படித்தவை ரசித்தவை – 7

Lakshmi Novels


Books Review


அன்புத் தோழிகளுக்கு,

எழுத்தாளர் லஷ்மியின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்களைப் பற்றி இங்கே ..

”மிதிலா விலாஸ்” – இதுதான் நாவலின் பெயர். இந்தப் பெயரைக் கேட்டதுமே, அழகான தூண்கள், மிகப் பெரிய ஹால், ஹாலின் மத்தியிலிருந்து செல்லும் அகலமான மாடிப் படிகள், மாடியில் விசாலமான அறைகள் என்று ஒரு மாளிகை நம் கற்பனையில் எழுந்து விடும்.

பசுபதி ஐயர் தேவிகுளம் என்ற ஊரில், புகழ் பெற்ற பஸ் கம்பெனியின் முதலாளி. இப்போது நோயினால் உடல் நலிவடைந்து, வீட்டில் நோயாளியாக படுக்கையில் இருக்கிறார். சாதாரண நிலையிலிருந்து, கடுமையாக உழைத்து, அவர் கட்டிய மாளிகையின் பெயர்தான் ”மிதிலா விலாஸ்”.

முதல் மகன் ஜெயராமன் பொறுப்பில்லாமல் சுற்றுபவன். அவன் மனைவி அப்பாவிப் பெண் சியாமளா. இரண்டாவது மகன் சந்திரசேகரன். இவன் மனைவி மைதிலி. அழகி என்பதோடு சாமர்த்தியக்காரி. மூன்றாவது மகன் ஈஸ்வரன். வெளிநாட்டில் படித்து விட்டு, தாய் நாடு திரும்புகிறான். இவர்களின் அம்மா தர்மாம்பாள் கர்வம் பிடித்த டிபிகல் பணக்காரப் பெண்மணி. இந்த வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, ஊரில் இருப்பவர்களும் தர்மாம்பாளின் வாய்க்குப் பயப்படுவார்கள். இந்த அம்மாளைக் கண்டு பயப்படாத ஒரே ஆத்மா, வீட்டின் சமையல்காரம்மா சௌபாக்கியம்தான்.

மிதிலா விலாஸில் மிகச் சின்ன வயதில் அடைக்கலமாக வந்து, இப்போது அத்தனை வேலைகளையும் பொறுப்பாக கவனிக்கும் இளம்பெண் தேவகி. இவள் பசுபதி ஐயரின் கூடப் பிறந்த தங்கையின் மகள். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால், மாமன் வீட்டில் வளர்கிறாள். பசுபதி ஐயர் நோயாளியாக ஆனதிலிருந்து அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்கிறாள். மிடுக்கும் கம்பீரமுமாக வலம் வந்த மாமாவிடம் இருந்த பயம், இப்போது குறைந்து, அவர் மீது அனுதாபமும் அன்பும் ஏற்படுகிறது அவளுக்கு. வேளாவேளைக்கு அவருக்கு மருந்து கொடுத்து, புத்தகங்கள் படித்துக் காட்டி, வெளிநாட்டில் இருந்து ஈஸ்வரன் எழுதும் கடிதங்களை அவருக்கு படித்துக் காட்டி, அவர் சார்பில் பதில் கடிதம் எழுதுவதும் தேவகிதான். தர்மாம்பாளுக்கு தேவகி மீது இரக்கம் என்பதெல்லாம் கிடையாது, கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று கேட்டு, வீட்டைப் பொறுப்பாக பார்த்துக் கொள்ள கிடைத்த ஆள்தான் அவள். அவ்வளவுதான். ஜெயராமனும் சந்திரசேகரனும் அதே போலத்தான். ஈஸ்வரன் மட்டும் தேவகியிடம் அன்புடன் நடந்து கொண்டான். வெளி நாட்டில் இருந்து அவன் வரும் நாளை எல்லோருமே ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தர்மாம்பாளுக்கு தன் அண்ணன் மகள் கிரிஜாவை ஈஸ்வரனுக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசை. தேவகி, ஈஸ்வரனை மனதிற்குள் விரும்பினாலும், அதை யாரிடமும் அவளால் சொல்ல முடியவில்லை.

சந்திரசேகரனுக்கு அண்ணன் வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக ஊதாரியாகத் திரிவதும், தம்பி ஈஸ்வரனின் வெளி நாட்டுப் படிப்புக்காக நிறைய செலவு ஆகியிருப்பதும் ஆத்திரத்தை உண்டு பண்ணியிருக்கிறது. அவன் மனதில் இப்படிப்பட்ட எரிச்சலை மூட்டி விட்டிருப்பது அவன் மனைவி மைதிலி. நீங்க மட்டும்தான் பொறுப்போடு இருந்து இப்படிக் கஷ்டப்படுகிறீர்கள் என்று தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிறாள் அவள்.

தர்மாம்பாளின் அண்ணன் மனைவி கோமதியும் அவள் மகள் கிரிஜாவும் மிதிலா விலாஸில் வந்து தங்குகிறார்கள். ஈஸ்வரன் கிரிஜாவின் அழகில் மயங்குகிறான். இன்னொரு பக்கம் தந்தையின் உடல் நிலை, மூத்த அண்ணன் வியாபாரத்தை கவனிக்காமல் இருப்பது, என்று பல விஷயங்கள் அவனை கவலைக்குள்ளாக்குகின்றன. ஈஸ்வரனுடன் படித்த கோபாலன் என்ற நண்பன் அதே ஊரில் உள்ள ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன்.

ஈஸ்வரனுக்கும் கிரிஜாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. முதலில் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்த கிரிஜா, பின்னர் தன் அம்மா இந்தப் பெரிய இடத்து சம்பந்தத்தின் அதிர்ஷ்டத்தைப் பற்றி வற்புறுத்தியதும் சம்மதிக்கிறாள். பணத்தின் மகிமை அவளது குணத்தையும் மாற்றுகிறது. நிச்சயதார்த்தம் ஆனபின் அவளது இன்னொரு முகத்தைப் பார்க்க நேரிடும்போது ஈஸ்வரன் இந்தத் திருமணம் தனக்கு சந்தோஷத்தைத் தருமா என்று யோசிக்க வேண்டியதாகி விடுகிறது. விருப்பமில்லாத திருமணத்தை ஒப்புக் கொள்ளாதே என்று பசுபதி ஐயர் ஈஸ்வரனிடம் முன்னமேயே புத்தி சொல்லியிருக்கிறார்.

தர்மாம்பாள் பெட்டியில் பூட்டி வைத்திருந்த நகைகளை கிரிஜாவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறாள். மைதிலியின் பொறாமை சந்திரசேகரனையும் தொற்றிக் கொள்கிறது. விளைவு – அண்ணன் தம்பிகளுக்குள் அடிதடி சண்டையில் வந்து முடிகிறது.

தன் கண் முன்னே தன் பிள்ளைகள் அடித்துக் கொள்வதைப் பார்த்து வேதனைப்பட்டு, பசுபதி ஐயர் மனம் நொந்து, இறக்கிறார்.

அவர் இறப்பிற்குப் பின் அவரது உயில் படிக்கப் படுகிறது. மிதிலா விலாஸ் யாருக்கு என்று தெரிய வரும்போது எல்லாருமே திகைத்துப் போகிறார்கள்.

கோபுலுவின் ஓவியங்கள் ரொம்ப அழகாக இருந்தன. கதையும் நல்ல விறுவிறுப்பு. தர்மாம்பாளும் அவருடைய அண்ணன் மனைவி கோமதியும் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு தந்தி வருகிறது. அதை கிரிஜா பிரித்துப் படிக்கிறாள், இந்தக் காட்சியை கோபுலு அவர்கள் வரைந்திருப்பார். தந்தியைப் பிரித்துப் படிக்கும் கிரிஜாவின் முகத்தில் ஒரு அதிர்ச்சி, அதைக் கேட்டுக் கொண்டு இருக்கும் அவள் அம்மாவின் முகத்தில் பதற்றம், என்று அந்த சித்திரம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. இன்னொரு ஓவியம் – மரத்தடியில், காலை மடித்து, மண்டியிட்டு, கிரிஜா பூக்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டே, தலையை லேசாக உயர்த்தி, அருகில் நிற்கும் மைதிலியைப் பார்க்கிறாள். மைதிலி, அவளை நோக்கி, தலையை ஒரு பக்கமாக சாய்த்து, சிறிது தாழ்த்தி, பேசுவதை சித்தரிக்கும் ஓவியம், அழகு!

ஈஸ்வரனின் நண்பன் கோபாலனின் முன் கதையை வெகு சுருக்கமாகக் கொடுத்திருக்கிறார் லஷ்மி. பர்மாவில் நன்றாக வாழ்ந்து, அங்கேயே சொத்து சுகங்களை விட்டு விட்டு, கால் நடையாக இந்தியா திரும்பிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள், வழியில் உயிர் இழந்த குடும்பத்தினரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு வர நேரும் கொடுமை, இதையெல்லாம் சுருக்கமாக இரண்டு அத்தியாயங்களில் மட்டும் குறிப்பிட்டு இருக்கிறார். பர்மாவிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்கள் வரும் வழியில் அனுபவிக்கும் துயரங்களை மையமாக வைத்து, அமரர் கல்கி அவர்கள் எழுதிய “ஜமீந்தார் மகள்” குறு நாவலையும் படித்திருக்கிறேன். (ஆனால் இப்படிப்பட்ட துயரப் பிண்ணனியில் எழுதப்பட்ட அந்த நாவலிலும் மிக ரசிக்க வைக்கும் நகைச்சுவையையும் மனித நேயத்தையும் அமரர் கல்கி அவர்கள் தந்திருந்தார்.)

இந்தக் கதையை வழக்கம் போலவே (சில வருட இடைவெளியில்) பல முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் வேறு வேறு அம்சங்கள் என்னைக் கவரும். மிக சமீபத்தில் படித்த பின், என் மனதில் நின்ற கதாபாத்திரம் யார் தெரியுமா? பசுபதி ஐயர்தான்!

இன்று சென்னையில் பல முக்கியமான இடங்களில் இடை இடையே, பிரமாண்டமான பழைய பங்களாக்கள் - பெரிய பூட்டுகள் போட்டு, பூட்டப் பட்டு, ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி, கதவுகள் செல்லரித்து, பக்கங்களில் ஆலஞ்செடிகள் முளைத்து, சுவர்களில் விரிசல் விழுந்து, எத்தனையோ சொல்லப் படாத கதைகளின் சாட்சியாக இருப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மனம் அதிரும். எத்தனை திருமணங்கள் இந்த வீடுகளில் நடந்திருக்கும், எத்தனை குழந்தைகள் ஓடிப் பிடித்து ஒளிந்து விளையாடியிருப்பார்கள், எத்தனை பந்தி சாப்பாடு நடந்திருக்கும், இதைக் கட்டியவர் எத்தனை ஆசைகளுடன் தனது வாரிசுகள் இந்த வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டிருப்பார் என்றெல்லாம் நினைத்து வேதனைப் படுவேன்.

தன்னுடைய உயிலை எழுதி முடித்து விட்டதாக பசுபதி ஐயர் தேவகியிடம் சொல்வதும், மிதிலா விலாஸ் என்ற பெயரை சூட்டிய தேவகியின் அம்மாவான தன் தங்கையை நினைப்பதும் ரொம்ப நெகிழ்ச்சியான ஒன்று. தேவகியின் அம்மா தன்னிடம் இவ்வளவு பெரிய மாளிகையைப் பார்க்கும்போது - அதைக் கட்ட தன் அண்ணன் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுவதாக சொன்னதையும், பிற்காலத்தில் தன் அண்ணனுடைய பிள்ளைகள் அந்த உழைப்பின் அருமையை உணர்ந்து, மிதிலா விலாஸை பாதுகாக்க வேண்டுமே என்று கவலையுடன் சொன்னதையும் திரும்பவும் நினைக்கிறார். அந்தக் கவலை அப்போது தனக்கு அனாவசியமாகத் தோன்றியதையும், இப்போது அது நிஜமாகி இருப்பதாகவும் அவர் சொல்வதைப் படித்த போது, இன்று நான் பல இடங்களில் பார்க்கும் ஆளில்லாத மாளிகைகளும் அவை தரும் வேதனையும் திரும்பவும் ஏற்பட்டது.

பிள்ளைகள் இடையே நடந்த சண்டையைப் பார்த்து, மயங்கி விழுகிறார் பசுபதி ஐயர். சந்திரசேகரன் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான். டாக்டர், ஈஸ்வரனிடம் அப்பா முடிவை நெருங்கி விட்டார் என்று சொல்கிறார். ஈஸ்வரன் அப்பாவிடம் (அவர் மனம் வேதனைப் படக் கூடாது என்று)அண்ணன் வீட்டை விட்டுப் போனதை சொல்லாமல் மறைக்கிறான்.

இறப்பதற்கு முதல் நாள் ஈஸ்வரனிடம் மனம் விட்டுப் பேசுகிறார் தந்தை. தன் முடிவு நெருங்குவதை உணர்ந்தாலும் அவரிடம் சாவைப் பற்றிய பயம் எதுவும் இல்லை. தனக்குப் பின் என்ன நடக்கும் என்பதைப் பற்றி பேசுகிறார். தன் மனைவி தர்மாம்பாள் என்னதான் துர்க்குணங்கள் நிறைந்தவளாக இருந்தாலும், வயதானவள், கணவன் இறந்தபின் தனிமையையும் வயோதிகத்தையும் அதிகம் உணர வேண்டியிருக்கும், அண்ணன்கள் இருவரும் அவளைப் பராமரிப்பது சந்தேகம், அதனால் ஈஸ்வரன் தன் அம்மாவை அவளது கடைசிக் காலம் வரை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வாக்குக் கொடுக்குமாறு கேட்கிறார். அண்ணன் ஜெயராமனை கை விட்டு விடாதே, அவனுக்கு தொழிலில் சிறிது காலமாவது அனுபவம் வரும் வரை அவனுக்குத் துணையாக இரு என்று வேண்டுகிறார். சந்துருவையும் மைதிலியையும் பார்க்க வேண்டும் போல இருக்கிறது, கூப்பிடு என்கிறார். அவன் ஊரிலேயே இல்லை என்பதைப் புரிந்து கொண்டாலும் அவரிடம் கோபம் இல்லை. சாகும்போது எல்லாப் பிள்ளைகளும் அருகில் இருக்க தனக்குக் கொடுத்து வைக்கவில்லை என்று மட்டும் சொல்கிறார். சந்துரு வந்தால் அவனிடம் தனக்கு எந்தக் கோபமும் இல்லை என்று சொல்லுமாறும், அவனுக்கும் மைதிலிக்கும் தன்னுடைய ஆசிகளைக் கூறும்படியும் சொல்கிறார்.

தன் மறைவுக்குப் பின் உயிலைப் படித்துப் பார்க்கும்போது ஒரு வேளை பிள்ளைகள் எல்லோருக்குமே அப்பா தங்களிடம் பாரபட்சமாக நடந்து கொண்டிருப்பதாக பிரமை ஏற்படலாம், ஆனால், தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை, நியாயமான முறையில்தான் உயில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், உணர்ந்து கொள்வார்கள் என்றும் ஈஸ்வரனிடம் சொல்கிறார். அனாதைப் பெண் தேவகி கைவிடப் பட்டு விடக்கூடாது என்பது அவரது கடைசி வேண்டுகோள்.

வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது, யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எல்லோரிடமும் அன்பை மட்டும் தந்து, பிரியும் அந்த வயதான பெரியவர் என் மனதில் நின்று விட்டார்.

எல்லோரது குடும்பங்களிலுமே இப்படி – தன்னுடைய உழைப்பால் சொந்தங்களையும் குடும்பத்தையும் உயர்த்தி, பிள்ளைகளிடமும் சொந்தங்களிடமும் புரிதலையும், அன்பையும் எதிர்பார்த்து, பின் ஏமாந்து, குணக் கேடுகளைப் பார்த்து வருந்தி, பின் வெறுமையை உணர்ந்து, கடைசியில் எந்தக் கோபமும் இல்லாமல், அன்பை மட்டுமே தந்து, பிரிந்த எத்தனையோ பெரியவர்கள் நினைவுக்கு வருகிறார்களா!! அப்பா, தாத்தா, பெரியப்பா, மாமா இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த நாவலில் பசுபதி ஐயர் அவர்களை உங்களுக்கு நினைவு படுத்தினால், உங்கள் கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர் வருவது நிச்சயம்.

எனக்கு கண்ணீர் வந்தது, கண்களில் நிறைந்தது.

இனி, மீண்டும் வசந்தம் என்ற நாவலைப் பற்றி சொல்கிறேன்.

இந்த நாவல் குமுதம் பத்திரிக்கையில் தொட்ர்கதையாக வந்தது. நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல காலத்தினால் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்கும் பழக்கம் உடையவரான லஷ்மி, அதை தன்னுடைய எழுத்துகளில் வெளிப்படுத்தியும் இருக்கிறார்.

இந்த நாவல் 1970களில் வெளி வந்தது. பெண்கள் வேலைக்குப் போவது சரியா தவறா என்ற சர்ச்சை மாறி, அதனால் ஏற்படும் விளைவுகள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்து கொண்டிருந்தது.

பெற்றோரிடம் பிள்ளைகளும், மாமியார் மாமனாரிடம் மருமகள்களும் பயந்து கொண்டிருந்த காலம் மாறியது. குடும்பத் தொழிலைக் கற்று, அப்பாவிடம் பிள்ளைகள் அடங்கி இருந்தது போய், வேலைக்குச் சென்று, தாராளமாக பிள்ளைகள் சம்பாதித்தார்கள். என் புருஷன் சம்பாத்தியம் என்ற நிலையில் மருமகள்களின் குரல் ஓங்கியது.

பின்னர் பெண்கள் வேலைக்குப் போகத் தொடங்க, பெற்றோர்கள் கொஞ்சம் நிம்மதி ஆனார்கள். ஆனால், இதன் தொடர்ச்சியாக, சம்பாதிக்கும் பெண் கல்யாணம் ஆகிப் போய் விட்டால், அவள் தரும் பணம் நின்று விடுமே என்ற நிலையில், நிறையப் பெண்களின் திருமணம் தள்ளிப் போனது. கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும், பல வீடுகளில் நடந்த கதைதான் இது. அலுவலகங்களில் காதல் உருவாகி, ரகசியத் திருமணங்களும் நடந்தன. அப்படி பெற்றோரை மீறி, கல்யாணம் செய்து கொள்வது சரியா தவறா, காதல் திருமணமா, பெற்றோர் செய்து வைக்கும் திருமணமா என்பதைப் பற்றி பல்வேறு கோணங்களில் திரைப்படங்களிலும் நாவல்களிலும் அபிப்ராயங்கள் சொல்லப்பட்டன. இந்த நாவலிலும் திருமண உறவுகள், கணவன் மனைவி இடையே எழும் பேதங்கள் எல்லாம் நிறைய கதாபாத்திரங்களின் வழியே சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த நாவலின் கதா நாயகி மீரா அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண். அப்பா இல்லை. அக்கா அண்ணன் இருவருக்கும் திருமணமாகி விட்டது. அம்மா இளைய பெண் இன்னும் கொஞ்ச நாள் சம்பாதிக்கட்டுமே என்று நினைக்கிறாள். இளைய மகளின் வருமானத்தில் மூத்த மகளுக்கு சீர் செய்கிறாள். அண்ணனுக்கும் மீராவுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

மீராவின் பள்ளிக்கூட டீச்சர் சாரதா, ரிடையரானவர். மீராவின் வீட்டின் அருகேதான் குடியிருக்கிறார். மீராவுக்கு நல்ல ஆலோசனைகள் சொல்லும் தோழி. அவளது குடும்பத்தினரது மனப் போக்கு அவருக்கு எரிச்சல் தருகிறது. அவர் இள வயதில் விதவையானவர். பின்னர் ஆசிரியையாக வேலை பார்த்தவர். தம்பி, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து, பெற்றோரைப் பராமரித்து, இன்று உதவிக்கு யாரும் இல்லாமல் இருக்கிறார். அவரை மறுமணம் செய்து கொள்ள முன் வந்தவரை, தனக்கு விருப்பம் இருந்தும், குடும்பத்தினருக்காக தவிர்த்ததை சொல்கிறார் மீராவிடம். “மீரா, டோண்ட் மிஸ் யுவர் பஸ்”, உனக்கான வாழ்க்கையை இழக்காதே,” என்று எச்சரிக்கிறார்.

டைப்பிஸ்ட் ஆக வேலை பார்க்கும் மீராவும் , மருத்துவக் கல்லூரி மாணவன் கஸ்தூரியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அவனும் ரொம்ப வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல. அவனது அக்கா மோகனா அமெரிக்காவில் வளமாக இருக்கிறாள். தம்பியின் படிப்பு செலவுகள் அவள் பார்த்துக் கொள்கிறாள். அவனுக்கு திருமணமான ஒரு அண்ணனும் பெற்றோரும் கும்பகோணத்தில் இருக்கிறார்கள். அவனுக்கு ஒரு வரன் பார்த்து, திருமணத்தை முடிக்க, அக்கா மோகனா அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறாள்.

திருமணத்தை தள்ளிப் போட முடியாது, இரு தரப்பிலும் இப்போது சம்மதம் கிடைக்காது, அதனால் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறான் கஸ்தூரி. சாரதா டீச்சரிடம் மீரா யோசனை கேட்கிறாள். கஸ்தூரி சொல்வது சரி என்கிறார் அவர். அதே சமயம் மீராவிடம் எச்சரிக்கை செய்கிறார். ”திருமண வாழ்க்கை ஒன்றும் ஆனந்தமாக இருக்காது, பல சோதனைகளும் இடர்களும் வரவே செய்யும். எதிர்த்துப் போராடி, வெற்றி காண, மனத்துணிவை வளர்த்துக் கொள், அவன் மாணவன், உன் சம்பாத்தியத்தில் அவன் படித்து, டாக்டர் ஆக வேண்டும். ஆனால், இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் காலம் உனக்காகக் காத்திருக்காது, நீ தயங்கினால் அந்தப் பையனும் தன் முடிவில் தடுமாறி விடலாம்” என்று தெளிவாக சொல்கிறார். மீராவும் கஸ்தூரியும் ரெஜிஸ்தர் ஆஃபிஸில் பதிவு செய்து கொண்டு, கோயிலிலும் மாலை மாற்றி, தாலி கட்டி, திருமணம் செய்து கொள்கிறார்கள்.

எதிர்பார்த்தது போலவே இரண்டு வீட்டினரும் எதிர்க்கின்றனர். கஸ்தூரியின் அம்மா மட்டும் ஆசிர்வாதம் செய்கிறாள். தனி வீடு பார்த்து, தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். பணப் பற்றாக்குறையிலும், இனிமையான சிட்டுக்குருவிகள் போல உற்சாகமாகவே தொடங்குகிறது அவர்கள் வாழ்க்கை. குடியிருக்கும் வீட்டின் சொந்தக்கார பெண்மணி, காய்கறி விற்கும் பெண், பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்று பலரும் அன்பாக இருக்கிறார்கள்.

இடையில் மீராவின் அம்மா அவளை நேரே சந்தித்து, உடல் நலம் சரியில்லை என்று அழுது, மீராவின் கையில் அணிந்திருந்த தங்க வளையல்களை வாங்கிக் கொண்டு போகிறாள். அக்காவின் வளைகாப்பு வைபவ செலவுக்காகத்தான் இந்த நாடகம் என்று தெரிந்து மீரா வேதனைப்படுகிறாள். இதை அறிந்த சாரதா டீச்சர், “YOU CANNOT HAVE DIVIDED LOYALTY” என்று கூறுகிறார்.

மீராவின் ஹவுஸ் ஓனர் ஜானம்மாள் தன் மகள் வழிப் பேத்தியான சிறுமி மல்லிகாவை தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறாள். மருமகன் தன் மகளைக் கொடுமைபடுத்தியதாகவும், மகள் இறந்த பின் அவன் வேறொரு திருமணம் செய்து கொண்டதாகவும் வருத்தப்படுகிறாள்.

மீராவுக்கு அருணா என்றொரு புதிய தோழி கிடைக்கிறாள். மீராவை விட வயது மூத்தவள். நவீன், ஜெயந்தி என்ற இரண்டு வளர்ந்த பிள்ளைகளின் தாய். பெற்றோரை எதிர்த்து, காதல் திருமணம் செய்து கொண்ட அருணா, கல்யாணத்துக்குப் பின் தடம் மாறிய கணவனிடம் அடியும் உதையும் வாங்கி, பின் பொறுக்க முடியாமல் அவனை விட்டுப் பிரிந்து, டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறாள். மீராவின் வீட்டருகே ஒரு மளிகைக் கடை நடத்துகிறாள். கணவனை டைவர்ஸ் செய்யவில்லை, மகளின் கல்யாணத்தின் போது, தகப்பன் என்ற முறையில் அவன் வந்து நிற்க வேண்டும் என நினைப்பதாகக் கூறுகிறாள்.

கஸ்தூரியின் அம்மா உடல் நலமில்லாமல் இருப்பதால் இருவரையும் ஊருக்கு வந்து பார்க்கும்படி சொல்லி கடிதம் வருகிறது. வர மறுக்கும் கஸ்தூரியை சமாதானம் செய்து ஊருக்கு அழைத்துச் சென்று, சில நாட்கள் அங்கே இருவரும் தங்கி விட்டு வருகிறார்கள்.

ஒரு குழந்தைக்கு தாயாகிறாள் மீரா. கஸ்தூரி மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டை முடித்து, ஹவுஸ் சர்ஜன் ஆகிறான். மீரா தொடர்ந்து வேலைக்குப் போகிறாள்.

இடையில் கஸ்தூரியின் தாயார் காலமாகி விடுகிறார். கஸ்தூரியின் அக்கா மோகனா, அமெரிக்காவிலிருந்து வந்தபோது, மீராவை சந்தித்து, அன்புடன் பேசுகிறாள். தன் அப்பாவை கவனித்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறாள்.

மீராவின் தோழி அருணாவின் கணவன் நோய்வாய்ப்பட்டு, மனைவியிடமே திரும்பி வந்து விடுகிறார். அருணாவின் மகள் ஜெயந்திக்கு திருமணம் நிச்ச்யமாகி இருக்கிறது. அப்பாவை வெறுக்கும் ஜெயந்தி, நவீன் இருவரும் அவர் வீட்டுக்கு திரும்பி வந்ததை எதிர்க்கிறார்கள். அருணா, மீராவிடம் அவர்கள் இருவரிடமும் பேசி, சமாதானம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறாள். மீராவின் அறிவுரைக்கு மதிப்பு கொடுக்கிறார்கள் இருவரும். ஜெயந்தியின் திருமணம் முடிந்த சில நாட்களில் அருணாவின் கணவர் இறந்து விடுகிறார்.

கஸ்தூரியின் அப்பாவால் மூத்த மகன் மருமகளுடன் அனுசரித்துப் போக முடியவில்லை. ஆசிரமத்தில் தங்க எண்ணி, சென்னை வந்தவரை, தற்செயலாக சந்தித்த மீரா, வீட்டுக்கு அழைத்து வருகிறார். தனக்கு துணையாக தங்குமாறு கேட்டு, தங்களுடன் தங்க வைக்கிறாள்.

கஸ்தூரியின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம். பணக்காரனாக வேண்டுமென்று துடிக்கிறான். சேவை மனப்பான்மயுடன் ஆஸ்பத்திரி நடத்தி வந்த டாக்டர் ஜனார்த்தனிடம் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, டாக்டர் சங்கமித்திரன், அவன் தங்கை கிருத்திகா இருவரும் நடத்தும் மருத்துவமனையில் சேர்ந்து விடுகிறான். தொடர்ந்து, கிருத்திகாவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து, மீராவை ஒதுக்குகிறான். மீராவிடம் விவாகரத்து கேட்கிறான். மீரா முதலில் விவாகரத்து கொடுக்க மறுக்கிறாள். இது தங்கள் இருவர் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, தங்கள் குழந்தைக்கு தகப்பன் வேண்டும், விவாகரத்து என்பது அந்தக் குழந்தையின் உரிமையை பறிப்பதாகி விடும் என்கிறாள். கஸ்தூரியின் அக்கா, அண்ணன், மீராவின் குடும்பத்தினர் அனைவரும் கஸ்தூரியிடம் பேசிப் பார்க்கிறார்கள். அனைவருமே மீராவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகி விடுகிற்து. மீரா மனதை மாற்றிக் கொண்டு கஸ்தூரிக்கு விவாகரத்துக்கு சம்மதிப்பதாக கடிதம் எழுதுகிறாள். தொடர்ந்து ஒரு பெரிய கார் விபத்தில் சிக்குகிறாள். இதற்கிடையில் கஸ்தூரியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லிய கிருத்திகா, கஸ்தூரியிடம் இருந்து விலகுகிறாள். கஸ்தூரி மனம் திருந்துகிறான்.

சினிமா நடிகர்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி படித்திருக்கிறேன். அவர்களின் முதல் மனைவி எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதை பற்றியும் ஆச்சரியப் பட்டிருக்கிறேன். மனைவி அப்பாவியாக இருப்பதால்தானே இப்படி நடக்கிறார்கள், அந்த மனைவி இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும், அப்பதான் இவங்களுக்கு புத்தி வரும் என்று சூடாக பேசியிருக்கிறேன். சில வருடங்களுக்குப் பிறகு, அந்தப் பெண்கள் FINANCIALLY DEPENDANT, கணவனை சார்ந்திருக்க வேண்டிய தேவை, தவிர தனியாக இருந்தால் சமூகத்தில் மதிப்பு இருக்காது, அதனால்தான் எதிர்ப்பு காட்ட முடியவில்லையோ என்று யோசித்திருக்கிறேன். பிள்ளைகளுக்காக சகித்துக் கொண்டிருக்கிறார்கள் போல என்று பரிதாபப்பட்டிருக்கிறேன். வெளியில் பொறுமையாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டாலும், இந்த மாதிரி நடக்கும் கணவனை, சரிதான் போடா என்றுதான் மனசுக்குள் திட்டிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்திருக்கிறேன்.

ஆனால் இந்தக் கதையில் அருணா மீராவிடம் பேசுவதாக லஷ்மி எழுதியிருந்ததைப் படித்த போது இப்படி ஒரு கோணமும் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டேன்.

”காதலித்து மணந்த கணவன், என்னதான் தவறுகள் செய்தாலும், அவன் மீது உள்ள அன்பு அப்படியேதான் இருக்கிறது, பிள்ளைகளின் எதிர்காலத்தை முன்னிட்டுதான் பிரிந்து வந்தேனே தவிர, வயதான காலத்தில், கணவர் திரும்பி வருவார், மனதினால் மணந்து கொண்டோம் என்ற நினைப்பில் வாழலாம் என்று நினைத்தேன், உண்மையான அன்பு கணவனின் மீது இருந்தால் அதை உதறவும் முடியாது, வெறுப்பாக மாற்றிக் கொள்ளவும் முடியாது” என்று அருணா சொல்வதைப் படித்தபோது, கணவனை, அவன் மீதுள்ள அன்பினால், அவன் தவறுகளையும் சேர்த்தேதான் மனைவி அங்கீகரிக்கிறாள் என்று தோன்றியது.

அதே போல விவாகரத்து கேட்கும் கணவனிடம், குழந்தைக்கு தகப்பன் இல்லாமல் செய்ய முடியாது, அவன் உரிமைகளைப் பறிக்க முடியாது என்று மீரா சொல்வதும் சிந்திக்க வைத்தது.

தனிமையில் இருக்கும் மகளை அம்மா பார்வதி பார்க்க வருகிறாள். அம்மாவிடம் மனம் விட்டுப் பேசி, கண்ணீர் விடுகிறாள் மீரா. எத்தனையோ பேர் மீராவிடம் அன்பும் ஆறுதலுமாகப் பேசினாலும், அம்மாவின் மடியில் உகுத்த கண்ணீர், மீராவின் மனதில் ஒரு அமைதியை ஏற்படுத்துவதாக கதாசிரியை எழுதியிருக்கிறார். உண்மைதான். அம்மாவின் அருகாமையில் கிடைக்கும் நிம்மதி வேறு எங்கே கிடைக்கும்!

அருணாவின் பிள்ளை நவீன், மீராவுக்கு நன்றி சொல்லும் இடமும் நெகிழ வைத்த ஒரு பகுதி.

பல ஆண்டுகள் வெற்றிகரமான தம்பதிகளாக இருப்பவர்கள், வாழ்க்கையில் பிரச்னையே இல்லாமல் இருந்தவர்கள் என்று பொருளல்ல, சோதனைகளையும், மன வேறுபாடுகளையும் தாண்டி, சகித்து, விட்டுக் கொடுத்து, மன்னித்து, இவை அத்தனைக்கும் அடிப்படையான அன்பை மட்டும் காப்பாற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம், அப்படித்தானே!

தோழிகள் இந்தக் கதையை ஏற்கனவே படித்திருந்தால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். இது வரை படித்ததில்லை என்றாலும், உங்களுக்கு தோன்றும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இரண்டு நாவல்களையும் பற்றி ரொம்ப சீரியஸாக எழுதியிருக்கிறேனா? இனி, லஷ்மியின் கதைகளை நிறையப் படித்த பின், எனக்குத் தோன்றிய, நான் கவனித்த, அவரது எழுத்தின் ஸ்டைல் பற்றி சில விஷயங்கள்.

அவரது சமீபத்திய கதைகளில் ஸ்டீல் தட்டுகளில் பரிமாறினாள், ஸ்டீல் தம்ளரில் காஃபி கொண்டு வந்தாள் என்று அடிக்கடி எழுதி இருப்பார். எனக்கு வியப்பாக இருக்கும். எல்லோருமே எவர்சில்வர் பாத்திரங்களைத்தானே பயன்படுத்துகிறோம் என்று நினைப்பேன். பிறகுதான் புரிந்தது – அவர் எழுதத் தொடங்கிய கால கட்டத்தில் எவர்சில்வர் பாத்திரங்கள் வரவில்லை என்பது. அவரது பழைய நாவல்களில், ஏழ்மைக் குடும்பத்தில் இருக்கும் கதா நாயகி, வெண்கலத் தம்ளர், பித்தளைத் தட்டு இவற்றை உபயோகப் படுத்துவதையும், வசதியான குடும்பத்தில் வெள்ளித் தட்டில் சாப்பிட்டு, வெள்ளித் தம்ளரில் பால் குடிப்பதையும் குறிப்பிட்டு இருப்பார்.

அதே போல ஓட்டுப் பக்கவடாம், பாதாம் அல்வா இரண்டும் டிஃபனாக பரிமாறப் பட்டதாக பல கதைகளில் எழுதியிருப்பார். முதலில் எனக்கு இந்த ஓட்டுப் பக்கவடாம் என்றால் என்ன என்று தெரியவில்லை. ரொம்ப யோசித்து(?!) ரிப்பன் பக்கோடா என்று சொல்லப்படுவதைத்தான் அழகாக இப்படி சொல்கிறார் என்று புரிந்து கொண்டேன்.

இந்தத் தடவை நிறையவே எழுதி இருக்கிறேன். லஷ்மி என்ற டாக்டர் திரிபுரசுந்தரி என்னைப் போன்ற நிறைய வாசகிகளின் மனம் கவர்ந்த எழுத்தாளர் ஆயிற்றே, அதனால்தான் இத்தனை பெரிய பதிவு.

அன்புடன்

சீதாலஷ்மி

Comments

சும்மா ஒரு புக் கொடுத்து முன்னுரை சொல்லி கொடுத்தாலும் படிச்சுருக்க மாட்டேன். உங்க எழுத்துக்களில் அந்த ஆர்வத்தை அதிகப்படுத்திட்டீங்க. தேவகி என்ன ஆயிருப்பான்னு யூகிக்க முடியுது. ஆனாலும் கண்டிப்பா வித்தியாசமாக தான் முடித்திருப்பார்கள் என எண்ணும் போது படபடப்புடன் கூடிய ஆர்வம் வலுக்கிறது.

மிதிலா விலாஸ் நாவல் கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல் தான். வாய்ப்பு ஏற்படுத்தி படித்துவிட்டு சொல்கிறேன் சீதாம்மா

மிக்க நன்றி நல்லதொரு புத்தகத்தை பற்றி தகவல்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு..

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சீதாலக்ஷ்மி

இந்த பகுதி சீக்கிரமாகவே முடிந்துவிட்டதே என நினைக்கிறேன்.. இரண்டு நாவல்களையும் படிக்க ஆசை தூண்டுகிறது..

மிதிலை விலாஸ் :

///எல்லோரது குடும்பங்களிலுமே இப்படி – தன்னுடைய உழைப்பால் சொந்தங்களையும் குடும்பத்தையும் உயர்த்தி, பிள்ளைகளிடமும் சொந்தங்களிடமும் புரிதலையும், அன்பையும் எதிர்பார்த்து, பின் ஏமாந்து, குணக் கேடுகளைப் பார்த்து வருந்தி, பின் வெறுமையை உணர்ந்து, கடைசியில் எந்தக் கோபமும் இல்லாமல், அன்பை மட்டுமே தந்து, பிரிந்த எத்தனையோ பெரியவர்கள் நினைவுக்கு வருகிறார்களா!! அப்பா, தாத்தா, பெரியப்பா, மாமா இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்///

பெரிய பேராவை காப்பி செய்து போட்டதுக்கு மன்னிக்கவும். வேறு வழியில்லை. :)
நல்ல வரிகள் ..அழகாக கூறி இருக்கிறீர்கள். பெரியவர்கள் மீது மீண்டும் ஒருவித மதிப்பு ஏற்படுகிறது.
உண்மையில் சொல்கிறேன் சீதாலக்ஷ்மி..இந்த வரிகளை படித்ததும் எனது விழிகள் நீரினால் நிரம்பியது.. அடுத்த வரியிலேயே உங்களின் கண்ணீர்த்துளிகள் பற்றி எழுதி இருந்தீர்கள். ஆச்சர்யம். எழுத்திற்கு எத்தனை சக்தி உள்ளது..

எனக்கும் பசுபதி ஐயர் மீது ஒரு இனம் புரியா பாசமும், எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத தேவகி மீது ஒரு மதிப்பும் வந்தது. ( என் அம்மா பெயர் கூட தேவகி தான் மேலும் கதையில் வரும் தேவகி போலவே அவரும்)

மீண்டும் வசந்தம் :

இந்த கதையில் வரும் மீராக்கள் போல பலர் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள். மீராவின் வீட்டை சுற்றி நல்ல ஆரோக்கியமான உறவுகள். கஸ்தூரியின் மனம் மாற்றம்.. மீராவின் அழுகை அம்மா மடியில், நவீன், ஜெயந்திக்கு அவள் அளித்த புத்திமதி , கஸ்தூரியின் தந்தைக்கு அடைக்கலம் என அனைத்தும் நம் வீட்டில் ஒரு பெண்ணாகவே மீராவை எண்ணத் தோன்றுகிறது.
இரண்டு முறை படித்தேன்
நாவல்களில் உங்களுக்கு பிடித்த சிலவற்றை எடுத்து அந்த நாவலின் அழகு குறையாமல் எங்களுக்கு அளித்தமைக்கு கோடி நன்றிகள்..

உங்களின் ரசிகை
ரம்யாகார்த்திக்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு ஆமினா,

பாராட்டுக்கு மிகவும் நன்றி. வாய்ப்பு கிடைக்கும் போது, கண்டிப்பாக லஷ்மியின் கதைகளைப் படித்துப் பாருங்க.

சிறப்பான சிறுகதைகளையும், அருமையான கவிதைகளையும் தரும் படைப்பாளியான உங்கள் பாராட்டு, எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தருகிறது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரம்யா,

இந்த முறை மிதிலா விலாஸ் படித்த போதும் சரி, இந்தப் பகுதியை எழுதும்போதும் சரி, ரொம்பவும் நெகிழ்ந்து போயிருந்தேன். அந்த அளவுக்கு என் மனதில் இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் நிறைந்து போயிருந்தார்கள்.

மீண்டும் வசந்தம் நாவலைப் படித்த போது, ரொம்பப் பிரமித்துப் போய் விட்டேன். சாதாரணமாக எழுத்தாளர் லஷ்மியைப் பற்றி விமரிசப்பவர்கள், அவர் எப்போதுமே பெண்கள் அடக்கமாக, பொறுமையாக இருக்கணும் என்று எழுதுகிறாரே என்று சலித்துக் கொள்வார்கள். ஆனால், குடும்ப உறவுகள் நீடிக்க வேண்டும் என்றால், சூழ்நிலைகளை எப்படி எதிர் கொள்வது என்பதை அவர் இந்த நாவலில் சொல்லியிருந்த விதம் எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மிதிலா விலாஸ் கதையை போலவே நீங்கள் அதை நீங்கள் ரொம்ப உணர்ந்து எழுதி இருப்பதும் அருமை!

மீண்டும் வசந்தம்... ம்ம்ம்ம்....

//பல ஆண்டுகள் வெற்றிகரமான தம்பதிகளாக இருப்பவர்கள், வாழ்க்கையில் பிரச்னையே இல்லாமல் இருந்தவர்கள் என்று பொருளல்ல, சோதனைகளையும், மன வேறுபாடுகளையும் தாண்டி, சகித்து, விட்டுக் கொடுத்து, மன்னித்து, இவை அத்தனைக்கும் அடிப்படையான அன்பை மட்டும் காப்பாற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம், அப்படித்தானே!//

நீங்கள் சொல்லி இருப்பதை நான் இல்லையென்று சொல்ல மாட்டேன் ஆனால் இந்த கதையில் வரும் கஸ்தூரியின் கதாப்பாத்திரத்தை இந்த கேட்டகரியில் சேர்க்க முடியவில்லை. இந்த கதையை நான் படித்த போது இருந்த feminist thoughts ஒரு காரணமாக இருக்கலாம்... மற்றபடியும் என்னால் இப்படி மனம் மாறும் கதாபாத்திரத்தை அக்சப்ட் செய்துக் கொள்ள முடியவில்லை.
இந்த கதையை படித்து விட்டு என்னுடைய பள்ளி தோழியும் நானும் இதை பற்றி பேசி இருக்கிறோம்... கதையை வேறு எப்படி முடிக்க முடியும் என்று தான் அவள் சொன்னாள்... ம்ம்ம்... குழந்தைக்காக மீரா விவாகரத்து கொடுக்க முதலில் சம்மதிக்கவில்லை... ஒருவேளை அவர்களுக்கு குழந்தை இல்லை என்றால் அவளும் ஒருவேளை சம்மதித்திருப்பாள், அவனும் சந்தோஷமாக கிருத்திகாவை திருமணம் செய்துக் கொண்டிருப்பான் :( குழந்தைகளுக்காக விட்டுக் கொடுப்பது சரி ஆனால், திருமண வாழ்வு நிலைத்து இருக்கவே குழந்தை வேண்டுமா என்ன? காதலித்து திருமணம் செய்துக் கொண்ட மனைவியை விட்டுவிட்டு வேறு ஒருத்தியை விரும்புபவன் எவ்வளவு நாள் ஒரு நிலையான மனதோடு இருப்பான் என்று தெரியவில்லை :(
சாரி, இது என்னுடைய point of view. இது தான் சரி என்றோ தவறு என்றோ சொல்ல வில்லை :)

லக்ஷ்மி அவர்கள் எழுதி எனக்கு பிடித்த மற்ற கதைகள் அவளுக்கு என்று ஒரு இடம் & ஸ்ரீமதி மைதிலி :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அன்பு பிந்து,

உங்களுடைய கருத்துக்களை மிகவும் ரசித்தேன்.

'MAN IS A BUNDLE OF IRONY' என்று சொல்வார்கள். கதாபாத்திரங்களின் முரணான சிந்தனைகளும் அவற்றுக்கு கதாசிரியர்கள் அளிக்கும் விளக்கங்களும் எத்தனையோ விதங்களில் நம்மையும் சிந்திக்கத் தூண்டி, ரசிக்க வைக்கின்றன.

பொன்னியின் செல்வன் நாவல் படித்திருப்பீர்கள். கல்கி அவர்கள் ஒரு இடத்தில் மிகப் பெரிய விளக்கமே கொடுத்திருப்பார் - தன்னுடைய கதாபாத்திரங்களின் முரண்களைப் பற்றி.

ஸ்ரீமதி மைதிலி நாவல் எனக்கும் மிகப் பிடித்தமான ஒன்று.

அன்புடன்

சீதாலஷ்மி

ம்ம்ம்ம்ம்ம்... நீங்கள் சொல்வது சரி தான்... ஆனால் அது என்னவோ என்னால் இது போல் கேரக்டர் எல்லாம் அவ்வளவு ஈசியா ஏற்றுக் கொள்ள முடிவதில்லை :-)

மே பீ எனக்கு கொஞ்சம் closed mindset என நினைக்கிறேன் ;-)

அடுத்தது அது நமக்கு பிடித்த கேரக்டரா இல்லையா என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பொன்னியின் செல்வனில் குந்தவை பூங்குழலி பற்றி சொல்லும் டையலாக் எல்லாம் கேட்டும் எனக்கு கோபம் வரவில்லையே, ஏன் என்றால், குந்தவை பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்.

இந்த கதையில் மீராவை பிடிக்கும், ஸோ obviously கஸ்தூரியை பிடிக்கவில்லை என நினைக்கிறேன் :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)