பிட்லே

தேதி: December 14, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

கொண்டைக்கடலை - 100 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
தேங்காய்த்துருவல் - கால் கப்
மல்லித்தூள் - அரை மேசைக்கரண்டி
புளி - கோலி குண்டு அளவு
உப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி + 2 தேக்கரண்டி
கடுகு - 3/4 தேக்கரண்டி
பொடி செய்ய :
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 7
சீரகம் - ஒரு தேக்கரண்டி


 

கொண்டைக்கடலை, துவரம் பருப்பு இரண்டையும் வேக வைத்து எடுத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஊற வைத்த புளியை முக்கால் கப் அளவிற்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
வெறும் வாணலியில் எண்ணெய் இல்லாமல் சீரகத்தை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும். அதிலேயே மிளகாய் வற்றலை போட்டு வறுத்து எடுக்கவும்.
அம்மியில் அல்லது மிக்ஸியில் வறுத்த கடலைப்பருப்பு, சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும். வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க வைக்கவும்.
கொதிக்கும் போது உப்பு மற்றும் வேக வைத்த துவரம்பருப்பை போட்டு கிளறி விடவும்.
அதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலை போட்டு இரண்டு நிமடம் கொதிக்க விடவும்.
கொதித்ததும் தேங்காய் விழுது, அரைத்த பொடி மற்றும் மல்லி பொடி போட்டு கிளறி விடவும்.
நன்கு கிளறி விட்டு நான்கு நிமிடம் வரை வைத்திருந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து விடவும்.
சுவையான கொண்டைக்கடலை பிட்லே தயார். இது சாதம், இட்லி, தோசை மற்றும் இடியாப்பத்திற்கு நன்றாக இருக்கும். இந்த குறிப்பினை நமக்கு வழங்கியவர் திருமதி. செல்லம்மா அவர்கள்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இந்த ரெசிபி பேர் மட்டும் தெரியும், எப்படி பண்றதுன்னு தெரியாம இருந்துச்சு. அழகா பண்ணி காட்டி இருக்கீங்க. எங்களுடைய சார்பா செல்லம்மா அவர்களுக்கு வாழ்த்தை சொல்லிடுங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு...இத சாதத்துடன் சாப்பிடனுமா? இல்ல டிஃபன் கோட சாப்பிடனுமா?

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ரொம்ப நல்லா இருக்கு... செய்முறை படிக்கும்போதே சுவை எப்படி சூப்பரா இருக்கும்னு புரியுது. அவசியம் செய்து பார்த்து சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பீட்லே....... பெயரும் வித்தியாசமா இருக்கு........செய்முறையும் வித்தியாசமா இருக்கு. எப்பவும் வெங்காயம் தக்காளி, கத்தரிக்காய் போட்டு தான் கொண்டைகடலை குழம்பு வைப்பேன். நைட் செய்வதற்கு கடலை ஊறப் போட்டுள்ளேன். கண்டிப்பா இன்னைக்கு இந்த முறையில் செய்யப் போறேன்.
வித்தியாசமான குறிப்புக்கு நன்றி.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

பிட்லெ நான் செஞ்சி பார்த்துட்டேன். ரொம்ப நல்லா இருக்கு. காரமாகவும் இருந்தது சுவையாகவும் இருந்தது. கணவரிடம் பாராட்டும் கிடைத்தது. பிட்லெ சொல்லித்தந்தவங்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
zaina.