பட்டிமன்றம் - 49 : பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?

அன்பு உள்ளம் கொண்ட அறுசுவை நட்புகளுக்காக ஒரு தலைப்பு:

“பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?”

தலைப்பை தந்த தோழி “இஷானி”கு மிக்க நன்றி :)

தேவையான டாப்பிக்னு தோனுச்சு... உங்களுக்கும் வாதிட பிடிக்கும்னு நம்பிக்கையில் தேர்வு செய்துட்டேன் ;) வாங்க வாங்க... எல்லாரும் வந்து வாதங்களை வைங்க.

வழக்கமான பட்டி விதிமுறைகள் இந்த பட்டிக்கும் உண்டு... கூடவே அறுசுவையின் பொதுவான மன்ற விதிமுறைகளையும் பொருந்தும்.

குறிப்பாக...

1. பெயர் சொல்லி வாதிட கூடாது.
2. நாகரீக பேச்சு அவசியம்.
3. எந்த ஜாதி, மத, அரசியலும் கலக்க கூடாது.

நடுவருக்கு வணக்கம்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

திருவள்ளுவரே சொல்லியிருக்கார் .... ஒருவனது பசி தீர்த்தால் அவன் தனக்கு செல்வம் சேர்த்தது போல என்று.

ஒண்ணு ரெண்டு இல்ல பத்து குறள் சொல்லியிருக்கார்.

போதாததற்கு
ஈயென்று இரத்தல் இழிந்தன்று அதனினும்
ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று.

பிச்சை கேட்கறதை விட பிச்சை போடமாட்டேன்னு சொல்றதுதான் ரொம்ப இழிவான காரியம்.

ஒருவனுக்கே நல்ல காரியம்னா... எப்படி அது சமுதாய சீரழிவாகும்.

எனவே பிச்சையிடுவதால் சமுதாயத்தை வாழவைக்கிறோம் என வாதிட வந்திருக்கிறேன்.

அப்பாடி... ஒரு வழியா எதிர் அணின்னு ஒன்னு உருவாகி அதுல இருவர் சேர்ந்துட்டங்க. :) நிம்மதியா இருக்கு. வாங்க வாங்க இன்னும் வாதங்களோடு வாங்க. தொடக்கமே திருக்குறளோட அழகா இருக்கே!!! வருகைக்கு மிக்க நன்றி தேன்மொழி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

”ஈயென்று இரத்தல் இழிந்தன்று அதனினும்
ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று.”

இல்லையென்று யாசிப்பவனுக்குதான் இது பொருந்தும்,ஸ்விஸ் பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருக்கறவங்களுக்கு அல்ல நடுவரே..

”அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.”

எங்க ஒரு சாப்பாடு பேக்கெட் வாங்கித்தாங்க பார்ப்போம்,”அய்ய என்னம்மே,இன்னைக்கு செவ்வாக்கிழமை நான் சரவணபவன்லதான் சாப்பிடுவேன்,முடிஞ்சா காசுக்கொடு இல்லைன்னா நான் உனக்கு தர்றேன்”அப்படின்னு சொல்லுவாங்க.

திருவள்ளுவரை கிண்டல் அடிக்கலை,அவர் சொன்னது தப்புன்னு சொல்லலை,ஆனா அவர் அந்த காலக்கட்டத்தில் மனிதர்கள் இல்லையென்றால்தான் யாசிப்பான் என்றும்,இயலாதவனுக்கு ஈயல் அவசியம் என்றும் கூறியுள்ளார்,இன்னைக்கு இருக்கும் பிச்சைக்காரர்களைப் பார்த்தால் அப்பப்பா திருவள்ளுவரே வேற குறள் எழுதணும் போல இருக்கு.

இப்போ இருக்கிற சூழ்நிலையில் அவங்க நாம போடற பிச்சைக்கு பில் கொடுத்து,செக்‌ஷன் 80ஜில டாக்ஸ் ரிடெக்‌ஷன் ஒன்னுதான் பண்ணலைன்னு நினைக்கிறேன்.

இந்த பிச்சை எடுப்பதற்காக,எத்தனை குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்,எவ்வளவு கிட்நாப்பிங்,எத்தனை பெற்றோர்கள் பாதிக்கப்படுகிறார்கள்,எத்தனை உயிர் பலி,இதெல்லாம் சமூதாயத்தை வாழவைக்கும் வழிகளா?

பதில் கொடுத்ததில் ஏதும் தவறென்றால் மண்ணிக்கவும்,மீண்டும் வருகிறேன்.

இதுவும் கடந்துப் போகும்.

நடுவரே

பிச்சையிடுவதால் சமுதாயம் வாழ்கிறது நடுவரே

எப்படின்னு சொல்றேன் கேளுங்க

கோவில் படிக்கட்டுகளிலும், பேருந்து நிருத்தங்களிலும், நடைபாதைகளிலும் மட்டுமே அதிக அளவில் பிச்சைக்காரர்களை நாம் பாக்கிறோம். அவங்களுக்கு நிறய காசு சேருதுன்னு MBA படித்த வேலை இல்லாத பட்டதாரி தானும் உக்காந்து பிச்சைக் கேக்கறார என்ன?

அவங்களுக்குதான் நிறய காசு சேருதேன்னு பாக்கெட் மணி கேக்கும் சின்னப்பையன் இவங்ககிட்ட (பெற்றோரிடம்) கேக்கறதுக்கு நாம பிச்சையே எடுக்கலாம்னு கிளம்பிடறாங்களா என்ன?

அந்த பிச்சைக்கார அங்கிள் போடற உடைதான் நானும் போடுவேன்னு ஸ்கூலுக்கு போற பையன் அடம்பிடிக்கின்றானா என்ன?

இல்லைங்க.......

சின்ன வயதில் இருந்தே கொடுக்கனும் என்கின்ற மனப்பான்மையை உண்டுபண்ணுவது பிச்சைக்காரர்கள் இருப்பதாலயே. நீங்க தேடி வந்து தருமம் பண்ணுவீங்கன்னு எங்கேயோ மரத்தடியிலேயும், பிறகு வேகாத வெயில்லேயும் நின்னவங்கதான் கிடைக்கமாட்டாம இப்போ வீடு வீடா தேடி வர ஆரம்பிச்சிருக்காங்க. இவங்களால சமுதாயம் எப்படி சீரழிஞ்சதுன்னு சொல்றீங்க?

இவங்கள்ல பெரும்பாலனோர் இன்னும் வேலைக்கு போகனும்னு எண்ணாததால்தான் ஏதோ சிறுதொழில் செய்தாவது சில குடும்பங்கள் பிழைத்துக்கொண்டிருக்கின்றது.

அயல் நாட்டினர் நம் நாட்டிற்கு வரும்போது பாக்கும் இப்பிச்சைக்காரர்களால்தான் நம் நாட்டிற்கு அயல் நாட்டு நன்கொடை பெருமளவு குவிய காரணமாகின்றது. அதனால் நம் நாடே வளம் பெருகின்றது. இந்தப்பக்கம் நாம் கொஞ்ச கொஞ்சமா கொடுத்து அந்தப்பக்கம் பெருமளவில் பெற்றுக்கொண்டிருக்கிறோம். இப்படி பெறுவது சமுதாயத்தை சீரழிக்கவா இல்லை இல்லை நடுவரே சமுதாயத்தை வாழவைக்கவே. அதனால் பிச்சையிடுவதால் சமுதாயம் வாழ்கிறது.

Don't Worry Be Happy.

சமுதாயம் வாழ்கிறது என்ற அணியில் என் கருத்துக்களுடன் வருகிறேன்.

மணிமுத்துமாலை

நடுவருக்கும், பட்டி மன்றத்தில் பங்கு கொள்ளும், மற்றும் பார்வையிடும் அனைவருக்கும் வணக்கம்.

இந்தத் தலைப்பைப் பார்த்ததும் முதலில் தோணினது, - இதுல வாதாட என்ன இருக்கு, பிச்சையிடும் பழக்கமே தப்பு,

நாமதான் எல்லோரையும் சோம்பேறிகளாக்கறோம் என்றுதான்.

ஆனா, இரண்டு நாளாக சரியாகத் தூங்க முடியல - வேற ஒண்ணும் இல்ல , சிந்திக்க வச்சுட்டீங்க நடுவரே சிந்திக்க வச்சுட்டீங்க, அதுனாலதான் தூக்கம் வரல.

பிச்சை கேக்கற அளவுக்கு இருக்கும் இயலாதவங்க என்ன செய்வாங்க, யாராவது இரக்கப்பட்டு பிச்சை போடலைன்னா என்ன ஆகும்?, பிச்சை போடுவது என்கிற பழக்கமே இல்லாம போனால் இவங்க எல்லாம் என்ன ஆவாங்க?

இயலாதவங்களுக்கு பிச்சை போடணும் என்கிற எண்ணமே இல்லாம போனால், நான் எப்படி இருப்பேன்? இப்படி பல கேள்விகள்.

இதோட போச்சா? - (நடுவரே ஆனாலும் இப்படி ஒரு தலைப்பைக் கொடுத்து, என்னை இந்த அளவுக்கு யோசிக்க வச்சிட்டீங்களே - நீவீர் வாழ்க!)

திடீர்னு அர்த்த ராத்திரில ஒரு பல்ப்!!! - நான் ஏன் பிச்சை என்றாலே - அம்மா தாயே அப்படின்னு கேக்கறவங்களை மட்டும் யோசிக்கிறேன். இவங்க மட்டும்தான் பிச்சைக்காரங்களா, இவங்களுக்கு அப்பப்ப பைசாவும் பழைய சோறும் கொடுப்பதுதான் பிச்சையா?

முதல்ல பிச்சை என்றால் என்ன என்று யோசிச்சேன்

சிம்பிளான அர்த்தம் - உடனே தோணினது - உதவி செய்வது. அதுவும் தேவைப்படறவங்களுக்கு உதவி செய்வது.

அடுத்த கேள்வி வந்தது - யாருக்கு யார் செய்வது? என்ன உதவி செய்வது?

குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு, பிள்ளைகள் பெற்றோர்களுக்கு, உறவு முறைகள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது - இது கடமை.

நண்பர்களுக்கு உதவி செய்வது - இது நட்பு. வள்ளுவர் சொன்ன மாதிரி - உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

நமக்கு ஏற்கனவே செய்தவங்களுக்கு திருப்பி செய்யறது - கைம்மாறு - செய்த உதவியை மறக்காமல் திருப்பி செய்வது.

சரி, மிகவும் தேவையில் இருக்கறவங்களுக்கு - என்னுடையதை, எனக்கே சொந்தமானதை, நான் கொடுத்தால் - அது என்ன?

இங்கேயும் பெற்றுக் கொள்கிறவங்களைப் பொறுத்து அர்த்தம் மாறும். ஒரு பொருளுக்கு என்னைப் போலவே இன்னொருத்தருக்கும் உரிமை இருக்கு. என் உரிமையை நான் விட்டுக் கொடுக்கிறேன் - அங்கே அது பிச்சை இல்ல.
தியாகம்.

சரி, என்னால் முடிந்ததை நான் ஒருத்தருக்கு - அவருக்கு உரிமை எதுவும் இல்லாதப்ப கொடுக்கிறேன் - அதுக்குப் பேர் என்ன?

அதாவது பலன் எதிர் பார்த்துக் கொடுக்கிறேன் இல்லயா - அப்ப அதன் பேர் தானம்.

அப்ப எதுதான் பிச்சை? யார்தான் பிச்சைக்காரர்கள்?

சாப்பாடோ, துணிமணியோ, பணமோ, படிப்போ, மருத்துவ உதவியோ, இப்படி எத்தனையோ - (ஆமாம் - படிப்பையும் இதில் சேர்த்துக்குங்க - கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொல்லியிருக்காங்களே!), தேவைப்படறவங்களுக்கு, அவங்க அதை வேண்டிக் கேக்கிறப்ப, நான் மனமுவந்து கொடுக்கிறேன், சரியா.

பிச்சைக்காரர்கள் என்ற வார்த்தை கொஞ்சம் கொச்சையாக இருக்கிற மாதிரி இப்ப தோணுதுதானே, வேற ஏதாவது புதுப் பெயர் அவங்களுக்கு கொடுங்கங்கறேன் நான்.

சரி, இப்ப தலைப்புக்கு வர்றேன்! (அப்பாடி ஒரு வழியாக வந்தீங்களேன்னு நீங்க பெருமூச்சு விடறது கேக்குது:)) ஏன் இவ்வளவு நேரம்னு கேக்காதீங்க, இந்தத் தலைப்பு என்னை அவ்வளவு சிந்திக்க வச்சுடுச்சு!!

ஏதோ தேவைப்படறவங்க கேக்கறாங்க, உங்களுக்குக் கொடுக்க முடியுது, கொடுக்க விருப்பம் இருக்கு, கொடுக்கறீங்க, இதனால சமுதாயம் எப்படி வாழுது? இதுதானே உங்க கேள்வி?

இந்த மனிதர்கள் - அதாவது தேவையில் இருப்பவங்க இருக்காங்களே - அவங்களுக்கு நான் கொடுக்கலைன்னாலும் அவங்க கவலைப்பட மாட்டாங்க, யார் தருவாங்களோ, எப்ப கிடைக்குமோ அதுவரைக்கும் தேடித் தேடி, கேட்டு,
வாங்கிடுவாங்க.

ஆனால்,

கொடுப்பதினால் எனக்குக் கிடைக்கும் புத்துணர்வு, மன நிறைவு, புதிய உற்சாகம் இருக்கே, அது ஆக்ஸிஜன் மாதிரி வேலை செய்யுது எனக்குள்ள.

சின்ன வயசுல, எங்க அம்மா என்னை மதுரையிலிருக்கும் வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போவாங்க. எனக்கு அங்கே போறது ரொம்பப் பிடிக்கும். எப்படா சாமி கும்பிட்டுட்டு வெளில வருவோம்னு வெயிட்
பண்ணுவேன்! ஏன் தெரியுமா, சாமி கும்பிட்டுட்டு வெளியில் வரும்போது, அங்கே வரிசையாக உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்குக் கொடுப்பதற்காக, என் கையில் நிறைய இரண்டு பைசா, மூன்று பைசா, அஞ்சு பைசா
இதெல்லாம் தருவாங்க.(இந்தப் பைசா எல்லாம் இப்ப கிடையாது, 25 பைசாவே இப்ப செல்லாத காசா ஆகிட்டுதே).

அங்கே உக்கார்ந்திட்டு இருக்கும் ஒவ்வொருவர் தட்டிலும் ஒண்ணு ஒண்ணாகப் போடறப்ப மனசுக்குள்ள ஒரு சந்தோஷம். அது ஏன்னு அப்பப் புரியல, ஆனா, மனசுக்குப் பிடிச்சிருந்தது. அவங்க காசு வாங்கினதும், மகராசி நல்லா
இருக்கணும்னு சொல்லுவாங்களே, அதுவா, அல்லது காசு நான் போடறேங்கற கர்வமா, இப்ப யோசிச்சுப் பார்க்கிறேன்.

இல்ல இல்ல, இன்னொருத்தருக்குக் கொடுப்பதில் மனிதப் பிறவிக்கு இருக்கக் கூடிய இயல்பான நிறைவுதான் அது.

இந்த மன நிறைவுதான் ஒரு கிரியா ஊக்கியாக என்னை செயல்படுத்துது என்றுதான் நினைக்கத் தோணுது.

ஸ்கூலில் படிக்கறப்ப இல்லாதவங்களுக்கு கொடுத்து உதவ, பழைய துணிகள் கொண்டு வரச் சொல்வாங்க. வீட்டில் இருக்கும் பழைய ட்ரஸ்களை கலெக்ட் செய்து கொண்டு போவோம். அதை வாங்கும் மதர், சிஸ்டர்ஸ், இரண்டு
கைகளையும் ஏந்தி, அவற்றை வாங்கிக்குவாங்க. பிறகு, எங்கள் கன்னங்களைத் தொட்டு, சிரித்த முகத்துடன், ‘காட் ப்ளஸ் யூ, மை சைல்ட்’ என்று சொல்வாங்க. அதை இப்ப நினைக்கறப்ப கூட, மனசில் சில்லென்னு மழை பொழியற உணர்வு! ஏன் அப்படி?

அன்றைக்கு சின்ன விதையாக மனசில் விதைக்கப்பட்டு, சொல்லிக் கொடுக்கப் பட்டது வெறும் பிச்சையிடுவது என்ற பழக்கம் இல்லை, பகிர்ந்து கொடு, இல்லாதவங்களின் கஷ்டத்தை உணர்ந்து கொள் என்ற அறிவுரைகள் அல்லவா!

என் பெண் அடிக்கடி சொல்வா - “நிறைய சம்பாதிக்கணும், நமக்குத் தேவைப்படுதோ இல்லையோ, நல்லா சம்பாதித்தால் மத்தவங்களுக்கு, இல்லாதவங்களுக்கு செய்யலாமே , என்று.

உண்மைதானே.

இப்ப எனக்கு சாப்பாட்டுக்கோ, துணிமணிக்கோ, ஏன் வசதி வாய்ப்புக்களுக்கும் கூட குறைச்சலில்லை. ஆனால், மனசில் ஒரு வெறுமை, ஒரு வாக்குவம் ஆன ஃபீலிங். பிள்ளைங்க பெரிசாக ஆகிட்டாங்க, இனி நம் உதவி
அவங்களுக்குத் தேவைப்படாது, பிள்ளைங்க மட்டும் இல்ல, இப்ப என் உதவி தேவைப்படுகிறவங்களாக யார் இருக்காங்க, நாம் இருந்துதான் என்ன பயன், என்று ஒரு சலிப்பு தோன்றுகிறது.

ஆனாலும், இன்னும் சம்பாதித்தால், இருக்கும் திறமையை வைத்து, கை, கால், அறிவு நன்றாக இருக்கும் வரை, அதைக் கொண்டு உழைத்து சம்பாதித்தால் - சின்ன அளவில் செய்யும் உதவிகளை இன்னும் பெரிய அளவில் செய்யலாமே, சோமாலியாவில் தினமும் பட்டினியால் சாகிறவங்களுக்கு ஏதாவது செய்யலாமே, மதுரை கிருஷணன் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு உதவி செய்யலாமே, நடிகர் சூர்யாவின் அகரம் ஃபௌண்டேஷனுக்கு நன்கொடை
கொடுக்கலாமே, இன்னும் - இன்னும் - அடடா, என்னால் செய்யக் கூடியது எவ்வளவோ இருக்கு, உதவி தேவைப்படறவங்க இன்னும் இருக்காங்க. அவங்களுக்கு என்னைத் தெரியாது, எனக்கு அவங்களைத் தெரியாது, ஒரு
உதவியை செய்ததும், எனக்கும் அவங்களுக்குமான தொடர்பு அவ்வளவுதான். மேற்கொண்டு எதிர்பார்ப்புகள் இல்ல,

ஆனா, அவங்களுக்காக நான் உழைக்கலாம், செய்யலாம்.

பூமியில் இருத்தலுக்கான இந்த முனைப்பு, எக்ஸிஸ்டன்ஸ் என்பதற்கான காரணம் எனக்கு இருக்கு, நினைக்கும்போதே என் மனசில் இருக்கும் வெறுமையெல்லாம் காணாமல் போயிடுச்சு!!!

எனக்கு மட்டுமல்ல, என்னைப் போல இன்னும் லட்சக்கணக்கான பேருக்கு வாழும் ஆசையை, வாழ வேண்டிய காரணத்தை, உண்டாக்கித் தருகிறார்கள் - உலகின் இன்னொரு பகுதியான தேவையில் இருப்பவங்க. அவங்கதான்,
அவங்களுடைய அந்தத் தேவைதான், அந்த டிமாண்ட்தான், நம்மை மட்டுமல்ல, நாம் இருக்கும் இந்த சமுதாயத்தையும் வாழ வைக்கிறது, நடுவரே, வாழ வைக்கிறது!!

அன்புடன்

சீதாலஷ்மி

அஸ்வினி... கரக்ட்டு தான்... இப்போ வடிவேல் பட ஜோக் மாதிரி நாளைக்கே ஒரு பூகம்பம் வந்தா நாமெல்லாம் பிச்சைக்காரங்க, பிச்சைகாரங்க எல்லாம் கோடீஸ்வரனுங்க!!! ;) //இன்னைக்கு இருக்கும் பிச்சைக்காரர்களைப் பார்த்தால் அப்பப்பா திருவள்ளுவரே வேற குறள் எழுதணும் போல இருக்கு// - ஹஹஹா... ரசித்தேன்!!!

//இந்த பிச்சை எடுப்பதற்காக,எத்தனை குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்,எவ்வளவு கிட்நாப்பிங்,எத்தனை பெற்றோர்கள் பாதிக்கப்படுகிறார்கள்,எத்தனை உயிர் பலி,இதெல்லாம் சமூதாயத்தை வாழவைக்கும் வழிகளா?// - சரியான கேள்வி... எதிர் அணி பதில் தருமா!!!

ஜெயலக்‌ஷ்மி... //அவங்களுக்குதான் நிறய காசு சேருதேன்னு பாக்கெட் மணி கேக்கும் சின்னப்பையன் இவங்ககிட்ட (பெற்றோரிடம்) கேக்கறதுக்கு நாம பிச்சையே எடுக்கலாம்னு கிளம்பிடறாங்களா என்ன?// - படிச்சுட்டு கற்பனை பண்ணி பார்த்தேன்... தாங்கல!!! :)

//நீங்க தேடி வந்து தருமம் பண்ணுவீங்கன்னு எங்கேயோ மரத்தடியிலேயும், பிறகு வேகாத வெயில்லேயும் நின்னவங்கதான் கிடைக்கமாட்டாம இப்போ வீடு வீடா தேடி வர ஆரம்பிச்சிருக்காங்க. // - பாருங்கப்பா... நாம போய் உதவலன்னு அவங்க தேடி வந்து வாங்கிட்டு போறாங்கலாமே!!!

//அயல் நாட்டினர் நம் நாட்டிற்கு வரும்போது பாக்கும் இப்பிச்சைக்காரர்களால்தான் நம் நாட்டிற்கு அயல் நாட்டு நன்கொடை பெருமளவு குவிய காரணமாகின்றது.// - இதை எப்படி நல்ல விஷயமா சொல்றீங்க ஜெயா?? ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் உண்டு... பார்த்திருப்பீங்களா என்று தெரியல... இந்தியாவில் ஜேம்ஸ் பாண்ட் வில்லனிடம் இருந்து தப்பிக்க பணத்தை வீசுவார்... மக்கள் கூட்டம் கூட்டமா அதை எடுக்க வந்து வில்லனை மடக்கிடுவாங்க. இது அவங்களூக்கு ஜோக்... ஆனா பார்த்த எனக்கு நம்ம நாட்டை எத்தனை கேவலமா சித்தரிக்காறாங்கன்னு கஷ்டமா இருந்தது.

இன்னும் வாதங்களோடு வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மணிமுத்துமாலை... எங்கே வாதத்தோடு வரேன்னு சொல்லிட்டு காணாம போயிட்டீங்க :) வாங்க நடுவர் காத்திருக்கார்.

சீதாலஷ்மி... என்னது தூக்கம் இல்லாம யோசிச்சீங்களா??? :( அவ்வளவு நல்லவங்களா இருக்க கூடாது...

//வாங்கும் மதர், சிஸ்டர்ஸ், இரண்டு
கைகளையும் ஏந்தி, அவற்றை வாங்கிக்குவாங்க. பிறகு, எங்கள் கன்னங்களைத் தொட்டு, சிரித்த முகத்துடன், ‘காட் ப்ளஸ் யூ, மை சைல்ட்’ என்று சொல்வாங்க. அதை இப்ப நினைக்கறப்ப கூட, மனசில் சில்லென்னு மழை பொழியற உணர்வு! ஏன் அப்படி?// - அப்படியே பள்ளி காலத்தை நினைவு படுத்தறீங்க. இது போல் சிறு வயது நினைவுகளை மீண்டும் மீண்டும் மனதில் ரசிக்க வைக்க உங்களால் மட்டுமே முடியும்.

பிச்சைக்கு நீங்க கொடுத்த விளக்கம் புதிது. ஆனா இன்னைக்கு இல்லாதவர்களா பிச்சை எடுக்கிறார்கள்??? இதை நான் கேட்கல.. உங்க எதிர் அணி கேட்கிறாங்க. நீங்க சொல்றது உண்மையான பிச்சைக்கான பொருள்... தானம். இதை நாம் யாருக்கு கொடுத்தாலும் சரி. இப்போ நாட்டில் பிச்சை என்று வந்து நிக்கும் பிச்சைகாறர்கள் இந்த ரகத்தினரா??? அவங்களை தான் இந்த பட்டியில் கேட்கிறோம்... இதையும் நான் கேட்கல... எதிர் அணி கேட்கிறாங்க :) வாங்க சீதால்ஷ்மி வாங்க... எதிர் அணிக்கு பதிலோடு வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆராயாமல் பிச்சை இடுவது கண்டிபாக தவறு தான்.என் அக்கா கோவில் வாசல்ல யார் உட்கார்ந்து இருந்தாலும் காசு போடுவாள் நான் அவளை பல முறை கண்டித்திருகிறேன் அவள் கேட்பதிலை இவர்கள் புண்ணியம் சேர்பதாக நினைத்து பலரை சோம்பேறியாகுகிறார்கள்

பிச்சையிடுவதால் சமுதாயத்தை வாழ வைக்கிறோம், நடுவர் அவர்களே!

ஒருவன் வறுமை,நோய்,முதுமை,படிப்பின்மை,வேலையின்மை,உடல் ஊனம் இப்படி ஏதோ ஒரு காரணத்தால் தான் அடுத்தவர்களிடம் கையேந்துகிறான்.
இந்த கையேந்தல் நியாயமான காரணத்துக்காக என்றால் அவனுக்கு பிச்சையிடுவதில் தவறில்லை,நடுவரே.

கையேந்தி நிற்கும் ஒருவனுக்கு பிச்சையிடுவதால் கண்டிப்பா நம் மனித சமுதாயதை வாழவைக்கிறோம்.அப்படி நாம் பிச்சை போடலனா,அவனுடைய பசி அவனை திருட தூண்டும்.திருடி வரும் பணத்தில் சாப்பிடுவான்.இதே பழக்கம் பிக் பாக்கெட்டாக மாறும்.இது சமுதாயத்தையே பாதிக்கும் அல்லவா?

ஒரு சமுதாயத்தில் பிச்சை காரன் இருக்கலாம்.அவனால் சமுதாயத்துக்கு பாதிப்பு இல்லை.ஆனால் திருடர்கள் இருக்கவே கூடாது.இவர்களால் சமுதாயமே சீர்கெடும் இல்லையா,நடுவர் அவர்களே.

பிச்சையிடுவதால் ஒரு சமூக விரோதி உருவாவதை தடுக்க முடியும் என்றால் பிச்சையிடுவதில் தவறில்லை நடுவரே.

பொதுவா ஒரு பென்சில் மறந்துட்டு ஸ்கூல் போனாலே,அடுத்தவரிடம் கடன் கேட்கவே தயங்குவோம்.இப்படியிருக்க, பிச்சை எடுப்பதற்கு யாரும் ஆசை படுவது அல்ல.

அவர்களின் பெற்றொர்களோ,வாழ்க்கை முறையோ,சமுதாயமோ தான் அவர்களை அந்த நிலைக்கு தள்ளியது என்று தான் நான் எண்ணுகிறேன்.

இப்படி வயிற்றுப்பசிக்காக பிச்சை எடுப்பவனுக்கு பிச்சையிட்டு பாருங்க. அல்லது ஒரு வேளை சாப்பாடு வாங்கி கொடுத்து பாருங்க.அவன் முகத்தில் நீங்க நிம்மதியை பார்க்கலாம்.அவனோ உங்களை கடவுளாக பார்ப்பான்.

//ஆராயாமல் பிச்சை இடுவது கண்டிபாக தவறு தான்.என் அக்கா கோவில் வாசல்ல யார் உட்கார்ந்து இருந்தாலும் காசு போடுவாள் நான் அவளை பல முறை கண்டித்திருகிறேன்அவள் கேட்பதிலை இவர்கள் புண்ணியம் சேர்பதாக நினைத்து பலரை சோம்பேறியாகுகிறார்கள்//

இதை தான் பாத்திரம் அறிந்து பிச்சை போடுவதுனு நம் முன்னோர்கள் சொல்லி இருக்காங்க,நடுவரே!

பாத்திரம் என்பது,அவர்கள் கையில் இருக்கும் திருவோட்டையும் குறிக்கும்.அவர்களின் கேரக்டரையும் குறிக்கும்.

ஒருவன் பிச்சை எடுத்து அந்த காசில் குடித்தால்,அவனுக்கு கண்டிப்பா அடுத்த முறை யாரும் பிச்சை இட மாட்டாங்க.இது உண்மை.நாம் போடும் பிச்சையில் ஒருவன் சாப்பிட்டால்,அவனுக்கு கண்டிப்பா பிச்சை போடுவோம்.இப்படி ஆராய்ந்து பிச்சை இடுவது நம் கையில் தான் உள்ளது.

ஆகையால் பிச்சையிடுவதால் சமுதாயத்தை வாழ வைக்கிறோம் என்று ஆணித்தரமாக கூறி என் முதல்கட்ட வாதத்தை நிறைவு செய்கிறேன்.

மேலும் சில பதிவுகள்