பொங்கல் - கொத்சு

தேதி: April 24, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (10 votes)

 

கத்தரிக்காய் - 3
பாசி பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு
கறிவேப்பிலை
எண்ணெய் - சிறிதளவு
வெண்பொங்கல் செய்ய :
பச்சரிசி - 2/3 ஆழாக்கு
பாசிப்பருப்பு - 1/3 ஆழாக்கு
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் மற்றும் நெய் - தேவைக்கு
மிளகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு


 

பாசிப்பருப்பு-கத்தரிக்காய் கொத்சு செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், தட்டி வைத்த பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
காய் வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து கிளறி விடவும்.
தேவையான உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
காய் வெந்ததும் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.
கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். பாசிப்பருப்பு-கத்தரிக்காய் கொத்சு தயார்.
வெண்பொங்கல் செய்ய பாசி பருப்பை வெறும் கடாயில் வாசம் வரும் வரை வறுத்து, அரிசியுடன் களைந்து 2 1/2 முதல் 3 அழாக்கு தண்ணீர் விட்டு, தேவையான உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் வேக விட்டு எடுக்கவும்.
பிரஷர் அடங்கியதும் கரண்டியால் நன்கு கிளறி, குழைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும். அடுப்பை அணைத்து விட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
இதனை வெண்பொங்கலுடன் சேர்த்து கலந்து விடவும்.
சுவையான வெண்பொங்கல் மற்றும் பாசிபருப்பு கொத்சு தயார்.

கல்யாண விருந்துகளில் காலை உணவில் பெரும்பாலும் வெண்பொங்கலுடன் இந்த பாசி பருப்பு-கத்தரிக்காய் கொத்சு பரிமாறப்படும். விரும்பினால் பொங்கலுக்கு முந்திரியும் சேர்த்து தாளிக்கலாம். வெறும் மிளகு, சீரகம் தாளித்து, அதனுடன் மிளகு-சீரக பொடி சேர்த்தும் வெண்பொங்கல் செய்யலாம். இதற்கு கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி எல்லாம் சேர்க்க வேண்டாம். பச்சரிசிக்கு பதில் பாஸ்மதி அரிசி சேர்த்தும் செய்யலாம். பாஸ்மதி அரிசி சேர்ப்பதானால் அரிசியும், பருப்பும் சேர்த்து களைந்து அரை மணி நேரம் ஊறவிட்டு, இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு ஹர்ஷா,

பொங்கலுக்கு சாம்பார் சட்னிதான் செய்திருக்கேன். அடுத்த தடவை இந்த கொத்சு செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு;)

நான் இதே கொத்சுவை அதுக்கு இந்தப்பேர்தான்னு கூட தெரியாது..இப்ப நீங்க சொல்லிதான் தெரியும் சப்பாத்திக்கு, தோசைக்கு செய்வேன் ஈசியா இருக்கறதுனால;) இப்போ பொங்கலுக்கும் செய்து சாப்பிடறேன். உங்க ஃபோட்டோஸ் எல்லாம் நல்ல க்ளாரிட்டியோட வந்திருக்கு..குறிப்பா நம்ம பாராம்பரிய உணவை சில்வர்ப்ளேட்ல வைச்சே காட்டினது மேலும் அழகு சேர்க்குது..வாழ்த்துக்கள் அன்பு.

Don't Worry Be Happy.

நான் இது வரை பொங்கலுக்கு சட்னி, சாம்பார் தான் பண்ணி இருக்கேன் அடுத்த முறை இந்த கொத்சு ட்ரை பண்ணுறேன் படங்கள் அழகா வந்து இருக்கு ஹர்ஷா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

பொங்கல் + பாசிப்பருப்பு கொத்சு முகப்புபடத்துல பார்க்க அருமையா இருக்கு. நாளைக்கு காலையில உங்க மெனு எங்க வீட்டுல செய்துட்டு வந்து சொல்றேன்.

அன்பு, நானும் ஏறக்குறைய இந்த முறையில் செய்வேன். ஆனால் காய்கறிகளை வதக்கி தனியே வேக வைக்காமல் பருப்புடனே சேர்த்து, மசாலாவும் கலந்து வெந்ததும் தாளித்து விடுவேன். பூண்டு மட்டும் என்முறையில் மிஸ்ஸிங். அடுத்தமுறை உங்களோட இந்த முறையை செய்து பார்க்கிறேன். சுட சுட பொங்கல்,கத்தரிக்காய் கொத்சு அமர்க்களமான பிரசண்டேஷன் அன்பு. பொங்கல் என் பேவரட் ஆச்சே. கை பத்திக்க வாய் பத்திக்க சாப்பிடுவேன் ;)) நாளைக்கு இதுதான் டிபன். ஆசையை கிளப்பு, கிளப்புன்னு கிளப்பிட்டீங்க. வாழ்த்துக்கள் அன்பு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆஹா... எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச குறிப்பு :) பொங்கல் தான் எனக்கு ஆல் டைம் ஃபேவரட். ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க, சுவையான குறிப்பு, சுவையான சைட் டிஷ்... சம காம்பினேஷன். இந்த வாரமே செய்துடறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாங்கள் பாசிபருப்பு சேர்க்காமல் புளி சேர்த்து தான் கொத்சு செய்வோம். இந்த முறை நன்றாக இருக்கு. கண்டிப்பாக இந்த முறையுலும் செய்து பார்க்கிறேன். ஹோட்டலில் பரிமாறுவது போலவே இருக்கு ப்ரெசன்டேஷன் ;)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

சீதாலக்‌ஷ்மி அம்மா,
முதலாவதாக பதிவிட்டதற்கு ரொம்ப நன்றிங்க.இது எங்க அம்மா செய்யும் கொத்சு.வெண் பொங்கலுக்கு ரொம்ப நல்லா இருக்கும்.கண்டிப்பா செய்து பாருங்க.

ஜெய்,
நீங்களும் இதே குறிப்பை செய்வீங்களா?ரொம்ப மகிழ்ச்சி.இதை வெண் பொங்கலுக்கு தான் அம்மா செய்வாங்க.உங்க பதிவுக்கு நன்றி ஜெய்.

தனா,
கண்டிப்பா நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து சொல்லுங்க.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

வினோஜா,
முகப்பு படம் பிடிச்சுருக்கா? ரொம்ப நன்றி. :-) கண்டிப்பா செய்து பாருங்க.பதிவுக்கு மிக்க நன்றி வினோஜா.

கல்ப்ஸ்,
குக்கரில் செய்வதாய் இருந்தால் நீங்க சொல்வதுபோல்,கத்தரிக்காய்,பாசிப்பருப்பு எல்லாம் சேர்த்து வேக வைத்து தாளிப்பேன்.பருப்பை முதலிலேயே வேக வைத்திருந்ததால் தனித்தனியே செய்துவிட்டேன். :-) உங்க பதிவுக்கு மிக்க நன்றி கல்ப்ஸ்.

வனிதா,
உங்க பதிவுக்கு ரொம்ப நன்றிங்க.இது எனக்கு பிடித்த காம்பினேஷன்.கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க.

லாவண்யா,
நாங்க இதை தான் கொஸ்து/கொத்சுனு சொல்வோம்.கல்யாண விருந்துகளில் இந்த காம்போ போடுவாங்க.எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

பொங்கல் கொத்சு பார்க்கும் போது அழகாக உள்ளது. எனக்கு இதுவரை வெண்பொங்கல் சரியாகவே வராது. நீங்கள் செய்தது போல் செய்து பார்கிறேன்

அன்பு பொங்கலும்,கொத்சும் அப்படியே நான் செய்வது போலவே இருக்கு வாழ்த்துக்கள்.கொத்சுல பூண்டு சேர்க்கமாட்டேன் இனி சேர்த்து செய்து பார்க்கிறேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//இது எனக்கு பிடித்த காம்பினேஷன்// - இனி எனக்கும் பிடிச்ச காம்பினேஷன் :) ஆமாம் இன்று செய்து வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுதுங்க. சுவையான சுலபமான குறிப்பு. இனி அடிக்கடி செய்வேன். :) மிக்க நன்றி ஹர்ஷா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

boopathy123,
இம்முறையில் செய்து பார்த்து எப்படி வந்ததுனு சொல்லுங்க.வெண் பொங்கல் ரொம்ப சுலபமா செய்துடலாம்.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி தோழி.

ஸ்வர்ணா,
நீங்களும் இதுபோல தான் செய்வீங்களா? ரொம்ப சந்தோஷம் ஸ்வர்ணா.பதிவுக்கும் நன்றி.

வனிதா,
அதுக்குள்ள செய்துட்டீங்களா? உங்களுக்கும்,வீட்டில் எல்லார்க்கும் பிடிச்சதுனு சொன்னதும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.உடனே செய்து பார்த்து,பின்னூட்டமும் கொடுத்ததற்கு ரொம்ப நன்றிங்க.

வெண் பொங்கல்‍ - கொத்சு, குறிப்பு, படங்கள், ப்ரசண்டேஷன் எல்லாமும் சும்மா அமர்க்களமா இருக்கு! சூப்பர்ர்ர்ர்!

எங்க வீட்டில சுயேட்சையா போட்டி போட்டு அப்பப்ப ஜெயிக்கும் டிஃபன் இதுதான்! ஆமா, அவரோட ஆல்டைம் ஃபேவரட்! :), ஆனா பசங்க கண்டுக்ககூட மாட்டாங்க! கத்திரிக்காய் கொத்சு நான் என் மாமியாரிடம் கற்றுக்கொண்டது. கிட்டத்தட்ட உங்க ரெஸிப்பி போலதான், து.பருப்பும் சேர்த்து போடுவாங்க. அப்புறம் கடைசில சேர்க்க, கடலைப்பருப்பு, தனியா, மி.வற்றல் எல்லாம் வறுத்து பொடித்து போடுவாங்க. இந்த காம்போ செய்துகொடுத்திட்டா என்னவருக்கு, செம குஷியாகிடும்! இப்போ நியாபகப்படுத்திட்டிங்க இல்ல, நாளைக்கு டின்னருக்கு உங்க மெத்தட்ல செய்துகொடுத்து அசத்திடறேன்! :) வாழ்த்துக்கள் ஹ‌ர்ஷா!!

அன்புடன்
சுஸ்ரீ

சட்னி,சாம்பார்,ரசம்,புளிக்குழம்பு,ஊறுகாய் இதெல்லாம் வச்சி நான் பொங்கல் சாப்பிட்டிருக்கேன் அந்தளவுக்கு பொங்கல் பைத்தியம்.இதுல டிவிஸ்ட் என்னன்னா எங்க வீட்டில் என்னைத் தவிர யாருக்கும் இது பிடிக்காது, பொங்கல் பண்ணுவதே அபூர்வமாகிட்டது. உங்க அருமையான பிரசன்டேசனால நான் மானிட்டரில் இருந்து ஒரு பிடி பொங்கலும் ஸ்டிரா போட்டு கொத்சுவும் உறிஞ்சாச்சு....

99% Complete is 100% Incomplete.

எங்க வீட்டிலும் வீக்லி ஒன்ஸ் கண்டிப்பா டின்னருக்கு வெண்பொங்கல் இருக்கும்.இது என்னவரின் ஃபேவரிட்.பொங்கல் அம்மாக்கு சரியா பண்ண வராது.இது என் மாமியாரின் ஸ்பெஷல்.

கத்தரிக்காய் கொத்சினை அம்மா சில நேரம் பாசி பருப்பும்,துவரம் பருப்பும் சேர்த்து செய்வாங்க.அதை குறிப்பிட மறந்துட்டேன். நீங்க அழகா சொல்லிட்டீங்க.ஆனால் பொடி போடுவது புதுசா இருக்கு.அடுத்த முறை பொடியும் சேர்த்து செய்து பார்க்கணும்.

உங்களுக்கும் இந்த கொத்சு தெரிந்திருப்பதில் மகிழ்ச்சி சுஸ்ரீ.கண்டிப்பா உங்களவருக்கு மீண்டும் செய்து கொடுத்து அசத்துங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி சுஸ்ரீ.

//உங்க அருமையான பிரசன்டேசனால நான் மானிட்டரில் இருந்து ஒரு பிடி பொங்கலும் ஸ்டிரா போட்டு கொத்சுவும் உறிஞ்சாச்சு....//
இதெல்லாம் செல்லாது. எனக்காக கண்டிப்பா ’பொங்கல்-கொத்சு’ செய்து சாப்பிடுங்க.சரியா? உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

//99% Complete is 100% Incomplete.// இது நல்லா இருக்கு.

ஹர்ஷா,
எப்பவோ வந்து சொல்லனும்னு இருந்தேன், பாருங்க இன்னைக்குதான் முடிகிறது. போன வாரம், வெள்ளிக்கிழமை டின்னருக்கு உங்க ஸ்டைலில கத்திரிக்காய் கொத்சு செய்து பொங்கலுடன் சேர்த்து சாப்பிட்டாச்சு! :) ரொம்ப நல்லா இருந்தது ஹர்ஷா. இந்த சூப்பர் காம்போவை மீண்டும் நியாபகப் படுத்தியதற்கு மிக்க நன்றி! :)

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ,
அடடா... நான் பார்க்கவேயில்லையே! உங்க பதிவை எப்படி மிஸ் பண்ணேன்?! எனக்காக ’பொங்கல்-கத்தரிக்காய் கொத்சு’ செய்து சாப்பிட்டீங்களா? ரொம்ப ரொம்ப நன்றி சுஸ்ரீ.இது நானும் மறந்து போன குறிப்பு.ஒரு நாள் தோழியுடன் பேசும்போது நினைவுக்கு வரவே செய்து அனுப்பினேன்.உங்களுக்கு நியாபகப்படுத்தி மீண்டும் செய்ய தூண்டியதில் மகிழ்ச்சி.பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி சுஸ்ரீ.

Thanks for the recipe Harsha.Yummy dish.

"Happiness is a habit, cultivate it"

அன்பு, இன்று உங்களின் பொங்கல் - கொத்சு செய்தேன். சூப்பராக இருந்தது. சுட சுட செய்து சாப்ட்டு போட்டோவை பேஸ்புக்கில் போட்டிருக்கேன். குட்டீசுக்கும் பிடிச்சிருந்தது. வாழ்த்துக்கள் பா :) இனி எங்க வீட்ல அடிக்கடி இந்த டிபன் தான்..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.