தட்டை

தேதி: August 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

புழுங்கலரிசி (இட்லி அரிசி) - ஒரு கப்
பொட்டுக்கடலை - கால் கப்
கடலைப்பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
பெருங்காயப் பவுடர் - கால் தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி (அ) சுவைக்கேற்ப
தேங்காய் துருவல் - ஒன்றரை மேசைக்கரண்டி
கறுப்பு (அ) வெள்ளை எள் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
ரீஃபைண்ட் ஆயில் - பொரிப்பதற்கு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசியையும், கடலைப்பருப்பையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி ஊறியதும் தண்ணீர் ஊற்றி 3 முறை களைந்துவிட்டு, கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் போட்டு சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். ஊறிய கடலைப்பருப்பை நன்றாகக் களைந்து வைக்கவும்.
பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்துச் சலித்து வைக்கவும்.
அகலமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவைப் போட்டு, அதனுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, வெண்ணெய் (ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்), ஊற வைத்த கடலைப்பருப்பு, எள், மிளகாய்த் தூள், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் மற்றும் பெருங்காயப் பவுடர் சேர்த்துப் பிசையவும்.
பிசையும் போது மாவு மிகவும் தளர்வாக இருந்தால் அரை கரண்டி பச்சரிசி மாவு (தேவைப்பட்டால்) சேர்த்துப் பிசையலாம்.
ஒரு ப்ளாஸ்டி ஷீட்டில் எண்ணெய் தடவி வைக்கவும். (எண்ணெய் வரும் பாக்கெட்டை நறுக்கி, அதன் உள்பக்கத்தை இதற்கு பயன்படுத்தலாம்). கைகளில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி ப்ளாஸ்டிக் ஷீட்டில் தட்டையாகத் தட்டவும். (மிகவும் மெல்லியதாகவும் இல்லாமல், மொத்தமாகவும் இல்லாமல் ஒன்று போல தட்டி வைக்கவும்).
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீராகச் சூடேறியதும் தீயைத் தணித்து வைத்து, தட்டி வைத்திருக்கும் தட்டைகளை எடுத்து எண்ணெயில் போட்டு, தீயை அதிகரித்து மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும். சுவையான, மொறுமொறுப்பான தட்டை தயார்.

தட்டையை எண்ணெயில் போட்டுப் பொரிக்கும் போது பொறுமையாக உடையாமல், பிய்ந்து விடாமல் கவனமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முதல்ல வந்ததால தட்டை தட்டோட எனக்கு தான் :) சூப்பர். நானும் செய்ய போறேன், போன முறை ஊருக்கு போனப்போ அம்மா கூட சேர்ந்து செய்தேன், தனியா செய்ததில்லை.

லாவி கூட வந்தப்போ நீங்க தந்த ரிப்பன் பக்கோட நினைவு வருது ;) அடுத்த முறை பெங்களூர் வந்தா மறக்காம எனக்கு தட்டை கொண்டு வாங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாம்மா தட்டைய பார்த்தும் சாப்பிடனும் போல இருக்கு,எங்க அம்மா தேங்காய் சேர்க்க மாட்டாங்க,அடுத்த முறை செய்யும் போது சேர்த்து செய்து பார்க்கிறோம்.

சீத்தாம்மா, தட்டை கடைசி படம் சூப்பர். தட்டையே பூரி மாதிரி பொவ்விருக்கு!! செம கை பக்குவம்..

நாம செஞ்சா கடிக்க வருமா, அப்படின்னு நினைச்சிக்கிட்டே வந்த எனக்கு, கடைசில பெரிய அதிர்ச்சி. எல்லாம் உங்க குறிப்பு பாத்துதான். \\தட்டையை எண்ணெயில் போட்டுப் பொரிக்கும் போது பொறுமையாக உடையாமல், பிய்ந்து விடாமல் கவனமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்\\ அவ்வ்வ்வ்.. நம்மள கலாயிக்கிரான்களோ?

உன்னை போல் பிறரை நேசி.

ரொம்ப அருமையா இருக்கு. எப்போதோ செய்த நியாபகம். ஆனால் அழுத்தமாக போய்விட்டது.இவ்வாறு முயர்சி செய்து பார்கிரேன்.

இட்லி அரிசில தான் செய்யனுமா? எனக்கு இது செய்து சாப்பிடனும்னு ரொம்ப நாள் ஆசை...

சீதாம்மா தட்டை சூப்பர். சீக்கிரமா செய்துட வேண்டியதுதான். சாப்பிட ஆசையா இருக்கு. வாழ்த்துக்கள் :)

Kalai

தட்டை சூப்பர் ,நான் தேங்காய். சேர்த்து செய்ததில்லை

Be simple be sample

சீத்தாம்மா தட்டை,
எனக்கு தட்டைனா ரொம்ப‌ பிடிக்கும், கண்டிப்பா செய்து பார்க்கிறேன்
1ஸ்ட் டைமே கரெக்டா வருமா சீத்தாம்மா,

சீத்தாம்மா அப்படியே இந்த‌ அஞ்சறை பட்டி முறுக்கு
அதை இரயில் கட்டிடம்னு கூட‌ சொல்வாங்க‌, என்ன‌ பேரோ சொல்வாங்க‌ அது எப்படி செய்றதுனு சொல்லுங்க‌ சீத்தாம்மா எனக்காக‌ .........

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அன்பு வனி,

இந்தத் தட்டை தட்டினதே பெங்களூரில்தான்:)

நானும் இதை செய்து, வெகு நாட்களாகி விட்டது.

அவசியம் செய்து பாருங்க‌. முதல் பதிவுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அமுதவல்லி,

தேங்காய் சேர்த்துத் தட்டினால், வாசமாக‌ இருக்கும், சுவையும் கூடும்.

செய்து பார்த்து சொல்லுங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கிறிஷ்மஸ்,

தட்டை மகள் வீட்டில் செய்தேன், அதாவது அவர் செய்தார், நான் கூட‌ மாட‌ வேலை செய்தேன்.

உங்களைக் கலாய்க்கலை, என் அனுபவம் பேசுது:)

முன்பெல்லாம் சுளகின் பின் புறத்தில், வெள்ளைத் துணியை விரித்து, அதில் தட்டுவாங்க‌. கொஞ்சம் ஈரம் உலர்ந்து, தட்டை பிய்ந்து போகாமல் எடுக்க‌ வரும்.

இப்ப‌ ப்ளாஸ்டிக் ஷீட்டில் தட்டுவது எளிதாக‌ இருக்கு, ஆனா, எடுக்கறப்ப‌, ரொம்பப் பொறுமை வேண்டியிருக்கு.

நல்லா மொறு மொறுப்பாக‌ வந்தது. முதலில் கொஞ்சமாக‌ செய்து பாருங்க‌. அப்புறம் அளவைக் கூட்டிக்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

//இப்ப‌ ப்ளாஸ்டிக் ஷீட்டில் தட்டுவது எளிதாக‌ இருக்கு, ஆனா, எடுக்கறப்ப‌, ரொம்பப் பொறுமை வேண்டியிருக்கு.// - போன முறை ஊருக்கு போனப்போ அம்மா பண்ணாங்க... முதல்ல ப்ளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி தட்டிட்டு அதை அப்படியே ஒரு துணியில் கவிழ்த்து பேப்பரை எடுத்துட்டாங்க. ஒரு 10 தட்டை வரை இப்படி துணி முழுக்க தட்டி முடிச்ச பின் சுட ஆரம்பிச்சாங்க. முதல்ல தட்டிய தட்டையில் இருந்து வருசையா எடுக்க சுலபமா ஈரமில்லாம நல்லா வந்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு நித்யா,

பொட்டுக்கடலை மாவு சேர்த்திருப்பதால், மொறுமொறுப்பாக‌ வரும். செய்து பாருங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு தோழிகளுக்கு

ஒரு பதிவு போட்டு, கிளிக் பண்ணினா, ரெண்டு ரெண்டு தடவை பதிவாகுது.

என்ன‌ செய்யறது.

எல்லோருக்கும் நன்றிப்பா, தனித்தனியா பதிவு போட‌ முடியல‌.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா ஊர்ல‌ இருக்கும்போது இதே முறையில் வறுத்து அரைத்த‌ உளுந்து மாவும் சேர்த்து அடிக்கடி முறுக்கு செய்வேன் (தேங்காய், கடலைபருப்பு & கறிவேப்பிலை சேர்க்காமல்). தட்டை செய்ய‌னும்னு ரொம்ப‌ நாளா ஆசை, ஆனா செய்ததில்லை. உங்க‌ குறிப்பை பார்த்தவுடன் எனக்கு நான் செய்யும் முறுக்கு ஞாபகம் வந்துடுத்து, தட்டையும் இதே முறையில் செய்யலாமென்று இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். தட்டையை செய்துடவேண்டியதுதான்.
மிக்க‌ நன்றி.

தட்டை சூப்பர் உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி்

கோகுலாஷ்டமிக்கு இதுதான் செய்தேன் ,,,சுப்பர்ரோ சூப்பர் ,,,முதன் முதலில் நான் செய்த சினாக்ஸ் ,,,எப்பொழுதும் அம்மா செய்ததுதான் ,,இங்கு அமெரிக்காவில் அம்மா இல்லையே ,,,நான்தான் செய்தாகணும் ,,,நல்லா சூப்பரா வந்ததில் சந்தோசமோ சந்தோசம் ,,,,உங்ககிட்ட பேசிகிடேத்தான் செய்தேன் ,,அம்மா சூப்பர் சூப்பர் என்று ,,,லவ் யூ அம்மா @

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அன்பு ஸஹீதா பானு,

இட்லி அரிசி அல்லது பச்சரிசி மாவு உபயோகித்தும் செய்யலாம். நன்றாக வரும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அனு,

அறுசுவையில் சுலப முறுக்கு குறிப்பு இருக்கு. ரொம்ப ஈசியாக இருக்கும். எங்கள் வீட்டில் எல்லோருமே இப்ப அந்தக் குறிப்பின்படிதான் செய்யறோம். ரொம்ப நல்லா இருக்கும்.

தட்டை செய்து பார்த்து சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அனு ரவீந்திரன்,

செய்து பார்த்தீர்களா? பிடிச்சிருந்ததா. மிக்க மகிழ்ச்சி. பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அஷ்வதா,

ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு. என் மகளிடமும் உங்க பதிவைப் பற்றி சொல்லி மகிழ்ந்தேன்.

இந்த முறை குறிப்புகள் எல்லாம், அடிப்படையான, எளிமையான, ட்ரெடிஷனல் குறிப்புகள்தான் அனுப்பியிருக்கேன்.

புதுமையாக எதுவும் இல்லையே, எல்லோருக்கும் பிடிக்குமான்னு சந்தேகம் இருந்தது. நீங்க செய்து பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகப்படுத்துவதாகவும் இருக்கு. மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி