நெய் மைசூர்பாகு

தேதி: October 6, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (12 votes)

"அந்த மைசூர்பாக்கை எடுத்துட்டு வா, சுவத்துல ஆணி அடிக்கணும்.." இது போல் நூற்றுக்கணக்கான நகைச்சுவை துணுக்குகளுக்கு வாய்ப்பளித்து, துணுக்கு எழுத்தாளர்களுக்கு வாழ்வும் அளித்த பெருமை, நீண்ட காலமாக மைசூர் பாகிற்கு உண்டு. மைசூர்பாகு என்றாலே கடிப்பதற்கு சற்று கடினமான இனிப்பு என்ற பெயர் சமீப காலத்தில்தான் மறைந்து போயிற்று. பல் வலிக்க கடித்து சாப்பிடும் பொருட்களை எல்லாம் மக்கள் இப்போது அதிகம் விரும்புவதில்லை. வாயில் இட்டால் கடிக்காமலே கரைந்து போகவேண்டும். அந்த வகையில் நெய் மைசூர்பாகு இன்று இனிப்புலகின் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டது. இதில் கிருஷ்ணா ஸ்வீட்ஸிற்கு முக்கிய பங்கு உண்டு. அவர்கள் தயாரிக்கும் நெய் மைசூர்பாகு சுவையும், அதற்கு கொடுத்த விளம்பரமும் இன்று "கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகு" என்று சொல்லுமளவிற்கு ஒரு பெயரை உண்டாக்கியுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மைசூர்பாகின் தயாரிப்பு முறையை ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். சீனிப் பாகில் கடலைமாவைப் போட்டு, நெய் ஊற்றி கைவிடாது கிளறவேண்டும். அவ்வளவுதான். இதில் வேறு ஒன்றுமே இல்லை.! நம்ப முடியவில்லையா.. கீழே செய்முறை விளக்கப் படங்களை பாருங்கள்.

 

கடலை மாவு - 600 கிராம்
தெளிவு நெய் - ஒன்றே முக்கால் லிட்டர்
சீனி - ஒன்றே முக்கால் கிலோ
தண்ணீர் - அரை லிட்டர்


 

நெய் மைசூர் பாகு என்று பெயர் சொல்லியாயிற்று. எனவே இதில் நெய்தான் பிரதான மூலப் பொருள். இந்த மைசூர் பாகு செய்வதற்கு சாதாரண நெய் (கெட்டியாக உள்ளது) சரிவராது. தெளிவு நெய் என்று கேட்டு வாங்க வேண்டும். எண்ணெய் போன்று இருக்கும். நல்ல தரமான நெய்யாக வாங்கிக் கொள்ளவும். சாதாரண மைசூர்பாகினை சூடாக்கின எண்ணெய், டால்டா கொண்டு செய்வார்கள்.
முதலில் சற்று அடிக்கனமான, அகன்ற வாணலியில் (இரும்புச் சட்டிதான் நன்றாக இருக்கும்) சீனியைப் போட்டு, தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். தண்ணீர் அதிகம் தேவையில்லை. சீனி கரைந்தால் போதுமானது.
சீனிக் கரைசல் அடுப்பில் இருக்கும் போதே, கடலை மாவினை சலித்து கட்டிகள் இல்லாமல் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். கடலை மாவும் நல்ல தரமாக இருக்கவேண்டும். பாகு ஒரு கொதி வந்தவுடனே கடலை மாவை பாகில் கொட்டவும். சீனி முழுவதும் கரைந்து இருக்க வேண்டும்.
அவ்வளவுதான். இனி கிளறவேண்டும். கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். முதலில் சீனிக் கரைசலுடன் கடலை மாவு சேரும்படி நன்றாக கிளறிக் கொள்ளவும். மாவு கட்டிப் பிடிக்காமல் இருக்க வேண்டும்.
பிறகு எடுத்து வைத்துள்ள நெய்யில் மூன்றில் ஒரு பங்கு ஊற்றி நன்கு கிளறவும். கைகளுக்கு ஓய்வில்லாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதில்தான் எல்லாமே அடங்கியுள்ளது.
ஓரங்களை எல்லாம் வழித்து விட்டவாறு கிளறவும். வாணலியின் எந்த இடத்திலும் மாவு ஒட்டிக் கொண்டு இருக்கக் கூடாது. ஐந்து நிமிடம் கிளறியதும் மீதம் உள்ள நெய்யில் பாதியை ஊற்றிக் கிளறவும். தொடர்ந்து விடாது கிளறவும்.
மிகவும் மஞ்சள் நிறமாக இருந்த மாவு சற்று நிறம் மாறி வரும். ஓரம் ஓட்டுவது போல் இருந்தால், ஓரங்களில் சிறிது நெய் ஊற்றி தொடர்ந்து கிளறவும்.
மாவு சற்று கெட்டியாக தொடங்கியவுடன் மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு கிளறவும். மாவு திரண்டு அல்வா பதத்திற்கு வரும். அதன் பிறகு அடுப்பில் இருந்து இறக்கவும். சுமார் 15 ல் இருந்து 20 நிமிடங்கள் கிளறிய பிறகுதான் இந்த பக்குவம் வரும்.
அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு மாவினை வழித்து ஒன்று சேர்க்கவும். மேலே சிறிது நெய் விடவும்.
ஒரு ட்ரேயில் உள்புறம் முழுவதும் நெய் தடவி, அதில் தயாரித்து வைத்துள்ள மைசூர்பாகு மாவினை கொட்டி, அழுத்தாமல், பரப்பி விடவும். ஓரங்களில் நெய் ஊற்றி, ஓரத்தினை மட்டும் லேசாக அழுத்திவிடவும்.
இதனை அப்படியே ஒரு நாள் வைத்திருக்கவும். அப்போதுதான் மாவு சற்று கெட்டியாகி, நாம் விரும்பும் பதம் கிடைக்கும். மறுநாள் எடுத்து அதனை துண்டங்கள் போடவும்.
நீங்கள் விரும்பிய நெய் மைசூர்பாகு இப்போது தயார். சுவைத்துப் பாருங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிக்கநன்றி. தங்களின் செய்முறைவிளக்கப்படம் சிறப்பாகவந்துள்ளது. நிச்சயம் வீட்டில் செய்துபார்த்து எனது கருத்தினை அனுப்புகிறேன்.

பார்க்கும் போதே என் நாவில் எச்சில் ஊருதே!!

Nice pictures. Good recipe. Thanks for revealing many of the secret preparations. Thanks for your efforts. Keep going. Best wishes!

வெளீநாட்டில் வாழும் எங்களை போன்றவர்களூக்கு பனம் போட்டாலும் கிடைக்காத ஒன்று.வீட்டிலேயே செய்து பார்தால்தான் உண்டு.அந்த வகையில் உங்கள் மைசூர்பாகு ரெசிப்பி எங்கலுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
மிகவும் நன்றி.

sajuna

'தெளிவு நெய்' என்றால் என்ன? அது ஏன் சிவப்பு கலரில் உள்ளது? நெய்யை கடலை மாவுடன் சேர்க்கும்போது நெய் சூடாக இருக்கவேண்டியதில்லையா? மாவு பதமாக வந்த பிறகு ஆறவிட்டுதான் ட்ரேயில் ஊற்றவேண்டுமா? படம் 9 -ல் வெறும் கையால் எடுப்பதுபோல் தெரிகிறதே, அந்தளவுக்கு ஆறவிட்டுதான் ட்ரேயில் கொட்டவேண்டுமா? அதே படம் 9 -ல் 'மேலே சிறிது நெய் விடவும்' என்று கூறியுள்ளீர்களே, மாவை ட்ரேயில் கொட்டுவதற்குமுன் மாவின் மேலே நெய் விடணுமா? படத்துடன் விளக்கம் கொடுத்தும் புரியாத ட்யூப்லைட் என்று எண்ணவேண்டாம்! பதில் ப்ளீஸ்!

தெளிவு நெய் என்பது இந்தப் பெயரிலேயே கடைகளில் கிடைக்கும். படத்தில் சிவப்பு வண்ணம் போல் தெரிந்தாலும், சாதாரணமாக நெய்யை உருக்கினால் என்ன வண்ணம் இருக்குமோ அப்படிதான் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் எண்ணெய் போன்றே இருக்கும்.

நெய்யை கடலைமாவில் சேர்க்கும் போது சூடாக இருக்க வேண்டியதில்லை. சாதாரண மைசூர்பாக்கிற்குதான் சூடான எண்ணெய், டால்டா கலவை ஊற்றுவார்கள். அப்படி ஊற்றி செய்தால் மொறுமொறுப்பாக, ஓட்டைகளுடன் மைசூர்பாகு கிடைக்கும். இந்த மைசூர்பாகிற்கு நெய்யை அப்படியே ஊற்றவேண்டும்.

படம் 9 ல், ஒரு பிளாஸ்டிக் விசிறி போன்ற ஒன்றை வைத்துதான் ஒரங்களை வழித்து ஒன்று சேர்க்கின்றார்கள். எல்லாமே மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால் சரியாக தெரியாமல் போய்விட்டது. மாவை ஆறவிடாமல் சூடாக இருக்கும் போதே ட்ரேயில் கொட்டிவிடவும்.

மாவை ட்ரேயில் கொட்டுவதற்கு முன்பு, சட்டியில் ஒன்று சேர்த்தவுடன் சிறிது நெய்யை சுற்றிலும் ஊற்றவும். அதிகம் தேவையில்லை. மிகவும் கொஞ்சமாக ஊற்றினால் போதுமானது. ட்ரேயில் கொட்டுவதற்கு எளிதாக இருக்கும்.

மற்றபடி மாவை கொட்டுவதற்கு முன், ட்ரேயின் உள்பகுதி முழுவதும் நெய் தடவி இருக்கவேண்டும். மாவைக் கொட்டியபின், ட்ரேயின் நான்கு ஓரங்களிலும் சிறிது நெய் விட்டு ஒரு ஸ்பூன் கொண்டு அழுத்திவிடவும். மறுநாள் எடுப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

சந்தேகங்கள் எதுவாக இருப்பினும் தயங்காமல் கேட்கலாம். எங்களால் இயன்ற அளவு தீர்த்து வைக்கின்றோம்.

அனைவரின் பாராட்டுகளுக்கும் நன்றி. இவை எங்களை மேலும் பல அரிய குறிப்புகளை கொடுக்க ஊக்குவிக்கும்.

அன்பு சகோதரருக்கு,
ஒவ்வொரு கேள்விக்கும் ரொம்ப தெளிவாகவும், டென்ஷன் ஆகாமல் மிக சாந்தமாகவும் பதில் கொடுத்ததில் உங்களின் பொறுப்புணர்வு தெரிகிறது! ஆச்சரியம் கலந்த சந்தோஷம், நன்றி!

இங்கு எங்களுக்கு மற்ற இந்திய கடைகள் இருந்தாலும் 'தெளிவு நெய்' என்று கேட்டு வாங்குவதற்கு இந்தியா போன்று கடைகள் கிடையாது. நாமே நெய்யை உருக்கி உறையவிடாமல் ஆறமட்டும்வைத்து தயார்படுத்திக்கொள்ளலாமா? அல்லது அதுபோன்று நெய்தான் சேர்க்கவேண்டுமா?

பாபு அவர்களூக்கு எனக்கும் தெளிவு நெய் கிடைக்காது .உப்பு கலக்காத வென்னை வாங்கி தான் நெய்யாக உருக்கிகொள்கிறோம்.நம் இந்தியா போல் நெய் இங்கு விற்பதில்லை.வென்னை தான் கிடைக்கும்.அதையே உருக்கி நான் முயற்ச்சிக்கலம் என்று நினைக்கிறேன்.சரியா?

sajuna

உங்களின் இந்த கேள்விக்கு என்னால் பதில் அளிக்க இயலவில்லை. நேரம் ஆகிவிட்டதால் ஸ்வீட் மாஸ்டரை இன்று பிடிக்க முடியவில்லை. நாளை ஞாயிறு என்பதால் நாளையும் இயலாது. திங்கள் அன்று கேட்டு உங்களுக்கு பதில் தருகின்றேன். இதனை தயாரிக்கும்போதே, சாதாரண நெய்யில் செய்யலாமா என்ற கேள்வியைக் கேட்டேன். இது போன்று கிளறவும் வராது, சுவையும் இருக்காது என்று பதில் அளித்தார். தெளிவு நெய் கிடைக்காத பட்சத்தில் மாற்று என்ன என்பதை கேட்க மறந்துவிட்டேன். பதில் அறிந்து உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன். திருப்திகரமான பதில் கொடுக்க இயலாமைக்கு வருந்துகின்றேன்.

நெய் மைசூர் பாகை தெளிவு நெய் கொண்டு செய்தால் தான் இந்த நிறம், மணம், சுவை இருக்குமாம். தெளிவு நெய் கிடைக்காத பட்சத்தில் சாதாரண நெய்யை உருக்கி ஆற வைத்து ஊற்றி செய்யலாம். ஆனால் இதை போன்ற சுவை வராது. இதுதான் நமது ஸ்வீட் மாஸ்டர் தந்த பதில். தெளிவு நெய் குறித்து மேலும் தகவல்களை பிறகு திரட்டி தருகின்றோம்.

பதில் தெரிவித்தைமைக்கு நன்றி

sajuna

இணையதள நிர்வாகி அவர்களுக்கு,
நன்றி! உங்களின் ஸ்வீட் மாஸ்டர் தந்த பதில் போக 'தெளிவு நெய்' விஷயத்தில் மேலும் 'தெளிவான தகவல்கள்' கிடைக்கும்வரை நெய் மைசூர்பாகு செய்து பார்க்காமல் பொறுத்திருக்கிறோம். நீங்கள் விரைவில் எங்களுக்கு விளக்கம் தரப்போவதற்கு அட்வான்ஸ் நன்றிகள்!

தெளிவு நெய்யின் தயாரிப்பு முறை குறித்து சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. காங்கேயத்தில் தயாரிக்கப்படுவதாக தெரிகின்றது. அடுத்தமுறை அந்தப் பக்கம் செல்லும்போது தகவல்களை திரட்டி வருகின்றேன்.

தெளிவு நெய்யின் சிறப்பு, அதன் உறைநிலை. சாதா நெய் உருக்கி சில நிமிடங்கள் கழித்து மீண்டும் உறைந்து கெட்டியாகிவிடும். தெளிவு நெய் அப்படியே எண்ணெய் போன்று இருக்கின்றது. இதில் செய்யப்படும் மைசூர்பாகு ஒரு வாரம் வரை நிறம் மாறாமல், கைகளால் எளிதில் உடைத்து சாப்பிடும்படி மிருதுவாக இருக்கும். மைசூர்பாகிற்கு மட்டுமல்ல. பலவித இனிப்புகளுக்கும் தெளிவு நெய்யைத்தான் பயன்படுத்துகின்றனர்.

சாதா நெய்யில் மைசூர்பாகு செய்யும் போது, நெய் உறைந்து மேலே வெள்ளை நிறமாக படிந்து விடும். மைசூர்பாகின் நிறமும் மாறிவிடும். செய்து உடனே சாப்பிடுவது என்றால், சாதா நெய்யிலேயே செய்யலாம் என்று சொல்லுகின்றனர். தெளிவு நெய்யில் செய்யப்படும் மைசூர்பாகிற்கும், சாதா நெய்யில் செய்யப்படும் மைசூர்பாகிற்கும் சுவையில் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும். மிருதுத்தன்மை கிடைக்காது. பதம் சரியாக இல்லையென்றால், உடைப்பதற்கு நல்ல சுத்தியல் ஒன்று தேவைப்படலாம்.

சாதா நெய்யே கிடைப்பதில்லை. தெளிவு நெய்யிற்கு எங்கே செல்லுவது என்று வருத்தப்படும், புலம் பெயர்ந்து வாழும் அன்பு சகோதரிகளுக்கு.. அடுத்த முறை இந்தியாவில் இருந்து மூட்டை கட்டும் ஊறுகாய், வற்றல், வடாம் இத்தியாதிகளுடன் தெளிவு நெய்யையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு டின் வாங்கி வைத்தால் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும்.

அட்மின் நீங்கள் சொன்னது போல இப்போதைக்கு சாதா நெய்
உபயோகித்து கூடவே சுத்திலும் வைத்துக் கொள்கிறோம்
அடுத்த முறை டின் டின்னாக தெளிவு நெய் எடுத்து வருகிறேன்
அந்த சமயம் சுத்தியல் தேவைப்படாது என்று நினைக்கிறேன்.
தெளிவு நெய் பற்றி இவ்லோ விளக்கம் தந்ததே மிகுந்த சந்தோசம்.
உங்கள் பனி மேலும் வளர வாழ்த்துகள்

sajuna

தெளிவு நெய் விஷயமாக நீங்கள் கொடுத்த பதிலை இப்போதான் பார்க்கிறேன். நெய் டின்னை இந்தியாவிலிருந்து கொண்டு வருவது சற்று கடினமாக தெரிகிறது. ஜோக் பண்ணுவதற்காக நீங்கள் அதுபோன்று ஒரு ஐடியா கொடுத்ததுபோல் தெரிகிறது. உங்களின் காங்கேயம் பயணத்திலிருந்து திரட்டி கொண்டுவரும் தகவல்களை வைத்து நாங்களே தெளிவு நெய் இங்கு தயாரித்துக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையில், உங்களின் தகவல்களுக்காக காத்திருக்கிறேன். அட்வான்ஸ் நன்றிகள்!

I tried and it was nice. Thank you very much!

Are clarified milk fat and thelindha nei same? I have bought amul clarified milk fat. I would like to know whether we can do mysore paak with this clarified milk fat? let me know please.

jpriya

Hi
I melted unsalted butter and cooled a bit and used it.
all the stages of the preparation came as shown in the pictures.
PS: I boutht organic soy flour from whole foods here in New jersey and used 1/4 cups and 3/4 cups of sugar
Finally I CAN MAKE MYSORE PA TOO!!!
Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

I got really superub ghee mysore pak. Thanks for the nice instructions.
Christy catherine.J
South Korea.

Christy catherine.J
PhD student,
POSTECH, Pohang,
South Korea.

அட்மிண் அவர்களே
நான் இப்போ தான் இந்த குறிப்பை பார்த்தேன்,எனக்கு ரொம்ப பிடித்த ஸ்வீட்,தயவு செய்து கப் அளவில் சொல்லுங்களேன்.செய்து பார்க்கவேண்டும்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

கடலை மாவு ஒரு கப்புக்கு 150 கிராம் வரும். இங்க நாலு கப் தேவைப்படும். கப் ன்னு நான் சொல்றது ஸ்டாண்டர்டு கப். நீங்க வீட்டுல இருக்கிற பெரிய பெரிய கப் எல்லாம் எடுத்துக்கக் கூடாது. :-)

ஸ்டாண்டர்டு கப், 237 மில்லி கொள்அளவுல இருக்கும். அதாவது 8 அவுன்ஸ். இவ்வளவு சரியா இல்லேன்னாலும், கால் லிட்டர் குவளையை யூஸ் பண்ணலாம். தலை தட்டி மாவு எடுத்துக்கோங்க.

சீனி அளவை கப்ல சொல்றது கொஞ்சம் கஷ்டமான விசயம். சீனியோட சைஸ் எப்படி இருக்குங்கிறதை பொறுத்து எடை மாறும். கேஸ்டர் சுகர் ஒரு கப்புக்கு 120 ல இருந்து 160 கிராம் வரைக்கும் வரலாம். பொடித்த சீனி, கிட்டத்திட்ட 200 கிராம் வரும். சீனியை கிலோ கணக்கில வாங்குறதால, ஒன்றே முக்கால் கிலோ ஈசியா அளந்திடலாமே..

செய்து பார்த்து சொல்லுங்க.

அட்மின்,
இத்தனை நாள் இந்தக் குறிப்பு என் கண்ணில் படவேயில்லையே!!
தெளிவான குறிப்பு. கலக்கிட்டீங்க. தொடருங்கள் தங்கள் நற்பணியை. ;)
பார்க்கவே ஆவலைத் தூண்டுகிறது. சந்தர்ப்பம் அமையும்போது செய்து பார்க்கிறேன். இல்லாவிட்டால் முழுவதும் என் வாயில்தான் போகும்.

பி.கு
உங்க மிட்டாய்க்கடையில இதுவும் விற்பனைக்கு இருக்கும்ல? ;)

‍- இமா க்றிஸ்

//இத்தனை நாள் இந்தக் குறிப்பு என் கண்ணில் படவேயில்லையே!!//

குறிப்பு வந்து கண்ணுல படாது. நாமதான் இந்த பக்கமெல்லாம் வந்து பார்க்கணும்.:-) இது மாதிரி உங்க கண்ணில் படாத, நிறைய நல்ல நல்ல குறிப்புகள் இங்கே இருக்குது. ஒவ்வொன்னா ஓபன் பண்ணி பாருங்க.. :-)

//உங்க மிட்டாய்க்கடையில இதுவும் விற்பனைக்கு இருக்கும்ல? ;)//

என் மிட்டாய் கடையில இல்லேன்னாலும், இது கிடைக்கிற மிட்டாய் கடைக்கு உங்களை அழைச்சிக்கிட்டு போக வேண்டியது என் பொறுப்பு. கவலைப்படாம வாங்க. :-)

தெளிவு நெய்யிற்க்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்? Food World ல் கிடைக்குமா? Brand Names சொல்லவும். நன்றி.

I have a suggestion. You display new items images in the front page. You can also display old items in the next line which are suitable for the upcoming festivals.

For example, you can say Krishna Jayanthi bakshanangal ...and display the old items. This way people can look at such wonderful recipes easily.

தெளிவு நெய் பற்றி விவரம் தாருங்கள் ஆசிரியர் -நன்றி

வரும் முன் காபது சிரப்பு

கடலை மாவினை வறுக்கத்தேவையில்லையா?? வறுக்காமல் போட்டால் பச்சை மணம் இருக்கதா? தயவு செய்து விளக்கவும்.... நன்றி

இது ஸ்வீட் ஸ்டாலில் தயாரிக்கும் நெய் மைசூர்பாகின் செய்முறை. நேரடியாக அங்கே சென்று படங்கள் எடுத்தோம். அவர்கள் கடலை மாவை வறுக்காமல், சலித்துவிட்டு அப்படியேதான் கொட்டி கிளறினார்கள். நெய் மைசூர்பாகு சாதா மைசூர்பாகு போல் மொறுமொறுப்பு இல்லாமல், சற்று மாவாக இருப்பதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் பொதுவாக நெய் மைசூர்பாகில் கடலை மாவு மணம் சற்று இருக்கும். இந்த பதார்த்தம் மட்டும் மிகவும் வேக வைத்த பதார்த்தம் போல் தெரியாது. மாவு, நெய், சர்க்கரை மூன்றையும் ஒன்றாக கலந்து பிரட்டி, தட்டி, வெட்டி வைத்த மாதிரிதான் தெரியும். நெய் மைசூர்பாகு சாப்பிடும்போது இதை நாம் உணரமுடியும்.

அண்ணே... தெய்வமே... இதுவரை நான் மைசூர்பாகு செய்ததே இல்லை (ஒரே முறை மைக்ரோவேவ் குறிப்பு யாருடையதோ செய்தேன்) உங்களைய நம்பி இன்னைக்கு நானும் இதை ட்ரை பண்ண போறேன் ;) இந்த நெய்யுக்கு நான் இங்குட்டு எங்க போக?? சாதா நெய்யுலயே போடுவோம் :D செய்து ஸ்பெஷலா படங்காட்டுறேன். ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப தாங்ஸ்....இன்னிக்கு இதை செய்து பார்த்துவிட்டு சொல்றேன்....

சூப்பரோ சூப்பர்..... செய்து பார்த்தேன்....மிக அருமையாக வந்தது.....கடலை மாவின் பச்சை வாசனை வரவே இல்லை.....அறு சுவைக்கு ரொம்ப தாங்ஸ்...இவ்வளவு நாளும் அறு சுவையை மிஸ் பண்ணீட்டேன்...... god bless all

//இதுவரை நான் மைசூர்பாகு செய்ததே இல்லை.. உங்களைய நம்பி இன்னைக்கு..... //

என்னைய நம்பி?!!! :-)

//இந்த நெய்யுக்கு நான் இங்குட்டு எங்க போக?? சாதா நெய்யுலயே போடுவோம்//

தெளிவு நெய் செய்முறை சரியா தெரியலை. ஓரளவுக்கு விசயம் தெரிஞ்ச நண்பர் என்ன சொல்றாருன்னா, "வெண்ணையை உருக்கி நெய் தயாரிக்கிறப்ப, நெய்யுல இருக்கிற மணல் மாதிரியான பகுதி அடியில தங்கிடும். மேலே எண்ணெய் மாதிரி இருக்கிறதுதான் தெளிவு நெய். அது அவ்வளவு சீக்கிரம் உறையாதாம். நெய் தயாரிக்கிறப்பவே இந்த தெளிவு நெய்யை கடைகளுக்காக தனியா எடுத்துடுவாங்களாம்.

கடையில கிடைக்கிற மாதிரியான டெக்ஸ்ட்ர்ல, கலர்ல, டேஸ்ட்ல நெய் மைசூர்பாகு வேணும்னா, அவங்க செய்யற மாதிரி அதே பொருட்களை பயன்படுத்தி அதே மாதிரி செஞ்சாத்தான் கிடைக்கும். இல்லைன்னா, எதாவது ஒரு மைசூர்பாகு கிடைக்கும். நாம அதுக்கு நாமகரணம் பண்ணிடலாம்.

எங்க வீட்டுலயும் செய்யறேன்னு செஞ்சு, என்னவோ கட்டம் கட்டமா வெட்டி கொண்டு வந்தாங்க.. என்னது இது.. கடையில இருக்கிற மாதிரி இல்லையேன்னா, பார்க்கிறதுக்கு எப்படி இருந்தா என்ன? சாப்பிட்டு பாருங்க.. டேஸ்ட்டா இருக்கா இல்லையான்னு எதிர்கேள்வி வருது. (ம்ம்.. இருக்காதா பின்னே.. அவ்வளவு நெய்யும், சீனியும் கொட்டி அதில மண்ணை கலந்து சாப்பிட்டாக்கூடத்தான் டேஸ்ட்டா இருக்கும்..)

Google images ல ghee mysore pak ன்னு கொடுத்து தேடிப் பாருங்களேன்.. கலர்கலரா, விதவிதமா, என்னென்னவோ சைஸ்ல எல்லாம் மைசூர்பாகு(?!) வருது.. "டேஸ்ட்டா இருக்கா இல்லையா" ங்கிற கேள்விய நான் மட்டுமில்ல.. எத்தனையோ பரிதாப பேர்வழிகள் எதிர்கொண்டு இருக்காங்கங்கிறது அதை பார்க்கிறப்பத்தான் தெரியவருது.

// சூப்பரோ சூப்பர்..... செய்து பார்த்தேன்....மிக அருமையாக வந்தது.....கடலை மாவின் பச்சை வாசனை வரவே இல்லை....//

ரொம்ப நன்றிங்க. ரெண்டு மணி நேரத்துலேயே செஞ்சு பார்த்து பதிவும் போட்டுட்டீங்க. செய்முறையில ஒரு நாள் வச்சிருந்து அடுத்த நாள்தான் வெட்டணும்னு சொல்லி இருக்கு. :-) எப்ப வெட்டினா என்ன.. டேஸ்ட்டா இருக்குல்ல ன்னு சொல்ல வர்றீங்க.. புரியுது. :-)

என்னங்க நீங்க...ஒரு நாள் வரைக்கும் விட்டு வைக்க முடியுமா? பாதி காலி பண்ணியாச்சு...அதில வேற என் கணவர் நெய் ரொம்ப கூடாதம் உடம்புக்கு...அதனால பாதிய அவரோட நண்பருக்கு கொடுக்க பார்சல் பண்ணி கொண்டு போய்ட்டார்....(ஒருவேளை அவர் நண்பர் உடம்புக்கு நல்லது போல) .... மறுபடியும் ரொம்ப தாங்ஸ்...

;) நான் நேற்று இரவு தான் நெய்யை வாங்கி வர வெச்சிருக்கேன். இப்படி எல்லாம் இடிய தூக்கி போடப்புடாது... நான் மைசூர்பாக் செய்தே ஆகனும், அதை அவர் முழுங்கிட்டு “சூப்பர்”னு பொய்யாவது சொல்லியே ஆகனும் 8) எனக்கு ப்ரிட்டானியா நெய் தான் வாங்கி வந்திருக்காங்க... அதுல பாதி பாட்டில் கெட்டியா அடியில் வெள்ளையா நிக்குது... மேல ஒரு கால் பாட்டில் மட்டும் லிக்வுட் ஃபார்ம்ல இருக்கு கெட்டியா இல்லாம. அதை தெளிவா எடுத்து ட்ரை பண்றேன். ஓரளவு பதம் கத்துக்க இது உதவும். ஊருக்கு போனதும் நீங்க சொன்ன நெய்யை கேட்டு வாங்கிடுறேன் ;)

//அவ்வளவு நெய்யும், சீனியும் கொட்டி அதில மண்ணை கலந்து சாப்பிட்டாக்கூடத்தான் டேஸ்ட்டா இருக்கும்..)// - நோ நோ... நான் கடலை மாவு தான் கொட்ட போறேன். :D மதியத்துக்கு மேல பேக்கிங் பிசியாகிடுது, அதனால் காலையிலயே பண்ணிடனும்னு இருக்கேன், என் ஆசையில் இப்படிலாம் டயலாக் விட்டு மண்ணை போடாதீங்க அண்ணா. :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Anna innaikku evening neenga sonna madhiriye nei mysore paagh seidhen. 3 cup maavu 2 cup sugar add seidhen. Taste superb ah irukku. Silver plate la nei thadavi parappi vaithirukken. Innum edukkala. Try pannen kottinaalum, thattinaalum vila maattudhu. Javvu mittai pol pisu pisu nu irukku. Nei nallave add seidhen. Naalaikku edukkalaamnu appadiye vachirukken.. naan idhil enna thavaru seithirukken. Ini enna seivadhu?? Pls udane yaravadhu answer sollunga. Please..

மைசூர்பாகு சரிவரலனா அதை மிக்சியில் தூள் செய்து லட்டு சய்யலாம்னு கேள்வி பட்டுள்ளேன்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

Javvu pol ulladhu.next day thaan eduthen. Tite ah irukku. Ippo laddu polthaan pannirukken.taste super. But nalla varala. Adhan yaaraaavadhu therindhal padhil podungal please. Hey pls paa 3 days ah wait pandren. Yaarum answer silla maatraanga..