பொங்கல் சாம்பார்

தேதி: December 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (12 votes)

 

கத்தரிக்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
துவரம் பருப்பு - கால் கப்
பெருங்காயம் - சிறிய சுண்டைக்காய் அளவு
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கொத்து
கடுகு - முக்கால் தேக்கரண்டி


 

துவரம் பருப்பு, வெந்தயம் இரண்டிலும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தனித்தனியாக 15 நிமிடம் ஊற வைக்கவும். கத்தரிக்காயை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை இரண்டிரண்டாக நறுக்கவும். புளியுடன் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பெருங்காயம், கத்தரிக்காய் மூன்றையும் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதில் தக்காளியை போட்டு ஊற வைத்த துவரம் பருப்பு, வெந்தயம் இரண்டையும் ஊற வைத்த தண்ணீருடன் ஊற்றவும். மேலும் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி 10 நிமிடம் வேக வைக்கவும்.
10 நிமிடம் கழித்து குக்கரை இறக்கி மூடியை திறந்து புளிக்கரைசலை ஊற்றி சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.
இந்த கலவையுடன் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதித்ததும் இறக்கி வைத்து விடவும். ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் கொதிக்க வைத்த சாம்பாரை ஊற்றி கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.
சுவையான பொங்கல் சாம்பார் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹை... எனக்கு பிடிச்ச சாம்பார்... எங்க வீட்டில் வெந்தயம் சேர்ப்பதில்லை, மற்றபடி இதே முறை தான்... நல்ல சுவையான குறிப்பு கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள். நீங்க செய்திருக்குறதை பார்த்து எனக்கு செய்ய ஆசை வந்துட்டுது. நாளை இதே தான், உங்க முறைபடி வெந்தயம் சேர்த்து. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா சாம்பார் வாசனை இங்க வரைக்கும் வருதே. சூப்பரான குறிப்பு . மறுமுறை சாம்பார் வைக்கும் போது இது மாதிரி ட்ரை பண்ணி பார்க்கிறேன். வாழ்த்துக்கள். மேலும் பல குறிப்பு குடுங்க.

சாம்பார் எளிமையா அழகா இருக்கு! நானும்கூட வெந்தயம் சேர்த்து செய்ததில்லை. அடுத்தமுறை பொங்கலுக்கு இதுப்போல செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

அருமையான குறிப்பு.

ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு, பொங்கல் எப்போதும் எங்க வீட்டுல காலியாகாது இன்னக்கி தீர்ந்தே போச்சு உங்க சாம்பாரால