வாழைப்பூ அடை

தேதி: April 23, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

புழுங்கலரிசி - ஒரு ஆழாக்கு
பச்சரிசி - அரை ஆழாக்கு
கடலைப்பருப்பு - அரை ஆழாக்கு
துவரம் பருப்பு - அரை ஆழாக்கு
உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி
கொள்ளு - ஒரு கைப்பிடி
பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி
வாழைப்பூ - பாதி பூ
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 5
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
பெருங்காயம் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு


 

புழுங்கலரிசி முதல் பாசிப்பருப்பு வரை உள்ள அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஊறிய அரிசி மற்றும் பருப்பு வகைகளுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், தனியா, பெருங்காயம், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து சிறிய ரவை பதத்திற்கு அரைக்கவும். கடைசியாக வாழைப்பூவை சேர்த்து ஒரு சுற்று அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு சிவந்தவுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
தாளித்தவற்றை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து கலக்கவும். (தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது).
சிறிய வாணலி அல்லது தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து ஊத்தாப்பம் போல் மொத்தமாக ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி சிவக்க வேகவிட்டு எடுக்கவும். (அதிகம் பரவலாக ஊற்ற வேண்டாம்).
சுவையான வாழைப்பூ அடை தயார். தேங்காய் சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மாவு மேலே நிறம் மாறிக் கொண்டே இருக்கும். அதனால் ஒவ்வொரு முறையும் மாவை எடுத்து அடை ஊற்றும் போதும் நன்கு கலந்து கொள்ளவும்.

பெண்கள் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நீங்க அன்னைக்கு இன்னொன்னு இருக்குன்னு சொன்னதுமே வாழைப்பூ அடை தான்னு தெரிஞ்சு போச்சு :) உங்க குறிப்பில் ஏற்கனவே பார்த்திருக்கனே. கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மீண்டும் ஒரு சத்தான அடை. சூப்ப்ப்ப்பர்க்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு செல்வி மேடம்,

உணவில் வாழைப்பூ அடிக்கடி சேர்த்துக்கணும்னு நீங்க‌ சொல்லியிருப்பது மிகவும் சரி. துவர்ப்பு சத்துள்ள‌ இந்த‌ அடை பெண்கள் அவசியம் அடிக்கடி செய்து சாப்பிட‌, மிகவும் நல்லது.

நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

மிகவும் சத்தான அடை...நேரம் இல்லாததால் வாழைபூவே சமைப்பது இல்லை.கன்டிப்பாக செய்து பார்கிரேன்.....

வித்தியாசமான‌ குறிப்பு,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு வனி,
இந்த‌ அடை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? நன்றி வனி:)

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
பெண்களுக்கு ரொம்பவே நல்லது. நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சீதாலஷ்மி,
வருகைக்கும், பதிவுக்கும் மிக்க‌ நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு நித்யா,
எனக்கும் கூட‌ நேரம் இருக்காது தான். மாலையில் வாங்கி வந்து, நறுக்கி டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்து பய்ன்படுத்துவேன்.
வாழைபூவையும், வாழைத்தண்டையும் நான் தவிர்க்கவே மாட்டேன்.
அவ்வளவுக்கும் நல்லது. சிரமம் பாராமல் செய்யுங்க‌.

அன்புடன்,
செல்வி.

அன்பு முசி,
மிக்க நன்றி.

அன்புடன்,
செல்வி.

வாழைப் பூ அடை துவர்க்குமா? செல்வி மேடம். வித விதமா சமைக்கிறீங்களே. எனக்கு கிடைக்காது , கிடைத்தால் வடையும்,அடையும் செய்துப் பார்த்திட வேண்டியதுதான்.

அன்பு வாணி,
கண்டிப்பாக‌ துவர்க்காது வாணி. ஒரு வாழைப்பூ வாங்கினால், எங்க‌ இருவருக்கும் ரொம்ப‌ அதிகம். ஒரு நாள் கூட்டு, ஒரு நாள் வடை, ஒரு நாள் அடை, ஒரு நாள் பொரியல், ஒரு நாள் உசிலின்னு காலி பண்ண‌ வேண்டி இருக்கு. அதுக்காக‌ வாழைப்பூ வாங்காம‌ மட்டும் இருக்கவே மாட்டேன்:)

சாரி வாணி. இங்கே நீங்க‌ இருந்திருந்தா நானேசெய்து கொண்டு வந்து கொடுத்திருப்பேன்:(

அன்புடன்,
செல்வி.

வாழைப்பூ அடை சத்துள்ள‌ அடை.நான் வாழைப்பூவில் வடை தான் செய்வேன்.ஆனால் நான் வாழைப்பூவை பொடியாக‌ நறுக்கி மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி சாற்றை பிழிந்து எடுத்துவிடுவேன்.அப்ப‌ தான் கசப்பு தன்மை போகும் என்று சொல்லுவாங்க‌.சாற்றை பிழியாமல் போட்டால் கசக்காதா அக்கா.

Expectation lead to Disappointment