ஊத்தாப்ப சாண்ட்விச்

தேதி: June 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (3 votes)

 

இட்லி அரிசி - ஒரு கப்
வெள்ளை உளுந்து - கால் கப் (நான்கில் ஒரு பங்கு)
வெந்தயம் - 2 தேக்கரண்டி
கேரட் - 2
பெரிய வெங்காயம் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசி மற்றும் உளுந்தை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். (அரிசியைத் தனியாகவும், உளுந்துடன் வெந்தயத்தைச் சேர்த்தும் ஊற வைக்கவும்).
ஊறியதும் அரிசி மற்றும் உளுந்தை நன்கு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் மிதமாக உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து தோசைக்கல்லை காயவிட்டு அரைத்த மாவை எடுத்து சிறு சிறு வட்டங்களாக மூன்று ஊத்தாப்பங்களை ஊற்றவும். அதில் இரண்டு ஊத்தாப்பங்களின் மீது துருவிய கேரட்டையும், ஒன்றில் நறுக்கிய வெங்காயத்தையும் தூவி எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும். பிறகு திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
முதலில் கேரட் தூவிய ஊத்தாப்பத்தை வைத்து, அதன் மேல் வெங்காயம் தூவிய ஊத்தாப்பத்தை வைக்கவும். அதற்கும் மேல் கேரட் தூவிய ஊத்தாப்பத்தை வைத்து மெதுவாக அழுத்தவும்.
கத்தியை தண்ணீரில் நனைத்துக் கொண்டு அடுக்கி வைத்துள்ள ஊத்தாப்பத்தை துண்டுகள் போட்டு பரிமாறவும். சுலபமாகச் செய்யக்கூடிய சுவையான ஊத்தாப்ப சாண்ட்விச் தயார்.

இதில் கேரட்டிற்கு பதிலாக பனீர் கூட சேர்க்கலாம். (அல்லது) விருப்பமான காய்கள் சேர்த்தும் செய்யலாம்.

குட்டீஸுக்கு டிஃபனாகக் கொடுத்துவிடலாம். விரும்பி உண்பார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஈசியான குறிப்பு. நானும் செய்து பார்க்கிறேன்.. வெங்காயம், கேரட்டை வேக வைக்காமலேயே செய்யலாமா?

-> ரம்யா

ஈசி குட்டீஸ் குறிப்பு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல ஐடியா சூப்பர்

ஊத்தாப்ப சாண்ட்விச் சூப்பர், தினமும் இட்லி தோசை செய்யவே ரொம்ப கஷ்டமா இருக்கு அதற்கு பதிலாக இந்த மாதிரி சாண்ட்விச் செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள், இந்த குறிப்பை கொடுத்தற்கு மிக்க நன்றி.

சூப்பர் ரெசிபி. நல்லாருக்கு ரேணு. :-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நானும் இதேகுறிப்பு அனுப்ப போட்டோ எடுத்திருக்கிறேன்... என் மகனின் fav தோசை...

பசங்களுக்கு குடுத்தனுப்ப நல்ல அயிட்டம், இதையே புளித்த மாவிலும் செய்யலாம்தானே

வேகவைக்க‌ வேண்டிய‌ அவசியமில்லைப்பா. அப்படியே துருவி,பொடியாக‌ நறுக்கி போட்டால்போதும். மாவு வேகும் பதத்தில் இதுவும் ஆவியில் வெந்திடும், அதனை சாப்பிட‌ நல்லா இருக்கும். செய்து பாருங்க‌.

தாங்ஸ் வனி. இனியா இப்படிஏதாவது செய்தால்தான் காய்கள் சீக்கிரம் உள்ளே போகிறது.

செய்து பாருங்க‌ நல்லா இருக்கும். பிறகு அடிக்கடி செய்வீங்க‌.

உமா தேங்க்ஸ்பா, பிரியா எங்கள் குட்டீஸ்கும் இது பிடிக்கும்பா.
அனு,ஆமாம் டிபனில் அழுங்காம‌ எடுத்து சாப்பிடுவாங்கன்னு நாம‌ நினைப்போம்(அவங்க‌ லேயரை பிரித்துதான் சாப்பிடுவாங்க‌).புளித்தமாவில் கொஞ்சம் நவைபோட்டு செய்யுங்க‌.நான் இன்னும் செய்ததில்லைப்பா.