கவிதைப் போட்டி 1 முடிவுகள் | அறுசுவை
Kavithai Competition

அனைவருக்கும் வணக்கம். கவிதைப் போட்டி 1 ல் மொத்தம் 15 கவிஞர்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டு, தங்களின் கவித்திறனை காட்டியுள்ளனர். ஏற்கனவே அறிவித்து இருந்ததுபோல், இந்த போட்டிக்கு நடுவர்களாக அறுசுவையின் மூத்த உறுப்பினர்கள் சிலர் பங்காற்றியுள்ளனர். பலதரப்பட்ட ரசனைகள், வித்தியாசமான சிந்தனைகள், ஆர்வங்கள் உள்ள அறுசுவை உறுப்பினர்கள், இந்த கவிதைகளுக்கு என்ன மதிப்பெண்கள் கொடுக்கின்றார்கள் என்பதை அறியவே, அறுசுவை உறுப்பினர்களையே நடுவர்களாக பணியாற்ற அழைப்பு விடுத்திருந்தோம். எதிர்பார்த்ததுபோலவே ஒவ்வொரு உறுப்பினரின் ரசனையும் வித்தியாசமாக இருந்தது. கிட்டத்திட்ட ஒவ்வொருவருமே வேறு வேறு கவிதைக்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்து இருந்தனர். இதற்கு ரசனைகள் மாறுபடுகின்றன என்பது ஒரு அர்த்தமாக இருந்தாலும், பங்குபெற்ற கவிதைகள் அனைத்துமே யாரையாவது கவர்ந்துள்ளன என்ற மற்றொரு அர்த்தமும் தெரிகின்றது. கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை கவிஞர்களுமே சிறந்த கவிஞர்கள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

இந்த போட்டிக்கு அறுசுவையின் மூத்த உறுப்பினர்கள் திருமதி. செபா, திருமதி. ஜெயந்தி மாமி, திருமதி. சீதாலெட்சுமி, திருமதி. ஸாதிகா, திருமதி. இமா மற்றும் திருவாளர் நாகை. சிவா அவர்கள் நடுவர்களாக பணியாற்றி உள்ளனர். இதற்காக நேரம் ஒதுக்கி, மிகச் சிறப்பாய் பணியாற்றியமைக்கு அவர்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

போட்டியில் பங்கு பெற்ற கவிதைகள் அனைத்தும், எழுதியவர் பெயர் குறிப்பிடப் படாமல், கவிதை எண் மட்டும் கொடுக்கப்பட்டு நடுவர்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த பக்கத்தை பார்வையிடுவதற்கு முன்பு வரை, அவர்களுக்கு எந்த கவிதையை யார் எழுதியது என்ற விபரம் தெரியாது. ஆறு நடுவர்கள், கவிதைக்கு 10 மதிப்பெண்கள் என்ற அளவில், மொத்தம் 60 மதிப்பெண்கள் அதிகபட்சமாக ஒரு கவிதைக்கு கிடைக்கும். பங்குபெற்றுள்ள அனைத்து கவிதைகளுமே கிட்டத்திட்ட ஒரே அளவிலான மதிப்பெண்களை பெற்றுள்ளன. சிறிய வித்தியாசம்தான். சில புள்ளி மதிப்பெண்கள் வித்தியாசத்தில் இந்த கவிதைப் போட்டி 1 க்கான முதல் பரிசையும், அறுசுவையின் இந்த மாதத்து கவியரசி பட்டத்தையும் வெல்பவர் ...

kavi arasi
திருமதி. கவிசிவா (46.5)

இரண்டாம் இடத்தை வெல்பவர்

திருமதி. இஷானி (46.1)

மதிப்பெண்கள் விபரம்.

மேலே குறிப்பிட்டுள்ள அறுசுவை உறுப்பினர்கள்தான் இந்த போட்டிக்கு நடுவர்களாக பணியாற்றி உள்ளார்கள். இருப்பினும் எந்த மதிப்பெண் யார் கொடுத்தது என்ற விபரங்களை தெரிவிக்காமல், நடுவர்களை A, B, C என்று குறிப்பிடுகின்றோம். எல்லோருமே ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் என்பதால், எந்தவித மனவருத்தமும் கூடாது என்பதற்காக இதனை செய்கின்றோம். மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆர்டரில் நடுவர் பெயர்களை A, B, C என்று கொடுத்துள்ளோம் என்று எண்ணிவிட வேண்டாம்.. :-)

  A B C D E F Total
ரசிராஜா 9 5 8 6 9.5 7 44.5
முத்துகவி 6 4.5 5 6 6 7 34.5
ரம்யா 6 5 8 8.5 8.7 8 44.2
மது 6 4 7 5 6 8.5 36.5
ஆமினா 7 5 7 7 7.5 6.5 40
தேன்மொழி 6 6 5 7 7..5 8 39.5
ஷேக் 7 5.5 6 7.5 8.5 7 41.5
இஷானி 8 6.5 7 7 8.6 9 46.1
ஆனந்தி 7 4 9 7 7 8 42
இந்து 7 7 9 6 8 8.5 45.5
கவிசிவா 6 8 8 7 9.5 8 46.5
கீதா 6 7 8 4 6 9 40
ஜெயலெட்சுமி 7 9 6 4.5 7 8 41.5
Mrs. ஜெயசீலன் 7 7 7 5.5 8 9 43.5
கீர்த்திநாதன் 6 4 7 5.5 8.2 7.5 38.2
Prize முதல் பரிசாக ரூபாய் 300 மதிப்புள்ள புத்தகங்களும்,இரண்டாம் பரிசாக ரூபாய் 200 மதிப்புள்ள புத்தகங்களும், வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
திரவியம் தேடி - கவிசிவா

புதியதேசம் காணும் மகிழ்ச்சியில்
புது மணவாளனோடு புதிய மண்ணில்...
புதிய வாழ்க்கை... எல்லாமே புதுசாக...
புதுசாக கூடவே தனிமையும்

தேனிலவில் இனித்த தனிமை
தேய்ந்து காணாமல் போனது
தேடியது மனம் சொந்தங்களை
தெய்வமானது தொலைப்பேசி

கண்ணிமையாய் கணவன் அமைந்த போதும்
கண்ணான பெற்றோரை தேடியலைந்தன விழிகள்
நித்தம் என்னவன் நெஞ்சிலே தாங்கினாலும்
நினைவெல்லாம் நிர்மலமாய் அன்னை உன் முகம்

உள்ளங்கையிலே கொண்டவன் தாங்கினாலும்
உள்ளமெல்லாம் அப்பா உன் நினைவே
மனதோடு என்னை மன்னவன் சுமக்கையிலே
மனைவியாய் மகிழ்ந்தேன் மன்னவனே
மகளாய் மருகித் தவித்தேனே

திரவியம் தேடிச் சென்றதில்
திசைக்கொன்றாய் நம் குடும்பம்
திரையில் புன்னகை முகம் காண்பித்து
திரும்பி நின்று விழிநீர் துடைக்கின்றேன்

அண்ணன் நீயோ அங்கே அயல்நாட்டில்
தங்கை நானோ இங்கே தனித் தீவில்
நடுவில் இந்தியாவில் நம் பெற்றோர்
சந்திப்பது கூட கணினியில் என்றானது வாழ்க்கை

கைக்கெட்டும் திரையில் அன்பு மருமகள்
கட்டியணைக்க ஆசையிருந்தும் இயலவில்லை
கணினியை கட்டியணைத்து கண்ணீரடக்கினேன்
கணினித் திரையில் கண்ணீர் துடைத்தன பிஞ்சு விரல்கள்
கரன்சிக் கட்டுகளில் தொலைந்தது நம் சந்தோஷம்

திரவியம் தேடியது போதும்
திரும்பலாம் நாடு என்றால்
தீராத வசதித் தேடல்களில்
திரும்பும் நாளும் நீண்டு போகிறது
தீயாய்த் தனிமை மட்டும் தொடர்கிறது

திரவியம் தேடி.. - இஷானி

வளர்பிறை விடியலில் சுற்றஞ்சூழ
உன் முதல் தரிசனம்! - மனம்
உணர்வதற்குள் நம் மணம்!

உன் விடுப்பின் நீளமே
விருப்பையும் தாயுடனான - என்
இருப்பையும் நிர்மானித்தது!

கானல்நீரென அறியாமலே
கனவு சுமந்து - ஆழி கடந்து
அரும் பயணம்!

கணத்தில் வாழ்நெறி உரைத்தது!
இக்கரை பச்சையில்லை! - ‘பசை’
மட்டுமே யென்று!

உதயம் பிரிந்து இரவு நீ
திரும்பும் வரை – திக்கின்றி
சித்தம் சிதைகிறது தனிமையில்!

உறவின்றி தனித்துண்ணும்
அறுசுவையும் நஞ்சாகிறது! – நித்தம்
‘அறுசுவை’யே என் ஆகாரமாகிறது!

பிடி(த்த) காய்கறியும்
புழுங்கல் அரிசியும் தேடியே – தினப்
பொழுதும் கழிகிறது!

வார இறுதியில் மட்டுமே
இணைகிறது – நம்
இயந்திரமற்ற மனித இதயம்!

இழப்பு இருப்பு கணக்கெடுப்பில்
இன்றளவும் - இருப்பை
இரைகொள்கிறது என் இழப்பு!

இராமனோடு என்வாழ்க்கை
அசோகவனத்தில்! - அர்த்தமின்றி
அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது!!

 

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், சிறப்பாய் பணியாற்றி நடுவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

போட்டியில் கலந்து கொண்ட கவிதைகளை கீழ்கண்ட லிங்க்ல் பார்வையிடலாம்.

http://www.arusuvai.com/tamil/node/16035