கெட்டி உருண்டை சமையல் குறிப்பு - படங்களுடன் - 2616 | அறுசுவை


கெட்டி உருண்டை

வழங்கியவர் : arusuvai_team
தேதி : வெள்ளி, 20/10/2006 - 00:38
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
5
1 vote
Your rating: None

தீபாவளிக்கென்று செய்யப்படும் மற்றுமொரு சிறப்பு பலகாரம், கெட்டி உருண்டை. பெயருக்கு ஏற்றார்போல் மிகவும் கெட்டியாக இருக்கும். அப்படியே கடித்தால் பல் வலிக்கு உத்திரவாதம் தரலாம். கஷ்டத்திற்கு என்றுமே பலன் உண்டு என்பதற்கேற்ப, இதன் சுவை வாய் வலியை மறக்கச் செய்துவிடும்.

 

  • பச்சரிசி - கால் படி
  • பயறு - ஒரு படி
  • பொட்டுக் கடலை - ஒரு கப்
  • எள்ளு - கால் கப்
  • ஏலக்காய் - 5
  • வெல்லம் - அரை கிலோ
  • தேங்காய் - ஒன்று

 

தேங்காயை பல்பல்லாக நறுக்கிக் கொண்டு, பின்னர் ஒரு வாணலியில் இட்டு வாசனை வரும் வரை கருகவிடாமல் வறுக்கவும்.

வாணலியில் பச்சரிசியை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே வாணலியில் பச்சை பயறை போட்டு 5 நிமிடம் கருக விடாமல் வறுக்கவும்.

வாணலியில் பொட்டுக்கடலையை போட்டு 2 நிமிடம் நிறம் மாறும் அளவுக்கு வறுக்கவும். பிறகு எள்ளை போட்டு 2 நிமிடம் வறுத்து பொரிந்ததும் எடுத்து விடவும்.

பச்சரிசியையும், பயறையும் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைக்கவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.

ஒரு பெரிய தாம்பாளத்தில் மாவை கொட்டி ஏலக்காய், பொட்டுக்கடலை, எள்ளு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தூளாக நசுக்கி போட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். பாகின் பதம் தெரிந்துக் கொள்ள ஒரு தட்டில் தண்ணீர் வைத்து அதில் ஒரு சொட்டு பாகை ஊற்றினால் கையில் எடுத்து பார்க்கும் போது கையில் ஒட்டாமல் மணிபோல் வரவேண்டும்.

பாகின் பதம் வந்ததும் வறுத்த தேங்காயை போட்டு ஒரு முறை கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு தாம்பாளத்தில் கலந்து வைத்திருக்கும் மாவின் ஒரு புறத்தில் பாகை ஊற்றி கையால் கெட்டியான உருண்டைகளாக உருட்டி வைக்கவும். முழுப்பாகையும் மாவில் ஊற்றி கலந்து விடாமல், சிறிது சிறிதாக விட்டு, மாவுடன் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.

பாகை திரும்ப சூடுப்படுத்திக் கொள்ளவும். பாகு ஆறிவிட்டால் கெட்டியாகி விடும். அனைத்து மாவையும் பாகின் சூட்டிலேயே உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடிப்பதற்கு சற்று கடினமாக இருந்தாலும், சுவையில் நாவை மயக்கும் உருண்டை இது.