கத்தரிக்காய் அவரைக்காய் குழம்பு

தேதி: August 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் விதவிதமான, வித்தியாசமான சமையல் குறிப்புகள் அளித்து வரும் திருமதி. வாணி ரமேஷ் அவர்களின் குறிப்பு. அதற்கான செய்முறையை அவரே படங்கள் எடுத்தும் அனுப்பியுள்ளார். செய்து பார்த்து, சுவைத்து விட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

 

கத்திரிக்காய் - அரை கிலோ
அவரைக்காய் - கால் கிலோ
குடை மிளகாய் (காப்சிகம்) - 1 (பெரியது)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
கருவடாம் - 2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
தனியா பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
புளி கரைசல் - அரை கப்
கறிவேப்பிலை - 10 இலை
பூண்டு - 6 பல்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராய் எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை அரைக் கப் தண்ணீரில் சற்று கெட்டியாக கரைத்து வைக்கவும்.
கத்திரிக்காய், அவரைக்காய், குடை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியை அரிந்து வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலி அல்லது பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கருவடாமை போடவும்.
பிறகு கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு மற்றும் நறுக்கின வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் அதில் நறுக்கின கத்தரிக்காய்த் துண்டங்களைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கின அவரைக்காய் மற்றும் குடை மிளகாயை போட்டு ஒரு நிமிடம் வதக்கிவிட்டு, கடைசியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
தக்காளி வதங்கிய பிறகு மஞ்சள் பொடி, தனியா பொடி, மிளகாய் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
மசாலாத்தூள் நன்கு சேர்ந்து காய்கள் சற்று வதங்கிய பிறகு, 4 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் கொதிக்கவிடவும்.
இரண்டு நிமிடத்திற்கு பின்னர் கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியை குழம்பில் ஊற்றவும்.
குழம்பு நன்கு கொதித்து, காய்கள் வெந்தவுடன் இறக்கிப் பரிமாறவும்.
சென்னையைச் சேர்ந்த திருமதி. வாணி ரமேஷ் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக வசித்து வருவது கலிஃபோர்னியாவில். சமையலில் தான் இன்னமும் கற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருப்பதாக அடக்கமுடன் கூறும் இவர், வித்தியாசமான, புதுபுதுக் குறிப்புகளை முயற்சித்துப் பார்ப்பதை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். அவற்றுள் அனைவரின் பாராட்டையும் பெற்றக் குறிப்புகளை, இங்கே அறுசுவையில் நேயர்கள் பயனுறும் வண்ணம் நமக்கு அளித்து வருகின்றார். அந்த வகையில் துல்லியமான அளவுகள், தெளிவான படங்களுடன் இந்தக் குறிப்பினைக் கொடுத்துள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் வாணி அக்கா எப்படி இருகிங்க. நான் இன்று உங்க குரிப்பில் இருந்து கத்தரிக்காய் அவரைக்காய் குழம்ம்பு செய்ய போரேன் ஆனால் இரு சந்தேகம் இதில் கருவாடம் என்பது என்ன.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா