பிரண்டை வற்றல்

தேதி: May 21, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

பிரண்டை - ஒரு படி
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
கொள்ளு - முக்கால் படி
காராமணி - கால் படி
உப்பு - 3 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 25
பெருங்காயம் - சிறு குண்டுமணி அளவு


 

பிரண்டையை வாங்கி முதலில் அதன் கணு போல் தடிமனாக இருக்கும் பகுதியை வெட்டி எடுத்துவிடவும். வெட்டும் போது கத்தியை பயன்படுத்தி வெட்டவும். இல்லையென்றால் கை அரிக்கும். இரண்டு கணுவிற்கு இடையில் உள்ள தண்டு பகுதியை தான் உபயோகப்படுத்த வேண்டும். இதை போல் வெட்டி ஒரு படி அளவிற்கு அளந்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருள்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் காராமணி, கொள்ளு இரண்டையும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊற விடவும். உளுத்தம் பருப்பை மட்டும் தனியாக ஊற வைக்கவும். உளுந்து ஒரு மணி நேரம் ஊறினால் போதும்.
மறுநாள் காலையில் பிரண்டையை கழுவிக் கொள்ளவும். பிறகு கிரைண்டர் அல்லது ஆட்டுக்கல்லில் முதலில் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம், பிரண்டையை போட்டு அரைத்து கொள்ளவும்.
அதன் பின்னர் ஊற வைத்த காராமணி, கொள்ளு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீர் வடித்து விட்டு போட்டு அரைக்கவும்.
நன்கு அரைப்பட்டவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். மாவை அரைத்த உடனேயே தட்டி விட வேண்டும்.
வெயிலில் ப்ளாஸ்டிக் கவரை விரித்து போட்டு அதில் அரைத்த கலவையை ஒரு எலுமிச்சை அளவு எடுத்து வட்டமாக தடிமனாகவும் தட்டவும். இதைப் போல் எல்லா மாவையும் தட்டி விடவும். அன்று முழுவதும் நன்கு வெயிலில் காய வேண்டும்.
மறு நாள் அதை ஒரு பெரிய தட்டில் வைத்து காய வைக்கவும். இதைப் போல் 3 நாட்கள் காயவைக்க வேண்டும்.
நன்கு காய்ந்ததும் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். பொரித்த வற்றலை அப்படியே உதிர்த்து விட்டு இட்லி தோசைக்கும் தொட்டு கொள்ளலாம்.
இந்த பிரண்டை வற்றல் செய்முறையை திருமதி. மங்கம்மா அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

plastic coveri kku pathil,cotton thuniyil kaayavaipathu nalathu

பிரண்டைக்காக வரவில்லை. அந்த ஆட்டுக்கல் படம் பார்க்க ஆசையாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்