பட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன?

எனது அருமை அறுசுவைத் தங்கங்களே! சிங்கங்களே! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பட்டி ஆரம்பமாயாச்சு ...:-)

தோழி கவிசிவா அளித்த அருமையான விவாதிக்க தற்போது மிகவும் அவசியமான தலைப்பு...நமது நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கும் விசயங்களைப் பற்றி பேச இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தலைப்பில் சிறிய மாற்றங்களோடு .....

**********************************************************************
பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்குள்ளாக காரணம் ..

1.பெண்களின் நடை உடை பாவனையே.,
2.பெண்களை போகப் பொருளாக பார்ப்பதாலே.,
3.பெண்களிடம் தட்டிக்கேட்கும் மனப்பான்மையின்மையே (தையிரியமின்மை)
************************************************************************

பொது இடம் என்பது பார்க், பீச், கோயில், குளம் என்பதோடு இல்லாமல் இன்றைக்கு பெண்களும் அதிகமாக பங்குகொள்ளும் பொது தளமாக இருக்கும் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தபட்டி பயங்கரமா பிச்சு உதற வசதியா நீதிமன்றக்களத்தை தேர்ந்தெடுத்தாச்சு.. தோழிகளே நீங்க கருப்பு கோட்டு போட்டு பிச்சு உதறப்போறீங்களோ இல்லை கிழிச்சு எறியப்போறீங்களோ எனக்கு தெரியாது ....நான் உங்ககிட்ட கேட்டுக்கறது ஒன்னே ஒன்னுதான்.. வேற என்ன ?? அறுசுவை விதிகளையும், பட்டியின் விதிகளையும் மீறாமல் உங்கள் வாதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

பட்டி விதிமுறைகள்:
யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்

பட்டியின் வாதம் நேற்றுடன் முடிவடைந்துள்ளதால், இன்று யாரும் பட்டிக்கு வாதங்களை பதிய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். பங்கு பெற்ற தோழிகளின் சில பதிவுகளுக்கு பதில் பதிவு எழுதிய பிறகு தீர்ப்பு இன்று மாலை வெளிவரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் . நன்றி.

Don't Worry Be Happy.

பிந்து காலதாமதமான பதிவுக்கு முதலில் மன்னிக்கவும்:-( உங்கள் பதிவை அன்றே பார்த்திருந்தும் பதில் எழுத அவகாசம் இல்லாமல் போனதற்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்:-(

உங்கல் வாதங்களில் இருந்து எனக்கு பிடித்ததில் சில..

//அந்த ஒரு சில வினாடிகள் அவள் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன! இந்த பிரச்சனை இன்றோடு முடியாது, தினமும் அவள் காலையும் மாலையும் இது போன்ற பேருந்தை தான் பயன்படுத்தி ஆக வேண்டும். தனியாக தான் வீட்டில் இருந்து வந்து போக வேண்டும்....//..

//ஏன் இதையே பாரங்கல்லில் முள் விழுந்தாலும் முள்ளில் கல் விழுந்தாலும் நசுங்கி காணாமல்'போவது முள் தான் என்று சொல்ல வில்லை?
பெண்களை பலவீனமாக காட்ட தான் வேறு என்ன?//..சபாஷ்!!

//பெண்களுக்கு எதிராக நடக்க படும் பெரும்பாலான சம்பவங்கள் குடும்ப கவுரவம், சமுதாயம் என்ற பல்வேறு காரணங்களுக்காக வெளியில் தெரிவதே இல்லை. அப்படியே வெளியில் தெரியும் விஷயங்களும் கோர்ட்டில் பென்டிங்கில் தான் இருக்கின்றன!!!// ...ஆண் என்பவன் ஒரு தனிமனிதனாக கருதப்படும் இச்சமுகத்திலோ பெண் என்பவள் மட்டும் ஒரு சமூகமாகவே உருவகபடுத்தபடுகிறாள்.

நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்களும் பாரட்டப்படவேண்டியவையே ஒரு பதிவிற்காக நீங்கள் எவ்வளவு தூரம் உழைத்திருக்கிறீர்கள் என்பதை பார்க்கும் பொழுது பாராட்டாமல் இருக்க முடியவில்லை, வாழ்த்துக்கள் :-)

Don't Worry Be Happy.

தாமதமான பதிவிற்கு முதல்ல மன்னிச்சுருங்க உஷா:-( அப்புறமா டிபன் கொடுத்தற்கு ரொம்ப தேங்க்ஸுங்க:-) சீரியசான வாதங்களுக்கு இடையில் ஹாஸ்யமான பதிவுகளையும் போட்டு சிரிக்கவைக்கவும் முடியும்னு நிருபிச்சிருக்கீங்க அதற்கு முதலில் இந்தாங்க பூங்கொத்தோடு பாராட்டுக்கள் பிடிங்க முதலில்:-)

உங்களின் வாதங்களில் எனக்கு பிடித்தவைகளில் சில ...

//பெண்ணை போக பொருளாக முன்னிலை படுத்த்வதில் முக்கிய பங்கு பெண்களுக்கே //

//சீண்டும் ஆண்களை தட்டி கேட்டு தன சுயத்தோடு வாழு பெண்கள் இல்லாத சமுதாயம் இல்லை இது. நிறைய பேர் உள்ளார்கள், ஆனால் நமக்கு அவர்களை தெரிவதில்லை, இல்லை தெரியாதது போல நடிக்கிறோம், ஏனென்றால் விழாக்கள் சடங்குகள் போன்ற போலியான சந்தோஷத்தில் முகம் தொலைத்தவர்கள் நாம் .//

// இவர்களெல்லாம் நிஜத்தில் கோழைகள், சீண்டி பார்ப்போம், படியுதா என்று அலையும் ராட்சசர்கள் . முகத்தில் பய ரேகைகள் ஓடினால், கையை பிடித்து வாங்க மிஸ் நான் ஆட்டோ பிடிச்சு விடறேன் என்று சில்மிஷம் செய்யும் அரக்கர்கள் , இவர்களை எதிர்க்க கண்டிப்பாக தைரியம் வேண்டும் , அதை வளர்த்து கொள்ள நாம் எல்லாரும் முடிவு எடுக்க வேண்டும்.//

பாலினம் என்ற ஒன்று மட்டும் வேறான காரணத்தால் சமுதாயத்தில் ஆண் என்பவன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான், பெண் என்பவள் எவ்வாறு உருவாக்கப்படுகிறாள் என்பதை மிக அருமையாக விளக்கி காட்டியிருக்கீங்க பாராட்டுக்கள் உஷா:-)

Don't Worry Be Happy.

//அக்காலத்தில் உடைகளில் கவர்ந்து இழுக்கும் வண்ணமே இருந்தன , அதை நாம் இழுத்து போர்த்திய உடை என்று நினைக்கிறோம். உண்மையில் பல கிராமங்களில் , ஹிரிஜன மக்களுக்கு (பெண்களுக்கு ) மேலாடை அணிய தடை இருந்தது உங்களுக்கு தெரியுமா ?//...ம்ஹும் இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும்:-( இப்படி தெரிஞ்சுக்கவேண்டிய பல விசயங்களைத் தொடர்ந்து பட்டிக்கு வர இயலாலதால இழந்துவிட்டேனோ?:-(

//பெண்களின் ரகசியங்கள் வெளி வராததற்கு காரணம் இது தெரிந்து போராட ஆரம்பித்தால் , தன குழந்தை மனதளவில் இந்த சமூகத்தால் உதாசீனப்டுத்தப்ட்டு பாதிப்படைவார்கள் என்பது தான்.//

//ஏதோ பொண்ணு கேட்டு விட்டால் என்று வாங்கி தருவதோ, இல்லை இதெல்லாம் போட்டா மானம் போயிடும் என்று திட்டுவதோ வேலைக்காகாது. அதே போல் அவ்வாறு உடை உடுத்தும் யாரையும் முதலில் நாம் அங்கீகாரம் கொடுக்க கூடாது .//

இப்போ எல்லாம் குடுபங்களில் சீரியல்ல வர கேரக்கடர விட ரியாலிட்டி சோல வர கேரக்ட்டர்ஸோட ஆதிக்கம்தான் அதிகம் என்பதை மறுக்க முடியாது அதுவும் குறிப்ப டீன் ஏஜ் பருவத்திடம் இவங்க ஆதிக்கம் அதிகமா இருக்கு.

Don't Worry Be Happy.

//ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்ச்சிகள் ஒன்றுதான். ஆனால் காலங்காலமாக கற்பு ஒழுக்கம் என்று பெண்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டு ஆண்களுக்கு அது தேவையே இல்லாதது போன்ற பாவனையில் வளர்க்கப்பட்டதுதான் இன்றைய நிலைக்கு காரணம். ஒரு ஆண் பெண்ணிடம் தகாத முறையில் நடந்தால் அந்த பெண் கற்பிழந்தவள் கற்பழிக்கப்பட்டவள் என்ற பட்டங்கள் வாரி வழங்கப்படும் இதே சமூகத்தில் அந்த ஆணுக்கு வழங்கும் பெயர் என்ன? ஒன்றுமே இல்லை. அவனை குற்றவாளியாக கூட பார்ப்பதில்லை. அவனது செயலையும் நியாயப்படுத்த பெண்ணின் நடை உடை பாவனையையே குற்றம் சொல்லி அவனை தப்பிக்க வைக்கிறது சமூகம். காரணம் ஆணாதிக்க சமூகத்தில் பெண் இன்றும் போகப்பொருளாகத்தான் பார்க்கப் படுகிறாள். வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் சமூகத்தின் அடிமனதில் இந்த எண்ணம்தான் ஊறிக்கிடக்கிறது நடுவரே!//...சூப்பர் கவிசிவா :-)

//ஆசிட்டை பெண்ணின் மீது வீசுவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது. நான் உன்னை காதலிக்கிறேன் உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு கவலை இல்லை நீயும் என்னை காதலித்துதான் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஆண்கள் மனதில் வரக் காரணம் என்ன? பொறுக்கித்தனத்தை ரவுடியிசத்தை ஹீரோயிசமாக காண்பிக்கும் கேடு கெட்ட சினிமாக்கள் மற்றும் பெண் என்பவள் உணர்வற்ற தனக்கான போகப் பொருள் என்ற ஆழ்மன எண்ணம்தானே?!//

//நம் சமூகம் பாலின வேற்றுமை காட்டாத ஆரோக்கியமான சமூகமாக மாறுகிறதோ அன்று இப்பிரச்சினைகள் அத்தனைக்கும் விடிவுகாலம் பிறக்கும். அதுவரை எத்தனை சட்டங்கள் போட்டாலும் பெண்கள் கட்டுப்பெட்டியாக நடந்து கொண்டாலும் இந்த கொடுமைகைள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.//

எதையுமே விட முடியாதபடி அருமையான பதிவு கவிசிவா பொன்னாடையோடு பாராட்டுக்கள்:-)

Don't Worry Be Happy.

உங்க கிட்ட வரும்போது மட்டும் எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க :-(இதற்கு முந்திய பதிவுகளைப் படித்ததும் ஒரு ஆஃப்டே ஆஃபாயி உக்கார வைச்சிருச்சு மனசு ;-()..என்னமா எழுதறீங்க கண்ணால பாக்கறமாதிரி ஒரு ஃபீல்..உண்மையைதான் எழுதறீங்கன்னாலும் உங்க அருமையான எழுத்துநடைக்கு ஒரு சபாஷ் அருட் செல்வி :-)

மது, மாது, சூது.... தெரியாமதான் கேட்கிறேன் மது,சூதுக்கு இடையில உயிருள்ள ஆறறிவுள்ள பெண்ணினத்தை சேர்த்தியிருப்பது எதில் சேர்த்தி//

//ஆணைவிட பெண் படித்திருந்தாலும் தப்பு, உயர்ந்த பதவியில் அமர்ந்தாலும் தப்பு ஏன் இந்த மாசுபடிந்த எண்ணம்??//

இப்படி ஏகப்பட்ட கேள்விக்கனைகளை நடுவர் பக்கம் திருப்பி விட்டிருக்கீங்க ..இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து விரைவில் தீர்ப்புகளோடு உங்களை சந்திக்கறேன் அருட்செல்வி பாராட்டுக்கள்:-)

இன்று மாலைக்குள் தீர்ப்பு வெளிவரும் இதற்கு மேல் யாரும் பதிவு போடவேண்டாம் ப்ளீஸ் .

Don't Worry Be Happy.

அன்பார்ந்த அறுசுவை அன்பர்களுக்கும் பட்டிமன்ற பார்வையாளர்களுக்கும், பங்குபெற்று சிறப்பித்த தோழமைக்கும் எனது முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவா பட்டினா வாதம் பிரதிவாதம் இருக்கும் ஆனா இந்தப்பட்டியில அது குறைவுதான்னு நாம எல்லாருமே ஒப்புக்கத்தான் வேணும். ஏன்னா இப்ப நடக்கிற சம்பவங்களால நாம் மிகவும் மனதால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் அதை இங்கு வெளிப்படுத்தினோம் என்பதுதான் உண்மை.

பெண் இல்லையேல் உலகம் இல்லை என்பதை நன்குனர்ந்ததால்தான் அந்நிய நாட்டு படையெடுப்பின் போதும், கொல்லைநோய்க்கிருமிகள் தாக்கி அழியாமல் இருக்கவும் என்று போற்றி பாதுகாத்து வளர்த்து வந்த நிலைமாறி பெண் என்பவள் தனக்கு அடங்கி ஒடுங்கி இருக்கவேண்டும், பெண் என்பவள் வெறும் இனக்கவர்ச்சியான உடலைத் தாங்கும் ஒரு பிள்ளை பெறும் கருவி என்று மாறியதும் கொடுமையிலும் கொடுமை .

எந்தப்பெண்ணை போற்றி வளர்க்க சீர்சிறப்புகளை செய்தார்களோ இன்று அதுவே வெட்கி தலைகுனியும்படியான போக்கு உறுவானதும் வருத்தம் தரக்கூடியவையே.

பெண்களின் இந்த நிலையை எண்ணி வருந்துவதா என்று ஒருபக்கம் தோண்றும்போதே...இதையே தவறாக எடுத்துக்கொண்டு தன்நிலையை ஆண்களின் நிலைக்கு ஒப்பாக மாற்றும் சில பெண்களும், பெண்ணினமே வெட்கும்படி போகப்பொருளாக இருக்கக்கடவதே தன் நிலை என்று எண்ணி வாழும் சில பெண்ணினங்களும்..அதேப் பெண்ணுக்கு இன்று இழிநிலை என்று வரும்பொழுது குரல் கொடுக்கக் கூட தயங்கும் பெண்ணினமாக மாறியதும் வருத்தம் தரக்கூடியவையே. இப்படி பல வருத்தங்களை நமது மனம் தாங்கிக்கொண்டிருக்கும் இவ்வேலையில் இப்பட்டியின் தலைப்பை மட்டுமே அலசித் தீர்ப்பு சொல்ல வேண்டிய கட்டாயம் இன்று.

நடை உடை பாவனையே காரணம்:-

* உடை என்பதே எதற்கு என்ற நினைவே இல்லாமல் தன் எதிர்பாலினத்தை கவருந்து தன்பால் இழுக்கும் வகையில் அதையே ஃபேசன் என்று நெஞ்சை நிமிர்த்தி நடைபயிலும் சில மாந்தரின் உடையே இதற்கு காரணம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

* தன் அழகைக்காட்டி சில நல்ல ஆண்களை கெடுக்கும் மடோனாக்களை என்ன வென்று சொல்வது?

* படகு மறைவிலோ புதர் மறைவிலோ காதலனோடு உல்லாசமாக இருந்து பொழுதைக் கழிக்கிறேன் பேர்வழின்னு அங்கு வரும் சில
வாண்டுகளையும், கன்னியவான்களையும், பெண்களையும் கெடுக்கும் இத்தகைய பெண்களின் நடத்தையே காரணம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

* பேருந்தில் நடத்துனரின் கூச்சலைக்கூட கண்டு கொள்ளாமல் செல்லிடையில் கடலை வறுக்கும் மாணவிகளின் நடத்தையால் எறிச்சலுற்ற பல இடிமன்கள் இடிக்க காரணம் என எடுத்துக்கொள்ளலாமா?

* கிராமத்து குளத்தில் குளித்து மார்போடு உடையணிந்து வரும்பொழுது காணாத கவர்ச்சி, இங்கே நகரத்தில் இருசக்கர வாகணவிபத்தில் தன் துப்பட்ட பறிகொடுத்து தாறுமாறாக விழுந்த இளம்பெண்ணிடம் மட்டும் கூடியிருந்த சில ஆண்களின் கண்களில் காணப்படுகிறது என்றால் என்ன சொல்ல...உடை என்பது பார்ப்பவரின் எண்ணெத்தைப் பொருத்தே அமைகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?

* ட்ரவசரும், பனியனும் போட்டு திரையில் ஆடிப்பாடி நடிக்கும்பொழுது மட்டும் மனம் விரும்புகிறது என்றால் விளையாட்டுத்துறையில் சாதனைப் படைக்கும் பெண்களின் உடையில் மட்டும் கவர்ச்சியைக் கண்டேன் என்று போர்க்கொடி தூக்குவதின் காரணம் என்ன?

இப்படி ஏகப்பட்ட புகார்களும் , ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களையும் வைத்துப்பார்க்கும்போது நடை உடை பாவனை மட்டுமே காரணம் என்று சொல்லமுடியாது அல்லவா., சில ஆண்களின் பார்க்கக்கூடிய பார்வையிலும் இருக்குன்னு ஏத்துக்கலாம் இல்லையா.

போகப்பொருளே:-

* சாலையில் தன்னை முந்திச்செல்லும் வாகனம் ஒரு பெண்ணுடையது என்று தெரிந்தால் உடனே முந்திக்கொண்டு முன்பே செல்ல முற்படுவது இல்லையேல் வண்டி மேல இடித்துவிடும் படி பாவனை செய்து அப்பெண்ணை மிரள வைப்பது இப்படி தனக்கு கீழேதான் பெண் என்ற எண்ணத்தைக் கொண்ட ஒரு ஈகோபிடித்த ஆடவன் செய்யும் செயல் இப்படி..

* பேருந்தை பேருந்து நிறுத்ததில் நிறுத்தாமல் சற்று தள்ளி நிறுத்தி பெண்களை ஓடவரச்செய்து தான் பெரிய் கொம்பன் என்ற தன் ஈனப்புத்தியை வெளிக்காட்டி இச்சையை நிறைவேற்றிக்கொள்வது இப்படி.....

* மதிப்பெண்ணிலோ, அல்லது வகுப்புக்கு தாமதமாக வரும் பெண்ணிடம் நீ அலங்காரத்தில் காட்டும் அக்கறையை படிப்பில் காட்டினால் தேவலை என்று அனைவர் முன்பும் கூறி தன் வக்ரபுத்தியைக் காட்டி மன சாந்தி அடைந்து கொள்வது இப்படி..

* தனக்கு பதில் பதிவு தன்னை மடக்கும்படியாகவும் அறிவார்த்தமாக கூறியது பெண் என்று தெரிந்துவிட்டால் தொடர்ந்து கீழ்த்தரமான பதிவுகளால் வசைபாடி இன்பம் காண்பது இப்படி...

* நிறைமாதப் பெண் என்றாலும் இடம்கொடுக்க மறுத்து கடைசிவரை தள்ளாடி தள்ளாடி பேருந்தில் பயணம் செய்வதைப் பார்த்து ரசிக்கும் குரூர புத்தியைக் காட்டி மனதை நிறைவுசெய்வது இப்படி...

* தனது கடையில் நாப்கின் வாங்கும் பெண்ணிடம் சிறியதா பெரியதா என்று நக்கல் புத்தியைக் காட்டி இன்பமுருவது இப்படி...

* தன்னைக் கடந்து செல்லும் பெண்ணின் பின்னே சென்று கைப்பேசியில் பேசுவது போல் பாவனை செய்து வரியா வரியா என்று நச்சரித்து அதில் எரிச்சல் உற்றும் ஒன்றும் கேட்கமுடியாமல் போகும் அப்பெண்ணின் நிலையை எண்ணி களிப்புருவது இப்படி...

*ம் பேருந்தை விட்டு விட்டால் எப்படி ? சுமைமாடுமாதிரி பெண்ணின் மேல சரிவதும், இன்னும் இன்னும் என்று நெருடுவதும் அதிலிருந்து தள்ளி தள்ளிச் செல்லும் பெண்ணை கீழ் கண்ணால் பார்த்து தான் ஆண்மகன் என்று கேவலாமாய் வெளிகாட்டும் கேடு கெட்ட ஜென்மங்களின் செயல்கள் என்று இப்படி....

. இப்படி இப்படி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. பொது இடங்களில் பெண்கள் மீது தாக்குதல்களை நடத்தும் சில ஆண்களின் வக்கிரபுத்திகளை

இது அவள் பெண்ணாக பிறந்ததினாலே அன்றி அவளின் நடை உடை பாவனையைய் மனதில் வைத்தோ அல்லது யாரோ ஒரு பெண்ணால் பாதிப்புக்கு உள்ளானதாலோ இல்லை மதுஅருந்தியதாலோ இல்லைன்னு அடிச்சு சொல்லலாம் இல்லையா. போகப்பொருள் என்று மட்டுமே அவனது எண்ணமானால் எல்லா பெண்களிடம் அல்லவா இருக்க வேண்டும்..நான் சொல்வது அதிக அளவில்., ஆனால் அவனோ தனது வக்கிரப்புத்தியைக் வெளிக்காட்ட ஒரு வடிதளமாக அவன் கருதுவது வாய்பேசா மடந்தையான பெண்களிடம் மட்டுமே என்பதும் உற்று நோக்கி கவனித்தால் உண்மை விளங்கும் அல்லவா.

தட்டிக்கேட்கா மனப்பான்மை:-

மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளையும் இதற்கும் சான்றாக எடுத்துக்கொள்ளலாம். இதுல கால்வாசிக்கும் குறைவான எதிர்ப்புகளே பதிவு செய்யப்பட்ட அவலமே இன்று பன்மடங்காக போகப்பொருளாக பெருத்து கொழுந்துவிட்டு எறிகிறது.பொது இடங்களில் என்று மட்டும் இல்லாமல் அனைத்து இடங்களிலுமே என்பதுதான் இன்றைக்கு வருந்தக்கூடிய செய்திகாக இருக்கிறது.

ஒரு சின்ன சம்பவம் நம்ம ஸ்டைல்ல சொல்றேங்க எவ்வளவு நேரம்தான் செந்தமிழைத் துணைக்கு அழைக்கிறது

நான் காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போது நடந்த நிகச்ச்சி ஒன்னு, காந்திபுரம் க்ருஷ்ணாஸ்வீட் பக்கத்தில இருக்கற பேருந்து நிறுத்த்தில் எங்க்கூட இன்னும் இரண்டு மூணு பொண்ணுங்க பஸ் ஏற ரோட்டுகு வந்து நின்னோம். பஸ் வரவும் ஏறப்போன எங்களை ஒரு ஆள் உரசிட்டே கடந்துபோனான். பர்ஸ்ட்டு கடந்து போற அவசரத்துல தெரியாம இடிச்சிருப்பான்னு நினைசோம். ஆனா அதுக்கப்புறம் பஸ் கிடைக்காம திரும்ப ஸ்டேண்டுலேயே நிக்கவேண்டியதா இருந்தப்பா அவ்வளவு அவசரமா போனவன் மெதுவா திரும்ப பழய இட்த்துக்கே வந்து நின்னான். மறுபடியும் பஸ் வர ஏறப்போன எங்களை ஒன்னும்தெரியாதவன் மாதிரி வேகமா கடந்துபோற மாதிரி உரசவர தடாருன்னு தள்ளி நின்னு முன்னே போனவன் மீது என் தோழி கையில் இருந்த குடையை வீசி அடித்தாள். அய்யோ அம்மான்னு சத்தம்போட்டுட்டு திரும்பி எங்களைப் பாத்த்தும் ஓ இதுங்க எமகாதகிங்கபோலன்னு நினைச்சு ஓடற பஸ்ஸை பிடிச்சு ஃபுட்போர்டுல தொங்கிட்டு எகத்தாளமா வேற எங்களைப் பாத்துட்டே சிக்னல் தாண்டியதும் இறங்கிட்டான். அதுவரை எங்களிடம் இருந்த தையிரியம் பூரா ஃபனால்;-( அங்க இருந்தவங்க ஒருத்தரும் ஒண்ணுமே கேட்கலை ஓடிப்போயி அவனப் பிடிக்கவும் முடியாதுதான், ஆனாலும் ஒருத்தரும் வந்து என்னாச்சுன்னுகூட கேட்கலை அவனோ சிக்னல் ஆப்போசிட்ல நின்னுட்டு எங்களையே பாக்கறான். எங்களுக்கோ வரவேண்டிய பஸ் வரவே இல்லை. சரி இரண்டு ரோடு தாண்டி நடந்து போனா வீடு வந்துரும்னு கால்நடையா போலாம்னாலும் பயம் வேற .. ஒருவேளை பின்னாடியே ஃபாலோ பண்ணி வீட்டக்கண்டுபிடிச்சுருவானோ, போர வழில எதாவது செஞ்சுடுவானோ?:-( அங்கப் பூராவுமே வீடுகள் இருக்கும் தெருவா இருந்தாலும் கதவ பூட்டிட்டு உள்ளதான் இருப்பாங்க, ஆள் நடமாட்டம் வேற இருக்காதே கத்தி யாரையும் கூப்பிடவும் முடியாதுன்னு பயங்கரமா திங்க் பண்ணிட்டே நின்னுட்டு இருந்தோம். கொஞ்ச நேரத்துல அவன் காணாம போனான் உடனே வேகமா சிக்னல க்ராஸ் பண்ணி போறோம் எங்கிருந்தோ பறந்து ஓடிவரான். ஆஹா முடிஞ்சோம்னு நினைச்சு பக்கத்துல இருந்த கடைக்குள்ள பூந்தோம். அங்கிருந்த கடை ஓனர்கிட்ட இப்படி ஒருத்தன் பின்னாடி ஃபாலோ பண்றான்னு ஏதோ தெரிஞ்சவங்கிட்ட சொல்றமாதிரி சொல்லி அவரும் அதே மாதிரி சாதாரணமா பேசிட்டே வெளிய வந்து நின்னு பாத்துட்டு அவன் போயிட்டான் இனி இப்படி எல்லாம் பண்ணி வம்புல மாட்டிக்காதிங்கன்னு புத்திமதி!? சொல்லி அனுப்பினாரு..

ஏதோ கொஞ்ச நஞ்சமா எட்டிப்பாத்த தையிரியமும் அதோடு ஃபனாலான்னா அதான் இல்லிங்க இங்க சார்ஜால இதே மாதிரி ஒருநாள் சூப்பர் மார்க்கெட்டுக்கும் என் வீட்டுகும் ஒரே ரோடுதான் வித்தியாசம் அதனால கடைக்கு போயிட்டு நடந்து போகும்போது பின்னாலயே ஒரு சின்னப்பையந்தான் ஒரு பதினைஞ்சு வயசு இருக்கும் மேல இடிச்சுட்டு போறான் . எனக்கு வந்ததே ஆத்திரம் கையில இருந்த செல்ஃபோன தூக்கி கரக்ட்டா அவன் பின்னந்தலையில வீசி எறிஞ்சேன். அந்தக்காலத்து செல்ஃபோன் நல்ல வெயிட் சரியான அடி அவனுக்கு.. திரும்பி பாத்து முறைச்சான் ஆனா அவன் ஓடலை., ஆனாலும் இந்த தடவை எனக்கு பயமும் வரலை. இத்தூனுண்டு பையனுக்கு எவ்வளோ லொல்லுன்னு பயங்கர கோவம் நல்லாக் காட்டுக்கத்தலா கத்தினேன் போலிச கூப்பிடட்டானு, பயனுக்கு நான் போலீசக்கூப்பிடறேன்னு சொன்னத விட என் மூஞ்சியப் பாத்த்துதான் மிரண்டுட்டான் போல (சாரி சாரின்னு சொல்லிட்டு திரும்பி பாக்காம நடந்து போயிட்டான்.

அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தையிரியம் தலைதூக்க ஆரம்பிச்சது சாப்பிங் மால்லே பொருளை எடுக்கும்போதும் பின்னாடியே நடந்து வரவன்களை ஒருமுறை நின்னு முறைச்சு முன்னாடி போன்னு வழிய செய்கையாலே காட்டினாலே போதும். வம்பு பண்ணனும் நினைக்கறவன் கண்டிப்பா பயந்து போயிருவான். ஆனால் அவன பயப்படுத்தறதுக்கு பதிலா நாம பயந்து ஒதுங்கி போனாதான் சொந்தக்காசுல சூனியம் வைச்சிக்கிட்ட மாதிரி எல்லா வினையும் வந்து சேரும்.

உங்களுக்கு ஒண்ணும் ஆகலைங்க ஆனா தட்டிக்கேட்டு வினோதினிக்கு ஆன மாதிரி எவனாவது ஆசிட் வீசிட்டா என்ன பண்ணன்னு கேட்டா என்ன சொல்ல அப்ப யார் என்ன பண்ணினாலும் எந்த பொறுக்கி காதலிக்கறேன்னு சொன்னாலும் ஏத்துக்கிட்டு போகனுமா என்ன?

ஆண்கள் நெஞ்ச நிமிர்த்து நடந்து போனாதான் அழகுன்னு , பெண்கள் தலை குனிந்து நெளிந்து வளைந்து போனாதான் அழகுன்னு கவிதை எழுதறேன், கருத்து சொல்றேன்னு சொல்லி ஆண் ராஜாகிட்ட காசு வாங்க இருந்த கும்பல் எழுதினதுக்கப்புறம் இப்படியே இருந்தா நல்லாயிருக்கும்னு கடைபிடிக்கப்படட்டதோன்னு தோணுதுங்க . ஏன்னா கொஞ்சம் யோசிச்சு பாருங்க தனக்குமுன்னே பலமில்லயின் போர்வீரர்கள் ரத்தம் தெரிக்க காட்டு கூச்சலோடு பாய்ந்து பாய்ந்து தலைகளையும், உடல்களையும் கண்டம் கண்டமாக வெட்டி அறுத்து தூக்கிப்போடும் ஒரு போர்க்களத்தில் தன் கணவர் தசரதனுக்கு, நாணிக்கோணி அந்தப்புரத்தில் பதுமையாக வீற்றிருக்கவேண்டிய கையேயி பாய்ந்து ஓடும் குதிரைகளின் கடிவாளத்தை மெல்லிய?!! கரங்களினால் கட்டுபடுத்தி தன் இச்சைக்கு ஏற்றவாரு செயல்படுத்தினால் என்றால் கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க...ஒண்ணும் வேணாம் வீட்டில அலங்காரம் பண்ணி சும்மா பொழுதைக் கழிக்கிற் பெண்ணிடம் திடீர்னு ஒரு யமஹாவை கொடுத்து ஓட்டச்சொன்னால் எப்படி இருக்கும் அந்தப்பெண்ணுக்கு அட்லீஸ்ட் ஸ்கூட்டி ஓட்டர பொண்ணுகிட்ட கொடுத்துபாருங்களேன்., வண்டி ஓட்டிப்பழக்கம் இருந்தா எல்லா வண்டியும் ஓட்டமுடியுமா என்ன? அதுஅதுக்கு தகுந்த பயிற்சியும், முனைப்பும் இருந்தாதாங்க முடியும், அப்படி இருக்கும்போது கையேயி மட்டும் எப்படி தேரோட்டினான்னு யோசிக்கவேண்டாமா? சோ பெண்ணுக்கு பயிற்சி இருந்தா எதைவேணா சாதிக்கலாம்னு புரியுதுங்களா? இதை ஏன் சொல்றேனா ..பேருந்து நிறுத்த்தில் என் ஃப்ரெண்டு குடையாலயே தூக்கி அடிச்சது அன்னிக்கு வேணா திரும்பவும் பயந்ததுதான் மிச்சம்னு ஆயி ஒண்ணும் பண்ணமுடியாமப் போச்சுன்னு அர்த்த்தை கொடுத்தாலும் பின்னாளில் எனக்கு தையிரித்தை வளர்த்த சம்பவமா அதுதாங்க மாறிப்போச்சு.

அதனால சொல்ல வரது இதுதாங்க ..செயல்களில் சீறாதப் பெண்களே சில ஆண்களின் இலக்காக அமையும்பொழுது அந்நிலையை விட்டு மீண்டு வர நினைக்காமல் பெண் இனம் சமூகத்தைக் காரணம் காட்டி இன்னும் ஏன் தயங்க வேண்டும் என்று புரியவில்லை. பயம்தான் காரணம் என்றால் அது வெறும் நகப்பூச்சே..பெண்கள் என்றால் யாரென்ற உண்மை அவர்களிடம் இருந்து மறுக்கப்பட்ட காரணமாகவே இருக்கும். பெண்ணை பெண்ணாக வளர்க்காமல் தன் இஷ்டத்துக்கு தனக்கு அடிமையாக மாற்றியமைத்த ஆண் இனத்திற்கு ஏற்ற வகையில் தன்னை போகப்பொருளாகவே கருதுவதாலும்..அந்த எண்ணத்திலிருந்து மீண்டிருந்தாலும் அவர்களை அடக்குவதும் தன்னால் இயலாத காரியம் என்றும் பெண்கள் எண்ணுவதாலயே பொது இடங்களில் பெண் பாலினத் தொல்லைக்கு காரணம். இதுதான் பட்டியின் தீர்ப்பும் கூட: பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் ஆண்களின் பார்வையில் போகப்பொருளாக பெண்கள் காட்சியளித்தாலூம் கூட பெண்களின் தட்டிக்கேட்கா மனப்பான்மையே காரணம் என்பேன்.

ரம்யா சொன்னமாதிரி எது சரியில்லையோ அதையெல்லாத்தையும் தட்டிக்கேளுங்கன்னு சொல்லி என்னோட தீர்ப்பு உரையை முடிக்கிறேன். இன்னும் எத்தனையோ விசயங்களைச் சொல்லனும்னு நினைச்சிருந்தேன். அதையெல்லாத்தையும் இதே மாதிரி வேறொரு சந்தர்ப்பத்தில் அறுசுவையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தற்போதைக்கு பெரிய மனசு பண்ணி என்னோட தீர்ப்பை ஏத்துக்குவீங்கங்கற நம்பிக்கையோடு நன்றி வணக்கம் :-)

Don't Worry Be Happy.

ஜெய்... அம்மா... எம்புட்டு பெரிய தீர்ப்பு!!! :O ஆனா ஆராய்ந்த விதமும், உதாரங்களும் உண்மை உண்மைன்னு தலையை ஆட்ட வைத்தது. சூப்பர். கடைசியில சொன்னிங்க பாருங்க... தைரியம் இல்லை, தட்டி கேட்பதில்லைனு... உண்மை. 1 பொண்ணு தட்டி கேட்டா அட்வைஸ் பண்ணுவாங்க... 10 பொண்ணுங்க தட்டி கேட்ட அது தான் சரின்னு சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. அதனால் நீங்க சொன்ன தீர்ப்பை நான் ஆமோதிக்கிறேன். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். :)

கூடவே இந்த அப்பாவி வனி பதிவு போடாததுக்கு பெரிய மன்னிப்பு... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெய் தீர்ப்பு அருமை, உங்களோட பலத்த வேலை பளுவுக்கு இடையிலும், பட்டியை பாங்குற நடத்தியமைக்கு வாழ்த்துக்கள் தோழி:)
ஒவ்வொரு பதிவிற்கும் விளக்கம் கொடுத்து பதிவிட்டவர்களுக்கு ஊக்கமளித்து, மேன்மேலும் யோசிக்கவெச்சிருக்கீங்க நன்றி:)
புராணகாலத்திலிருந்து உதராணம் காட்டியதிலிருந்தே தெரிகிறது நீங்க இந்த தீர்ப்பை எழுதுவதற்கு எவ்வளவு தூரம் செயல்பட்டிருக்கீங்கனு, நன்றி நன்றி:))
மேலும் பல பட்டிகளுக்கு பொறுப்பேற்று நடத்த வாழ்த்துக்களும், வணக்கங்களும் ஜெய்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஜெய் அக்கா

தைரியமான தீர்ப்பு ! இப்போதிருக்கும் குழப்பமான , தன்னம்பிக்கை சற்றே குறைவாயுள்ள மனநிலைக்கு இந்த தீர்ப்பு ஒரு ஹெல்த் டானிக் மட்டுமல்ல. பயஎதிர்ப்பு ஊட்டச்சத்து !

நம் பெண்ணை ,நேரடியாக களம் இருக்காமல் எப்போதும் பிராக்டீஸ் உடன் , தற்காத்துக்கொள்ள துணிச்சலும் கூடவே தட்டி கேட்கும் மனபான்மை யும் இருக்க வேண்டிய அவசியமும் ஏன் எதற்காக என்ற கேள்விகளுக்கு விடையும் நன்றாக கிடைத்தது.

வாய்ப்பு கொடுத்த உங்களுக்கும், பங்கேற்ற அக்கா தங்கச்சிகளுக்கும் , நேயர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்