பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? *

அறுசுவை அன்பு மக்களே அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கான "90"வதுபட்டிமன்ற தலைப்பு:***நட்பிற்கு சுவை சேர்ப்பது
முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? விரிவாக சொல்லணும்னா உங்களின்
இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவையா? இல்லை
அளவான அளவு பகிர்ந்து கொள்வது சுவையா? அருமையான தலைப்பை அளித்த **இளவரசி
மேடம்** அவர்களுக்கு மிக்க நன்றியுடன் இனிதே பட்டியை துவக்குவோம்,
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)

ஒவ்வொரு காலகட்டத்திலும் யாராகிலும் ஒருவர் அல்லது பலர் நம் நட்புக்கு பாத்திரமாகின்றனர்.
பள்ளிக்கூட நட்பு, கல்லூரியிலும் தொடர ஒரு சிலருக்கே வாய்ப்புள்ளது.
இதைப் போலவே
வேலைக்கு செல்லும் இடத்தில்,
பஸ்ஸில் பயணம் செய்யும் போது,
விடுதியில் தங்கியிருக்கும் போது,
பக்கத்து வீட்டு தோழி,
கணவரின் தங்கை,
கணவரின் தோழி என எல்லா இடத்திலும் நட்பு பாராட்டுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அவை ஆழமான நட்பாகவும் இருக்கிறது.

இப்போது யோசியுங்கள் இந்த ஆழமான நட்புகளிடத்தில் நாம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டால் எத்தனை பேர்களிடம் நம் அந்தரங்கத்தை பகிர்ந்து கொண்டிருப்போம்.

ஏன் சொல்லுகிறேன் என்றால் நம் எல்லாருக்குமே மறுபக்கம் என்று ஒன்று இருக்கும். அதை இப்படி எல்லா ஆழமான நட்புகளிடத்திலும் சொல்லலாமா?

நாம் ஒவ்வொரு நட்பையும் ஒவ்வொரு கால கட்டத்தில சந்திக்கிறோம். அப்போது நாம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அந்த நட்பு சில பல காரணங்களால் தொடர இயலாமல் போகும்.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொல்கிறேன்
கல்லூரியில் உங்கள் நெருக்கமான தோழியிடம் உங்கள் கல்லூரி காதலை மனம் திறந்து பேசுகிறீர்கள். சில காரணங்களால் உங்கள் காதலையும், நட்பையும் கல்லூரிக்கு பிறகு தொடர முடியவில்லை. உங்கள் திருமணம் முடிந்த பிறகு உங்கள் தோழியை பார்க்க நேரிடுகிறது. உங்கள் தோழி உங்கள் கணவரின் மிகவும் நெருக்கமான தோழியாக இருக்கிறார். இப்போது உங்கள் மூவரின் முழுமையான பகிர்வு அதாவது
கணவருக்கும் தோழிக்கும்
தோழிக்கும் கணவருக்கும்
உங்களுக்கும் தோழிக்கும் இருக்கும் போது நிலைமை என்னவாகும் என்பதை நடுவரின் எண்ணத்திற்கே விட்டு விடுகிறேன்

இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு. இதைப் போல் நிறைய இருக்கிறது

ஒருவருடன் நாம் கொள்ளும் நட்பு பிறப்பிலிருந்து இறப்பு வரை நம்முடன் கூட வருவதல்ல.
ஆகவே அளவான பகிர்வே நல்லது என்று கூறி விடை பெறுகிறேன்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

நடுவரே முதல்ல நட்பு அப்படின்னா என்ன? திடீரென்று எப்படி எதிரியாக நினைக்க முடியாதோ, அதுபோல் ஒருவரிடம் நட்பையும் நாம் கொள்ள முடியாது. . நட்பு என்பது சுயநலமில்லாமல் பிறருக்காக(அதாவது நட்புக்காக) உருகும் மெழுகாய் இருக்க வேண்டும். தன்னை கசக்கி பிழிந்து கொண்டு, சக்கையாக மாற்றி கொண்டு, பிறருக்கு சுவை தரும் கரும்பாய் இருக்க வேண்டும். விழி நீர் துடைக்கும் விரலாய் இருக்க வேண்டும்.
எதிர்அணி சொல்வது போல பணத்தை கடனாய் கொடுத்து வாங்குவது நட்பல்ல. குணத்தை நன்றி கடனாய் காட்டுவதே நட்பு. பிரச்சினை வரும் போது விரல்களை போல் விலகி இருக்காமல், உதடுகளை போல் ஒட்டி இருப்பது நட்பு. இதெல்லாம் இருவருக்கிடையே பரஸ்பரம் முழுமையான பகிர்தல் இருந்தால் மட்டுமே சாத்தியம் .
ஏன் நம்மை பெற்றவர்களிடத்திலும், பிரியமுடன் துணைசேர்த்த நமது துணையுடனும் பகிர்ந்து கொள்ள முடியாத எவ்வளவோ விசயங்களை உண்மை நண்பரிடம் கூறி மனப்பாரம் குறைக்கின்றோமா இல்லயா? நம் பாரதியார் நட்பை பற்றி எவ்வளவு அழகாக பாடியுள்ளார் பாருங்கள்...

'ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ் சொல்லி மாற்றிடுவான்.
உள்ளத்திலே கருவங்கொண்ட போதினில்
ஓங்கி அடித்திடுவான் - நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு
காறியுமிழ்ந் திடுவான்'

எனவே உண்மை நட்பு உரிமையுடன் எதையும் எந்த நிலையிலும் எடுத்துச் சொல்ல வல்லவனாய் இருத்தல் வேண்டும். நான் இணையத்தில் படித்த ஒரு அருமையான கவிதையை இந்த இடத்தில் சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்.
சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்
"கவலைப்படவில்லை" என
அப்பாவிடமும்
"அடுத்த மா"தத்திற்குள்
...
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்
"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது..
"காலையிலிருந்து சாப்பிடல...
ரொம்பப் பசிக்குதுடா,
எதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது....
உண்மையான நட்பு எந்த விசயத்திலும் கவுரவம் பார்க்காது ஒளித்து மறைக்காது நடுவரே. அவ்வளவு ஏன் நம் இதிகாசமான மகாபாரத்தில் துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் இருந்த நட்பு நாம் எல்லோரும் அறிந்ததே. ஒருசமயம் துரியோதனனின் மனைவியுடன் தாய‌ம் ஆடிக் கொண்டிருந்தான் கர்ணன். துரியோதனன் வருவதைக் கண்டதும் துரியோதனனின் மனைவி அவசர அவசரமாக எழுந்திருந்தபோது அவளைப் பிடித்து விளையாட்டைத் தொடரக் கர்ணன் இழுத்தபோது அவள் கட்டியிருந்த ஆபரணத்திலிருந்து மணிகள் சிதறித் தரையில் விழுகின்றன.துரியோதனனைக் கண்டதும் கர்ணன் திடுக்கிடுகிறான். ஆனால் துரியோதனன் என்ன சொல்கிறான்? விழுந்த மணிகளை எடுக்கவா, கோர்க்கவா? என்கிறான். அவன் மனதில் கர்ணனின் செயல் தப்பு எ‌‌ன்பதை ஏற்படுத்தவில்லை. அதற்க்கு காரணம் இருவருக்கும் இடையேயான நட்பின் ஆழம். இது துரியோதனன் கர்ணனை பற்றி புரிந்து வைத்துள்ளதை காட்டுகிறது. என்னைக்குமே முழுமையான் பகிர்தல் இருக்கிறவங்க மனதில் கள்ளமோ தன்னை தப்பா நினைப்பாங்களோ அப்படிங்கிற பயமும் இருக்காது நடுவரே. இந்த புரிதல் அளவான பகிர்தலில் சாத்தியமா நடுவரே? பதில கேட்டு வைங்க .. கடமை அழைக்குது ,அப்புறமா வர்ரேன்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாதாடுவதற்கு குறிப்பு எடுத்துக் கொடுத்த எதிரணியினருக்கு நன்றி

துரியோதனன், கர்ணனின் நட்பைப் பற்றி சொன்னார்கள். கதையை முழுமையாக படிக்கவில்லை போலும்.

அவர்களுக்குள் உள்ள நட்பு மிகவும் ஆழமானது. ஆனால் இருவருக்கும் இடையே முழுமையான பகிர்வு இல்லை. தன் அம்மா குந்தி என்பதை கடைசி வரை துரியோதனனிடம் சொல்லவே இல்லை. காரணம் முழுமையான பகிர்வு தன் நண்பனை காயப்படுத்தி விடக் கூடாது என்பதினால் தான்.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

பட்டிமன்ற பெரியவர்கள் வாருங்கள். பட்டியை தூக்கி நிறுத்துங்கள்
டம்......டம்......டம்......டம்......டம்......

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

//வாதாடுவதற்கு குறிப்பு எடுத்துக் கொடுத்த எதிரணியினருக்கு நன்றி// அப்போ பேச குறிப்பே இல்லாம தத்தளிச்சுட்டு இருந்தீங்க போலும்..;)

//துரியோதனன், கர்ணனின் நட்பைப் பற்றி சொன்னார்கள். கதையை முழுமையாக படிக்கவில்லை போலும்.
அவர்களுக்குள் உள்ள நட்பு மிகவும் ஆழமானது. ஆனால் இருவருக்கும் இடையே முழுமையான பகிர்வு இல்லை. தன் அம்மா குந்தி என்பதை கடைசி வரை துரியோதனனிடம் சொல்லவே இல்லை. காரணம் முழுமையான பகிர்வு தன் நண்பனை காயப்படுத்தி விடக் கூடாது என்பதினால் தான்.// நடுவரே நான் கதையை முழுமையாக படித்து விட்டு தான் பதிவே போடுகிறேன்...;) என் பதிவில் நான் என்ன சொல்லி இருக்கிறேன், அதை மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். //துரியோதனனைக் கண்டதும் கர்ணன் திடுக்கிடுகிறான். ஆனால் துரியோதனன் என்ன சொல்கிறான்? விழுந்த மணிகளை எடுக்கவா, கோர்க்கவா? என்கிறான். அவன் மனதில் கர்ணனின் செயல் தப்பு எ‌‌ன்பதை ஏற்படுத்தவில்லை.// துரியோதனன் மனதில் கர்ணன் செயல் தப்பு என்று தோன்றவில்லை, ஏனென்றால் துரியோதனன் கர்ணனிடம் எல்லா விசயங்களையும் பகிர்ந்து கொள்பவன், ஆனால் கர்ணணோ தன் அம்மா குந்தி என்பதை மறைத்து வைத்தான், அவன் மனதில் கள்ளம் இருந்ததினால் தான் தன் நண்பன் துரியோதனனை கண்டதும் திடுக்கிட்டு எழுந்தான், இதுவே அவன் மனதில் குற்றம் இல்லை என்றால்அதாவது தன் பிறப்பை பற்றி தன் நண்பனிடம் சொல்லியிருந்தால் தன் நண்பன் தவறாக எண்ண மாட்டான் என்று வழக்கம் போல தாய ஆட்டத்தை தொடர்ந்து ஆடியிருப்பான்.அதாவது நடுவரே நம்மகிட்ட ஒரு தப்பு இருந்துதுன்னா எதிரே நிக்கற நம்ம நண்பன் விளையாட்டுக்கு ஏதுனா சொன்னாகூட நம்ம விசயம் தெரிஞ்சு தான் பேசரானோ அப்படின்னு ஒரு பத்ட்டம் கண்டிப்பா வரும், அதனால் தான் எங்கள் அணியிணர் முழுமையான் பகிர்வு மட்டுமே இருவர் கொள்ளும் நட்புக்கு சுவை சேர்க்கும் என்று சொல்கிறோம் .

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நடுவருக்கு வணக்கம்
நல்ல தலைப்பு,என் வாதம்,நண்பர்களிடம் அளவாக பகிர்ந்து கொள்ல வேஎண்டும் என்பதே
ஓரளவிற்கு இன்ப துன்பங்களை சொல்லலாம்,பகிர்ந்து கொள்ளலாம்,ஆனால் அளவிற்கு மீறி எதையும் சொல்லக்கூடாது.அது நமக்கே ஆபத்தாக மாறி விடும்
தொடர்ந்து வருகிறேன்

நடுவர் தம்பி எங்க போயிடீங்க? எங்களுக்குள்ள கலகம் வர மாதிரி தலைப்ப கொடுத்துட்டு நீங்க எங்க போனீங்க? ..;) சீக்கிரம் வாங்க... எப்படி பழகலான்னு கொஞ்சம் வந்து சொல்லுங்க, இரண்டு அணியும் வெயிட்டிங்...;)B|

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஆமா ..ஆமா ... வெயிட்டிங் ... வெயிட்டிங் ... நடுவர் தம்பி

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

வணக்கமுங்க
நண்பர்களிடையே நட்பில் விரிசல் விழக்காரணம் அளவான பகிர்தல் இல்லை சரியான புரிதல் இல்லைன்னு சொல்றீங்க.. ம்ம்..
// நட்பு என்பது எதனையும் எதிர்பாராததாக இருக்கவேண்டும் //
அருமைங்க, கண்டிப்பாக நிதர்சனமான உண்மை.
// எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டால் தான் நட்பு நீடிக்கும் என்பது இல்லை//
உண்மைதான்ங்க, பகிர வேண்டிய விஷயங்களை நட்பில் பகிர்வது தப்பில்லைனு சொல்றீங்க,, கணவன் மனைவி குடும்ப விஷயம் தவிர்த்து மற்ற விரும்பும் விஷயங்களை பகிரலாம்ங்கிறீங்க, அருமை, அருமை அடுத்தகட்ட வாதங்களுடன் வாங்க...

நட்புடன்
குணா

வாங்க, வணக்கம், நீங்களும் அளவான பகிர்வே அணியா.! மகிழ்ச்சிங்க,
அந்தரங்கத்தை பலரிடம் பகிர்ந்து கொண்டால் நம்மைப்பற்றி அதிகமானவர்கள் தெரிந்திருப்பார்கள், அது சரியல்ல என்று சொல்றீங்க..
முழுமையான பகிர்வு சில வேளைகளில் பிரச்சினை என்று அருமையாக சொல்றீங்க..
மேலும் பல வாதங்களுடன் வாங்க :-)

நட்புடன்
குணா

மேலும் சில பதிவுகள்