பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

வணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

எனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு "Ratatouille", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான "புட் கிரிட்டிக்". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.

என்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்!

இருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........

//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //

மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.

குறிப்பு : தலைப்பை தந்த தோழி "Jayaraje" க்கு நன்றி.

இது மட்டும்மா நடுவரே . எங்க அணிதோழி சொன்னமாதிரி நாங்க எங்க நாக்குக்கும் ,வயிறுக்கும் வஞ்சனை பண்ணற தே இல்ல .எங்க ரசனைக்கு ஏற்ப செய்துசாப்பிட்டு பிள்ளைங்களையும் பழக்கபடுத்திருக்கோம் நடுவரே .
எங்க தலைவர் எதுக்கு போட்டாலும் சாப்பிட்டு எழுந்து போய்டுவாரு . நாங்கதான் சரியான காம்பினேஷனோட தயாரித்து ரசித்து சமைத்து குடுத்தா இப்ப பசங்க கூட நல்லா சாப்பிடறாங்க . இதல்லாம் யாரால நடுவரே

Be simple be sample

என்னொடா அணி தேர்வும் ஆண்களே.

சாப்பாட‌ ருசித்து சாப்பிடறதுல‌ ஆண்களும் இருக்காங்கா பெண்களும் இருக்காங்க‌ ஆனால் ருசித்து சாப்பிடறது என்னவோ ஆண்கள் தான் எனக்கும் சாப்பாடு செய்றது, ரசித்து சாப்பிவும் பிடிக்கும் எங்க‌ வீட்டுலே என்னொட‌ கணவர் அப்படி கிடையாது சாப்பாட்டில் அவர் எந்த‌ குறையும் சொல்ல‌ மாட்டாங்கா.நான் தான் கொஞ்சம் சாப்பிட்டாலும் நறுக்குனு சாப்பிடனும் நெனைப்பேன்
ஆனால் ரசித்து சாப்பிட எல்லாம் எங்க‌ நமக்கு டைம் இருக்கு. இன்னொன்று நம்ம செய்ற‌ சாப்பாட‌ நம்மளாள‌ என்னைக்காவது செய்த‌ உடனே சூட‌ சாப்பிட‌ முடியுதா. எனக்கு படத்துல‌ கூட‌ ராஜ்கிரண் அவர்களோட‌ பழைய‌ படம் ரெம்ப‌ பிடிக்கும் அவரோட‌ எல்லா படத்துலையும் சாப்பாடு சீன் வரும்.அவர் சாப்பிடறது பாத்தாலே நமக்கு சாப்பிட‌ ஆசை வரும்.அவர் எலும்பு கடிக்கும் போது நமக்கு அப்படி சாப்பிடனும் தோனும்.எனக்கு அவர் படம் பாத்துட்டாலே நான்வெஜ் சாப்பிடனும் போல‌ தோனும்.ஆண்கள் கிட்ட‌ என்க்கு பிடிச்ச‌ விசயம் பொதுவா ஒன்று இருக்கு அவங்க எங்க‌ சாப்பிட்டாலும் அதாவது ஹோட்டல் சாப்பிட்டாலும் சரி வீட்டில் சாப்பிட்டாலும் சரி அவங்க‌ இஷ்டப் படி சாப்பிடுவாங்க‌.பெண்களை போல் வீட்டில் ஒரு மாதிரி வெளிலே ஒரு மாதிரி சாப்பிடமாட்டாங்க நம்ம‌ கொஞ்சம் கூச்ச‌ படுவோம்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நடுவரே... அடடா... எதிர் அணிக்கு எங்களை போல ஆட்கள் பழக்கமே இல்லை போலவே ;)

இன்னும் எந்த காலத்தில் இருக்காங்க நடுவரே... குடும்பத்துக்கே சாப்பாடு போட்டுட்டு மிச்சம் இருக்குறதை ஆறிப்போய் பத்தும்பத்தாம சாப்பிட?? வாய்ப்பே இல்லை. நம்மை மாதிரி ஆளுங்களுக்கு தான் ரீஹீட் பண்ண மைக்ரோவேவ், ஹாட்டா வைக்க ஹாட் பாக்ஸ்ன்னு கண்டு பிடிச்சாங்க போல. ஆனா நடுவரே... இப்போ யாருங்க எல்லாருக்கும் போட்டுட்டு கடைசியா சாப்பிடுறாங்க??? எனக்கு புரியவே மாட்டங்குதே!!! நான் தான் எல்லாரையும் போல இல்லையோன்னு வேற பயமா இருக்கே.

நான் மட்டுமல்ல எங்க வீட்டில் எல்லா பெண்களுமே எல்லோரோடும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது தான் வழக்கம். சூடா, அவங்க எப்ப சாப்பிடுறாங்களோ, அப்ப தான் நாங்களும் சாப்பிடுறோம். நடு சாப்பாட்டில் இது வேணும் அது வேணும்னு என்னை யாரும் எழுப்ப முடியாது ;) கோபம் வரும். சில நேரம் தோசை போல ஐட்டம் எல்லாம் எல்லாருக்கும் சுட்டு கொடுத்துட்டு நிம்மதியா இவரை சுடச்சொல்லி அடுப்படியில் தின்னை மேல ஏறி உட்கார்ந்து சூடா வாங்கி சாப்பிடுவேன். உண்மையில் அது தாங்க ரசிச்சு சாப்பிட காரணம்.

ரசனை ஆணுக்கு மட்டுமா??? ம்ஹூம்... மிதமான சூடு உள்ள சாதத்தில் வீட்டில் தயார் பண்ண கெட்டி தயிர்... ஃப்ரெஷா ஏடும் சேர்த்து போட்டு நீர் இல்லாம பிசைந்து முந்தின நாள் செய்த வெல்லம் போட்ட மாங்காய் குழம்புல இருந்து கொஞ்சமா குழம்போட நல்லா உப்பு காரம் ஊறின மாங்காய் துண்டை எடுத்து வெச்சு தொட்டு சாப்பிட்டா.. ஆஹா ஆஹா... அது தாங்க அமிர்தம். சென்னை போல காயுற வெய்யில்ல, இப்படி ஒரு மதிய உணவை முடிச்சா தூக்கம் அப்படியே கண்ணைக்கட்டும் நடுவரே. ட்ரை பண்ணிப்பாருங்க.

மாம்பழத்தை நறுக்கி சாப்பிட எனக்கு பிடிக்கிறதில்லை. சின்ன வயசுல இருந்தே மாம்பழம் என்றால் எனக்கு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து லேசான குளிர்ச்சி இருக்கும் போது கொட்டையை ஒட்டி இரண்டு பக்கமும் நறுக்கி எடுத்து கப்பு போல கிடைக்கும் பழத்தில் ஒரு ஸ்பூனை போட்டு ஐஸ்க்ரீம் போல எடுத்து சாப்பிடுவேன்... ம்ம்ம்... ஜூஸி யம்மி மேங்கோ நடுவரே. என் பிள்ளைகளுக்கும் அதையே சொல்லிக்கொடுக்கறேனாக்கும் ;)

முன்பெல்லாம் ஐஸ்க்ரீம் என்றால் விருப்பம். ஒரு நாளைக்கு 2, 3 கூட சாப்பிடுவேன். மூக்கு, முகமெல்லாம் பூசி இருந்தாலும் சுற்றி யார் சிரிச்சாலும் கண்டுக்காம சாப்பிடுவேன். என்னை கேட்டா ஐஸ்க்ரீம் அப்படி பூசிக்கிட்டு சாப்பிட்டா தான் சுவை என்பேன். ஒரு முறை தங்கை பின்னால் பைக்ல வரும் போது நான் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு அவளோட முடியெல்லாம் பூசி வெச்சேன். இப்படி மறக்க முடியாத அளவு எனக்கு பிடிச்ச விஷயங்களை நான் ரசிச்சு தான் சாப்பிட்டிருக்கேன் நடுவரே இன்னைக்கு வரை.

மொச்சை கொட்டையும் கறுவாடும் போட்டு குழம்பு வெச்சா... சுட சுட சாதத்தில் சாப்பிட கூடாது நடுவரே. கொஞ்சமா ஆறின சாதத்தில் அதுவும் லேசா குழைந்த சாதம் போட்டு கறுவாடு மொச்சை கத்திரிக்காய் எதையும் பிரிச்சு எடுத்து வைக்காம சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்க நடுவரே. ம்ம்... சாப்பிட்டு 2 நாளைக்கு நாக்கில் ருசி நிக்கும், வீட்டை சுற்றி அந்த கறுவாட்டு வாசம் அதை நியாபகப்படுத்திகிட்டே இருக்கும்.

ஹைய்யோ... பதிவிட்டு எனக்கே இப்போ பசிக்குதே. இன்னைக்கு எங்க வீட்டில் சுவையான முள்ளு கத்திரிக்காய் சாம்பார் நடுவரே, அதன் சுவையை நான் உங்களுக்கு சொல்ல வேணாம் தானே ;) இந்த நாட்டு காயெல்லாம் சாம்பார் கொஞ்சம் நீர்க்க வெச்சு சூடா சாதத்தில் கொஞ்சம் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்க.. ஒரு சைடிஷும் எனக்கு வேணாங்க... ஒரு துண்டு எலுமிச்சை ஊறுகாய் போதும். சாப்பிட வாங்க... நிதானமா இதை எல்லாம் யோசிக்காம ரசிச்சு ருசிச்சு சாப்பிடலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே, நானும் உணவை ரசித்து சாப்பிடுபவர்கள் ஆண்கள்தான்னு சொல்லுவேன்.
எவ்வளவுதான் பெண்கள் ரசித்து சமைத்தாலும், அதை சாப்பிடுபவர்கள் நம்மை பாரட்ட‌வேண்டும் என்ற‌ எண்ணமே அவர்களிடம் அதிகமாக‌ இருக்கும். அதை நாம் ரசித்து சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்கு தோணாது.ஆனால் ஆண்கள் சாப்பிடுவதே ரசனைக்காகத்தான்.
கல்யாணத்திற்கு முன் சமைக்கத்தெரியாத‌ பெண்கள்கூட‌, அதற்குப்பிறகு சமயலில் சகலகலாவல்லிகளாக‌ மாருவதே, அவர்களின் கணவர்களின் ரசனைக்கேற்ப‌ சமைக்க‌ கற்றுக்கொள்வதால்தான். இதிலிருந்தே தெரியவில்லையா ரசித்து சாப்பிடுபவர்கள் யார் என்று?
பெண்களுக்கு ரசித்து சமைக்க‌ மட்டுமே தெரியும், அதை ரசித்து சாப்பிடுவது ஆண்களுக்கே கைவந்த‌ கலை.
எங்க‌ பக்கம் கல்யாணத்துக்கு போனீங்கன்னா, கல்யாணத்திலயும் சரி, அது முடிந்து வீடு வந்தபிறகும் சரி, பெண்களாகிய நாங்கள் அனைவரும், அங்க‌ இருந்தவங்களோட‌ மேக்கப், புடவை இந்த‌ மாதிரி விஷயங்களை பத்திதான் பேசிக்கொண்டிருப்போம். ஆனா எங்க‌ வீட்டு ஆண்கள் அனைவரும் அங்க‌ போட்ட‌ சாப்பாடு பத்தியே பேசிட்டு இருப்பாங்க‌, அதுல‌ என்ன குறை, நிறைன்னு. இதுல‌ இருந்தே தெரியலைங்களா, யார் உணவு ரசிகர்கள் என்று?

எதிரணியினர் விதிவிலக்குகள் பற்றி மட்டுமே பேசிக்கிட்டு இருக்காங்க‌ நடுவரே. நம்ப‌ அம்மாகிட்ட‌ கேளுங்க‌ யார் யாருக்கு என்னென்ன‌ பிடிக்கும்னு லிஸ்ட் போட்டு சொல்லுவாங்க‌. அதையே செய்தும் கொடுப்பாங்க‌. ஆனால் அவங்களுக்கு என்ன‌ பிடிக்கும்னு கேளுங்க‌... எனக்கென்னம்மா... பிடிக்கும் பிடிக்காது எல்லாம் கிடையாது எல்லாமே சாப்பிட்டுக்குவேன். உங்களுக்கு பிடிச்சா போதும் அப்படீம்பாங்க‌. இதுதான் பெரும்பாலான‌ வீடுகளில் நடப்பது.

இப்போ நாம‌ ஒரு வீட்டுக்கு விருந்துக்கு போகறோம்னு வச்சுக்கோங்க‌. ஆண்கள் கொஞ்சமும் சங்கோஜப் படாமல் பிடித்ததை ரசிச்சு சாப்பிடுவாங்க‌. கேட்டு வாங்கி கூட‌ சாப்பிடுவாங்க‌. ஆனால் பெண்கள் இருக்காங்களே ரொம்ப‌ நாசூக்கா பதவிசா நடந்துக்கறோம்ங்கற‌ பேர்ல‌ நுனிவிரல்ல‌ பட்டும் படாமல், அந்த‌ உணவு ரொம்ப‌ பிடிச்சிருந்தால் கூட‌ கொஞ்சமா சாப்பிட்டுட்டு... ஏனுங்க‌ இந்த‌ பவுசு எல்லாம். பிடிச்சதை ரசிச்சு ருசிச்சு சாப்பிடாம‌ தடுத்துடுதுங்களே :).

இட்லியும் கறிக்குழம்பும் கொடுத்தால் ஆண்கள் சங்கோஜமே படாமல் பத்து பன்னிரெண்டு இட்லி கூட‌ சாப்பிடுவாங்க‌. அம்பூட்டு ருசியா ஆசையா சாப்பிடுவாங்க‌. ஆனால் பெண்கள் ஐயோ வெய்ட் போட்டுடும், பார்க்கறவங்க‌ என்ன‌ நினைப்பாங்கன்னு ஆசையிருந்தாலும், சாப்பிட‌ வயிற்றில் இடம் இருந்தாலும் கூட‌ ஒன்றிரண்டு இட்லியோடு நிறுத்திக் கொள்வார்கள். இப்போ சொல்லுங்க‌ ஆண்கள்தானே எதற்காவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் ர‌சிச்சு ருசிச்சு சாப்பிடறாங்க‌.

டயட்டு டயட்டுன்னு வயிற்றை காயப்போட்டு எதையும் ருசிச்சு சாப்பிடாமல் இல்லாத‌ நோயெல்லாம் வர‌ வச்சுக்கறது பெரும்பாலும் பெண்கள்தான் நடுவரே! முடிஞ்சா நீங்களே கூட‌ ஒரு சர்வே எடுத்துப் பாருங்களேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நம்ம வீட்டில் நாம சமைத்த உணவை சூடா சாப்பிட என்ன நடுவர் கஷ்டம் . ஒரு பெண் ஹோட்டல் போய் சாப்பிட்டாதான் ரசனையானவங்களாஆ ,கூச்ச பட்டு சாப்பிடறதுக்கும் ரசித்து சாப்பிடறதுக்கும் வித்தியாசம் இல்லையா நடுவர் .சரிங்க டயட் க்குகூட சாப்பிடறோம்ன்னு வச்சிங்க்கோங்க .அதையும் ரசித்து சாப்பிட்டால் போதும். அப்ப ரசனையோட சாப்பிடறவங்க என்ன சட்டி நிறைய வா சாப்பிடறோம் . அளவாக சாப்பிட்டாலும் ரசித்து சாப்பிடும் ..முதல் கூச்சத்துக்கும் ,ரசனைக்கும் வித்தியாசம் இருக்குன்னு நறுக்குன்னு சொல்லுங்கள் நடுவர்.

Be simple be sample

உணவை ரசித்து ருசிப்பவர்கள் ஆண்களை விட பெண்களே... ரசித்து செய்பவர்களால் தான் அதன் ருசியை முழுமையாக ருசிக்க முடியும். இதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள் என என் முதல் வாதத்தை முன் மொழிகிறேன்.

நடுவரே... //எனக்கென்னம்மா... பிடிக்கும் பிடிக்காது எல்லாம் கிடையாது எல்லாமே சாப்பிட்டுக்குவேன். உங்களுக்கு பிடிச்சா போதும் அப்படீம்பாங்க‌. இதுதான் பெரும்பாலான‌ வீடுகளில் நடப்பது.// - எங்க வீட்டில் என்ன குடும்பத்துலையே இப்படி சொல்லும் ஆட்கள் ரொம்ப ரேர். எல்லாரும் அவங்க அவங்களுக்கு பிடிச்ச உணவுன்னு ஒரு பட்டியல் போடுவோம். இவர் ஊருக்கு போனா நான் கிச்சனில் பூந்து விளையாடுவேன். என்ன என்ன விருப்பமோ அத்தனையும் கட்டுப்பாடில்லாம செய்து சாப்பிடுவேன். அவர் வீட்டில் இருந்தாலே நம்ம ராஜியம் தான்... ஊருக்கு போனா கேட்கவா வேணும்??? ;)

ஏன் நடுவரே... வெளிய போனா உணவகத்தில் எல்லா பெண்களூம் கணவரும் பிள்ளைகளும் சாப்பிடுவதையேவா சாப்பிடுறோம்?? நமக்கு பிடிச்சதை தானே நமக்கு ஆர்டர் பண்ணுவோம்? எப்போதும் மற்றவர் ரசனைக்கு நாம் விட்டுட்டா இருக்கோம்?? நான் உணவகத்திலேயே அவருக்கும் சேர்த்து நான் தான் ஆர்டர் பண்ணுவேன் ;) அவ்வளவு ஏங்க... நமக்கு ஒரு ஸ்பெஷல் அக்கேஷன்னா நம்ம கணவரே நமக்கு பிடிச்ச உணவுகளை அரேங்ஜ் பண்ண மாட்டாரா??? அப்படின்னா நமக்கும் ரசனை இருக்குன்னு அவங்களுக்கே தெரிஞ்சிருக்கு ;) நாம தான் இல்ல இல்ல நான் பெரிய தியாகி எனக்கு சாப்பாட்டில் பிடிப்பே இல்லை உங்களுக்காக தான் சமைக்கிறோம்னு நம்மையும் சேர்த்து ஏமாத்திக்கிறோம்.

நான் ஒன்னு கேட்கறேன் நடுவரே... எல்லாரும் கல்யாணத்துக்கு அப்பறம் சமைக்க கத்துக்கிறதில்லை. பலர் முன்பே சமைக்கிறவங்க. கல்யாணம் ஆன பின் கணவருக்கு பிடிக்கும் என்று அவங்க அம்மா சமையலை (மாமியார்) எத்தனை பேர் கத்துக்கிட்டு செய்யறோம்? எல்லாரும் அவங்க வீட்டு ஸ்டைலில் தானே நடுவரே சமைக்கிறோம்? அப்போ அதில் நம்ம ரசனை இல்லை என்றா சொல்றாங்க எதிர் அணி?? நாம புதுசு புதுசா முயற்சி பண்றோமே நமக்கு பிடிச்சதை தானே முயற்சிக்கிறோம்?? நம்ம ரசனையை தான் நம்மை அறியாமல் நம் குடும்பத்தின் மேலும் தினிக்கிறோம். இல்லன்னா நிச்சயமா இப்படி பல வகை உணவுகள் வீட்டில் செய்ய ஆரம்பிச்சிருக்க மாட்டோம். எங்க பாட்டி செய்த அதே கூழும், ரசமும் தான் அப்பாக்கு பிடிக்கும்னு எங்கம்மா செய்துகிட்டிருந்திருந்தா?? அவங்க பிள்ளையும் அது தான் பிடிக்கும்னு அவங்க மனைவியை செய்யச்சொல்லி சாப்பிட்டிருப்பாங்க.

நடுவரே... நம்ம பாட்டி சமையலுக்கும் நம்ம அம்மா சமையலுக்கும் உள்ள வித்தியாசமே ரசனை மாறியதை காட்டும். அதை வீட்டில் உள்ள ஆண்கள் அடாப்ட் பண்ணிகிட்டாங்க, அவ்வளவு தான். ஆண்களின் ரசனையை இன்ஃப்லுயன்ஸ் பண்றதே பெண்களின் ரசனை தான் நடுவரே. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பெண்கள் ரசித்து சமைத்தாலும் பாராட்டப்படுவதையே எதிர்பார்க்கின்றனர் என்று அனு அவர்கள் சொல்லியிருக்கி
ரார். நாம் ஒன்றை ரசித்தால் நிச்சயம் அதை பாராட்ட வேண்டும் என நினைப்போம். பெண்களை மாதிரி ஆண்களும் ரசித்து ருசித்து சாப்பிட்டால் நிச்சயம் அது பாராட்டாக வெளிவரும். இதன் மூலம் தன்னைப்போல் தன் கணவரும் உணவை ரசித்தாரா என அறியவே பாராட்டை எதிர்பார்க்கிறாள். தான் பெற்ற இன்பம் தன் கணவனும் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இது.

பட்டியில் யாரும் யாரையும் பெயர் சொல்லி பேசக்கூடாது. “எதிர் அணி” என்றே குறிப்பிட்டு பதில் தர வேண்டும். யாரும் பதிலளி தட்டும் முன் மாற்றிவிடுங்க ப்ளீஸ். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்