மீன் கிரேவி (இஸ்லாமிய சமையல்)

தேதி: July 17, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (5 votes)

இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கப்படும் சுவையான மீன் குழம்பு வகை இது. நாகை, நாகூர் பகுதிகளில் இதனை மீன் சம்பால் என்றும் சொல்லுகின்றனர். இதன் செய்முறையை நமக்காக வழங்கியவர் திருமதி. கமர் நிஷா.

 

மீன் - 4
தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 5
பூண்டு - 10 பல்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் பால் - கால் கப்
எலுமிச்சை பழம் - அரை மூடி
உப்பு - ஒன்றரைத் தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்


 

மீனின் தலை மற்றும் வால் பகுதியை நீக்கி, சுத்தம் செய்து நடுப்பகுதியில் கத்தியால் கீறி விடவும். மிகவும் பெரிய அளவிலான மீன்கள் இதற்கு நன்றாக இருக்காது. கொஞ்சம் பெரிய மீன்களை மூன்று அங்குல நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை வெந்நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து எடுக்கவும். இரண்டு தக்காளி, இரண்டு வெங்காயத்தை எடுத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மீன் துண்டங்களை மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து பிரட்டி வைத்து சுமார் 10 நிமிடங்கள் ஊற விடவும்.
ஊற வைத்த மிளகாயுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள மூன்று வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மீதமுள்ள மூன்று தக்காளிகளையும் சிறு துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய்த்தூளில் பிரட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
மீன் துண்டங்கள் அனைத்தையும் பொரித்து எடுத்தப் பிறகு அதே வாணலியை சுத்தம் செய்து அல்லது மற்றறொரு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நீளவாக்கில் நறுக்கின வெங்காயம், அரைத்த மிளகாய் விழுது போட்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
வெங்காயம் விழுது ஒன்றாய் சேர்ந்து நன்கு வதங்கிய பிறகு நறுக்கின தக்காளி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
பிறகு அதனுடன் தேங்காய் பால் ஊற்றி பிரட்டி விட்டு அதில் பொரித்து எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு லேசாகப் பிரட்டி விடவும்.
வாணலியை ஒரு மூடி கொண்டு மூடிவிட்டு சுமார் ஒரு நிமிடம் வேகவிடவும். தீயின் அளவு மிதமாகவும், சீராகவும் இருக்க வேண்டும்.
ஒரு நிமிடம் கழித்து திறந்து எலுமிச்சை பழம் பிழிந்து விட்டு மேலும் மூன்று நிமிடம் மூடி வைக்கவும்.
அதன்பிறகு திறந்து, மீன் உடைந்துவிடாமல் கவனமாக பிரட்டி விட்டு இறக்கி விடவும். இதனை சூடான சாதத்துடன் பரிமாறவும்.

ஒருமுறை செய்து பார்த்துவிட்டு அடுத்த முறை செய்யும் போது காரம், உப்பு அளவுகளைத் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்புள்ள கமர்நிஷா
இன்று மீன் கிரேவி செய்தேன்.

முதலில் செய்வதால் 4பீஸ் மீன் மட்டும் போட்டு செய்தேன்.அதும் எனக்கு பொரித்த மீன் தான் பிடிக்கும்.குழம்பில் போட்ட மீன் பிடிக்காது.அதனால் 4பீஸ் மட்டும் போட்டு செய்தேன்.பிறகு பார்த்தால் இந்த கிரேவியில் இருந்த மீனும் சுவையுடன் இருந்தது.தோசைக்கு தொட்டுக் சுவையாகவும் எளிதாகவும் இருந்தது.கிரேவியுல் மீன் உடையாமல் இருந்தது.

அட்மின் அண்ணாவிற்க்கும் நன்றி.இதை குறிப்பிட்டு தெரிவிதபடியால்தான் எனக்கு இந்த குறிப்பு செய்யும் ஆர்வம் வந்தது.மிகவும் நன்றி.

அன்புடன் பர்வீன்.

I tried this recipe today. It was like fish in a onion-tomato chutney. The gravy did not match with fish.Please don't go for this recipe friends!

Prabha

என்னங்க இது உங்களுக்கு முன்னாடி ஒருத்தர் செய்து சுவையா இருக்குன்னு வந்து சொல்லியிருக்காங்க. உங்க டேஸ்ட்டுக்கு பிடிக்காம போயிருக்கலாம் அல்லது நீங்கள் ஏதாவாது ஸ்டெப்பில் தவறு செய்து இருக்கலாம். மீன் கிரேவியுடன் ஒட்டாமல் இருப்பதற்கு காரணம் மசாலா சரியாக வதங்காமல் இருக்கலாம் அல்லது சரியாக கொதிக்காமல் இருந்திருக்கலாம். அதுக்காக இந்த ரெசிப்பியை ட்ரி பண்ணாதீங்கன்னு எல்லாம் கமென்ட் கொடுக்காதீங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இந்த மீன் கிரேவியை சிங்கப்பூர் மலேஷியா இந்தோனேசிய நாடுகளில் மீன் சம்பால்னு சொல்லுவாங்க. அத்தனை ருசியா இருக்கும். மிளகாய் விழுதை வதக்குவதில்தான் இதன் டேஸ்டே இருக்கு. தைரியமா செய்து பாருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மக்களே!
இதற்கு எந்த வகை மீனை பயன்படுத்தி செய்ய வேண்டும்? தெரிந்தால் அந்த வகை கிடைக்கிறதா எனப் பார்க்கலாம்... தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.. :)