காஞ்சிபுரம் இட்லி

தேதி: December 23, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

புழுங்கல் அரிசி - ஒரு கப்
பச்சரிசி - ஒரு கப்
உளுந்து - ஒரு கப்
சுக்கு பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு
தாளிக்க:
எண்ணெய் / நெய் - 2 மேசைக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - 2 கொத்து
முந்திரி - கொஞ்சம்


 

அரிசி, உளுந்து அனைத்தையும் கழுவி ஊற வைக்கவும்.
இவற்றை தனித் தனியாக சற்று கொர கொரப்பாக அரைத்து உப்பு, சுக்கு தூள் கலந்து இரவு முழுவதும் புளிக்க விடவும்.
மாவு புளித்ததும் கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, ஒன்று இரண்டாக பொடித்த மிளகு சேர்த்து தாளித்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுக்கவும்.
இதை மாவுடன் நன்றாக கலந்து விடவும். தேவை என்றால் சோடா மாவும் சிறிது கலந்து கொள்ளவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்து இட்லி ஊற்ற போகும் தட்டிலோ, கப்பிலோ எண்ணெய் தடவி அதன் நடுவே ஒவ்வொரு முந்திரி வைக்கவும்.
இட்லி பாத்திரத்தில் நீரை வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் கப்பில் மாவை நிரப்பி இட்லி பாத்திரத்தில் வைக்கவும்.
10 - 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான மணமான காஞ்சிபுரம் இட்லி தயார். தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி போன்றவையோடு அருமையாக இருக்கும்.

விரும்பினால் முதல் நாள் புளிக்கும் முன்பே மாவில் சுக்குடன் சேர்த்து மிளகு, சீரகம் பொடித்து போடலாம். முந்திரி இப்படி தான் வறுத்து போட வேண்டும் என்றில்லை, சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து மாவோடு கலந்தும் ஊற்றலாம். தாளிக்கும் போது கொஞ்சம் பெருங்காயம் சேர்த்தால் இன்னும் வாசமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி...
காஞ்சீபுரம் இட்லி சூப்பர்... :) ஹைலைட்டே அந்த ஷேப் தான்.. கலக்கலா இருக்கு.இந்த கப் இட்லி செய்வதற்கான பிரத்தியேக கப்புகளா இல்லை டைமிங் இட்லி தட்டுகளா?..

இப்படி ஒரு இட்லி பார்த்ததே இல்ல புதுசா இருக்கு பார்த்தாலே தெரியுது அதன் சுவை எப்படி இருக்கும்னு நோட் பண்ணி வச்சுக்குறேன் எனக்கு சான்ஸ் கிடைக்றப்போ செஞ்சுடுறேன் அக்கா வாழ்த்துக்கள் by Elaya.G

காஞ்சிபுரம் இட்லி சூப்பரா இருக்கு. விருப்பட்டியலில் சேர்த்துட்டேன். சுக்குப்பொடி ஏன் சேர்க்கனும் வனி.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

சாந்தினி... மிக்க நன்றீ. சந்தேகம் இல்லாம அது இட்லி ஊத்தவே உள்ள கப்பு தான். ஒரு இட்லி சட்டியோட வாங்கியது. ஓட்டை ஓட்டையா உள்ள தட்டு வரும், அதன் மேலே இந்த கப்புகள் அடுக்கி வைப்பது போல் இருக்கும். :)

இளையா... ரொம்ப சுவையான இட்லி இது. ஒரு முறை செய்து பாருங்க, அப்பறம் அடிக்கடி இதை தான் செய்ய தோனும் :) மிக்க நன்றி.

வினோ... மிக்க நன்றி. இந்த இட்லி காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் (வரதராஜ பெருமாள்னு நினைக்கிறேன்) படைக்க செய்வாங்கனு சொன்னாங்க. அந்த காலத்தில் மூங்கிலில் வேக வைச்சாங்களாம், இப்போ தொன்னை (பிரசாதம் தர ஒரு இலை கப்பு மாதிரி இருக்குமே... அது தான்) பயன்படுத்தி இட்லி வேக வைக்கிறதாக சொல்றாங்க. நாம அதுக்குலாம் எங்க போறது... இதோட ஸ்பெஷலே நெய், சுக்கு, மிளகு, சீரகம் சேர்ப்பது தான். மற்றதெல்லாம் ஆப்ஷனல். செய்து பாருங்க, நிச்சயம் பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லாருக்கு வனி காஞ்சிபுரம் இட்லி! இட்லி போடற கப்ஸ் க்யூட்டா இருக்கு! :)

இங்கே ஒரு ஃப்ரண்ட் இதை எப்பவும்போல‌ இட்லித‌ட்டில‌ போட்டு செய்வாங்க‌. அம்மா, இதையே பெரிய‌ எவ‌ர்சில்வ‌ர் த‌ட்டில் போட்டு வேக‌வைத்து, அப்புற‌மா, ட்மைண்ட் ஷேப்பில‌ க‌ட் ப‌ண்ணி த‌ருவாங்க‌! :)

நான் செய்து ரொம்ப நாள் ஆச்சு, இப்ப உங்க குறிப்பு பார்த்ததும் நியாபகம் வந்திடிச்சி! நானும் உங்க‌ மெத்த‌ட்ல‌ க‌ட்டாய‌ம் ட்ரை ப‌ண்ணி பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

எங்க வீட்லையும் இதே மாதிரி தான் செய்வோம். நல்லாயிருக்கு. வனிதா
பாரம்பரிய உணவை செய்ததற்கு வாழ்த்துக்கள்.

சுஸ்ரீ... அவசியம் செய்து பாருங்க. இதில் ஒவ்வொருவர் ஒவ்வொரு முறைபடி செய்வாங்க. பச்சை மிளகாய் ஏதும் போடாமல் வெறும் மிளகு, சீரகம், சுக்கு போட்டு செய்தா கூடா சூப்பரா இருக்கும். உங்க முறையையும் ஒரு முறை படம் எடுத்து அனுப்புங்க... புதுசா இருந்தா எங்களூக்கும் இன்னொரு வெரைடி கிடைக்கும் :) மிக்க நன்றி சுஸ்ரீ.

ஆனந்தி... மிக்க நன்றி. இதே முறையில் தான் செய்வீங்களா?? எனக்கு அம்மா செய்து தான் பழக்கம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா