நெய்யப்பம்

தேதி: January 2, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

அரிசி மாவு - 2 கப்
‍‍ரவை - 2 மேசைக்கரண்டி
பழுப்பு சர்க்கரை (ப்ரவுன் சுகர்) - ஒரு கப்
மசித்த வாழைப்பழ கூழ் - ஒரு கப்
(சுமாராக‌ 2 பெரிய வாழைப்பழம்)
கறுப்பு எள் - 2 தேக்கரண்டி (வறுத்தது)
ஏலக்காய் - 2
தேங்காய் துருவல் (அ)
சிறு துண்டுகளாக அரிந்த தேங்காய் - 2 (அ) 3 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/8 தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி (அ) சுவைக்கேற்ப‌
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவை அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
முதலில் வாழைப்பழத்தை மசித்து அதனுடன் பழுப்பு சர்க்கரையை போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
வெறும் வாணலியில், ரவையை வாசனை வரும் வரை வறுக்கவும்.
வறுத்த ரவையை வாழைப்பழ கலவையில் சேர்க்கவும். பிறகு பேக்கிங் சோடா, அரிசிமாவு, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்துக் கொள்ளவும். வறுத்த எள், மற்றும் தேங்காய் துருவலையும் சேர்த்து கலந்து விடவும். கடைசியாக ஏலக்காயை தட்டி இதனுடன் சேர்க்கவும். இப்போது மாவு தயார்.
அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து, ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் விட்டு, கொஞ்சம் கல் சூடானதும், மாவை ஊற்றவும். (குறிப்பு: அப்பம் வேகும்போது அடுப்பை குறைந்த தீயில் வைப்பது அவசியம்)
3 ல் இருந்து 5 நிமிடங்கள் வரை வெந்ததும், பணியாரக் கல்லுக்கான கரண்டி கொண்டு ஒவ்வொன்றையும் திருப்பி விடவும். எல்லாவற்றின் மேலும், கொஞ்சம் எண்ணெய்/நெய்யை விடவும்.
ஒரு சில நிமிடங்களில், அடுத்த பக்கமும் வெந்ததும், ஒவ்வொன்றாக எடுத்து, டிஷ்யூ பேப்பர் விரித்த தட்டில் வைக்கவும்.
பின்னர் லேசான சூட்டில் இருக்கும் போதே தட்டில் வைத்து பரிமாறவும். சுவையான நெய்யப்பம் தயார்!

இதில் ப்ரவுன் சுகருக்கு பதிலாக வெல்லம் சேர்த்தும் செய்யலாம். வெல்லம் 3/4 கப் முதல் 1 கப் வரை அவரவர் சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும். வெல்லம் சேர்த்து செய்வதாக இருந்தால், முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து மண்/தூசி ஆகியவற்றை வடிகட்டி எடுத்துவிட்டு சேர்க்கவும். குழந்தைகளுக்கு செய்யும்போது, எண்ணெய்க்கு பதில் முழுவதுமே நெய்யை உபயோகித்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுஸ்ரீ (நீங்களும் ஒரு பணியார குறிப்பு படம் எடுத்து வைத்துள்ளதாக சொன்ன ஞாபகம் அதான இது.) நெய்யப்பம் எள், ப்ரவுன் சுகர் எல்லாம் சேர்த்து புதுமையா இருக்கு வாழ்த்துக்கள். எந்த ஊர் ஸ்பெஷல்? உங்க பொண்ணு போன வருஷம் நியூ இயர் ஸ்பெஷலா அழகான ஸ்டார் செய்து காண்பித்தாங்க. இந்த வருஷம் ஒண்ணும் செய்யலையா.

ஷ்ரீ
அருமையான குறிப்பு..வெல்லம் சேர்த்து செய்த எல்லா உணவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதுவும் நெய்யப்பம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.விளக்கமா செய்து காண்பிச்சுட்டீங்க

ஹை... சம நெய்யப்பம். வஞ்சம் இல்லாம நெய் சாப்பிடுவேனாக்கும் நான் ;) பார்த்ததுமே பிடிச்சிடுச்சு. இந்த சர்க்கரையும் என்கிட்ட இருக்கு இங்க, அதனால் செய்துடறேன் :) நல்ல சுவையான குறிப்புக்கு நன்றி சுஸ்ரீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப சூப்பரான டிஷ்.... எனக்கு ஒரு சந்தேகம். அரிசி மாவுக்கு பதிலாக இட்லி மாவு சேர்க்கலாமா??? ஏனென்றால், சில நாட்களில் மாவு அதிகமாக மீந்துவிடும். அதான்... அந்த நேரங்களில் இது போல் செய்து அசத்தலாமே....

லக்ஷ்மி ஆனந்த்

ரொம்ப நல்ல குறிப்பு பணியாரம்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் அதும் நீங்க வாழைபழம் லாம் சேர்த்து பண்ணி இருக்கீங்க எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு சீக்கிரமே செய்து பார்கிறேன் வாழ்த்துக்கள் by Elaya.G

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு முதல் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

முதல் ஆளா வந்து தந்த பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வினோ!. இது கேரளா ஸ்பெஷல்! இங்கே என் தோழி ஒருவர் வீட்டில் சுவைத்து பார்த்து, எனக்கு ரொம்ப பிடித்து போய், அப்புறம் நானும் அடிக்கடி செய்ய ஆரம்பித்துவிட்டேன்! :)
ஆமாம், இதுதான் நான் சொன்ன அந்த பணியாரக்குறிப்பு!‌ :) ந‌ல்லா நினைவு வைத்திருக்கிங்க‌ளேன்னு நான் நினைத்து முடிப்ப‌த‌ற்குள், அடுத்த விஷயம் சொல்லி நிஜ‌மாவே அச‌த்திட்டிங்க! :) உங்களுக்கு நல்ல ஞாபகசக்தி வினோ! போன‌ வ‌ருட‌ம் என் பொண்ணு ப‌ண்ண‌ ஸ்டாரை ந‌ல்லா ஞாப‌க‌ம் வைச்சி கேட்டது, ரொம்ப‌ சந்தோஷ‌‌மா இருக்கு! :) ந‌ன்றி!

இந்த வருடம் வின்டர் ப்ரேக்கிலும், கைவேலை சிலது செய்தாள். ஆனால், எனக்குதான் படம்பிடிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது! :( அவளுடைய இந்த வருட ஸ்பெஷல்ஸ், குரோசே ஸ்கார்ஃப் & புக் மார்க்கர்ஸ்! :)

அன்புடன்
சுஸ்ரீ

வாங்க தளிகா, ரொம்ப நாளாச்சு உங்களோட பேசி. எப்படி இருக்கிங்க? பொண்ணும், பையனும் நலமா? பாராட்டிற்கு மிக்க நன்றி தளி! உங்களுக்கும் ரொம்ப பிடிக்குமா? எனக்கும் ரொம்ப... ;)
வீட்டில என் பசங்களும் இந்த ஐய்ட்டத்துக்கு பெரிய ஃபேனாயிட்டாங்க! :)

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் வனி,
நெய்யப்பம் பார்த்ததுமே பிடிச்சி போச்சா?! ஒருமுறை செய்து சுவைச்சிட்டிங்க, அப்புறம் ரொம்ப பிடிச்சி போயிடும், விடவே மாட்டிங்க!! (எல்லாம் அனுபவம் பேசுது! :)) நெய், பிரச்சனை இல்லையா?! ரொம்ப நல்லதா போச்சு!. முழுதும் நெய்யிலேயே செய்திங்க, இன்னும் சூப்பர்தான் போங்க‌! :) வீட்டிலே தேவையான எல்லாம் இருக்கா?, அப்ப ஜாமய்ச்சிடுங்க! செய்து பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க வனி! உங்க பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

லக்ஷ்மி ஆனந்த், உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி!
நான் இட்லி மாவில் இதுவரை இனிப்பு பணியார வகை முயற்ச்சித்து பார்த்ததில்லை. ஆனால், இட்லி மாவில், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை பொடியா கட் செய்து, கடுகு, உளுந்து, கடலைபருப்புடன் தாளித்து, மாவில் கலந்து குழிப்பணியார‌மாக செய்து பார்த்திருக்கேன். ரொம்ப நல்லா இருக்கும். விருப்பமானல், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

இளையா,
உங்க பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! நீங்களும் எங்களைப்போல பணியார விரும்பியா?! :) உங்களுக்கு இந்த குறிப்பு ரொம்ப பிடித்திருப்பதில், எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்ப, உடனடியா செய்து சாப்பிட்ருங்க! :) அப்படியே எப்படி இருந்ததுன்னும் மறக்காம இங்க வந்து சொல்லுங்க. மீண்டும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

கேரளாவின் உன்னியப்பம் தான் இந்த நெய்யப்பமா இல்லை அது வேறா..? கருப்பட்டி இருக்கிறது செய்து பார்த்துவிட வேண்டியது தான்.. :)

இந்தமாதிரி பணியாரக்குறிப்பை உன்னியப்பம் என்றும் கேரளாவில சில இடங்களில் சொல்லுவாங்க என்று எனக்கு ரெசிப்பி சொல்லிக்கொடுத்த என் தோழி சொன்னதா ஞாபகம் இருக்கு. இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று எனக்கு சரியா முழுத்தகவல் தெரியாது.
எனக்கு சொன்னவங்க, ஒரிஜினலா வெல்லம் போட்டு செய்யும் ரெசிப்பி இது, ஆனால், ப்ரவுன் சர்க்கரை வைத்து செய்தாலும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க, ஆக நான் அதுப்போல செய்தேன்!. நீங்களும் முயற்ச்சித்து பாருங்கள். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

நெய்யப்பத்தை பார்த்ததுமே சாப்பிடனும் போல இருக்கு.அருமையான குறிப்பு.உடனே செய்து பார்க்க விருப்பம்.

அரிசி மாவு 2 கப் என்று கொடுத்துள்ளீர்கள், 400ml அளவா அல்லது 500ml அளவா.
அதாவது,1 கப் என்பது 200ml அளவா அல்லது 250ml அளவா.

அதற்கு தகுந்தால் போல் ரவை,எள்,தேங்காய் போன்றவை சேர்த்துக் கொள்வேன்.

உங்கள் பதில் கண்டதும் உடனே செய்து விடுவேன்.நன்றி.

நெய்யப்பத்தை பார்த்ததுமே சாப்பிடனும் போல இருக்கு.அருமையான குறிப்பு.உடனே செய்து பார்க்க விருப்பம்.

அரிசி மாவு 2 கப் என்று கொடுத்துள்ளீர்கள், 400ml அளவா அல்லது 500ml அளவா.
அதாவது,1 கப் என்பது 200ml அளவா அல்லது 250ml அளவா.

அதற்கு தகுந்தால் போல் ரவை,எள்,தேங்காய் போன்றவை சேர்த்துக் கொள்வேன்.

உங்கள் பதில் கண்டதும் உடனே செய்து விடுவேன்.நன்றி.

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி லதா! குறிப்பு, உங்களை உடனே செய்யத் தூண்டியதில் ரொம்ப மகிழ்ச்சி! :)

இங்கே நான் குறிப்பிடும் கப் அளவு ‍ 8 oz (250 ml)தான் லதா. கண்டிப்பா செய்து பார்த்து மறக்காம எப்படி இருந்ததுன்னும் சொல்லுங்க. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி.ப்ரவுன் சுகருக்குப் பதிலாக வெல்லம் போட்டு நெய்யப்பம் நீங்கள் விளக்கியபடி செய்தேன்.மிகவும் ருசியாக வந்தது.பையனும் விரும்பி சாப்பிட்டான்.இனி வீட்டில் அடிக்கடி செய்வேன்.

இது போன்று சுவையான குறிப்புகள் நிறைய தரவும்.வாழ்த்துக்கள்

லதா,
மிக்க மகிழ்ச்சி லதா. நீங்க சொன்னபடியே உடனடியா செய்துபார்த்து கருத்தையும் சொல்லிட்டிங்க!
அதிலும், உங்க பையனுக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று படித்ததும், எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு! :)
கண்டிப்பாக, எனக்கு தெரிந்தவற்றை தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். மீண்டும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

Susri madam,
நெய்யப்பம் செய்தேன்.மிகவும் ருசியாக வந்தது.வெல்லம் சேர்த்து செய்தேன்,oil use பண்ணாமல் நெய்யிலேயே செய்தேன்.வீட்டில் உள்ள அனைவருக்கும் ரொம்ப பிடித்திருந்தது.நன்றி.சுவையான் குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

மீதி உள்ளதை,வெளியில் வைத்திருந்து உண்ண முடியுமா?
எத்தனை நாட்கள் வரை வெளியில் கெடாமல் இருக்கும்.
பதில் தரவும் plz.

அன்புடன்,
Raji