கருணைக்கிழங்கு மசியல்

தேதி: February 15, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கருணைக்கிழங்கு - 3
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்ப் பொடி - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
மல்லிப் பொடி - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

கருணைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பெருங்காயத்தைப் பொரிய விடவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.
இதனுடன் கிழங்கு மசியல், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், இவற்றையும் சேர்த்துக் கிளறி அரைத்த மிளகாய் கலவையையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். மிதமான தீயில் கிளறி ஒட்டாமல் வரும் வரை அடுப்பில் வைத்திருந்து பிறகு இறக்கி வைக்கவும். மசியலுக்கு எண்ணெய் கூடுதலாக தேவைப்படும். நாண்ஸ்டிக் தவாவில் கிளறினால் சீக்கிரமே ஒட்டாமல் வெந்து விடும்.
சுவையான கருணைக்கிழங்கு மசியல் தயார். ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். ஃப்ரிஜ்ஜில் வைத்து 2 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கருணைக்கிழங்கு மசியல் சூப்பர். செய்முறையும் எளிமையாக உள்ளது.

சூப்பரா இருக்கு :) செய்துருவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல‌ குறிப்பு. செய்து பார்க்கிறேன். கருணை கிழங்கு நாக்கு அரிக்கும் என்பார்களே. புளி சேர்த்து வேக‌ வைக்க‌ வேண்டுமல்லவா?

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

எத்தனை விசில் விசில் விடறது மா ,,கிழஙக்கு

மசியல் சூப்பரா இருக்கும்மா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கருணைக்கிழங்கு மசியல் சூப்பர். நான் எப்போதும் வறுவல் மட்டும் தான் செய்வேன், உங்க‌ மசியலை அடுத்தமுறை செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் சீதாம்மா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு பால‌ பாரதி,

முதல் பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,

அவசியம் செய்து பாருங்க‌, ரசம் சாதத்துக்கும் தயிர் சாதத்துக்கும் நல்ல‌ காம்பினேஷன் இது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு மஞ்சுளா,

நீங்க‌ சொல்வது சரிதான். அரிப்பு போவதற்குதான் புளித் தண்ணீர் சேர்ப்போம்.

புளி சேர்த்தால், சில‌ சமயம் புளிப்பு, கூடி விடுகிறது, அல்லது குறைந்து விடுகிறது. நிறமாகவும் இருப்பதில்லை. அதனால் அதற்கு பதிலாக‌ இப்பவெல்லாம் தக்காளி சேர்த்து செய்கிறேன். தக்காளியின் அளவு கூடினாலும் குறைந்தாலும், ருசி நல்லா இருக்கு.

தக்காளியில் இருக்கும் புளிப்பும் கிழங்கின் அரிப்பைப் போக்கி விடுகிறது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு மஹா,

சாதம் வைக்கும்போது, மேலே ஒரு கிண்ணத்தில் வைத்து, அதே 3 அல்லது 4 விசிலில் இறக்கி விடலாம்.

பொதுவாகவே கருணைக் கிழங்கை வாங்கியவுடன் சமைக்காமல், 4 அல்லது 5 நாட்களுக்குப் பிறகு சமைத்தால், கிழங்கின் அரிப்பு குறையும். நல்லா வேகவும் செய்யும்.

சில‌ சமயம் கிழங்கின் வாகைப் பொறுத்து, திரும்பவும் 2 விசில் வைக்க‌ வேண்டியிருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி உமா.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சுமி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

கருணைக்கிழங்கை புளிக்குழம்பில் போடுவேன்,மசியல் செய்வேன். வறுவல் செய்ததில்லை.

குறிப்பு அனுப்புங்களேன், செய்து பார்க்க‌ ஆசையா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா மேடம்... நல்ல கலர் ஃபுல்லா இருக்கு. காரசாரமா இருக்கும் போல. பார்த்ததும் சாப்பிடனும்னு ஆசையத் தூண்டுது.

கலை

சீதாமேடம் கருணைகிழங்கு மசியல் குறிப்பு மிக‌ அருமை :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு கலை, அன்பு அருட்செல்வி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா நாங்களும் வறுவல் தான் செய்வோம் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும் இந்த முறை இப்படி கூட செய்து பார்க்க போறேன். பார்க்க தொக்கு போல இருக்கு.
மஞ்சு மேடம் கிழங்கு வாங்கி கொஞ்ச நாள் கழிச்சு செய்தாலும் அரிக்காது அப்பறம் வேக வைக்கும் போது கொய்யா இலை சேர்த்து வேக வைச்சாலும் அரிப்பு இருக்காது.

அன்பு உமாகுணா,

கொய்யா இலை சேர்த்து வேக‌ வைப்பது = நல்ல‌ தகவல்ங்க‌. உபயோகமாக‌ இருக்கும்.

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

இன்னிக்கு தான் செய்தேன். சூப்பரா இருந்தது. ரொம்ப‌ அருமையா இருந்துச்சி. நன்றி அம்மா

எல்லாம் சில‌ காலம்.....