பாதுஷா | arusuvai


பாதுஷா

வழங்கியவர் : arusuvai_team
தேதி : புதன், 04/10/2006 - 22:55
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4.25
12 votes
Your rating: None

பாதுஷா, அனைவரும் விரும்பும் மற்றுமொரு இனிப்பு. இதை செய்வது கடினம் என்ற தவறான எண்ணத்தினாலோ என்னவோ, வீடுகளில் இதை அதிகம் தயாரிப்பதில்லை. உண்மையில் செய்வதற்கு மிகவும் எளிதான இனிப்பு இது. கொஞ்சம் பதம் பார்க்கும் திறன் வேண்டும். அது பழக்கத்தில் வந்துவிடும். முதல்முறையே எந்த உணவும் மிகச் சரியாக வந்துவிடாது. இரண்டு மூன்று முறை அதை முயற்சி செய்யும்போது பக்குவம் தானாக வந்துவிடும். அந்த வகையில் இந்த பாதுஷாவையும் முயற்சி செய்து பாருங்கள். இந்த செய்முறையில் கடினமான வேலை என்று ஒன்றும் இல்லை. பாதுஷாவை அதன் வடிவத்திற்கு மடிப்பது (பின்னுதல் என்று சொல்வார்கள்) ஒரு கலை. பொறுமையுடன் முயற்சித்தால் எளிதில் வந்துவிடும். தேவையானப் பொருட்களில் வீடுகளில் செய்யும் அளவிற்கு குறைந்த அளவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், படங்களில் அதிக அளவில் தயாரிக்கும் முறை விளக்கப்பட்டுள்ளது. தயாரிக்கும் முறை ஒன்றுதான்.

 

  • மைதா - அரைக் கிலோ
  • உருக்கின டால்டா - 200 கிராம்
  • தண்ணீர் - 300 மில்லி
  • லெமன் சால்ட் - கால் தேக்கரண்டி
  • சோடா உப்பு - ஒரு சிட்டிகை
  • பாகு காய்ச்ச:
  • சீனி - அரைக்கிலோ
  • தண்ணீர் - கால் லிட்டர்

 

மைதா மாவினை சலித்து எடுத்து ஒரு அகன்ற தட்டு அல்லது தாம்பாளத்தில் கொட்டி, மாவின் நடுவில் குளம் போல் குழி செய்து கொள்ளவும். அதில் சோடா உப்பு, லெமன் சால்ட், தண்ணீர், டால்டா ஊற்றி மாவினை ஒன்று சேர இரண்டு கைகளாலும் நன்கு பிசையவும்.

மாவை நன்கு அடித்து பிசைந்து புரோட்டா மாவு பதத்திற்கு கொண்டு வரவும். மாவு பதம் முக்கியம். பிசைந்த மாவினை ஊற விடவேண்டிய அவசியம் இல்லை. பின்னர் அந்த மாவினை உருளையாக உருட்டி, எலுமிச்சையை விட கொஞ்சம் பெரிய அளவிற்கு துண்டங்களாக கிள்ளிப் போடவும்.

இனி பாதுஷா வடிவத்திற்கு மாவினை உருட்டி பின்ன வேண்டும். அதற்கு, கிள்ளிய மாவினை ஒவ்வொன்றாய் கையில் எடுத்து உருண்டையாக உருட்டி, இரண்டு உள்ளங்கைககளுக்கு நடுவில் வைத்து, படத்தில் காட்டியுள்ளபடி அழுத்தி தட்டையாக்கிக் கொள்ளவும். மிகவும் மெல்லிய தட்டையாக இருக்கக் கூடாது.

இப்போது பின்னுதல் முக்கியமான அம்சம். தட்டிய மாவினை விரல்களில் எடுத்து, ஒரு கையின் கட்டை விரலினால் சற்று குழிவாக கிண்ணம் போல் வருமாறு அழுத்திப் பிடித்து, மற்றொரு கையின் கட்டை விரலால் மடித்து விட்டு, விரல் நகத்தால் சற்று அழுத்தி விடவும்.

இதனை அப்படியே ஒரு சுற்றாக சுற்றி ஆரம்பித்த இடத்தில் முடிக்கவும். இப்போது படத்தில் காட்டியபடி பாதுஷாவின் ஒரு புறம் தோற்றமளிக்கும்.

பாதுஷாவை திருப்பி, உள்ளங்கையில் வைத்து, மத்திய பாகத்தில் ஒரு விரலால் லேசாக அழுத்தவும். இது பின்புறம் லேசாக குழி போன்று தோற்றம் உண்டாக்கும். முன்புறத்தின் மையப் பகுதி சற்று முன்நோக்கி வந்திருக்கும். இப்படியே அனைத்து மாவையும் பாதுஷாக்களாக தயார் செய்யவும்.

அடுத்து ஜீரா காய்ச்ச வேண்டும். அரைக்கிலோ சீனிக்கு கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். முதலில் ஒரு கொதி வந்தவுடன் 100 மில்லி பால் ஊற்றவும். பால் ஊற்றியதும் அழுக்குகள் அனைத்தும் திரண்டு பாகின் மீது மிதக்கும். அவற்றை சாரணி கொண்டு எடுத்துவிடவும். சுமார் 10 நிமிடங்கள் பாகு கொதிக்கவிட்டு, கையில் ஒட்டும் பதம் வந்தவுடன் இறக்கி, ஆறவிடவும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிது மாவை உருட்டிப் போட்டால் எண்ணெய்யில் பொரிப்பொரியாய் வரவேண்டும். அந்த அளவு சூட்டில் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். எண்ணெய் மிகவும் சூடாகிவிடக்கூடாது. இப்போது தயார் செய்து வைத்துள்ள பாதுஷாக்களை எண்ணெய் தெறிக்காதவாறு எச்சரிக்கையாய் வாணலியில் போடவும்.

நன்கு கவனிக்கவும். இதனை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து செய்யவேண்டும். பாதுஷாக்கள் அனைத்தும் எண்ணெய்யின் அடியில் சென்று தங்கிவிடும். இப்போது ஒரு சாரணியால் எண்ணெய்யை மேலும், கீழும் விடாது அழுத்தினால், பாதுஷாக்கள் பொரிந்து, வெண்ணிறமாகி மேல் நோக்கி வந்து மிதக்கும். அனைத்து பாதுஷாக்களும் மேலே வரும் வரை அவ்வாறு செய்யவும்.

வெண்ணிறமாய் பாதுஷாக்கள் மேலே வந்து மிதக்க ஆரம்பித்த பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். அதிக தீ கூடாது. சுமார் 15ல் இருந்து 20 நிமிடங்கள் வேகவேண்டும். பாதுஷா நன்கு வெந்து, பொன்னிறமாக படத்தில் காட்டியுள்ளபடி மாறியதும், சாரணி கொண்டு அரித்து எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் போட்டு எண்ணெய் வடிய விடவும்.

எண்ணெய் முழுவதும் வடிந்தவுடன், சீனிப் பாகும் சற்று ஆறியதும், பாதுஷாக்கள் அனைத்தையும் சீனிப் பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊறவிடவும்.

சீனிப் பாகு இறங்கி பாதுஷாக்கள் நன்கு மிருதுவானவுடன் எடுத்து தனியே வைக்கவும். மேலே சிறிது பாகினை ஊற்றி விடலாம். இப்போது அதீத சுவையான பாதுஷா தயார்.




இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..



ஆலோசனை தேவை!

படங்களும் செய்முறை விளக்கங்களும் மிகவும் அருமை! ரொம்ப நன்றி! ஆனால், நான்காவது படத்தில் காட்டியுள்ளபடி விரல் நகத்தால் அழுத்தி அச்சு ஏற்படுத்துவதற்கு அந்தளவு நகம் கிடையாதே, வேறு எந்த முறையில் அந்த மாதிரி அச்சு கொண்டுவரலாம்? ஆலோசனை உண்டா? ப்ளீஸ்!

பாதுஷா மடித்தல்

அதுபோல் செய்வதற்கு அச்சுகள் இருப்பதாக தெரியவில்லை. நமது ஸ்வீட் மாஸ்டருக்கும் தெரியவில்லை. விரல்களால்தான் மடித்து விடுகின்றனர். அந்த அளவிற்கு நீளமாக நகம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் இருந்தால் கூட போதுமானது என்று சொல்கின்றார். பாதுஷாவை அதுபோன்றுதான் மடித்து செய்யவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வீடுகளில் செய்வதற்கு எளிமையான முறை ஒன்றையும் செய்து காட்டினார். அதன் படங்கள் கீழே உள்ளன. easy way easy way முதல் படத்தில் காட்டியவாறு உள்ளங்கையில் வைத்து ஒரு விரலால், பாதுஷாவின் ஒரு புறத்தில், மத்தியில் குழி செய்து கொள்ளவும். பின்னர், இரண்டாவது படத்தில் கண்டவாறு, கை விரல்களை மடக்கி, கட்டை விரல் ஆரம்பிக்கும் இடத்தில் பாதுஷாவின் மறுபுறத்தை வைத்து, சற்று அகலமான குழி போல் செய்து கொள்ளவும். கடைகளிலும்கூட இப்போது இது போன்றுதான் செய்து கொடுக்கின்றார்கள். மடித்து பின்னுவது நேரம் எடுக்கும் என்பதால். இந்த செய்முறை உங்களுக்கு எளிதாக இருக்கலாம்.

அருமை..

பாதுஷா செய்வதை கற்றுக் கொள்ளவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது. Thank you very much. வரும் தீபாவளிக்கு எங்கள் வீட்டில் நிச்சயம் பாதுஷா உண்டு. உங்கள் ஸ்வீட் மாஸ்டருக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர் பாகு செய்ய தெரியுமா? தெரிந்தால் அதையும் வெளியிடுங்கள். ப்ளீஸ்.. அப்புறம் சோன்பப்டி, மில்க் ஸ்வீட்ஸ் இப்படி நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. உதவுவீர்களா?

Thanks

Thanks a lot. I want rasagulla recipe with illustrated photos. Please ..

thank you so much.

பாபு அவர்களூக்கு படங்களும் செய்முறை விளக்கங்களும் மிகவும் அருமை!thank u so much.
லெமன் சால்ட் என்றால் என்ன?

sajuna

Thank u very much!

Thank u very much!

நன்றி

அனைவருக்கும் நன்றி. சகோதரி ஈஸ்வரி அவர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதில் எமக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு எப்படி செய்கின்றார்கள் என்பது தெரியவில்லை. எங்கள் ஸ்வீட் மாஸ்டரின் நெய் மைசூர் பாகும் நாவில் போட்டால் கரைந்து போகக்கூடிய அளவிற்கு மென்மையாகவும், இனிப்பாகவும் இருக்கும். உங்களுக்காக அடுத்த குறிப்பு, "நெய் மைசூர்பாகு" !!

லெமன் சால்ட்

லெமன் சால்ட் என்பது எலுமிச்சை எண்ணெய்யுடன் கலந்து, சுத்திகரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் உப்பு. எலுமிச்சை மணம் இருக்கும். இதன் தயாரிப்பில், சிட்ரிக் அமிலம், அஜினோமோட்டா போன்றவை பயன்படுத்தப்படுகின்றது என்பது தெரிகின்றது. இது குறித்து மேலும் விபரங்களை பிறகு திரட்டி வெளியிடுகின்றோம்.

லெமன் சால்ட் என்ற பெயரிலேயே இது கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றது. வாங்கிப் பயன்படுத்தவும்.

லெமன் சால்ட்

தெரியாத ஒன்றை
தெரிந்து கொன்டேன்.உடன் விளக்கம் தந்ததர்க்கு நன்றி

sajuna

இன்று தான்

இன்று தான் நான் பாதுஷா செய்து பார்த்தேன்,ஆனால் எண்ணெயில் பாதுஷாவை போட்டும் அது மேலே வரவில்லை.ஏன்?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா