மாவா / கோயா குஜியா

தேதி: May 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மேல் மாவுக்கு:
மைதா மாவு - ஒரு கப்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 2 மேசைக்கரண்டி
நீர் - தேவைக்கு
ஸ்டஃபிங் செய்ய:
இனிப்பில்லாத கோயா - அரை கப்
விரும்பிய நட்ஸ் கலவை (முந்திரி, பாதாம், பிஸ்தா) - 15 - 20
தேங்காய் துருவல் - சிறிது (விரும்பினால்)
ஏலக்காய்த் தூள் - சிறிது
பொடித்த சர்க்கரை - அரை கப்
எண்ணெய் - பொரிக்க


 

மைதா மாவுடன் உப்பு மற்றும் நெய் சேர்த்துப் பிசையவும். (ப்ரெட் க்ரம்ஸ் போல வரும். மாவு முழுவதையும் பிசைந்துவிடவும்).
அதனுடன் தேவையான அளவு நீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை துணியால் மூடி 15 - 30 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
இனிப்பில்லாத கோயா / மாவாவைத் துருவிக் கொள்ளவும். (மாவா / கோயா என்பது இனிப்பில்லாத பால் கோவா தான். அடுப்பை சிறு தீயில் வைத்து பாலை ஊற்றி கெட்டியாகும் வரை வைத்து நீண்ட நேரம் கிளறும் போது கோயா கிடைக்கும். பல வட இந்திய இனிப்பு வகைகளில் பயன்படுத்தப்படும் இந்த கோயா தற்போது கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கின்றது).
துருவிய கோயாவை பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறவும். உருகத் துவங்கியதும் 2 - 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து எடுத்து ஆற வைக்கவும்.
பொடிக்காத சர்க்கரையைப் பயன்படுத்துவதாக இருந்தால் நட்ஸ் வகைகளுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (நைசாக அரைக்க வேண்டாம்).
கோயா நன்றாக ஆறியதும் பொடி செய்த நட்ஸ், பொடி செய்த சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து விரல்களால் கிளறிவிடவும். இந்த ஸ்டஃபிங் கலவை ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்.
துணியால் மூடி வைத்துள்ள மாவை எடுத்து மீண்டும் ஒரு முறை பிசைந்து கொண்டு, சிறு உருண்டைகளாக உருட்டி இதேபோல் மெல்லியதாக திரட்டிக் கொள்ளவும்.
அதன் மீது சிறிது ஸ்டஃபிங்கை வைத்து, விரலில் நீரைத் தொட்டுக் கொண்டு ஓரங்களில் தடவிவிட்டு மூடி ஒட்டவும். ஒட்டிய ஓரங்களை ஃபோர்க் கொண்டு அழுத்திவிடவும். (ஓரங்களை சரியாக அழுத்தி ஒட்டுவது அவசியம். அப்போது தான் எண்ணெயில் பொரிக்கும் போது பிரிந்து போகாது. ஸ்டஃபிங் அதிகமாக வைத்தாலும் பிரிந்து போகும். அளவாக வைப்பது நன்று).
இதே போல மீதமுள்ள மாவிலும் தயார் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு மிதமாகக் காய்ந்ததும், தயார் செய்து வைத்துள்ள குஜியாவை போட்டுப் பொரித்தெடுக்கவும்.
சுவையான மாவா குஜியா தயார். ஆறியதும் பாட்டிலில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

கர்நாடகா கர்ஜிக்காய் / ஆந்திரா கஜ்ஜிக்காயலு போன்றது தான் இந்த குஜியா. இது வட இந்திய இனிப்பு வகையைச் சேர்ந்தது. குஜராத், ராஜஸ்தான் போன்ற இடங்களில் பிரபலமானது.

ஆந்திரா / கர்நாடகாவில் செய்யப்படும் இந்த இனிப்பு வகைகளின் உள்ளே வைக்கும் பூரணம் பொட்டுக்கடலை / ரவை போன்றவற்றில் செய்வதால் கெட்டுப் போகாமல் இருக்கும். பல நாட்கள் வரை வைத்திருக்கலாம். ஆனால், இந்த குஜியாவில் வைக்கும் பூரணம் பால் கோயாவில் செய்வதால் அதிக நாட்கள் வைத்திருக்க இயலாது.

உள்ளே வைக்கும் ஸ்டஃபிங்கில் பல வகைகள் உண்டு. நட்ஸுடன் டேட்ஸ் கலந்து செய்யலாம். ரோஸ்டட் நட்ஸ் சேர்த்துச் செய்யலாம். ரவை கலந்து, கோயா சேர்த்தும் செய்யலாம். வெல்லம் பயன்படுத்தலாம். உங்கள் விருப்பம் போல பல வகைகளில் ஸ்டஃபிங் தயாரிக்கலாம்.

மாவை ஒரே அளவாக திரட்ட முடியாதவர்கள் என்னைப் போல திரட்டிவிட்டு, குக்கி கட்டர் அல்லது பாத்திரத்தின் வாய் பகுதியால் ஓரங்களை வெட்டிக் கொள்ளவும்.

முக்கியமாகக் கவனிக்க வேண்டியது: நெய் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக்கூடாது. எண்ணெயின் சூடு மிக மிக முக்கியம். அதிகச் சூடாக இருந்தால் க்ரிஸ்பியாக இல்லாமல் சிவந்து போகும். குறைவான சூட்டில் பொரித்தால் வெள்ளையாக க்ரிஸ்பியாக இல்லாமல் போகும். மிதமான சூடு அவசியம். அப்போது தான் பொரித்தெடுத்த குஜியா அதே மொறுமொறுப்புடன் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்ப்ப்ப்பர் வனி. கடைசி ப்ளேட் அப்டியே எனக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பர் வனி கோயா சேர்த்து செய்வது டிப்ரெண்டா இருக்கு.

என்றும் அன்புடன்,
கதீஜா

ரொம்ப நல்லா இருக்கு மாவா / கோயா குஜியா எனக்கு பேரு தான் ரொம்ப பிடிச்சு இருக்கு,பார்க்க சோமாஸ் மாதிரி இருக்கு மொத்ததுல ரொம்ப நல்லா இருக்கு அக்கா வாழ்த்துக்கள் by Elaya.G

௧லக்கறீங்க போங்க,,,,,
நன்றீங்கா

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

யம்மி யம்மி, எனக்கு?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சோமாஸ் மாதிரியே இருக்கு, கடைசில இருந்து மூனாவது படம் ரொம்ப பிடிச்சிருக்கு குண்டா பார்க்கவே ஆசையா இருக்கு, பேரு வித்தியாசமா இருக்கப்பவே நினைச்சேன் இது வனிதா குறிப்புன்னு. சூப்பர் வனிதா.

அன்பு வனி,

பாக்கறதுக்கே ரொம்ப அழகா இருக்கு. சீராக ஒரே அளவில் செய்திருக்கீங்க. ரொம்பப் பொறுமை உங்களுக்கு.

மாவா/கோயா குஜியா, பேரைக் கேட்டாலே குஷியா இருக்கே:)

அன்புடன்

சீதாலஷ்மி

மாவா கோயா குஜியா பெயரே படித்தவுடன் சிரிப்பு வருது.குறிப்பும்,பெயரும் ரொம்ப‌ பிடிச்சிருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

டிப் சூப்பர்.ஆனால் பேர்தான்நீள்மா வாய்லயே வரமாட்டுக்கு.இதை செய்து விருந்தினர்க்கு கொடுத்தா பேர் கேட்டால் என்னன்னு சொல்ல.இந்த மாதிரி பேரேல்லாம் உங்களுக்குத்தான் வரும்போல(சும்மாதான்).கட்டாய ம் செய்கிரேன் வனிக்கா.

மாவா கோயா பெயரை பார்த்தவுடனேயே ரொம்ப பிடிச்சிருக்கு, வித்தயாசமாகவும் உள்ளது, படங்களும் அருமையாக உள்ளன, எங்க வீட்ல சோமோசா தான் செய்வோம் அதுவும் இது மாதிரி தான் இருக்கும். சூப்பர் பா

அன்பு வனி,
இந்த‌ கிறிஸ்மஸுக்கு நான் இதுதான் செய்தேன். துணைக்கும் ஆளில்லாமல் அரை கிலோ மாவு தானேன்னு ஆரம்பிச்சுட்டு திணறிட்டேன். ஒரு வாரம் தாங்கும் வனி. தேங்காய் மட்டும் நான் டிரை கோக்கனட் பயன்படுத்தினேன். நல்ல‌ அழகா செய்திருக்கீங்க‌ வனி.

அன்புடன்,
செல்வி.

எங்க அம்மா செய்யும் சோமாஸ் போல உள்ளது. வறுத்த ரவை, தேங்காய், சீனி வைத்து செய்வாங்க.
இதில் பால் கோவா ஃபில்லிங்க் வைத்தால் எப்படி இருக்கும் ? சீக்கிரம் கெட்டுப் போயிடுமோ? படங்கள் பார்க்க அருமை. கொஞ்சம் வேலைப் பாடுதான். நேரம் கிடைக்கையில் செய்துப் பார்க்கிரேன்.

அச்சச்சோ வனி .நான் ரொம்ப‌ லேட்டு. பார்க்கவே சூப்பரா இருக்கு . செம‌ அழகா இருக்கு. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எனக்கு எல்லாமே வேணும் சொல்லிட்டேன்

Be simple be sample

மாவா / கோயா குஜியா குறிப்பு வித்தியாசமானதா இருக்கே நல்ல அழகான படங்களுடன் சரியான விளக்கமும் சொல்லி இருக்கீங்க வனிதா.

மாவா குஜியா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

உமா... முதல் பதிவுக்கு மிக்க நன்றி :) கொடுத்துட்டேன்... இனி பங்கு கொடுப்பது உங்க வேலை ;)

கதீஜா... மிக்க நன்றி :) வட இந்திய முறை கோயா பயன்படுத்துவது.

இளையா... மிக்க நன்றி :) உண்மை தான், நம்ம ஊர் சோமாசி போலவே தான்.

திவ்யா... மிக்க நன்றி :) ட்ரை பண்ணுங்க.

ரேணு... மிக்க நன்றி :) உமா வெச்சிருக்காங்க, பங்கு வாங்கிடுங்க ;)

உமா குணா... மிக்க நன்றி :) சோமாஸ் மாதிரியே தான், ஸ்டஃபிங் தான் வேற. வனிதா குறிப்புன்னா முகப்பில் பார்த்தாலே தெரியனும் தானே உமா ;) ஹஹஹா. தேன்க்யூ.

சீதா... சீரா ஒரே மாதிரி ஒரு சப்பாத்தி கூட தேய்க்க வராது எனக்கு. ;) எல்லாம் புட்டு குழல் அடியில் உள்ள பாத்திரத்தின் உதவி தான். குஜியா குஷியா செய்து சாப்பிடுங்க.

முசி... மிக்க நன்றி :) நான் வைக்கலிங்க பேரு... யாரோ வெச்சதை நான் செய்து சாப்பிட்டேன். ஹஹஹா.

இனியா... மிக்க நன்றி :) மாவா அல்லது கோயா தானே... கோயா குஜியான்னு சொல்றது ஈசி தானே இனியா? உங்க அளவு சின்னதா இனிப்பா பேரு வைக்க இந்த குறிப்பை கண்டு பிடிச்சவங்களுக்கு தெரியலயே ;)

பாலபாரதி... மிக்க நன்றி :) செய்து பாருங்க, பேரை போலவே சுவையும் பிடிக்கும். சோமாசியே தான் பாரதி. ஒவொரு ஊரில் ஒவ்வொரு விதமான ஸ்டஃபிங், ஒவ்வொரு பேரு. இது அப்படி ஒன்னு ;)

செந்தமிழ்செல்வி... நீங்க மட்டும் நடுவில் காணாமல் போகாம இருந்திருந்தா போன டிசம்பர்லயே அனுப்பிருப்பீங்க குறிப்புன்னு சொல்லுங்க. ;) நீங்க குறிப்பு புதுசா இருக்குன்னு பதிவிட்டிருந்தா தான் ஆச்சர்யம் எனக்கு. அறுசுவையில் வரும் குறிப்பில் 99% உங்களுக்கு தெரிஞ்ச நீங்க செய்யும் குறிப்பு தானே செல்வி. உங்க வயசும் உங்க அனுபவமும் அப்படி. நாங்க எல்லாம் ஜூனியருங்க. ஏதோ கத்துகுட்டிங்க, தெரிஞ்சதை செய்யறோம்... என்னை போல புதுசா தெரியாம கத்துக்குறவங்களுக்கு உதவுமேன்னு தான் :) நான் அதிகமா செய்து வைக்கிறதில்லை, அதனால் ஃப்ரெஷ் தேங்காய் சேர்த்தால் சுவை பிடிக்கும், அதுவும் கூட ஆப்ஷனல் தான், இல்லாமலே செய்யலாம். பதிவுக்கு மிக்க நன்றி.

வாணி... மிக்க நன்றி :) பால் கோவா தான் ஆனாலும் அத்தனை சீக்கிரம் கெடாது வாணி. நான் 2 நாள் தான் வெச்சிருந்தேன், அதுக்குள்ள தீர்ந்து போச்சு. ஆனா ஒரு வாரம் வரை நிச்சயம் கெடாதுன்னு தான் எனக்கு சொல்லிக்கொடுத்தவங்க சொன்னாங்க. ட்ரை பண்ணிப்பாருங்க.

ரேவ்ஸ்.. பங்கு என்னை கேட்கப்புடாது... உமாகிட்ட கேளுங்க ;) நன்றி ரேவ்ஸ்.

காயத்திரி... ட்ரை பண்ணுங்க காயத்ரி, சுவையும் பிடிக்கும். மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்பவும் போல‌ படங்கள் பளிச். அப்பிடைசிங்காக‌ உணவு பதார்த்தங்களை ஃபோட்டோ எடுத்து போட்டு நாக்கில் நீர் ஊற‌ வைப்பதற்கு உங்களுக்கு நிகர் நீங்களே தான்.உணவு முதலில் கண்களுக்கு விருந்தாகனும். கோவாவில் செய்து இருப்பது இப்ப‌ தான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு வனி,
சாரி! நான் தப்பா எதுவும் சொல்லிட்டேனோ? எனக்கும் தெரியாத குறிப்புகள் எவ்வளவோ இருக்கு. முக்கியமாக‌ கேக் வகைகள், ரொம்ப‌ எனக்கு தெரியாது. கொஞ்சம் பயமும் கூட‌...நான் இப்ப‌ தான் நிறைய‌ வகைகள் செய்றேன். நீங்கள் எல்லாம் இப்பவே செய்யறீங்களே!

தப்பா எதுவும் சொல்லி இருந்தா மன்னிக்கவும்.

அன்புடன்,
செல்வி.

நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா? இல்லையே... உங்களுக்கு நிறைய தெரியும் என்று உண்மையை தானே சொல்லிருக்கேன் :) கோபம் எல்லாம் வந்தா வனி நேரா திட்டிடுவேன்... ;) ஸ்மைலி போட்டு மெசேஜ் எல்லாம் போட எனக்கு வரவே வராது செல்வி. நம்புங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனி,
அப்படின்னா சரி வனி தப்பா எடுத்திகிட்டீங்களோன்னு பயந்துட்டேன்.

நிறைய‌ எல்லாம் தெரியாது வனி. ஏதோ கொஞ்சம் தெரியும் அவ்வளவுதான்.

அப்ப‌ நானும் ஸ்மைலி தான்:)))

அன்புடன்,
செல்வி.

மன்னிச்சு மன்னிச்சு, மெசேஜ் படிச்சேன் பதில் போட மறந்துட்டேன். :( சாரிமா. உங்களை விடவா நல்லா படமெடுக்கறேன்? அப்படி தோனல ரம்யா. இன்னுமே உங்க மீன் வறுவல் எனக்கு நினைவிருக்கு. அத்தனை அழகா படங்கள் போடுவீங்களே... உங்களையும் உங்க குறிப்புகளையும் நான் மட்டுமல்ல அறுசுவையே ரொம்ப மிஸ் பண்ணுது. சீக்கிரம் பெரிய ஹிட் குறிப்போட வரனும். :) சென்னையில் தான் இருக்கேன், பேசுறேன் நாளை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா மாவா குஜியா செஞ்சு சாப்பிட்டாச்சு... மழைக்கு சூடா சுவையா இருந்துச்சு... முதல்ல‌ கோயா நானே தயார் செஞ்சேன் நல்லா கெட்டியா தான் செஞ்சேன் இருந்தாலும் ஸ்டபிங் ஹல்வா மாதிரி வ‌ந்தது... ஆனாலும் டேஸ்ட் சூப்பர்... குஜியா ஆறின‌ பின் பூரி மாதிரி சாப்ட் ஆகிடுச்சு... மொறுமொறுனே இல்லை... நீங்க‌ சொன்ன் மாதிரியே தான் செஞ்சேன் என்ன‌ மிஸ்டேக்னே தெரியவில்லை... போட்டோ முகனூலில்.....

எண்ணெய் சூடு மிதமா இல்லன்ன அப்படி ஆகும். டோண்ட் வொரி இன்னும் இருந்தா அதை மீண்டும் மிதமான தீயில் ஒவ்வொன்னா போட்டு எடுங்க. அப்பறம் மறுபடி சாஃப்ட் ஆகாது. கோயா கொஞ்சம் சாஃப்ட் ஆகும் தான், உங்களுக்கு அப்படி இல்லாம வேணுமானா இன்னும் கொஞ்சம் பொடி வகை கூடுதலா சேருங்க. ட்ரையா கிடைக்கும். :) செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. ஃபேஸ்புக்ல படம் பார்க்கலயே பிரியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா