கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கவிதைகளின் தொகுப்பு
ரசிராஜா (44.5)

திருமதியாக திருமண உறவு…
வெகுமதியாக வெளிநாடு வரவு..!
தூரமானது அப்பாவின் நகைச்சுவை…
ஏக்கமானது அம்மாவின் அறுசுவை..!

அரபுமொழி பேசும் அந்நிய
முகம் கண்டு படபடப்பு…
அமுதமொழி பேசும் அன்பு
முகம் தேடி பரிதவிப்பு..

உள்ளம் நிறைந்த பூரிப்பில்
உறவுகளோடு விழாக்கள் அங்கே..
உதடு பிரியா புன்னகையில்
புதியவரோடு விருந்துகள் இங்கே

துவைக்க ,பாத்திரமலச பட்டன்
தட்டும் இயந்திர வாழ்க்கையிங்கே..
அம்மாவுக்கு உதவியாய் துவைத்தலசிய
இனிமையான இயல்பு வாழ்க்கையங்கே..

அதிகாலை ஆலய மணி
ஒசை கேட்டது அங்கே..
பின்காலை அலார மணி
ஓசை கேட்கிறது இங்கே..

குதூகலமாய் குடும்பத்தோடு நிலாச்சோறு
உண்டு களித்தது அங்கே..
அமைதியாய் கணவரோடு கணினிச்சோறு
உண்டு களிப்பது இங்கே…

ஆதரவாய் தலை சாய்க்க
அம்மா மடி அங்கே..
தனிமையிலே தலை புதைக்க
தலையணை மடி இங்கே

மனசுக்குள் ஊரின் வாசம்..
மழையில் ஊறிய மண்வாசமாய்….!!

முத்துகவி (34.5)

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவள் - இன்று
அயல்நாட்டையும் பார்க்கிறாள்!

இனிய உறவுகளின் இளவரசி - இன்று
அயல்நாட்டில்
தனிமை ராஜாங்கத்தின்
அடிமையானாள்!.

அனைத்தும் இயங்கின மின்சாரத்தால்!
அவள் உள்பட - எதிலும் தென்படவில்லை
இயற்கையான இயக்கம்!

கற்கால மனிதனே பின்பு கூட்டமாக வாழ்ந்திருந்தாலும்
அவள் மட்டும் இன்னும்
வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறாள்
நவீன கற்காலத்தில்!

வாழ்நாள் முழுவதையும்
அவனுக்காகவே அர்பணித்தவளுக்கோ
அவனின் சிலமணி நேரங்கள் கூட
சொந்தமில்லை!

வினாடியையெல்லாம் விலையாக்க தெரிந்தவனே!
என்ன விலைக்கொடுத்து
அவள் தனிமைக்கொடுமையின்
நிலை அறிவாய்?

10 மாதங்கள் கருவில் சுமந்த தாயை மறக்காதவள்!
பருவ வயது வரை சுமந்த தாய்நாட்டை
எப்படி மறப்பாள்?!.

ஆங்கிலேயன் கூட எளிதில் இழக்கவிரும்பா
நம் தாய்நாட்டை - அவளால் மட்டும்
இழக்க முடியுமா என்ன?!

தெரிந்துதான் ஏற்றுக்கொண்டாள்!
ஆயினும்
திசுக்களின் அதீத வளர்ச்சி
புற்று நோயாம் - இந்த
அந்நியநாட்டின் அதீத தனிமை
அவள் ஆழ்மனதில் புற்றுநோய்!

ரம்யா (44.2)

வானுயர்ந்த கட்டிடங்களும் வகைவகையாய் ஊர்திகளும்
பார்க்குமிடமெல்லாம் வண்ண வண்ணக் காட்சிகளும்

செயற்கையான இன்பத்திலே மனம் ஏனோ ஒட்டவில்லை
என் கணவா! எப்படி சொல்வேன் என் அடிமனதின் வெறுமையினை

வெற்றுக் கைக்குலுக்கி சிரிக்கிறார்கள் என்னிடமே
புதிய முகம் ஆனாலும் உபசரிப்பார் அன்புடனே

எனினும் ஒரு ஏக்கமுண்டு என் அடி நெஞ்சில் என் சொல்ல
அதை கேட்டு வருந்தாதே நீ மட்டும்தான் எனக்கிங்கு என் செய்ய

அழைத்து வந்தாய் இங்கு என்னை திருமணம் முடிந்த மூன்றாம் மாதம்
முழுமையாக பெறவில்லை புகுந்த வீட்டின் அனுபவம் நானும்

மாதம் இருமுறை காணச் செல்லும் தாய் வீடு
மாறிப்போனதேனோ இது இல்லை நம் தாய்நாடு

உபசரிக்க காத்திருப்பார் வாசலிலே ஆவலுடன்
அந்த நாட்கள் என்று வரும் என இருக்கிறேன் ஏக்கத்துடன்

அன்னை தந்தை குரல் கேட்க தொலைபேசி ஒன்றே
என் ஏக்கமெல்லாம் இது தானே அதை நீ யோசி நன்றே

பரிவுடனே தொட்டுப் பேசும் சொந்த பந்தம் இங்கு இல்லை
சண்டையிட்டு கோபம் கொள்ள அண்ணன் தங்கை யாரும் இல்லை

நம் சின்ன சின்ன சண்டை தீர்க்க அத்தை அன்பு இல்லை
அடிக்கடி வந்து செல்லும் உன் அக்கா தம்பி உறவுமில்லை

தோட்டத்திலே பறித்து உண்ணும் பழங்களுமே இங்குண்டு
மனம் பதறும், அதிக விலையில் அதை இங்கே விற்பது கண்டு

ஒரு காதுக்குத்து சீமந்தம் போக முடியுமா இங்கே
ஆத்தங்கரையில் மஞ்ச தேச்சு குளிக்க தோது இடம் எங்கே

மொழி தெரியா ஊரில் என்னை விட்டாயே தனியாய்
பேரம் பேசி பொருளை வாங்க மொழி இல்லை துணையாய்

வாசல் பெருக்கி கோலம் போட வழி இல்லை எனக்கு
நல்ல சாம்பிராணி புகை காட்ட வழியின்றி கிடக்கு

என் கிராமத்தின் ஓசைகள் என்றென்றும் இனிதானது
ஒரு போதும் கிடைக்காதென்றதும் மனம் கனமானது

பாசத்தை விட்டு பணத்திற்காக தேசம் மாறி வந்தோம்
இணையதளத்தில் அனைவரையும் சேரச் சொல்லி பார்ப்போம்

என் கணவா....
உனக்காக மனதை தேற்றி சரியென தலையசைத்தாலும்
மாறாது என் மனதின் ஏக்கங்கள் என்றும் அது அசை போடும்

மது (36.5)

அம்மா..
கண்ணுக்குள் மணியாய்
கவனித்து வளர்த்த உன்னைவிட்டு
கவலை பகிரும் நட்பைவிட்டு
குற்றம் பார்க்காத சுற்றத்தைவிட்டு
சுற்றங்கள் சூழும் விழாக்களைவிட்டு
பிறந்துவளர்ந்த மண்ணைவிட்டு..
இப்படி அனைத்தையும்விட்டு
இங்கே நானென்ன செய்கிறேன்???

இந்த நொடி ஓடிவந்து
உன்னைக் கட்டிக்கொள்ள
துடிக்கிறதே மனது!!
உன்னை, ஊரை, உற்றாரை
நினைக்காத நாளில்லை..
நானே விரும்பிப் புகுந்துகொண்ட
சிறைதானிது என்றாலும் -உன்
அன்புச் சிறையில் அடைந்துகொள்ள
ஏங்குதம்மா என் மனது!

திரைகடலோடி வந்து நான்
தேடும் திரவியத்தை..
உன் முந்தானையில் முகம் துடைத்தவாறே
தேடலாமே தாய்மண்ணில்!

ஆமினா (40)

வான்மதியே!
தூக்கம் தொலைத்த இரவில்
துணை வந்த தோழியே!

பொருள் தேடிவந்ததினால்-என்
பொன்னான நிம்மதியை இழந்ததை அறிவாயா?
நித்திரையில் களங்கியதால்-விழி
நீரில் நனைந்த தலையணை கண்டாயா?

எட்டும் தூரத்தில்
என் அன்னைமடி இல்லை
அவள் ஸ்பரிஷத்தில் விளைந்த கதகதப்பு
அன்பானவனின் மார்புசுட்டிலும் உணரமுடியவில்லை

தோளில் அணைத்திட்டு கதைபேச
தோழனாய் தந்தையில்லை
வேற்றுமொழியில் எவனோ சொன்ன ஆஸ்கர் படமும்
வேர்போல் உள்ளத்தில் வசப்படவில்லை

காய்ச்சலில் வாடிய போது
கசாயமிட்டு முத்தமிட்ட பாட்டி அருகிலில்லை
பணிப்பெண்ணின் பாரமரிப்பிலும்
பஞ்சுகம்பளியின் அரவணைப்பிலும் சுகம் கிட்டவில்லை

பளிங்கு கட்டாந்தரையிலும் ஏனோ மனம்
பட்டுவிரிப்பாய் சாணம்மெழுகிய அரண்மனையை தேடும்.
பஞ்சு மெத்தையின் ஆடம்பரத்திலும் கூட
பட்டு மேனியில் நெருஞ்சியாய் கிள்ளும்

இளவரசிக்கு கிட்டிய சுகம்
இன்று பட்டத்துராணியானதும் மாறியதோ?!

வெண்ணிலவே
நித்தம் நித்தம் என் கதை கேட்டதால்
நீயும் கரைந்துவிட்டாயா என்ன?

முழுதாய் தேய்ந்த அமாவாசையே
முத்துமுத்தாய் ஓரிரவுக்கு நட்சத்திரமிருக்கிறதே!

தேன்மொழி (39.5)

கடல் கடந்த பயணம்
கண்டபோது
'கலந்துவிடு என்னோடு'
என்றது காற்று.

திரவியம் தேடி
தொலைதூரம் வந்து,
தொலைத்தது என்னவோ
திகட்டாத என் சொந்தங்களை.

தழையும் சேலையுடன்
சோர்வடையாத அம்மா
தந்தைக்கு இலக்கணமாய்
சுகமாய் வளர்த்த அப்பா

கட்டி மகிழும் சுட்டித் தம்பி
புது உடை எனதானாலும்
தனக்கும் அது பொருந்திவிட
ஆசைப்படும் அருமைத் தங்கை

பஞ்சு உருண்டையாய்
நடைபயிலும் கோழிக்குஞ்சுகள்
மிஞ்சும் உணவை
பகிர்ந்துகொள்ளும் பறவைகள்

நாலுநாள் பிரிந்துவிட்டால்
நாராகிவிடும் என் நாய்க்குட்டி
ஒளிந்துகொள்ள வைக்கோல்போர்
ஒலி தரும் தாத்தாவின் வானொலி

கடல் கடக்க கால் கிடைக்குமோ?
சொந்தம் சேர சிறகில்லையா?
கண்ணீர் விடும் கனவுகள்.
இங்கேயோ வளமான வாழ்க்கை!!!

ஷேக் (41.5)

வெளி நாடு பிரமாண்டமெனும்
வேசமிட்டிருக்கும் பாலைவனம்

இருப்பது கணவனோடுதான் என்றாலும்
இருதயம் இங்கேவைத்து
துடிப்பெல்லாம் தாய்நாட்டைபற்றிதான்

கனவுகளை தாய்நாட்டில்
புதைத்துவிட்டு புதையல் தேட
புறப்பட்டு வந்தவளா நான்?

நினைவுகளோடு போராடும் ஏக்கம்
அதில் தொலைந்துபோனது தூக்கம்

மொத்த வாழ்க்கையில் தூங்கி கழித்தது பாதி
பிரிந்தேங்கியா கழிப்பது மீதி?

அலாரமின்றி அம்மாவின் ஸ்பரிசத்தில்
அலறியடித்தெழும்பும் அதிகாலை இங்கில்லை

இங்கே ஆலமரத்தின்
தொங்கும் விழுதுகளில் தோழிகளோடு
தொட்டில் கட்டி ஆட முடியுமா?

தேனாற்றில் குளித்த சுகம்
தினாரும்-திர்ஹாமும் திரும்பத் தருமா?

என் உடலில் வீசும் நறுமணம்
தூக்கத்தையும் கனவுகளையும்
தொலைத்து வாங்கியதல்லவா

வாரத்தின் ஒருநாள் மட்டும்
வரம்போல் எனக்கு
எந்திர மனிதர்களை அன்றுதான் அது
எதார்த்த வாழ்க்கைக்கு அழைத்து வருகிறது.

இல்லறவாழ்க்கை எனும் சம்பிரதாயம்மட்டும்
இல்லையென்றால் என்றோ
பாலைவனத்திலிருந்து
பறந்து போயிருப்பேன் தாய்நாட்டிற்கு

அனுமான்! என் கணவன் என்ற இராமனின்
அனுமதியோடு என்னை
மீண்டும் என் தாய்நாட்டிற்கு
மீட்டுச் செல்!

இஷானி (46.1)

வளர்பிறை விடியலில் சுற்றஞ்சூழ
உன் முதல் தரிசனம்! - மனம்
உணர்வதற்குள் நம் மணம்!

உன் விடுப்பின் நீளமே
விருப்பையும் தாயுடனான - என்
இருப்பையும் நிர்மானித்தது!

கானல்நீரென அறியாமலே
கனவு சுமந்து - ஆழி கடந்து
அரும் பயணம்!

கணத்தில் வாழ்நெறி உரைத்தது!
இக்கரை பச்சையில்லை! - ‘பசை’
மட்டுமே யென்று!

உதயம் பிரிந்து இரவு நீ
திரும்பும் வரை – திக்கின்றி
சித்தம் சிதைகிறது தனிமையில்!

உறவின்றி தனித்துண்ணும்
அறுசுவையும் நஞ்சாகிறது! – நித்தம்
‘அறுசுவை’யே என் ஆகாரமாகிறது!

பிடி(த்த) காய்கறியும்
புழுங்கல் அரிசியும் தேடியே – தினப்
பொழுதும் கழிகிறது!

வார இறுதியில் மட்டுமே
இணைகிறது – நம்
இயந்திரமற்ற மனித இதயம்!

இழப்பு இருப்பு கணக்கெடுப்பில்
இன்றளவும் - இருப்பை
இரைகொள்கிறது என் இழப்பு!

இராமனோடு என்வாழ்க்கை
அசோகவனத்தில்! - அர்த்தமின்றி
அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது!!

ஆனந்தி (42)

என் வடுகப்பட்டி கண்மாய்க்கரை
கெளத்திமீனு குஞ்சுகளே! -இங்கே
அயல்நாட்டில் அசைபோடும்
அபலையிவளை மறந்தீரோ??

பசுஞ்சாணி நீர் தெளித்து
கோலமிட போட்டியிடும்
அடுத்தவீட்டு அருக்காணியக்கா! -அங்கே
நீவீர் எனை மறந்தீரோ??

மச்சான் வீட்டு முல்லைக்கொடியே! -அங்கே
என் கூந்தல் வாசம் மறந்தீரோ??

பால்கார கோனாரய்யா;
நடுக்காட்டு அய்யனாருசாமி;
பக்கத்து தெரு பணியாரக்கிழவி;
மூக்கொழுகும் முக்குவீட்டு பாப்பா!-அங்கே
நீவிர் எனை மறந்தீரோ??

பணக்கார பட்டாம்பூச்சிகள்;
விண்ணைத்தொடும் சாளரங்கள்! -இங்கே
ஏதும் தெரியவில்லை;
மொழியொன்றும் புரியவில்லை!-என் அம்மா!!
புதுப்புது உடைதரித்து
புதியவளாய் நான் இங்கே!-என் அப்பா!!
தேடி தவிக்கிறேன் என்
உறவு தேவதைகளை!-அங்கே

நீவிர் எனை மறந்தீரோ??

அலைந்து சம்பாதித்து
அட்டிகை பல வைரம் -என் கணவர்
எனக்கிங்கு தந்தாலும்
வழிமாறிய பரிசலாய்- மனமங்கே!!
தி(ர)வியம் தேடி!! -உடலிங்கே !!

எனையும் நானே மறந்தேனோ??

இந்து (45.5)

அயல்நாட்டில் வாழ்பவர்க்கு
வாழ்க்கைப்பட்டேன்...
சுற்றமும் உறவுகளும்
சந்தோஷப்பட்டது

வெளிநாடு செல்கிறேன் என்று...
வெளியில் சொல்ல முடியவில்லை
மனதில் உள்ள கவலைகளை........
கணவனே!!!

நீ பொருள் தேட சென்றது என்னவோ
பாலைவனநாடு தான்...
என்னை வைத்திருப்பது என்னவோ
எல்லாம் உள்ள மாளிகையில் தான்...

ஏற்படுத்தி தரும் வசதிகள்
சொர்கம் போல தான்...
ஆனால்....
என் மனம் மட்டும்
பாலைவனத்திலே
காலம் தள்ளுகிறது...

நமது பிள்ளைக்காகவா
பொருள் தேடுகிறாய்?
நமது பிள்ளைக்கு
தேவை அது அன்று!!!!

சிறு வயதில் நான்
திருவிழாவில்
அம்மா வாங்கி தந்த பொம்மைகளை
என் பள்ளி தோழிகளிடம்
காட்டி மகிழ்ந்தேன்....

என் தோழி வாங்கிய
புதிய எழுதுகோலை
தெரு தோழிகளிடம்
சொல்லி மகிழ்ந்தேன்...

என் மழலை மொழி கேட்க
என் தெருவே கூடும்
எங்கள் வீட்டு திண்ணையில்...
ஆனால்...........
நம் பிள்ளை சொல்லி மகிழ
கேட்க உறவுகள் யாரும் இல்லை...
எனக்குப் பிள்ளை
பிள்ளைக்கு நான்
இதுதானா
குழந்தை வாழ்க்கை???

பொருள் தேடுகிறோம் என்று
வாழ்க்கையை தொலைக்கிறோம்
பொருள் போதும் என்று
நினைக்கும் வரை
நம் வாழும் நாட்கள்
நீள போவதில்லை...
இருந்தும்....
திரவியம் தேடி தேடி
தொலைக்கிறோம் நம் வாழ்க்கையை.....

கவிசிவா (46.5)

புதியதேசம் காணும் மகிழ்ச்சியில்
புது மணவாளனோடு புதிய மண்ணில்...
புதிய வாழ்க்கை... எல்லாமே புதுசாக...
புதுசாக கூடவே தனிமையும்

தேனிலவில் இனித்த தனிமை
தேய்ந்து காணாமல் போனது
தேடியது மனம் சொந்தங்களை
தெய்வமானது தொலைப்பேசி

கண்ணிமையாய் கணவன் அமைந்த போதும்
கண்ணான பெற்றோரை தேடியலைந்தன விழிகள்
நித்தம் என்னவன் நெஞ்சிலே தாங்கினாலும்
நினைவெல்லாம் நிர்மலமாய் அன்னை உன் முகம்

உள்ளங்ககையிலே கொண்டவன் தாங்கினாலும்
உள்ளமெல்லாம் அப்பா உன் நினைவே
மனதோடு என்னை மன்னவன் சுமக்கையிலே
மனைவியாய் மகிழ்ந்தேன் மன்னவனே
மகளாய் மருகித் தவித்தேனே

திரவியம் தேடிச் சென்றதில்
திசைக்கொன்றாய் நம் குடும்பம்
திரையில் புன்னகை முகம் காண்பித்து
திரும்பி நின்று விழிநீர் துடைக்கின்றேன்

அண்ணன் நீயோ அங்கே அயல்நாட்டில்
தங்கை நானோ இங்கே தனித் தீவில்
நடுவில் இந்தியாவில் நம் பெற்றோர்
சந்திப்பது கூட கணினியில் என்றானது வாழ்க்கை

கைக்கெட்டும் திரையில் அன்பு மருமகள்
கட்டியணைக்க ஆசையிருந்தும் இயலவில்லை
கணினியை கட்டியணைத்து கண்ணீரடக்கினேன்
கணினித் திரையில் கண்ணீர் துடைத்தன பிஞ்சு விரல்கள்
கரன்சிக் கட்டுகளில் தொலைந்தது நம் சந்தோஷம்

திரவியம் தேடியது போதும்
திரும்பலாம் நாடு என்றால்
தீராத வசதித் தேடல்களில்
திரும்பும் நாளும் நீண்டு போகிறது
தீயாய்த் தனிமை மட்டும் தொடர்கிறது

கீதா (40)

திரவியம் தேடி திசை மாறி போனவர்கள் நாம்
தாய் மண்ணின் சுகம் தரவில்லை வெளிநாடு
உறவுகூடி வாழும் போது தெரியவில்லை வறுமை
வசதி வாய்ப்பு வந்த போது தெரிகின்றது தனிமை

பனி மழையின் சாரலில் நனையும் போது
கோடை போல் சுடுகின்றது இங்கு
கோடை வெயில் சுட்டெரித்த போதும்
குளிர் நிலவின் சுகம் கண்டேன் அங்கு

எல்லாம் இருந்தும் எதுவுமில்லா
வெறுமை இந்நாளில்..
எதுவும் இல்லாத போதும் எல்லாம் இருந்த
நிறைவு அந்நாளில்..

நான்கு சுவர்களுக்குள்
பூஜியமாய் என் வாழ்க்கை
நான் கண்ட மழலை பருவம்
பெறவில்லை என் பிள்ளை

பனை மரத்தின் நிழலிலே மண் வீடு கட்டியதும்
பூவரசம் இலையில் நாதஸ்வரம் ஊதியதும்
கண் முன் நிக்குதம்மா
கண்ணீரும் பெருகுதம்மா....

ஜெயலெட்சுமி (41.5)

கட்டிய கணவன் அருகில் இருக்க
வேறென்ன வேண்டும் எனக்கு இங்கு!
கட்டிலும் மெத்தையும் புதிய வைதான்
காலில் போடும் செருப்பும் புதியவைதான்
புது ஆடை முகப்பூச்சு எல்லாமே
கொட்டிக் கிடக்குது எனது அறையினிலே!

வேண்டிய மட்டும் எனக் கிங்கே
வசதிகள் பல வுண்டு யாரரிவார்!
ஒவ்வொரு நாளும் எனக்காக
விடிவதை இங்கு யாரரிவர்!
நோய்கள் எதுவும் வந்தாலே என்
கணவர் உதவி கிடைப்பதையிங்கு யாரரிவார்!

என் செல்ல சொடுக்குகள் ஒவ்வொன்றும்
செவ்வனே இங்கு நிறைவேற அறிந்தவர் எங்கே!
கணவரின் கைகளின் அணைப் பினிலே
கடைவீதி செல்வதை பார்க்க ஆளில்லை!
நாளுக்கு நாள் வயிரு மேடாவதை
கண்ணு போட ஒருத்தரும் இங்கில்லை!

என் சாமர்த்தியத்தைப் பாராட்ட என்
சொந்தங்கள் ஒருத்தரும் இங்கு எனக்கில்லை!
உன்னிடம் இருப்பதை விட என்னிடம்
உள்ளது சிறந்தது என்று கூற
என் அக்கா நீயென் அருகில் இல்லை!

பெண்ணுக்குப் பெருமையே மற்றவரின் பொறாமைதான்
அதைக் காட்ட அம்மா உன்
மகளுக்கு இங்கு யாரும் இல்லை!
உன் மடி சாய்ந்து உன் மகளின் – பெருமைதனை
மெச்ச அம்மா நீயிங்கு இல்லை!

திருமதி. ஜெயசீலன் (43.5)

பட்ட பகலில்
கண்களை திறந்தே கனவு காண்கிறேன்
மாரி அக்காவின் திருமணக் கோலம்
மடிக்கணினியில்
ஒரு துளி கண்ணீர் கண்ணிமையில்
நீ தான் மணப்பெண் தோழியென
சொல்லி வச்ச ஞாபகம்!

நாளுக்கு ஒருமுறை
அம்மாவின் குரல் கைபேசியில்
சாப்பிடு என்ற மிரட்டல் தொனி இப்போது
சாப்பிட்டாயா என்ற கேள்விக்குறியுடன்!

நேருக்கு நேராய் கருத்துகள் பரிமாறிய
என்னுயிர் தோழியை இப்போது
பதிவுலகில் சந்திக்கிறேன்
தூரங்கள் கடந்த கருத்துகளை பரிமாறும்
இதயங்களின் வலியை யாரறிவாரோ?

ஊரே மாக்கோலம் போடும் பொங்கல்
வெளிச்சத்துக்கு வானமே எல்லை
என சொல்லும் தீபாவளி
வீடே விழாக்கோலம் போடும் பிறந்தநாள்
உறவே கூடி வாழ்த்தும் திருமணம்
எல்லாம் எனக்கு மட்டும் இணையத்துக்குள்
அடங்கி போனதென்ன!

உலகின் தூரம் குறைக்கும்
கணிபொறியும் கைபேசியும்
என் இதயத்தின்
வலியினை குறைத்திடுமோ?

திரைகடல் ஓடி
திரவியம் தேடியென்ன
கடந்தவை மீண்டும் வந்திடுமா?

கீர்த்திநாதன் (38.2)

கொஞ்சம் வேகமாய் நடந்தாலே
வழுக்கி விடும் கண்ணாடி தரைகள்!

எத்தனை முறை பார்த்தாலும்
வாய் பிளக்க வைக்கும் அழகிய மால்கள்!

யாறோ பொறுமையாய் விரித்து போட்ட
கார்பெட் விரிபாய் - பாலைவன பதிவுகள்!

சுட்டெரிக்கும் சூரியனை-எதிர்த்து
ஏசியின் துணையோடு..துபாய்
என்னை ஆரத்தி எடுத்து வரவேற்றது!

எல்லாம் உண்டு இங்கே..ஆனால்
விடியலில் கோலம் போடும் சாக்கில்...
அரட்டை அடிக்க வாய்ப்பே இல்லை!

ஒன்பது மனீயானாலும் என்னாச்சோ-
என்று கதவு தட்டி எழுப்ப பக்கத்து வீட்டு அக்கா இல்லை!

மசக்கை ஆனாலும் சரி-ப்ரசவம் ஆனாலும் சரி.
வெறும் கணினி திரையில் செய்வதறியாது அம்மா...
இங்கே கண்கள் பனிக்க நாம்!

எல்லாம் இருந்தும் எதையோ ஒன்றை..
இழந்ததாய் ஒரு ஏக்கம்..!
மொத்தத்தில்...
உணர்ச்சிகளை விலங்கிட்டு ஊமையாக்கி..
கிடைக்கும் சில லட்சங்களுக்காக..பல
ஆசைகளை கனவுகளை அடமானம் வைத்து..
வெறும் பண தாள்களை அடைக்காக்கும்-
பண பெட்டகமாய் மாறிப் போகும்..
இந்த வெளிநாட்டு வாழ்வில்..
இதே ஆளுயர கண்ணாடி ஜன்னல் வழியே...ஒரே காட்சி தான்!

சில தலைகள் - பல கார்கள்..
இருந்தும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கிறேன்..
முதுகு பின்னிருக்கும்
தனிமையை துரத்த...!!

ராதிகா (சிறப்புப் பரிசு)

ஊரு விட்டு உறவு விட்டு
கட்டியவன் கரம் பிடித்து
கனவு சுமந்து வந்தேன் இங்கு

அண்டை வீட்டில் அறியா முகங்கள்
பேசவும் முடியா புது மொழிகள்
விடியுமுன் வேலை செல்லும் கணவன்
நடுநிசி வரை வெற்றுச்சுவர்களோடு நான்..!!

இணைய உலாவலில் தொடங்கி
தொலைக்காட்சித் தொடரில் தொலைந்து
தனக்குள் பேசி தானாகச் சிரித்து
தானே சமைத்து தனியாக உண்டு
தனிமையோடுப் போராடினேன் தனியாக...!!

அக்கறைப்படவும் ஆளில்லை
அவசரத்தில் உதவவும் யாருமில்லை
அம்மாவிடம் பேசும் போது மட்டும்
அழுகையை அடக்கம் செய்துவிட்டு
வாய் வலிக்கும் சிரிப்போடு
"ஆகாயம் தொடும் கட்டிடங்கள்
அரண்மனை போல் வீடு
அருமையான நாடு
சொர்க்கத்தில் வாசம்" என்ற பொய்களோடு..!!

வெளிநாட்டில் வாழ்க்கை
வளமான வசதிகளோடு
கை நிறையப் பணத்தோடு

மனிதர்களோ அசுர வேகத்தோடு..!!
மனது மட்டும்- எப்போதும்
வெறுமையோடும்!! ஏக்கத்தோடும்..!!

ஃப்ளோரா ஜீவா (சிறப்பு பரிசு)

சுத்தமில்லா காற்றும்-நீரும்
சப்தமில்லா கிராமத்து வீடும்
சீறிச் செல்லும் ஒரு வண்டும்
சிணுங்கும் செல்ல சிறு பெண்ணும்……..!

புழுதி பொங்கும் சாலையும்
புற்றும் பாம்பும் சாமியும்
புறத்தே ஓடும் பேராறும்
புல் பறிக்கும் சிறுவனும்……!

உரக்க பேசும் பாட்டியும்
உண்டியலுடன் வரும் ஆண்டியும்
ஊர்க் கோவில் பாட்டும்
உண்மை சொல் பஞ்சாயத்தும்…..!

ஓங்கி நிற்க்கும் மரங்களும்
ஒற்றை மாடி தனி வீடும்
ஒற்றையடி நீள் பாதையும்
ஒருங்கே அமைந்த சொந்தங்களும்…….!

நீண்டு ஓடும் ஓடைகளும்
நீந்தித் திரியும் காளைகளும்
நீங்கி மறையும் வறுமைகளும்
நித்தியமான பந்தங்களும்……!

ஆளுயர போஸ்டர்களும்
அடிக்க வரும் அண்ணன்களும்
ஆடிக் கூழும்-சோறும்
அம்பாளின் தேரும் ஊரும்….!

அர்த்தமாய் தோன்றவில்லையடி கிளியே…!
சுத்தமாய் புரியவில்லையடி…

தூய்மையான காற்றும்
சுவை தரும் நல் நீரும்
பழுதறியா சாலையும்
பரந்து விரிந்த சோலையும்
பத்தடுக்கு மாடியும்
பந்தமில்லா வாழ்க்கையும்

படிக்க வைத்தது கிளியே- அர்த்தம்
விளங்க வைத்தது தனியே!