பரோட்டா சால்னா (அசைவம்)

தேதி: August 27, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கோழிக்கறி (அல்லது)
ஆட்டுக்கறி - கால் கிலோ
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
மல்லிக்கீரை - ஒரு கட்டு
மிளகாய்தூள் - 3 ஸ்பூன்
மல்லித்தூள் - 4 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் விழுது - 4 டீஸ்பூன்
கடலை மாவு - 2 ஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ - தலா ஒன்று
பட்டை - ஒரு இன்ச்
சிக்கன் க்யூப் - அரை க்யூப்
எண்ணெய் - 5 ஸ்பூன்
தண்ணீர் - சுமார் 3/4 லிட்டர்
உப்பு - அரை ஸ்பூன்


 

கறியை சுத்தம் செய்து அத்துடன் பாதி இஞ்சி பூண்டு விழுது, பாதி உப்பு சேர்த்து பிரட்டிக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் வகுந்து, மல்லிக்கீரையை நைசாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நைசாக நறுக்கி, தக்காளியையும் நைசாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானவுடன் எண்ணெய் ஊற்றி ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ அனைத்தையும் போட்டு வாசம் வந்தவுடன் பச்சை மிளகாய், பாதி வெங்காயத்தை ஒன்றன்பின் ஒன்றாக போடவும்.
வெங்காயம் முறுக ஆரம்பிக்கும்போது மீதி இஞ்சி பூண்டு விழுது போட்டு தீயாமல் முறுகவிடவும்.
பிறகு மல்லிக்கீரை போட்டு வதக்கி ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் போட்டு தாளித்து, உடனே பிரட்டி வைத்துள்ள கறி மற்றும் தக்காளி, மீதி வெங்காயத்தை கொட்டி நன்றாக வதக்கி, பிறகு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
கறி பதமாக வெந்த பிறகு கரம் மசாலாத்தூள், மீதி 2 ஸ்பூன் மிளகாய்தூள், மல்லித்தூள், மீதி உப்பு, தேங்காய் விழுது, சிக்கன் க்யூப், கடலை மாவு அனைத்தையும் சிறிது தண்ணீரில் கரைத்து வெந்த கறியில் ஊற்றி சிறிது நேரம் மூடி போட்டு, 2 கொதிவந்தவுடன் இறக்கவும்.
சுவையான பரோட்டா கறிசால்னா தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

குக்கரில் சமைக்கும்போது 2 விசில் வந்தவுடன் இறக்கவேண்டும் என்றால் என்னவென்று தெரிகின்றது. ஆனால் 2 கொதி வந்தவுடன் இறக்கவும் என்பது புரியவில்லை. 2 கொதி வருதலை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் கொதிக்க ஆரம்பிக்கும்போது லேசாக கொதிக்கும். அப்போது ஒரு கரண்டியால் கிண்டிவிட்டு சிறிது நேரம் மூடி போட்டு வைத்தால், வேகமாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்துவிடுவோம். இதைதான் 2 கொதி என்று சொல்வது வழக்கமாகிவிட்டது. வேறு வகையாக எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
கடலை மாவு சேர்ப்பதால்தான், முதல் கொதியில் ஒரு முறை கிண்டிவிட்டு மூடவேண்டும். இந்த விளக்கம் போதுமா?

அஸ்மா ஷர்ஃபுதீன் அவர்களே,
நான் இந்த குறிப்பை செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக வந்தது, இதை சாப்பிட்ட என் கணவர் என்னை மிகவும் பாராட்டினார். நான் அவருக்கு இந்த வலைதளம் பற்றி கூறினேன், மிகவும் பாராட்டினார். என் கணவருக்கு, இஸ்லாமிய உணவு என்றால் மிகவும் பிடிக்கும், ஆனால் நாங்கள் அமெரிக்கா வந்தபிறகு, அவருக்கு பரோட்டா சால்னா ஒரு கனவாகவே இருந்தது. அவருடைய சால்னா ஏக்கம் அறுசுவை இணையதலம் மூலமாக நிறைவேரியது.

சகோதரி அஸ்மா ஷர்ஃபுதீன் அவர்களுக்கும், அட்மின் அவர்களுக்கும் மிக்க நன்றி.

நன்றி,
சுகன்யா

Dear SuganyaKarthik! ரொம்ப சந்தோஷமாக உள்ளது. செய்து பார்த்து பாராட்டியதற்கு மிக்க நன்றி! மற்றபடி உங்களுக்கு பிடித்த இஸ்லாமிய சமையல்களின் குறிப்புகள் தேவைப்பட்டாலும் சொல்லுங்கள். முடிந்தவரை தர முயற்சி செய்கிறேன்.

சிக்கன் க்யூப் என்றால் என்ன?

சிக்கன் க்யூப் என்றால் சிக்கன் கறியுடன் சில மசாலாப் பொருட்கள் சேர்த்து பதப்படுத்தி க்யூப்களாக விற்கப்படுகிறது. இது பௌடராகவும் கிடைக்கிறது. சிக்கன், பீஃப், இறால், நண்டு, காய்கறிகள் போன்றவற்றில் இதுபோல் தயார்செய்கிறார்கள்.

Thank you very much for the reply. I am sorry that I couldn't reply you soon. Because I saw it today only. Anyhow, thanks once again.

chickencube where it is available

சகோதரி விக்டோரியா அவர்களுக்கு!
சிக்கன் க்யூப் எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மசாலா பிரிவில் கிடைக்கும். குறிப்பாக அரபு கடைகளில் கண்டிப்பாக கிடைக்கும். கேட்டுப் பாருங்கள். கிடைத்தால் செய்துப் பாருங்கள். நன்றி!

ஹாய் அஸ்மா மேடம்
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களுடைய பரோட்டா சால்னா அசைவம் செய்து பார்த்தேன். ரொம்ப நன்றாக வந்தது.எங்கள் வீட்டில் எல்லொர்க்கும் பிடித்துவிட்டது . நன்றி மேடம்
மாஜிதா சுபைர்

majithazubair

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்......! நலமா? பரோட்டா சால்னா செய்துப் பார்த்து, மகிழ்ச்சியுடன் பாராட்டியமைக்கு மிக்க நன்றி!

இந்தியாவில் உங்களுக்கு எந்த ஊர்? தெரிந்துக் கொள்ளலாமா? விருப்பமிருந்தால் சொல்லவும்!

ஹாய் அஸ்மா
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் நாகர்கோவில். என்னுடைய அக்கா நாகப்பட்டினம்,காரைக்கால்,குறிஞ்சிபாடி,கடலூர்(3 வருடத்திர்க்கு 1 முறை வேலை மாற்றம்) இருந்திருக்கிர்றாள். எல்லா ஊர்க்கும் வந்திருக்கிரேன் நீங்கள் காரைக்காலா?
மாஜிதா சுபைர்

majithazubair

வ அலைக்குமுஸ்ஸலாம் மாஜிதா! ஆமாம், நான் காரைக்கால்தான்! உங்க அக்கா (காரைக்காலில்)என்ன வேலையில், எந்த வருஷத்தில் இருந்தார்கள்? அவங்க பேரென்ன? எனக்கு தெரியுமான்னு யோசிக்கதான் கேட்கிறேன்.

in this recipe you wrote spoon and teaspoon. spoon means table spoon.
i want to try this recipe tomorrow please answer this question

அன்புள்ள சகோதரிக்கு! பொதுவான நடைமுறையில் அளவுகள் எப்படியென்று தெரியாது.என்னுடைய குறிப்புகளைப் பொறுத்தவரை எங்க வீட்டில் வழக்கத்தில் உள்ளபடி இப்படி கணக்கிட்டுதான் அளவு சொல்கிறேன்.என் குறிப்புகளில் சொல்லும் ஸ்பூன் அளவுகள்,
1 ஸ்பூன் என்பது சுமார் 5 மில்லிக்கு மிகாமல் இருக்கும். 1 டீஸ்பூன் என்றால் சுமார் 10 லிருந்து 15 மில்லி, 1 டேபிள்ஸ்பூன் என்பது சுமார் 20 மில்லி அளவு இருக்கும்.1 கப் என்பது 200 மில்லி. இதே அளவுதான் என்னுடைய எல்லா குறிப்புகளிலும் இருக்கும். இந்த அளவைக்கொண்டு செய்துப் பாருங்கள். உலக நடைமுறையில் உள்ள இதன் சரியான அளவை அட்மின் அவர்கள் ஒருமுறை தெளிவுபடுத்தியிருந்தார்கள். ஆனால் அது எந்த பக்கம் என்பது நினைவில்லை. பிறகு பார்த்து சொல்கிறேன்.