வாழைப்பூ கீரைப் பொரியல்

தேதி: July 17, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

நல்ல உணவு என்பது சுவைக்காக மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக இருக்கவேண்டும். மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த வாழைப்பூ, கீரைகளைக் கொண்டு செய்யப்படும் இந்த பொரியல், நாவிற்கு சுவையினையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. இந்த செய்முறையை நமக்காக வழங்குபவர், செட்டிநாட்டு சமையலரசி திருமதி. சித்ரா செல்லத்துரை அவர்கள்.

 

சிறிய வாழைப்பூ - ஒன்று
எதாவது ஒரு வகை கீரை - ஒரு கட்டு
துவரம் பருப்பு - ஐம்பது கிராம்
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 20
பச்சை மிளகாய் - நான்கு
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - இரண்டு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - இரண்டு தேக்கரண்டி


 

முதலில் துவரம் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி முக்கால் வேக்காடு வேக வைக்கவும்.
வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
நரம்பு நீக்கிய வாழைப்பூ இதழ்களை மிக்ஸியில் போட்டு மூன்று சுற்று சுற்றி துருவல் போல் ஆனதும் மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். கீரையை ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் போட்டுத் தாளிக்கவும்.
வெடித்து அடங்கியதும் நறுக்கின சின்ன வெங்காயம், கீறின பச்சை மிளகாய் சேர்க்கவும்.
அவை வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து உப்பு போட்டு கிளறிவிடவும்.
ஐந்து நிமிடம் நன்றாக கிளறி விட்ட பிறகு நறுக்கி வைத்துள்ள கீரையைச் சேர்க்கவும்.
மேலும் ஐந்து நிமிடம் கழித்து வேக வைத்த பருப்பை போட்டு மூன்று நிமிடம் கிளறி பின்னர் இறக்கவும்.
விருப்பமுள்ளவர்கள் இறக்குவதற்கு சற்று முன்பு ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கலாம். இப்போது சத்தான வாழைப்பூ கீரைப் பொரியல் தயார். சுவைத்துப் பாருங்கள்.
இந்தக் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கி, அதன் செய்முறையையும் படங்களுடன் விளக்கியுள்ளவர், குவைத்தில் வசிக்கும் திருமதி. சித்ரா செல்லதுரை அவர்கள். அறுசுவை நேயர்களுக்காக நூற்றுக்கும் மேலான செட்டிநாடு மற்றும் பாரம்பரிய தமிழ் உணவுகளை வழங்கியுள்ள இவர், தொடர்ந்து ஏராளமான குறிப்புகளை படங்களுடன் உங்களுக்கு தர இருக்கின்றார்.

பொதுவாக இந்தப் பொரியலை எங்கள் ஊர் பக்கங்களில் முருங்கைக் கீரை சேர்த்துத்தான் செய்வர்கள். ஆனால் வெளிநாடுகளில் இந்தக் கீரை கிடைக்காததால் நான் மற்ற கீரைகளை பயன்படுத்தி செய்ய ஆரம்பித்தேன். சுவை நன்றாகவே இருந்தது. எந்தக்கீரை வகையை வேண்டுமானலும் சேர்க்கலாம். ஆனால் முருங்கைக் கீரை கிடைக்கும் நம்மவர்கள் அதனை சேர்த்தால் சுவை மிக நன்றாக இருக்கும்.

- சித்ரா செல்லத்துரை


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்கு வாழைப்பூவை எப்படி சமைப்பது என்று தெரியாது ஆனால் உங்களின் வாழைப்பூ கீரைப் பொரியல் செய்முறையை கொண்டு செய்து பார்த்தேன் ஆ..ஆ என்ன ஒரு நல்ல சுவை.அணைவராலும் பாரட்டப்பட்டேன்.உங்களின் சமையலுக்கு மிகவும் நன்றி.