்தான் செழியன்.
"வாழ்த்துக்கள் செழியா, நம்ம வீட்ல முதல் முறையா ஒரு குழந்தையோட அழுகுரல் சத்தம் கேக்கப்போகுது. அதுக்கு அப்பா நீன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு, முதல்ல இந்த நல்ல விஷயத்தை உங்க மாமனார் விட்ல சொல்லிடு அவங்க ரொம்ப சந்தோஷப்படுவங்க" என்றான் தென்னவன்.
இப்போதிருந்தே அந்த வீட்டில் சந்தோஷம் தோரணம் கட்ட தொடங்கியிருந்தது. சாதரணமாகவே ஒரு வேலையும் செய்ய மாட்டாள் வசுந்த்ரா. இன்னும் முழுகாமல் இருக்கிறாளா, கேட்கவே வேண்டாம். ராஜ உபசரணைதான். பார்வதியே தன் மருமகளுக்கு பார்த்து பார்த்து சமைத்து போட்டாள். கை நிறைய கண்ணாடி வளையல்கள் போட்டு, தலை நிறைய பூக்களை வைத்து அழகு பார்த்தாள்.
இதோ, அதோ என்று மாதங்கள் போனதே தெரியவில்லை. சீமந்தம் முடிந்து பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கும் போய் விட்டாள் வசுந்த்ரா. போன மறுமாதமே பிரசவ வலி எடுத்து ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள்.
குழந்தை பிறந்த செய்தி கேட்டு பரசுராமன் வீட்டிலிருந்து அனைவரும் வந்தனர். பார்வதி குழந்தையை பார்த்தவுடன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க வாரியெடுத்து உச்சி முகர்ந்தாள். கையுடன் தான் வாங்கி வந்திருந்த ஒன்றரை சவரன் தங்கச்சங்கிலியை குழந்தையின் கழுத்தில் பூட்டி விட்டாள்.
"எங்க செழியன குழந்தைல பாக்குற மாதிரியே இருக்கு. அப்படியே அவங்க அப்பனை உரிச்சிட்டு பிறந்திருக்கான்" என்று பாட்டி ஆகிவிட்ட சந்தோஷத்தில் பேரனை வர்ணித்தாள் பார்வதி. சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு பிரிய மனமில்லாமல் கிளம்பி சென்றாள். இன்னும் 3 மாதத்தில் பேரன் வீட்டுக்கு வந்துவிட போகிறானே என்று தனக்கு தானே சமாதானம் செய்துக் கொண்டாள்.
மூன்று மாதங்கள் முடிந்த நிலையில், "செழியா, ஒரு நல்ல நாள் பார்த்து வசுவையும், குழந்தையையும் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடுப்பா, என் பேரன் முகம் கண்ணு முன்னாடியே நிக்குது" என்று மகன் செழியனிடம் கேட்டுக் கொண்டாள் பார்வதி.
அதற்கென்றே காத்திருந்தாற் போல செழியனும் தயங்கி தயங்கி அந்த செய்தியை சொல்ல தொடங்கினான் "அம்மா, நான் சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது. வசு, இங்க வரப்போறது இல்லையாம். அவ அவங்க அப்பா வீட்லயே இருக்க போறாளாம். என்னையும் அவளோட அங்க கூப்பிடறா. அவங்க, அப்பாவுக்கு வயசாயிடுச்சின்னு, பிசினஸ பாக்கமுடியாம கஷ்டப்படுறாராம். என்னை வந்து பிசினஸ் பொறுப்புகள எடுத்துக்க சொல்றா. அதுவும் தவிர, வசு அவங்களுக்கு ஒரே பொண்ணு அதனால கடைசி காலத்துல பொண்ணு தன்னோட இருக்கணும்னு பிரியப்படறாரு. உனக்காவது நான் இல்லைனாலும் அண்ணன் தென்னவன் இருக்காரு. பாவம், அவங்களுக்கு யாரு இருக்கா? அம்மா, நீ அவங்க நிலைமைல நின்னு யோசிச்சிப்பாரு. உனக்கு புரியும். சுமியும் பிடிவாதமா இருக்கா, உறவுகள் நீடிச்சு நிலைக்கணும்னா யாராவது விட்டுக்கொடுத்துதான் போகணும். நீங்க வாழ்ந்து முடிச்சவங்க. வாழபோற எங்களை கொஞ்சம் அனுசரிச்சு நடந்துக்கங்க. நானா?நீயான்னு போட்டிக்கு நிக்குற நேரமில்லை இது. நம்ம பிடிவாதத்துக்கு நடுவுல, ஒன்னும் அறியாத அந்த பிஞ்சோட வாழ்க்கைத்தான் கேள்விக்குறியா இருக்கும். உங்களுக்கு எப்ப குழந்தைய பாக்கனும்னு தோணினாலும் உடனே வந்து பாக்கலாம். நான் நாளைக்கு காலைல என்னோட துணிமணிகளை எடுத்துட்டு கிளம்பறேன் மா. எனக்கு வேற வழி தெரியல. என்னை வாழ்த்தி அனுப்புங்க என்று சர்வசாதாரணமாக மகன் சொன்னதை கேட்டு பதிலேதும் சொல்ல முடியாமல் ஜடம் போல இருந்தாள் பார்வதி.
மறுநாள் செழியன் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான். பரசுராமன் எதார்த்தவாதி. அதனால் அவர், அவனை தடுத்து நிறுத்தவில்லை. மகன் எங்கிருந்தாலும் நன்றாக வாழட்டும் என்று நினைத்தார். பார்வதி உணர்வுபூர்வமாக சிந்தித்தால் மகன் வீட்டைவிட்டு போவதை காண சகிக்காமல், அவனை வழியனுப்ப கூட வராமல் ரூமுக்குள்ளேயே கிடந்தாள்.
இரவு பார்வதிக்கு தண்ணீர் தாகமெடுத்ததால் குடிக்கலாம் என்று சென்றாள். சமையலறைக்கு, தென்னவனின் ரூமைக் கடந்து தான் செல்ல வேண்டும். ரூமைக் கடக்கும் போது பார்வதியின் பேச்சு அடிபடவே அங்கேயே நின்று விட்டாள். அங்கமித்ரா, தன் கணவன் தென்னவனிடம்," உங்க தம்பி வீட்டைவிட்டு போனதுல இருந்து அம்மா ரொம்பவே மனசு உடைஞ்சு போய்ட்டாங்க. அவங்க பேரக் குழந்தையோட கொஞ்சனும், விளையாடனும் இன்னும் என்னவெல்லாமோ பண்ணனும்னு பெரிய மனக் கோட்டையே கட்டி வச்சிருந்தாங்க. ஆனா அது இப்ப இல்லைன்னு ஆனவுடனே நொறுங்கி போய்ட்டங்க. இன்னிக்கு முழுக்க என்னைக் கூட திட்டலைங்க. எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்காங்க. எனக்கு பாக்கவே கஷ்டமா இருக்குங்க. நான் ஆறுதல் சொல்ல போயி அவங்க அதை தப்பா எடுத்துக்குவாங்களோன்னு பயந்து தான் நான் எதுவும் சொல்லலே. இனிமேல் நமக்கு குழந்தை பிறந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி. கடவுளோட பிராப்த்தம் எப்படி இருக்கோ அப்படியே நடக்கட்டும். நம்ம அப்பா, அம்மாவையே நாம ஒரு குழந்தைகளா தத்து எடுத்துப்போம்ங்க.வயசு ஆக ஆக அவங்க பிள்ளைகள்கிட்ட எதிர்ப்பார்க்குறது பொன்னையோ, பொருளையோ இல்லைங்க. அதிகப்படியான பாசத்தை தான். அதில சிலசமயம், கோவம், பிடிவாதம், எடுத்தெறிஞ்சு பேசுறது, புரிஞ்சுக்காம நடந்துக்கறதுன்னு குழந்தைகளோட செய்கைகளும் வெளிப்படும். அந்த சமயத்துல அந்த வயசானவங்கள மனசளவில ஒரு குழந்தையா பார்த்தோம்னா நாமளும் அவங்ககிட்ட எதிர்வாதம் பண்ண மாட்டோம் அதுக்கு மாறா, புரியாம பேசுற அவங்கள பார்த்த பாசம் தாங்க வரும். நமக்கொரு குழந்தை இருந்து இதுமாதிரி பண்ணா நாம உதறித் தள்ளிடுவோமா? சொல்லுங்க. ஒரு தாய்க்கே தாயாகிற பாக்கியம் இந்த உலகத்துல யாருக்குக் கிடைக்கும்? அந்த பாக்கியம் எனக்கு கிடைக்க போறத நினைச்சா பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்குங்க" என்று கண்ணீர் மல்க மனைவி பேசுவதை உணர்விழந்து கேட்டுக் கொண்டிருந்தான் தென்னவன்.
"உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்"
என்ற வியட்நாம் வீடு பட பாடல் காற்றோடு கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
மருமகள் அங்கமித்ரா பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பார்வதிக்கு அவளுடைய வார்த்தைகள் நெருப்பு துண்டுகள் போல இருந்தது. அந்த அனலிலேயே சிலைபோல சமைந்து நின்றாள்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
கல்பனா,
உங்கள் கதை ரொம்ப மனசை கஷ்ட படுத்துது
ரொம்ப நல்லா இருக்கு மேலும் பல கதைகளை எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன்,
கவிதா
அற்புதம்! பாத்திரப்படைப்புகளும், உரையாடல்களும், உள்மன உணர்வுகளும், வேறுபட்ட சிந்தனையும் என்று எங்கும் விரவிக்கிடக்கிறது உங்கள் எழுத்தின் ஆளுமை.
சிறு தொய்வுமின்றி கதையைக் கொண்டுபோனது சிறப்பு.
பெரிய மருமகளை அநாதை என்று சொன்ன மாமியார்.அவளின் கதையை கேட்டு மாறியது நல்ல திருப்பம்.
வாழ்த்துக்கள் கல்பனா.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
கதை ரொம்ப அருமையா இருக்கு. எழுத்து நடை சூப்பர். கதை சொல்லிய விதம் நன்றாக இருக்கிறது. நல்ல தேர்ந்த எழுத்து. மிகவும் பிடித்திருக்கிறது. செழியன் பிரியும்போது கொஞ்சம் அதிகமா பேசிட்டமாதிரி ஒரு உணர்வு வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்
அன்புடன்,
இஷானி
அட்மின் அண்ணா, என்னோட கதையை இங்கே போட்டதுக்கு மிக்க நன்றி. அண்ணா உண்மையாவே உங்கள அண்ணான்னு அழைக்கறத நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. ஏன்னு கேக்கறீங்களா? நீங்க கேக்கலனாலும் நான் சொல்லுவேன் :D. மலடிங்கற என் கதை தலைப்பு போட்டுட்டு பக்கத்துலயே என் பேரையும் போட்டா அது ஒரு மாதிரி இருக்கும்னு எவ்வளவு அழகா ஒரு பெண்ணோட உணர்வுகளை உணர்ந்துட்டு நடுவில ஒரு கதையாக்கம்னு போட்டுட்டு என் பேரை போட்டீங்க பாருங்க ரியலி யூ ஆர் வெரி டிப்பரன்ட் அண்ணா. நீங்க நடுவுல இடைவெளி இல்லாம தலைப்போட என் பேரையும் குடுத்திருந்தாலும் எந்த வருத்தமும் இருந்திருக்காது. எனக்கு கடவுள் அருளால 2 வயசுல ஒரு பொண்ணு ஒரு ஆணுன்னு இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள் அண்ணா.கதைக்கு இந்த தலைப்பு தந்தால் அழுத்தமாக இருக்குமென்று தந்தேன். நன்றி அண்ணா :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
கவிதா, உங்களோட பாராட்டுக்கு நன்றி. என் கதை உங்க மனதை கஷ்டப்படுத்தினால் அது என் கதைக்கும், எழுத்துக்கும் கிடைத்த வெற்றின்னு நினைக்கறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் கவிதா :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
அன்புத் தோழி யோகராணி, உங்கள் பாராட்டுக்கு நன்றி பா. என்னோட கதையை அக்கு வேறு ஆணி வேரா பிரிச்சி அழகா விமர்சிக்கறீங்க பாருங்க இந்த பூஸ்ட் தான் என்னை இப்படியெல்லாம் எழுத வைக்குது. குறைகள் இருந்தாலும் தயவுசெய்து தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள். ஏனென்றால் அடிக்க அடிக்க தான் தங்கம். இல்லாவிட்டால் வெறும் உலோகம். மேலும் உங்களுடைய விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
இஷானி, உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிபா. நீங்களும் கதையை ரசிச்சு பாராட்டியிருக்கீங்க. சின்னப் பசங்க எதாவது சின்ன விஷயம் பண்ணாலும் பெரிய அளவில பாராட்டினாதான் அவங்களுக்கு பெரிய அளவில் பண்ணனும்னு ஒரு உத்வேகம் பிறக்கும். அது போன்று உள்ளது உங்களின் பாராட்டு. இதுபோன்ற விமர்சனங்கள் தான் என்னை மேலும் சிறப்பாக எழுத வைக்கின்றன.
//செழியன் பிரியும்போது கொஞ்சம் அதிகமா பேசிட்டமாதிரி ஒரு உணர்வு வருகிறது.//
இஷானி, நீங்க சொன்னது புரியலைப்பா. செழியன் சம்மந்தப்பட்ட டயலாம் பெருசா இருந்துச்சின்னு சொன்னீங்களா? அவன் பேசிய விதம் காயப்படுத்துவதாக இருந்த மாதிரி சொன்னீங்களா?
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
காயப்படுத்துறது மாதிரின்னு சொல்லல. ஒரே மூச்சில் எல்லா விசயத்தையும் (உதாரணமாக: உறவுகள் நீடிச்சு...) பேசுவதாக இருப்பது கொஞ்சம் அதிகப்படியாகத் தெரிந்தது. அதை அம்மா மகன் உரையாடலாக வைத்திருந்தால் அப்படி தோன்றி இருக்காது. கதை நீளமாகிறதே என்று தவிர்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தவறாக எண்ணவேண்டாம். கதை நன்றாக இருந்ததால் மனதில் பட்டதைச் சொன்னேன். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
அன்புடன்,
இஷானி
கல்பனா மேடம்.எனக்கு குறைகள் தெரியவில்லை.கதை அழகான நடையில் எழுதப்பட்டுள்ளது.தொடர்ந்து எழுதுங்கள் எதிர்பார்க்கிறேன்.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
கதை ரொம்பவே விறுவிறுப்பா இருந்தது .REALLY SUPER மனசை டச் பன்னிருச்சு
கல்பனா உங்க கதை அருமை. ஒரு வீட்டில் நடப்பதை பார்த்த மாதிரி இருக்கு.
கல்பனா... நல்லா எழுதி இருக்கீங்க. :(( எனக்கு தான் படிச்சு ஒரே ஃபீலிங் ஆயிடுச்சு. சூப்பரா எழுத ஆரம்பிச்சுட்டீங்க... இனி என்ன... கலக்கும் கல்பனா தான்!! :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கதை சூப்பர்ங்க. திரும்பின பாக்கமெல்லாம் கலக்குரீங்க கல்பனா.
நல்ல சரளமான எழுத்துனடை ஒரே மூச்சில் படிக்கத்தூண்டும் வரிகள்.
ரொம்ப நல்லா இருக்குங்க. பாராட்டுக்கள்.
கல்பனா
கதாப்பாத்திரங்களின் பெயர் அருமை. காட்சிகள் கண் முன் ஓடின.. அங்கமித்ராவின் பொருமை அருமை.
//வயசு ஆக ஆக அவங்க பிள்ளைகள்கிட்ட எதிர்ப்பார்க்குறது பொன்னையோ, பொருளையோ இல்லைங்க. அதிகப்படியான பாசத்தை தான். அதில சிலசமயம், கோவம், பிடிவாதம், எடுத்தெறிஞ்சு பேசுறது, புரிஞ்சுக்காம நடந்துக்கறதுன்னு குழந்தைகளோட செய்கைகளும் வெளிப்படும்.//
இந்த வரிகள். உண்மைதானே கல்பனா.. நல்ல கருத்துள்ள கதை. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது . ;) வாழ்த்துக்கள்
Ramya Karthick B-)
ஒருவரின் முதுகிற்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டுமே.
என்ன சொல்றதுன்னு தெரியல, 5 ஸ்டார் கொடுத்திருக்கேன். உறவுகளால் அதிக காயப்பட்டுருக்கேன் சொல்லும் உங்களால் இத்தனை உணர்வுபூர்வமான கதை, அருமை கல்ப்ஸ், வாழ்த்துக்கள்.
அன்புடன்
பவித்ரா
//கல்பனா... நல்லா எழுதி இருக்கீங்க. எனக்கு தான் படிச்சு ஒரே ஃபீலிங் ஆயிடுச்சு. //
எனக்கும். ;)
பாராட்டுக்கள் கல்பனா.
இமா
நல்ல கதை, அருமையா இருந்துச்சு. ஒரு விசு படம் பார்த்த மாதிரி இருந்துச்சு அந்த lengthy dialogue தான் ஹைலைட் கதைக்கு. எப்படி மாமியார் மனசு மாறபோகுது, எப்படி மாறபோகுதுனு அப்படியே ஒரு ஆர்வத்தோடவே படிச்சேன் கல்பனா. கதைக்கு ஏற்ற தலைப்பு கல்பனா. தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்
இஷானி, நீங்க சொன்னது சரிதான்ப்பா, கதை ஏற்கனவே ரொம்ப பெருசா இருந்துச்சு, அதனால் அதை அம்மா - மகன் கான்வர்சேஷன் மாதிரி மாத்த முடியலப்பா. கதைல எல்லா கேரக்டரோட பங்களிப்பும் இருக்கணும்னு நினைச்சேன் அதுதான் கதை கொஞ்சம் வளர்ந்து போச்சு. இன்னும் நிறைய யோசிச்சேன். நீங்களாம் பாவம்னு விட்டுட்டேன் :) இதுல தப்பா நினைக்க எதுவும் இல்லைப்பா. நீங்க என்னை பாராட்டுவதை விட உங்களோட குறைகளை தான் அதிகம் எதிர்பார்க்கிறேன்.
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
ஷேக், உங்களோட பாராட்டுக்கு மிக்க நன்றி. அடுத்த முறை குறை இருந்தா கண்டுபிடிச்சு சொல்லனும் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
நாகவளர், உங்க பாராட்டுக்கு நன்றிப்பா. மேலும் உங்களோட விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
சித்ரா ஆனந்தன், அறுசுவைக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு புதிய தோழியின் பாராட்டு என்னை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாகுகிறது. தொடந்து உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
வனிதா, உங்கள் பாராட்டுக்கு நன்றிப்பா. நான் ஒரு கருத்தை சொல்ல கதையை எவ்வளவு பெருசா வளர்த்த வேண்டியிருக்கு பாருங்க, ஆனா, நீங்க நாலு வரியில நச்சுன்னு சொல்லிடறீங்க. அதுதான் வனிதாங்குறது. திருக்குறள் கூட ஒண்ணே முக்கால் அடில தான் இருக்கு. இருந்தாலும் அதுல வாழ்க்கையோட மொத்த கருத்தும் அடங்கியிருக்குற மாதிரி உங்க கதை. தொடர்ந்து என்னோட கதையில் உங்களோட அடித்தல், திருத்தலை எதிர்பார்க்கிறேன் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
கோமு, உங்களோட வாழ்த்துக்கு மிக மிக நன்றி. எவ்வளவு அழகா விமர்சிக்கறீங்க பாருங்க. எனக்கு இது மாதிரி விமர்சிக்க தெரியாதுப்பா. நிஜம்மா நம்புங்க. நம்ம அறுசுவை தோழிகள் எல்லாத்துலயும் கலக்கிட்டு வராங்க. இதுல நான் எதுவும் பெரிசா பண்ணலையேப்பா. தொடர்ந்து உங்கள் அழகான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் கோமு :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
ரம்யா, உங்க பாராட்டுக்கு நன்றி. ரம்யா உங்களுக்கு இன்னொரு பேர் பாட்டின்னு வைக்கலாம்னு பார்க்கறேன். தப்பா நினைக்காதீங்கப்பா. எந்த விஷயமா இருந்தாலும் அதில் இருக்குற முக்கியமான கருத்துக்களை எவ்வளவு அழகா குறிப்பெடுத்து சொல்றீங்க பாருங்க அது தான் ரம்யா. தலைமைப் பதவிக்கு தகுதியானவர் நீங்கள்.
கட்டிங்க் & பேஸ்டிங்க் பண்றத எப்பதான் விடப்போறீங்களோ தெரியல :D. கல்யாணம் முடிஞ்ச பிறகாவது உங்க கணவருக்கு நீங்க சமைச்சு போடுங்க. நைசா அங்கேயும் அம்மா வீட்ல சமைச்சத கட்டிங்க் பேஸ்டிங்க் பண்ணாதீங்க ;) தொடர்ந்து என் கதையை படித்து விமர்சிக்கவும் ரம்ஸ் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
பவ்ஸ், உன்னோட பாராட்டுக்கு நன்றிப்பா. நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருக்கற மாதிரி இது என்னோட, உறவுகள் குறித்த மறுபக்கம்னு வச்சுக்கங்க. பிறந்தவுடனே யாரும் சொந்தங்களால வஞ்சிக்கப்படுறது இல்லை. அவங்க வளர வளர சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவங்கள மாத்திடுது. பவி, தொடர்ந்து என் கதைகளை படித்து கருத்தை சொல்லவும் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
இமாம்மா, உங்களோட பாராட்டுக்கு ரொம்ப நன்றிம்மா. உங்களையும் ஃபீல் பண்ண வச்சுட்டேன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு :( அடுத்த முறை உங்களை சிரிக்க வைக்க முயற்சி பண்றேன். தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
கெளரிலஷ்மி, உங்க பாராட்டுக்கு நன்றி. ஒரு குடும்ப கதையை தந்தேன் என்ற நிறைவு உள்ளது. கதை எழுதும் போதே, நான் யோசித்து தான் எழுதுவேன். கதையை படிக்கும் போதே அதன் முடிவு தெரியக்கூடாது என்று நினைப்பேன். அப்போது தான் கதை படிக்க படிக்க சுவாரசியமாக இருக்கும். அப்படி இல்லாமல் கதையின் முடிவு படிக்கும்போதே தெரிந்தால், அது நாவலின் கடைசி பாகத்தை முதலிலேயே படித்த உணர்வைத் தரும். அது என் கதையில் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். கெளரி, தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை தாருங்கள் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
கல்பனா
என்ன பண்றது.. நல்ல பாயின்ட்டா இருந்தா.. அதை எடுத்துக் காட்டாம இருக்க முடியாது. எப்பவும் விடமாட்டேன். கட்டிங் பேஸ்ட்டிங் எல்லாம் கதை கவிதை பட்டிக்கு மட்டும் தான் (அதுவும் தேவைப்பட்டால் மட்டுமே). மற்றவர்களின் கருத்தை மாற்றாமல் சுட்டிக் காட்டி பாராட்ட.. கவலைபடாதீங்க.. ;)
அதுக்காக பாட்டியெல்லாம் ரொம்ப ஓவர்.. அதுக்கு இன்னும் வயசும், காலமும் இருக்கும். பாயின்ட் எடுத்து சொல்றதுக்கே பாட்டியானா.. அந்த பாயின்ட பிறர் எடுத்துக்காட்டும் அளவுக்கு எழுதும் திறமை இருக்க அனுபவசாலிய என்ன சொல்றது ? முப்பாட்டினா ? :)
கல்யாணத்துக்கு அப்றம் நான் தான் சமைக்கனும்.. என்ன பண்றது ? :( அம்மாவோடத கட்டிங் பேஸ்ட்டிங் பண்ற மாதிரி இருந்தா நீங்க உங்க அம்மாவ விடவா போறீங்க ;)
Ramya Karthick B-)
ஒருவரின் முதுகிற்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டுமே.
நல்ல கதை பா. பயன்படுத்திய எழுத்துக்கள் அருமை!
இஷானி சொன்னது போல் செழியன் ஓவரா பேசியது போன்ற உணர்வு. அவங்க அம்மா தான் எதுவும் சொல்லலையே. எதுக்கு இவன் இவ்வளவு பேச்சு பேசுறான்னு சொல்ல வைக்குது!
மற்றபடி கதை அருமை. போன கதை விட இந்த கதையில் அதிக முன்னேற்றம். இன்னும் பல கதைகள் படைத்திட வாழ்த்துக்கள்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
எனக்கென்னவோ செழியன் அதிகம் பேசியதாக காட்டப்படும் ஒன்று சரியாகவே தெரிகிறது. ஏனெனில் அவன் அம்மா பேரக்குழந்தைக்காக காத்துக் கொண்டு இருக்கும் போது, இவ்வாறு மகன் கூற வருகையில் அது அதிர்ச்சியாக அவளுக்கு இருக்கும் என அவனால் புரிந்துக் கொள்ள முடிகிறது... அதனால் தான் அவன் தாய் என்னென்ன கேள்விகள் கேட்க நினைப்பாளோ அதை வேகமாக ஒரே மூச்சில் கூறி அவரின் வாயை அடைக்க முற்படும் உத்தியாகவே தெரிகிறது.
//அதற்கென்றே காத்திருந்தாற் போல செழியனும் தயங்கி தயங்கி அந்த செய்தியை சொல்ல தொடங்கினான் //
எப்படியும் அம்மாக்கு இன்ஃபர்மேஷன் தான் பர்மிஷன் இல்லையே, என்பதை இந்த வரியே அழகாக சுட்டிக் காட்டுகிறது ;)
இதற்காக தான் அவன் அம்மாவின் பதிலை எதிர்பாராமல் அத்தனையும் பேசி முடித்து தாயின் முகம் காண சங்கடப்பட்டு செல்கிறான் என்பது இந்த கதையில் மறைந்துள்ள தகவலாக தான் எனக்கு தெரிகிறது ;). சிலர் இப்படித்தான் இயல்பில் சில எதிர்பார்க்காத விஷயத்தைக் கூறும் போது ஓவர் ரியாக்ட் செய்வார்கள். இதன் காரணம் பயம், தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என தயக்கம், இயலாமை , அதனால் ஒரு பரபரப்பு, நிதான்மையின்னை என நிறைய கூறலாம்.
கல்பனாவே ஒத்துக் கொண்டாலும் என்னை பொறுத்தவரை அப்படித் தான் உள்ளது
தவறான கணிப்பு எனில் மன்னிக்கவும். ;)
Ramya Karthick B-)
ஒருவரின் முதுகிற்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டுமே.