வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு

தேதி: March 10, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சிக்கன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - ஒன்று
தேங்காய் - ஒரு மூடி
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
தனியா - ஒரு மேசைக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - 10 இலைகள்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலைகள்
நசுக்கிய பூண்டு - 5
நசுக்கிய சின்ன வெங்காயம் - 8
பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாக கீறியது)


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, தனியா, சோம்பு, 4 பல் பூண்டு, வட்டமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தேங்காய் சேர்த்து நன்கு சிவக்க வதக்கி ஆறவைக்கவும்.
நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
சட்டியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, நசுக்கிய பூண்டு, நசுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சிக்கனைச் சேர்த்து வதக்கவும். சிக்கன் லேசாக வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்கு கிளறிவிட்டு மூடி போட்டு எண்ணெய் பிரியும் வரை வைத்திருக்கவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்புச் சேர்த்து கிளறிவிட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து பச்சை வாசம் போனதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு தயார். சாதம், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பம் என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குழம்பு அருமையா இருக்குங்க.... நாங்களும் இதே போல தான் செய்வோம்

நல்ல குறிப்பு... முதன் முதலில் தளிகா குறிப்பை பார்த்து செய்தது “வறுத்தரைத்த கோழிக் குழம்பு”. என்னோட ஃபேவரட் ஆயிட்டுது. :) நினைவுபடுத்துது உங்கள் குறிப்பு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தக்காளி சேர்க்காமல், மற்ற‌ அனைத்தும் சேர்த்து இது போன்று செய்திருக்கிறேன், தக்காளி இன்னும் கொஞ்சம் சுவை கூட்டும் என‌ நினைக்கிறேன். செய்து பார்த்திட்டு சொல்கிறேன் அக்கா :) வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ச‌ற்றே வித்தியாசமாக‌ இருக்கு.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு பிரியா,
ஊர்ப்பக்கம் செய்யும் முறை தான் இது. கிட்டதட்ட ஒரே பக்கம் தானே!

அன்புடன்,
செல்வி.

அன்பு வனி,
அப்படியா வனி? நான் பார்த்ததில்லை. அவங்களும் கோயமுத்தூர் தானே? அதான் ஒன்று போல இருக்குன்னு நினைக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

அன்பு அருட்செல்வி,
தக்காளி சேர்த்தால் இன்னும் கொஞ்சம் சுவை கூடும். செய்து பார்த்துட்டு சொல்லுங்க. நன்றி!

அன்புடன்,
செல்வி.

அன்பு முசி,
கொத்தமல்லி தூள் சேர்க்காமல் வறுத்து அரைப்பதே தனி சுவை. செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

அன்புடன்,
செல்வி.

parkkave azhaga irrukku. i will try the dish.

குழம்பை பார்க்கும்போதே ஆசையா இருக்கு. சூப்பரா இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Lemon Juice சேர்த்ல் இன்னும் கொஞ்சம் சுவை கூடும்.

intersting receipe