வழங்கியவர் : arusuvai_team
தேதி : திங்கள், 30/10/2006 - 20:16
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
பெங்காலி ஸ்வீட்ஸ் என்றவுடன் நமது நினைவிற்கு முதலில் வருவது ரசகுல்லாதான். அறுசுவையில் வாசகர்கள் அதிகம் தேடிய இனிப்பு இதுவாகத்தான் இருக்கும். ரசகுல்லா செய்முறையை படங்களுடன் விளக்கக் கோரி நிறைய மின்னஞ்சல்களும் வந்துள்ளன. உங்கள் அனைவரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் இங்கே ரசகுல்லா செய்முறையை விளக்கியுள்ளோம். அளவுகள் சற்று அதிகமாக இருக்கும். வீடுகளில் செய்யும் போது இதனை குறைத்துக் கொள்ளலாம். அனைத்துப் பொருட்களையும் ஒரே விகிதத்தில் குறைத்துக் கொள்ளவும்.
- பால் - 5 லிட்டர்
- வினிகர் - 100 மில்லி
- சோள மாவு (corn flour) - 25 கிராம்
- சீனி - 6 கிலோ
- தண்ணீர் - இரண்டரை லிட்டர்
![]() |
முதலில் பாலை நன்கு கொதி வரும் வரை காய்ச்சவும். காய்ச்சிய பாலை இறக்கி வைத்து, 100 மில்லி வினிகரை 100 மில்லி தண்ணீரில் கரைத்து பாலில் ஊற்றவும். வினிகரை அப்படியே ஊற்றினால், அதிக புளிப்பு தன்மை காரணமாக பால் திரிந்து சற்று கெட்டியாக கிடைக்கும். பனீர் தயாரிப்பதற்கு வினிகரை அப்படியே ஊற்றலாம். |
![]() |
வினிகரை தண்ணீரில் கரைத்து ஊற்றினால்தான் ரசகுல்லாவிற்கு ஏற்றார்போல் சற்று மிருதுவாக கிடைக்கும். இப்போது பால் திரிந்து பஞ்சு பஞ்சாக திரண்டு வரும். சிறிது தண்ணீரையும் அதில் ஊற்றி ஒரு கரண்டியால் லேசாக கிளறிவிடவும். பால் திரிந்து தனியாகவும், தண்ணீர் தனியாகவும் இருப்பதை நாம் பார்க்கலாம். |
![]() |
தண்ணீரை தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். அடுத்தடுத்த முறைக்கு பாலை திரியச் செய்ய வினிகருக்கு பதில் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். கடைகளில் இந்த புளித்த நீரைத்தான் பயன்படுத்துகின்றனர். திரிந்த பாலை ஒரு மெல்லிய துணியில் கொட்டி வடிகட்டிக் கொள்ளவும். நீர் முழுவதும் வடிவதற்காக அதனை அப்படியே கட்டி தொங்கவிடவும். |
![]() |
சுமார் ஒரு மணி நேரம் சென்றபின் அந்த துணியை அவிழ்த்து பார்த்தால், திரிந்த பால் நீர் வற்றி சற்று கெட்டியாக காணப்படும். அதனை மேலும் சற்று கெட்டியாக்க அத்துடன் சோளமாவை சேர்த்து பிசையவும். இதனை நன்றாகப் பிசைந்து சற்று மிருதுவாக்கிக் கொள்ளவும். |
![]() |
அத்துடன் நான் விரும்பிய வண்ணத்தினை சேர்த்து பிசைந்து கொள்ளலாம். நல்லத் தரமான வண்ணத்தை சேர்க்கவும். சுவை, மணத்திற்கு விரும்பினால் சில துளிகள் எசன்ஸ் சேர்க்கலாம். பிசையும் போது, அழுத்தி கெட்டியாக பிசைந்து விடக் கூடாது. |
![]() |
பிசைந்து வைத்துள்ளதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். விரும்பிய வடிவத்தில் உருட்டிக்கொள்ளலாம். |
![]() |
அடுத்து பாகு காய்ச்ச வேண்டும். 6 கிலோ சீனிக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். பாகு கொதித்து வரும் போது அதில் கால் லிட்டர் பால் ஊற்றவும். தீயை குறைத்து வைக்கவும். இப்போது அழுக்கு அனைத்தும் திரண்டு மேலே மிதக்க ஆரம்பிக்கும். அவற்றை கரண்டி அல்லது சாரணியால் அரித்து எடுத்து விடவும். |
![]() |
தெளிவான பாகில் மூன்றில் ஒரு பங்கினை ரசகுல்லா ஊறவைப்பதற்கு தனியாக எடுத்து விடவும். பிறகு திரிந்த பாலில் இருந்து பிரித்து எடுத்த புளித்த தண்ணீரில் இரண்டு மேசைக்கரண்டி எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மைதாவை கரைத்து பாகில் சிறிது தெளிக்கவும். இப்போது பாகு நன்கு நுரைத்து, பொங்கி வரும். அப்படி வரவில்லையெனில் மேலும் சிறிது கரைசலை தெளிக்கவும். |
![]() |
நுரைத்து வரும் பாகில் உருட்டி வைத்துள்ள ரசகுல்லாக்களை போட்டு வேகவிடவும்.ரசகுல்லாக்கள் அனைத்தும் பாகில் நன்கு வேகவேண்டும். அளவில் பெரியதாகவும், மிருதுவாகவும் மாறும் வரை சாரணியால் அவ்வபோது கிளறிவிட்டு வேகவிடவும். |
![]() |
பின்னர் அடுப்பில் இருந்து பாத்திரத்துடன் அப்படியே இறக்கி, பாகை அள்ளி அள்ளி ரசகுல்லாக்களின் மேல் விட்டு சற்று ஆறவிடவும். இப்படி செய்வதன் மூலம் ரசகுல்லா இன்னும் மிருதுவாக மாறும். |
![]() |
அதன் பின்னர் ரசகுல்லாக்களை எடுத்து, முன்பு தனியே எடுத்து வைத்துள்ள பாகில் போட்டு ஊறவிடவும். |
![]() |
ரசகுல்லாக்கள் பெரும்பாலும் வண்ணம் சேர்க்காமல் வெண்மை நிறத்தில் இருக்கின்றன. வெண்மை நிறத்திற்காக ஒரு சிட்டிகை ஹைட்ரோசில் சேர்க்கின்றார்கள். இந்த வண்ணம்தான் என்ற கட்டாயம் கிடையாது. உங்கள் விருப்பத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம். |
கடைகளில் செய்யும் போது பாகை இரண்டாகப் பிரித்து வேக வைப்பதற்கு ஒரு பகுதியையும், ஊற வைப்பதற்கு ஒரு பகுதியையும் பயன்படுத்துகின்றனர். நாம் வீடுகளில் செய்யும் போது அப்படி செய்யத் தேவையில்லை என்கின்றனர். பாகைப் பிரிக்காமல் வேகவைத்து இறக்கி அதிலேயே ஊற வைத்துவிடலாம். இப்படி செய்யும் பட்சத்தில் நுரைப்பதற்காக சேர்க்கப்படும் மைதா + புளித்த நீர் கரைசலை தவிர்த்துவிடலாம். கடைகளில் தயாரிப்பதுபோல் இரண்டாக பிரித்து செய்தால், வேக வைத்த பாகு வீணாகி போகும். கடைகளில் அவற்றை வேறு எதற்காவது பயன்படுத்திக் கொள்வார்கள்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்












dear friend,
tried rasgolla.its not soft.it's not like shopmade.it also cracks.as i reside in s. africa i used full cream milk powder.the paneer came out well.but is it enough if the paneer is mashed for one minute?.i tried for 250gm paneer.i boiled them for 15 minutes. this is the 5th time i'm trying out.pls. can you tell me a remedy.thankyou.
நான் தங்களுக்கு மின்னஞ்சலில் ஏற்கனவே இதற்கு பதில் அனுப்பியிருந்தேன். மீண்டும் ஒருமுறை இங்கே குறிப்பிடுகின்றேன். இந்த ரசகுல்லாக்கள் என் கண் முன்னால் செய்யப்பட்டவை. அவற்றை படங்கள் எடுத்ததும் நான்தான். இந்த ரசகுல்லாக்கள் மிகவும் மிருதுவாகத்தான் இருந்தது. எனவே செய்முறையில் வேறு எதுவும் ரகசியம் இருப்பதாக தெரியவில்லை. சில விசயங்களை மிகவும் முக்கியமானதாக அந்த ஸ்வீட் மாஸ்டர் தெரிவித்தார். அதனை இன்னும் சற்று விளக்கமாக இங்கே குறிப்பிடுகின்றேன். ஒருவேளை உங்களுக்கு உதவியாய் இருக்கலாம்.
பாலில் இருந்து பனீரை பிரித்தெடுக்கும் போது அதிகப் புளிப்புதன்மை கொண்ட திரவம் சேர்க்கக் கூடாது. இதனால்தான் வினிகரை அப்படியே சேர்க்காமல் பாதிக்கு பாதி நீர் என்ற அளவில் சேர்த்து, பாலில் ஊற்றி திரியவிடவும். இதனை அவர்கள் செய்முறைக்காக குறிப்பிட்டாலும் அவர்கள் இப்படி செய்யவில்லை. அவர்கள் செய்யும் போது, ஏற்கனவே பாலை திரித்தபின்பு அதில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட புளித்த நீரை தனியே எடுத்து வைத்திருந்தனர். அதைப் பயன்படுத்தி மீண்டும் பாலில் ஊற்றி திரித்தனர்.
எனவே முதல் முறைக்கு வினிகரை தண்ணீருடன் கலந்து ஊற்றி செய்யவும். அடுத்தடுத்த முறைக்கு ஏற்கனவே பனீரை பிரித்தெடுத்த பிறகு கிடைக்கும் நீரை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதாவது மேலே இரண்டாவது படத்தில் உள்ளவாறு பால் திரிந்து வரும்போது, அதில் பிரிந்து இருக்கும் நீரை மட்டும் இரண்டு மூன்று கோப்பை அளவிற்கு தனியே பிரித்து எடுத்து வைக்கவும். இந்த முறையில் பிரித்து எடுக்கப்படும் பனீர், நாம் சாதாரணமாக தயாரிக்கும் பனீர் போன்று அழுத்தமாக இருக்காது. பஞ்சு பஞ்சாக வரும்.
இந்தப் பனீரை நீங்கள் குறிப்பிட்டு இருந்ததுபோல் நீண்ட நேரம் பிசையவில்லை. அதனுடன் சிறிது சோள மாவு சேர்த்து, ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம்தான் பிசைந்தார்கள். பின்னர் வண்ணம் சேர்த்து முழுவதும் படரும் வரை சிறிது நேரம் பிசைந்தார்கள். அவ்வளவுதான். அதன்பிறகு உருட்டிவிடவேண்டும்.
உங்களுக்கு கடினமாக வருவதற்கு காரணம், பால் பவுடரும் அதில் இருந்து நீங்கள் பனீரை பிரித்தெடுக்கும் விதமும் என்று எண்ணுகின்றேன். பால் பவுடரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பனீர் எந்த அளவிற்கு மிருதுவாக கிடைக்கும் என்றுத் தெரியவில்லை.
அடுத்ததாக எட்டாவது படத்தை பார்க்கவும். இந்த இடத்தில் சீனிப்பாகில் சிறிது மைதா கலந்த புளித்த நீரை (ஏற்கனவே தனியே எடுத்து வைத்திருந்ததை) தெளித்து நுரைக்கச் செய்தார்கள். ஒரு கையளவு நீரை அள்ளித் தெளித்தவுடன் அப்படியே நுரைத்துக் கொண்டு வர ஆரம்பித்தது. அந்த நுரைத்த பாகில் ரசகுல்லா உருண்டைகளைப் போட்டு நன்கு வேக வைத்தனர். மைதா நீரை தெளிப்பதற்கான காரணம் கேட்டபோது, அப்படி நுரைத்துக் கொண்டிருக்கும்போது வேகவைத்தால்தான் நல்ல மிருதுவாக கிடைக்கும் என்ற பதில் வந்தது.
அதன் பின்பு பத்தாவது படத்தில் உள்ளதுபோல், ரசகுல்லாக்கள் வெந்தவுடன் வாணலியை கீழே இறக்கி அந்த சூட்டிலேயே பாகை அள்ளி அள்ளி ரசகுல்லாக்கள் மீது ஊற்றியபடி இருந்தனர். அப்படி செய்வதன்மூலம் இன்னும் மிருதுவாகும் என்றனர்.
இதனைத் தவிர செய்முறையில் வேறு ரகசியம் எதுவும் இருக்கவில்லை. மீண்டும் ஒருமுறை முயன்று பாருங்கள். பால் பவுடருக்கு பதிலாக கறந்த பால் கிடைக்குமா என்று முயற்சித்துப் பாருங்கள்.
dear friend ,
thankyou so much for explaining so clearly.i 'll try and let you know.
thankyou mr.babu for explaning in a elaborate way.i tried for 250gm paneer.it came out far better than the previous ones.thanks a lot.
பாபு அண்ணாவிற்க்கு நான் இதில் உள்ள முறைப்படி ரசகுல்லா செய்து பார்தேன் நன்றாக வந்தது
நன்றி.
அன்புள்ள அண்ணாவிர்க்கு ரசகுல்லா செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது பிள்ளைகளுக்கும் பிடித்துள்ளது
very nice. keep it up.
உன்னைப் போல் பிறரையும் நேசி..........