பட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

அன்பு அறுசுவை நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.
முதன் முதலாக பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்றுள்ளேன். நல்ல முடிவைத் தருவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

நடுவர் பொறுப்பு கொடுத்த தோழி வனிதாவுக்கும், அறுசுவைக்கும் நன்றி

நான் எடுத்துள்ள தலைப்பு தோழி யோஹலட்சுமியால் தரப்பட்டது-
ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

நகைச்சுவையான தலைப்பைத் தேடி நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இது....திருமணமான, திருமணமாகாத எல்லா தோழிகளுக்கும் பிடித்தமான (எந்தப் பெண்ணாவது அழகு செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்களா!!!இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு கூட நிறைய ஒப்பனை பொருட்கள் வந்திருக்கிறதே....இதில் அறுசுவைத் தோழர்களும் பங்கு கொள்ளலாம்!!) சீரியஸ் இல்லாத, சிரிக்கச் சிரிக்க பேச முடிந்த ஒரு தலைப்பு இது என்பது என் எண்ணம்!

இப்பொழுது மார்க்கெட்டில் தினம், தினம் புதிது புதிதாக எததனை அழகு சாதனப் பொருள்கள்....அந்த விளம்பரங்களே மனதை மயக்குகிறதே? இந்த பட்டியின் மூலமாக நம் தோழிகளிடமிருந்து எது நல்ல ப்ரேண்ட் என்று தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு அல்ப ஆசைதான்!!

வழக்கமான பட்டி விதிமுறைகள் இதற்கும் பொருந்தும்.
பட்டியின் விதிமுறைகள்
**********************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

எல்லாரும் கலந்துகிட்டு பட்டியை நவரச மேடையா ஆக்குங்க!

தயவு செய்து எல்லாரும் தமிழிலேயே பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஹா ஹா செம விளக்கம்;) அப்போ நாந்தான் புரியாம இருந்தேனோ!! இப்போ விளங்கிடுச்சுங்கோ........இதோ பதிவு ரெடி பண்ணிட்டு வந்துடறேன்கோ;)

Don't Worry Be Happy.

ஹாய் தளிகா....உங்க பதிவைப் படிச்சு சிரிச்சு எனக்கு வயத்து வலியே வந்துடுத்து போங்க...

.ஓவர் மேக்கப் போட்டவங்களை சீக்குகோழி மாதிரியும், சீக்குக்கோழி மேக்கப் போட்டா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்து சிரிப்பை அடக்க முடியலீங்க!!!!

அப்பறம் நடிகை சந்தியா பற்றின விஷயம் எனக்கு புதுசு.....அடியாத்தி....அதான் அந்தப் பொண்ணு முகமே மாறிப் போயிருச்சா...அதுவும் மைக்கேல் ஜாக்சன் மாதிரி...அய்யோ பாவம்!

ராணி....வருகை, பதிவு இரண்டுக்கும் நன்றி....நீங்களும் ஒப்பனைக்கு எதிரியா? ஹ்ம்ம்ம்.....இன்னும் நிறைய்ய விஷயம் சொல்லுங்க...

முதன் முதலில் பட்டிக்கு தலைமை பொறுப்பேற்றிற்கும் நடுவர் அவர்களுக்கு என் வாழ்த்துகள். ரொம்ப நேரம் அலசி ஆராய்ந்து எந்த தலைப்பை எடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இரண்டுமே நன்றாக தான் உள்ளது. ஆனாலும் ஒன்றை மட்டும் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வதால் ஒரே ஒரு தலைப்பை சொல்கிறேன். என்ன அவசரம் இருங்க எல்லாம் பட்டியிலும் வாதத்திற்கு முன் பாட்டு தான் பாடுவேன். இந்த பட்டியில் மட்டும் எப்படி வாதத்தை தொட்ங்குவேன். இதோ என் பாடல்
”கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு””

அழகிற்கே அழகு சேர்ப்பது ஒப்பனைகள் தான். யார் ஒருத்தரும் ஒப்பனை செய்துக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். நம் பூசும் பவுடர் நம் தலையில் தேய்க்கும் எண்ணெய் நம் கையில் காலில் மூக்கில் காதில் கழுத்தில் அனைத்திலும் போட்டிருக்கும் நகைகளும் ஒப்பனைகள் தான். இப்படி அலகாரம் இல்லாமல் எத்தனை பேர் இருக்கின்றார்கள். வயதான பாட்டிகள் கூட இந்த காலத்தில் எவ்வளவு மேக்கப் போடுகின்றார்கள் என்று தெரியுமா நடுவரே!

என் அணி தோழி சொல்வது போல் கணவன் வேலையை முடித்து வீட்டிற்கு வரும் போது மனைவி முகம் கழுவி பொட்டு வைத்து தலை வாரி பூ வைத்துக் கொண்டு இன்முகத்தோடு வரவேற்றால் அந்த கணவர் வெளியில் எவ்வளவு கோவமாக இருந்தாலும் தன் மனைவியின் முகத்தை பார்த்தவுடன் அனைத்து கவலையையும் மறந்துவிடுவார். இதுவே நான் இயற்கையிலேயே அழகு என்று தூங்கி எழுந்த மூஞ்சோடு போய் அவர் முன் நின்றால் இருக்கும் கோவம் இன்னும் கொஞ்சம் அதிகமாக தான் வெளியே வரும்.

உதாரணத்திற்கு இப்பொழுது சினிமா நடிகைகளை ஒப்பனை இல்லாமல் எந்த நடிகையையும் பார்க்க முடியாது. உலக அழகி என்று பெயர் வாங்கின ஐஸ்வர்யாராய்யையே ஒப்பனை இல்லாமல் பாருங்கள் எப்படி இருப்பார் என்று தெரியும். ஏன் ராவணன் படத்திலேயே சில சீன்களில் அவருக்கு மேக்கப் இருக்காது. அந்த சீன்களில் அது அவரா என்று யோசிக்கும் அளவு இருக்கும். ஒப்பனை செய்துக் கொண்டு தான் பல நடிகைகள் தன் வயதை குறைத்துக் காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். ஒரு பெண்ணின் அழகு அவள் செய்துக் கொள்ளும் ஒப்பனையில் மட்டும் தான் உள்ளது என்று தற்சமயம் விடைபெறுகிறேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

முதன்முறையாக நடுவர் பதவியேற்றிருக்கும் ராதாபாலு அவர்களுக்கு வாழ்த்துக்கள். அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. எனது வாதங்களை துவக்குகிறேன்.

இப்ப இருக்கும் காலகட்டத்தில் கண்டிப்பாக ஒப்பனை மிக மிக அவசியம்.

காலையிலிருந்து மாலைவரை பரபரப்பாக பணி புரியும் நாம ஏங்க அழுக்கா தூங்கிவடியும் கண்களோடும், எண்ணெய் வடியும் முகத்தோடும், நம்ம முகத்தின் நிறத்திற்கு துளியும் சம்பந்தம் இல்லாத உதட்டின் நிறத்தோட இருக்கனும்.........?

அதுவே காலையில எழுந்து முகத்துக்கு க்ளென்சிங் செய்து குளிச்சிட்டு நம்ம சருமத்திற்கு ஏற்றுக்கொள்கிற ஒரு க்ரீமை போட்டு கமகமக்கிற சாண்டல் பவுடரை போட்டு, கொஞ்சம் போல ஐ லைனர்,மஸ்காரா போட்டு, லைட்டாகவோ டார்க்காகவோ தகுந்த லிப்ஸ்டிக் போட்டு...............குட்டியாகவோ சின்னதாகவோ பிடிச்ச டிசைனில் பாக்குறவங்க கண்ணுக்கு தெரியறமாதிரி பொட்டு ஒன்னை வச்சு கண்ணாடி முன்னாடி நின்னு பாருங்க.......... கண்டிப்பா உங்க செல்போன் மெமரி கார்டின் மெமரி ஃபுல்லாகுற வரைக்கும் உங்களை நீங்களே போட்டோஸ் எடுத்துவச்சுக்க தோணிடும்.

மிக மிக முக்கியமானது என்னன்னா நாம போடுற மேக்கப் ஆகட்டும், உடுத்தும் உடைகள் ஆகட்டும், நகைகள், நம் பேச்சு, நடை, பாவனைகள் ஆகட்டும் எதிலும் துளிகூட ஆபாசம், அநாகரீக விசயங்கள் இல்லாமல் பார்த்துகிட்டாதான் அடுத்தவர்களுடைய கேலி, அவதூறு பேச்சிற்கு ஆளாகாமல் "பளிச் பெர்சனாலிட்டி" என்று பாராட்டு வாங்கலாம்.

முகத்திற்கு கொஞ்சம் போல க்ரீம் போட்டு பவ்டர் போட்டால் தான் காலையிலிருந்து மாலைவரை முகம் பளிச்சென்று இருக்கு. இது நல்ல விசயம் தானே.........!

எனவே ஒப்பனை என்பது ஆண் பெண் பேதமின்றி அவரவர் இடத்திற்கு தகுந்தவாறு ரொம்ப முக்கியமான ஒன்றாகும்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

நடுவர் அவர்களே ....இயற்கை அழகு என்றால் என்ன ?காமெடி யா சொல்லனும்னா இயற்கை அழகிற்கு - இருக்கற அழகு ...ஒப்பனைக்கு இல்லாத அழக இருக்கற மாதரி காட்டற அழகு அப்படின்னு அர்த்தம் வச்சுக்கலாம்...:-)

சரி விசயத்துக்கு வருவோம்...இயற்கை அழக இனிமே இ.அ அப்படின்னு வச்சுக்குவோம்... (சுத்த தமிழ் ல type பண்ண கஷ்டமாக உள்ளது நடுவர் அவர்களே:-))பிறந்த குழந்தை ஒப்பனை செய்து கொண்டா இருக்கிறது நடுவர் அவர்களே...குழந்தை அழகில்லையா? தோழி சொன்னது போல அன்னை தெரசா அழகில்லையா?

இங்கு தோழிகள் இயற்கை அழகு என்றவுடன் ஏதோ எல்லோரும் ஹிப்பிகள் போல பாப்பாரப்ப என்று அலைவது தான் போல பேசுகிறார்கள்.ஒப்பனை என்றால் உடனே தலையே வார கூடாது...பொட்டே வைக்க கூடாது... என்பதல்ல ...செயற்கையான பொருள்களை அளவிற்கு அதிகமாக உபயோகபடுதுவதும் காஸ்மெடிக் surgery கள் செய்து கொள்வதும் தான் ஒப்பனையின் கீழ் வரும் எனபது ஏன் தாழ்மையான கருத்து.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நடுவரே... மன்னிக்கனும்... காலையில் வெளிய போய் இப்ப தான் வந்தேன்... மீண்டும் வெளியே போகும் வேலை இருக்கு. அதனால் கிடைச்ச நேரத்தில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிட்டு போறேன்... ;) யார் பதிவில் உள்ள விஷயம் ரிப்பீட் அடிச்சாலும் யாரும் கோவிக்க கூடாது.

சாதாரணமா நம்மை பளிச்சுன்னு வைக்கிறது வேறு... மேக்கப் போட்டு பள பளப்பது வேறு. சில உதாரணம் சொல்றேன்... கேளுங்க.

என் திருமணத்துக்கு வந்த எல்லாரும் என்னை திருமணத்துக்கு பின் பார்த்து விட்டு சொன்ன ஒரே விஷயம்... “அண்ணா... அண்ணி கல்யாணத்தன்னைக்கு எப்படி இருந்தாங்களோ அப்படியே இருக்காங்க. அதுவே பெரிய விஷயம்... பொதுவா கல்யாணத்து அன்னைக்கு பொண்ணை பார்த்துட்டு அதுக்கு அப்பறம் வீட்டில் பார்த்தா அடையாலம் தெரியாது... கல்யாணத்துக்கு அவ்வளவு மேக்கப் போட்டு ஆளே வேற மாதிரி இருப்பாங்க.”னு.

இந்த கமண்ட் வந்தது உண்மை... காரணம் நான் என் கல்யாணத்துக்கே மேக்கப் போடல. சாதாரணமா தான் இருந்தேன். அழகா இருந்தேன்னு தான் எல்லாரும் சொன்னாங்க.

மற்றவர்கள் பற்றி சொன்னவங்களும் தப்பா சொல்லல... உண்மை தான்... பல ஆண்களுக்கு திருமணத்தன்றோ அல்லது அதன் பின்னோ தன் மனைவியை அவர்களுக்கே அடையாளம் தெரியாம தான் போகுது. அவ்வளவு மேக்கப் கல்யாணத்தில் போடுறாங்க.

சில பெண்களை tv’ல பார்த்திருப்போம்... கடைகளில் அவஙக் நம்ம பக்கத்தில் நின்னா கூட அடையாளம் தெரியாது நமக்கே... காரணம் அவங்களை முழு மேக்கப்பில் பார்த்தே பழகின நமக்கு மேக்கப் இல்லாத அவங்க முகம் யாரோ போல இருக்கும். யோசிச்சு பாருங்க... இந்த நிலை டிவியில் பார்க்கும் ஏதோ ஒரு பெண்ணுக்கு என்றால் பரவாயில்லை... கல்யாணம் பண்ண மனைவிக்குன்னா??? என்ன கொடுமை ஆண்களுக்கு. :(

எங்க வீட்டுக்கு பார்ட்டிக்கு பலர் வருவாங்க... பெண்கள் வந்து போகும்போது அவங்க உதடுகள் மட்டும் எங்க வீட்டிலேயே இருக்கும். :(( ஆமாம்... கண்ணாடி கப், டீ கப் என எல்லாவற்றிலும் உதட்டு சாயம் அப்படியே இருக்கும். இது தேவையா?? இந்த அளவு உதட்டுக்கு சாயம் அவசியமா? யோசிக்கவே மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

இதுல அந்த லிப்ஸ்டிக் போகாம இருக்க மாதிரி பார்த்து பார்த்து உதட்டை அசைப்பதும்... ஏதோ ஒரு போலித்தனம் இருப்பதாகவே தோன்றும்.

சாதாரணமா தலை சீவி, பொட்டு வெச்சு, நல்ல துணியை அழகா உடுத்தினா கிடைக்கும் அழகு அழகு தான். அதை விட்டுட்டு உதட்டுல சாயம், கண்ணில் மை, இமைகளில் மஸ்காரா, ஐப்ரோஸ், ஷேட்ஸ், ஐ லைனர்... ஏன் இதெல்லாம்... ஏன் இந்த போலித்தனம்? பெண்மையின் மென்மையை மறைத்து பேய் போல் காட்சி அளித்து இன்றைய ஆண்களை பயம் காட்டி, பக்கத்தில் உட்காரும் எங்களை போன்ற பெண்களையும் பயம்காட்டி... ஏங்க ஏன்??? நாங்களாம் உங்களுக்கு என்ன பாவம் பண்ணோம்னு கேட்கலாமான்னு இருக்கும்.

நீங்க முடியெல்லாம் கட் பண்ணி முகத்தில் உள்ள முடியெல்லாம் செட் பண்ணி குட்டி குட்டியா ஒரு நாய் குட்டி பார்த்திருப்பீங்க... பாவம் அதை வெச்சிருக்கவங்க அழகா இருக்கனும்னு அதன் முடியெல்லாம் மாற்றி ஒரு வழியாக்கி அழகுன்னு வெச்சிருப்பாங்க... அது பாவம் கண்ணும் தெரியாம, மண்ணும் தெரியாம கீழ இறங்கி காலை வைக்க தெரியாம வளர்ப்பவர் கையிலேயே இருக்கும். நாயை கூட நாயா இருக்க விடாம மேக்கப் போடும் காலமா போச்சு நடுவரே. எங்க போய் நிக்குமோ... என்ன பண்ணாலும் பண்ணாட்டாலும் நாய் நாய் தானே? ஒன்னும் மேக்கப் இல்லாம இருக்கும் தெரு நாய் குட்டியை பார்த்தா அழகா இல்லையா?

நீங்களே கேட்டு சொல்லுங்க நடுவரே... மேக்கப் போடும் பெண்களிடம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதில் எந்த வகையை மேக் அப்பில் சேர்த்துவார்கள் என்று தெரியாமல் குழம்பலாம்.மேக் அப் தேவையில்லை என்பதும் இயற்கை அழகே போதும் என்பதால் அப்படியே முகத்தை கழுவி துடச்சுட்டு போகிறவர்கள் என்பதும் இல்லை...90% பெண்கள் லேசா தெரியாத மாதிரி முகத்தை ஃப்ரெஷாக வச்சுக்க போட்டுக்கறவ்ங்க தான்..இந்த இரண்டாம் வகை மேக் அப் அவசியம் என்பது இருப்பது பத்தாது இன்னும் வாரி அப்பிட்டா தான் அழகு அதை நாலு பேர் பார்க்கவும் வேணும் பாராட்டவும் வேணும்(அப்படின்னு நெனச்சுட்டு) போட்டுக்கறவ்ங்க..உண்மையில் எத்தனை ஆம்பிளைகளுக்கு மேக் அப் பிடிக்கும்...எதோ அங்கே இங்கே தான் சில ஆம்பிளைகள் அதை விரும்புகிறார்கள் அல்லது சனியன் எப்படியோ போட்டு போகட்டும் என்று விடுகிறார்கள் ..மற்றபடி ஆம்பிளைகளுக்கு பொதுவாகவே மேக் அப்பே பிடிக்காது.நம்ப ஆம்பிளைகளுக்கே பிடிக்காத போது எதற்காக அடுத்தவர்களுக்காக வாரித் தேய்த்துக் கொண்டு நடக்க வேண்டும்..இதுக்காகவே பியூட்டி பார்லருக்கும் காஸ்மெடிக் பொருட்களுக்கும் மாசா மாசம் ஒரு பெரிய தொகையை செலவு செய்கிறவர்களும் உண்டு...இதில் இவங்க செய்யும் லொள்ளுக்கு அளவே இருக்காது...நான் பார்லருக்கு போவதும் இல்லை புருவத்தை வடிச்சதுமில்லைன்னு யாராவது சொன்னால் விடுவாங்கன்னு நினைக்கறீங்க???குடிகாரக் கணவனை வைத்த பொம்பளைகள் உலகத்துல எல்லா ஆம்பிளைகளும் குடிப்பாங்கன்னு சொல்றது போல பார்லருக்கு போகாத பெண்களே இல்லை என்று கடுப்பேத்துவார்கள்..அவங்க இருக்கும் உலகத்தை விட்டு முதலில் வெளிய வரனும்..ஆம்பிளைக ரெடியாகு போலாம்னா 20 நிமிஷத்தில் டான்னு செருப்பை போட்டுட்டு நிக்கனும்..சும்மா தலை சீவிவாங்க சீவுவாங்க சீவிகிட்டே இருப்பாங்க.ட்ரெஸ்ஸை சரிபண்ணிட்டு கண்ணாடி முன்னாடி ரேம்ப் வாக் போட்டுகிட்டே இருப்பாங்க.பெரிய பெரிய மேதைகளும் சரி நல்ல படிச்ச நிறை குடங்களும் சரி துளி மேக் அப் கூட இல்லாமல் தான் இருப்பாங்க..

நடுவர் அவர்களே, இயற்கை அழகு எப்படி இருக்கனும் தெரியுங்களா? தூங்கி முழிச்சாலும் எதிர்ல இருக்கவங்க பயப்படாம பார்க்கிற வகையில் இருக்கனும். அதான் இயற்கை அழகு. எத்தனை பேருக்கு அந்த கொடுப்பனை இருக்கும் சொல்லுங்க. சரி இயற்கை அழகோடு அப்படியே முகம் கழுவி போனா போகட்டும் பொட்டு மட்டும் வச்சுக்க அலவ் பண்றோம். இதே இயற்கை அழகோடு எத்தனை பேர் வெளிய கிளம்பறாங்க. அப்படியே எளிமையா கிளம்பினாலும் குறைந்தபட்சம் சாண்டில் லால்க்,பாண்ட்ஸ்,கோகுல் சாண்டில் இப்படி எதாச்சும் ஒரு பவுடரை போட்டுட்டு தான் போவாங்க. இதெல்லாம் எந்த லிஸ்டில் வரும் சொல்லுங்க. மேக்கப்னாலே ஐலைனர்,மஸ்காரா,லேக்மி காஜல்,காம்பாக்ட்,லிப்ஸ்டிக்,ரூஜ் இப்படி அப்படின்னு நினைக்காதீங்க. அட முகத்துக்கு ஒரு மைதா மாவாச்சும் பூசாம வெளிய முகத்தை காட்ட முடியுமான்னு சொல்லுங்க. அதுக்கு தான் நாங்க ஒப்பனை அவசிங்கற ஒப்பில்லா கருத்தை சொல்லிட்டு இருக்கோம்.

இன்றைய தேதிக்கு பாருங்க உடம்பு ஆட்டம் கண்டு போன பாட்டிங்க துணைக்கு பேரனோட போறாங்களோ இல்லையோ பேரன்லவ்லி இல்லாம போறதில்ல. இளமை திரும்பி பார்க்குதாம் ;( எனக்கு தெரிஞ்ச 75 வயசு பாட்டி இப்பவும் பேரன்லவ்லி,பகடர் இல்லாம ரூமை விட்டு வெளிய வர மாட்டாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தாலும் முதல் ஆளா மேக்கப் போட அவங்க தான் ஓடுவாங்க. காடு வா..வாங்குது..வீடு..போ..போங்குது அப்படி இருக்க பாட்டிங்களுக்கே மேக்கப் ஆசை விடல. எதிரணிக்காரங்க இயற்கையை பத்தி பேசிட்டு இருக்காங்க.

நடுவர் அவர்களே, எதிரணிக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் இயற்கை அழகுக்கு அன்னை தெரசாவையும்,இந்திரா காந்தியையும் துணைக்கு அழைத்து வழக்கின் போக்கையே திசை திருப்ப பார்க்கிறார்கள். அன்னை தெரசாவும்,இந்திரா காந்தியும் நாட்டு சேவையால் மக்களின் மனங்களை கவர்ந்தவர்கள். அது அக அழகு. அதனால் அந்த அழகு இதில் சேராது. அவர்கள் இருவரின் பொதுநல தொண்டின் காரணமாகவே அவர்கள் உலக அளவில் அறியப்பட்டார்கள். அவர்களும் சாமான்ய மனிதர்களாக இருந்திருந்தால், அவர்களை பற்றி நமக்கு தெரிந்திருக்குமா? இங்கே ஒப்பனை அழகு - இயற்கை அழகை பற்றி தான் வாதமே. இந்திரா காந்தியையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஹேர் ஸ்டைல் ஒரு தனி முத்திரையை பதித்தது. இன்று வரை யாராவது அதுபோல வேடமிட்டால் கண்ணை மூடிக்கொண்டு முக ஒற்றுமை இந்திரா காந்தியை போல இல்லையென்றாலும், அது இந்திரா காந்தி அம்மையார் என்று சொல்லி விடுவார்கள். அவர் அந்த ஹேர்ஸ்டைலின் மீது எத்தனை கவனம் எடுத்திருப்பார் என்று அவர் வீட்டு பணியாளர்களுக்கு தான் தெரிந்திருக்கும். நம் சிஎம்மை எடுத்துக் கொள்ளுங்கள். பார்க்க எளிமையாக இருக்கிறார். ஆனாலும் அதனுள்ளும் ஒரு மேக்கப் ஒளிந்திருக்கவே செய்கிறது. அது தான் அடுத்தவரை உறுத்தாத சிம்பிளான கண்ணியமான மேக்கப்.

நடுவர் அவர்களே, நான் என் குழந்தைகளின் பாஸ்போர்ட்டிற்காக சாஸ்திரி பவனில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தருவதற்காக வரிசையில் நின்றிருந்தேன். எனக்கு பின்னால் நின்றிருந்த பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று ரொம்ப நேரம் மண்டையை உடைத்து கொண்டேன். மெலிந்த தேகம், லேசாக வெளுத்த நிறம். பிறகு தான் தெரிந்தது ஆஹா..இந்தம்மா ராசாத்தி வரும் வேளை கஸ்தூரியாச்சேன்னு. மேக்கப் இல்லாம வந்திருந்தாங்க. அதான் அடையாளம் காண முடியல. இதே அம்மா, அந்த இடத்துல மேக்கப்ல இருந்திருந்தா உடனே அடையாளம் கண்டிருப்பேன். அப்பவே நினைச்சேன். இந்தம்மா வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்டு வந்திருப்பாங்க போல. திரும்ப வீட்டுக்கு போனாலும் அடையாளம் கண்டுகிட்டு உள்ளே சேர்த்துப்பாங்கல அதுக்கு தான். எத்தனை சித்து வேலை காட்டி திரைல நம் முன்னாடி அழகா வர்றாங்க. இவங்க முதல் படத்தில் அறிமுகமாகும் போது கூட மேக்கப் டெஸ்ட் முடிச்சு தாங்க எடுத்துக்கறாங்க. நடிகைகளை இயற்கை அழகோட எடுத்திருந்தா சினிமாவில் நடிகர்,நடிகைகளையே பார்க்க முடியாது.

நடுவர் அவர்களே, நான் இவ்ளோ நேரம் வியர்க்க விறுவிறுக்க டைப் பண்ணதில் காலைல போட்ட பவுடர் கொஞ்சம் களைஞ்சு போச்சு. நான் போய் கொஞ்சம் பவுடர் போட்டுட்டு வரேன்..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ராதாம்மா, உங்களுக்கு இந்த ஒப்பன சுந்தரியோட கோடி கோடி வணக்கமுங்க!! ஒப்பனைன்னாலே திருத்தம் தாங்க. யாரும் பார்த்தா என்ன பார்க்காட்டி என்ன இயற்கை அழகோட இருப்பேன்னு சொல்ற்வங்களை ஒப்பனை வார்தைகளால் பேசறாங்கன்னு தான் சொல்லணும்.தங்கம் கூட இயற்கை அழகோட எடுத்தா யாரும் போட்டுக்க மாட்டாங்க அதுக்கு கொடுக்க வேன்டிய திருத்த்ததை கொடுத்தா தான் அது மிளிரும். காலையில் எழுந்தவுடன் நம்ம முகத்தை நாமே பார்க்கிறோமே, அப்படியேவா போறோம், உடனேயே கை தலையை சீவுது. முகத்தை அலம்புது. யாருக்காக? நம்ம்ள பார்த்தா நமக்கே பிடிக்கணும்.நாம வேலை பார்க்கிற இடம் , எப்படியானதோ அப்படிப்பட்ட ஒப்பனை அவசியம் வேணுங்கோ!!! 5 இன்ச் பவுடர் போடுக்கிட்டு, நிறை மாச கர்ப்பிணி மாதிரி வளையல் போடுக்கிட்டு, லோகட் ப்ளவுசும், சீ த்ரூ சாரீயும் கட்டிக்கிட்டு ஸ்கூலுக்கு வரதுக்கு பேர் - கிளர்ச்சியூட்டுவது. அது யார் செய்யணுமோ அவங்க அதை அதுக்க்கான இடத்தில் செய்வாங்க.
அழகி படத்தில் நந்திதாதாஸ், காக்க காக்க படத்தில் ஜோதிகா, ஏகன் படத்தில் நயன் தாரா------ யாருடைய ஒப்பனை இயற்கையான அழகு .
நம்மை பார்த்து நாலு பேர் "ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கேன்னு" சொல்றதுக்காக நாம ஒப்பனை பண்ண வேண்டாம். நமக்கு நாமே ஒரு தன்னம்பிக்கை கொடுக்க ஒப்பனை பண்ணணும்.
அதுக்காக கருப்பா களையா இருக்கறவங்க கூட, வேண்டாத வெளுப்பா ஆனா தான் எல்லாரும் மதிப்பாங்கன்னு நினைச்சு கண்ட கண்ட க்ரீமை வாங்கி பூசினீங்கன்னா " அழ்காய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" கதை தான்.சரி , தலைவியே!! ஒப்பனை அவசியம் தேவை தானுங்கோன்னு, அழகா, தலை சீவி, நீட்டா சுடிதார் போட்டு, கண்ணுக்கு லட்சணமா, கம்ப்யூட்டருக்கு முன்னால உட்கார்ந்து டைப் அடிக்கிறேன். எங்கள் அணிக்கே உங்கள் தீர்ப்பு வழங்க ( வீட்டில் அரைச்ச மஞ்சள் பொடி) கொடுத்து கேக்குறேன் எப்பூடி??!!!

ஒப்பனை அணிக்கு வாதிட வந்துள்ள கவிதாமணி ரேவதி வாங்க!

"வயதான பாட்டிகள் கூட இந்த காலத்தில் எவ்வளவு மேக்கப் போடுகின்றார்கள் என்று தெரியுமா நடுவரே"

"ராவணன் படத்திலேயே சில சீன்களில் அவருக்கு மேக்கப் இருக்காது. அந்த சீன்களில் அது அவரா என்று யோசிக்கும் அளவு இருக்கும். ஒப்பனை செய்துக் கொண்டு தான் பல நடிகைகள் தன் வயதை குறைத்துக் காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்."

நடிகைகளுக்கே அப்படின்னா பாட்டிகளுக்கு அந்த ஆசை வரக் கூடாதா ரேவதி?! இதை எதிரணிக்காரங்க புரிஞ்சுக்கலயே...!!

"காலையில எழுந்து முகத்துக்கு க்ளென்சிங் செய்து குளிச்சிட்டு நம்ம சருமத்திற்கு ஏற்றுக்கொள்கிற ஒரு க்ரீமை போட்டு கமகமக்கிற சாண்டல் பவுடரை போட்டு, கொஞ்சம் போல ஐ லைனர்,மஸ்காரா போட்டு, லைட்டாகவோ டார்க்காகவோ தகுந்த லிப்ஸ்டிக் போட்டு...............குட்டியாகவோ சின்னதாகவோ பிடிச்ச டிசைனில் பாக்குறவங்க கண்ணுக்கு தெரியறமாதிரி பொட்டு ஒன்னை வச்சு கண்ணாடி முன்னாடி நின்னு பாருங்க.......... கண்டிப்பா உங்க செல்போன் மெமரி கார்டின் மெமரி ஃபுல்லாகுற வரைக்கும் உங்களை நீங்களே போட்டோஸ் எடுத்துவச்சுக்க தோணிடும்."

அது சரிதான்...அப்பறம் வீட்டு வேலைகளை யாருங்க செய்வாங்க?உங்க வீட்டுக்காரருங்களா? நிசமாலுமே நீங்க கொடுத்து வெச்சவங்கதானுங்கோ ஆனந்தப்ரியா!!

"பிறந்த குழந்தை ஒப்பனை செய்து கொண்டா இருக்கிறது நடுவர் அவர்களே...குழந்தை அழகில்லையா?"

குழந்தையும் நாமும் ஒண்ணகுமாங்க? அதையும் அழகாக்கதான மையிட்டு, பொட்டிட்டு ஒப்பனை செய்யறோம்?

."செயற்கையான பொருள்களை அளவிற்கு அதிகமாக உபயோகபடுதுவதும்"....

.அப்போ குறைவா உபயோகப் படுத்தலாங்கறீங்க இல்லயா கோமதி.....
ஒப்பனை அணியினரே கேட்டுக்குங்க...(ஹ்ம்ம்...போட்டுக் கொடுத்தாச்சு!!)

"என் திருமணத்துக்கு வந்த எல்லாரும் என்னை திருமணத்துக்கு பின் பார்த்து விட்டு சொன்ன ஒரே விஷயம்... “அண்ணா... அண்ணி கல்யாணத்தன்னைக்கு எப்படி இருந்தாங்களோ அப்படியே இருக்காங்க"
"நான் என் கல்யாணத்துக்கே மேக்கப் போடல. சாதாரணமா தான் இருந்தேன். அழகா இருந்தேன்னு தான் எல்லாரும் சொன்னாங்க"

வாஸ்தவந்தாங்க வனிதா....நான் கூட என் கல்யாணத்துக்கு ஒரு மேக்கப் கூட போடலங்க...என்னையும் எல்லாரும் இப்பவும் அன்னைக்கு மாறியே இருக்கறதாதான் சொல்றாங்க...(என் திருமணத்துக்கு வெள்ளி விழா கொண்டாடியாச்சுங்கோ!!)

"பெண்மையின் மென்மையை மறைத்து பேய் போல் காட்சி அளித்து இன்றைய ஆண்களை பயம் காட்டி"
இதுக்கு ஆண்கள்தான் வந்து பதில் சொல்லணும்..

நாய்க்குட்டிக்கு கூட மேக்கப் போடும் மனிதர்களை என்ன செய்வது?அது பாவம் கண்ணு தெரியாம முடிக்குள்ள இருந்து எம்பி எம்பிப் பார்க்கும் பார்வை இருக்கே...இவங்க அதை மடியில வெச்சுக் கொஞ்சி குலாவறதைப் பார்க்க சகிக்காது.....அவங்களுக்கு அதுவும் ஒரு அழகு....

காலையில தளிகாவோட சீக்குக் கோழி....இப்போ உங்க முடிவெட்டி நாய்....சிரிப்பை என்னால அடக்க முடியலீங்க...!!!

எத்தனை ஆம்பிளைகளுக்கு மேக் அப் பிடிக்கும்...எதோ அங்கே இங்கே தான் சில ஆம்பிளைகள் அதை விரும்புகிறார்கள் அல்லது சனியன் எப்படியோ போட்டு போகட்டும் என்று விடுகிறார்கள் ..மற்றபடி ஆம்பிளைகளுக்கு பொதுவாகவே மேக் அப்பே பிடிக்காது"

அட தளிகா ஆண்களைப் பற்றி ஒரு ரிசர்ச்சே பண்ணியிருக்கீங்க போல.....ஹ்ம்ம்.....ஆனா சனியன்....இது கொஞ்சம் மனசை நெருடுதுங்க.....

"அன்னை தெரசாவையும்,இந்திரா காந்தியையும் துணைக்கு அழைத்து வழக்கின் போக்கையே திசை திருப்ப பார்க்கிறார்கள். அன்னை தெரசாவும்,இந்திரா காந்தியும் நாட்டு சேவையால் மக்களின் மனங்களை கவர்ந்தவர்கள்."

ரொம்ப சரிங்க கல்பனா...ஒண்ணு தெரியுமா உங்களுக்கு...இந்திரா காந்தியோட ஒப்பனைக்காரரே ஷெனாஸ் ஹுசேன் தான்னு நான் ஒரு புத்தகத்தில படிச்சேன்....

அப்பறம் நீங்க பார்த்த நடிகை கஸ்தூரி ஒரு காலத்துல மிஸ் சென்னைனு ஞாபகம்...சரியா?

ஒப்பன சுந்தரியே வாம்மா.... தங்கத்துக்கு கூட ஒப்பனை தேவைன்னு சொல்லி கலக்கிட்டியேம்மா....எதிரணிக்காரங்க என்ன சொல்லப் போறாங்கனு பார்ப்போம்...(மஞ்சள் பொடி தரதா இப்படி பப்ளிக்கா சொல்லிட்டியே....பாபு என்னை நடுவர் பதவியில இருந்து தூக்கிடுவாரு....வீட்டு அட்ரஸ் தரேன்...கொண்டு கொடுத்துடு!!!)

மேலும் சில பதிவுகள்