பீர்க்கங்காய் அடை

தேதி: April 7, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

புழுங்கலரிசி - ஒரு ஆழாக்கு
பச்சரிசி - அரை ஆழாக்கு
கடலைப்பருப்பு - அரை ஆழாக்கு
துவரம் பருப்பு - அரை ஆழாக்கு
கொள்ளு - ஒரு கைப்பிடி
உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி
பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி
பீர்க்கங்காய் - ஒன்று பெரியது
சின்ன வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
பெருங்காயம் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5
எண்ணெய் - தேவையான அளவு


 

புழுங்கலரிசி முதல் பாசிப்பருப்பு வரை உள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் அதனுடன் சோம்பு, சீரகம், தனியா, பெருங்காயம், பூண்டு மற்றும் உப்புச் சேர்த்து சிறு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பீர்க்கங்காயைத் தோல் சீவி கசப்பு பார்த்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருட்களைத் தாளித்து, சிவந்தவுடன் பீர்க்கங்காய், வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை மாவுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். (தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது).
அடுப்பில் சிறிய வாணலி அல்லது தோசைக் கல்லை வைத்து சூடேறியதும் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து மொத்தமாக ஊற்றவும்.(அதிகம் பரவலாக ஊற்ற வேண்டாம்).
ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மேலே சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும்.
சுவையான பீர்க்கங்காய் அடை தயார். தேங்காய் சட்னி, வெங்காய தொக்குடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

பீர்க்கங்காய் பிஞ்சாக இருக்க வேண்டும். லேசான இனிப்புச் சுவையுடன் சாப்பிட்டால் அதிகச் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எல்லா தானியங்களும் சேர்த்து சத்தான சூப்பரான அடை அக்கா. அருமை... அருமை. கண்டிப்பா ட்ரை பண்றேன். கப்பில் அளந்தால் என்ன அளவில் போடனும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நாங்க இது போல தான் முருங்கைக்கீரை அடை செய்வோம். பீர்கங்காயில் இதுவரை செய்ததில்லை. நல்லா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுவையான சத்தான அடை, வாழ்த்துக்கள் செல்விக்கா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுவையான‌,வித்தியாசமான‌ குறிப்பு.அருமை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு உமா,
சத்தான‌ அடை தான். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். ரொம்ப நல்லது.
நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க‌.
டம்ளர் அளவு மாதிரியே தான் கப்பிலும் போடணும். புழுங்கரிசி ஒருகப்னா, பச்சரிசி அரை கப். இதேபோலவே எல்லாம் அளக்கணும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு வனி,
முருங்கைக்கீரையில் தான் அம்மா செய்வாங்க‌. நானும் அடிக்கடி செய்வேன். இது கொஞ்சம் ஸ்பெசல். இது போல‌ இன்னும்.....
டேஸ்டும் நல்லா இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு அருள்,
வாழ்த்துக்கு நன்றி அருள்:)

அன்புடன்,
செல்வி.

அன்பு முசி,
பாராட்டுக்கு மிக்க‌ நன்றி.

அன்புடன்,
செல்வி.

அடை பார்க்கும் போதே சாப்பிட தோணுது, அடுத்த முறை பீர்க்கங்காய் வாங்கும் போது செய்துப் பார்க்கிறேன் .

பீர்க்கங்காயில் செய்ய ஒரு வித்தியாசமான‌ குறிப்பு. நல்லா சத்தானதாகவும் இருக்கு. நான் இந்தமாதிரி அடைமாவு அரைத்தபின், மிகப் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் போட்டு அடை செய்வேன். அடுத்த முறை பீர்க்கங்காய் வாங்கும் போது செய்துப் பார்க்கிறேன்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு வாணி,
நல்லா இருக்கும் வாணி! செய்து பாருங்க‌.
நன்றி!

அன்புடன்,
செல்வி.

அன்பு சுஸ்ரீ,
அப்படியா? அது போலவும் ஒருமுறை செய்துட்டால் போகுது.
பீர்க்கங்காய் நல்ல‌ சுவையாக‌ இருக்கும். செய்து பாருங்க‌.

அன்புடன்,
செல்வி.

அருமையான அடை ஆசையை தூண்டுது

Be simple be sample

அன்பு ரேவதி,
ஆசையை தூண்டினா செய்துட‌ வேண்டியது தானே:)

அன்புடன்,
செல்வி.

அனைத்து பருப்பும் போட்டு அடை சூப்பர்... ட்ரை பண்றேன்..... உங்க‌ குறிப்பெல்லாம் ரொம்ப‌ நல்லா இருக்கு... ஒவ்வொண்ணா செய்யணும்......