பெரிய காரசேவு

தேதி: October 16, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

அறுசுவை நேயர்களின் (குறிப்பாக திருமதி. சாந்தா அவர்களின்) விருப்பத்திற்காக, கடைகளில் செய்யப்படும் காரச் சேவு செய்முறையை இங்கே படங்களுடன் விளக்கியுள்ளோம். இது சற்று பெரிய வகை சேவு. சிறிய வகை காரச் சேவிற்கும் இதே போல்தான் மாவு தயாரிக்க வேண்டும். சில வித்தியாசங்கள் உண்டு. அவற்றைக் கீழே குறிப்பிட்டு உள்ளோம்.

 

கடலை மாவு - அரைக் கிலோ
அரிசி மாவு - கால் கிலோ
மிளகு - 15 கிராம்
சீரகம் - 15 கிராம்
லெமன் கலர் - ஒரு சிட்டிகை
உப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயத் தண்ணீர் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 4 கொத்து
எண்ணெய் - கால் கப்


 

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் கொட்டவும். மாவின் மத்தியில் குழி போல் செய்து கொண்டு அதில் லெமன் கலர், உப்பு ஆகியவற்றைப் போடவும்.
பின்னர் ஒன்றிரண்டாக அரைத்த மிளகுத்தூள், முழு சீரகம் ஆகியவற்றைப் போடவும். சிறிய காரசேவு என்றால் மிளகு, சீரகம் சேர்ப்பதில்லை. மிளகாய்த்தூளும், ஓமமும் சேர்க்க வேண்டும்.
பெருங்காயத் தண்ணீரை மாவில் ஊற்றவும். அதில் எண்ணெய்யையும் ஊற்றவும்.
அரை கப் அளவு தண்ணீர் விட்டு மாவினை ஒன்று சேர பிசையவும்.
பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு, கட்டி விழாமல் மாவை பதமாக பிசையவும்.
பிசைந்த மாவு நீர்க்க இளகி இருக்கக் கூடாது. சற்று கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கொதித்ததும் காரசேவு பலகையை வாணலிக்கு நேராகப் பிடித்து அதில் மாவை வைத்து தேய்க்கவும். கடைகளில் பெரியதாக பலகை போன்ற அச்சை பயன்படுத்துவார்கள். வீடுகளில் நாம் சாரணியின் மீது மாவை தேய்த்து காரசேவு செய்யலாம். முறுக்கு அச்சுப் போன்ற அச்சு கொண்டும் பிழியலாம்.
காரசேவு நன்றாக வேகும் வரை, அவ்வபோது சாரணி கொண்டு அரித்து, திருப்பி விட்டு வேகவிடவும்.
நன்றாக வெந்து, நிறம் மாறி வரும் நேரம், கறிவேப்பிலை இலைகளை எண்ணெய்யில் போடவும். மேலும் சிறிது நேரம் வேகவிட்டு, ஒரு சேவை எடுத்து உடைத்துப் பார்த்து வெந்ததை உறுதி செய்து கொண்டு, பின்னர் அரித்து எடுத்து எண்ணெய் வடியவிடவும்.
சுவையான காரச் சேவு தயார். கடைகளில் தயாரிக்கும் முறை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. வீடுகளில் செய்யும் போது அளவைக் குறைத்து செய்யலாம். ஒன்றுக்கு அரை என்பதுதான் கடலைமாவு, அரிசிமாவின் விகிதம்.
ஓமத்தின் படத்தினை இங்கே கொடுத்துள்ளோம். இதை சிறிய வகை காரச் சேவில் சேர்க்கவேண்டும். ஓம நீரை சேர்க்கக் கூடாது. ஓமப் பொடிக்குத்தான் ஓமநீர் சேர்க்கவேண்டும்.

இந்த காரச் சேவிற்கு சற்று பெரிய துளைகளை உடைய சாரணி அல்லது அச்சினை பயன்படுத்தவும். சிறிய வகை காரச்சேவிற்கு மிளகு சீரகத்திற்கு பதில், மிளகாய்த்தூள் ஒன்றரை தேக்கரண்டி, ஒமம் மூன்று மேசைக்கரண்டி சேர்க்கவும். சிறிய துளைகள் உள்ள சாரணியை பயன்படுத்தவும். மாவு கெட்டியாக இல்லாவிடில் பூந்திபோல் உருண்டை உருண்டையாக கொட்டிவிடும். தேய்க்கும்போதே சற்று நீள நீளமாக விழுமாறு அழுத்தி, இழுத்து தேய்க்க வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது சந்தேகத்திற்கு படங்களுடன் கூடிய விளக்கங்கள் தந்துதவியுள்ளீர்கள். எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நாளைக்கு நிச்சயம் எம் வீட்டில் காரசேவுதான்.

இன்று நீங்கள் காட்டிய முறையில் காரசேவு செய்து பார்த்தேன். முக்கால் கிணறு தாண்டிவிட்டேன். தயார் செய்த மாவை பூந்திக்கரண்டியில் வைத்துத்தேய்த்துப்பார்த்தேன், மிக மெல்லியதாக விழுகிறது. அதன் பின் காரட் துருவியில் தேய்த்தேன், அளவு சரியாக வருகிறது; ஆனால் தேய்க்கும் மாவு எல்லாம் எண்ணெய்யில் விழாமல் காரட் துருவியிலேயே ஒட்டி க்கொள்கிறது. மாவை தளர்வாகவும், இறுக்கமாகவும் குழைத்துப்பார்த்தேன். இறுக்கமாகக்குழைத்தது காரசேவின் வடிவில் வருகிறது, ஆனால் தேய்ப்பதுதான் சிரமமாக இருக்கிறது. இதற்கும் ஏதாவது வழி சொல்லுங்கள், முழுக்கிணறையும் தாண்டி விடுவேன். நன்றி.

நான் காரசேவு செய்து பார்த்தேன்.பெரிய முறுக்குகளாக சுட்டு பிறகு உடைத்துக்கொண்டேன். நன்றாக வந்தது. அடுத்த முறை செய்யும்பொழுது புகைபடம் எடுத்து அனுப்புகிறேன். மிக்க நன்றி.