ப்ராக்க‌லி கூட்டு

தேதி: September 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

ப்ராக்க‌லி பூக்க‌ள் - 2 க‌ப்
பயத்தம் ப‌ருப்பு - 1 கப்
சாம்பார் பொடி ‍ - 1/4 தேக்க‌ர‌ண்டி (காரத்திற்கேற்ப)

தாளிக்க:
க‌டுகு - 1/2 தேக்க‌ர‌ண்டி
காய்ந்த‌‌ மிள‌காய் - 3 (அ) 4
பெருங்காய‌ம் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 தேக்கரண்டி
க‌றிவேப்பிலை சிறிது
உப்பு சுவைக்கேற்ப‌


 

முத‌லில் பயத்தம் பருப்பை, தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் இரண்டு விசில் வரை வேகவிடவும்.
ப்ராக்கலி பூக்களை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். காய்ந்த மிளகாயை கிள்ளி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடான‌தும், க‌டுகு, காய்ந்த‌‌ மிள‌காய், க‌றிவேப்பிலை, பெருங்காய‌த்தூள் சேர்த்து தாளிக்க‌வும். இத‌னுட‌ன் ப்ராக்க‌லி துண்டுக‌ளை போட்டு வ‌த‌க்க‌வும். ப்ராக்க‌லிக்கு தேவையான அள‌வு உப்பு சேர்த்து, க‌லந்துவிட்டு, ஒரு மூடி போட்டு ஒரு சில‌ நிமிட‌ங்க‌ள் வேக‌ விட‌வும்.
பிற‌கு இத‌னுட‌ன், வேக‌ வைத்த‌ பயத்தம்ப‌ருப்பை சேர்த்து, கூட‌வே சாம்பார் பொடி, மேலும் சிறிது உப்பு சேர்த்து ந‌ன்கு க‌லந்துவிட்டு கொதிக்க‌ விட‌வும். கூட்டு ரொம்பவும் கெட்டியாக இருந்தால், விருப்பப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
ந‌ன்கு கொதித்து சாம்பார் பொடி வாச‌னை அட‌ங்கிய‌தும் அடுப்பை அணைத்துவிட‌வும்.
சுல‌ப‌மான‌, சுவையான ப்ராக்க‌லி கூட்டு த‌யார்! சத்தானதும்கூட!
வெறும் சாத‌த்தில், துளி நெய்விட்டு இந்த‌‌ கூட்டோட‌ சேர்த்து சாப்பிட‌ அருமையாக‌ இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுஸ்ரீ,
உங்கள் ப்ராக்க‌லி கூட்டு இன்று செய்தேன். சூப்பரோ சூப்பர்... செய்வதும் ரொம்ப மிக சுலபம்... கலக்கிட்டீங்க ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வாவ்... பிந்து, பலநாள் கேப் விட்டு, திடீர்னு இப்பதான் அறுசுவையை கொஞ்சம் எட்டிப்பார்க்க வந்தேன், முகப்பில ப்ராக்கலி கூட்டுன்னு பார்த்ததும்... :D

ப்ராக்கலி கூட்டு செய்திங்களா? உங்களுக்கு சுவை பிடித்து இருந்ததில் ரொம்ப சந்தோஷம் பிந்து. எனக்கும் ஃபேவரைட் கூட்டு இது, இந்தகூட்டு இருந்தால் கூட இரண்டு பிடி சாதம் இறங்கும்! ;-‍)

செய்துபார்த்து பதிவிட்டதற்கு ரொம்ப தேங்க்ஸ் பிந்து!

அன்புடன்
சுஸ்ரீ