தேவதையை கண்டேன்... - பிந்து

மீரா அன்று அலுவலகத்தை அடைந்த போது ஏனோ என்றும் இல்லாத விதமாக மனதில் ஒருவித பரபரப்பு இருந்தது. ஏதோ நடக்க போவதாக உள்ளுணர்வு கூறியது! உள்ளுணர்வின் காரணமாகவோ என்னவோ எண்ண வட்டத்திலிருந்து வெளியில் வந்தவள், மனம் வேறு சிந்தனையில் இருந்த போதும் பழக்க தோஷத்தில் கால்கள் தானாக அவளை லிஃப்ட் பக்கம் அழைத்து வந்திருப்பதை உணர்ந்தாள். கீழே வந்த லிஃப்ட்டில் மற்றவர்களோடு ஏறி நான்காம் மாடி அடைய காத்திருந்தவளின் கண்கள், ஆர்வமின்றி லிஃப்ட்டின் அருகில் இருந்தவர்கள் பக்கம் சென்றது. அலுவலகம் தொடங்கும் நேரம் என்பதால் கூட்டமாக இருந்தது. தெரிந்தவர்கள் அவளைப் பார்த்து புன்னகைத்தனர். பதிலுக்கு புன்னகைத்தபடி பார்வையை திருப்பியவளின் கண்களில் அவன் தெரிந்தான்.

இது அவன் தானா??? சந்தேகமே இல்லை அவனே தான்!

அவனுக்கு என்னை நினைவிருக்குமா? அவள் திகைத்து போய் கேள்வியோடு அவன் முகத்தை மீண்டும் பார்த்தாள். அவன் பக்கம் அவள் பார்வை இருந்த உள்ளுணர்வில் தானோ என்னவோ அவனும் அவள் பக்கம் திரும்பினான். அவன் முகத்திலும் வியப்பும், திகைப்பும் தோன்றியது. அவனுக்கும் அவளை நினைவிருக்கிறது!!!!!

"மேடம்... ஃபோர்த் ஃப்ளோர் வந்தாச்சே நீங்க இறங்கலையா?"

அருகில் ஒலித்த குரலில் சிந்தனை கலைந்து, நினைவுபடுத்தியவளுக்கு நன்றியை ஒரு புன்னகையின் மூலம் தெரிவித்து விட்டு, அவசரமாக லிஃப்டிலிருந்து வெளியேறினாள் மீரா. அவனும் அவளைப் போலவே தாமதமாக உணர்வு பெற்று வெளியே வந்தான்.

"ஜி.எம் ரூம் இந்த ஃப்ளோர் தான் விஷ்ணு..."

அந்த பெயரையும், அதைச் சொன்ன பெண் குரலையும் கேட்டு, திரும்பி பார்த்தாள் மீரா. அது அவன் தான். விஷ்ணுவின் அருகில் நடந்தபடி பேசிக் கொண்டிருந்தாள் அவள். மீராவிற்கு தன்னையும் மீறி சற்றே பொறாமை தலை தூக்கியது. அவனுக்கு திருமணமாகி விட்டதா???

அவனின் நினைவு வருவது அவளுக்கு புதிதில்லை. இந்த மூன்று வருடங்களில் பலமுறை அவனிடம் ஒரு சாரியாவது சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறாள். வழக்கத்திற்கு வினோதமாக கம்ப்யூட்டர் திரையில் ஸ்க்ரீன் சேவர் ஓடிக் கொண்டிருக்க அதை வெறித்த வண்ணம் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த மீராவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள் கண்மணி.

"ஹாய் மீரா... என்ன இது அதிசயம்?"

கண்மணியின் குரலில் சிந்தனையில் இருந்து வெளிப்பட்ட மீரா, அவளுக்கே உரிய புன்னகையோடு,

"ஹாய்.. குட் மார்னிங்... ஒன்னுமில்லைப்பா ஏதோ யோசிச்சிட்டு இருந்தேன்..."

"அது சரி மீராவுக்கு ஆபிஸ் வந்த பின் வேற விஷயம் எல்லாம் யோசிக்கக் கூட நேரமிருக்கா? சரி அது போகட்டும் இன்னைக்கு எங்க வீட்டு குட்டி வாலு ரிஷப் என்ன செய்தான் தெரியுமா?..."

கண்மணியின் முதல் வரியில் சிணுங்கிய மனதை கட்டுபடுத்தி, அவளின் மகன் செய்த குறும்பை கேட்க ஆரம்பித்தாள் மீரா.

அந்த குளுகுளு அறையில் அமர்ந்து பெரிய திரையில் தெரிந்த கம்பெனி லாப, நஷ்டக் கணக்குகளை அசுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. அவனுடைய ஈஸ்வரி ப்ரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துடன் அந்த கண்ணன் டூல்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் நிறுவனம் ஒப்பந்தம் செய்ய விரும்பியிருந்தது. அதற்கான ஒப்பந்தத்தை பேசி முடிவு செய்யத் தான் அவன், அவனின் தோழியும், சென்னை கிளை மேனேஜருமான சங்கீதாவுடன் வந்திருந்தான். மீராவைப் பார்த்த திகைப்பிலிருந்து அவன் மனம் இன்னமும் மீண்டுவரவில்லை. அவள் அப்படியே தான் இருந்தாள். மூன்று ஆண்டுகளில் அவளிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. கஷ்டப்பட்டு மனதை திசை திருப்பி பவர்பாயிண்ட் பிரசென்ட்டேஷனை கவனிக்கத் தொடங்கினான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, ஒரு அரை மணி நேர இடைவெளிக்கு பின் பேச்சு வார்த்தை தொடங்குவது என்று முடிவு செய்தார்கள். மரியாதை நிமித்தம் தன்னுடைய காபியை அருந்தியபடி மற்றவர்களுடன் பேசியவன், பின், அந்த அறையில் மூடி இருந்த திரையை சற்றே விலக்கி வெளியே தெரிந்த மரங்களின் அழகை ரசிப்பவனாக பாவனை செய்து மனதில் அதுவரை அடக்கி வைத்திருந்த எண்ணங்களை கட்டவிழ்த்து விட்டான்.

மீராவை அவன் முதன்முதலில் சந்தித்தது ஒரு திருமணத்தில். அவனின் அம்மா ஈஸ்வரியுடன் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சென்றிருந்தவன், எங்கேயோ கேட்ட சிரிப்பு சத்தத்தில், திரும்பி பார்த்தான். அங்கே மீரா யாருடனோ பேசி சிரித்துக் கொண்டிருந்தாள். அவனின் வியந்த பார்வைக்கு ஏற்றவாறு, திருமண மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த திரைப்பட பாடலும் ஒலித்தது!

"கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரில் பார்க்கிறேன்
கதைகளிலே கேட்ட பெண்ணா திரும்பி திரும்பி பார்க்கிறேன்..."

ஒரு திரைப்படத்தில் வருவது போல் எங்கோ விளக்கு எரிந்தது! அவள் மேல் நிலைத்திருந்த அவனின் பார்வை அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அதுவரை அவனுக்கு பெண்கள் பக்கம் ஆர்வம் சென்றதே இல்லை, அவனுடைய பிஸினஸ் தவிர மற்ற எதைப் பற்றியும் அவன் மனம் சிந்தித்ததும் இல்லை. பார்வை மீண்டும் மீண்டும் அவள் பக்கம் சென்ற போதும் கூட, பார்த்த உடனே ஒருவரை புரிந்துக் கொள்ள முடியாது என மனதை அடக்க முயன்றான் அவன். அதே நாளில், அடுத்து அவன் மீராவை சந்தித்தது அவள் அண்ணி மஞ்சரியுடன். மஞ்சரியின் குடும்பமும், அவனின் குடும்பமும் பல வருடங்களாக நட்புடன் பழகி வந்தனர். அவர்களை பார்த்து அருகில் வந்து பேசினாள் மஞ்சரி. பல நாள் கழித்து பார்த்ததால் வழக்கமான விசாரிப்புகளுக்கு பின், அவள் அருகில் நின்றிருந்த மீராவை அறிமுகம் செய்து வைத்தாள் மஞ்சரி. சம்பிரதாயத்திற்காக ஒரு புன்னகை சிந்திய மீரா அதன் பின் அவன் பக்கம் திரும்பவே இல்லை.

அங்கே யாருடனோ பேசப்போவதாக சொல்லி மீரா செல்லவும், மஞ்சரி ஈஸ்வரியின் அருகிலிருந்து பேசத் தொடங்கினாள். அவ்வப்போது மீராவின் பக்கம் சென்று கொண்டிருந்த அவனின் கவனம், அருகில் இருந்தவர்களின் பேச்சில் மீராவின் பெயர் அடிபடவும் அதை கவனிக்கலானான். மஞ்சரி மீராவை புகழ்ந்து தள்ளினாள். அவளுக்கு படிப்பிலும் தற்போது செய்து கொண்டிருந்த வேலையிலும் இருக்கும் ஆர்வத்தை பற்றி சொன்னாள். ஈஸ்வரி அவளின் திருமணம் பற்றி பேசவும்,

"இல்லை ஆன்ட்டி, அவள் இப்போதைக்கு கரியர் தான் முக்கியம்னு சொல்றாள்... இவர் இப்போதே பார்க்கனும்னு தான் சொல்லிட்டு இருக்கார். அத்தைக்கும் சீக்கிரம் அவளுக்கு கல்யாணம் செய்ய ஆசை தான்..."

படிப்பு முடித்து திருமணம் என்று சராசரி பெண்ணாக அவள் இல்லாதிருந்தது அவனுக்கு பிடித்திருந்தது. அவளை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் வாழ்வே சூன்யமாகி விடும் என்று தோன்றியது. ஒரு சில மணி நேரத்தில் அவன் மனதில் ஏற்பட்டிருந்த மாறுதல் அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஒரு சில நாட்களுக்கு பின், வழக்கம் போல் ஈஸ்வரி அவனின் திருமண பேச்சு எடுக்கவும், இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் என்ற பழைய பல்லவியை பாடாமல்,

"அம்மா, அன்னைக்கு கல்யாணத்தில மஞ்சு அக்கா கூட பார்த்தோமே, ஒரு பொண்ணு..."

"ஆமாம்.. மஞ்சுவோட நாத்தனார் மீரா அவளுக்கு என்ன?" ஆர்வத்துடன் ஒலித்த அம்மாவின் குரல் அவனுக்கு தேனாக இனித்தது. அவனுக்கு தெரியும் அவனுடைய அம்மா ரொம்ப ஷார்ப் என்று. அவனுடைய கணிப்பு சரி என்பது போல் அடுத்த கேள்வி ஒலித்தது.

"உனக்கு அவளை பிடிச்சிருக்கா விஷ்ணு?"

இதை வேறு சொல்ல வேண்டுமா? பெண்ணாக இருந்தால் வெட்கப்பட்டு ஒருவிதமாக சொல்லலாம். அவன் அப்படி செய்ய முடியுமா? எனவே மனதில் எழுந்த படபடப்பை வெளியில் காட்டாது,

"ம்ம்ம்... பேசி பாருங்கம்மா...." என்றான்.

ஈஸ்வரி அதற்கு மேல் ஒரு கணம் கூட தாமதிக்கவில்லை. அப்போதே மஞ்சுவை அழைத்து பேசினாள். பேசி முடிக்கும் வரை இருந்து விட்டு, கிளம்பியவனுக்கு ஏதோ வானில் பறப்பது போல் இருந்தது. கடந்த சில நாட்களாகவே கண் முன் தோன்றி மறைந்து கொண்டிருந்த மீராவின் முகம் மீண்டும் முதலில் பார்த்த சிரிப்போடு அவன் மனதில் ஊர்வலம் வந்தது. எப்போது திருமண பேச்சைத் தொடங்குவார்கள், எப்போது மீண்டும் அவளை நேரில் காண்பது என்று ஆர்வத்துடன் காத்திருந்தவனுக்கு, அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த போது காதில் விழுந்த பேச்சு, அமிலத்தை ஊற்றியதைப் போல் அவன் மனதை காயப்படுத்தியது.

"ஏன் மஞ்சு?"

.........

"இவன் ஒருவழியா சம்மதிச்சானேன்னு சந்தோஷப்பட்டுட்டு இருந்தேன்... இப்போ அவள் பிடிக்கலைன்னு சொன்னது தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவானே...."

.........

"புரியுது மஞ்சு.... நான் பேசுறேன்... சரி மஞ்சு நான் அப்புறம் பேசுறேன்..."

அவளுக்கு அவனை பிடிக்கவில்லையா? அவனால் நம்ப முடியவில்லை. இப்படி ஒரு திருப்பத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஒருவேளை அவளுக்கு வேறு யார் மீதாவது காதல் ஏதாவது? எப்படி இருந்தாலும் அவனுக்கு அவள் இல்லை!

இன்றும் அன்றைய நாளின் நினைவில் அவனுக்கு வலித்தது. அன்று பட்டுப்புடவையில் பார்த்த மீராவிற்கும், இன்று சுடிதாரில் பார்த்த மீராவிற்கும் பெரிதாக வேறுபாடு எதுவும் அவனுக்கு தெரியவில்லை. தேவதை புடவையில் இருந்தாலென்ன? சுடிதாரில் இருந்தாலென்ன? ஆனால், அவளுக்கு திருமணமாகி இருக்குமோ?

"என்ன விஷ்ணு தீவிர சிந்தனை?"

அருகில் ஒலித்த சங்கீதாவின் குரலில் திரும்பியவன்,

"ஏன் சங்கீ, ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லையான்னு பார்த்தே கண்டுபிடிக்க முடியுமா?"

அவனை ஒரு பார்வை பார்த்தவள்,

"யார் இன்னைக்கு காலையிலே லிஃப்டில் பார்த்தவளுக்கா?"

அவன் அமைதியாக இருக்கவும்,

"ஓஹோ! இதெல்லாம் எனக்கு தெரியாமல் எப்போ நடந்தது? இந்த காலத்தில் பார்த்து கண்டுபிடிப்பது கஷ்டம் தான்! ஆனால் நீ சொல்லும் உன் ஆளுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு போல.. வாட்டர் கூலர் அவங்க ரூம் பக்கம் தான் இருக்கு. நான் தண்ணி குடிக்க போனபோது அவளும், இன்னொருத்தியும் குழந்தை பத்தி தான் ஏதோ பேசிட்டு இருந்தாங்க..."

எவ்வளவு முயன்றும் அவனால் மனதில் தோன்றிய ஏமாற்றத்தை அடக்க முடியவில்லை! அவனின் முகத்தைப் பார்த்த சங்கீதா,

"இருடா அதுக்குள்ளே ரொம்ப ஃபீல் செய்யாத, அது அவ குழந்தையான்னு தெரியாது..." என்றாள்.

பேச்சு வார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தானது. அவர்களின் அலுவலகத்தையும், தொழில் கூடத்தையும் சுற்றி காட்டிய எம்.டி முருகன், அங்கே பணி புரிபவர்களில் முக்கியமானவர்களை அவர்களின் வேலை இடத்தை கடக்கும் போது அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது மீராவையும் அறிமுகம் செய்து வைத்தார். சங்கீதா மீராவுடன் கை குலுக்க, விஷ்ணு புன்னகைத்தான், மீராவும் பதிலுக்கு புன்னகைத்தாள்.

மாலை வீடு செல்ல கிளம்பிய மீரா, கண்மணிக்காக வரவேற்பறையில் காத்திருந்தாள். அவளைப் போலவே எதற்காகவோ சங்கீதாவும் அந்த பக்கம் வந்தாள்.

"ஹலோ நீங்க மீரா தானே? உங்க எம்.டி உங்களை பற்றி புகழ்ந்தார்.ஆண்கள் அதிகம் வேலை செய்யும் இந்த இடத்தில் நீங்கள் இப்படி ப்ரொடக்ஷன் மேனேஜராக இருப்பது பெரிய விஷயம்ங்க..."

"நீங்க சொல்லும் அளவிற்கு எல்லாம் இது பெரிய விஷயம் இல்லை..." என்ற மீராவிற்கு சங்கீதாவை பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் எழுந்தது. ஆனால் மரியாதை நிமித்தம் கேள்வி எதுவும் கேட்காது அமைதியாக இருந்தாள்.

"நீங்களும் என்னைப் போல் யாருக்கோ வெய்ட் செய்றீங்க போலும்?"

"ஆமாம்... என் ஃப்ரெண்ட் கண்மணி வரேன்னு சொன்னாங்க... அவங்களை ட்ராப் செய்யணும்..."

"ஒ! நானும் லிஃப்ட்க்காக தான் வெயிட்டிங்..."

"ஒ! ஏன்? உங்களுக்கு கார் எதுவும்..."

"யெஸ்.. விஷ்ணு கூடவே போயிருக்கலாம். ஆனால், இன்னைக்கு வெள்ளிக்கிழமை ஆச்சே! நானும் என் கணவரும், சும்மா வெளியே சுத்திட்டு லேட்டா வீட்டுக்கு போவோம்... அது தான் விஷ்ணுவை எனக்காக காத்திருக்காமல் கிளம்ப சொன்னேன்..."

எதிரில் இருந்த மீராவின் முகத்தில் புதிதாக எந்த உணர்ச்சியும் தோன்றவில்லை. ஆனால், அதுவரை சற்றே டல்லாக இருந்த முகம் ஸ்விட்ச் தட்டியதும் பிரகாசிக்கும் மின்விளக்கு போல் பிரகாசித்தது. சங்கீதாவின் உதடுகளில் புன்னகை தோன்றியது!

இரவு உணவு முடித்து மாடிப்படியில் அமர்ந்து பௌர்ணமி நிலவை ரசித்துக் கொண்டிருந்த மீராவின் அருகில் வந்தமர்ந்தாள் மஞ்சரி.

"என்ன மீரா தூக்கம் வரலையா? அதிசயமா இந்த பக்கம்?"

"சும்மா தான் அண்ணி... ஏன் அண்ணி உங்களுக்கு அந்த விஷ்ணு ஞாபகம் இருக்கா?"

மஞ்சரி மனதுள் ஆச்சர்யப்பட்டாள். அன்று மாலை தான் பல மாதங்களுக்கு பிறகு ஈஸ்வரி போனில் அழைத்து பேசி இருந்தார். இப்போது மீராவும் விஷ்ணுவைப் பற்றி பேசுகிறாளே!

"ஏன் மீரா?"

"இல்லை அவர் ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்கலை?"

"தெரியலையே மீரா! ஆமாம் அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னு உனக்கு எப்படி தெரியும்?"

இப்போது மீராவின் மனதிலும் கேள்வி பிறந்தது. சங்கீதா விஷ்ணுவின் மனைவி இல்லை என்பதற்காக அவனுக்கு திருமணமாகவில்லை என்று எப்படி சொல்ல முடியும்? அவளின் முகத்தில் தோன்றிய குழப்பத்தை கவனித்த மஞ்சரி,

"என்ன விஷயம் மீரா? இது வரைக்கும் நீ என்கிட்டே எதையும் மறைச்சதில்லையே, சொல்லு ஏன் இப்போ திடீர்னு விஷ்ணு பற்றிய பேச்சு?"

மஞ்சரி சொல்வது நிஜம், சொந்த அண்ணன் பிரமோதை விட மீராவிற்கு மஞ்சரி தான் நெருக்கம். ஒரு சில வினாடிகள் தயங்கி விட்டு, அன்று விஷ்ணு அவளின் அலுவலகம் வந்திருந்ததையும், அவனை சந்தித்ததையும் சொன்னாள்.

"சரி, அதெல்லாம் இருக்கட்டும் மீரா... அவனுக்கு கல்யாணம் ஆனால் உனக்கு என்ன? ஆகலைன்னா உனக்கு என்ன?"

இதற்கு என்ன பதில் சொல்வது! மீரா எதுவும் சொல்லவில்லை...

"மீரா, என்கிட்டே மறைக்காமல் சொல்... உனக்கு அவனை பிடிச்சிருக்கா?"

மீராவிற்கு குழப்பமாக இருந்தது.

"என்ன சொல்றதுன்னு தெரியல அண்ணி, அவரை அப்போ வேண்டாம்ன்னு ...."

"அதைப் பற்றி எல்லாம் நீ கவலைப்படாதே... உனக்கு பிடிச்சிருக்கு தானே, நான் பேசிப்பார்க்கிறேன்..."

அடுத்து ஒரு வாரம் வேகமாக ஓடியது! வியாழனன்று காலையிலேயே எம்.டி அறையில் இருந்து மீராவிற்கு அழைப்பு வந்தது. முருகன் கோபத்தில் இருப்பது அவரின் முகத்திலேயே தெரிந்தது. எதிரில் இருந்த விஷ்ணுவை வியப்புடன் பார்த்து விட்டு முருகன் பக்கம் பார்த்தாள் மீரா.

"மீரா... உங்க மேல் நான் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்... என்ன இது இன்னும் உங்க டிபார்ட்மென்ட்டில் இருந்து விஷ்ணு சார் கம்பெனிக்கு போக வேண்டிய டாக்குமென்ட்ஸ் எல்லாம் போகலையாமே? "

"இல்லை சார்... வேற சில அவசர வேலை இருந்தது. நந்தினி வேற லீவில் இருக்காங்க..."

"இது போல் சாக்கு சொல்வதை நிறுத்துங்க மீரா... உங்க கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை... இன்னைக்கு ஈவ்னிங் எல்லா பேப்பர்ஸும் போயிருக்கனும்..."

"ஓகே சார்..."

சற்றே கன்றிய முகத்துடன் மீரா அங்கிருந்து செல்லவும், விஷ்ணுவிற்கு பாவமாகவும், எதிரில் இருந்த முருகன் மீது கோபமாகவும் வந்தது!

"இன்னைக்கே செய்யனும்னு இல்லை சார்... திங்கள் கிடைச்சாலும் ஓகே..."

"பரவாயில்லை சார்... உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லட்டுமா, இன்னைக்கு வரை மீராவிடம் இப்படி பேசும் சந்தர்ப்பம் வந்ததே இல்லை... நானே கூட நினைப்பேன், இந்த பெண்கள் நமக்கு போட்டியா வந்தால் நமக்கு எவ்வளவு கஷ்டம்ன்னு... மத்த பொண்ணுங்க எல்லோரும், ஒரு ரெண்டு வருஷம் முடிந்த உடனே கல்யாணம் செஞ்சுப்பாங்க, குடும்பம் குழந்தைன்னு ஆன உடனே, அவங்களுடைய கவனம் இரண்டு பக்கமுமாக இருக்கும்... ஆனால் மீரா விதிவிலக்கு. கல்யாணம் செஞ்சுக்கிட்டா வேலையில் கவனம் செலுத்த முடியாதுன்னு தான் கல்யாணத்தை தள்ளி போட்டு இருக்காங்க.... "

கோபமாக வந்த போதும், ஒருவேளை வேலை மீது இருக்கும் ஆர்வத்தில் தான் மீரா அவனை பிடிக்கவில்லை என்று சொல்லி இருப்பாளோ, என்ற கேள்வியும் எழுந்தது. அன்று அவன் அங்கே வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. சங்கீதாவிடம் சொல்லி இருந்தாலே வேலை நடந்திருக்கும் ஆனால் அவனுக்கு மீராவை சந்திக்கும் வாய்ப்பை நழுவவிட விருப்பமில்லை. அதற்காக நூறு கிலோமீட்டர் கார் ஒட்டி வந்தால், இப்படி ஆகி விட்டதே! மனதில் எண்ணியபடி முருகனிடம் தண்ணீர் குடித்து வருவதாக சொல்லிவிட்டு வாட்டர் கூலர் பக்கம் சென்றவனின் காதுகளில், பக்கத்தில் இருந்த மீராவின் அறையில் இருந்து வந்த பேச்சு விழுந்தது.

"மீரா, லஞ்ச் முடிச்சிட்டு வந்து வேலை செய்..."

"இல்லை கண்மணி.. உனக்கு தெரியும் தானே? நிறைய வேலை இருக்கு. நான் இன்னைக்கு ஈவ்னிங் எல்லா வேலையையும் முடிச்சாகனும்!"

"ஒரு அரை மணி நேரம் தானே?"

"இல்லைப்பா, எனக்கு தலை வலிக்குற மாதிரி இருக்கு... நீ சாப்பிட்டு வரும் போது அப்படியே எனக்கு ஒரு காபி மட்டும் வாங்கிட்டு வா..."

கண்மணி வெளியே செல்வதைப் பார்த்தவன், இப்போது மீராவை பார்த்து பேசலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே கண்மணி திரும்பி வந்தாள். அவள் கைகளில் காபி இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை.

"சாரி மீரா, காபிக்கு பால் இல்லையாம்...."

"விஷ்ணு சார்.. இங்கே இருக்கீங்களா? என்ன சார் நீங்க? நானே உங்களுக்கு தண்ணி எடுத்து வந்து தர சொல்லி இருப்பேனே? நீங்க வி.ஐ.பி சார்!!! சரி வாங்க லஞ்சுக்கு போகலாம்..."

எழுந்து தயக்கத்துடன் முருகனுடன் சென்றான் விஷ்ணு. அவர்களுக்கென்று தனியறையில் பரிமாறப்பட்ட உணவை முடித்தவன், சிகரெட் பிடிக்க சென்ற முருகனை அனுப்பிவிட்டு, கேன்டீன் பக்கம் சென்றான். அங்கே காபி விற்கப்படுவதை பார்த்தவன், கண்மணியை மனதில் திட்டினான் "நல்ல ஃப்ரெண்ட்!"

காபியுடன் அவன் மீராவின் அறையை அடைந்த போது, கண்மணி இன்னமும் அங்கே தான் இருந்தாள். கோபத்துடன் உள்ளே சென்றவன்,

"என்ன ஃப்ரெண்டுங்க நீங்க? ஒரு காபி கேட்டால் இப்படி பொய் சொல்றீங்க? வாங்க முடியாதுன்னா, வாங்க முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?"

அவன் பொரிந்து தள்ளுவதை ஒருவித ஆர்வத்துடன் பார்த்தபடி கண்மணி இருக்க. மீரா அவசரமாக பேசினாள்,

"இல்லை நீங்க நினைப்பது போல் இல்லை... நான் லஞ்ச ஸ்கிப் செய்யக் கூடாதுன்னு தான் கண்மணி அப்படி சொன்னாங்க.."

இது போன்ற அசடு வழியும் சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட பழக்கம் இல்லாத விஷ்ணு, என்ன செய்வதென்று புரியாமல், கையில் காபியுடன் நின்றான். அவனின் நிலையைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிவிட்டு,

"சரிங்க சார்... நீங்க வாங்கி வந்த காபி வேஸ்ட் ஆக வேண்டாம். நீங்க இரண்டு பேரும் பேசிட்டே குடிங்க... நான் வரேன்..." என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள் கண்மணி.

அங்கே இருந்த காலி நாற்காலியில் அமர்ந்தவன்,

"சாரி மீரா... என்னால தானே உங்களுக்கு வேலை ஜாஸ்தி? இப்படி அவசரப்பட வேண்டாம்.. மன்டே முடித்து அனுப்பினால் போதும்..." என்றான்.

"சாரி எதுக்குங்க? நான் நாளை லீவ். அதான் இன்னைக்கு வேலை அதிகம். சோ நீங்க மட்டும் இதற்கு காரணம் இல்லை!"

"ஓ! லீவா? தலைவலின்னு சொன்னீங்களே? உடம்பு ஏதும் சரி இல்லையா?"

இவன் ஏன் இப்படி கேட்கிறான்? மஞ்சரி அவளிடம் வெள்ளி அன்று விஷ்ணுவும், அவனுடைய அம்மாவும் அவர்களின் வீட்டிற்கு வரப்போவதாக சொல்லி இருந்தாள். ஒருவேளை இவனுக்கு தெரியாதோ? இல்லை பிடிக்கவில்லையா?

"நீங்கள் இன்னைக்கே ஊருக்கு கிளம்புறீங்களா?" எனக்கேட்டாள் குழப்பத்துடன்.

"இல்லை நாளைக்கு..."

"ஓ! அப்போ நீங்களும் லீவா?"

"இல்லை. இங்கே சென்னை பிராஞ்சில் வேலை இருக்கு... மதியத்திற்கு மேல் அம்மா சொந்தகாரங்க வீட்டுக்கு போகணும்னு சொல்லி இருக்காங்க..."

ஓ! இவனுக்கு தெரியாதோ? ஆனால் ஏன்?

"உங்களுக்கு உடம்புக்கு ஒன்னுமில்லையே மீரா?"

"அதெல்லாம் ஒன்னுமில்லைங்க... உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்... நான் அன்னைக்கு உங்களை பிடிக்கலைன்னு..."

"சொன்ன காரணம் உங்களுக்கு உங்க வேலை மேல் இருக்கும் ஈடுபாடு தானே? நானே புரிஞ்சுக்கிட்டேன்... பரவாயில்லை மீரா..."

"சாரி... வீட்டில் எல்லோருக்கும் வருத்தம் தான் ஆனாலும் நான் கொஞ்சம் டைம் வேணும்னு கேட்டதால் சரின்னு ஒத்துக்கிட்டாங்க..."

"சாரி எல்லாம் எதுக்கு? பழைய விஷயத்தை விடுங்க… ஆமாம் நாளைக்கு எதுக்கு லீவ்? என்கிட்டே சொல்லலாம்னா சொல்லுங்க..."

“உங்கள் கிட்ட சொல்ல என்ன? நாளைக்கு வேறென்ன நம் ஊரில் நடக்கும் பெண் பார்க்கும் படலம் தான்...."

"வாட்????"

வியப்பும், கோபமுமாக ஒலித்த அந்த கேள்வியில், மீராவின் மனம் மகிழ்ந்தது. அவள் கேள்வியாய் பார்ப்பதை புரிந்துக் கொண்டவன், அவசரமாக யோசித்து,

"இதெல்லாம் இன்னமும் இருக்கா என்ன? நீங்கள் எப்படி மீரா இதற்கு எல்லாம் சம்மதிச்சீங்க?"

"ப்ச்... இவ்வளவு நாள் வீட்டில் எல்லோரும் என் பேச்சை கேட்டாங்க, இது அவங்களுக்காக..."

விஷ்ணுவிற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவனால் அவளைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனைவியாக நினைத்து பார்க்கக் கூட முடியும் என்று தோன்றவில்லை! இதை எப்படி அவளிடம் சொல்வது என்று குழம்பினான்.

"மீரா, இதற்கு மேல் மறைச்சு வச்சு பிரயோஜனமில்லை... என்னால உன்னைத் தவிர வேறு யாரையும் என் மனைவியா நினைச்சுக் கூட பார்க்க முடியாது... நாளைக்கு இந்த சம்பிரதாயம் எல்லாம் வேண்டாமே... என்னை முதலில் கன்சிடர் செய்... மூனு வருஷம் முன் உனக்கு ஒரு காரணம் இருந்தது... ஆனால் இப்போ அப்படி எதுவுமில்லையே...."

அவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைவன். எப்போதும் மிடுக்குடன் காட்சி தருபவன். முதல் முறையாக கெஞ்சுவது போல் கேட்கவும், மீராவிற்கு திகைப்பாக இருந்தது. ஆனால், மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவனிடம் அவன் அம்மா ஏன் உண்மையைச் சொல்லவில்லை என்பது தெரியாமல் அதைப் பற்றி பேசுவது தவறு என முடிவு செய்தாள். ஆனால், அதற்காக அவனை இப்படி வருத்தப்பட விடவும் மனம் வராமல்,

"எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை... நான் நாளை பதில் சொல்லவா?” என்றாள்.

"கண்டிப்பா! உனக்கு வேண்டிய டைம் எடுத்துக்கோ.. உன்னை நான் கட்டாயப்படுத்த முடியாது... ஆனால், எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தால் அது உன் கூட மட்டும் தான்...." வேகமாக பேசியவனை இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மீரா!

அருகில் சிடுசிடுப்புடன் அமர்ந்திருந்த மகனைப் பார்த்து ஈஸ்வரிக்கு மனதில் கவலையாக இருந்தது. மீரா வீட்டிற்கு போவதாக சொன்னால் அவன் வருவானோ மாட்டோனோ என்று தான் அவள் அவனிடம் முழு விவரத்தை சொல்லவில்லை! மீராவை பார்த்தாவது அவன் மனம் மாறாதா?

விஷ்ணுவின் கண்கள் வினாடிக்கு ஒருமுறை கைபேசி பக்கம் சென்று வந்துகொண்டே இருந்தது. ஒரு பெண்ணின் பதிலுக்காக இத்தனை தவிக்கிறோமே என்று தோன்றிய எண்ணத்தை உடனேயே அடக்கினான்... மீரா ஒன்றும் சாதாரண பெண் இல்லை.. தேவதை... அவனுடைய தேவதை!

அம்மாவுடன் அந்த உறவினரின் வீட்டினுள் சென்று அமர்ந்த பின்னும் அவனின் கவனம், கைபேசியின் மீதே இருந்தது,
அதை கவனித்ததாலோ, என்னவோ பிரமோத்,

"இங்கே சிக்னல் கொஞ்சம் சரியா வராது, வெளியே போனால் தான் சிக்னல் வரும்.." என்றான்.

அதற்கு மேல் விஷ்ணு ஏன் அங்கே இருக்கிறான். ஏதோ சாக்கு சொல்லிவிட்டு எழுந்து வெளியில் வந்தான். என்ன செய்வதென்று அவனுக்கு குழப்பமாக இருந்தது...

"அப்படி என்ன அந்த செல்போனில் ஆராய்ச்சி?"

மீராவின் குரலை கேட்டு திரும்பியவன், "மீரா!!!???" என்றான் வியப்புடன்....

அவன் முதல் நாள் பார்த்த போது கட்டி இருந்த அதே பச்சை நிற பட்டுப்புடவையில் நின்று கண் சிமிட்டி சிரித்தாள் மீரா.
அவனுக்கு ஓரளவிற்கு விஷயம் புரிந்தது.

"நேற்றே சொல்வதற்கு என்ன?" என்றான் கொஞ்சம் கோபத்துடன்...

"அத்தை எதுக்கு உங்க கிட்ட மறைச்சாங்கன்னு எனக்கு தெரியாதே..." என்றாள் அவள் புன்னகையோடு.

கோபத்தோடு, எதையோ சொல்ல தொடங்கியவன், அவளின் பேச்சை புரிந்துக் கொண்டு,
"அத்தை??? அப்போ நீ எஸ் சொல்கிறாயா?"

"நல்ல ஆள் தான் நீங்க? சரியான மக்கு.. இந்த கிரீன் சாரீ பார்த்தே புரிஞ்சிருக்கனும் தானே? எவ்வளவு கஷ்டப்பட்டு ஞாபகப்படுத்தி, கட்டியே வருஷமான இந்த சாரியை கட்டி இருக்கேன்..."

"நான் மக்கு தான்... ஆனால், இந்த புத்திசாலி மேடம் இப்படி இல்லாத மூளையை வச்சு யோசிப்பதற்கு மூனு வருஷம் முன்பே எஸ் சொல்லி இருக்கலாம் தானே?"

உடனே பதில் சொல்லாது அமைதியாக இருந்த மீரா. பின்,
"இல்லை, அப்படி சொல்லி இருந்தால் அது அண்ணிக்காக, இல்லை அம்மா, அண்ணனுக்காக சொன்னதா இருந்திருக்கும். இப்போ சொல்வது நானே தானே? அண்ணி சொல்வாங்க ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்... எது நடந்தாலும் நன்மைக்கேன்னு... நானா என்னை புரிந்துக்கொள்ள தான் இந்த மூனு வருஷம் போலும்..."

"ரொம்ப பாஸ்டா தான் புரிஞ்சுக்குறீங்க..."

கேலியாகச் சொன்ன போதும், அவன் முகத்திலும் பேச்சிலும் பெருமையும், மகிழ்ச்சியும் கலந்தே இருந்தது. பின் வேறென்ன அவனின் தேவதை அவனுக்கு கிடைத்து விட்டாளே!!!

Comments

:) இந்த மீரா மகிழ்ச்சியாக இருக்காங்களே... ;) என்ன விஷ்ணுவைத்தான் படுத்தி எடுத்துட்டாங்க.. ;) சற்றே நீளமாகத் தோன்றினாலும் கதையோட்டம் நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள் பிந்து... :)

நன்றி பூர்ணிமா :)

:D இதை சிறுகதையாக நினைத்து எழுதவில்லை, ரொம்ப போர் அடிக்கவே சும்மா எழுத ஆரம்பித்தேன்... மொத்தம் 60+ பக்கங்கள்... சரி கொஞ்சம் எடிட் செய்து சிறுகதை ஆக்கலாம் என நினைத்தேன்... 10 பக்கமாக குறைக்கும் போதே விடிகாலை மூன்று மணி ஆகி விட்டதால் அதற்கு மேல் விழித்திருக்க முடியவில்லை :-)

மறுநாள் அனுப்பிய வெர்ஷனை படித்த போது எனக்கே திருப்தி இல்லை... அங்கங்கே ப்ளோ மிஸ் ஆகும் பீலிங்... ஆனால் திரும்ப எடிட் செய்ய நேரம் கிடைக்கவில்லை, அது தான் ஒரு ரீதியாக கதை வந்திருக்கிறது :P

அடுத்து கதை எழுதினால் ஈடு செய்து விடுவோம் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

எனக்கு எங்கையும் ஃப்ளோ மிஸ் ஆகல ;) சூப்பர். லவ் ஸ்டோரி எப்படியா எழுதுறீங்க? எனக்கும் மட்டும் மண்டையில் பல்பே எரிய மாட்டாங்குது ;) அருமையா மீரா கூடவே சுத்தின ஃபீல் இருக்கு கதையில். ம்ம்... சினிமாக்கு திரைக்கதை, வசனம் எழுதலாம் அக்கா நீங்க. (y).

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிந்து,
கதை அருமை! இந்த கதையில் இருக்கும் பர்சனல் டச் மீராவிற்கு வேலையில் இருக்கும் ஆர்வமா? ;-)

- தேன்மொழி

தங்கச்சி,
நீங்க கதை படிக்க மாட்டீங்க தானே? அது தான் உங்களுக்கு மிஸ் ஆனதா தெரியலை :P ப்ளஸ் என் மேல் இருக்கும் அன்பு ஓவர் ப்ளோ ஆவதும் காரணமா இருக்கலாம் ;-)

// சினிமாக்கு திரைக்கதை, வசனம் எழுதலாம் அக்கா நீங்க. (y).//
1. நக்கல்ஸ்???
2. யாரோ ஸ்மைலி addict ஆன மாதிரி இருக்கு :-)

தேன்மொழி,
நன்றி மேடம்.

//இந்த கதையில் இருக்கும் பர்சனல் டச் மீராவிற்கு வேலையில் இருக்கும் ஆர்வமா? //
பெர்பெக்ட்ன்னு சொல்ல ஆசை தான் ஆனால் மனசாட்சி உறுத்துதே :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கதை ரொம்ப ரொம்ப அருமைங்க, அருமையான தலைப்பு, கதையை ரொம்ப அருமையா கொண்டுபோயிருக்கீங்க, முடிவும் சூப்பர். வாழ்த்துக்கள்ங்க :-)

நட்புடன்
குணா

மீண்டும் ஒரு ரமணி சந்திரன் ஸ்டோரி படிச்ச மாதிரி இருக்கு பிந்து. முடிவு சுபம்

நல்ல காதல் கதை பிந்து.படிக்க படிக்க ரமணி சந்திரன் நாவல் படித்த ஃபீலிங் பா. சூப்பர்.வாழ்த்துக்கள் பிந்து...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அட்மின்,
கதையை வெளியிட்டதற்கு நன்றி :)
முன்பே சொல்ல மறந்துவிட்டேன்... மன்னிக்கவும்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

குணா,
நன்றி :) இப்போ எல்லாம் உங்களுக்கு படம் பார்க்கும் எப்பெக்ட் வருவதில்லையா??? :)

நிகிலா,
மிக்க நன்றி :)
ஒவ்வொரு கதையையும் படித்து மறக்காமல் கமெண்ட்டும் போஸ்ட் செய்வதற்கு ஒரு சிறப்பு நன்றி :)

சுமி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி சுமி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

படம் பார்த்த எஃபெக்ட் இருந்துச்சுங்க, :-) நேற்றே கமெண்ட்'ல எழுதலாம்'னு பார்த்தேன், இப்ப எழுதிட்டேன், நன்றிக்கு மிக்க நன்றிங்க :-)

நட்புடன்
குணா

இயல்பான எழுத்து நடையில் இனிய காதல் கதை. அருமையா இருக்கு பிந்து. வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

me too pa

ஒவ்வொரு தடவையும், "நீளமா இருக்கே! படிச்சு முடிப்போமா?" என்று நினைச்சு விட்டுட்டுப் போயிருவேன். இன்றுதான் நிறைய நேரம் கிடைச்சுது.
சுப்பர்ப் பிந்து.

‍- இமா க்றிஸ்

hi friends,
nan oru mathiri chat seiven
ana nan chatting seirathu sariyanu ennakku theriyala
athanala chatting seyya therinchavanga eppadi seyyanum nu
sollunga please

A- muthal arambinga friends

ithu ellarukkum use aga irukkum

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

super love story pa
padikkum pothu oru vithamana feelings varuthupa
manirathnam film mathiri

ellarum love mithu mathirey suceess aganum

i like it

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

பாராட்டுகள்

வாழு.....வாழ விடு....

அருமையான கதை பிந்து சிஸ்டர்.keep it up.

நன்றி கவிசிவா, சக்தி, இமா, சுபி, skguru & jose :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

semmaya irukku. inthamathiri oru love story-a naan katathilla,eppothum oru true love piriyakudathu,athan antha god-a serthuvachitaru,

Ippa Irukkura Kaala Kattaththula Kadhal Kathai Pala Vidhama Poyikittu Irukkuthu,.Nijathil Paarkkum Kathaiyo Solla Thevai Illai Arumaiyaga Irukkum,., Adhu Pola Intha Pinthu Avargalin Kathai Nice ..

Very Nice