சுட்டதும் சுடாததும் - இமா க்றிஸ்

<div class="recipebox">

<div class="leftbox">
<div class="kavihead" align="left"><b> சுட்டதும் சுடாததும் </b></div>

ஔவையைக் கேட்டான் குமரன்...
'பாட்டி...
சுட்டது வேண்டுமா?
சுடாதது வேண்டுமா?"

"சுடாததென்றால்
சுகமாய்ச் சுவைக்கலாம்.
சுட்டதென்றால்...
சுவாசித்துச் சுவைக்கலாம்."

சுடாததைச் சுட்டு...
மீளச் சூடு செய்து...
தானே சுட்டதாய்ச்
சுகமாய்ப் பரிமாறுகிறார்!
சுயமேயில்லையோ இவர்க்கு!!

இதையும் சுடுவர்,
சுயநிலையறியாமல்.
சுட்டது தம்மையே
என்பதறியாமல்.

அறிந்தாலும்...
சுடாது அவர்க்கு
விருப்பச் சூட்டில்
விரும்பிக் குளிர் காயும்
சுலபக் கவிகள் அவர்.

சுடுவதுதான் சுடுகிறார்,
சுவையாய்ச் சுட்டாலென்ன?
சுவை கெடுக்க ஓர் சுவர் எதற்கு!

சுட்டவர் சுவர்
சுரத்தின்றிக் கிடக்கிறது.
சுருட்டியவர் சுவரில்
பகிர்வு கொழிக்கிறது.
விரும்புவோர் விரும்புவது
என்னவென்றே புரியவில்லை
எங்கும் 'விரும்ப'
மனது வருகுதில்லை.

எது அசல்! எது நகல்!

சுட்டுச் சுட்டுப்
படையலிடுவோரே!!
ஒரு கேள்வி உமக்கு,
உம் படைப்பை நான் சுட்டால்...
சும்மா விடுவீரோ!

- இமா க்றிஸ்
</div>

<div class="rightbox">
&nbsp;
</div>

<div class="spacer">&nbsp;</div>
</div>

Comments

ஹிஹிஹீ.... நான் இது தான்னு எதிர் பார்த்தேன்.. இல்லன்னா ஆரம்பத்துல படிச்சதும் வழக்கம் போல வனிக்கு புரியல ;) சூப்பர். உங்க தமிழ் எப்ப படிச்சாலும் வனிக்கு பிடிக்கும். ம்ம்.. வெகு நாட்களுக்கு பின் அறுசுவை... முதல் பதிவு இமாக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி.

‍- இமா க்றிஸ்

//இது தான்னு எதிர் பார்த்தேன்.// !! ;)))
//வெகு நாட்களுக்கு பின் அறுசுவை... முதல் பதிவு இமாக்கு// ம். சந்தோஷமா இருக்கு. கொஞ்ச நாள் காணாம இருந்தீங்க போல இருக்கு. நன்றி வனி.

‍- இமா க்றிஸ்

// கொஞ்ச நாள் காணாம இருந்தீங்க போல இருக்கு. நன்றி வனி.// - காணாம போனதுக்கா???!!! :o பாவம் வனி... யாரும் தேடலன்னா கூட பரவாயில்லை... காணாம போனதுக்கு நன்றி எல்லாம் வேற சொல்றீங்களே!!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//காணாம போனதுக்கு நன்றி// ஹையோ!! ;))) காணாம போய் திரும்ப வந்ததும் எவ்ளோ காரியம் இருக்கும் அறுசுவைல. அதை விட்டுட்டு எனக்கு கமண்ட் போடுறதுக்கு முக்கியத்துவம் கொடுத்து... வந்து... படித்து... கமண்ட் போட்டதுக்கு நன்றி சொன்னேன் சகோதரியே! ஹப்பாடா! தட்டி முடிச்சுட்டேன் ஒரு மாதிரி. ;))

‍- இமா க்றிஸ்

ரொம்ப ரொம்ப அருமைங் :-)
காப்பி அடிப்பவர்களுக்கு 'நங்'னு குட்டியிருக்கீங்க, சூப்பர் :-)

நட்புடன்
குணா

ஆஆஆஆஆஆஆ..... எனக்கும் முதல்ல புரியல..அப்பறம் முடிக்கும் போது புரிஞ்சிடுச்சு..இது முகப்புத்தகத்தில் சில நாள் முன்னாடி நான் பார்த்த இமாம்மா கமாண்ட் நியாபத்துல வந்துடுச்சு..சரியா இமாம்மா.. :)

ஸூப்பர் சுட்டவங்களுக்கு சரியான சூடு.
ஆனா இமாமா இப்படி கவிதை மழைல சுடறதுனா நானும் பேசம சுடவானு யோசிக்கிறேன்.. (சும்ம்மா)

Be simple be sample

சுட நினைப்பவர்களை சுட்டுபொசுக்கும் உங்கள் கவிதை....... :) சுட்டதினால் எங்களுக்கு ஒரு அழகான கவிதை கிடைச்சிருக்கு...:) சுட்ட புண்ணியாத்மாக்கு நன்றி :)
கவிதை அருமை :)
ஆக்லாந்துல பிரம்பு என்ன விலைனு யாரோ கேட்கிறாங்களே... மீ எஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்பூ :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//ஆக்லாந்துல பிரம்பு என்ன விலை// ;) வேலியில் வளர்ந்திருக்கு அருள். ;))
ஹாய் குணா & ரேவதி. :-))

‍- இமா க்றிஸ்

ஆஹா அருமை இமா :-) சுடுபவர்களுக்கு இது சுடுமா? தன்னைச்சுடுவது உணராமலே இதையும் சுடுவார்களோ? ஹா..ஹா சுடுவது சுகமானால் சுடுபர்களுக்கென்று ஏது சூடு? தமிழ் கொதிக்கின்றது உங்கள் உள்ளக்கனலில். எப்படியோ சுட்டவர்களுக்கு புண்ணியம் இக்கவிதைக்காக.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

யாரு என்ன சுட்டாங்கன்னு எல்லாம் எனக்கு தெரியாது...;), ஆனா, நீங்க உங்க ஆழ்மனதில் இருந்து சுட்டெடுத்த கவிதை பக்குவமான சூட்டோட நச்சுன்னு இருக்கு... தொடரட்டும் உங்கள் கவிப்பணி...வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நிச்சயம் யாருக்கும் சூடு வைக்கும் நோக்கத்தில் எழுதப்படவில்லை இது. அப்போதிருந்த மனநிலையில் எழுதியது. மறுநாள் கூல் ஆகியாச்சு இமா. ;)

கருத்துச் சொன்ன அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

‍- இமா க்றிஸ்

அருமையான சூடான வரிகள் .

சுட்டவருக்கு சுடுமா என்பது சந்தேகமே? உங்களுக்கு நன்றி சொல்லிரசித்த கவிதையில் போடுபவர்கள் இருக்கிறார்களே! அவர்களுக்கும் இந்த சூடு பொருந்துமா?

பானுகமால்

//உங்களுக்கு நன்றி சொல்லிரசித்த கவிதையில் போடுபவர்கள் இருக்கிறார்களே!// புரியலயே!!

‍- இமா க்றிஸ்

உங்கள் கவிதையை இங்கே படித்து அது பிடித்திருந்தால் வேறு தளத்தில் ரசித்த கவிதைப் பகுதியில் பதிவு செய்து உங்கள் பெயரைப் போடுவார்கள்.

பானுகமால்

//உங்களுக்கு நன்றி சொல்லிரசித்த கவிதையில் போடுபவர்கள் இருக்கிறார்களே!// & //உங்கள் கவிதையை இங்கே படித்து அது பிடித்திருந்தால் வேறு தளத்தில் ரசித்த கவிதைப் பகுதியில் பதிவு செய்து உங்கள் பெயரைப் போடுவார்கள்.//

அப்படி இதுவரை எவரும் என் கண்ணில் படவில்லை. :-) பட்டால் கீழே உங்களுக்குச் சொல்லியிருப்பதைத்தான் அவர்களிடமும் சொல்லுவேன்.

//அவர்களுக்கும் இந்த சூடு பொருந்துமா?// குழப்ப நினைக்கிறீங்க என்னை. ;))) குழம்ப மாட்டேன். சுடாமல் மென்மையாக அவர்களிடம் நேரே போய் எது சரி என்பதை எடுத்துச் சொல்லுவேன். ;)

என்னதான் நன்றாக இருந்தாலும்... ரசித்த கவிதைக்கான லிங்க் கொடுப்பதுதான் முறை. முழுவதையும் காப்பி பண்ணிப் போடுவது சரியல்ல. நன்றி சொல்ல வேண்டியதும் இனி எனக்கல்ல, அறுசுவைக்கும் அட்மினுக்கும்தான். அவர்களுக்குத்தான் மேலே குறிப்பிட்ட கவிதைக்கான உரிமை இருக்கிறது. எழுதிய எனக்குக் கிடையாது. :-)

தங்கள் பாட்டுக்குப் பிரதி செய்து போட்டுவிட்டு நன்றி சொல்வதை விட அட்மின் அனுமதி கேட்டுக் கிடைத்தால் அதன் பின் நீங்கள் சொல்வது போல போடுவதுதான் சரியாக முறை பானு.

‍- இமா க்றிஸ்

வேறு தளங்களில் படிக்கின்ற கவிதையை அவர்கள் உறுப்பினராக இருக்கும் தளத்தில் அப்படி பதிவு போடுகிறார்கள். நான் நிறைய படித்திருக்கிறேன். அதனால் தான் கேட்டேன்.

பானுகமால்

இதைப் பற்றி நிறையவே பேசி இருக்கின்றோம். அப்படியே எடுத்துப் போட்டுவிட்டு கீழே ஒரு வார்த்தை நன்றி என்று போடுவதை நான் என்றைக்குமே ஏற்றுக்கொண்டதில்லை. இணையத்தில் ஒரு இடத்தில் உள்ளதை எதற்கு அப்படியே எடுத்துப் போட வேண்டும்? அங்கே ஒரு லிங்க் கொடுத்தால், அதை கிளிக் செய்து இங்கே வந்து படித்து விட்டு போகின்றார்கள். அதில் என்ன சிரமம் இருக்கப் போகின்றது. இந்த நன்றியை காரணம் காட்டி, தங்களது தளத்திற்கு ஆக்கங்களை சேர்த்துக்கொள்பவர்களை நான் திருடர்களாகவே பார்க்கின்றேன். வேறு ஊடகத்தில் உள்ளதை எடுத்துப் போட்டு சொன்னால்கூட ஓரளவிற்கு ஒத்துக்கொள்ளலாம். இணையம் பார்ப்பவர்களால் அதை பார்க்க இயலாது என்று. இணையத்தில் இருப்பதையே எடுத்துப் போட்டு, பெருமை தேடி கொள்பவர்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதனால்தான் அறுசுவையில் வெளி தளங்களில் உள்ளவற்றை அனுப்பதிப்பது இல்லை.

ஏன் இப்படி செய்தீர்கள் என்றால் எல்லோரும் கொடுக்கும் ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம், "நல்ல தகவல், எல்லோருக்கும் பயன்படுமே என்று கொடுத்தோம்" இணையத்தில் உள்ள கோடிக்கணக்கான தளங்களில் உள்ளவை எல்லாமே நல்ல தகவல்கள்தான்.. அப்படியே எடுத்துப் போட்டு ஒரு தளத்தை உருவாக்கி எல்லாருக்கும் ஒரு நன்றியை மட்டும் சொல்லிவிடலாமா? இப்படியும் சில திருடர்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஒரு படைப்பாளியின் சிரமம் படைப்பாளியாய் இருப்பவனுக்குதான் தெரியும். ஒவ்வொரு ஆக்கத்திற்கும் பின்னால் அவர்களின் உழைப்பு இருக்கின்றது. அதற்கு சிறிதேனும் மதிப்பு கொடுக்க வேண்டும். இப்போது நடக்கும் இந்த திருட்டுகளை பார்க்கும்போது எழுதுவதற்கே தயக்கமாக இருக்கின்றது. அடுத்த நிமிடமே அவர்கள் பெயரில் எடுத்துப் போட்டு, அதில் பெருமை வேறு தேடிக்கொள்கின்றார்கள். ஒரு சாதாரண உதாரணம், அறுசுவை ஆரம்பித்த போது, அறுசுவைக்கான விளக்கங்களை சில புத்தகங்களை படித்து ஒரு கட்டுரையாக தயார் செய்தேன். அது மிகவும் பெரியதாக இருந்ததால், அதைச் சுருக்கி சிறிய கட்டுரையாக அறுசுவையில் ஆரோக்கியம் பகுதியில் கொடுத்து இருந்தேன். இது 2004 ல் வந்தது. அந்த கட்டுரையின் முதல் வரிகளை ("பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய ") காப்பி செய்து கூகுளில் தேடிப் பார்த்தால் தெரியும்.. எத்தனை தளங்களில் அந்த கட்டுரை காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்று.

இதில் என்ன விசயமென்றால், கூகுள் ரிசல்ட்டில் அறுசுவை தளம் வரவே வராது. நான் SEO விசயங்களில் ஆர்வம் இல்லாதவன் என்பது ஒரு காரணம் என்றாலும், ஒரிஜினல் எங்கிருந்து வந்ததோ, அந்த தளம் முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது. எடுத்துப் போட்டவர்கள் ஒருவர்கூட நன்றி அறுசுவை என்று ஒரு இடத்தில்கூட போடவில்லை. அப்படியே அறுசுவையில் உள்ள படங்களைக்கூட எடுத்து போட்டிருக்கின்றார்கள்.. இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால், ஒரு நேயர் அறுசுவை தளத்தில் சில காலம் இருந்தவர், இதை எடுத்து அப்படியே வெறொரு தளத்தில் போட்டு, ரொம்பவே உஷாராக, இது எனக்கு மெயிலில் வந்த தகவல் என்று அவசர அவசரமாக குறிப்பிட்டு இருக்கின்றார்.

அந்த கட்டுரையைப் பொறுத்த மட்டில், அது ஒன்றும் பெரிய சிறப்பான கட்டுரை கிடையாது. சிறிய தகவல், அதுவும் நான் படித்து எழுதிய விசயங்கள்தான். நடை மட்டும் என்னுடையது. அந்த ஆரோக்கியம் பகுதியில் உள்ள அனைத்துமே அப்படித்தான். அவை எல்லாமே எடுத்துப் போடப்பட்டுள்ளன, ஒரு இடத்தில்கூட அறுசுவை பற்றிய பெயரைக்குறிப்பிடாமல்.

என்னுடன் விவாதம் புரிந்த ஒருத்தனுக்கு நான் ஒற்றை வரியில் ஒரே ஒரு பதில் மட்டும் கொடுத்தேன். "வேறொருவனின் படைப்பை தனது என்று சொல்லி பெருமைக்கொள்ளும் தகப்பனின் வாரிசுகளே இப்படி செய்யும்.. "
இப்படி படைப்புகளை எடுத்துப் போடுகின்றவர்கள் மறைமுகமாக தங்களின் பிறப்பு ரகசியத்தை வெளிப்படுத்துகின்றார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்.

//பெயர் போடாமல் காப்பி செய்து போட்டால் தான் தவறு. படிப்பவர்களும் பதிவு போட்டவரின் கவிதை என்று சொல்வார்கள்.//

உங்கள் வீட்டில் வைத்துள்ள நகைகளை உங்கள் அனுமதி இல்லாமல் யாரோ ஒருவர் எடுத்துப் போட்டுக்கொண்டு, நகையின் மூலையில் ஒரு சிறிய tag ல் 'நன்றி பானுகமால்' என்று குறிப்பிட்டு விட்டால், ஏற்றுகொள்வீர்களா? :-)

கவிதை நன்றாக இருந்தது. இரசித்தேன். அதிலும்

சுட்டவர் சுவர்
சுரத்தின்றிக் கிடக்கிறது.
சுருட்டியவர் சுவரில்
பகிர்வு கொழிக்கிறது.
விரும்புவோர் விரும்புவது
என்னவென்றே புரியவில்லை
எங்கும் 'விரும்ப'
மனது வருகுதில்லை.

என்கின்ற வரிகள் எதார்த்தத்தை எளிய நடையில் சொல்கின்றன. பாராட்டுகள்.

///சுட்டவர் சுவர் சுரத்தின்றி கிடக்கிறது.
சுருட்டியவர் சுவரில் பகிர்வு கொழிக்கிறது ///

வேதனை வரிகள் !
எவராலும் ஏற்றுக்கொள்ள முடியா இழிசெயல், விதையாயிருந்த சுருட்டிய கூட்டம் , தற்ப்போது இலைவிரித்து, கிளைபரப்பி மரமாய் வளர்ந்து நிற்பது மனதிற்க்கு இனம்புரியா கலக்கம் தருகிறது !!!

திருந்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் ... குத்திவிட்ட முட்களை எடுத்துவிட்டு தொடருங்கள் உங்கள் பயணத்தை !!!
வாழ்த்துக்கள் !!!
நன்றி

என்றும் அன்புடன்
முத்தமிழன்

நல்ல‌ நல்ல‌ கவிதைகளுக்கெல்லாம் கருத்துச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பயந்தேன். என் பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது என்று நினைத்துக்கொண்டிருக்க‌... நான் பயந்தபடியே இங்கு எட்டிப் பார்த்திருக்கிறீர்கள். //மனதிற்கு இனம்புரியா கலக்கம் தருகிறது !!! // :‍) இதுதான் உலகம். கலங்கிப் பயனில்லை.

//தொடருங்கள் உங்கள் பயணத்தை !!!// நிச்சயம் தொடருவேன். என்ன‌, என் எழுத்துகள் கவிதை வடிவில் சேராதவை. :‍)

உங்கள் வாழ்த்துகளுக்கு என் அன்பு நன்றிகள் சகோதரரே!

‍- இமா க்றிஸ்

என் கருத்தே என்னை சுடும் போது
கையறுநிலையில் நான் இருந்தேன் !
அதையுணரந்து தான் தாங்களுக்கு கருத்திட்டேன் !

“சீதையின் தீக்குளிப்பில் நிரூபிக்கப்பட்டது இராவணனின் கற்பு “ என்ற என் கருத்தில் ஐந்தே ஐந்து ஆர்டிக்களை பெற்ற நான்
இரண்டு மாதங்கள் கழிந்த வேளையில் 200 க்குமேல் ஆர்டிகளை இன்னொருவர் வலைதளத்தில் கண்டேன். என் மனம் அடைந்த வேதனைகளை வார்த்தைகளால் உங்களின் அந்த வரிகள் விளக்கி சொல்லிவிட்டது..

சுட்டவர் சுவர்
சுரத்தின்றிக் கிடக்கிறது.
சுருட்டியவர் சுவரில்
பகிர்வு கொழிக்கிறது.

///என் எழுத்துகள் கவிதை வடிவில் சேராதவை ///
தன்னடக்கம் ... என்று சொல்லாமல் சொல்கிறது .
எழுத்துக்கள் தான் கருத்துக்களை சொல்கிறது. ஒரு கருத்து பிறரை (படிப்போரை) தாக்கும்போது நல் வடிவம் பிறக்கிறது. வார்த்தை கோர்வைகள் , எதுகை, மோனை, அணிகள் எல்லாம் கவிதையின் இலக்கணத்தை கூர் செய்கிறது.

நன்றி !!!

என்றும் அன்புடன்
முத்தமிழன்

'இதிலெல்லாம் என்ன‌ இருக்கிறது!' என்று எண்ணுவோர் பலர் இருக்கின்றனர். என்னால் என் ஆக்கங்களை மட்டுமல்ல‌, தெரிந்த‌ / தெரியாத‌ இன்னொருவர் ஆக்கத்தைக் கூட‌ முறையற்ற‌ விதத்தில் பயன்படுத்துவதை ஏற்க‌ முடிவதில்லை. 'சின்னவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். நாமும் வாழ்ந்து காட்ட‌ வேண்டாமா!" என்று தோன்றும்.

//மனம் அடைந்த வேதனைகளை// மரணம் கொடுக்கும் இழைப்பையே சில‌ மாதங்கள் கழித்து நாம் மறந்துவிடுவதில்லையா! அது போல‌ இப்படி அவ்வப்போது வரும் மன‌ வேதனைகளையும் அங்கங்கே கழற்றி விட்டு எம் பயணத்தைத் தொடர‌ வேண்டியதுதான்.

உங்கள் பாராட்டுகளுக்கு என் அன்பு நன்றிகள் முத்தமிழன்.

‍- இமா க்றிஸ்