லட்டு

தேதி: August 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (16 votes)

இனிப்புகளில் லட்டு மிகவும் சுவையானது. அனைவராலும் விரும்பப்படுவது. திருப்பதி லட்டு உலகப் பிரசித்தம் பெற்றது. வீடுகளில் சிறிய அளவில் சுவையான லட்டுகள் தயாரிப்பது எப்படி என்பதை மிக அருமையான படங்களுடன் தெளிவாகச் சொல்லித்தருகின்றார், திருமதி. சித்ரா செல்லத்துரை அவர்கள்.

 

கடலை மாவு - கால் கிலோ
ஜீனி - அரை கிலோ
நெய் - மூன்று தேக்கரண்டி
முந்திரி பருப்பு - ஐம்பது கிராம்
ஏலக்காய் - பத்து
கிஸ்மிஸ் - இருபது
மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை
ரீபைண்டு ஆயில் - அரை லிட்டர்


 

கடலை மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். கடலை மாவு நாள்பட்டதாக இருந்தால் சுவை நன்றாக இருக்காது. புதிய மாவாக எடுத்துக் கொள்ளவும்.
தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் எடுத்து வைக்கவும். முந்திரியை சிறு துண்டுகளாகிக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவிட்டும் உடைத்துக் கொள்ளலாம். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் ஜீனியைக் கொட்டி, ஒரு டம்ளர் நீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். இளம் கம்பி பதம் என்பது கரண்டியில் எடுத்து விரலால் தொட்டு மூன்று வினாடிகள் கழித்து விரலைப் பிரித்தால் மெல்லிய கம்பி இழை போல் வரும்.
குறிப்பிட்ட பதத்திற்கு பாகு தயாரானதும், அந்தப் பாகிலேயே கலர் பவுடர் மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்.
கடலை மாவில் போதுமான நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவுக்கரைசலில் நீர் அதிகம் இருந்தால் பூந்தி உருண்டையாக வராது. மீண்டும் சிறிது கடலை மாவு சேர்த்தால் சரியாகி விடும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூந்தி கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும். பூந்தி கரண்டி இல்லையென்றால் சாதாரண கண் கரண்டியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
பூந்தியை சிறிது நேரம் வேக விடவும். முறுகி விடக் கூடாது.
பதமாக வெந்ததும், பூந்தியை சாரணி கொண்டு அரித்து எடுத்து, ஜீனிப் பாகில் உடனே கொட்டவும். இப்படியே மாவு முழுவதையும் பூந்தியாக பொரித்து பாகில் போடவும்.
பின்னர் உடைத்த முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பூந்தியில் கொட்டவும். ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் கலவையை பரப்பி கரண்டியால் நன்றாக கலக்கவும்.
கை பொறுக்கும் சூடு வந்தவுடன் லட்டுகளாக பிடிக்கவும். மிகவும் ஆறிவிட்டால் உருண்டைப் பிடிப்பது கடினம். மிதமான சூட்டிலேயே பிடித்துவிடவும்.
இந்தக் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கி, அதன் செய்முறையையும் படங்களுடன் விளக்கியுள்ளவர், குவைத்தில் வசிக்கும் திருமதி. சித்ரா செல்லதுரை அவர்கள். அறுசுவை நேயர்களுக்காக நூற்றுக்கும் மேலான செட்டிநாடு மற்றும் பாரம்பரிய தமிழ் உணவுகளை வழங்கியுள்ள இவர், தொடர்ந்து ஏராளமான குறிப்புகளை படங்களுடன் உங்களுக்கு தர இருக்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பூந்தி தயாரிக்க தீ யின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும்? தயாரித்தவுடன் உருஞ்சுதாளில் போட்டுவிட்டு பிறகு பாகில் போடலாமா? நன்றி.

பூந்திக்கு எண்ணை நன்றாக சூடானவுடன் மிதமாக அடுப்பை எரிய விட வேண்டும்...தீ அதிகமாக இருந்தால் சட்டென்று கருகி விடும்..... தீ மிகக் குறைவாக இருந்தாலும் பூந்தி மேலே எழும்பி வராமல் எல்லா மாவுமாக சேர்ந்து தோசை போல் ஆகிவிடும்.....
எண்ணையில் இருந்து எடுத்தவுடன் நன்றாக வடித்து விட்டு உடனே (சூடாக இருக்கும் போதே) பாகில்போட வேண்டும்.... இல்லையென்றால் பூந்தி பாகை உறிஞ்சாது....
பூந்தி பாகை உறிஞ்சாத பட்சத்தில் லட்டு உருட்ட வராது....

Vazhga Tamil!!!

லட்டினை படத்தில் பார்த்தவுடனே சாப்பிடனும்னு தோனுது. இதனை செய்து காட்டிய திருமதி.சித்ரா செல்லத்துரை அவர்களுக்கு எனது நன்றிஐ தெரிவித்து கொள்கிறேன்.இது போல பலபல புதுப்புது ரெசிப்பி செய்து காட்ட அன்புடன் கேட்டு கொள்கிறென்

ramba

சீனி பாகு தயாரிக்க எவ்வளவு நேரம் ஆகும்?

ramba

Dear Ramba,
இந்த அளவு சீனிக்கு, சீனியில் நீர் ஊற்றி கரண்டியால் நன்றாக கலக்கி விட்டு அடுப்பில் வைத்ததும் அடுப்பை மீடியமாக வைத்து கிண்டிக் கொண்டேயிருந்தால் நான்கு நிமிடங்களில் தயாராகும்.

Vazhga Tamil!!!

I never thought preparing laddu is this much easy. Certainly I am going to give a try. Thanks a lot Madam.

நன்றி மேடம்

ramba

அசத்தலான photos. பார்த்தவுடனே சாப்பிடணும் போல இருக்கு. அசத்துறீங்க மேடம். "சார்.. லட்டு" ன்னு ஏதோ ஒரு படத்துல வர்ற ஜோக் ஞாபகத்துக்கு வருது. அறுசுவை பார்க்கிறவங்களுக்கு வெறும் குறிப்பு மாத்திரம் கொடுக்காம, கூடவே கொஞ்சம் டேஸ்ட் பாக்க சாம்பிளும் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும். இண்டெர்நெட்டுல அதுக்கெல்லாம் வழி கிடையாதா?

பின்னூட்டக் கருத்துக்கு மிக்க நன்றி எஸ்.கே, ரம்பா, வினோதா, ப்ரவீன்....
உங்கள் எல்லோருக்கும் சாம்பிள் கொடுக்க எனக்கும் ஆசைதான் ப்ரவீன்.....அறுசுவையில் அதுக்கெல்லாம் வழி செய்ய வழக்கம் போல பாபுவிடம் கோரிக்கை வையுங்கள்....

Vazhga Tamil!!!

லட்டு சூப்பர் டேஸ்ட்

தங்களுடைய லட்டு செய்முறையை பார்த்துதான் நான் லட்டு செய்ய கற்றுக்கொண்டேன் முன்பு பல முறை முயன்று இருக்கிரேன் அனால் பூந்தியாக தான் வந்துள்ளது,தங்கள் செய்முறைப்படி செய்தேன் அருமையான லட்டு கிடைத்தது எனது உறவினர் வீட்டிர்க்கெல்லாம் செய்து கொடுத்தேன் எல்லோரும் என்னை பாராட்டினார்கள் அந்த பாராட்டுக்களை உங்களுக்கே சமர்ப்பிக்கிறேன்!நன்றி! நன்றி!

Have a Nice Day!!!
Shanthi

Enjoy...
Shanthi

உங்கள் குறிப்பைப் பார்த்ததுமே லட்டு செய்ய வேண்டும் போல் இருந்தது...ஆசை இரண்டு நாட்களுக்கு முன் நிறைவேறியது...நன்றாக வந்தது...நன்றி...

உங்களின் லட்டு பலமுறை செய்துவிட்டேன்.ஆனால்...................எல்லோரிடமும் எனக்கு பாராட்டை வாங்கி கொடுத்துள்ளது,உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்,மிகவும் சுலபமாக அதே நேரத்தில் ருசியாகவும் உள்ளது,லட்டு செய்யும்போது நான் கல்கண்டு சேர்த்து கொண்டேன்,இன்னும் சூப்பரா இருந்தது,thank you so much madam!

Eat healthy

thanks for your idia and help