பட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?

அன்பு தோழிகளுக்கு என் முதல் வணக்கம். பட்டியை துவங்க வேண்டிய கட்டாயம் இன்று எனக்கு... அதனால வனியேவா மீண்டும் நடுவர்ன்னு கோவிக்காம எல்லாரும் வாதிட வரணும்னு அன்போடு கேட்டுக்கறேன். :)

இன்றைய தலைப்பு நம் தோழி ஆயிஸ்ரீ அவர்களுடையது:

பட்டிமன்றங்கள் பொழுதுபோக்காக இருத்தல் சுவையா? அல்லது அரிய பல கருத்துக்களோடு, முக்கிய செய்திகள் பற்றிய விவாதமாக இருத்தல் சுவையா?

மிக்க நன்றி ஆயிஸ்ரீ. :)

தலைப்பை நான் விளக்கவே தேவையில்லை, அதுவே விளக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே ஏற்கனவே விவாதித்த / கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை எடுத்துக்காட்டாக பேச கூடாது என்பதே விதிமுறை. காரணம் தலைப்பு கொடுத்தவர் மனதை காயப்படுத்திட கூடாது. அதனால் இந்த தலைப்பு, அந்த தலைப்பு, அவசியமா இல்லையான்னு போகாம பொதுவா பொழுதுபோக்கானதா இருக்கனுமா, கருத்தோட இருக்கனுமான்னு மட்டும் பேச வேணும்.

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

தனா... வாங்க. என்ன வாழ்த்து சொல்லிட்டு போயிட்டீங்க, அணி தேர்வு செய்து, வாதங்களோடு வாங்க. நன்றி.

முஸ்டாகியா... நன்றி.

தான்யா... முதல் ஆளாக பட்டியில் பதிவிட்டிருக்கீங்க. பயனுள்ளதா இருக்கனும் என்ற அணிக்கா உங்க ஓட்டு.... கலக்குங்க. நன்றி.

தர்ஷினி... மிக்க நன்றி. அணியை தேர்வு செய்து வாதத்தோடு வாங்க.

கல்பனா... வரும் போதே தெளிவா பயனுள்ளவை என்ற அணிக்கு ஓட்டு போட்டு வாதத்தோடு வந்திருக்கீங்க. உண்மை தான் பட்டிமன்றங்கள் எல்லாருக்கும் பேசும் திறமையை கொடுக்குது. வாங்க இன்னும் வாதங்களோடு பட்டிமன்றம் எப்படி இருக்கனும்னு. நன்றி.

பூங்காற்று... கலக்கிட்டீங்க முதல் பதிவே... தெரியாத விஷயங்களை தெரியப்படுத்தும் விதமா, தப்பு எது சரி எதுன்னு ஆராயும் விதமா இருக்கனும்னு சொல்லிருக்கீங்க. பயனுள்ளதேன்னு சொல்ல ஏகப்பட்ட ஓட்டு விழும் போலிருக்கே. தொடருங்க. நன்றி.

உத்ரா... நீங்களும் பயனுள்ளவை அணியா. சூப்பர். பலம் கூடுது. சரியா சொன்னீங்க, நாம என்ன தான் படிச்சு ஒரு கருத்துக்கு வந்தாலும், மற்றவர்கள் அனுபவம், எடுத்துக்காட்டுகள் தான் நமக்கு வழிகாட்டி. பல நேரம் பட்டிமன்றத்தில் நான் உள்ளே வரும் போது இருக்கும் அபிப்ராயம், பட்டி முடியும் போது மாறிப்போகும். பிறர் கருத்துக்கள் தரும் மாற்றம். தொடருங்க, காதை தீட்டி காத்திருக்கேன். நன்றி.

லாவண்யா... அடடே... இது எப்போ நடந்தது!! வராத ஆட்களெல்லாம் வரீங்க. ரொம்ப சந்தோஷம் லாவண்யா. உங்க முதல் பட்டிமன்றம்... கலக்குங்க. அப்பா... இன்னொரு அணிக்கு ஆள் கிடைச்சாச்சு. உண்மை தான் டிவியில் பட்டி மன்றம் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க தானே விருமப்றோம். கடைசியில் தீர்ப்பு யார் பக்கம்னு கூட கவலை படுவதில்லையே... யார் நல்ல நகைச்சுவையா பேசி, பாடி மகிழ்விக்கறாங்களோ அவங்க தான் நல்லா பேசினாங்கன்னும் சொல்றோம்.... கருத்தே இல்லைன்னாகூட. தொடருங்க. வாழ்த்துக்கள்.

பூங்காற்று... எதிர் அணி... கேட்டுக்கங்க... நகைச்சுவை வேணாம்னு சொல்லலயாம், ஆனா கருத்து தான் முதலிடம்னு சொல்றாங்க பூங்காற்று. சரி தானே பூங்காற்று? பதில் தருவாங்க, காத்திருப்போம்.

தோழிகளே... மகள் நலம். மகளிடம் பேசி சற்று நிம்மதியாயிட்டேன். வாங்க பட்டியை தொடருங்க. முடியும் போதெல்லாம் வந்து படிச்சு பதிவும் போடுறேன். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன நடுவரே இப்படி கேட்டுட்டீங்க.....என்னை பட்டிக்கு வர தூண்டியவரே நீங்கள் தானே.....விட்டுடுவேனா?

இதையே தான் சொல்கிறேன். சொல்ல வந்த கருத்தை மக்களுக்கு புரியும் படியாக சொல்லணும். அதை எப்படி சொல்கிறோம் என்றெல்லாம் இல்லை. இப்போ பாருங்க இந்த பஞ்ச் டைலாக் எப்படி சக்கை போடு போடுது. இபெல்லாம் ஹீரோ என்றால் பஞ்ச் டைலாக் பேச வேண்டிய கட்டாயமும் இருக்கு. அந்த பஞ்ச் டைலாக் உத்து கவனித்தால் அதில் ஆழமான தத்துவம் இருக்கிறது. ஆழமான கருத்துக்களை மக்களுக்கு புரியக்கூடிய எளிமையான வார்த்தைகளில் தந்ததால் அது மக்களிடம் அதிகம் வரவேற்ப்பு பெற்றது. அதை கடை பிடிப்பவர்களும் ஏராளம். அப்போ நகைச்சுவையாகயோ (நாங்க வெறும் ஜோக் மட்டும் அடிப்பதை பற்றி சொல்லவே இல்லையே!) அல்லது வாழ்வில் நடக்கும் சாரசரியான நிகழ்வுகளை எடுத்துக் காட்டி சொல்லும் போது அந்த மெசேஜ் மக்களிடம் எளிதாக போய் சேர்கிறது.

முன்பெல்லாம் பார்த்தீங்கனா பட்டிமன்றம் என்றாலே இலக்கிய தமிழில் பேசுவாங்க. எத்தனை பேர் அதை உட்கார்ந்து பார்த்திருக்கிறோம். இன்று சொல்லுங்கள் பார்ப்போம். ஏன் அன்று பட்டிமன்றத்தில் தேவையான விஷங்களை பற்றி விவாதிக்க வில்லையா? சாலமன் பாப்பையா அவர்களுக்கு முன் யாருமே பட்டிமன்றம் நடத்தவில்லையா? அவருக்கு முன் பட்டிமன்ற தலைவராக இருந்தவர்களை எத்தனை பேருக்கு நன்றாக தெரியும். பெரியவர்களை விடுங்கள் எத்தனை பொடிசுகளுக்கு அவரை தெரியும். அவரின் பட்டிமன்றம் என்றால் வீட்டில் உள்ள நண்டு சிண்டுலேர்ந்து எல்லோருக்கும் உட்கார்ந்து பார்க்கிறோமா இல்லையா? பட்டிமன்றங்கள் பொழுதுபோக்காக மாறியதனால் தான் அதில் சொல்லப்படும் கருத்துகள் மக்களுக்கு எளிதில் சென்றடைந்து என்று யாராலும் மறுக்கவே முடியாது. இவ்வளவு ஏன் எந்த ஒரு கருத்தையும் ஜனரஞ்சகமாக சொன்னால் தான் அது மக்களுக்கு எளிதில் போய் சேரும். இல்லையென்றால் இவ்வளவு ஆடம்பரமான விளம்பரங்கள் தேவையா.....அப்பொழுதிலிருந்து இப்போ வரை உபயோகிக்கும் நிர்மா, சபீனா, விக்கோ போன்ற பொருட்களின் விளம்பரம் எவ்வளவு மாறியிருக்கிறது. பொருள் என்னமோ ஒன்றே தான் அதை பாட்டாக (பொழுதுபோக்காக) இல்லாமல் இந்த பொருளை இதற்க்கு உபயோகிக்கலாம் வாங்கி பாருங்கள் என்று சொன்னால் அது சரியாகுமா? எந்த ஒரு மெசேஜும் ஜனரஞ்சகமாக சொன்னால் தான் எடுபடும்.

அன்பே சிவம். இது ஒரு உண்மை தத்துவம். இதை ஜனரஞ்சகமாக எடுத்து சொன்னதால் மட்டுமே மக்களால் ஏற்றுக் கொள்ள பட்டது. அதே போல தான் நம் பட்டிமன்றங்களும் கருத்துக்களை மக்களுக்கு எப்படி எடுத்து செல்கிறோம் என்பதில் தான் அதன் வெற்றியே இருக்கிறது. இப்போ பாருங்க எடுத்துக்காட்டே இல்லாமல் படிக்கும் மற்றவருக்கு சுவாரசியமே இல்லாமல் வாதிட்டால் யாருக்காக இந்த பட்டிமன்றம் நடத்தபடுகிறதோ அவர்களுக்கு அந்த கருத்து சென்றடையாமலே போய் விடும். அதனால் கருத்துகளையும் இப்படி தான் சொல்லவேண்டும் என்றில்லாமல், சொல்லவந்த கருத்துக்கள் மக்களை சென்றடைய எது ஊன்றுகோலாக இருக்கிறது அதுவே சிறந்தது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பட்டி மன்றங்கள் பயனுள்ளதா?பொழுதுபோக்கா? அருமையான தலைப்பு நம்ம தோழி வனிதா (நடுவர்) அவர்களுக்கு வாழ்த்துக்கள் நான் முதன் முறையாக பட்டிமன்றத்துக்குள் வருகிறேன் பட்டிமன்றம் உண்மையில் பயனுள்ளதே நமக்கு தெரியாத பல கருத்துக்களை அலசி ஆராய்ந்து நாம் மட்டும் பயன் பெறாமல் நம்மை சார்ந்த அனைவரும் பயனடையச்செய்கிறோம் சில நேரங்களில் இது நல்லது இது கெட்டது இதை செய்யலாம் இதை செய்யக்கூடாது என எடுத்துரைக்கிறது நல்ல வழிகாட்டுதல் போல் அமைகிறது நமது தாய் தந்தை நமக்கு எவ்வாறு நல்வழியை காட்டுகிறார்களோ அதைப்போல, நாம் அன்னப்பறவையைப் போல வாழ வேண்டும் என சொல்லாமல் சொல்கிறது இந்த பட்டி மன்றங்கள்! அன்னப்பறவையிடம் பாலையும் தண்ணிரையும் கலந்து வைத்தால் அது தண்ணிரை ஒதுக்கி விட்டு பாலை மட்டும் குடிக்குமாம் அதைப்போல நாமும் நம் வாழ்வில் இந்த பட்டிமன்றங்கள் வாயிலாக நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்ட விசயங்களை தூக்கி தூர எறிந்துவிட்டு வாழ வேண்டும் . பட்டிமன்றங்கள் பயனை மட்டுமே தருகின்றன பொழுதுபோக்குக்காக அல்ல அல்ல அல்ல ரத்தினச்சுருக்கமாகக் கூறி வாய்ப்பளித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி கூறி எனது உரையை முடிக்கிறென் நடுவர் அவர்களே! அனைவரும் வாழ்க வளமுடன் நன்றி

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

இதெல்லாம் ரொம்ப ஓவரு... பட்டிமன்ற இழையை உள்ள அனுப்புறது. :(

லாவண்யா.... வர சொல்லி பல காலமா சொன்னோம்... இப்ப தானே வரீங்க... அதுக்கு தான் ஆச்சர்யம் :) பாருங்கப்பா... விளமபரம் கூட காலத்துக்கு ஏற்றபடி மற்றவரை ஈர்க்கும் விதமா மாறி இருக்கு... அது போல பட்டிமன்றங்களூம் பொழுதுபோக்கா, சுவாரஸ்யமா சிரிக்க வைக்கனும்... அப்ப தான் எல்லாரும் வருவாங்கன்னு சொல்லிருக்காங்க... எந்த கருத்தும் கருத்தா மட்டும் இருக்க கூடாது... ரீச் ஆகனும்னா அதை காமெடியா கொண்டு போகனும்னு சொல்லிட்டாங்க.

கவிதா... வாங்க. பட்டியில் முதல் பதிவா... வாழ்த்துக்கள். அன்னப்பறவை மாதிரி நாம் நல்லதை எடுக்கனும், பட்டிமன்றங்கள் பொழுது போக்கு அல்ல, பயனுள்ளவை மட்டுமேன்னு சொல்லிட்டாங்க. ஆனா இதோட விட மாட்டோம் கவிதா... தொடருங்க உங்க வாதத்தை.

என்னங்க... லாவண்யா மட்டும் ஒரே ஆள நின்னு ஒரு அணிக்கு வாதாடுறாங்க... யாரையும் காணோம்.

பட்டி தலைப்பை இன்னொரு முறை நான் விளக்கிடுறேன்...

பட்டிமன்றங்க பயனுள்ளதா, இல்லையான்னு தலைப்பு இல்லை... பட்டிமன்றங்கள் பயனுள்ளதா, கருத்து மோதலா, விவாதமா இருந்தா நல்லதா? இல்லன்னா நகைச்சுவை கலந்து பொழுதுபோக்கா இருந்தா நல்லதா என்பது தான் தலைப்பு. அதாவது நகைச்சுவை கலந்த தலைப்புன்னா அது எந்த கருத்தையும் மையமா கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை... பொழுது போக்கா மட்டுமே இருக்கலாம். ஆனா கருத்துக்கள் நிரைந்ததா இருக்கனும்னா நகைச்சுவை இங்கே முக்கியமில்லை (இருக்கவே கூடாதுன்னு அர்த்தமில்லை), சொல்லபடும் கருத்துக்கள் மிக முக்கியம், சில சீரியஸான விஷயங்களை பற்றிய வாதமாக இருக்கலாம்.

புரிஞ்சுடுச்சு தானே??? வாங்க இருப்பகமும் வாதிட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டிமன்றம் பொழுது போக்கே என்று வாதடுறேன்பா நான். நடுவரே எனக்கு தலைப்பு புரிஞ்சிடுச்சு,,,,,.எந்த காலத்திலப்பா நாம இருக்கோம். எந்த விஷயத்தையாவது எல்லாரையும் கூப்பிட்டு உட்கார வச்சு( காசு கட்டி இல்லங்க, சும்மா ப்றீனாலும்)அறிவுரை சொன்னா யாராவது ஒரு பத்து நிமிஷத்துக்கு மேல அந்த இடத்துல நெளியாம உட்காருவாங்களாஅ. நடுவரே. எதையுமே நகைச்சுவையா சொன்னா தானே கேக்கவும் நல்லா இருக்கும். பட்டிமன்றங்கள் பயனுள்ளவையா மட்டும் இருந்தா அதை யாரும் தேடி போய் அவ்ளோ ஆர்வமா பார்க்க மாட்டாங்க. பொழுதுபோக்கா இருந்தா எவ்ளோ கூட்டம் வரும். அப்பப்பா அந்த பட்டிமன்றத்த டிவில காண்பிச்சா ஒரே மக்கள் கூட்டம் சிரிச்சிட்டே இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நம்ம நகைச்சுவையா சொல்லிட்டோம்னா மக்களை புரிய வைக்க நம்ம திணற வேண்டிய அவசியம் இருக்காது. எதிரணியினர் பயனுள்ளவையா இருந்தா நல்லதுனு சொன்னா அப்ப எதுக்குங்க பட்டிமன்றம். வெறும் சொற்பொழிவு மாதிரி உரையாடிட்டு போகலாமே. நான் என்ன சொல்ல வரேன்னா பட்டிமன்றம் பொழுதுபோக்குதாங்க. இந்த காலகட்டத்தில எவ்ளோ ப்ரஷர் மனுசனுக்கு. அதையெல்லாம் குறைக்க கொஞ்சமாவது சிரிச்சு மனச ரிலாக்சா வைக்க பட்டிமன்றம் உதவனுங்க. பயனுள்ள கருத்தா மட்டும் சொல்றதுக்கு நிறைய ப்ரோகிராம் இருக்குங்க. இப்ப அதுல கூட கொஞ்சம் கொஞ்சம் நகைச்சுவையா பேச ஆரம்பிச்சாட்டாங்க.இந்த காலகட்டத்தில எவ்ளோ ப்ரஷர் மனுசனுக்கு. அதையெல்லாம் குறைக்க கொஞ்சமாவது சிரிச்சு மனச ரிலாக்சா வைக்க பட்டிமன்றம் உதவனுங்க. பயனுள்ள கருத்தா மட்டும் சொல்றதுக்கு நிறைய ப்ரோகிராம் இருக்குங்க. இப்ப அதுல கூட கொஞ்சம் கொஞ்சம் நகைச்சுவையா பேச ஆரம்பிச்சாட்டாங்க.அதனால நான் பட்டிமன்றம் பொழுபோக்கு தான்னு சொல்றேங்கோ.

நடுவர் அவர்களே !!
பட்டிமன்றம் , பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் , பயன்னுள்ளவையா இருக்கறதுனால தானே இன்னிக்கும் நிறைய பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியா இருக்கு ! ( ஏன் அறுசுவையில் பதிவு பட்டி கூட என்னை சுண்டி இழுத்ததே-- இந்த அன்புத் தோழிகளின் அருமையான வாதப் பிரதி வாதங்களினால் தான் )உண்மைங்க .. உண்மை! கணினி யை பதினாறு வருஷங்களாவும் , வலை யை ரெண்டு வருஷமாவும் வைத்துள்ள எனக்கு இது வரை எதன் மீதும் இப்படி ஒரு ஈர்ப்பு வந்ததில்லை ...அப்படிப்பட்ட என்னை பயனுள்ள கருத்துக்களால் கவர்ந்த பட்டி--- மிகபயனுள்ளது, தேவையானது , உருப்படியானது ,ஒரே பிரச்சினையை வித வித கோணத்தில் ஆராய வல்லதுன்னு சொல்லிகிட்டே போவேன்...அதுல ஒண்ணு நகைச்சுவையாவும் இருக்கலாம்....
இப்போ வாழ்க்கையை எடுத்துகிட்டிங்க ன்னா இன்பம் துன்பம் ரெண்டும் இருக்கு .. இது தப்பு , இது சரின்னு எதையும் நாம பிரிக்க முடியாது ..ஒருத்தருக்கு துன்பம் தரக்கூடிய ஒண்ணு இன்னொருத்தருக்கு இன்பமா இருக்கலாம்..
இப்போ பட்டி தலைப்புகளில் ரெண்டு எதிர்மறையான , முரணுள்ள விஷயங்களில் நாம ஒத்தியோ , எத்தியோ வாதாடறோம்.. அப்போ நாம
நம்ம நியாயத்தை தான் சொல்லுவோம் ..எதிர் தரப்பு அதுக்கு பதில் தருவாங்க!!நீதிமன்றத்துக்கும் பட்டிக்கும் என்ன வித்தியசம்னா நீதி கடைசில சொல்லுவாங்க !!பட்டில நடுவர் ரெண்டு பக்கத்தையும் ஆற்றுப்படுத்துவாங்க !! எவ்வளவு அருமையான வார்த்தை பாருங்க இந்த ஆற்றுப்படுத்தல்!!! அதை செய்யறதுக்கு தனி திறமை வேணுங்க !! யாரையும் நோகடிக்காம , எல்லா தரப்பு நல்ல விஷயங்களையும்-- சாமானியர்களும் புரிஞ்சுக்கர விதமா , வாக்குவாதத்தை --விதண்டா வாதமா மாற்றாம , நல்ல விதமா மாற்றணும்!!! அதுல நம்ம நடுவர் பழம் தின்னு கொட்டை போட்டவங்க 
இந்த வாதங்கள் ,கருத்துச் செரிவுள்ளதா , மாற்ற லெக்சர் அடிச்சா சில சமயங்களில் எடுபடாதுன்னு தான் ..இடியாப்ப .சிக்கலான விஷயங்களையும் -- மசாலா கலந்த நூட்ல்ஸ் ஆ மாத்தினா கேக்காதவங்க கூட சிரிட்டே கேட்பாங்க...ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!! பேருக்கு பேரு , கைத்தட்டல் , எளிமையா சொல்றது னால் மக்களுக்கு புரியும் படியா இருக்கு...அதுக்காக சீரியஸ் விவாதங்கள் அலுப்பூட்டும் நினைக்காதீங்க!!அது உங்க மன நிலையை பொறுத்தது..
விவாதங்கள் கருத்தோடவும் ஏன் கண்ணியமாகவும் இருக்கணும் .. சில சமயம் சிரிப்பு மூட்றேன்னு வீட்டுல இருக்கற பொண்டாட்டியை வம்பிழ்த்து அவங்களை வெச்சு காமெடி பண்றதா நினைச்சுக்கிட்டு ..ஏதோ சொல்லி நம்மை சிரிக்க வைப்பாங்க.. எனக்கென்னமோ அவங்களை நினைச்சு தான் சிரியஸ் காமெடியா தோணும்.. பொது மேடையில சொல்லக்கூடிய விஷயங்கள் நு ஒண்ணு இருக்கறதே மறந்து போச்சே பாவம்..( இவர் சொன்னதை உண்மைன்னு நம்பி சில பேர் , இல்ல வேணும்னே சில பேர் அவங்க மனைவியை தனியா பார்க்கும் போது--" என்ன மேடம் சாரு சொன்னாரேம்பாங்க..ஹி ஹி ன்னு வழிஞ்சாலும் கோபமே வராத அவங்களுக்கும் நிச்சயமா கோவம் வரும் இல்லையா)

இதுவா , அதுவா ன்னு வர பட்டி தலைப்புகளில் நாம நம் கண்ணுக்கு நம் விரும்பர கலர் கண்ணாடி போட்டு பார்த்து கருத்தை சொல்லுவோம்..அது தப்பில்லை, சிலருக்கு அபிப்ராயங்கள் வேறு விதமா இருந்தாலும், ஓஹோ இதை இந்த மாதிரி பார்க்கணுமா –நமக்கு இப்போ நல்லா கிளியர் ஆயிடுச்சென்னு மீண்டும் மிண்டும் பார்ப்பாங்க!!
இப்போ சொல்லுங்க நடுவர் அவர்களே !(உங்க கண்ணே உங்களுக்கு கண்ணாடி தான் )
பட்டி எஜூகேடிவ் ஆ என்டர்டெயின்மென்ட் ஆ

நீ.........ண்ட விடுப்புக்கு பின் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் இது. அதுவும் பட்டிமன்றத்தைப் பற்றியே பட்டிமன்றம்! எத்தனை சுவாரசியம் பாருங்கள்.

அனைவருக்கும் வணக்கம். அடடா நம்ம நாட்டாமைக்கு... மன்னிக்கவும் நடுவருக்கு ஏன் இந்த சந்தேகம். பட்டிமன்றங்கள் பொழுதுபோக்கு அம்சங்களோடு கருத்துக்களையும் கூறினால்தான் அது பெரும்பான்மையினரைச் சென்றடையும். வெறும் விவாதமாக நடந்தால் குறிப்பிட்ட சிலரை மட்டுமே அது ஈர்க்கும். சுருக்கமா சொன்னால் வெறும் விவாதமாக இருக்கும் பட்டிமன்றங்கள் ஆர்ட் படம் மாதிரி! கொஞ்ச பேருக்கு மட்டும்தான் அது புரியும், பிடிக்கும். ஆனா நகைச்சுவை மசாலா கலந்த பட்டிமன்றங்கள் நம்ப இயக்குனர் ஷங்கரின் சமூக அக்கறையுள்ள கமர்ஷியல் படங்கள் மாதிரி! பெரும்பான்மையோருக்குப் பிடிக்கும் சிந்திக்கவும் வைக்கும்.

ஆர்ட் படமெல்லாம் அறிவு ஜீவிகளுக்குத்தான். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு கமர்ஷியல்தான் புரியும் பிடிக்கும். இப்ப நடுவருக்கு புரிஞ்சிருக்குமே பட்டிமன்றங்கள்னா எப்படி இருக்கணும்னு :)

சும்மா கருத்துக்களா வழவழா கொழகொழான்னு கொட்டினோம்னா வந்துட்டான்யா கருத்து கந்தசாமின்னு இடத்தைக் காலி பண்ணிடுவாங்க. அதையே கொஞ்சம் நகைச்சுவை இனிப்பு கலந்து ஜனரஞ்சகமா சொன்னோம்னு வச்சுக்கோங்க பட்டிமன்றத்தோட ஹிட் டேட் எகிறிடும்ல!

முன்னாடி பட்டிமன்றங்கள்னா கம்பன் கழகம் மற்றும் இலக்கிய கூட்டங்களில்தான் நடக்கும். அது மிகச்சிலரையே சென்றடைந்தது. வந்தாரு நம்ப ஹீரோ சாலமன் பாப்பையா... வட்டார வழக்கில் அவருடைய நகைச்சுவையான பேச்சு பட்டிமன்றங்களை பட்டிதொட்டிகள் வரை கொண்டு சென்றது. பல நல்ல கருத்துக்களும் செய்திகளும் கூடவே அம்மக்களைச் சென்றடைந்தது.

இப்போ நம்ப அறுசுவைப் பட்டிமன்றங்கள் கூட வெறுமனே கருத்துக் களங்களாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்க முடியாது. நமது தோழிகள் அருமையான நகைச்சுவை உணர்வோடு கலந்து அவர்களது கருத்துக்களையும் வாதங்களாக கொட்டியதால்தான் பட்டிமன்றம் இன்று சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இல்லேன்னா அறுசுவை"ப் பட்டி மன்றம் வெறும் "அறுவை"ப் பட்டிமன்றமாக காணாமல் போயிருக்கும்.

ஆகவே நடுவரே பட்டிமன்றங்கள் காய்ந்து போன பாலை நிலமாக வறணட கருத்துக்களமாக இருப்பதை விட அழகு கொஞ்சும் பசுமை நிறைந்த நகைச்சுவை நிறந்த விவாத களமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை ஐ எஸ் ஐ முத்திரை பதித்த "ஆணி"த்தரமா "நட்டுத்"தரமாக "போல்ட்டு"த்தரமாக அடித்துக் கூறுகிறோம் :)

இன்னும் வருவோம்ல!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களே எதிரணி அரைத்த மாவையே திரும்பத்திரும்ன்ப அரைத்து “நகைச்சுவையுடன் சொன்னால் எல்லாரையும் கவரலாம் பஞ்ச் டயலாக் பேசினால் மக்கள் மனதில் நாற்காலி போட்டே உட்காரலாம்னு எல்லாம் சொல்றாங்க” நாமும் எஆற்றுக்கொள்கிறோம் அதாவது பயனுள்ள வாதப் பிரதிவாதங்கல் நகைச்சுவைய்டன் மட்டுமல்ல பல்சுவையுடனும் இருக்க வேண்டும் அப்போதுதான் அவை மக்களை சென்றடைவதோடுமட்டுமில்லாம்ல் பலரின் வாழ்க்கையில் திருப்பு முனைகளைக்கூட ஏற்படுத்தியிருக்கின்றது, ஆனால் பொழுது போக்கிற்காக பட்டிமன்றங்கல் நடத்தப்படுமானால் அப்போதைக்கு வயிறு வலிக்க சிரிப்போம் எண்ணிப்பார்த்தால் ஏற்றுநடக்க எதுவுமே இருக்காது , வாதிட மேலும் விடயம் இருந்தாலும் வேலைப்பளு காரணமாக இப்போ விடை பெறுகிறேன் மீண்டும் தொடர்வதற்காக, இப்படிக்கு பூங்காற்று.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நடுவரே எதிரணி அரைச்ச மாவையே அரைக்கிறோம்னு சொல்றாங்களே. வெறும் கருத்துகளோட, விவாதங்களோட மட்டுமே பேசினா தானே அரைச்ச மாவை அரைச்ச மாதிரி இருக்கும். நகைச்சுவையா சொன்னா அந்த மாவில பணியாரம் , இட்லி , தோசை இப்படி எம்புட்டொ வெரைட்டியா கிடைக்கும்ல. நகைச்சுவையா சொன்னா மக்களுக்கு, மக்களும் ரசிச்சு சிரிப்பாங்கள்ள. என்ன நான் சொல்றது,.என்ன உஷாரா சொல்லுட்டாங்கப்பா. எங்கள பார்த்து. மக்களை சந்தோஷப்படுத்துறது மட்டுமில்லாம அதுல கொஞ்சம் கொஞ்சம் கருத்த சொன்னா தானே கேக்கவும் நல்லா இருக்கும்.பெரியவங்க ஒரு பழபொழி சொல்லி கேட்டுருக்கேன்."பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்கிறான். இல்லாதவன் என்ன பண்ண ". எந்த ஒரு விஷயத்தையும் புரியிர மாதிரி சொல்லலன்னா எங்க அம்மம்மா கூட சொல்லும். இது எதுக்கு சொல்றேனா நிறைய விஷயங்கள தெரிஞ்சு வச்சிருக்கிறவங்க கிட்டா வேணா கருத்தா சொன்னா கேக்க சான்ஸ் இருக்கும். புரிய சான்ஸ் இருக்கும். இதே சாமானிய மக்கள்கிட்ட ஒரு விஷயத்த சொல்ல நகைச்சுவை அள்ளி தெளிச்சு, நல்ல பொழுதுபோக்கா சொன்னா தானே அவங்களுக்கும் புரியும். அப்படி சொன்னா அவங்களுக்கும் ஓ அப்படியா அத தான் சொல்ல வராங்களானு ஈஸியா க்ளிக் ஆகிரும்ல. ஆஹ என்ன சொல்றேன்னா பட்டிமன்றம் நகைச்சுவையோட இருப்பதே சிறந்ததுங்கிறேன். .

அட போங்க நடுவரே! எல்லாத்துலயும் கருத்து கருத்து கருத்துன்னா வாழ்க்கை போரடிச்சுப் போயிடாதா?

என்ன நடுவரே இது காலையில் எழும்பி எப்படா யாருடா வாழ்க்கைக்கு கருத்து சொல்லுவாங்கன்னு இருந்தா வாழ்க்கையில் ஏது சுவாரசியம்? அப்படியே பட்டிமன்றங்கள் கருத்துள்ளவைகளாக மட்டுமே நடந்து விட்டால் எல்லாரும் அந்தக் கருத்துக்களை அப்படியே ஏத்துக்கிட்டு வாழ்க்கையில் முன்னேறிடுவாங்களாக்கும்! அப்படீன்னா எத்தனையோ மகான்கள் பிறந்த இந்த திருநாட்டில் அவர்கள் சொன்ன நல்ல கருத்துக்களை எல்லாம் கேட்டு அரசியல்வாதி முதல் சாமானிய மக்கள் வரைக்கும் உத்தம புத்திரர்களாக அல்லவா இருந்திருக்க வேண்டும். அப்படியா இருக்காங்க?!

லியோனி அவர்களின் சினிமா பட்டிமன்றங்கள் பட்டி தொட்டி எல்லாம் ரொம்ப பிரபலம். ரேடியோ கட்டி அவரோட கேசட் போட்டு விடுவாங்கன்னா பார்த்துக்கோங்க! உடனே வாழ்க்கைக்கு உதவாத சினிமா பட்டிமன்றங்களால் என்ன பயன் ஏற்று நடக்க கருத்துக்களே இல்லைன்னு எதிரணியினர் வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவாங்க.

நடுவரே! வயல்காட்டில் உழைச்சு அலுத்து களைத்துப் போய் வரும் சாமானிய மக்களிடம் போய் கருத்து சொல்றோம் வாங்க வந்து பட்டிமன்றத்தைக் கேளுங்கன்னு சொல்லிப் பாருங்க... உங்களை அடிக்காம விட்டாங்கன்னா அது நீங்க பட்டிமன்றங்களில் நகைச்சுவையா பேசுன பேச்சோட புண்ணியம்தான் :)

பொழுதுபோக்க பல விஷயங்கள் இருக்கும் போது பட்டிமன்றங்கள் ஏன் கருத்துக்கள் இல்லாத வெறும் நகைச்சுவைக் களமா இருக்கணும்னு எதிரணியினர் கேட்கறாங்க.இது என்ன நியாயம் நடுவரே? பட்டிமன்றத்துக்கு மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சனை? இதுவும் பொழுதுபோக்காக இருந்தால் என்ன தப்பு? கருத்துக்கள் மட்டுமே சொல்ல, கேட்க பல மேடைகளும் வாய்ப்புகளும் இருக்கின்றன நடுவரே. இப்ப நம்ப அறுசுவையில் கூட நமது கருத்துக்களைச் சொல்ல "சொல்ல விரும்பினேன்" மற்றும் மன்ற இழைகள் பல இருக்கின்றனவே! அங்கே கருத்து முத்துக்களைக் கொட்டலாமே! விரும்பியவர்கள் திகட்ட திகட்ட அள்ளிக் கொள்ளலாமே! பட்டிமன்றங்கள் ஜனரஞ்சகமாக இருப்பதால்தானே நம் தோழிகள் ஜாலியா சண்டை போட்டு விளையாடுகிறோம்.

பட்டிமன்றங்கள் கருத்து கந்தசாமிக்கள் கூடும் இடமாக இல்லாமல் நகைச்சுவை ததும்பும் மகிழ்ச்சி அளிக்கும் பொழுதுபோக்குக் களமாக இருக்க வேன்டும் என்பதை இம்முறை அடித்துக் கூறுகிறோம். கிள்ளிக் கூறுகிறோம். குட்டிக் கூறுகிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்