பால்கோவா

தேதி: November 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (9 votes)

சுவையும், சத்தும் நிரம்பிய இந்த பால்கோவா செய்வதற்கு மிகவும் எளிதானது. பாலை சுண்டக் காய்ச்சினால் கிடைப்பதுதான் கோவா. இதை இனிப்பு (சீனி) சேர்த்தும், சேர்க்காமலும் இரண்டு விதமாக தயாரிக்கின்றார்கள். சீனி சேர்த்து செய்வதை சுமார் 15 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். சீனி சேர்க்காமல் செய்யப்படுவது ஒன்று அல்லது இரண்டு நாட்கள்தான் தாங்கும். இந்த வகை கோவா பால் இனிப்புகள் தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றது. கீழே ஒரு கிலோ அளவிற்கு பால்கோவா தயாரிப்பதற்கான அளவு கொடுக்கப்பட்டுள்ளது. குறைவாக செய்ய விரும்புகின்றவர்கள் ஒரே விகிதத்தில் அனைத்து பொருட்களின் அளவையும் குறைத்துக் கொள்ளவும்.

 

பால் - 7 லிட்டர்
சீனி - 750 கிராம்
நெய் - முக்கால் லிட்டர்


 

அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்சவும். இரும்பு வாணலி இல்லாதவர்கள் அடிக்கனமான, வாயகன்ற வேறு பாத்திரத்தைப் பயன்படுத்தலாம். பால் கொதிவர ஆரம்பித்ததும் சீனியைக் கொட்டி நன்கு கிளறவும்.
இனி விடாது கிளறவேண்டும். பால் நன்கு சுண்டி வரும் வரை கிளறவும். பால் சுண்ட ஆரம்பித்தவுடன் கலர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கும்.
மேலும் விடாது கிளறி, பால் சுண்டி கெட்டியாகத் தொடங்கியவுடன் அதில் நெய்யை ஊற்றவும். நெய் முழுவதையும் ஒரே முறையில் ஊற்றி விடாமல், முதலில் பாதியை ஊற்றி கிளறிவிட்டு, பிறகு மீதியை ஊற்றலாம்.
பின்னர் நெய்யுடன் சேர்த்து நன்கு கிளறவும். நெய் நன்கு சேர்ந்து கோவா கெட்டியாகத் தொடங்கியவுடன் இறக்கி வைத்து, கோவாவை சட்டி முழுவதும் பரப்பி, கிளறி விட்டு சூட்டை தணிக்கவும்.
இப்போது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதை அப்படியே வழித்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் கொட்டவும்.
பால்கோவாவின் ஓரங்களில் சிறிது நெய் விடவும். இது இரண்டு வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

2 லிட்டர் பாலில் பால்கோவா செய்ய வேண்டுமெனில் எத்தனை கப் சீனி சேர்க்க வேண்டும்?நெய் எத்தனை கப் சேர்க்க வேண்டும்?எனக்கு கப் அளவு கூறுங்களேன்
please.please.please.

ரொம்பநாள் புரியாமல் இருந்த பால்கோவாவை விளக்கப் படங்களுடன் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. சிலர் மைதா மாவு சேர்க்கணும் என்று சொல்வார்கள். சிலர் இறக்கும்போது சற்று சீனி தூவணும் என்பர். இப்போதான் அதன் முறை புரிந்தது. நன்றி சார்! ஆனால் ஒரு சந்தேகம். ஸ்டெப் மூன்றில் "இப்போது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதை அப்படியே வழித்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் கொட்டவும்" என்று குறிப்பிட்டுள்ளது. ஸ்டெப் நான்கில் "நெய் நன்கு சேர்ந்து கோவா கெட்டியாகத் தொடங்கியவுடன் இறக்கி வைத்து..............கிளறி விட்டு சூட்டை தணிக்கவும்"என்று குறிப்பிட்டுள்ளது. பிறகு ஸ்டெப் ஐந்தில் மீண்டும் "இப்போது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதை அப்படியே வழித்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் கொட்டவும்" என்று மீண்டும் மூன்றாவது ஸ்டெப்பில் சொன்ன மாதிரியே குறிப்பிட்டுள்ளீர்கள்..? கொஞ்சம் புரியலை, விளக்கம் ப்ளீஸ்!

பாபு அவர்களூக்கு கப் அளவுகள் எப்போதும் சுலபமாக இருக்கும்.ஆனால் கடைகளில் செய்து காட்டும் போது அது சாத்தியப்படாது.ஆனால் நிங்கள் எங்களூக்கு சொல்லும்
போது கப் அளவிலும் தெரிவித்தால் வசதியாக இருக்கும்.
ரசகுல்லா செய்முறையிலும் கப் அளவு கேக்க நினைத்து அப்புறம் தயங்கி விட்டுவிட்டேன்.

sajuna

முதலில் சகோதரி நமூரா அவர்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் அளவின் படி, ஒரு லிட்டர் பாலுக்கு, கிட்டத்திட்ட 110 கிராம் சீனி சேர்க்க வேண்டும். நெய்யும் அதே அளவுதான். 110 மில்லி என்று வரும். சீனி, நெய் இரண்டையும் விருப்பத்திற்கு ஏற்றார்போல் கொஞ்சம் கூட, குறைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்து சகோதரி செல்லம்மா அவர்களுக்கு, ஐந்தாவது படத்தின் செய்முறைக் குறிப்பு தவறுதலாக மேலே ஒருமுறை copy ஆகிவிட்டது. அதை சரிபார்க்காமல் வெளியிட்டுவிட்டேன். இது என்னுடைய தவறு. மன்னிக்கவும்.

இறுதியாக சகோதரி சஜுனா அவர்களுக்கு, உங்களின் கோரிக்கையை பதிவேட்டில் ஒரு புதிய உறுப்பினர் முன்வைத்துள்ளார். நீங்கள் குறிப்பிட்டதுபோல் கடைகளுக்காக தயாரிக்கப்படும் போது அங்கே சென்று படம் எடுப்பதே அவர்களுக்கு தொந்திரவாக இருக்கின்றது. இந்த நிலையில் ஒவ்வொரு பொருட்களையும் கப், ஸ்பூன் கொண்டு அளந்து விட்டு, அவர்களை தயாரிக்கச் சொல்லுதல் சாத்தியம் இல்லை. அடித்து விரட்டி விடுவார்கள். ஆனால், இல்லங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை படம் எடுக்கும் போது எங்களிடம் உள்ள Standard cups and spoons கொண்டு அளந்துவிட்டுதான் தயாரிக்க விடுகின்றோம்.

உங்கள் கோரிக்கை நியாயமானது. ஒவ்வொரு உணவுப்பொருளையும் பல்வேறு அளவு முறைகளில் ஒரு பட்டியல் இட்டு கொடுக்க உள்ளோம். அது மாற்று அளவு காண மிகவும் உதவியாக இருக்கும்.

200 கிராம் சீனி - ஒரு கப் (உத்தேசமாக)

உடனே என்னுடய சந்தேகத்தை தீர்த்து வைத்த பாபு அண்ணாவுக்கு நன்றி.பால்கோவாவை உடனேசெய்து பார்த்து விட்டு எப்படி வந்ததென்று எழுதுகிறேன்.நன்றி.

பால்கோவா குறிப்புக்கு நன்றி!பட்டர் கோவா செய்வது எப்படி?கொஞ்சம் சொல்ல முடியுமா?

பால்கோவா செய்து பார்த்தேன். ரொம்ப அருமையாக வந்தது. ஆனால், கடைகளில் கிடைப்பதுபோல் கொரகொரப்பாக வரமாட்டேங்குது. அதற்கு என்ன செய்யவேண்டும்? மில்க் ஸ்வீட்ஸ் உடைய முதல் படத்தில் கூட கொரகொரப்பாக தெரியுதே?

முதல் படத்தில் உள்ளது நெய் சேர்க்காமல் செய்த பால்கோவா. இது மில்க் ஸ்வீட்ஸ் செய்வதற்கு தயாரிக்கப்பட்டது. இதில் சீனியின் அளவு அதிகமாய் இருக்கும். அதுமட்டுமன்றி, வாணலியில் இருந்து எடுத்து சற்று நேரம் ஆறவைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் சற்று கெட்டியாகவும், கொரகொரப்பாகவும் தெரிகின்றது.

பால்கோவாவில் சீனியை சற்று அதிகரித்துப் பாருங்கள். நெய்யையும் குறைத்துக் கொள்ளலாம். பாலை நன்கு சுண்டக் காய்ச்சிவிட்டு, கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து வாணலியை இறக்கி, வாணலியின் உள்புறம் முழுவதும் பால்கோவாவை பரப்பி கிளறவேண்டும். கோவா நன்கு சுருண்டு வரும். நீங்கள் எதிர்பார்க்கும் பக்குவத்தில் இருக்கும்.

நீங்கள் முதலில் கூறியுள்ள சீனி அளவு சரியாக இருந்தது. அதனால் சீனியை அதிகரிக்காமல் நீங்கள் கூறியதுபோல் கோவாவை வாணலியில் பரப்பி செய்து பார்க்கிறேன். நன்றி சார்.

For 2 litres of milk add 120 gms of sugar. i.e., for one litre of milk 60gms of sugar is sufficient. If you want more details log on to WWW.dairyforall.com

Ravindran

Add 60 grams of sugar for one litre of milk. If you want more sweet increase the amount of sugar.

Ravindran