பட்டிமன்றம் - 49 : பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?

அன்பு உள்ளம் கொண்ட அறுசுவை நட்புகளுக்காக ஒரு தலைப்பு:

“பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?”

தலைப்பை தந்த தோழி “இஷானி”கு மிக்க நன்றி :)

தேவையான டாப்பிக்னு தோனுச்சு... உங்களுக்கும் வாதிட பிடிக்கும்னு நம்பிக்கையில் தேர்வு செய்துட்டேன் ;) வாங்க வாங்க... எல்லாரும் வந்து வாதங்களை வைங்க.

வழக்கமான பட்டி விதிமுறைகள் இந்த பட்டிக்கும் உண்டு... கூடவே அறுசுவையின் பொதுவான மன்ற விதிமுறைகளையும் பொருந்தும்.

குறிப்பாக...

1. பெயர் சொல்லி வாதிட கூடாது.
2. நாகரீக பேச்சு அவசியம்.
3. எந்த ஜாதி, மத, அரசியலும் கலக்க கூடாது.

ஆகா... நல்லா சண்டை நடக்குது போலிருக்கே!!! யாரது நடுவரை காணோம்னது??? மதியம் கூட பார்த்தேனே!! ;) வரேன்... விளக்கமா பதிவிட வரேன்... குட்டீஸ்க்கு உணவு கொடுக்கும் நேரம்!!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இன்று கொடுத்துவிட்டு நாளை முடியாது என்றால் முடிந்தவன் தீவிரவாதி ஆகிறான் முடியாதவன் திருடன் ஆகிறான்.//
இன்றைய தீவிரவாதிகள் எல்லாம் நேற்றைய பிச்சைக்காரர்கள் என்று சொல்வதுபோல் உள்ளது,எதிரணியின் வாதம்.அதுமட்டுமில்லாமல்,தீவிரவாதிகள் பற்றி பேசுவது,இந்த பட்டிக்கு தேவையில்லாத ஒன்று என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,நடுவரே!

//அடபோங்கப்பா இதுக்காக அவன் பின்னாடியே போய் அவன் கண்ணிமாராவில் ஆர்டர் பண்ற விஸ்கிய நாமளும் ஒரு பெக் சாப்பிட்டுக்கிட்டே ஆராய்ச்சி பண்ணவா முடியும்!!!//
அவனாவது பரவாயில்லை.பிச்சை எடுத்து குடிக்கிறான்.ஆனால் எதிரணியினரோ,அவனிடம் இருந்து ஓசியில் வாங்கி குடிக்க நினைக்கிறார்கள்.

பிச்சை போட்டால் நாம் போடும் பிச்சையில் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் நமக்கு பொறுப்பும் உள்ளது.நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை தர்மம் செய்யும் போது,அந்த பணம் அடுத்தவர்களுக்கு உதவுகிறதா,உரியவர்களுக்கு போய் சேருகிறதா என்று பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?

//மீண் கேட்டால் மீண் பிடிக்கும் வலை வாங்கி கொடு என்று சொல்வார்கள்ஆ//
பசித்திருக்கும் ஒருவனுக்கு தேவை வலை அல்ல.ஒரு வாய் உணவு.மீன் கேட்டால்,தாராளாமாக வலை வாங்கி கொடுங்கள்.தவறில்லை.ஆனால் அவன் தெம்புடன் மீன் பிடிக்கமுதலில் உணவு கொடுங்க என்றுதான் சொல்கிறோம்.பசியில் நடக்கக்கூட திராணியற்றவனிடம் உனக்கு மீன் கொடுக்க முடியாது,வலை தான் கொடுப்பேன் என்பதில் நியாயம் இல்லை,
”உண்டி கொடுத்தோர்,உயிர் கொடுத்தோரே!”.

//வலை எண்பது பிச்சையிடுவது ஆகாது,அது அவன் வாழ நாம் செய்யும் வழியாகும்//
வலையை கொடுப்பது பிச்சையில்லையா?வலையை கடனா கொடுக்குறாங்களா?இல்லை காசுக்கு விற்கிறாங்களா? சும்மாதானே தர்றாங்க?தர்மம் செய்வதும் ஒரு வகையில் பிச்சை இடுவதுதான்.

//தன் கடமையை செய்ய மறந்த ஒரு சமூகவிரோதிக்குதானே நாம் இன்று பிச்சையிடுகிறோம்,அப்புறம் என்ன உருவாக்குவது//
”கொடிது,கொடிது இளமையில் வறுமை”.குழந்தைகள் வைத்து கொண்டு பிச்சை எடுப்பவர்கள் பற்றி எதிரணியினர் பேசினர்.பெற்றவர்கள் இருந்தும்
பசியால் வாடும் குழந்தைகளை எண்ணிபாருங்கள்.இந்த குழந்தைகளை
குழந்தைகள் காப்பகத்திலும் விட முடியாது,அனாதை இல்லத்திலும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.5 வயது நிரம்பினால் தான் பள்ளியில் கூட சத்துணவு கிடைக்கும்.

இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவை பிச்சையாக கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இந்த குழந்தைகளுக்கு என்ன கடமை உள்ளது?கடமையை மறந்து பிச்சை எடுக்கிறார்கள் என்று அவர்களை குற்றம் சாட்டுவது முறையல்ல.

//சமுதாயம் வாழுதான்னு பார்க்க போய் இருக்கீங்களா?//
வலுவான எங்களணியின் தாக்குதலை,எதிரணித்தோழி தனியா எப்படி சமாளிப்பாங்கனு தான்,அமைதியா இருக்கிறோம்,நடுவரே!

நடுவருக்கு வணக்கம்.

எதிரணி சொல்றாங்க "வீட்டு வேலை செய்ய ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுறாங்கன்னு". இல்லத்தரசிகளாக இருக்கும் நாமே அத்தனை வேலையையும் செய்யாமல் உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும் என்று ஓடி ஓடித் தேடுறோம்.. அதுவும் உட்கார்ந்த இடத்திலேயே... ஓடி ஓடி நாலு வீடு தேடி உழைக்கும் அவர்கள் கண்டிஷன் போட்டாத் தப்பா?

ஒரு நாள் பிச்சை போடலன்னா திட்டற பிச்சைக்காரர்கள் இருக்கலாம்...இந்த பட்டிமன்றம் பிச்சைக்காரர்கள் நல்லவங்களா? கெட்டவங்களா? என்பதில்லையே...

பிச்சை கேட்டு வந்தவங்களை நம்பி 100 ரூபாய் கொடுத்தார்களாம்... நீங்க கொடுப்பீங்கன்னு நம்பி அவர் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறாரே அதைச் சொல்லுங்கள்... அவர்தானே உங்களை முதலில் நம்பியிருக்கிறார்... எந்த நிரூபணமும் எதிர்பாராமல்... நீங்கள் அவர் செய்த வேலையைப் பார்த்துதானே நம்பினீர்கள்.. திரும்ப வரவேண்டும் என நினைத்திருந்தாலும் ஏதாவது தடை வந்திருக்கலாமே...

திட்டறவங்களைப் பற்றி சொல்லணும்னா... மனிதர்கள் பலவிதம். சிலரால் ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை... இவர் இரங்குவார் என மனதிற்குள் எண்ணி கையேந்தியிருக்கலாம்... அந்த நம்பிக்கைத் தகரும்போது திட்டியிருக்கலாம். பிச்சைக்காரர்காளை யாராவது பிச்சைகாரர் சார் இங்க வாங்களேன் என்று கூறுவோமா? மாட்டோம்தானே..அட அவ்வளவு வேண்டாம் மரியாதையா கூப்பிடுவோமா?ம்ஹும்.. அந்த தன்மானமற்ற, மரியாதையற்ற(பசி வந்தால் பத்தும் பறந்து போகும்) சூழலுக்கு அவர்களை ஏதோ ஒன்று அவர்களைத் தள்ளுகிறது...அதை நாம் புரிந்துக் கொள்ளலாமே. திட்டினால் தந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தினாலா திட்டுகிறார்கள்? அப்படித் திட்டுறவங்களுக்கு நாம் அடுத்த முறை பிச்சைப் போட்டு விடுவோமா என்ன?

என்னவோ பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக வாழ்வது போல் இருக்கிறது எதிரணி வாதம். நாம் பத்திரிகைகளில் படிக்கும் ஜோக்ஸையும், சினிமாக்களில் பார்க்கும் ஜோக்ஸையும் நம்புகிறோமா? அப்படியென்றால் நாம் உடல் நிலை சரியில்லையென்றால் டாக்டரிடமும் போக முடியாது.. படிக்க கல்லூரிக்கும் செல்ல முடியாது... டாக்டரையும், வாத்தியாரையும் காமடியன்களாகத் தான் காட்டுகிறோம் சினிமாவிலும், பத்திரிகை ஜோக்ஸிலும். நிஜம் அதுவல்லவே... அதுமாதிரித்தான் இதுவும்.

எமதணியினர் சொன்னதுபோல லஞ்சத்தை எதில் சேர்ப்பீர்கள்? எனவே பிச்சையிடமாட்டேன் என முடிவெடுக்காமல் லஞ்சம் கொடுப்பதில்லை என முடிவெடுங்கள்..அதுதான் சமுதாயத்தை வாழ வைக்கும்.

1008 கண்டிஷன் போடும் பணிப்பெண்களை தான் நாம் மதிப்போம்.அவர்களை தான் வேலைக்கு அமர்த்துவோம்.அவர்கள் கழுவி வைத்த பாத்திரங்களை கூட திரும்ப அலசி பயன்படுத்தும் குடும்பத் தலைவிகள்தான் அதிகம்.

இப்படியிருக்க,அழுக்கு உடையும்,பல நாட்கள் குளிக்காமல் இருக்கும் பிச்சைக்காரர்களையும் மனிதர்களாய் மதித்து வேலை கொடுப்பவர்கள் யார்?

வேலையின்றி,வீடின்றி இருக்கும் இவர்களின் பிழைப்புக்கு,வயிற்றுப்பாட்டுக்கு வழி?மற்றவர்கள் தரும் சில்லரை காசுதானே.அப்படி கிடைக்கும் சில்லரையில்தான் ஒரு வேளை உணவாவது அவர்களுக்கு கிடைக்கும்.ஆனால்,”பிச்சைக்காரர்களால் சமுதாயம் சீரழிகிறது”என்று கூறி அந்த ஒரு வேளை உணவும் அவர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வது எந்த விதத்தில் நியாயம்?

ராப்பிச்சை என்று சொல்வார்கள்.கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன், நடுவர் அவர்களே! இவர்களுக்கு கண்டிப்பாக பிச்சையிட வேண்டும்.ஏனென்றால்,ஒரு ஜீவன் பசியில் வாடினாலும்,
அந்த குடும்ப(நாட்டின்)தலைவனுக்கு பாவம் வந்து சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.ஆனால் பசியில் வாடுபனுக்கு உணவளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் காரணமாக சொல்லப்பட்டது என்பது என் கருத்து.

தர்மம் தலைக்காக்குமே தவிர ஒரு போதும் சமுதாய சீரழிவுக்கு காரணமாயிராது.

அஸ்வினி... //ஏன் அவன் திருடனாவோ,சமூகவிரோதியாகவோ மாறவேண்டும்,ஒரு உழைப்பாளியாக மாறவேண்டியதுதானே.// - மாறலாமே :)

//ஆஹா அருமை..உங்கள் வாதத்திலேயே தெரிகிறதே..பிச்சைக்காரணுக்கு உதவி செய்து அவனை மனிதனாக மாற்றவேண்டும் என்று..பிறகேன் பிச்சைக்காரனுக்கு பிச்சைப்போட்டு அவனை பிச்சைக்காரணாகத்தான் வைத்திருப்பேன் என்று வாதாடுகிறீர்கள்...// - கரக்ட்டு இப்போ போட்டது பிச்சை இல்லையே... அவனுக்கு ஒரு வாழ்க்கை தானே!!! எதிர் அணி சொல்லுங்கப்பா.

ப்ரியா அரசு...

எந்த அணி என்று முடிவெடுத்து வாதத்தோடு வந்திருக்கீங்க... நன்றி.

//நல்ல சம்பளம் வாங்கக்கூடிய அலுவலர்களே வெக்கம் மானம் சூடு சொரனை இன்னும் பல இல்லாமல் லஞ்சம் என்ற பெயரில் பிச்சை எடுக்கிறாங்க// - ப்ளீஸ் ப்ளீஸ்... கொஞ்சம் வாரத்தைகளில் கவனமா இருங்க... நம்ம பட்டி விதிமுறை ஆச்சே!!! :) கோவிக்காதீங்க. உங்க கோபமும் ஆதங்கமும் நன்றாக புரியுது.

//மற்றொரு அமைப்பு தினமும் சாப்பாடு பொட்டலங்களை வண்டியில் வைத்து ரோட்டோரங்களில் நிராதரவாக நோய்வாய் பட்டு முடியாமல் இருப்பவர்களைத் தேடி கண்டு பிடித்து உணவு தருகிறார்கள். // - பாரட்டுக்குறியது.

//நன்றாக இருந்து சிறு குழந்தைகளை காட்டி பிச்சை எடுப்பவர்கள் சட்டத்தால் தண்டிக்கப் பட வேண்டியவர்களே அன்றி ஊக்குவிக்கப் பட வேண்டியவர்கள் அல்ல// - ஆனா இதுவும் பிச்சை தானே!!! இவங்களுக்கும் குழந்தையை பார்த்து பாவப்பட்டு போட தானே செய்யறோம்???

தொடருங்க... சூடான வாதங்களை. :)

தளிகா... //கண்டிப்பா முனுமுனுவென்று கண்ணை உருட்டிக் கொண்டே இங்க்லீஷ் டிக்ஷனரியால் திட்டிட்டே போவாங்க// - ஹஹஹா... அனுபவமா??? எனக்கும் உண்டு!!! ;(

//ஒது தான் அவர்களது சுபாவம்..சும்மா இருந்து காசு கிடைத்தே பழகிவிட்டது..உடம்பு வளைவதில்லை உழைக்க தயாராகவும் இல்லை..// - கரக்ட்டு தானே!!! பழக்கம் வேணுமே எந்த வேலைக்கும்.

நீங்க பசங்க பற்றி சொன்னது வருத்தமா இருக்கு... ச... எங்கிருந்து வருகிறது இது போல் பழக்கமெல்லாம்!!! பெற்றோர் பார்த்தா எவ்வளவு வருந்திருப்பாங்க. :(

சீதாலஷ்மி...

//பேசாம பிச்சைக்காரர்கள் அண்ட் கோ, பிச்சைக்காரர்கள் அண்ட் லிமிடெட் என்று கம்பெனிகள் ஆரம்பிச்சு, வேலைக்கு சேர விருப்பமுள்ளவங்களை(!) சேர்த்து, எல்லோரையும் பணக்காரர்களாக்கி, நாட்டையும் சமுதாயத்தையும் வாழ வச்சுடலாமே!
// - ஹஹஹா... நல்ல திட்டம்... இது ஒர்கௌட் ஆகும் போலிருக்கே!!! ;)

//சரி, பிச்சை போடறவங்க எத்தனை பேர்? ரொம்ப ரொம்பக் குறைவு.// - இல்லையே... எனக்கு தெரிஞ்சு போடாதவங்க தானே கம்மி.

//உழைக்கவும் பிழைக்கவும் தெரியாதவங்கதான் பிச்சையெடுக்கிறாங்க// - நல்லா சொல்லுங்க... தெரியாதவங்களா??? முடியாதவங்களா???

//பிச்சையிடுதல் ஒரு சிறிய செயல், ஒரு சின்ன தொடக்கம். ஒரு நாள் சம்பளத்தை முகம் சுளிக்காமல் புயல் நிவாரண நிதிக்குக் கொடுப்பது, வீட்டுப் பணியாளரின் குழந்தையின் பள்ளிக்கூட ஃபீஸைக் கட்டுவது, பழைய துணிகளைப் போட்டு, பாத்திரம் வாங்காமல், தேவையானவர்களுக்கு உடுத்தக் கொடுப்பது, ரத்த தானத்துக்கான முகாமில் கலந்து கொள்வது என்று வளரும் - இரக்கமும் கருணையும் இணைந்த செயல்களின் விதை.// - அருமை. அப்படியே மனதை தொட்ட வரிகள்!!!

தொடருங்க சீதாலஷ்மி... அனுபவம் கலந்த உங்க வாதங்களை!!!

ஹர்ஷா... வாங்க வாங்க.

//தீவிரவாதிகள் பற்றி பேசுவது,இந்த பட்டிக்கு தேவையில்லாத ஒன்று என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,நடுவரே!// - சரிங்க... எதிர் அணி கேட்டுக்கங்க. :)

//பணம் அடுத்தவர்களுக்கு உதவுகிறதா,உரியவர்களுக்கு போய் சேருகிறதா என்று பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது// - கண்டிப்பா நான் பழைய துணியை கொடுத்தாலும் நேரில் ஆஸிரமத்தை தேடி போய் கொடுப்பேன்.

//அவன் தெம்புடன் மீன் பிடிக்கமுதலில் உணவு கொடுங்க என்றுதான் சொல்கிறோம்// - இதை யாரும் இதுவரை சொல்லாம விட்டுட்டாங்களே!!! :) சூப்பர்.

//5 வயது நிரம்பினால் தான் பள்ளியில் கூட சத்துணவு கிடைக்கும்.

இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவை பிச்சையாக கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
// - தப்பில்லை... குழந்தையின் பசியை போக்கினால் இறைவனே குளிர்ந்து போவான்.

தொடருங்க ஹர்ஷா... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதலில் பிச்சை எண்பது வேறு உதவி எண்பது வேறு என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்..என்னடா இதுன்னு கேக்கறீங்களா??ஆமாம் இயலாதவங்களுக்கு நாம் செய்வதுதான் உதவி..இல்லாதவங்களுக்கு போடுவது பிச்சை..

பசி மயக்கத்தில் இருப்பவனை தட்டி எழுப்பி அவன் கையில் வலையை கொடுத்து மீண் பிடிக்க சொல்லவில்லை...ஆனால் இன்று சாப்பாடு போட்டு அவன் பசியை ஆற்றினால் அவன் தானாக சுயமாக முன்னேறுவதை தடுத்தால் எப்படி சமுதாயம் வாழும் என்றுதான் கேட்கிறேன்..ஒரு தனிமனிதனின் முன்னேற்றத்தை தடுப்பது என்பது சமுதாய சீரழிவே..

தான் பெற்ற பிள்ளைக்கு சோறிட முடியாத போது எதற்கு பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள் எப்படியோ இருக்கிற மகராசன நம்பியா?என்ன நடுவரே..தன் கையே தனக்குதவின்னு தெரியாதா?அந்த அளவுக்கு ஒரு மனிதன் நினைப்பதன் காரணம் என்ன?ஒரு குறிக்கோள் இல்லாமல் ஒரு இலக்கை அடைய எத்தணிக்காமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?அப்படி வாழ நாம் வகுக்கும் வழி சமுதாயத்தை வலுவடைய செய்யுமா?

உதவி எண்பதை நீங்கள் வேறு வழிகளில் செய்யலாமே..பிச்சையிட்டு அவனை சோம்பேறி ஆக்கி அவன் முன்னேற்றத்தையும் தடுக்கவேண்டாமே..

ஒருவனை ஆராயும் போது அவன் அறியாமல் அவனை தொடர்ந்து போகவேண்டுமே தவிர அவணுடனே சேர்ந்துபோய் விஸ்கி குடிக்கமுடியாது.

பிச்சைக்காரர்கள் உறுப்பினர்கள் சங்கம்,பிச்சைக்காரர்கள் நலவாழ்வு சங்கம் எல்லாம் இருக்கும் போது பிச்சைக்காரர்கள் அண்ட் கோ வந்தாலும் வரும்..அதாவது வாழ்வின் கடைநிலையில் இருப்பவர்களுக்காக இத்தனை சங்கங்கள் இருக்கும்போது அதுவும் வரலாம் என்றே கூறுகிறேன்..

குழந்தைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு போட்டால் போறுமா?உங்கள் பங்கு முடிவடைந்து விட்டது என்று நினைக்கறீங்க..நாங்க அவங்களுக்கு காலத்துக்கும் வழிவகுங்கன்னு சொல்றோம்..

ஒரு ரூபாய் பிச்சையில் ஆரம்பித்து இன்று ஒரு கோடி முப்பது கோடி வரை போவது எதனால்?நம் பழக்கங்களில் சில மாற்றங்கள் வந்தால்தான் சமூகத்தை வளர்க்கமுடியும்..

தர்மம் தலைக்காக்கும்..உதவி உயிர்காக்கும்...எல்லாம் சரிதான்..எது மனிதனை காக்கும்?மனிதனை காத்தால் தானே சமுதாயம்...

மீண்டும் வருகிறேன்...

இதுவும் கடந்துப் போகும்.

அன்பு தோழிகளுக்கு... உடல் நலமில்லாத காரணத்தால் என்னால் நேற்று இரவில் இருந்து பதிவிட முடியவில்லை. விடாது காய்ச்சல், உடல் வலி... உட்கார்ந்து பதிவிட முடியாத நிலை. தோழிகள் மன்னிக்க வேண்டும். நாளை ஓரளவு குறையும் என நினைக்கிறேன்... வந்துவிடுகிறேன். கோவிக்க வேண்டாம்... உங்கள் வாதங்களை தொடருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு நடுவரே,

என்ன ஆச்சு? உடல் நலத்தை கவனிச்சுகோங்க. டாக்டர்கிட்ட கன்ஸல்ட் பண்ணீங்களா? மருந்துகள் எடுத்துக்கோங்க. அவசரம் ஒண்ணும் இல்ல, நிதானமாக வாங்க.

நாங்க எல்லாம் இங்கே சமத்தா வாதங்களை பதிவு செய்யறோம். தீர்ப்பு திங்களன்றுதானே. ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க, போதும்.

டேக் கேர்

அன்புடன்

சீதாலஷ்மி

நடுவருக்கு வணக்கம்.

உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். எப்படியும் பட்டி கலகலப்பாக இருக்கும். கவலை வேண்டாம்.

எதிரணித் தெளிவானவங்க...கொஞ்சம் எனக்கு இதையும் தெளிவு படுத்தணும்... இயலாத இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுக்கு பேர் என்னது...

நானும் எனது அக்காவும் குழந்தைகளுடன் ஸ்மர்ஃப்ஸ் படம் பார்க்கச் சென்றோம்... போகும் வழியில் ஒரு வயதான அம்மா டிஸ்ஸியூ பேப்பர் விற்றுக் கொண்டிருந்தார்... சிங்கப்பூரில் பிச்சை எடுக்க முடியாது. நானும் கடந்து சென்று விட்டேன்.. சட்டென்று தோன்றியது... சினிமாவிற்கு ஒரு டிக்கட் விலை $11. சினிமா ஒன்றரை மணி நேரம். ஒன்றரை மணிநேர சந்தோசத்திற்காக நான் $11 முகச்சுளிப்பில்லாமல் கொடுக்கிறேன். இந்த வயதானவருக்கு ஒரு வெள்ளி கொடுக்க யோசிக்கிறேன். மனதைக் குத்த மகளிடம் கையில் கிடைத்த சில்லறையை(அப்பவும் சில்லறைதான்) எடுத்துக் கொடுத்து அவருக்கு கொடுக்க சொன்னேன். வாங்கிக்கொண்ட வயதானவரின் முகத்தில் தெரிந்த சந்தோஷம்..அப்பப்பா. அவர் சந்தோஷத்தைப் பார்த்து நான் பட்டேனே அந்த சந்தோஷம் அது எத்தனை சினிமா பார்த்தாலும் எனக்கு கிடைக்காது.

நாம் கொடுப்பதால் அவர்கள் நிறைகிறார்களோ இல்லையோ நாம் நிச்சயமாகக் குறைவதில்லை.

இயலாமை மட்டுமல்ல இல்லாமையும் கொடுமையே. இருப்பவர்கள் இல்லாதவர்களாக ஒரு நொடிப்பொழுது போதும். இறை நம்பிக்கை கொண்டவர்கள் இறைவன் என்றோ இறை நம்பிக்கை அற்றவர்கள் இயற்கை என்றோ சொல்லிக் கொள்ளலாம். ஜப்பான் சுனாமி ஒரு உதாரணம். எனவே இல்லாமை கொடுமையை குறைக்க தர்மம் செய்வோம்.

நான் குழந்தையாக இருந்த போது எனக்கு பிச்சைக்காரர்கள் என்று சொல்லித் தரவில்லை.. தர்மம் எடுப்பவர்கள் என்றுதான் சொல்லித்தந்தார்கள். அதாவது நம்மை தர்மம் செய்ய வைப்பவர்கள். அவர்களைப் போற்ற வேண்டாம்... தூற்றாமலாவது இருப்போமே.

வாய்ப்புக்கு நன்றி நடுவரே.

அன்பு நடுவர் அவர்களுக்கு இனிய காலை வணக்கம். விதிமீறலுக்கு வருந்துகிறேன். சாரி. கொஞ்சம் உணர்ச்சிவசபட்டுட்டேன். கோவிக்கலாம் மாட்டேன். (இதை நேற்றே டைப் செய்தேன். கரன்ட் போயிடுச்சு. அடுத்தடுத்து வேலைகளால் தாமதம்)

நடுவர் அவர்களே....... நான் கேட்கிறேன் எங்கு தான் போலிகள் இல்லை...? எங்குதான் ஏமாற்றுபவர்கள் இல்லை.........? இவற்களை எல்லாம் தவிர்ப்பது நம் கைய்யில் தான் உள்ளது.

பிச்சை என்பது தர்மம் தான். ஆனால் யாருக்கு இடுகிறோம் என்பதைப் பொறுத்து தான் அதன் பலன்கள் இருக்கிறது. இப்போதிருக்கும் அவசர உலகில் இயந்திரங்களாய் மாறிப்போன மனிதர்களுக்கு எல்லாமே இன்ஸ்ட்டன்ட்டாக மாறிப்போச்சு. அவர்கள்போன்றோர்களால் செய்யப்படும் தர்மமே "இன்ஸ்ட்டன்ட் தர்மத்தில்".

இந்த "இன்ஸ்ட்டன்ட் தர்மம்"னா என்ன தெரியுமா. ஏன் தர்மம் செய்யரோம் எதுக்கு தர்மம் செய்யரோம் யாருக்கு தர்மம் செய்யரோம் என்ற யோசனையே இல்லாமல் 'அவங்க கேட்டாங்க நாம கொடுத்தோம்' என்ற எண்ணத்திலேயே கொடுக்கிறார்கள்.

இதைத்தான் நம் முன்னோர்கள் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று தெளிவா சொல்லிட்டாங்களே... நாம தான் யோசிக்காமல் தகுதியற்ற ஏமாற்றுப் பேர்வழிகளையெல்லாம் கருத்தில் கொண்டு தர்மம் செய்ய தயங்குகிறோம். உலகிலுள்ள அனைத்து மதங்களுமே பாரபட்சம் இல்லாமல் வலியுறுத்துவது என்னவென்றால் தர்மம் செய்யச்சொல்லிதான்.

புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப் பயணிகளை மொய்த்துப் பாடுபடுத்தும் பிச்சைக் காரர்கள் இருக்கிறார்கள். அவர்களை யெல்லாம் தண்டிப்பது காவல், சட்டத்துறையின் பணி.

நாம் உண்ணும் அரிசியில் கருப்பு அரிசி இருக்கு என்பதற்காக அந்த அரிசியை குப்பையில் போடுவது அதை விளைவித்த விவசாயியை அவமதிப்பது போல. கருப்பரிசி இருக்கு என்பதற்காக அரிசி உணவே உண்ண மாட்டேன் என்பது அறியாமை. கருப்பு அரிசியை நீக்கிவிட்டு அதை சமைத்து உண்பது புத்திசாலித்தனம். அது போலத்தான் போலிகளை தவிர்த்துவிட்டு இல்லாதவ்ருக்கும் முதுமையால் இயலாதவற்கும் தர்மம் செய்யனும்.

((( 121 கோடி மக்கள் தொகை கொண்ட நம் இந்தியாவில் அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதில்லை. தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் உலக பணக்காரர்களின் பாடியலிலும், உலகின் மாபெறும் ஊழல் பட்டியலிலும் இந்தியர்கள் இடம்பிடிப்பது சர்வசாதாரணமாகிடுச்சு. பணக்காரன் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். நடுத்தர வர்கத்தினர் ஏழைகளாகின்றனர். ஏழைகள் அன்றாடங்காய்ச்சிகளாகின்றனர். அன்றாடங்காய்ச்சிகள் பிச்சைக் காரர்களாகின்றனர். இதுதான் இன்றைய நிலைமை. அவர்களின் வாழ்க்கைதரத்தை முன்னேற்றும் திட்டங்கள் யாவும் இன்னும் அவர்களை முழுமையாக சென்றடையவில்லை என்பதே உண்மை. இன்றைய பொருளாதார சூழல் அவர்கள் போன்ற இல்லாத மக்களை கை விட்டாலும் நம் போன்ற மக்கள் சிலர் தர்மம் செவதால் மட்டுமே அவர்களின் அன்றாட ஜீவனம் ஓடுகிறது. பசியால் இறப்பவர்களின் பட்டியல் நம் இந்தியாவில் உண்டு என்பதும் மறுக்க முடியாத உண்மை...:-)இதை வாதத்திற்கு தலைப்பிற்கு பொறுத்தமில்லாதது என்று எண்ணினால் கருத்தில் கொள்ள வேண்டாம். சொல்லனும் போல தோணிச்சு. சொல்லிவிட்டேன். தவறிருந்தால் மன்னிக்கவும் ப்ளீஸ்.))) உடம்பை பார்த்துகுங்க நடுவரே... ரெஸ்ட் எடுத்து நலம் பெற்று விரைவில் பட்டிக்கு திரும்ப எனது பிரார்த்தனைகள். டேக் கேர்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்