கவிதை தொகுப்பு - பூங்காற்று, சங்கீதா கவிதைகள் - அறுசுவை கவிதை பகுதி - 22120

Kavithai Poonga

கவிதை தொகுப்பு - பூங்காற்று, சங்கீதா கவிதைகள்

வாட்டம் ஏன்

வாழ்க்கைப் பயணத்தில் வாடியிருக்கும்
சின்னப் பெண்ணே!
வானில் வெண்மதி தேய்ந்தாலும்
வளர்பிறையாகும் ஒரு நாளில்.

நதியின் வளைவுகளில் ஒரு கதை
அலையின் மோதலில் புது நடை
மழையின் தூறலில் நவ சுரம்
தேடித்தெரிந்திடு விடை உண்டு.

தென்றலின் தழுவலில் ஒரு சுகம்
பூக்களின் அழகினில் தனிவிதம்
குயிலின் குரலில் இன்னிசை
இயற்கையின் பரிசை உணர்ந்திடு.

பயணம் பாதை மாறிவிட்டால்
மேதையாகிட முடியாது
பேதை நெஞ்சின் துயரங்களின்
வதைகளை நீயும் கலைந்து விடு.

இன்னல்கள் இம்சைகள்
இல்லாமல் வாழ்வில்
இன்பங்கள் என்பது
இல்லையம்மா...
இன்றுடன் நீயும் புதுப்பெண்ணாய்
உலா வந்திடு உந்தன் துயர் நீங்கும்.

- பூங்காற்று

ப்ரியமானவளே.............!

காலங்கள் தந்த
காயங்கள் சொல்ல
ஆறுதல் கிடைத்தது உன்னிடமிருந்து.

விழிநீர் மெல்ல
கன்னம் நனைத்த போது
உந்தன் விரல் நீண்டது
அதை துடைத்துச் செல்ல.

சோகத்தில் நானும்
வாடிநின்ற போது
தோள் சாய்த்துக்கொண்டாய்
நட்பு கானம் பாடி.

நான் அழுத போது நீ உன்
இன்பம் மறந்தாய்,
நான் சிரித்த போது நீ உன்
துன்பம் மறந்தாய்.

அழகிய நட்பின் வரலாறு
அப்படியே இருக்க
நானும் நீயும் இருவேறு திசைகளில்..........
ஆனாலும் இருவர் நினைவுகளும்
என்றும் ஒரே திசையில்..............

- பூங்காற்று

 
சில பொழுதாவது...........

வறுமையின் கோரப்பிணியை
வல்ல இறையோனே தீர்த்து வைப்பாய்!

குடிசையில் வாழும் மாந்தர்
குறைகளைப் போக்கி வைப்பாய்!

பசியிலே கதறும் மழலை
பசிப்பிணி தீர்த்து வைப்பாய்!

உடையது இல்லா சிறுவர்
உடலினை காத்து நிற்பாய்!

படிப்பதற்கு வசதியற்ற
பாலகர்களை உயர்த்தி வைப்பாய்!

சிரிப்பதற்கு ஏழை வாழ்வில்
சில பொழுதாவது தோன்ற வைப்பாய்.

- பூங்காற்று

வெட்கம்

சத்தமில்லாமல்
வந்துபோகும்
என்
வெட்கத்தை,
மிச்சமில்லாமல்
உறிஞ்சிகொள்கிறது
உன்
"மீசை முடிகள் ".....

கரம் கொடு காதலா.....
ஏனோ
உன்னை
பார்க்கும் போதெல்லாம்....
உன்
விரலிடுக்கில்
ஒளிந்து கொள்ள
துடிக்குது
என் விரல்கள்...
உன் கரம் தருவாயா?....
என் விரல் பிடிப்பாயா?.....

- சங்கீதா செந்தில்

 
ஃபேஸ்புக்

நான் படித்த கவிதையை
நீயும் படிக்கிறாய் ....
நான் ரசித்த ஓவியத்தை
நீயும் ரசிக்கிறாய் .....
நான் சிரிக்கும் போது
நீயும் சிரிக்கிறாய் ....
நானும்
தெரிந்து கொண்டேன்
நம் ரசனைகள்
ஒத்து போகின்றன
facebook உதவியால் ....

மழை...
மழையே....
நீ
போனபின்னும்
கண்ணீர்
வடிக்க
என்னை போல,
இந்த
இலைகளும்
காதலிகளாய்...

- சங்கீதா செந்தில்

"காதல் மழை"

உன்
பார்வை
மின்னல் வெட்ட ,
என் இதயமெல்லாம்
இடி முழங்க ,
வியர்வையாய்
துளிர்கிறது
"காதல் மழை"

வியாபாரம்

தாமரை
இலைகள்
சத்தமில்லாமல்
விற்றுக்கொண்டிருக்கின்றன ....
மழை நீர்
முத்துக்களை
சூரியனுக்கு ......

- சங்கீதா செந்தில்

 
மீசை

சிவப்பு
ரோஜாவாய்
உன்
இதழ்கள் .....
அதை
காவல் காக்கும்
முட்களாய்
உன்
"மீசை ".........

- சங்கீதா செந்தில்

"ச்சீ"..

உன்
உதடுகள்
அடிக்கடி
உச்சரிக்கும்
இரண்டெழுத்து
கவிதை
"ச்சீ".......

- சங்கீதா செந்தில்

 பூங்காற்று, சங்கீதா :)

பூங்காற்று இன்றுதான் முதல் முறையா உங்க கவிதைகள் படிக்கிறேன். நல்லா இருக்கு :) வாழ்த்துக்கள்

சங்கீதா வழக்கம் போல சின்ன சின்ன கவிதைகள்ல நிறைய பிரியத்த வெளிக்காட்டிருக்கீங்க :) படிக்க சந்தோஷமா இருக்கு.. வாழ்த்துக்கள்

KEEP SMILING ALWAYS :-)

என் கவிதைகளை வெளியிட்ட

என் கவிதைகளை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு அன்பார்ந்த நன்றிகள்.
கவிதையைப்படித்து முதல் ஆளாய் வந்து கருத்து சொன்ன நாகாராம் உங்களுக்கும் என் நன்றிகள்

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

கவிதை

எனது கவிதையை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு ,என் மனமார்ந்த நன்றிகள்......

பூங்காற்று கவிதைகள் அழகாக உள்ளன...////விழிநீர் மெல்ல
கன்னம் நனைத்த போது
உந்தன் விரல் நீண்டது
அதை துடைத்துச் செல்ல/// எனக்கு பிடித்த வரிகள்......வாழ்த்துக்கள் பூங்காற்று.....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

நாகா ராம்

உங்க கருத்துக்கும் ,உங்க அன்பிற்க்கும் என் மனமார்ந்த நன்றிகள் நாகா ராம்......

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

பூங்காற்று, சங்கீ செந்தில்

அன்பு பூங்காற்று,

சமூகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அன்பான அக்கறை, உங்கள் கவிதைகளில் நயமாக வெளிப்பட்டிருக்கிறது.

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!!

அன்பு சங்கீ செந்தில்

வழக்கம் போலவே சுருக்கமான, பளிச் கவிதைகள்!

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலக்‌ஷ்மி அம்மா

சீதாலக்‌ஷ்மி அம்மா உங்கள் அன்பான பாராட்டுக்களுக்கு என் பணிவான நன்றிகள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று

//நான் அழுத போது நீ உன்
இன்பம் மறந்தாய்,
நான் சிரித்த போது நீ உன்
துன்பம் மறந்தாய்.//

நட்பின் நெருக்கத்தை மிக அழகாக உணர்த்திய வரிகள். வாழ்த்துக்கள் பூங்காற்று

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சங்கீ செந்தில்

சங்கீதா, மெல்லிய காதல் உணர்வுகளை சுருங்கிய வரிகளில் அருமையாக வெளிப்படுத்தியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா

கவிசிவா உண்ர்வுபூர்வமான உங்கள் பாராடுக்களுக்கு என் அன்பார்ந்த நன்றி, நட்பு என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் நான் அப்படித்தான் இருக்கிறேன். என் தோழிக்காக நான் சோகத்தை மறைது சிரிக்க முயன்றாலும் கண்டுபிடித்து விடுவால். சுகம் சோகம் எல்லாம் பகிர்ந்து வாழ்வதுதான் உண்மை நட்பு அது எனக்கு கிடைத்திருப்பதில் மிக சந்தோசப்படுகிறேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று

ஹாய் பூங்காற்று,

அழகான மூன்று கவிதைகள்,பாராட்டுக்கள் பூங்காற்று.

சில பொழுதாவது,கவிதையில் உங்கள் சமூக அக்கறை வெளிப்படுகிறது தோழி.

//இன்னல்கள் இம்சைகள்
இல்லாமல் வாழ்வில்
இன்பங்கள் என்பது
இல்லையம்மா...//

உண்மையான வரிகள்,அருமையா எழுதியிருக்கீங்க பூங்காற்று.

ப்ரியமானவளே,அழகான ஒரு நட்பை சிறப்பாக சொல்லியிருக்கீங்க,பாராட்டுக்கள்.

///நானும் நீயும் இருவேறு திசைகளில்..........
ஆனாலும் இருவர் நினைவுகளும்
என்றும் ஒரே திசையில்///

நான் மிகவும் ரசித்த வரிகள்,பாராட்டுக்கள் தோழி.

அன்புடன்
நித்திலா