பாகற்காய் ரசவாங்கி

தேதி: February 1, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

பாகற்காய் - 100 கிராம்
புளித்தண்ணீர் - அரை கப்
கடலை பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி + 2 மேசைக்கரண்டி
மல்லி - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெல்லம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

பாகற்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும். அதை போல 2 மேசைக்கரண்டி கடலைப்பருப்பையும் 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். புளியுடன் உப்பு சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றல், மல்லி, கடலைப் பருப்பு போட்டு பொன்னிறமாகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும்.
ஒரு நிமிடம் வதக்கிய பிறகு அதனுடன் தேங்காய் துருவல், பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
வதக்கியவற்றை, ஆறியதும் எடுத்து மிக்ஸியில் அல்லது அம்மியில் வைத்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். வறுக்கும் போது பெருங்காயத்தூளை சேர்க்காமல் மிக்ஸியில் அரைக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பை போட்டு ஒரு நிமிடம் நன்கு பிரட்டி விடவும்.
அதன் பின்னர் வேக வைத்த பாகற்காயை எடுத்து தண்ணீரை வடித்து விட்டு கடலைப்பருப்புடன் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்கி விடவும்.
பிறகு பாகற்காயுடன் புளி கரைச்சலை ஊற்றி அதனுடன் வெல்லத்தை போட்டு புளி வாடை அடங்கி வெல்லம் கரையும் வரை 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர் 2 நிமிடம் கழித்து மிக்ஸியில் அரைத்த விழுதுடன் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்து பாகற்காயுடன் ஊற்றி 5 நிமிடம் கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும்.
பாகற்காய் ரசவாங்கி ரெடி. இதை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம். சாதத்துடனும் போட்டு சாப்பிடலாம். கசப்பில்லாத பாகற்காயாக வாங்கி செய்யவும்.
இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. நிர்மலா சத்தியமூர்த்தி அவர்கள். சமையல் கலையில் பெரிதும் ஆர்வம் கொண்டவர். சமையலில் பல வருட அனுபவம் கொண்ட இவர், தான் கற்றுக் கொண்டவற்றை அறுசுவை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு நிர்மலா,

பாகற்காயில் பொரியல் தவிர, வேறு எதுவும் செய்யத் தெரியாது எனக்கு. இந்தக் குறிப்பை அவசியம் செய்து பார்க்கிறேன்.

கத்தரிக்காய் ரசவாங்கி என்று கேள்விப்பட்டிருக்கேன், அதுவும் இதே செய்முறைதானா, அல்லது வேறா?

அன்புடன்

சீதாலஷ்மி