ஃபீஜோவா ரெலிஷ் சமையல் குறிப்பு - படங்களுடன் - 26103 | அறுசுவை


ஃபீஜோவா ரெலிஷ்

வழங்கியவர் : imma
தேதி : செவ்வாய், 28/05/2013 - 11:43
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4.333335
6 votes
Your rating: None

 

  • ஃபீஜோவா (Feijoa) - 500 கிராம்
  • ஆப்பிள் - 2
  • வெங்காயம் - 2
  • மால்ட் வினிகர் (Malt Vinegar) - ஒரு கோப்பை (250 மில்லி)
  • பழுப்பு சர்க்கரை (Brown Sugar) - 2 கோப்பை
  • மிக்ஸ்ட் ஸ்பைஸ் - ஒரு மேசைக்கரண்டி
  • கறுவாத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • காஷ்மீரி மிளகாய்ப்பொடி - அரை தேக்கரண்டி
  • உப்பு - 2 தேக்கரண்டி

 

தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஃபீஜோவாவின் தோலைச் சீவிவிட்டு உட்பகுதியை சிறிதாக வெட்டி வைக்கவும்.

ஆப்பிளின் தோலைச் சீவி நடுத்துண்டை நீக்கிவிட்டு மீதியை சிறிய துண்டுகளாக்கவும். இதேபோல் வெங்காயத்தையும் சிறிதாக வெட்டி வைக்கவும்.

ஒரு அடிகனத்த பாத்திரத்தில் இவையனைத்துடனும் மால்ட் வினிகரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும் நெருப்பைக் குறைத்து மெல்லிய தீயில் பாத்திரத்தை மூடி வைத்து வேகவிடவும். அடிப்பிடித்து விடாமல் ஒரு மரக்கரண்டியால் இடைக்கிடை கிளறிவிடவும்.

அரை மணி நேரம் கழித்து மீதிப்பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மீண்டும் கொதிநிலைக்குக் கொண்டுவரவும்.

கலக்கிக் கொண்டே ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். ரெலிஷ் அதிகம் நீர்த்தது போல் இருக்கக்கூடாது.

அடுப்பை அணைத்ததும் உடனடியாக பாட்டிலினுள் மேலே அரை சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு ரெலிஷை நிரப்பவும்.

நிரப்பியபின் பாப் சீல் (Pop Seal) மூடியை வைத்து அழுதியபடியே திருகி இறுக்கி மூடிவிடவும்.

சூடு ஆறும் பொழுது பாட்டில் தானாக சீல் ஆகி இருக்கும்.

பின்பு அழகாக மூடியைச் சுற்றி துணி கட்டிவிட்டு லேபிள் ஒட்டிவிடலாம். ஏனைய ரெலிஷ்கள் போல இதையும் சான்விச்சுகளில் சேர்க்கலாம். க்ராக்கர்ஸோடு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

மேலே குறிப்பிட்டிருக்கும் அளவுக்கு ஒரு லிட்டர் அளவில் ரெலிஷ் கிடைக்கும். அதற்கேற்றாற் போல பாப்சீல் மூடிகளுள்ள சிறிய கண்ணாடி பாட்டில்களைத் தெரிந்து முன்பாகவே அவற்றையும் மூடிகளையும் சுத்தமாகக் கழுவி வைக்கவும். அனைத்தையும் ஒருமுறை வெந்நீரில் அலம்பவும். ரெலிஷை சமைத்துக் கொண்டு இருக்கும் பொழுது அனைத்தையும் அவனில் வைத்து மெல்லிய சூட்டில் உலர விடவும். சூடாகியதும் அவனை அணைத்துவிட்டு அப்படியே விட்டு வைக்கவும். நிரப்பும் சமயம் பாட்டில்களை ஒரு மரத்தாலான வெட்டும் பலகையில் வைத்து நிரப்பவும். நிரப்புவதற்கு வேறு கரண்டி அல்லது புனல் பயன்படுத்துவதானால் அவற்றையும் பாட்டில்களோடு அவனில் வைத்திருந்து எடுத்தால் நல்லது. சூடாக இருக்கும். (தொடும் போது நினைவாக கையுறை மாட்டிக் கொள்ளவும்).

சரியானபடி சுத்தமாகத் தயாரித்தால் ஆறு, ஏழு மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். ஒரு முறை திறந்தால் பிறகு ஃப்ரிஜ்ஜில் வைத்துப் பாவிக்க வேண்டும். எப்பொழுதும் சுத்தமான உலர்ந்த கரண்டிகளையே பாவிக்க வேண்டும்.

இதே அளவுகளின்படி சிவப்பு வெங்காயமும், க்ரானி ஸ்மித் ஆப்பிளும் சேர்த்தும் சமைக்கலாம். கிடைக்கும் ரெலிஷின் நிறம் சற்றுக் கடுமையாக இருக்கும். சுவை இதைவிட நன்றாக இருக்கும்.






ஃபீஜோவா ரெலிஷ் பேரே

ஃபீஜோவா ரெலிஷ் பேரே டிஃப்ரண்டா இருக்கே, கைவினையோ'னு வந்து பார்த்தால்... ம்ம்... படங்களும் அருமை, அசத்துங்க இமாம்மா :-P அசத்துங்க

நட்புடன்
குணா

ஃபீஜோவா ரெலிஷ்

சுவைத்தேன், ரசித்தேன். பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.