துப்பறிகிறேன் நான்! - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ் - அறுசுவை கதை பகுதி - 28651

Stories

துப்பறிகிறேன் நான்! - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்

வாண்டுகள் இருவரையும் பள்ளிக்கும், ஆபிஸுக்கும் (அவரைத் தான்) அனுப்பிவிட்டு சிறிது (ஹி.. ஹி 2 1/2 மணி நேர தூக்கம்) ஓய்வுக்கு பின்,

சாதம் சமைத்து விட்டு, வனி சிஸ்டரின் கத்தரிக்காய் குழம்பு செய்ய ஆரம்பித்தேன். (குழம்பு செலெக்சன்: நிறைய கமெண்ட் நிறைய சுவை, கத்தரிக்காய் குழம்பு 42 கமெண்ட் வாங்கி இருந்தது. (குறிப்பு: அப்புறம் தான் பார்த்தேன், அதில் 21 வனி சிஸ்டரோடது)). குழம்பு கொதித்து வரும் வாசனையோடு கவிதையும் சேர்ந்து வந்தது.

கத்தரிக் குழம்பு...
கமகம வாசனை..
கணவரோடு சேர்ந்து,
கணப்பொழுதில் சாப்....

அய்யய்யோ... வாசனை நின்றுவிட, கவிதையும் (ம்ம் இதெல்லாம் ஒரு கவித - அறுசுவை தோழிகள் மைண்ட் வாயிஸ்) நின்றது. ஏதோ மசாலா மிக்ஸிங் ப்ராப்ளம்.

ம்ம்ம்.... நமக்கு வழக்கமானது தான். வந்த வரை உள்ளதை எழுதி வைத்துவிடலாம். மிச்சத்தை அடுத்த கத்தரிக்காய் குழம்பில் பாத்துக்கொள்ளலாம். நோட்டு, பேனாவிற்காக ஹாலில் உள்ள அலமாரிக்கு சென்றேன்.

நோட்டு இருக்க பேனா மிஸ்ஸிங். மனசு பதறியது எனக்கு. ரொம்ப காலமாய் அந்த பேனாவைத் தான் நான் பயன் படுத்துகிறேன். என்னைப் போல் இல்லாது, கொஞ்சம் குண்டாக ஒரு ப்ளு, ஒரு பச்சை, ஒரு சிவப்பு, ஒரு கருப்பு என மொத்தமாய் ஒரே பேனாவிற்குள் நான்கு இருக்கும்.

மளிகை லிஸ்ட் எழுதும் போது அவசரத் தேவையான பொருளை சிவப்பில் குறிப்பதும், சோகக் கவிதையை கருப்பில் எழுதவும், புத்தகப் படிக்கும் போது பிடித்தவற்றை பச்சையால் அன்டர்லைன் செய்வதும் வழக்கம்.

சோகத்தை மூட்டை கட்டிவிட்டு, எனது துப்பறியும் மூளையைத் தூண்டி விட்டேன்.

சந்தேக நபர் 1: நான்

நிச்சயமாக நான் தவறுதலாய் வேறு இடத்தில் வைத்திருக்க வாய்ப்பில்லை. நான் அவ்வளவு ஞாபகமறதி,.. ச்ச்சி... ஞாபகசக்தி ஆளாக்கும்.

சந்தேக நபர் 2: என் கணவர்

அவருக்கு அவர் பேனாவையே எடுக்க சோம்பேறித்தனம், இதில் எப்படி நம் பேனாவை எடுப்பார். ஒருவேளை... ச்ச்சி... நம்ம சோம்பேறித்தனத்தையாவது சந்தேகப்படலாம். அவருடையதை சந்தேகப்பட வாய்ப்பேயில்லை.

சந்தேக நபர் 3: குட்டி வாண்டு

அதற்கு அலமாரியே எட்டாது. இதில் எப்படி அது பேனாவை எடுக்க?

சந்தேக நபர் 4:

இவர்கள் மேல் எனக்கு பயங்கர சந்தேகம். அவர்கள் எங்கள் வீட்டு மாமரத்தில் குடி கொண்டிருக்கும் ஆரஞ்சு நிற எறும்புகள்.

ஏனென்றால், (கொசுவர்த்தி சுருள் ஒன்றை இங்கே போடவும்) ஒருமுறை கேக் ஒன்றை சாப்பிட எண்ணி (செய்முறை உபயம் அறுசுவை டீம்) ஹால் டேபிளில் வைத்து பாதி சாப்பிட்டவள் அப்படியே சிறிது கண்ணயர்ந்தேன் ( ஹி.. ஹி .தூக்கம் நமக்கு பிடித்த ஒன்று).

அந்த சமயத்தில் அந்த ஆரஞ்சு எறும்புகள், எதிர் வீட்டு மாமர எறும்புத் தோழிக்கு பிறந்த நாள் கொண்டாடி மீதி கேக்கை காலி செய்தன. விழித்த எனக்கு வந்ததே கோபம் (பின்ன எப்படிங்க... என்னைக்காவது ஒருநாள் தான் நாம செய்றது கேக் மாதிரியாவது வரும்). உடனடியாய் பேனாவை எடுத்து மளிகை லிஸ்டில் சிவப்பு நிறத்தில் எறும்பு மருந்தை எழுதினேன். அதை ஒரு சில எறும்புகள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.

அவைகள் தான் இப்போது தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்க வேண்டும். உடனே எனது பேனாவை மீட்டுவர எண்ணி, போர் வீராங்கனையாய் எறும்பு மருந்தை கையில் எடுத்து, வாசல் வரை சென்றவள், கதவை சாத்த எத்தனிக்கையில் அதை பார்த்தேன் (துப்பறியும் மூளை).

ஹால் டேபிள் சேர் நான்கில் ஒன்று அதன் 90 டிகிரியில் இருந்து, அதன் இடுப்பை ஒரு பக்கமாய் சரித்து உட்கார்ந்திருந்தது. ஏன், எதற்கு, எப்படி? அந்த சேரிலிருந்து லேசான மூன்று கோடுகள் (தூசுகளால்) அது அலமாரி பக்கம் போய் வந்த சாத்தியக் கூறுகளை காட்டியது. அலமாரியை போய் ஆராய, அலமாரியில் நோட்டு இருந்த தளத்தில் நான்கு பிஞ்சு விரல் தடம் கண்டு பிடித்துவிட்டேன் (பெருமை தான் 10 நாள் வீட்டை துடைக்காமல் போட்டதும்) குட்டி வாண்டு... காரணம்? எதற்கு எடுத்திருப்பாள்? வரட்டும்...

வந்தேவிட்டாள் குட்டி வாண்டு... அவளை ஃப்ரெஷ் ஆக்கிவிட்டு, பள்ளி கதைகள் பேசினோம்.

மெதுவாய் கேட்டேன், அம்மா பேனா எங்கே என்று?

பப்பா கேட்டார் என்றாள்..

ஏன்?

திருதிரு வேண்டு முழித்தவள், "ப்ராக்ரெஸ் கார்டு சைன்" முறைத்தேன் அவளை. அப்படியே திரும்பி அவள் அப்பாவையும்.

அவர் "ஐயோ நான் பார்த்தேன். ஆனா சைன் போடல. அம்மாவிடம் காட்டுன்னு சொல்லிட்டேன்".

“எடு ப்ராக்ரெஸ் ரிப்போர்ட்டயும், ம்ம் பேனாவையும்” கோபமாய் நான். ப்ராக்ரெஸ் கார்டு தந்தாள். பார்த்தால் ரேங்க் குறைந்திருந்தாள்.

“இதனால என்னடா கண்ணா, இந்த மன்த்லி டெஸ்ட் அப்ப உனக்கு சளி, தும்மல்னு ரொம்ப கஷ்டபட்ட. படிக்க முடியல. அதனால மார்க் குறைஞ்சிருக்கு. விடு நெக்ஸ்ட் மன்த் பார்த்துக்கலாம்”.

பேனாவை எடுக்க ஒரு நோட் எடுத்தாள். அப்படியே நோட்டோடு வாங்கினேன். "இல்லம்மா நானே பேனா எடுத்து தர்றேன்மா". கெஞ்சினாள்.

நானே எடுத்துகிறேண்டா செல்லம். நோட்டை திறந்து பார்த்தால், அவளது பாணியில் என் கையெழுத்து முயற்சிகள்.

அவளிடம் காட்டி "இது என்ன?"

"பப்பா சைன் போடல, நீங்க அடிப்பீங்கன்னு" பயத்துடன் மழலையில் கூறினாள்.

அவளது முயற்சியில் சிரிப்பு வந்தது எனக்கு. பேனாவின் தடிமன் அவள் கைக்குள் அடங்கி இருக்காது. எழுத்தாணி போல் உபயோகித்திருக்க வேண்டும். அம்மா அடிக்க மாட்டேன். இனி இப்படிச் செய்யக்கூடாது என்ன என பாசமாய் கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.

போ... செப்பல் போட்டுட்டு, பார்க்ல அப்பாகூட விளையாடிட்டு வா. ஆசையாய் கட்டிக் கொண்டவள், பின் செப்பலுக்காக பின்பக்கம் ஓடினாள். பேனாவை எடுத்து முத்தமிட்டேன்.

“மகள் மாதிரி, பேனா மேலயும் பாசமா” என்றார் அவர்.

" இல்லை, இது என் மகளைத் தவறு செய்ய விடாமல் தடுத்ததற்கு" என்றேன்.
நன்றி ,நன்றி, கதையை வெளியிட்ட அட்மின் குழுவுக்கு.

கதையில் இது எனது முதல் முயற்சி, வெளியிட்ட அட்மின் குழுவுக்கு மீண்டும் நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

கிறிஸ் அக்கா, ரொம்ப‌ அருமையான

கிறிஸ் அக்கா,
ரொம்ப‌ அருமையான எதார்த்தமான‌ கதை, நீங்க‌ சொல்லி இருக்க‌ விதம் பயன்படுத்தின‌ வார்த்தைகள் எல்லாமே அழகு........

\\\90 டிகிரியில் இருந்து, அதன் இடுப்பை ஒரு பக்கமாய் சரித்து உட்கார்ந்திருந்தது/// படித்தேன் சிரித்தேன்...........

//இந்த சேரிலிருந்து லேசான மூன்று கோடுகள் (தூசுகளால்) அது அலமாரி பக்கம் போய் வந்த சாத்தியக் கூறுகளை காட்டியது. அலமாரியை போய் ஆராய, அலமாரியில் நோட்டு இருந்த தளத்தில் நான்கு பிஞ்சு விரல் தடம் கண்டு பிடித்துவிட்டேன் // என்னா மூளை என்னா மூளை.............

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

க்றிஸ்

கதை நல்லா தான் வந்திருக்கு.
நல்ல‌ நகைச்சுவையோடு படைத்திருக்கீங்க‌.
முதல் கதையா? குட்.
வாழ்த்துகள்

க்றிஸ்

முடியல... முடியல. நான் தான் சொன்னேனே... எனக்கு ஒருவரை உங்க எழுத்தும் பதிவும் ரொம்பவே நியாபகப்படுத்துதுன்னு ;) இப்பவும் அதே தான். அந்த ஒருவர் யாருன்னு அந்த ஒருவருக்கு தான் புரியும். ஹஹஹா. கதை ரொம்ப நல்லா வந்திருக்கு... நல்ல நகைச்சுவை வொர்கவுட் ஆகுது உங்களுக்கு. இதுல வனி எங்க வந்தேன்? குறிப்பு கொடுத்ததாலயா?? ;) பாவம் வனி. அதிக பின்னூட்டம் உள்ள குறிப்பெல்லாம் இனி தேடாதீங்க... பல நல்ல குறிப்புகள் சீண்டுவார் இல்லாமல் அறுசுவையில் இருக்கு... ஒன்னுமில்லாத குறிப்பெல்லாம் பக்கம் பக்கமா கதை எழுதியே ஃபில் ஆகி இருக்கும் ;)

படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.... கதைகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள் பல. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்

முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துகள், நல்ல நகைச்சுவையான கதை சூப்பர்.

கிறிஸ்மஸ் மேடம்,

கதை ரொம்ப நல்லாயிருக்குங்க ...
நகைச்சுவையோடு சொன்ன விதம் மிக அருமைங்க...
வாழ்த்துக்கள் ங்க...

நட்புடன்
குணா

நன்றி சுபி தங்கச்சி,

\\என்னா மூளை என்னா மூளை\\ நாங்க அவ்வளவு அறிவாளியாக்கும். நன்றி.., நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

Nikila நன்றி

நன்றி.., நன்றி, படித்ததற்கும், வாழ்த்தியதற்கும்.

உன்னை போல் பிறரை நேசி.

நன்றி வனி sis.

\\எனக்கு ஒருவரை ரொம்பவே நியாபகப்படுத்துதுன்னு\\ அம்மணி யாரோ? \\வனி எங்க வந்தேன்?\\ 700 சமையல் குறிப்பு தாண்டுதே .!!!! எனக்கு வராதது. படித்து, ரசித்து, சிரித்து, வாழ்த்தியதற்கும் நன்றி

உன்னை போல் பிறரை நேசி.

நன்றி....நன்றி.

பாலபாரதி தோழி படித்து, வாழ்த்தியதற்கு நன்றி....நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.