குரலினிது யாழினிது

“கறுப்புக் கயிறு”

’பழனியில் வாங்கிய முருகன் டாலரா?

பம்பை நதிக்கரையில் கிடைத்த ஐயப்பன் டாலரா?

பள்ளி வாசலில் மந்திரித்துக் கட்டிய கயிறா?

வேளாங்கண்ணியில் விருப்பமாகக் கிடைத்த மாதா படமா?

பட்டணத்தில் எல்லோர் கழுத்திலும் எப்போதும்

படர்ந்திருக்கும் கறுப்பு மாலை - என்ன இது?

ஓ - அதுவா,

பக்கத்து வீட்டிலும், பழகியவர்களிடமும்

பேச நேரமில்லை -

ஆனால், பயணத்தின் போது, பேசிக் கொண்டே இருக்கவும்

பாட்டுக் கேட்டுக் கொண்டே மகிழவும் -

பயன் தரும் - இயர் ஃபோனா இது!!!’

ஒரு தமிழ்ப் பத்திரிக்கைக்கு மேலே உள்ள கவிதையை(?!) எழுதி அனுப்பினேன், வெளியாகவில்லை, அதனால் என்ன, இங்கே வெளியிட்டு விட்டேன், வேறு வழியே இல்லை, நீங்கள் படித்தே ஆக வேண்டும்:):)

அதிருக்கட்டும், இயர் ஃபோன் மாட்டிக் கொண்டு, செல் ஃபோனில் பாட்டுக் கேட்பது என்பது இப்போது காலத்தின் கட்டாயமாகி விட்டது. செல் ஃபோன் என்பது, ஃபோன் பேச மட்டுமில்லாமல், ரேடியோ, காமிரா, கணினி என்று பலவிதமாகவும் பயன் படுகிறது.

நானும் இப்போது ஒரு வாரமாக, என்னுடைய செல்ஃபோனில் எஃப் எம் ரேடியோ ஸ்டேஷன்களை ட்யூன் செய்து வைத்துக் கொண்டு, பாட்டு கேட்கிறேன். இரவு 9 மணிக்கு மேல் மட்டும்தான். இந்த நேரத்தில்தான் இனிய பாடல்கள் அதிகம் கேட்க முடிகிறது.

பாடல்கள் கேட்க ஆரம்பித்ததும் எனக்கு மலரும் நினைவுகள் வர ஆரம்பித்து விட்ட்து.

பாடல்கள் கேட்பது என்பது, நமக்குப் பிடித்த பாடல்களை ரெக்கார்ட் செய்து கேட்பதை விட, எதிர்பாராத தருணத்தில் அந்தப் பாடல் வானொலியில் ஒலிபரப்பாகும்போது, அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான். அவ்வளவு ஏன்? பஸ்ஸில் போய்க் கொண்டிருப்போம், ஏதாவது ஒரு கல்யாண வீடோ அல்லது காதுகுத்து வீடோ = அங்கே மைக் செட்டில் நமக்குப் பிடித்த பாடல் - சத்தமாக ஒலிக்கும். போகிற போக்கில், காதில் விழுந்து மறையும் ஒரு வரி ‍மனதில் இனம் புரியாத சந்தோஷத்தை உண்டு பண்ணும்.

50 வருடங்களுக்கு முன்னால் ரேடியோ என்பது ஒரு கௌரவ சின்னம். எல்லோர் வீட்டிலும் இருக்காது. ‘அவங்க வீட்டில லேடியோ பொட்டி இருக்குதாம்’ என்று மிகப் பெரிய விஷயமாகப் பேசுவார்கள்.

ரேடியோப் பெட்டி – நிஜமாகவே பெரிதாக பெட்டி போல இருக்கும். அதற்கு சுவரில் ஒரு பெரிய ஸ்டாண்ட் பொருத்தி அதன் மேல் வைத்திருப்பார்கள். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரம் முன்னாலேயே ஸ்விட்ச் போட வேண்டும். அதில் ஒரு பச்சை நிற லைட் ஒளிரும். கைகளைக் குவித்து, அந்த லைட் எரிகிறதா என்று செக் பண்ணுவார்கள். சிறியவர்களுக்கு ரேடியோவைத் தொட அனுமதி கிடையாது.

அப்புறம் ரேடியோவின் சைஸ் குறைந்து கொண்டே வந்து, ட்ரான்ஸிஸ்டர் ஆகியது. கரண்ட மட்டும் அல்லாது, பாட்டரி போட்டு, கேட்கலாம்.

மாத பட்ஜெட்டில் பாட்டரிக்கான ஒரு தொகை கண்டிப்பாக ஒதுக்கப்படும். இப்போது உள்ள மாதிரி பென் சைஸ் பாட்டரி கிடையாது. கொஞ்சம் பெரிதாக, கிட்ட்த்தட்ட 3 அல்லது 4 பாட்டரிகள் தேவைப்படும்.

பிறகு ட்ரான்ஸிஸ்டருடன் இணைந்த ரெக்கார்ட் ப்ளேயர், காசெட் ப்ளேயர் என்று எத்தனை முன்னேற்றங்கள்.

டேப் ரெகார்டர் என்பதில் நிஜமாகவே டேப் இருக்கும். இப்போது 1000 பாடல்களைக் கூட, சின்ன பென் ட்ரைவில் சேமிப்பதைப் பார்க்கும்போது எனக்கு பழைய டேப் ரெகார்டர் நினைவு வருகிறது.

இங்கே இருக்கும் நிறைய தோழிகள் ரொம்பவும் சின்னவர்கள். உங்க வீட்டில் இருக்கும் அத்தைகள், அல்லது உங்கள் அம்மாவிடம் அவங்க ரேடியோவில் பாடல்கள் கேட்ட அனுபவத்தைப் பற்றிக் கேட்டால், கண்டிப்பாக சிலோன் ரேடியோ பற்றி மலர்ந்த முகத்துடன் சொல்வார்கள்.

அந்நாட்களில் விவிதபாரதி என்பது சென்னை மற்றும் திருச்சி நேயர்கள் மட்டுமே கேட்க முடியும். மற்ற ஊர்களில் என்னதான் ட்யூன் செய்தாலும் கர கர என்ற ஒலியின் ஊடே, மெலிதாகத்தான் கேட்கும்.

இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைக் கேட்டால்தான் எங்கள் பொழுதுகளுக்கு ஒரு அர்த்தமே கிடைக்கும்.

நான் சொல்வது - கிட்டத்தட்ட 30-40 வருடங்களுக்கு முன்னால்.

பாடல்கள் அருமையாக இருப்பது ஒரு பக்கம் - அவற்றைத் தொகுத்து வழங்கிய வானொலி அறிவிப்பாளர்கள்(இளைய தலைமுறையினருக்குப் புரிகிற மாதிரி சொல்வதானால் ரேடியோ ஜாக்கி - ஆர்.ஜே) - மறக்க முடியுமா அவர்களை எல்லாம்!!!

தாங்களும் ரசித்து, எங்களையும் சிறந்த இரசனையாளர்களாக ஆக்கியவர்கள் அல்லவா இவர்கள்!

இலங்கை வானொலித் தொகுப்பாளர்கள் என்றால் அப்துல் ஹமீது மற்றும் கே.எஸ்.ராஜா இவர்களது பெயர்கள்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரிகிறது.

இவர்களைத் தவிர, விமால் சொக்கனாதன், புவனலோசனி, இராஜேஸ்வரி சண்முகம், ஆமினா பேகம் என்று நிறைய நட்சத்திரத் தொகுப்பாளர்கள் உண்டு.

மதியம் 1 மணிக்கு என் விருப்பம் என்ற தலைப்பில் அன்றைய அறிவிப்பாளருக்குப் பிடித்த பாடல்களை அரை மணி நேரம் ஒலி பரப்புவார்கள்.

விமால் சொக்கனாதன் = இவர் எனக்கு மிகவும் பிடித்த அறிவிப்பாளர். இவரது தொகுப்பே மிகவும் வித்தியாசமாக இருக்கும். முதலில் ஒரு முருகன் பாடல், அப்புறம் அவருக்குப் பிடித்த வசனத் தொகுப்பு, பிறகு பாடல்கள் – இவற்றிற்கான வித்தியாசமான விளக்கம் என்று அசத்தலாகத் தொகுத்து அளிப்பார். அதிராத மென்மையான குரல் இவருடையது.

இராஜேஸ்வரி சண்முகம், புவனலோசனி இவர்கள் இரண்டு பேரின் குரல்களும் கிட்ட்த்தட்ட ஒரே மாதிரி இருப்பது போல எனக்கொரு பிரமை.

ஆமினா பேகம் – கிளி கொஞ்சுவது என்பார்களே, அது போல மிக மிக இனிமையான குரல் இவருடையது.

அந்த காலகட்ட்த்தில் இந்திப் பாடல்களின் மேல் எல்லோருக்கும் தனி மோகம். இளையராஜா வந்த பிறகுதான் இது மாறியது.

யாதோன் கி பாரத், பாபி, ஆராதனா, ஜானி, என்று பல படங்களின் பாடல்கள் தேனாக ஒலித்து, எல்லோரையும் பரவசப்படுத்திக் கொண்டிருந்தன.

இலங்கை வானொலியிலும் மதியம் 1.30 மணியிலிருந்து 2 மணி வரை, ஹிந்திப் பாடல்கள் ஒலிபரப்புவார்கள். ஆசை ஆசையாக்க் கேட்பதுண்டு.

பாடல்களின் தர வரிசைக்கு ஒரு நிகழ்ச்சி, மதியம் பெண்களுக்கான நிகழ்ச்சி, இப்படி நிறைய உண்டு.

நான்கு மணிக்கு இசைக் களஞ்சியம் என்று ஒரு தொகுப்பு – தனிக்குரலிசை, ஜோடிக் குரல், நகைச்சுவைப் பாடல் என்று வெரைட்டியான பாடல்களை அழகாக வழங்குவார்கள்.

வாரத்தில் ஒரு நாள் – ரேடியோ குறுக்கெழுத்துப் போட்டி என்ற நிகழ்ச்சி – இதை அனேகமாக அப்துல் ஹமீதுதான் வழங்குவார்.

மேலும் கீழுமாக ஆறு வரிசை என்று மொத்தம் முப்பத்தாறு கட்டங்களை பேப்பரில் வரைந்து கொண்டு, ரெடியாக்க் காத்திருப்போம். ஹமீதின் இனிய குரல் - ‘ பாடலைக் கேட்டுக் கொண்டே போட்டிக்குத் தயாராகுங்கள்’ என்று ஒலிக்கும். அவர் கொடுக்கும் க்ளூ கேட்டு, கட்டங்களை நிரப்பி, புதிரை விடுவிப்பதில் சின்னக் குழந்தையைப் போல ஒரு உற்சாகம் வரும்.

இசையும் கதையும் – இந்த நிகழ்ச்சியில் ஒரு சிறுகதை – இடை இடையே பொருத்தமான பாடல்கள் என்று ஒலிபரப்பாகும். நேயர்கள் எழுதி அனுப்புவதைத் தேர்ந்தெடுத்து ஒலிபரப்புவார்கள்.

இசை மாலை – இதுவும் நேயர்கள் எழுதி அனுப்பும் நிகழ்ச்சி. அதாவது – ஒரு வாக்கியம் – அந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆரம்பிக்கும் பாடல் – இப்படி ஒலிக்கும். வாக்கியத்தைக் கேட்டு, அந்த அந்த வார்த்தைக்கான பாடல் என்னவாக இருக்கும் என்று ஊகிப்பதில் ஒரு திரில்.

உதாரணம் சொல்வதானால் - ‘நல்லவன் மனதில் சாந்தி நிலவும்’ என்று ஒரு வாக்கியம் - இதற்கு -

நல்லவன் – ‘நல்லவன் எனக்கு நானே நல்லவன்’
மனதில் – மனதில் உறுதி வேண்டும்
சாந்தி – சாந்தி என் சாந்தி
நிலவும் – நிலவும் மலரும் பாடுது

என்று இப்படி பாடல்கள் ஒலிபரப்புவார்கள். 7 அல்லது 8 வார்த்தைகள் கொண்ட அர்த்தம் நிறைந்த ஒரு வாக்கியத்துக்குப் பொருத்தமான பாடல்கள் கேட்பது சுவை.

ஜோடி மாற்றம் – இந்த நிகழ்ச்சியில் எப்படித்தான் பாடல்களைக் கண்டுபிடிக்கிறார்களோ என்று ஆச்சரியமாக இருக்கும். அதாவது முதல் பாடலில் டி.எம்.எஸ் தொடங்க, சுசீலா தொடர்ந்து பாடினால், அடுத்து ஒலிபரப்பாகும் பாடலில் சுசீலா தொடங்க, பி.பி.ஸ்ரீனிவாஸ் தொடருவார். அடுத்த பாடலில் பி.பி.எஸ் தொடங்க, ஜானகி தொடருவார். ரொம்ப அருமையாக இருக்கும்.

இன்றைய நட்சத்திரம் – ஒரு குறிப்பிட்ட பாடகரின் பாடல்கள், அவரைப் பற்றிய செய்திகள்.

இன்றைய நேயர் – இதில் நேயர்கள் பத்துப் பாடல்கள் தொகுத்து அனுப்பலாம். நேயரைப் பற்றிய விவரங்களுடன், ஏதாவது மூன்று பாடல்கள் ஒலிபரப்ப்ப்படும்.

இலங்கையில் ரிலீசாகும் திரைப்படங்களுக்கான விளம்பரதாரர் நிகழ்ச்சிகளில் – அந்தப் படங்களில் இருந்து பாடல் வரிகள், வசன்ங்கள் என்று கேட்க முடியும்.

குடும்பக் கட்டுப்பாடு(அப்படின்னா என்ன்ன்னு கேட்காதீங்க) இந்த்த் துறையின் நிகழ்ச்சியில் ஒரு விளம்பரப் பாடல் – ‘அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே, கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே’ என்ற பாடல் மறக்கவே முடியாதது.

அதே போல குணசரி புல்டோ – இந்த விளம்பரம் – ‘அங்கிள் எனக்கு மனசே சரியில்ல’ என்று ஒலிக்கும் குழந்தைக் குரல் – இன்னும் காதில் கேட்கிறது.

அந்தக் கால கட்டத்தில் பாப் இசை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருந்த்து. இலங்கை வானொலியில் அதிலும் புதுமை புகுத்தினார்கள்.

தமிழ் பாப் இசை – மறக்க முடியுமா இந்தப் பாடல்களை? இவற்றை இலங்கை வானொலியில் மட்டுமே கேட்க முடியும் என்பதால் ட்ரான்ஸிஸ்டருக்குள் காதை ஒட்டி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம்.

‘சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே’

கா கா கா க்க்க்கா கா – (இந்தப் பாடலைப் பாடிய பிரபல பாடகரின் மருமகள் இப்போது நம் பெருமைக்குரிய அறுசுவை தோழி என்ற இரகசியத்தையும் இங்கே சொல்லி வைக்கிறேன், கண்டு பிடியுங்க பார்க்கலாம் அவரை!)

இப்படி பல பாடல்கள். இவையெல்லாம் அப்போது கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பிரபலம்.

சரி, தமிழ் நாட்டு வானொலி நிகழ்ச்சிகள் பற்றியும் கொஞ்சம் –

வானொலி நிகழ்ச்சிகள் பற்றி ‘வானொலி’ என்ற பெயரில் ஒரு பத்திரிக்கையே வந்து கொண்டிருந்த்து. நிறைய சுவையான தகவல்களும் இதில் வெளியாகும்.

ஒலிச்சித்திரம் என்ற தலைப்பில் ஞாயிறு தோறும் ஒரு மணி நேரத்துக்கு, திரைப்படங்களின் கதை வசனத்தை சுருக்கமாக ஒலிபரப்புவார்கள். சினிமாவைக் கேட்க முடியும் இதில்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் – வானொலி வடிவம் – எஸ்.வெங்கட்ராமன் என்ற குரல் ஒலிக்கும். நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தைதான் அவர். ‘ரோஜா’ பட்த்தில், அரவிந்த் சாமியின் மேலதிகாரியாக, மதுபாலாவிடம் பணியாரம் செய்து தரச் சொல்லி கேட்பாரே, அவரேதான்.

செய்திகள் வாசிப்பவர்களின் குரல்கள் மிகவும் பிரபலம். இராமனாதன் – இவர் நடிகர் சரத்குமாரின் தந்தை.

பூர்ணம் விசுவனாதன், சாம்பசிவம், சரோஜ் நாராயண்சாமி இவர்களின் அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கும்.

தொலைக்காட்சி வந்தபின் வானொலியின் புகழ் கொஞ்சம் மங்கிப் போயிருந்த்து. இப்போது பண்பலைகளின் ஆட்சி நடக்கிறது. தொகுப்பாளர்களின் தட தட பேச்சு, நடப்பு செய்திகள் என்று கவனத்தைக் கவருவது மகிழ்ச்சிதான்.

காற்றில் கலந்து வந்து, இதயத்தை நிறைத்து, இரசனையை செம்மைப்படுத்திய இந்த இனிய குரலுக்குரியவர்கள் – மறக்க முடியுமா!

என் கணவர் திரு சிலோன் மனோகர் அவர்களுடன் ஒரு சீரியலில் நடித்த‌ போது எடுத்துக் கொண்ட‌ புகைப்படம்.

எதுக்கு இது இங்கே அப்படின்னு கேக்கறீங்களா? ஹி ஹி, ஒரு விளம்பரம்தான்(இதை கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் பேசும் குரலில் படிக்கவும்)

5
Average: 5 (3 votes)

Comments

இலங்கை வானொலி பற்றிய தொகுப்பு உங்களுக்கு மட்டுமல்ல எங்க அமாவுக்கும் கூட மலரும் நினைவுகள்தான். அம்மாவுக்கு திருமணம் முடிவதற்க்கெல்லாம் முன்னிருந்தே இந்த எல்லா நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து கேட்பார்கள். நீங்கள் குறிப்பிட்ட "ரேடியோ பெட்டி" எங்க தாத்தா வீட்டில் நான் சிறு வயதில் பார்த்துள்ளேன். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பலரின் பெயர்கள் கூட எனக்கும் இன்னும் நினைவில் உள்ளதுதான்.அவர்கள் பெயரைப் படிக்கும் போதே அவர்களின் குரலும் நினைவுக்குள் வந்து செல்கின்றன.
அநேகமாக புதுடில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் இரவு நேர செய்தி வாசிப்பாளர் சரோஜினி நாராயண சுவாமியாகத்தான் இருப்பார். நாங்கள் அம்மாவிடம் கேட்ப்போம், இவர் குரலை வைத்துப் பார்த்தால் ஆண் குரலில் தொனிக்கிறதே என்று.
நீங்கள் குறிப்பிட்ட தொகுப்பாளர்களின் குரலை இப்போதும் அம்மா கேட்க நேரும் போது வயதானாலும் அவர்களின் குரலில் எந்த மாற்றமும் இல்லையே என்று வியப்பதுண்டு.!!

எல்லாவற்றையும் குறிப்பிட்ட நீங்கள்... ஒரு விஷயத்தை விட்டு விட்டீர்கள் பாருங்க!! இலங்கை வானொலியின் "கவிதை தொகுப்பு". நேயர்கள் அனுப்பும் கவிதைகளைப் படித்து நேயரின் பெயரையும் குறிப்பிடுவார்களே. என் அம்மா திருமணத்திற்க்கு முன் வரை புனைப் பெயரில் கவிதை எழுதி இலங்கை வானொலிக்கு அனுப்புவார்களாம். அதினால் அம்மாவிற்க்கு அநேக பேனா நட்புகளும் உண்டு.

"ஆல் இந்தியா ரேடியோ.... இலங்கை வானொலி நிலையம்" சிறு வயதில் எங்க கிராமத்தில் எல்லா வீடுகளிலும் காலையும், மாலையும் ஒலிப்பது.இன்னும் காதுகளில் ஒலிக்கிறது

\\இந்தப் பாடலைப் பாடிய பிரபல பாடகரின் மருமகள் இப்போது நம் பெருமைக்குரிய அறுசுவை தோழி என்ற இரகசியத்தையும் இங்கே சொல்லி வைக்கிறேன், கண்டு பிடியுங்க பார்க்கலாம் அவரை!)//

குத்து மதிப்பா ஒருவரை நினைக்கிறேன், அவரா என்று தெரியவில்லை.

அந்த மருமகள் சொன்னதே என்கிட்ட தானே ;) நம்ம உமா.

இந்த ரேடியோ மேட்டர் அம்மா, அப்பா... அவ்வளவு ஏன் என் ஆத்துக்காரர் கூட சொல்லி கேட்டிருக்கேன். நிச்சயமா 40 வயசை தாண்டல அவர் ;) ஆனா ரேடியோ கேட்கும் பழக்கம் உண்டு சிறு வயதில் இருந்து. என் அப்பா இன்னும் பழைய ரேடியோ ஒன்று வைத்திருக்கிறார். பேக் பண்ணி எல்லாம் மேலே இருக்கும். தேடிப்பிடிக்கனும், பின்னாளில் தேடினாலும் அதை எல்லாம் வாங்க முடியாதுன்னு இப்போ தோனுது.

எனக்கும் ரேடியோ கேட்கும் பழக்கம் உண்டு... நம்ம FM தான். அதுவும் இரவில் அதிகமாக இளையராஜா பாடல்கள் வரும் நேரம் கேட்பது வழக்கம். இப்போ இல்ல... வேலை பார்த்த நாட்களில். வீட்டுக்கு வந்ததும் அதை போட்டுட்டு தான் தூங்குவேன் [அதுக்கும் தினம் வசுகிட்ட ஒரு பாட்டு கேட்பேன்]. இப்பவும் சில நாட்கள் மனசு அமைதி இல்லாம இருக்கும் போது போடனும், கேட்கனும்னு தோனும்... முடியாதே.

அன்கிளும் திரு மனோகரும் படம் சூப்பர் சீதா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேடியோ எல்லோருக்கும் நல்ல நண்பன்தான்.. சிறுவயதில் கேட்பேன்ங்க
கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க. . பதிவும் ரொம்ப அருமைங்க.. :-)

நட்புடன்
குணா

எப்படி இருக்கீங்க? ரொம்ப நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவைப் பார்க்க சந்தோஷமா இருக்கு...

எங்க வீட்டில் இப்பவும் காலை 6 - 10 & இரவு 10 மணிக்கு மேல் F.M தான் கேட்போம்..

F.M ல பாடல் கேட்கும் சந்தோஷமே தனி தான்.. இப்போ சார்ஜ் போட்டு ப்ளே பண்ணிக்கிற மாதிரி நிறைய MP3 ப்ளேயர் வித் F.M வந்துட்டதால கரண்ட் போனாலும் பாட்டு கேட்டுக்கிறோம். (பழைய ரேடியோவ யூஸ் பண்ணறதில்ல)..

//எதிர்பாராத தருணத்தில் அந்தப் பாடல் வானொலியில் ஒலிபரப்பாகும்போது, அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான். // அதிலும் எதிர்பாராத விதமாக நாம் மனதிற்குள் நினைக்கும் பாடல் ஏதேனும் F.M ல் ஒலிபரப்பாகிவிட்டால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது...

கலை

நான் சின்ன வயதில் ரோடியோ கேட்டது எங்க தாத்தா வைத்து கேட்பாங்க அப்ப சிலோன் ரேடியோ அதுக்கு பிறகு காரைகால் fm தான் கேட்டேன். இன்னமும் எங்க வீட்ல ரேடியோ இருக்கு, அப்ப அப்ப கேட்போம். அது ஒரு சுகம் நாம் வேலை செய்துகிட்டு இருக்கும் போது டிவி பார்த்துக்கிட்டு வேலை செய்வதைவிட ரேடியோ கேட்டுக்கிட்டு வேலை செய்தால் சீக்கிரம் செய்து விடலாம். உங்க பதிவை படிக்க ரொம்ப சுவாரசியாம இருந்தது. கவிதையும் அருமை.

சரோஜ்நாராயணஸ்வாமியின் கம்பீர குரல் மறக்கவே முடியாது.
அதே போல் சிறு வயதில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும், பாட்டுக்கு பாட்டு கேட்டிருக்கிறேன்.

சுராங்கனி பாடல் பள்ளி,கல்லூரிகளில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதாயிற்றே.
எனக்கு இளையராஜா அவர்களின் மெலோடியஸ் பாடல் கேட்க ரொம்ப பிடிக்கும்.
நல்ல பதிவு சீதாமேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹாய்,
////காற்றினில் கலந்து வந்து ,இதயத்தில் நிறைந்து,ரசனையை செம்மைபடுத்திய அந்த‌ இனிய‌ குரல்கள்/////////குரலொலி கேட்டு அதற்கு நாமே கற்பனை வடிவம் கொடுத்து ரசித்த‌ காலம்ங்க‌ அது.உங்கள் பதிவை அந்த‌ இனிய‌ குரலில் படிப்பது போல் படித்து ரசித்தேன்.வாழ்த்துக்கள்.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

லீவு முடிஞ்சுட்டாம்மா, வாங்க வாங்க வரும் போதே பொக்கிஷமான பழைய நினைவுகளோட வந்திருக்கீங்க, எங்க வீட்டிலும் அந்த காலத்து ரேடியோ இருந்துச்சும்மா ஃப்ரீஃப்கேஸ் அளவுக்கு இருக்கும். நீங்க பகிர்ந்துகிட்ட விஷயங்கள் எல்லாமே படிக்கவே ரொம்ப ஸ்வாரஸ்மா இருக்கும்மா, ரேடியோ சின்ன வயசுல கேட்டிருக்கேன் இப்பலாம் அப்பப்போ, ஆனா ஹெட் செட்டும் இளையராஜா இசையில் s.p.b குரலும் நைட் தாலாட்டு.
///போகிற போக்கில், காதில் விழுந்து மறையும் ஒரு வரி ‍மனதில் இனம் புரியாத சந்தோஷத்தை உண்டு பண்ணும்./// ஆமாம்மா அந்த தருணத்தை சொல்ல வார்த்தையே இல்லை நமக்கு பிடிச்ச பாட்டுனா இன்னும் குஷியா இருக்கும்.
ப்ரண்ட்ஸ் சொல்லி கேட்டிருக்கேன் சென்னைல f.m கூட தான் நாளே போகும்னு.

மலரும் நினைவுகள் அருமை.
எங்க‌ ஊருக்கு கரண்ட் வரும் முன்பே, எங்க‌ தாத்தா கொழும்பில் இருந்து ரேடியோ கொண்டு வந்த‌ கதையை எங்க‌ பாட்டி விவரித்திருக்கிறார்கள்.
"' சின்ன‌ மாமியே உன் சின்ன‌ மகள் எங்கே?
பள்ளிக்கு சென்றாளா?படிக்க‌ சென்றாளா?""
பாடல் இப்போதும் நினைவுக்கு வருது
சதா சர்வ‌ காலமும் டிரான்சிஸ்டரையே தூக்கிக் கொண்டு அம்மாவிடம் நிறைய‌ பேச்சு வாங்கி இருக்கிறேன்.
உண்மையிலேயே இலங்கை வானொலியும் அப்துல்ஹமீது மற்றும் ராஜாவின் குரலும் மறக்க‌ முடியாதது.

வானொலி பற்றிப் படித்ததில் உங்கள் கவிதைப் பற்றி சொல்ல மறந்து விட்டேன்.

\\கறுப்புக் கயிறு”
’பழனியில் வாங்கிய முருகன் டாலரா?
பம்பை நதிக்கரையில் கிடைத்த ஐயப்பன் டாலரா?
பள்ளி வாசலில் மந்திரித்துக் கட்டிய கயிறா?
வேளாங்கண்ணியில் விருப்பமாகக் கிடைத்த மாதா படமா?
பட்டணத்தில் எல்லோர் கழுத்திலும் எப்போதும்
படர்ந்திருக்கும் கறுப்பு மாலை - என்ன இது?
ஓ - அதுவா,
பக்கத்து வீட்டிலும், பழகியவர்களிடமும்
பேச நேரமில்லை -
ஆனால், பயணத்தின் போது, பேசிக் கொண்டே இருக்கவும்
பாட்டுக் கேட்டுக் கொண்டே மகிழவும் -
பயன் தரும் - இயர் ஃபோனா இது//

"காலத்திற்க்கேற்ற கற்பனை"

நீங்கசொல்வது உண்மைதான் எனக்கும் இந்த ரசனை உண்டு.ஆனால் இப்ப ரேடியோ இல்லையே.

அன்பு வாணி,

கவிதைத் தொகுப்பு இன்னும் மற்ற‌ நிகழ்ச்சிகளும் எழுதணும்னு நினைச்சிட்டு இருந்தேன். நேயர்களை உற்சாகப்படுத்தி, பங்கு கொள்ள‌ வைத்த‌ அந்த‌ இனிய‌ நாட்கள் இப்போதும் இனிக்கின்றன‌. சொல் அழகும் பொருள் அழகும் நிறைந்த‌ கவிதைகளை, இனிய‌ குரலில் கேட்டு, ரசித்த‌ நாட்கள் அவை.

அம்மா கவிதை எழுதுவார்கள் என்றால் நீங்களும் கண்டிப்பாக‌ கவிதாயினியாகத்தான் இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அம்மாவுக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்லுங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,

நீங்க‌ கண்டு பிடிச்சிடுவீங்கன்னு தெரியுமே, விஷயத்தை சொன்னதே நீங்கதானே.

பாட்டு கேளுங்க‌ வனி, கண்டிப்பாக‌ மனம் வேறு பக்கம் திரும்பும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு குணாங்,

சிறுவயதில் கேப்பிங்களா?! இப்பவும் நீங்க‌ சின்னவங்கதாங்க‌.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றிங் குணாங்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கலை,

கிட்டத்தட்ட‌ ஒரு மாசம் லீவ் எடுத்துட்டேன். இன்னும் பழைய‌ ஃபார்ம்க்கு வரலை:)

இசையால் வசமாகா இதயம் எது என்று சொல்வாங்களே, இசை உணர்வை சாந்தப்படுத்துகிறதுதானே.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பாலபாரதி,

நீங்க‌ சொல்வது ரொம்ப‌ சரி, பாட்டு கேட்டுகிட்டே மத்த‌ வேலையையும் பாக்கலாம்.

அப்பல்லாம் ட்ரான்ஸிஸ்டர் அடுப்படியில் ஒரு ஓரமாக‌ வச்சுகிட்டே வேலை பார்ப்பதுண்டு. இப்ப‌ தூங்கப் போகும்போது, எஃப்.எம். ஒலிக்குது.

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அருள்,

சுராங்கனி பாடல் மறக்க‌ முடியுமா? எந்த‌ பிக்னிக், டூர் என்றாலும், முதலில் ஆரம்பிப்பது இந்தப் பாட்டுதானே. பாட‌ ஆரம்பிச்சதுமே டூர் களை கட்டி விடுமே.

பதிவுக்கு நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரஜினி மேடம்,

கண்ணில் தோன்றும் காட்சியில் கற்பனை தீர்ந்து விடும் என்ற‌ பாடல் வரிகளைக் கேட்கும்போது, நானும் உங்களைப் போல்தான் நினைப்பதுண்டு.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு தேவி,

லீவு முடிஞ்சாச்சு, ஒரு வழியா.

சென்னையில் எங்க‌ பாத்தாலும் எஃப்.எம்.தான் ஒலிக்குது. ஆட்டோவில் போறப்ப‌ கூட‌ கேக்க‌ முடியுது.

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நிகிலா,

உண்மைதான், ட்ரான்ஸிஸ்டரில் பாட்டு கேட்பதற்காக‌, வீட்டில் பாட்டு கேட்டதுண்டு:):)

இப்போது உள்ள‌ ஆர்.ஜே.க்களும் திறமைசாலிகள்தான், சீக்கிரமே சினிமாவுக்கே வந்துடறாங்களே.

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வாணி,

பஸ்ஸில், எலெக்ட்ரிக் ட்ரெயினில் எப்பவும் இதை மாட்டிக்கிட்டு இருக்காங்க‌. ஆனால், இப்படி மைக்ரோஃபோன் காதுலயே வச்சிருக்கக் கூடாதுன்னும் சொல்றாங்க‌.

சும்மா கவிதை மாதிரி முயற்சி பண்ணேன், அவ்வளவுதான், :):)

நன்றி வாணி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இனியா,

மொபைல் ஃபோனில் எஃப்.எம். செட் செய்து கொண்டு கேக்கலாம், முயற்சித்துப் பாருங்க‌. இப்பதான் மொபைல் ஃபோனே எல்லா வேலையும் செய்துடுதே.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாலஷ்மி,
கவிதை நல்லா இருக்கு.

கொசுவர்த்தி சுத்த‌ வச்சுட்டீங்க‌:)
செய்திகள். வாசிப்பது, சரோஜ் நாராயணசமி. அந்த‌ ஜ் ல‌ ஒரு அழுத்தம் கொடுத்து உச்சரிக்கும் குரலை மறக்க‌ முடியுமா? துக்கமான‌ விஷ்யமா, மகிழ்வான‌ செய்தியா குரலிலேயே தெரிஞ்சுடும்.

அதே போல் அப்துல் ஹமீது.... ம்ம்ம்ம்..... மறக்க‌ முடியுமா?

இன்னமும் ஒரு ரேடியோ ஞாபகத்துக்காக‌ வைத்திருக்கேன்.

நல்ல‌ பதிவு!

அன்புடன்,
செல்வி.

அன்பு செல்வி மேடம்,

கொசுவர்த்தி கொஞ்சம் அதிகமாகவே சுத்திடுச்சு இல்ல‌:):)

பழைய‌ நினைகவுகளை நினைத்துப் பார்ப்பதே ஒரு தனி சுவைதான்.

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா அம்மா எப்படி இருக்கீங்க? ரேடியோ பற்றி படித்ததும் சமீபத்தில் பூத் பார்த்த பூத் நாத் படம் தான் நினைவுக்கு வந்து,:))

எங்க வீட்டில் காலை 6.30 க்கு ஓடும் செய்தி வரும் முடிந்ததும் ஆப் பன்னிடுவாங்க, அதிகம் செய்தி தவிர கேட்டதில்லை:(

வெளியே எங்கும் போகும் போது பஸ்ஸிலோ காரிலோ எபெம் ஓடும், கேட்டு ரசித்ததுண்டு:)

உங்க கவிதை( அது கவிதையே தான்) சூப்பர்!!

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு ரேணுகா,

அது கவிதையான்னு ரொம்ப‌ சந்தேகம் வந்துடுச்சு, அதனால்தான் கவிதைப் பூஞ்சோலை பகுதிக்கு அனுப்பாம‌, இங்கே வலைப்பதிவில் தைரியமா(!) வெளியிட்டு விட்டேன்.

பூத் பார்த்த‌ பூத் நாத் ‍- புரியலையே ரேணுகா, என்னன்னு சீக்கிரம் சொல்லுங்க, ப்ளீஸ்!

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சூப்பர் ப்ளாக் அசத்திட்டிங்க சீதாம்மா. படம் எப்ப எடுத்ததும்மா? எந்த சீரியல் இது? (திருமதி செல்வம் சாயல் தெரியுது) அங்கிள் ஒரு நடிகர்ன்னு இவ்வளவு நாள் சொல்லாம மறச்சிடிங்கதானே! மாமனார் இப்பல்லாம் நடிக்கிறது இல்ல. அவருக்கு உடம்பு சரியில்ல.

//ரேடியோப் பெட்டி – நிஜமாகவே பெரிதாக பெட்டி போல இருக்கும். அதற்கு சுவரில் ஒரு பெரிய ஸ்டாண்ட் பொருத்தி அதன் மேல் வைத்திருப்பார்கள். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரம் முன்னாலேயே ஸ்விட்ச் போட வேண்டும். அதில் ஒரு பச்சை நிற லைட் ஒளிரும். கைகளைக் குவித்து, அந்த லைட் எரிகிறதா என்று செக் பண்ணுவார்கள்.//

ரேடியோவுக்கு இவ்வளவு பெரிய கதை இருக்கா? நீங்க சொல்லித்தான் தெரிஞ்சிகிட்டேன்.

அறிவிப்பாளர்களில் விமால் சொக்கநாதன் அப்படின்னு ஒருத்தர் இருந்தாரா? இங்கேயே பொறந்து வளர்ந்த எனக்கு தெரியல. (ஒரு வேல அப்ப நான் பொறக்கலயோ?)

எனக்கும் சின்ன வயசுல அந்த குறுக்கெழுத்து போட்டி எழுதுற பழக்கம் இருந்தது. (எத்தனை வயசுன்னு நினைவு இல்ல) அப்ப மட்டும் இல்ல குறுக்கெழுத்து எப்பவும் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். ஒரு பத்திரிகை விடமாட்டேன். கண்ணுல பட்டா எழுதி முடிச்சிட்டுதான் அடுத்த வேலை.

தொடரட்டும் உங்க கைவண்ணம்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சீதாம்மா அருமையான நினைவுகள் . நானும் சின்ன வயசுல ரேடியோ கேட்டிருக்கோம். அதுல ஒளிசித்திரம்,இரவு 8.30க்கு நாடகம் ,காலை 7.35 க்கு தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல்.. அவரோட குரலுக்காகவே கேட்ப்போம்.
இப்ப சமிபத்துல டிவி ரிப்பேர் ஆனதும் ரேடியோ பெட்டி கீழ இரங்கிச்சு .பகல் வேளைல ஃஎப்.எம் கேட்கறது விட கொடுமை வேற இல்லை. இரவு பரவாயில்லை. மிர்ச்சி செந்தில் ,யாழிசை சுதாகர் ந்னு தொகுத்து வழங்கற நிகழ்ச்சி நல்லாருக்கும் .

Be simple be sample

அன்பு உமா,

நீங்க வனிகிட்ட உங்க மாமா பத்தி சொன்னதுமே, இந்த ஃபோட்டோவை அப்லோட் செய்யணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.

இந்தப் படம் எடுத்தது ‘வாடகை வீடு’என்ற சீரியல்னு நினைக்கிறேன்.

விமால் சொக்கனாதன் - நாங்கல்லாம் சின்னப் புள்ளைகளா இருக்கறப்பவே, இவர் இலங்கை வானொலியிலிருந்து விலகி, பி.பி.சி.யில் சேர்ந்துட்டார்னு நினைக்கிறேன்.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரேவதி,

பகலில் எஃப்.எம் கேட்பது கொடுமைதான். விளம்பரங்கள்தான் மிகவும் அதிகமாக இருக்கு.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி