பட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

அன்பு அறுசுவை நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.
முதன் முதலாக பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்றுள்ளேன். நல்ல முடிவைத் தருவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

நடுவர் பொறுப்பு கொடுத்த தோழி வனிதாவுக்கும், அறுசுவைக்கும் நன்றி

நான் எடுத்துள்ள தலைப்பு தோழி யோஹலட்சுமியால் தரப்பட்டது-
ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

நகைச்சுவையான தலைப்பைத் தேடி நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இது....திருமணமான, திருமணமாகாத எல்லா தோழிகளுக்கும் பிடித்தமான (எந்தப் பெண்ணாவது அழகு செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்களா!!!இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு கூட நிறைய ஒப்பனை பொருட்கள் வந்திருக்கிறதே....இதில் அறுசுவைத் தோழர்களும் பங்கு கொள்ளலாம்!!) சீரியஸ் இல்லாத, சிரிக்கச் சிரிக்க பேச முடிந்த ஒரு தலைப்பு இது என்பது என் எண்ணம்!

இப்பொழுது மார்க்கெட்டில் தினம், தினம் புதிது புதிதாக எததனை அழகு சாதனப் பொருள்கள்....அந்த விளம்பரங்களே மனதை மயக்குகிறதே? இந்த பட்டியின் மூலமாக நம் தோழிகளிடமிருந்து எது நல்ல ப்ரேண்ட் என்று தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு அல்ப ஆசைதான்!!

வழக்கமான பட்டி விதிமுறைகள் இதற்கும் பொருந்தும்.
பட்டியின் விதிமுறைகள்
**********************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

எல்லாரும் கலந்துகிட்டு பட்டியை நவரச மேடையா ஆக்குங்க!

தயவு செய்து எல்லாரும் தமிழிலேயே பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நடுவருக்கும், பட்டிமன்றத்தில் பங்கு பெறும், மற்றும் பார்வையிடும் அனைவருக்கும் வணக்கம்.

முதல் தடவையாக நடுவர் பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

சினிமா நடிகைகளும் மாடலிங் செய்யறவங்களும் அவங்க ப்ரொஃபஷனுக்காக மேக்கப் போடறாங்க. அதைப் பார்த்து, அனேகம் பேர் மேக்கப் போட்டுகிட்டு, அழகாகிட்டதாக நினைச்சுக்கறாங்க.

”கான மயிலாடக் கண்ட வான்கோழி தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற்போல”

“புலியைப் பார்த்து, பூனை சூடு போட்டுகிட்டது போல”

இதெல்லாம்தான் நினைவுக்கு வருது.

வறுமையின் நிறம் சிவப்பு படம் பாத்திருக்கீங்களா? அதில் ஸ்ரீதேவி ஏழைப் பெண்ணாக, நாடக நடிகையாக வருவார். ஏழையாக வர்றப்ப, சிம்பிளான மேக்கப்பில் இருப்பார். அதுவே, மேடையில் தோன்றும்போது, (நீயே ராஜா, நானே ராணி என்ற பாடல், அப்புறம் அவர் கழுத்தை இன்னொருத்தர் நெறிக்கற மாதிரி ஒரு சீன்) அடர்த்தியாக, அரிதாரம் பூசியிருப்பார். இரண்டு மேக்கப்புக்கும் வித்தியாசம் இருக்கும்.

சினிமாவில் சிம்பிளாகத் தோன்றுவதற்கே, 2 மணி நேரம் மேக்கப் போடுவாங்க.
அவங்க உபயோகப் படுத்தும் ஒப்பனைப் பொருள்கள் எல்லாம் நமக்கு ப்ராண்ட் நேம் கூடத் தெரியாது. அவை எல்லாம் பொதுவான கடைகளில் விற்பனைக்குக் கிடைப்பதுமில்லை. ஆனா, அதே போல, நாமும் தோன்ற முடியும் என்ற பொய்யான நம்பிக்கையை, நமக்குத் தந்து, நம்மை உபயோகப் படுத்த வைக்கிறாங்க, விளம்பரம், மார்க்கெட்டிங் மூலம். இதிலும் விலை குறைவான பொருட்களிலிருந்து, மிக மிக அதிகமான விலையிலும் எல்லாம் கிடைக்குது. என்ன பலன் என்று பல காலம் உபயோகப் படுத்தினவங்களைக் கேளுங்க.

எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் 10 வருடங்களுக்கு முன்னால் வேலைக்குப் போயிட்டு இருந்தப்ப, தவறாமல் ஒரு சிகப்பழகு க்ரீம் யூஸ் பண்ணிட்டு இருந்தார். சிகப்பாகணும்னு இல்ல, சாயங்காலம் வரை, ஃப்ரெஷான தோற்றம் இருக்கும்னு ஒரு தவறான நம்பிக்கை. வேலையை விட்ட பிறகு, வீட்டில் அதை உபயோகிக்கலை.

ஆறே மாதங்களில் அவர் முகம் கறுத்துப் போயிட்டது. சருமம் பொலிவிழந்து போயிட்டது. அவரை சந்திச்சவங்க, “இப்ப வெயில் படாமத்தானே இருக்கீங்க, ஏன் இப்படி கறுத்துட்டீங்க” என்று கேட்டாங்க. சருமத்தின் நிறம் ஒரு விதமான வித்தியாசமான கருமையாகிட்டுது. ஸ்கின் டாக்டரை கன்சல்ட் பண்ணினார். அவர் சொன்ன தகவல்தான் பயங்கரம்.

இந்த மாதிரி சிகப்பழகு க்ரீம் எல்லாமே, அமோனியா அடங்கியதாம். இதை உபயோகிக்க ஆரம்பிச்சுட்டா, சருமத்தை, தொடர்ந்து ப்ளீச் செய்துகிட்டே இருக்குமாம். நிறுத்தினதுக்கு அப்புறம், அதோட பக்க விளைவுகள் தெரியுமாம். சருமமே கெட்டுப் போயிடுமாம்.

பல வருடங்களுக்கு முன்னால, ஐடெக்ஸ் என்ற கண்மைதான் இருந்தது.(இன்னும் அது இருக்கு). அது வண்டி மை மாதிரி இருக்காக்கும், கண்ணில் இட்டு, கொஞ்ச நேரத்தில், கரைஞ்சு போய், கண்ணுக்குக் கீழே, திட்டு திட்டாக இருக்கு, அழகான ஐப்ரோ பென்சில் யூஸ் பண்ணனும், காஜல் ஸ்டிக் யூஸ் பண்ணனும் என்று சொல்லி, விலை அதிகமான ப்ரொடெக்ட் எல்லாம் வந்திருக்கு.

ஆனா, இப்ப லேட்டஸ்ட் ஃபாஷன் என்று சொல்லி என்ன பண்றாங்க தெரியுமா, காஜல் போட்டுட்டு, லேசாக விரலினால் அதை அழிச்சு, திட்டு மாதிரி பரவ விடணுமாம். இந்தக் கண்றாவி ஃபாஷனுக்கு பேர் வேற, “ஸ்மோகிங் ஐஸ்”! இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல.

அதே மாதிரி, தலையைத் துவட்டாமல் போனால் சளி பிடிச்சுடும் என்று சொல்வோம். ஆனா, இப்ப ஃபேஷன் என்னன்னா, கையில் ஒரு பாட்டிலில் தண்ணி வச்சுகிட்டு, முடியை சின்ன சின்ன சுருளாக சுருட்டி, அதில் தண்ணியைத் தெளிச்சு, நெற்றிகிட்ட தொங்க விடணுமாம்! அப்பதான் அது பறக்காம, ஒட்டிகிட்டு அழகாகத் தெரியுமாம்.!

பாட்டில் தண்ணியை மறக்காம குடிச்சாலே, சருமம் அழகாக இருக்கும். இதை யார் அவங்ககிட்ட போய் சொல்றது.

மதுரையில் தியேட்டரில் டிக்கட் எடுக்க, க்யூ வரிசையில் நிப்பேன், அப்ப எனக்கு முன்னால நிக்கறவங்களை, க்ளோஸ் அப் ல பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அவங்க மேக்கப் எப்படி இருக்கும் தெரியுமா.

நல்லா மஞ்சள் தேச்சு, குளிச்சிருப்பாங்க. அதுக்கும் மேல, லாக்டோ காலமைன், ஃபேர் அண்ட் லவ்லி இதெல்லாம் கோட்டிங் கொடுத்திருப்பாங்க. அப்புறம் க்யுடிக்யூரா போன்ற வகைகளைச் சேர்ந்த டால்கம் பவுடரை, முக்கால் இஞ்சுக்கு இன்னொரு கோட்டிங். இதோட போச்சா, புருவத்துக்கு ஐப்ரோ பென்சிலால், நீட்டியிருப்பாங்க. கண்ணுக்கு மை, ஐ லைனர், அதோட மஸ்காரா வேற. சரி நிறுத்தியிருப்பாங்களான்னு பாத்தா, செக்க செவேல்னு ஒரு லிப்ஸ்டிக்.

பயம்ம்ம்மாயிருக்கும் எனக்கு.

இந்த டால்கம் பவுடர் பத்தி ஒரு வார்த்தை. அதிகமாக வேர்க்கும்போது, உடலில் தூவிக் கொள்ள உபயோகிக்க வேண்டிய பவுடரை, முகத்தில் திட்டு திட்டாக அப்பிகிட்டு வந்தால் என்ன செய்யறது? அதுவும் சீராக அப்ளை பண்ணினாலும் பாக்கறதுக்கு கொஞ்சமாவது சகிக்க முடியும்.

நடுவரே, ஒரு சந்தேகத்தைக் கேக்கிறேன் சொல்லுங்க.

வரிசையான பற்கள், ஆரோக்கியமான ரோஜா நிற ஈறு இவையெல்லாம் ஒருவரின் அழகை அதிகரிக்கும் விஷயம்.

இந்த பல், ஈறு இரண்டுக்கும் ஏதாவது ஒப்பனைப் பொருள் இருக்கா? கிடையாது.(பற்பசையையும் ப்ரஷையும் சேர்க்காதீங்க, அது பற்களை சுத்தம் பண்ணுவதற்கு) அதாவது நகத்துக்கு பாலிஷ் என்ற பெயரில் கலர் அடிச்சு இம்சை பண்ணுற மாதிரி, பல்லுக்கு நாம எதுவும் செய்யறதில்லை. ஏன்னா, பற்களையும் ஈறையும் சுத்தமாக, பராமரிச்சால்தான் அவை இரண்டும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும். ஒப்பனையின் மூலம், அவற்றின் குறைபாடுகளை மறைக்க முடியாது. (பல்லுக்கு கிளிப் போடுவது, வரிசை தவறிய பற்களை சீரமைக்க, இது மேக்கப் கிடையாதுங்க)

இதிலிருந்தே தெரிகிறதா, சுத்தம், சுகாதாரம் இதெல்லாம்தான் சரும அழகை மேம்படுத்தும், பாதுகாக்கும் என்று.

நடிகைகள் போடுகிற நெயில் பாலிஷ் ஒரு பாட்டில் 500 ரூபாய் வரைக்கும் கூட விலை. அதைப் பார்த்து, பிரமித்து, நாம் வாங்குவதற்கு 15 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரைக்கும் கிடைக்குது. எதற்கு இப்படி பணம் வேஸ்ட் பண்ணனும். அழகாக நகங்களை வெட்டி, சுத்தப் படுத்தி வைத்திருந்தாலே, பாக்கறதுக்கும் அழகு. சுகாதாரமும் கூட.

இதே மாதிரிதான் எல்லா விஷயமும். மேக்கப் பொருட்கள் வாங்க செலவு பண்ணுகிற காசில், பழங்கள், பால், காய்கறிகள் என்று வாங்கி, சாப்பிடுங்க. சருமம் மின்னும், கூந்தல் அருமையாக வளரும்.

இன்னொரு விஷயத்தையும் உதாரணம் சொல்லி, என் வாதத்தை முடிச்சுக்கறேன் நடுவரே.

இப்ப நாட்டில் நிலவும் தண்ணீர்ப் பஞ்சத்துக்குக் காரணமே, எங்கே பாத்தாலும் கான்க்ரீட், சிமெண்ட் போட்டு, தரையை மூடி வைப்பதுதான் காரணம். ஏன்னா, பெய்கிற மழை நீரை பூமி உறிஞ்சி உள்ளே இழுக்க முடியாமல் போவதால், நிலத்தடி நீர் ஆதாரம் குறைகிறது.

இதே போலத்தான் - நம் சருமத்தில் இருக்கும் சருமத்துவாரங்கள் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிப்பதற்காகத்தான்.

அதை, க்ரீம், ஃபவுண்டேஷன், பவுடர் என்று அப்பி, அடைச்சு வைக்காதீங்க, ப்ளீஸ்.

முடிந்தால், மீண்டும் ஒரு முறை வர முயற்சிக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஒருக்க எனக்கு என் கசின் மேக் அப் பண்ணி விட்டா அது கலையாம இருக்க மேல வேறென்னவோ வியர்க்காம எதுவோ தேச்சும் தந்தா பார்க்க நல்லா தான் இருந்தது ஆனால் எனக்கு ஒரு மாதிரி முகத்தில் சூடு கிளம்ப ஆரம்பிச்சுதே எப்படின்னு சொல்ல தெரியலை ப்லான்கெட்டை போட்டு முகத்தில் கட்டின மாதிரி ஒரு 30 நிமிஷம் வச்சிருப்பேன் எனக்கு என்னமோ மூஞ்சியெல்லாம் கரிஞ்சிடுமோன்னு பயம் வந்துடுச்சு உடனே போய் கழுவிட்டேன்..அப்ப தான் யோசிச்சு பாத்தேன் சருமத்தை இது எந்தளவுக்கு பாதிக்கும் என்று சருமம் தாக்கு பிடிக்காம போராடுறதா எனக்கே உணர முடிஞ்சது
இன்னொரு விஷயம் சொல்றேன் என் திருமணத்துக்கு மேக் அப் பண்ணிட்டது நானே தான் அளவா அழகா இருந்தது.எனக்கு பொருத்தமானதை மட்டும் போட்டுகிட்டேன் எல்லாருக்கும் நல்லா இருக்கு என்று சொன்னார்கள்..நெருங்கிய உறவினர் ஒருத்தர் வந்து பாத்துட்டு இது என்ன புது பொண்ணா இப்படி ஒன்னுமில்லாம என்று வலுக்கட்டாயமா கண்ணத்திலும் கண்ணுக்கு மேலும் அப்படி எதெதுவோ பேகிலிருந்து எடுத்து பூசி விட்டார்..எங்கம்மா வந்து பாத்துட்டு அய்யோ ரொம்ப அசிங்கமா இருக்கு என்றார் எனக்கு அழுகையே வந்துடுச்சு அவங்க போனப்றம் கழுவி விட்டுட்டு திரும்ப நானே போட்டேன்.பியூடீஷியன் போட்டா ஒழுங்கா தான் இருக்கும் ஒத்துக்கறேன் தினசரி பியூட்டீஷியனோடவா நடக்கிறோம் .மட்டுமில்ல சருமம் சீக்கிரம் சுருக்கம் விழுவதாகவும் சொல்றாங்க

அன்பு ரம்யா...ஹார்ட் டச்சைப் பத்தி ஆவேசமா பேசிட்டீங்க....கொஞ்சம் கூல் டௌன் ஆகுங்க....

"என்றுமே நிலையாய் இருக்கும் இயற்கைக்கு நிகர் ஏதும் இல்லை"
அழகு என்றைக்கும் நிலையாக இருக்கக் கூடியது இல்லனுதான ஒப்பனை செய்து இன்னும் கொஞ்ச நாள் அழகா இருக்க விரும்பறாங்க பெண்கள்...பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கு கூட இப்போல்லாம் வித விதமா ஃபேஷியலும், ஹேர் ஸ்டைலும் வந்திருக்கே...இதுக்கு என்ன சொல்றீங்க ரம்யா?

அன்பு ரம்யா....வாங்க...வாங்க...பட்டிக்கு வந்து வாதிட்ட உங்களுக்கு மிக மிக நன்றி....
"இந்த மாதிரி சிகப்பழகு க்ரீம் எல்லாமே, அமோனியா அடங்கியதாம். இதை உபயோகிக்க ஆரம்பிச்சுட்டா, சருமத்தை, தொடர்ந்து ப்ளீச் செய்துகிட்டே இருக்குமாம். நிறுத்தினதுக்கு அப்புறம், அதோட பக்க விளைவுகள் தெரியுமாம். சருமமே கெட்டுப் போயிடுமாம்."

உங்களுடைய இந்த வாதம் ஒப்புக்கொள்ள கூடியதுதான்...தொடர்ந்து மேக்கப் போடுபவர்களின் முக நிறம் கருமையாகி விடும் என்பதை மேக்கப் இல்லாத சில நடிகைகள் முகம் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்...(அரிதாரம் பூசாத அவர்கள் முகங்களைப் பார்ப்பதே அரிதாச்சே!)வந்து இன்னும் நிறய விஷயங்களைச் சொல்லுங்க சீதா...

என்னப்பா...ஒப்பனை அணிக்காரங்க எங்க போனீங்க? இயற்கை அழகு அணி என்னென்னவோ சொல்லறாங்க.....ஆனந்தி, உத்ரா, கல்பனா, ரியாஸா....எல்லாரும் வந்து இவங்களுக்கு பதில் சொல்லுங்கம்மா....

நடுவரே...ஸ்கின் பொழிவு உள்ளிருந்து கெட்டு போகும்னு நாங்க சொல்றோம்.. வெளி அழகை பத்தி தோழிகள் புரியாம ப்பேசும் போது எப்படி ஆவேசமாகாம இருக்க முடியும்?

அழகு நிலையா இருக்காதுங்கறதால தான் ஒப்பனை செய்யறாங்க..அதுக்கு என்ன விளக்கம்னு கேக்கறீங்க? அழகு நிலை இல்லைனு யார் சொன்னது.. குழந்தையில் ஒரு அழகுனா.. குமரியில் ஒரு அழகு, மனைவியாய் அழகுனா தாயாய் அழகு.. முதுமையிலும் இருக்கு அழகு..அழகின் நிலை மாறிக் கொண்டே இருந்தால் தான் நமது உடல் ஆரோக்கியமா இருக்குனு அர்த்தம். அழகு நிலையா இருக்க நாம் என்ன பொம்மையா? அழகின் நிலை மாறலைனா தான் நமது உடலில் கோளாறு இருக்குனு புரிஞ்சுகோங்க.. வயசான தோல் சுருங்கனும்.. குமரியான பிம்பிள்ஸ் வரணும்.. இல்லைனா தான் உங்க சுரப்பியில் கோளாறு.. இது புரியாம ஒரு இஞ் கோட்டிங்க் எடுத்து அப்பிக்கிட்டா அழகு நிலை ஆகிடுமா?

எப்பவும் ஃப்ரஷா இருப்பேன் பேர்வழினு சொல்லி நமது தோலில் இருக்கும் நுண் ஓட்டைகளை நல்லா அடைச்சுடுவேண்டியது.. பின் கழிவு வேர்வையா வெளியேறாம ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணு கொப்பளம் , அரிப்புனு எல்லாம் ஏற்படும்.. ஆண்டவன் இயற்கையாவே ஒரு அழகான ஃபேக்டரி போல உடலை கொடுத்து இருக்கான். இதை வேலை செய்யாம தடுத்து நாம அழகா தெரியும்னும்னு நினைக்கறாங்க.

க்ரீம்னால தான் முக்காவாசி அலர்ஜியே ஏற்படுது ..ஹேவியான ஃப்விண்டேஷன் க்ரீம் போட்டு அதை தோலின் நுண்ணிய ஓட்டை ஆழம் வரை செலுத்தி, பின் என்ன ஆவியில் முகத்தை காட்டினாலும் அத்தனை சீக்கரம் வரதில்லைனு நமக்கு தெரியரது இல்லை.அது தான் ப்லாக் ஹெட்ஸ் ஆகி முகத்தில் எரிச்சலை உண்டாக்குது.

க்ரீம்களின் க்ரிஸ்டலின் க்வார்ட்ஸ் இருக்கு. அது தான் தோலில் செட்டில் ஆகி கேன்சரை கூட வரவழைக்குது. தோலும் ஸ்வாசிக்கக் கூடிய உறுப்பு. அந்த வேதியியல் பொருளை ஸ்வாசித்து நுரைஈரலுக்கு இலவசமா டாக்ஸினை கொடுக்குது.. இது தேவையா?

ஒய்யார கொண்டையிலே பேனும் ஈருமாம்.. கொண்டை பார்க்க அழகாதான் இருக்குமாம்.. உள்ளே பார்த்தால் பேன், ஈருனு கசுடா இருக்குமாம். அது போல தான்.. மேக் அப் போட்டு ஃப்ரஷா வெக்கறேனு சொல்லி உள்ளே பார்த்தால் எல்லா வினையும் இருக்கு.. ஆர்கானிக் க்ரீம் கூட இப்படி தான்.. அது நமக்கு தெரிவதில்லை.. நிறைய பணம் கொடுத்து வாங்கினா நல்ல ப்ராடக்ட்னு நாமே நினைச்சிக்கறோம்..என்ன கொடுமை சார் இது ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தீர்ப்ப கொடுங்க நடுவர் அவர்களே...:-)))))
ஒப்பனை அணியில் இருந்து ஒப்புக்கு கூட யாரும் வர மட்டேன்குறங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

என்னங்க பட்டிய ரெண்டு நாளா யாருமே கண்டுக்கல..?!! :-( எல்லாரும் எங்க போய்டீங்க..?? எல்லா பட்டிலயும் காரசார விவாதம் நடக்கும் ஆனா இப்போ யாரையுமே காணலயே. இது நல்ல தலைப்பு, காலத்துக்கு ஏற்ற தலைப்புதானே..? ஒரு சிலர் வேலையா இருக்காங்க.. சிலர் பதிவுகுடுக்க முடியாத நிலைல இருக்காங்க. மத்தவங்க எங்க....?? வாங்க........ பழையபடி அதிரடி வாதத்துக்கு வாங்க........... இப்படி தூங்கவிடாதீங்க... .

KEEP SMILING ALWAYS :-)

நீங்களும் எதாச்சும் சொல்லுங்க ...நீங்க எந்த அணி? (ஐயோ இங்க அரட்டையை ஆரம்பிசுடதீங்கப்பா... yenakku adi தான் vilum)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஒப்பனை தேவையில்லனு அரட்டைல சொல்லிருக்கேன்.. இங்க பதிவு போடனும்னு முடிவுபண்ணிட்டா ஒழுங்கா பதிவுபண்ணனும் 1,2 பதிவோட ஓடுறது சரியாவராது.

KEEP SMILING ALWAYS :-)

நடுவரே... எங்க போனீங்க? ஒப்பனை வேணும்னு சொன்ன அணி எங்கே?? ஒப்பனை பண்ணிக்க போயிருக்காங்களா? ;) வாங்க எல்லாரும் இந்த பக்கம். தீர்ப்புக்கு இன்னும் 1 நாள் இருக்கு. தோழிகளே... கட்டாயம் இங்கே அரட்டை கூடாது, உங்களுக்குள் பதிவுகளும் கூடாது... பட்டிக்கு மட்டுமே பதிவிடனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒப்பனை அணியே உங்களுக்கு சில டிப்ஸ் டிவியில சொன்னது..தினசரி காலை சூரிய ஒளியை கொஞ்ச நேரம் எடுத்துக்கணும்..நிறைய பச்சை காய்கறி பழங்கள் சாப்பிடனும் நிறைய தண்ணி குடிக்கனும்..பிறகு ஒப்பனையாவது ஒன்னாவது..சும்மா குளிச்சு அப்படியே போனாலும் முகத்துக்கு என்ன மேக் அப் போட்டீங்கன்னு கேப்பாங்க ..இங்கு கறுப்பு வெள்ளை எல்லாம் இல்லை எப்படிபட்ட சருமமும் மின்னும்.இந்த ஒப்பனையெல்லாம் தினசரி வாழ்க்கைக்கு ஒத்துவரவே வராதுங்க அந்த நேரம் மிச்சமிருந்தால் பல வேலையை செய்யலாம் மாதம் ஒரு தொகை சேமிக்கலாம்.
ஒரு வகையில் பார்த்தால் நம்ப பிள்ளைகள் நம்ப மேக் அப்பை பார்த்து கத்துக்குது இப்படி போட்டுகிட்டா தான் நாமளும் அழகா தெரிவோம் என்று.சின்ன குழந்தைகளுக்கு கூட பவுடரை கொட்டி கெடுக்கிறார்கள்.சின்ன குழந்தைகளுக்கு குளிச்சு மாய்ஸ்சரைசர் போட்டு அப்படியே விடுங்க பாக்கலாம் அவ்வளவு அழகா இருப்பாங்க.அட்டி அட்டியா பவுடரை போட்டால் சிறு வயதிலேயே சருமம் ட்ரைய்யாகி விடும்..வெளிநாட்டில் வளரும் பிள்ளைகள் சிறு வயதில் சுத்தமா மேக் அப் போடுவதில்லை நம்ப ஊரில் கல்யாணம் விசேஷம் என்று அது ஒரு நிர்பந்தம் போலவே குழந்தைகளுக்கு மேக் அப் என்று எல்லா பொருளும் தேய்க்கப்படுகிறது ..முகத்தை பாருங்க குழந்தைக முகம் கூட சொரசொரன்னு ஆகியிருக்கும்..குழந்தை கொஞ்சம் நிறமும் கம்மியா இருந்துச்சு போச்சு அவ்வளவு தான் இருக்கிற பவுடர் எல்லாம் அந்த குழந்தைக்கு தேச்சு சுன்னாம்படிச்சுடுவாங்க.இயற்கை அழகை மெருகூட்டலாம் எப்படி??ஒழுங்கா சத்தானதா சாப்பிட்டு தான்..ஆனால் மேக் அப்போ முகத்தை கழுவினா பிள்ளைகளே பாத்து பயந்துடுவாங்க.நடுவறே நீங்க என்ன தீர்ப்பு தர போறீங்கன்னு தெரியுமே;-)

மேலும் சில பதிவுகள்