பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?<---

அறுசுவையின் நாயகிகளே நாயகர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். தோழி வனிதாவின் பிறந்த நாள் பரிசாக பட்டிமன்றத்தை இம்முறை நான் பொறுப்பேற்று நடத்த வந்துள்ளேன். . கோடை விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் நண்பர்களுடன் உறனவினர்களுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் இல்லையென்றால் ரொம்பவும் போர் அடித்து தான் போகும் இல்லையா தோழிகளே??? என்னடா இவ பட்டி தலைப்பை சொல்லுவா என்று பார்த்தா சம்மந்தமே இல்லாமல் ஏதோ பேசுறாலே என்றெல்லாம் யோசிக்கப்படாது. சம்மந்தம் இருக்கு.....

இதோ தலைப்பு : நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?

நம்ப சுகி தந்த தலைப்பு. நன்றி சுகந்தி.

வேற ஒன்னுமில்லைங்க நேத்து ஸ்ரீதர் படம் பார்த்ததன் எஃப்க்ட். ரொம்ப கொழப்பமாக இருந்தது சரி அதையே நம் தோழிகளிடம் பட்டி மன்ற தலைப்பாக கொடுத்தால் தெளிவாகிடுவாங்கனு ஒரு நம்பிக்கை. அதை மெய்யாக எல்லோரும் வாங்க. முதல் முறையாக நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். அதனால் என்னை பொருத்து வழிநடத்தி செல்லுமாறு தோழிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

தாக்குங்கள்.......

அத்தி பூத்தாற்போல நடுவர் நாற்காலியை அலங்கரிக்க வந்திருக்கும் என் அன்புக்குரிய தோழியும், நடுவருமாகிய லாவிக்கு என் அன்பான வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கங்கள்.. பட்டியை கலகலக்க செய்து கொண்டிருக்கும் புதிய வரவுகள் மற்றும் பழைய வீராதி வீரிகள், சூராதி சூரிகளுக்கும் என் வாழ்த்துக்கள். தலைப்பை தந்த இங்கே தலைகாட்டா நங்கை சுகிக்கும் என் வாழ்த்துக்கள் :)

இன்றைக்கு எடுத்து ஆராய்ந்து கலந்தாலோசிக்கப்படவேண்டிய மிக மிக அத்தியாவசியமான தலைப்பு இது. நண்பர்கள் காதலர்களாவதில் தவறே இல்லை. அந்த அணியில் பேசவே பிரியத்தோடு வந்துள்ளேன். நட்போடு பழகி பின்பு அது எதிர்பாராதவிதமாக காதலில் விழுந்து திருமணத்தில் முடிந்தால் சந்தோஷமே அனைவருக்கும். ஆனால், இதற்கு மாறாக காதலர்களாக பழகி பின்பு கழட்டி விடுவதற்காக, நான் நண்பனாக தான் பழகினேன் என்று சொன்னால் அது நன்றாக இருக்குமா? சொல்லுங்க நடுவர் அவர்களே. நண்பன்னு சொன்னாலும் பரவாயில்லை அது கேக்க ரீசண்டா (டீசெண்ட்)இருக்கு. அதை விட்டுட்டு அக்கா, தங்கச்சின்னு சொன்னா எப்படி இருக்கும்? கேக்கவே சகிக்கலைல உங்களுக்கே. நடுவர் அவர்களே, நண்பர்களாக இருந்து பின்பு வாழ்நாள் முழுக்க கருத்தொருமித்த அன்னியோன்ய தம்பதிகளாக வாழ்வோம் என சபதமும்,உறுதியும் எடுத்த பிறகு தான் காதலிக்க தொடங்கி திருமணமும் செய்து கொள்வார்கள். இது என்றைக்கும் நிலைத்து நிற்கும் படிப்படியான ஆரோக்கியமான முன்னேற்றம்.. வளர்ச்சி.

ஆனால், காதலிக்கறேன் பேர்வழின்னு சொல்லிட்டு அங்கே இருக்க வேண்டிய காதலே இல்லைனா எப்படிங்க நட்பூ மட்டும் பூக்கும்னு எதிர்பார்க்க முடியும். நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட தம்பதிகளின் வாழ்க்கைக்கு வெற்றிக்கான பார்மூலா என்னவாக இருக்கும் என்று நினைக்கறீர்கள்? நிச்சயம் நட்போடு கூடிய காதலோடு இருப்பதால் தான். அதை விடுத்து.. நீ கணவன், நான் மனைவி என்று சொல்லிக் கொண்டு இருவரும் வட்டத்தை போட்டு ஒவ்வொரு எல்லையில் நின்றிருந்தால் வெற்றிகரமான தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றிக்கொடியை நாட்ட முடியுமா? கலிகாலத்தில் எங்கு நோக்கினும் விவாகரத்தே பெரிய விவகாரமாக உள்ளது. அதற்கு காரணம், நட்பில்லாத காதலால் வந்த வினையால் திருமணம் செய்து கொண்டதால் தான். திருமணம் என்ற பந்தத்திற்கு நட்பும், காதலும் இருகண்களை போன்றவை. அப்படி இருக்க நட்போடு காதல் இருந்தால் தவறென்ன இருக்கப் போகிறது? இதோ எங்க வீட்டையே எடுத்துக்கோங்க.. எங்க தலைவரோட ஓவரா சண்டை போட்டாலும் அடுத்த நிமிஷமே என்னப்பா சாப்பிடுறீங்கன்னு நான் கேக்க, உனக்கு என்னமா வாங்கிட்டு வர சொல்லனும்னு அவர் கேக்க.. சண்டை போன இடமே தெரியாது. இந்த இடத்தில் புரிதல் மட்டுமே காரணம் என்று சொன்னால் கண்டிப்பா நான் ஒத்துக்கவே மாட்டேன். எங்கள் இருவருக்கும் இடையே கணவன் - மனைவி என்ற பந்தத்திற்கும் மீறி நட்பு என்ற மூன்றெழுத்து மந்திரம் போட்டு வைத்திருக்கும் சொக்கு பொடியே காரணம் என்பேன். இது எனக்கு மட்டுமின்றி, எங்களைப் போன்ற இல்வாழ்க்கையில் நண்பர்களாக திகழும் அனைத்து தம்பதியருக்கும் பொருந்தும்.

நட்பு என்ற பொருள் இப்போது மலிவாகவே கிடைக்கிறது. முக புக்கு, வாய் புக்கு, மூக்கு புக்குன்னு.... ஆனால் ஆத்மார்த்தமான உன்னத நட்பு மிகவும் அரிதாகவே கிடைக்கப் பெறுகிறது. அப்படி கிடைக்கும் நட்போடு, காதலும் இணைந்தால் கசக்கவா செய்யும் நடுவர் அவர்களே..தேனோடு கலந்த தெள்ளமுதம்னு... பாட்டு தான் பாட தோணும். தோழமையோடு வந்து காதல் சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம் நடுவரே.. ஆனால், காதலோடு வந்து பிறகு மனம் மாறி நட்புனு சொல்லி எஸ்கேப் ஆகுறவங்களை என்ன சொல்ற்து? நண்பனாக பழகி பின்பு காதலனாக பதவி உயர்வு பெற்று கணவனாக மாற விரும்புபவன் உண்மையிலேயே நல்ல நோக்கத்தோடு தான் வருவான். அதை விடுத்து ஒரு பெண்ணை பார்த்து காதலித்து, ஊரெல்லாம் சுற்றி விட்டு, போர் அடித்ததும் நண்பன் என்ற பெயரில் முக்காடு போட்டு செல்பவன் இனி அடுத்த வீட்டை நோட்டமிட்டு வைத்திருக்கிறான் என்று தானே பொருள். நீங்களே சொல்லுங்க. பின்னே காதலன்னு சொன்னா ஒருத்தியோட தான் சுத்த முடியும் நண்பன்னு சொன்னா எல்லாரோடயும் சுத்தலாம்ல..இந்த சமயத்துல ஒரு பாட்டு ஞாபகம் வருதுங்க நடுவரே.. அது தவறாக இருந்தால் மன்னிச்சு... படம் பேரு.. கிழக்கு சீமையிலேன்னு நினைக்கிறேன்.. .. "எதுக்கு பொண்டாட்டி, என்னை சுத்தி வப்பாட்டி எக்கசக்கமாகி போச்சு கணக்கு" இன்றைய பெரும்பாலான ஆண் - பெண் நட்பில் பெயருக்கேற்ற நட்பே இருப்பதில்லை. இங்கே நல்ல நட்போடு.. காதலும் கிடைக்கிறதென்றால் நிச்சயம் அப்படி நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்களே என்பேன்.

நடுவர் அவர்களே, இன்னொரு முக்கிய உதாரணம்.. இப்ப லேட்டஸ்ட் பேசன் பார்த்தீங்கன்னா.. பெரியோர் வரன் பார்த்தது நிச்சயம் செய்யும் திருமணங்களில் கூட பெற்றோர் முன்னிலையில் பெற்றோர்களே சம்பந்தப்பட்ட அந்த பெண்,மாப்பிள்ளையோட போன் நம்பரை வாங்கி பேச சொல்றாங்க. நட்பை வளர்த்துக்க சொல்றாங்க. எப்படியும் இவங்க கடலையை பொன்னிறமா வறுக்கவோ, தீய்க்கவோ குறைந்தபட்சம் ஆறு மாசம் ஆகும். பெரியோர்கள் பார்த்து வைத்த வரனாக இருந்தாலும் திருமண பந்தத்தில் இணைவதற்கு முன்பு அவர்கள் நட்பில் இணையட்டும் என்ற எண்ணத்தில் தான் இப்படி செல்போன்கள் வழியே இணைத்து வைத்து பின்பு (தாலி)கயிற்றின் வழியாக செல்லில் அதாவது அன்புச்சிறையில் அடைத்து வைக்கிறார்கள். (என்ன டகாய்ச்சி வேல காட்ட வேண்டியிருக்கு...;))

நடுவரே, கொஞ்சம் டச் விட்டு போய்ட்டதால.. சரியா பேச வரலை.. நான் கொஞ்சம் யோசிச்சுட்டு வர்றேன். அதுவரை உடம்பை பார்த்துக்கோங்க ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நாங்க ஆண்/பெண் நட்பு எப்பவும் நட்பாவே இருக்க கூடாதுன்னோ/இருக்க முடியாதுன்னோ சொல்லவேயில்ல….ஆனால் அது எப்போதாவது காதலாக மாறினால் தவறில்லைன்னுதான் சொல்றோம்.

நான் கேட்கிறேன்..வீட்டில் பெண்/மாப்பிள்ளை பார்க்கும்போது பெரும்பாலும் தெரிந்த சொந்தத்தில்/நட்பான குடும்பத்தில்/தூரத்து உறவில்/தரகரின் சிபாரிசில் ன்னு பெற்றோர்கள் சம்பந்தம் வைத்து கொள்ள நினைப்பது பரஸ்பர நம்பிக்கையில்தானே..

அப்படி அவர்கள் பார்த்து ஏற்பாடு செய்யும் ஒரு ஆணையோ/பெண்ணையோ பார்த்தவுடன் நம் மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குறது காதல்ன்னா,நட்பாக பழகிய ஒரு தோழமை…ஒரு பரிணாமத்தில் சூழலில் காதலாக மாறினா ,பட்டாம்பூச்சி பறந்தா என்ன தவறு…?

………எல்லா காதலும் கண்ணோடு கண் பார்த்து மலர்வதில்லை…திருமணத்துக்கு முன் காதல் தவறுன்னு சொல்றவங்க நட்பின் முடிவில் காதல் வந்தாலும் தவறுன்னு தான் சொல்வாங்க நீங்க அந்த கட்சின்னா உங்க கூற்று மட்டுமே சரியெனத்தோன்றும்..

ஆனா பார்த்தவுடன் தோணும் காதலைவிட பரஸ்பரம் நட்போடு பழகி ஒரு கட்டத்தில் காதலாக மாறுவது மட்டும் தவறுன்னு சொல்றது புரியல..
அவ்வப்போது நாட்டில் நடக்கிற உண்மைதானே…..

காதல் திருமணங்கள கணக்கெடுத்து பார்த்தா அதில் பெரும் சதவீதஜோடிகள்
நட்பில் தொடங்கி காதலில் முடிந்ததாகத்தான் இருக்கும்
வீட்டில் பெண்பார்க்க வரும் ஒருவரை பிடிக்குதுன்னா,வர்றவங்க எல்லாரையும் பிடிக்குமின்னு அர்த்தமாகாதுதானே..அதுபோலத்தான்..

எல்லா நட்பும் காதலில் முடிவதில்லை..ஒரு ஆண்/பெண் நட்பு காதலாக மாறிட்டதால..உலகத்தில் ஆண்/பெண் நட்புன்னாலே அப்படித்தான் முடியுமின்னு நினைக்கிற அளவு நாம் பக்குவமில்லாதவர்கள் இல்லை..

உனக்கு வரும் கணவன் எப்படியெல்லாம் இருக்கணும் என கேட்கும்போது என்னை நன்கு புரிந்துகொள்ளும் நண்பனாக இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்குதானே….

திருமணத்துக்கு முன் ஆண்/பெண் நட்பு பலவகை …

கேசுவல் நட்பு …வேலைபார்க்கும் இடத்தில் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கலாய்ப்பது / பார்க்கும்போது ஹாய்..போகும்போது பை சொல்வது…. அவ்வளவுதான்…

அளவான நட்பு: தேவைப்படும்போது ,அவசரத்திற்கு உதவுவது….,முக்கிய நாளில் வாழ்த்து சொல்வது,தவறு செய்யும் போது உரிமையாய் கண்டிப்பது..

ஆழமான நட்பு:இது ஒருபால் நட்பைபோல் அன்யோன்யமானது..,அதிக விருப்பு,வெறுப்புகள் பகிர்ந்துகொள்வது,குடும்பம் பற்றி அதிகம் பகிர்ந்துகொள்வது,பொசசிவ்னெஸ் இருப்பது….நிறைய பகிர்ந்து கொள்ளும்போது ஆச்சர்யமும்,அந்த நட்பின் அவசியமும் புரிந்துபோக அது காதலாய் மாறுது…
இது நிறைய நடக்குதுதானே…முதல் இரண்டும் நட்புதான் ஆனால் அங்கே எப்போதும் ஒரு எச்சரிக்கை மணி அலறிகொண்டே இருக்கும்…இதுதான் லிமிட்ன்னு…மூன்றாவது நட்பு……விகல்பமின்றி /வேறுபாடின்றி நட்பை ஒருபால் நட்புபோல் பார்ப்பது…நிறைய பேசுவது….நிறைய ஒருவர் பற்றி ஒருவர் தெரிந்துகொள்வது…..இது காதலா மாறும்னு கட்டாயமில்லை ஆனால் மாறுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கு..அது தவறில்லை..

விட்டா எதிரணி இனிமே நட்பு காதலா ஒருநாளும் மாறிடக்கூடாதுன்னு உத்ரவாதம் வாங்கிட்டுதான் நட்பே வச்சுக்குவாங்கபோல

காதல் பட்டாம்பூச்சி எல்லாருக்கும் பறக்குது ஏதோ ஒரு சூழலில்….அது ஒரு நட்பின் முடிவில் வந்தா மட்டும் இறக்கையை பிச்சி அடுப்பில போடணுமின்னா என்ன நியாயமின்னு கேட்கிறேன்..

காதலிப்பதற்காகவே யாரும் நட்பு வைத்துகொள்வதில்லை .ஆனால் ஒரு நட்பு ஒரு நேரத்தில் அந்த நூலிழையை தாண்டி காதலாய் மாறினால் கத்தரிக்கோலால் வெட்டி நட்புக்கு கோட்டை கட்ட முயற்சிக்க அவசியமில்லைன்னுதான் சொல்றோம்..

எல்லா உறவும் கடைசிவரை நம்மோடு இருக்கும்…ஆனால் நட்பு கடைசிவரை உறவாக மாறக்கூடாதுன்னு சட்டமில்லை

நாங்க நண்பர்கள காதலிங்கன்னு கூவலை..ஆனா நீங்க அவங்கள காதலிச்சுடாதீங்கன்னு கூவறாப்பல இருக்கு

மாமா,அத்தைமகன்/மாமன்மகள்ன்னு ஒருவீட்டில் சிறுவயதில் இருந்து பார்த்து பழகியவர்களுக்குள் திருமணம் ..காதல்ன்னா (–இதுவும் காதல்)
இதுமாதிரி அனுபவமில்லாதவர்களுக்கு இது எப்படி சாத்தியமின்னு தோணும்..

அதுபோல் அப்படி அனுபவம் உள்ளவர்களுக்கு புதிதாய் முன்பின் பார்த்திராதவரை திருமணம் செய்து காதல் கொள்பவர்களைபார்த்தால்-(இதுவும் காதல்…) வித்யாசமாய் தோணும்..

நட்பாய் பழகி காதலில் முடிந்தவர்களுக்கு (–இதுவும் காதல்)மேலே உள்ள இரு காதலும் வித்யாசமாயும் மேலே உள்ளவர்களுக்கு நண்பர்கள் காதலராவது வேறுபாடாகவும் தெரிவது இயற்கை…

ஆனா அதையும் தாண்டிய உண்மை என்னன்னா..அனுபவம் ஒருவருக்கொருவர் வேறாக இருந்தாலும் காதல் உணர்வு எல்லாருக்கும் ஒன்றுதான்…அதில் இந்த மூன்றில் இது சரி..அது தவறு என்ற பேச்சுக்கே இடமில்லை..அப்ப நட்பின் முடிவில் பூக்கும்காதலும் சரிதான்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அனைவருக்கும் வணக்கம்...
காதல் என்பது அருமையான உணர்வு.
யாருடன் வேண்டுமானாலும் நட்பாகலாம். ஆனால் காதல் என்பது அப்படியல்ல. காதலன் ஒரு நல்ல நண்பனாக இருக்க முடியும். ஆனால் நண்பன் என்றும் காதலன் ஆக கூடாது. அதுதான் நட்புக்குரிய மரியாதை.
பட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறை. தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி.
அபி :)

வாழ்க வளமுடன்

நடுவர் அவர்களுக்கு வணக்கம்...
நட்பு என்பது வேறு உணர்வு காதல் என்பது வேறு உணர்வு... அதை இரண்டையும் போட்டு குழப்பி கொள்வதால் பிரச்சனைகள் தான் மிஞ்சும்.... நமக்கு யார் வேண்டுமானாலும் நண்பர்கள் ஆகலாம். ஆனால் காதலர் ஒருவர் தான்... அவரிடம் முதலில் நட்பு கொண்டு தான் காதலை சொல்ல வேண்டும் என்பதில்லை.... ஒருவரை பார்க்கும் போதெ நம் மனதில் தோன்றி விடும் இவர் தான் நமக்கு என்று.... அதனால் தான் அக்காலத்தில் பெண் பார்க்கும் நிகழ்ச்சியே பிறந்துள்ளது... ஆனால் இன்றைய சூழ்னிலையில் வாழும் பெண்கள்/ஆண்கள் நட்பையும் காதலையும் ஒரே விதமாக தான் எதிபார்க்கின்றனர்.... நம்மை நன்றாக புரிந்து கொண்ட நட்பு தான் காதலாக மலரும் என்றால், நம்மை இரு நண்பர்கள் மிக நன்றாக புரிந்து அனுசரணையாக இருந்தால் என்ன செய்வது? ஏன் நம் காதலர் நம்மை புரிந்து கொள்ள மாட்டாரா என்ன? நட்பு என்று பேசி பழகி அவரிடம்/அவளிடம் உள்ள குறை நிறைகளை ஆராய்ந்து பின்பு வருவதற்கு பேர் காதல் அல்லவே... அது வியாபாரம்.... மனதை மட்டுமே நோக்குவது தான் காதல்... இது வசனம் கிடையாது.... புரிந்து கொண்ட நண்பன் காதலனாகி கணவனாக மாறும் போது அவன் நிறம் மாறினால் அப்போது தான் பிரச்சனை ஆரம்பம் ஆகும்... நம் கதை தான் முழுவதும் அவனுக்கு தெரியுமே.... "நீ என் முன்னாடியே தானெ அவனுடனும் பழகுன அப்ப அவனை ஏன் விரும்பல" என்பது போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்..... இது ஒரு எடுத்துக்காட்டு தான்
நம் நட்பு எவ்வளவோ உன்னதமானாலும் சில விஷயங்களை பகிர்ந்து/புரிந்து கொள்ளுதல் என்பது மிக கடினம். பின்பு காதல் கொண்ட பின் அவ்விஷயங்களை எதிர்பார்த்து ஏமாற்றம் எனில் பின்பு நட்பும் போச்சு காதலும் போச்சு.... உதாரணமாக நம் தோழி ஒருவர் எழுதிய கதையில் வரும் காதலர்கள் போல பொசசிவாக இருக்கும் காதலியை (காதலியாக மாறிய தோழி) பற்றி காதலன் என்ன நினைப்பான்... தோழியாக இருந்த போது ஒரு மாதிரி இருந்தாள் இப்போ வேற மாதிரி ஆயிட்டாளே.... என்று வெறுத்து காதல் கசக்குதய்யா என்று பாட ஆரம்பித்து விடுவான்... அதே போல தான் ஒரு தோழன் காதலன் ஆன பின்பு மற்றொரு தோழனிடம் சகஜமாக ஒட்டி உறவாடுவதை எல்லாம் பொறுத்துக்கொள்ள மாட்டான்... இதனால் மன வேதனை தான் அதிகம் ஆகும்........ இதுவே நேராக காதலை சொன்னால் நம் காதலருக்கு இது பிடிக்காது அது பிடிக்கும் என்று புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்... ஆனால் நண்பராக இருக்கும் போது கிடைத்த அதே சுதந்திரம் காதலர்களாக மாறிய பின்பு ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கிடைக்காது....
மீண்டும் வருகிறேன்.........

நான் சொன்ன வாதங்கள் எதன் அடிப்படையில் என்றால்,
சிறு வயது முதலே (அ) படிக்கும் காலத்தில் நண்பர்களாக பழகி பின்பு அது ஒரு கட்டத்தில் காதலாக மலர்வது வேண்டாம். அதற்காக காதலருடன் பேசும் சந்தர்ப்பத்திற்காக நட்பை ஏற்படுத்தி கொள்வதை வேண்டாம் என்று நான் குறிப்பிடவில்லை......

அப்பாட அக்கினி நட்சத்திரம் இன்றோடு முடிகிறது. இனியாவது வெயிலின் தாக்கம் குறையும்ன்னு நினைத்து பட்டி பக்கம் வந்தா பட்டி பட்டைய கிளப்புது. அப்பப்பா தாங்க முடியல. அப்போ அப்போ வந்து தண்ணீர் ஊற்றி அணைக்கும் நடுவருக்கும், அதில் எண்ணெய், நெய் ஊற்றி கொழுந்து விட்டு எரிய வைக்கும் என் அன்பு தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.

// காதலை ஏற்றபின்... நட்பும் மறைந்து விடும், காதலும் கானல் நீராய் போய் விடும்... // யார் சொன்னது ? கணவனேயானாலும் நல்ல நண்பனாக இருக்க வேண்டும் அப்படின்னு தானே அனைத்து பெண்களும் நினைக்குறாங்க. இல்லைன்னு இத யாராலும் மறுக்கவே முடியாது. அப்போ எப்படி காதலை ஏற்றபின்... நட்பும் மறைந்து போகும் ? அந்த காதலில் தான் நட்பு இன்னும் பலப்படும் காதல் இன்னும் அதிகமாகுமே தவிர கானல் நீராய் போகாது நடுவர் அவர்களே.

// இப்படிப்பட்ட புனிதமான நட்பில் காதல் மலர்ந்தால் ஒரு வகையில் ஏமாற்று வேலைத் தான் // இது எப்படி ஏமாற்று வேலையாகும் ?

நட்பை நேசிக்கிறேன் !!
நிலைக்கும் நட்பை காதலிக்கிறான் !!
நட்பு உன் மீது ! காதல் உன் நட்பின் மீது … !!!

// இதில் முக்கியமான ஒன்று நண்பர்களில் ஒருவர் மட்டும் காதலராக மாறி அதனை மற்றவரினால் அதனை ஏற்று கொள்ள முடியாத போது நட்பிலேயே விரிசல் ஏற்படும். // சரி இந்த கேள்விக்கு எதிரணி மக்கள் பதில் சொல்லுங்கள் பார்ப்போம் - "நீங்கள் உங்கள் அனைத்து நண்பர்களிடமும் ஒரே மாதிரி தான் பழகுரீன்களா ? யாரோ ஒருத்தர் தானே உங்க பெஸ்ட் பிரண்ட். அப்படி இருக்கும் பொது நீங்கள் சொல்வது எப்படி நடக்கும். உங்கள் மனம் யாரோ ஒருத்தர் மேல தானே அதீத அன்பு, நம்பிக்கை இதெல்லாம் வரும் பொது தானே காதல் பூ பூக்கும். அப்படி இருக்கும் போது மற்றவர் அதை எப்படி தப்பா எடுத்துப்பாங்க ? எப்படி ஒரே ஒருத்தர் மட்டும் உங்க பெஸ்ட் பிரண்ட்ஒ அதே போல தான் ஒரே ஒருவர் மட்டுமே உங்கள் வாழ்க்கை துணை.

// நம்ம எத்தனையோ உறவுகளிடம் பழகுறோம்... அவங்க மேல எல்லாம் காதல் வருமா??? // ஆமா அன்பு அப்படின்ன்றது தானே காதல். ஏன் நீங்க உங்க அம்மா, அப்பா கிட்ட "I Love You " அப்படின்னு சொன்னது இல்லையா ?

// அது அண்ணன், தம்பி, மாமா இப்படி அவங்களை நாம அவங்க உறவுலையே தானே வைக்கிறோம்??? நமக்கு அவங்களை பிடிக்கலயா என்ன??// ஆமா ஆனா நாம அவுங்களையும் எத்தனை பேர் கிட்ட "I Love my brother . அவனை போல நல்ல நண்பன் எனக்கு இல்லை." அப்படின்னு சொல்றோம். ஏன் கல்யாணத்துக்கு பிறகு கூட அவுங்க கிட்ட நாம எல்லாத்தையும் ஷேர் பண்ணிகிறது இல்லையா ? அவுங்கள பிடிக்காமலா இப்படி செய்வோம் சொல்வோம் ?

// அப்படி இருக்கும்போது ஏன் நட்பு என்ற உறவு மட்டும் ரொம்ப பிடிச்சிருக்குன்னு வாழ்க்கை துணை ஆகனும்??? // நான் நினைக்குறேன் எதிரணி மக்கள் ரொம்ப குழப்பத்துல இருக்காங்கன்னு. எத்தனை உறவுகள் இருந்தாலும் நாம யாரோ ஒரே ஒரு மனுஷனை தானே வாழ்க்கை துணையாக கை பிடிக்கிறோம். அது ஏன் ? நாம் எல்லா உறவுகளையும் தான் காதலிக்கிறோம். ஆனா தனிப்பட்ட ஒரு ஆண் ஒரு பெண் இருவரும் நல்ல நண்பர்களாகி அவர்களிடம் புரிதல் அதிகமாகும் போது காதல் வசப்படுகிறார்கள். அவர்கள் இருவரும் இணைந்தால் வாழ்க்கை வசந்தமாகும். அத ஏன் வேண்டாம் அப்படின்னு சொல்றீங்க ?

// வாழ்க்கை முழுக்க துணையா ஒரு நண்பனால வர முடியாதா??? // நடை முறை வாழ்க்கைக்கு வாங்க முதல்ல. எத்தனை பேர் வீட்ல ஆண்கள் இதை அனுமதிப்பாங்க. நமக்கு இன்னும் 33 % கூட முழுமையா மனசார ஒதுக்கல. நாம இன்னும் இந்தியால தான் இருக்கோம்.

// முன்பெல்லாம் ஆணகளும் பெண்களூம் சேர்ந்து பழக அனுமதித்ததில்லை. இன்று வீட்டில் அனுமதிக்கறாங்க. எதனால்??? இது இப்போ சாதாரணம்... ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியும் என்ற நம்பிக்கையில் தானே? நாளை நாமே அந்த நண்பனை கரம் பிடிக்க விரும்பினால் அவங்க நம்பிக்கையை ஒடச்ச மாதிரி ஆகாதா??? // கண்டிப்பா இல்ல. எப்படிதான் ஆனாலும் வீட்டில் ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க தான் போறாங்க. அது ஏன் அனைவருக்கும் தெரிந்த என் நண்பனாக இருக்க கூடாது ? எத்தனை பேர் வீட்ல பெற்றோரே பெண்ணுக்கு அவள் நண்பனை மனம் முடித்து வைக்குறாங்க. இத யாரும் கேள்விப்படலையா ?

எதிரணி மக்கள் கண்டதும் காதல் பற்றி பேசுகின்றனர். நாங்க புரிதலினால் வரும் காதல் பற்றி சொல்றோம். அவுங்க பார்த்ததும் ஒருவர் மேல் எப்படி காதல் வந்தது ? பெற்றோர் பார்த்த பையன் நல்ல வேலை சம்பளம் அப்படின்னு தானே. ஆனா அவுங்க கிட்டயும் முதல்ல தோழமையுடன் தானே பழக ஆசை படுவீங்க. அப்புறம் என்ன ? நன்றாக புரிந்து கொண்ட நட்பு தான் காதலாக மலர வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை. "நல்ல நண்பர்கள் காதலர்களாக மாறலாம்" இதில் தவறேதும் இல்லை அப்படின்னு தான் நாங்க சொல்றோம். எல்லா நண்பர்களும் கண்டிப்பா காதலிக்கணும் அப்படின்னு சொல்லல. நாங்க என்ன வாதம் வைக்குறோம் அப்படின்றத எதிரணி மக்கள் புரிஞ்சுகிட வேண்டும்.

நம்மை இரு நண்பர்கள் புரிந்து கொண்டாலும் நாம யாரோ ஒருத்தரை மட்டும் தானே பெஸ்டா நினைப்போம் அது என்ன தப்பா ? ஏனோ நம் மனம் ஒருத்தரை மட்டும் நினைப்பது ஏன் ?

// மனதை மட்டுமே நோக்குவது தான் காதல் // ஏன் காதலுக்கு இப்படி புதுப்புது அர்த்தம் எல்லாம் சொல்றீங்க ? எத்தனை பேர் தன் காதலுக்காக தன்னையும் அற்பனிக்குறாங்க. அதெல்லாம் ஏன் உங்களுக்கு தெரிய மாட்டேகுது ?

// புரிந்து கொண்ட நண்பன் காதலனாகி கணவனாக மாறும் போது அவன் நிறம் மாறினால் அப்போது தான் பிரச்சனை ஆரம்பம் ஆகும்... நம் கதை தான் முழுவதும் அவனுக்கு தெரியுமே.... "நீ என் முன்னாடியே தானெ அவனுடனும் பழகுன அப்ப அவனை ஏன் விரும்பல" என்பது போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்..... இது ஒரு எடுத்துக்காட்டு தான் // உங்கள் எடுத்துக்காட்டு ரொம்ப நல்ல கற்பனை. இது கண்டிப்பா நடக்காது நடுவர் அவர்களே. என்ன பிரச்சனை வந்தாலும் சரி அவன் அவளையோ, அவள் அவனையோ ஒரு போதும் விட்டுக்கொடுக்கவே மாட்டாங்க. ஏதோ ஒரு சூழ்நிலையில் மாற்றம் வந்தாலும் அது வானவில் போலவே சில நேரம் தோன்றி மறைந்து போகுமே தவிர நிறம் மாற மலர் போல என்றுமே ஒரு பிரச்சனை அப்படியே தங்கி விடாது.

"நிறம் மாறினாலும் நேசம் கொண்ட காதல் என்றுமே மாறது"

நட்பினுள் பூக்கும் அழகான காதல் - தவறேதும் இல்லை

ஜென்னிவினோ

Dare To Paly With Life

வருக.....வருக..........வருக.........முதன்முறையாக நடுவர் பதவி ஏற்றிருக்கும் அன்புத்தோழி லாவண்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்......... முத்தான தலைப்போடு வந்தமைக்கு கூடுதல் வாழ்த்துக்கள்......... பட் எந்த பக்கம் வாதாடுவது என்ற குழப்பம் வந்தது இப்போ தெளிவாகிடுச்சு............

நட்பு காதலாக முடியவே கூடாது என்று கூறி எனது வாதங்களைத் துவக்குகிறேன்.........

இரு நண்பர்கள் காதலர்களானால் அவர்களைப்போன்று நட்பாக இருக்கும் பிற நண்பர்களும் தமது நட்பை காதலாக முடிக்கும் ஆர்வக்கோளாறுகளுடன் பழக ஆரம்பித்துவிடுவர்.

அந்த ஜோடி நண்பர்களாக இருந்து தான் கல்யாணம் செய்து கொண்டனர் எனவே நாமும் தமது நண்பனையே திருமணம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் தான் மேலோங்குமே தவிர நமது நட்பு நட்பாகவே இருக்கட்டும் என்ற எண்ணம் வருவதில்லை....

நல்ல நண்பர்களுக்குள் காதல் ஏற்பட்ட பின் அங்கே நட்பு முற்றிலுமாக அழிந்து காதல் என்ற புது உறவு வந்துவிடுகிறது.

நட்பு இருதிவரை நட்பாக இருந்தால்தான் அந்த நட்புக்கே பெருமை.... அழகு.......

எனவே நல்ல நண்பர்கள் காதலர்களாகி அந்த நட்பை முற்றிலும் வேறாக மாற்றுவது தவறு........... தவறு.......... தவறு.........

இதனால் காதலுக்கு இடம் கொடுக்காத நல்ல நட்புகள் கூட சந்தேகத்திற்கு இடமான வகையில் அமைந்துவிடுகிறது......

நல்ல நண்பர்களாக இருப்பவர்களைக்கூட "எல்லாம் சும்ம ஜஸ்ட் ஃபிரெண்டுதான்னு சொல்லிகிட்டு பழகுங்க. இதுங்களும் கடைசியில நாங்க லவ் பண்ணுறோம் என்றுதான் வந்து நிக்குங்க பாறேன்........" என்று இந்த சமுதாயம் பேசிக்கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் நட்பிலிருந்து தடம் மாறியவர்களால் தானே.........

சொல்லுங்க நடுவர் அவர்களே....... சொல்லுங்க.............

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

// நண்பனைப்போல் நம்மை இந்த உலகத்தில் புரிந்து கொண்டவர் ஒருவரும் இல்லை// நூத்துக்கு நூறு உண்மை. இதற்க்கு மறு பேச்சு உண்டோ?

அதான் கணவரும்/காதலரும் நல்ல நண்பராக தான் இருக்கிறார்கள்....பிறகெதற்கு காதலர்களாக மாற வேண்டும்? இதை நானா கேட்கலை ....எதிர்கட்சி சொல்லி தான் கேட்க்கிறேன். என்ன எதிரணியினரே சரிதானே?

//வர வேண்டிய நேரத்துல வர வேண்டியவருக்கு கண்டிப்பா வந்திடும்// ரஜினி டைலாக் மாதிரியே இருக்கு. ஆனா நல்லா இருக்கு.

ஆணித்தரமாக மராலம்னு சொல்லிட்டு போயிருக்காங்க. பார்க்கலாம் எதிரணி இதற்க்கு எப்படி பதிலடி கொடுக்குறாங்கன்னு.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ச்சாந்தினி ,

அப்பாடி நீங்களாவது வனிக்கு தோல் கொடுக்க வந்தீங்களே. வாங்க வாங்க. சிங்கம் கிளம்பிருச்சு டோய்......

இப்படி வந்ததும் வாராததுமா தலைப்பை ஆராயக் கூடாது ;)

என்னடா நல்லாவே போயிடிருக்கேன்னு பார்த்தேன் :))

தலைப்பு : நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?

அதாகப்பட்டது ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நட்ப்புடன் பழகி வருவது தான் சினாரியோ. அப்படி நட்பு பாராட்டி வரும் போது ஒரு சிலருக்கு அந்த நட்பு காதலாக மாறக் கூடும். அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஆதிர்ப்பது சரியா இல்லை நட்புடன் பழிகி நட்புடனே இருப்பது முறையா? நம் தலைப்பு நடப்பில் தான் தொடங்குகிறது. அதனால் ஒருவொருக்கொருவர் நன்றாக முதலிலே அறிந்தவர்கள் தான். தலைப்பை விளக்கினேனா இல்லை மேலும் குழப்பிட்டேனா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடப்பை வேறு ஒரு பரிமாணத்துக்கு எடுத்து செல்வதற்கான சுதந்திரத்தை சூழ்நிலை அந்த காலத்தில் தரவில்லைன்னு சொல்றாங்க.

என்னங்க எதிரணியினரே இப்படி சொல்லிட்டாங்க // நட்புக்கு கொஞ்ச காலத்துல குட்பை சொல்லிட்டு அப்புறம் மறந்து போயிடுவோம்// அப்படியானு சொல்லுங்கப்பா .....

பாருங்க நம்ப இளவரசி நட்பு காதலாக மலருவது சாபமில்லை என்று ஆணித்தரமான வாதங்களை முன் வைத்துள்ளார்கள். வாங்க எதிரணியினரே வந்து இதற்க்கு சரியான பதிலடி கொடுங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்