பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

வணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

எனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு "Ratatouille", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான "புட் கிரிட்டிக்". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.

என்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்!

இருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........

//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //

மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.

குறிப்பு : தலைப்பை தந்த தோழி "Jayaraje" க்கு நன்றி.

அனைவருக்கும் இனிய‌ சுதந்திரதின‌ நல்வாழ்த்துக்கள்.

ஆண்களே அணி மக்களே, நடுவர் ஒருபக்கமா சாய்கிறார்..சாய்கிறார்.. புடிங்க‌..புடிங்க‌..

நடுவரே, நேரா நின்னு நாங்க‌ சொல்ற‌ கதையை கொஞ்சம் கேளுங்க‌....

நடுவரே அந்தக்காலத்துல இருந்து இந்தக்காலம் வரைக்கும் உணவை ரசிச்சு சாப்பிடரவங்க ஆண்கள்தான்.

அதனாலதான் கல்யாணமாகிற பெண்களிடத்தில் அப்போதிருந்தே சொல்வாங்க, கணவனோட மனதில் இடம் பிடிக்கனும்னா, அவங்க வாய்க்கு ருசியா சமைச்சு போடனும்னு. ஆண்கள் ருசிக்கு அவ்வளவு முக்கியத்துவம் குடுக்கிறாங்க.

அந்தகாலத்தில பல பெண்கள் அவர்களோட கணவர் சாப்பிட்ட இலையிலோ அல்லது தட்டிலோதான் சாப்பிடுவாங்களாம், ஏன்னா அப்பதான் அவங்களோட சுவை தெரிஞ்சு பெண்கள் சமைக்க கத்துக்குவாங்களாம். ஆண்களோட உணவுச்சுவைக்கு அந்தகாலத்துல அவ்வளவு முக்கியத்துவம் குடுத்திருக்காங்க.

சுவைக்கு அதிக முக்கியத்துவம் குடுக்கிறவங்க கண்டிப்பாக ஆண்கள்தான் நடுவரே, எப்படின்னு பாத்தீங்கன்னா,
ஒருகாலத்துல( நம்ம தாத்தா காலத்துலன்னு வெச்சுக்கோங்க)ஆண்கள், பெண்களை அதுசரியில்லை இதுசரியில்லைன்னு, சமயல்ல குறை கண்டுபிடிச்சு, பெண்களை மிரட்டியே அவங்களுக்கு பிடித்தமாதிரி சமைக்க வெச்சாங்க, அப்பல்லாம் சாப்பாடு புடிக்கலைன்னா ஹோட்டலுக்கு வேற போகமுடியாதே! இருந்தாத்தானே போறதுக்கு.

அடுத்து வந்த ஆண்கள் கொஞ்சம் வேற டெக்னிக்கை கடைப்பிடிச்சிருக்காங்க,இந்த சமயல் செஞ்சகைக்கு தங்ககாப்புதான் போடனும்னு கொஞ்சம் இன்டைரக்டா புகழ்ந்து (ஐஸ்வெக்கறது) அவங்களுக்கு பிடிச்ச சுவையில சமைக்க வெக்க வேண்டியது. எப்படி பார்த்தீங்கன்னாலும் ஆண்களுக்கு அவங்களோட சுவை ரொம்ப முக்கியம், டெக்னிக்தான் வேற வேற.

அடுத்த ஜெனரேசன் ஆண்கள், பெண்களுக்கு கொஞ்சம் சமயல்ல, வீட்டு வேலயில உதவியும் பன்னியிருக்காங்க, நம்ம பெண்கள்தான் வேலைக்குபொக ஆரம்பிச்சாச்சே! அலுவலகத்துக்கு போய்ட்டுவந்து எப்படி சுவையா சமைக்கிறது,
இப்படி ஏதாவது ஹெல்ப் பன்னாதானே ஓரளவுக்காவது டேஸ்ட்டா சாப்பாடு கிடைக்கும்.

அடுத்துவந்த ஆண்கள் இன்னும் ஒருபடிமேல! நம்ம பெண்கள்தான் இப்பல்லாம் ஆண்களைவிட அதிகமா படிச்சு அதிகமா சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்களே! பல பெண்களுக்கு சமயல்கட்டு எங்க இருக்குன்னே தெரியாது!( நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர் ஒன்லி பல பெண்கள், நாட் ஆல்) இந்த நிலையில நம்ம ஆண்களுக்கு சுவையான சமயலாவது கிடைக்கிறதாவது! விட்டுருவாங்களா நம்ம ஆண்கள், அவங்களே கலத்துல குதிச்ச்சுட்டாங்க. "தன்கையே தனக்குதவின்னு". இப்பல்லாம் பாருங்க விஜய்டிவி கிச்சன் சூப்பர்ஸ்டார்ல பெண்களைவிட ஆண்கள் சமயலில் எப்படி கலக்குறாங்கன்னு. எப்படி கூட்டி கழிச்சி பார்த்தீங்கன்னாலும் ஆண்கள் சுவை விஷயத்துல காம்ப்ரமைஸ் ஆகிறவங்களே கிடையாது.
அட்ஜஸ்ட் பன்னிட்டு எப்படி இருந்தாலும்(ரசிக்காம, சுவைதெரியாம) சாப்பிடறவங்க நம்ம பெண்கள்தான்.

எல்லா ஹோட்டல்லேயும், கல்யாணத்திலேயும் பார்த்தீங்கன்னா ''அதிகமா'' ஆண்கள்தான் சமைப்பாங்க, காரணம் என்னன்னா ஆண்கள் எப்படி ரசிச்சு சுவைச்சு சாப்பிடறாங்களோ, அதே டேஸ்ட் தாங்கள் சமைக்கிற உணவிலையும் கொண்டுவருவாங்க. அவங்க டேஸ்ட்டுக்கு முக்கியத்துவம் குடுத்து சமைக்கிறவங்க, நம்ம பெண்கள் ஆரோக்கியத்துக்குதான் அதிக முக்கியத்துவம் குடுப்பாங்க.

இன்னொரு விஷயம் இருக்கு நடுவரே, கணவன்மார்கள் திடீர்னு ஒரு நாளைக்கு நான் சமைக்கிறேன் நீ ரெஸ்ட் எடுன்னு மனைவிகிட்ட சொன்னாங்கன்னா, இந்த மனைவிமார்கள் அதுல இருக்கிற உள்குத்து புரியாம, உடனே பூரிச்சு போய்டுவாங்க! ஆனா உண்மை என்னன்னா, ஒரேமதிரி நீ சமைச்சத சாப்பிட்டு எனக்கு கொஞ்சம் போரடிச்சுடுச்சு, இன்னக்கு ஒருனாளாவது நான் கொஞ்சம் எனக்குபிடிச்சமாதிரி டேஸ்ட்டா சமச்சுக்கிறேன்னு அர்த்தம் அதுக்கு! இந்த உண்மைய மனைவிகிட்ட சொல்லமுடியுமா? சொன்னா என்ன ஆகும்னு அவங்களுக்கு தெரியாதா?

இவ்வளவு நேரம் வாய்வலிக்க‌( இல்ல‌ கைவலிக்க‌) இந்த‌ கதையெல்லாம் ஏன் சொல்றோம்னாக்க‌, ஆண்கள் ரசிச்சு சாப்பிடறதை யாருக்காகவும் விட்டு கொடுக்கமாட்டாங்க‌, ஒன்று ருசியா யாரயாவது சமைக்க‌ வெப்பாங்க‌, இல்லை ஹோட்டலுக்கு போவாங்க‌, அதுவும் இல்லைனா தானேவாவது ருசியா சமைச்சு சாப்பிட்டிருவாங்க‌.....ரசிச்சு சாப்பிடறதுல‌ நோஓஓஓஓஓ.......காம்ப்ரமைஸ்.

சில‌ ஆண்கள், நல்லா கவனத்தில‌ வெய்ங்க‌, சில‌ ஆண்கள் மட்டுமே, அறிவுஜீவீன்னு காண்பிச்சுகிறவாங்களா இருப்பாங்க‌, இல்லைனா அறிவுஜீவீயாவே இருப்பாங்க‌, அவர்கள் மட்டும்தான் புக்லயோ இல்ல‌ லேப்டாப்லயோ கவனத்த‌ வெச்சுகிட்டு, எதையோ சாப்பிடறமாதிரி போஸ் குடுப்பாங்க‌....மத்தபடி பெரும்பான்மையான‌ மக்கள்தொகை இருக்கிற‌ நம்ம‌ நாட்டில‌ (நீங்க‌ வசிக்கிற‌ நாட்டில‌ இருக்கிற‌ ஆண்களை வெச்சு முடிவு பன்னிடாதீங்க‌ நடுவரே ) எல்லாம் ஆண்கள் ரசிச்சுதான் சாப்பிடறாங்க‌.

//இந்த காபியில் முறுக்கு மிச்சர் நீங்களுமா வனி ........முடியலை.......வேணாம் அழுதுருவேன் :(// நடுவரே நீங்களும், எதிரணியில‌ இருக்கிற‌ ""சில‌ பெண்கள்"" மாதிரி ரசிச்சு சாப்பிடுவீங்கன்னு தெரியுது. ஆனா இந்தகாலத்து பெண்களை பத்தி உங்க‌ளுக்கு சரியா தெரியலை,
டீனேஜ் வந்துட்டாங்கன்னா போதும், "0" சைஸ் ஃபிகர், சிம்ரன் மாதிரி இடுப்புன்னு சொல்லிக்கிட்டு காய்ஞ்சுபோன‌ கான்ஃபிளேக்ஸ் சாப்பிட்டே காலத்தஓட்டறாங்க‌!....அவங்களாவது ருசியா சாப்பிடறதாவது!

இதனாலெல்லாம் என்ன தெரிய வருதுன்னா நடுவரே, அதிகமா உணவை ரசிச்சு சாப்பிடறவங்க ஆண்களே! ஆண்களே!

நடுவருக்கு நமஸ்காரம்.

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கேள்னு கேள்விப்பட்டேன். சித்த இருங்கோ, ஸேவிச்சுக்கறேன்.

நன்னா இருங்கோ, ஷேம்மா இருங்கோ.

சாப்பாட்டை ரசிக்கறதுலயும் ஸரி, ருசிக்கறதுலயும் ஸரி, பொண்கள்தான் சிறந்தவான்னு என் கட்சி.

நிறைய பேரை உதாரணம் சொல்ல்லாம், ஆனா, நீங்க பட்டிமன்றத்தை ஒரு வாரத்துல முடிச்சுடறேளே, என்ன பண்றது, என்னால முடிஞ்சவரைக்கும் சுருக்கமா சொல்லிடறேன்.

முதல்ல எதிரணில வாதாடிண்டிருக்கவா சொன்னதுக்கெல்லாம், எனக்குத் தெரிஞ்ச பதிலைச் சொல்லிடறேன்.

பொண்களுக்கு சமைக்கறதுலயும் சரி, ரசிக்கறது, ருசிக்கறது எல்லாத்திலயும் எப்பவுமே அலுப்பு, சலிப்பு இதெல்லாம் வரவே வராது. ஒரு சானல் விடாம, சமையல் நிகழ்ச்சி நடந்துண்டுருக்கறதே இதுக்கு சாட்சி. முக்காவாசி சானல்ல, மதியம் பொண்கள் ஃப்ரீயா இருக்கற நேரம்தான் ஒலிபரப்பறா.

பொண்களுக்கு நாக்கைக் கட்டறாளா, நன்னா சொன்னேள் போங்கோ!(இது உசிலை மணி வாய்ஸ்) சின்ன வயசுல அவா ஏஜ் அட்டெண்ட் பண்ணினா, எத்தனை விதமான பட்சணம், பலகாரம், மாசமானா எத்தனை எத்தனை பலகாரம்! சலிக்காம சாப்பிட வைப்பா தெரியுமோ! பொண்களுக்கு அவ்வளவு ஸ்டாமினா, ஸ்ட்ரெங்த் தேவைங்கறது எல்லோருக்கும் தெரியும். வெறும் விடமின் மாத்திரைகளை முழுங்கறது எல்லாம் இந்த ஆண்கள்தான் நடுவரே.

புள்ள பெத்த பச்சை உடம்புக்காரிக்குக் கொடுக்கற பத்திய சாப்பாடு கூட ஒரு தனி ருசிதான் போங்கோ.

நாமே சமைச்சு நாமேதான் சாப்பிடறோமா? எங்களை யாருன்னு நினைச்சேள்?

எங்களுக்கு டிடெக்டிவ் மூளைங்கறது என்னவோ உண்மைதான். நாத்தனார் செய்யற சுசியம் நன்னா இருக்கும். மாமி செய்யற மசியல் நன்னா இருக்கும். பெரியம்மா பண்ற இடியாப்பம் வெள்ளி நூல்தான். சித்தி சமைக்கிற புட்டுக்கு 100 மார்க். இப்படியெல்லாம் எங்க கம்ப்யூட்டர் மூளையில ரெஜிஸ்டர் பண்ணி வச்சிருப்போமாக்கும்.

அவா வீட்டுக்கு நாங்க போனாலும் சரி, எங்க வீட்டுக்கு இவா வந்தாலும் சரி, ‘மன்னி, உங்க கைப்பக்குவம் யாருக்கு வரும், இவர் சொல்லிண்டே இருக்கார், சுசியம் சாப்பிடணும்னு(அவர் கேட்டே இருக்க மாட்டார்) என்ன வாங்கிண்டு வரணும்னு சொல்லுங்கோ, நான் வேணா செய்யறேன், நீங்க சொல்லுங்கோ” அப்படின்னு ஒரு ஐஸ் மலையை அவா தலையில வச்சு, அவர் எட்டூருக்கும் குளுந்து போய், “நானே செய்யறேண்டியம்மா, நீ சுத்து வேலை பாத்துக் குடு, போதும்,”னு சொல்ல வச்சு, செய்து தரச் சொல்லி, மொக்கிடுவோமாக்கும்.

அதே போலதான், அவா அவா வீட்டுக்குப் போனாலும், ‘என்னடிம்மா செய்யட்டும்”னு ஒரு பேச்சுக்குக் கேப்பா பாருங்கோ. நாம யாரு? ‘ஸ்ரமப்படாதேங்கோ, அன்னிக்கு புட்டு செய்திருந்தேளே, ரொம்ப சிம்பிளான ஐட்டம், அதே போலவே இன்னிக்கும் செய்துடுங்கோ சித்தி, இன்னும் கொஞ்சம் தேங்காப்பூ மட்டும் சேத்துக்கோங்கோ போதும்’னு சந்தடி சாக்கில கந்தகப் பொடி வச்சு, நமக்குப் பிடிச்சதையும் செய்து தர வச்சு, அதுல கரெக்‌ஷனும் பண்ணி, ரசிச்சு, ருசிச்சு சாப்டுடுவோமே!

நாமே செய்யறத சாப்பிட முடியாதா? அதான், உப்போரப்பு பாக்கறேன்னு சமைக்கறச்சயே வயத்துக்கு படையல் நடந்துடுமே, ஹி, ஹி, ஹி!!!

அப்புறம் வெளியூருக்குப் போனா, சாப்பிட்ட்தைப் பத்தி ஃபேஸ்புக்ல ஆண்கள் சொல்லறது நிஜம்தான். அதுக்குக் காரணம் அவாளோட அலட்டல் குணம், அவ்ளோதான். பொண்களுக்கு எப்ப எதைப் பத்தி சொல்லணும்னு நன்னாத் தெரியும். அவா சாப்பிடறது அவா ரசனைக்கு. ரொம்ப நெருங்கிய ஃப்ரெண்ஸ்கிட்ட நீங்க ஊருக்குப் போறதா சொன்னேள்னா, ஒடனே அவா ஃபர்ஸ்ட் ஷேர் பண்ணிக்கற விஷயம் – அந்த ஊர்ல எந்த ஹோட்டல் நன்னா இருக்கும்கறதுதான். எல்லார்கிட்டயும் எல்லாத்தையும் எப்பவும் சொல்ல மாட்டா பொண்கள்.

பொண்களுக்கு சாப்பிடறதுல கூச்சமா, நெவர்!(இத கௌரவம் சிவாஜி குரல்ல படிச்சுடுங்கோ) இயல்பாவே ஆண்கள் அதிகமாகவும் பெண்கள் குறைவாகவும் சாப்பிடுவா, அது பயாலஜி. மத்தபடி ரசனையில் பெண்கள்தான் எப்பவுமே டாப்.

கல்யாணத்துக்குப் போனா, அங்கேயே அவா சாப்பிடற அழகுலயே தெரியும், ரசனை ஆண்களுக்கா, பெண்களுக்கான்னு. எது நன்னா இருக்கோ அதை ரெண்டாவது தடவயும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவா பொண்கள். ஆண்கள் சும்மா கட்டு கட்டுன்னு கட்டுவாளே தவிர, அவாளுக்கு ருசிப்பு, ரசிப்பு எல்லாம் தெரியாது.

மத்தவா வீட்டுக்குப் போனா, ஆண்கள் ஹாலில் உக்காந்து ஒபாமாலருந்து எபோலா வரைக்கும் பேசிப் பேசிக் களைச்சுப் போய், சாப்பிட ஒக்காந்த்தும், வளைச்சுக் கட்டுவா. ஆனா, பொண்கள், அடுக்களைக்குள்ள போய், வீட்டுப் பொண்களோட பேசிண்டே, அன்னிக்கு ஐட்டம் எல்லாம் ஒரு பார்வை பாத்து(!) எது புடிச்சிருக்கோ, எது நன்னா இருக்கோ அதை ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவா.

பொண்கள் டயட் இருந்தாக் கூட அதையும் ரசனையோட செஞ்சு, ருசிச்சு, ரசிச்சுத்தான் சாப்பிடுவா. நம்ம அறுசுவையிலேயே டயட் ரெசிப்பீஸ் எல்லாம் பாருங்கோ. ஓட்ஸ்ல உப்புமாலருந்து கேசரி வரைக்கும் இருக்காக்கும். ஆண்கள் மாதிரி ஜி.எம்.டயட் அப்படின்னு ஒட்ட ஒட்ட ஒணர்ந்து போறது நம்மால முடியாது நடுவரே.

எதிரணியினர் சொல்றதுலருந்து, ஒண்ணு மட்டும் நன்னாப் புரியறது. அவாளுக்கும் சந்தர்ப்பம் சூழ்நிலை அமைஞ்சா, ஆண்களை விட, சூப்பரா ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுவா. டோண்ட் வொர்ரி, தோழிகளே. ரசனைத் தீயை அணைய விடாதேள், சந்தர்ப்பம் தானா வரும்.

அப்புறம் முக்கியமான விஷயம் நடுவரே, எதிரணியினர் எல்லோருமே பொதுவா சொல்றது – அப்பாவுக்கு அது புடிக்கும், அண்ணாவுக்கு இது புடிக்கும், தம்பிக்கு இது ஸ்பெஷல், ஆத்துக்காரருக்கு இது ஸ்பெஷல் – இப்படி செய்து கொடுக்கறச்சே, நாங்க எங்க ரசிக்கறதுன்னு ஆதங்கப்படறா.

அவாளுக்கு தைரியம் வர்றதுக்காக ஒரு சின்னக் கதை: (கதையாவும் இருக்கலாம், நிஜமா நடந்த்தாகவும் இருக்கலாம்)

ஒரு கூட்டுக் குடும்பம் – புது மாட்டுப் பொண்ணு வந்துட்டா. ஆஸ் யூஷுவல், அவ கைல கரண்டியக் கொடுத்தாச்சு.

மாமனார் சொன்னார் – நேக்கு பொதினா சாதம்மா(வெளம்பரத்த எல்லாம் நெனக்கப்படாது)

மாமியார் உத்தரவு – அப்பளம், வடாம் பொரிச்சுடு

ஆத்துக்காரர் ஆசை – நேக்கு சாம்பார் உருளைக்கிழங்கு பொடிமாஸ்

நாத்தனார் வேண்டுகோள் – மன்னி நேக்கு மோர்க்கொழம்பும் சேம்பு பொரியலும்.

கொழுந்தனார் – மன்னி நேக்கு வத்தக் கொழம்பும் கூட்டும்

வயசான பாட்டி – நேக்கு பயத்தம்பருப்பு கஞ்சி

பாட்டியோட மிஸ்டர்(அதான் தாத்தா) நேக்கு கொழைவா சாத்தமுதும்(ரசம் சாதம்), பருப்புத் தொகையலும்.

இந்த புதுப் பொண்ணு அவா அவா கேட்ட்த அருமையா செய்து கொடுத்தா. எல்லோரும் ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டா. அப்புறம்தான் அவாளுக்குத் தோணித்து. அவ சாப்டாளான்னு கேக்கவேயில்லயேன்னு.

கிச்சன்ல போய்ப் பாத்தா, இந்தப் பொண்ணு எல்லாருக்கும் செய்த எல்லா ஐட்டங்களையும் சாப்பிட்டுண்டுருந்த்து.

எல்லோருக்கும் ஷாக் – ஏன்னா, அவா அவா கேட்ட்து மட்டும்தான் அவா அவாளுக்கு பரிமாறியிருந்தா.

ஏன், எங்களுக்கு எல்லாமே வெக்கலனு கேட்டிருக்கா. நீங்கல்லாம் செலக்ட்டா கேட்டேள், அதான் செய்து கொடுத்துட்டேனே, பட், நேக்கு எல்லாமே புடிக்குமேன்னாளாம்.

நீங்களும் தட்டுங்கோ தொறக்கும், கேளுங்கோ, கெடைக்கும்!

கைக்குழந்தை வச்சிருக்கவாளுக்கு சுலபமா, ருசியா, ரசிச்சு சாப்பிடற மாதிரி ரெசிப்பீஸ் எல்லாம் எல்லா ஆத்துலயும் மாமியார் அம்மாக்களுக்கு அத்துப்படி. அவாதான் எல்லாரையும் விட நன்னா சாப்பிடணும்.

எங்க அணித் தோழி தன்னைப் பத்தி மட்டுமே உதாரணம் சொல்லிண்டிருக்கார்னா அதுக்குக் காரணம் ‘ ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்’ அதான். (சாப்பாட்டைப் பத்தின பட்டிமன்றமோன்னோ, அதான் பழமொழியும் தோதாவே வர்றது)

ரசத்துல தண்ணி கலந்தா கண்டு புடிச்சதைப் படிச்சேன். அவர் ஒரு விதிவிலக்கு. அவ்வளவுதான். என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை அவருக்குத் தெரிவிச்சுடுங்கோ, ப்ளீஸ்.

பெரும்பாலான ஆண்களுக்கு அதெல்லாம் தெரியாது. ‘ராகவனுக்கு ரசம் ஊசினது கூட்த் தெரியாது’ன்னு பாலகுமாரன் தன்னோட ஒரு கதையில எழுதியிருப்பார்.

பல வருஷங்களுக்கு முன்னால ஒரு பத்திரிக்கையில் படிச்ச ஒரு உண்மை சம்பவம்:

மாப்பிள்ளை ஆத்துக்காரால ஒரு மாமா – ரஜினியோட ‘அருணாசலம்’ பட்த்துல வர்ற மாமா மாதிரி – எதுக்கெடுத்தாலும் எகிறிண்டு இருந்திருக்கார். வெத்திலை சித்த பெரியதா இருந்த்துக்கு – துளிர் வெத்தலை ஏன் வாங்கி வெக்கல, நாங்க என்னா ஆடு மாடா, தழை மாதிரி வாங்கி வெச்சிருக்கேள்னு சண்ட போட்டிருக்கார்.

மறு நாள் மதியம் சாப்பாட்டுக்கு எக்கச்சக்க்க் கூட்டம் – மோர் போறலை. சமையல் மாமா என்ன பண்ணினார் தெரியுமோ – அரிசி களைஞ்ச கழுநீரில, உப்பும் எலுமிச்சைச் சாறும் சேத்து, அதோட பச்ச மொளகா, இஞ்சி, கொத்துமல்லி எல்லாம் சேத்து, இருந்த மோர் தயிரோட கலக்கி, பந்திக்கு வச்சுட்டார்.

மோர் சூப்பர் அப்படின்னு அந்த மாமா கேட்டு கேட்டு வாங்கிக் குடிச்சாராம். எல்லோருக்கும் ஒரே சிப்பு சிப்பா வர்றதாம், ஆடா, மாடான்னு டவுட்டா கேட்டவர், இப்ப கழுநீர் கலந்த மோரைக் குடிச்சு, கன்ஃபர்ம் பண்ணிண்டுட்டாரேன்னு.

இன்னிக்கு இருக்கற ப்ரிஜ், மைக்ரோ அவன் யுகத்துல, ஆண்களுக்கு டேட் ஆஃப் மானுயுஃபாக்சரிங் எல்லாம் தெரியவே தெரியாது. அது வீட்டுப் பொம்மனாட்டிங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ‘மதுரை’ ரகஸ்யம். ஏன்னா வீட்டுல அடுக்களைல அவா ஆட்சிதானே.

ஆனா, அவாத்து மாமி கண்டு புடிச்சுட்டா. பின்ன, எக்ஸ்பர்ட் ஆச்சே, ஆனா சண்டை பெரிசாக்க் கூடாதுன்னு நல்ல மனசோட அடக்கி வாசிச்சுட்டாளாம்.

‘தாத்தா காலம்’ – காசுக்கு வேணா குறைவு, ஆனா, வீட்டுல பொருளுக்கு எந்தக் கொறையும் இருந்த்தில்லயே. ஆண்கள் காலயில கெளம்பிப் போனா, பொழுதடைஞ்சப்பறம்தான் வருவா. பொண்கள் சாப்பிடறச்சே, வாசல்ல காஞ்சிட்டிருக்கற மோர் மொளகா மொதக் கொண்டு ருசி பாப்பா. அவா ராஜ்யம், அவா நாட்டாம, யாருக்கும் எந்தப் பதிலும் சொல்ல வேண்டியதில்ல. ரசனைக்கும் ருசிக்கும் என்ன கொறச்சல்?!

‘அப்பா காலம்’ – சமைக்கணும், நல்ல பேர் எடுக்கணும். மொதல்ல பரிவார தேவதைகள் (தனக்கு) திருப்தியானாத்தான் மூலஸ்தானத்துக்குப் படைப்பா.

ஸோ, இங்கயும் ரசனையும் ருசிப்பும் அமோகம்.

‘நம்ம காலம்’ – ”என்னது? நான் செஞ்சது சரியில்லயா, சரிடா, ஆன்லைன்ல ஆர்டர் பண்ணு, அம்மி பிரியாணி, செட்டிநாட்டுக் கொழம்பு, ராஜஸ்தான் தாலி எல்லாம் டோர் டெலிவரி. வா, நீயும் நானும் ஒண்ணா ஒக்காந்து ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவோம்.

நோக்கு ப்ளூ சீஸ் டாப்பிங்க்னா, நேக்கு ரிகாடோ டாப்பிங் மறந்துடாதேடா ஆர்டர் பண்றதுக்கு.”

என்ன சொல்றேள் நடுவரே, சரியா காது கேக்கலை. ஓ, எங்க ஆத்துல நடக்கறது ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு ஆச்சரியப் படறேளா.

போங்கோ நடுவரே, வீட்டுக்கு வீடு வாசப்படி. இது தெரியாதா ஒங்களுக்கு.
நன்றி.

நடுவரே... எங்க வீட்டுக்கு அண்ணா அண்ணி வரும் போது சர்க்கரை கம்மியா இருந்தா அண்ணா நான் போட்ட காபின்னு வாயே திறக்காம நல்லா இருக்கும்மான்னு நிதானமா குடிச்சுட்டு கொடுத்துட்டு போவார். அதுவே அண்ணியா இருந்தா “வனி சர்க்கரை கம்மி”னு சொல்லி வாங்கி போட்டு தான் குடிப்பாங்க. உப்பும் அப்படித்தான். எங்க வீட்டில் உப்பு, சர்க்கரை எப்பவுமே பாதி அளவு தான். அதை சரி பண்ணி கேட்டு வாங்கி சாப்பிடுறவங்க அண்ணி, அம்மா, தங்கை, என் வீட்டு வேலைக்காரம்மா வரை எல்லாம் பெண்கள் தான். ஆண்கள் யாராக இருந்தாலும் வாயை திறக்காம கொடுத்ததை சாப்பிட்டு வனி மனசு நோகாம “சூப்பர்மா சமையல்”னு சொல்லிட்டு போவாங்க. ருசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யாராலும் அவங்க வழக்கமான சுவையை விட்டுக்கொடுக்க முடியாது நடுவரே. ஆண்கள் விட்டுக்கொடுக்கறாங்கன்னா அது அன்பு மட்டுமல்லா காரணம், ரொம்ப ருச்சிச்சு சாப்பிடாததும் ஒரு காரணம், அல்லது சுவைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லைன்னு சொல்லலாம்.

அவ்வளவு ஏங்க, நான் நல்ல கார பிரியை. என்னவர் காரம் பழகாதவர். கல்யாணத்துக்கு பின் மாத்திட்டோம்ல ;) அவங்க வீட்டாருக்கு இப்பவும் என் சமையல் என்றால் காரம் தாங்காது. பக்கத்துல சொம்பு நிறைய தண்ணி வெச்சாலும் கஷ்டம் தான். அவங்க வந்தா பார்த்து பார்த்து செய்வேன் காரம், ஆனா அப்ப நான் பட்டினி தான்... எனக்கு உப்பு கம்மியா இருந்தா பிடிக்கும், ஆனா காரம்?? ம்ஹூம்... நாக்கு ருசிக்கு பழகிப்போச்சு நடுவரே... விடுவது சிரமம்.

நன் பல குறிப்புகள் எண்ணெய் இல்லாம், வெண்ணெய் இல்லாம செய்திருக்கேன் நடுவரே... ஆனா என்னைக்கும் ருசியை காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன். ருசியா வரலன்னா அந்த சமையலை ரிப்பீட் பண்ணவும் மாட்டேன்... ஆரோக்கியமான சமையலும் ருசியா இருந்தா தான் நமக்கு சாப்பாடு உள்ள போகும். இரண்டு நாள் காய்ச்சல் நடுவரே... நாக்கு கசந்து போய் சுவையே தெரியல. ரசம் கூட பிடிக்கல... சாப்பிடவே முடியல நடுவரே. அப்போ நாக்கு சுவை எந்த அளவு எனக்கு முக்கியமா இருக்குன்னு பாருங்க. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

/நடுவர் ஒருபக்கமா சாய்கிறார்..சாய்கிறார்.. புடிங்க‌..புடிங்க‌../
சாயவிடமாட்டோம்ல.

ஒரு கிட்சென் ப்ரொக்ரம். அதில சமைக்கும் ஆண்களைவிட அதனை ருசி பார்க்கும் ஆண் நடுவர்கள் தான் அசத்துகின்றனர். எப்படி ஒவ்வொரு பருக்கை பருக்கையாய் ருசி பார்க்கின்றனர். இந்த இடத்தில் flavour அதிகம். இங்கு எதும் ஒட்டவில்ல என்று பிரித்து பிரித்து ருசி பார்க்கின்றனர். இப்படி பிரித்தரிய ஆண்களால் மட்டுமே முடியும்.

/தாத்தா காலம், அப்பா காலம்/
யாரு விட்டா உம்ம முதல்ல ருசிச்சு சாப்பிட்டுப் பார்க்க? முதல்ல ஆண்கள் சாப்பிடனும், பிறகு தான் பெண்கள். அவசரமா டேஸ்ட் பாத்தோம, பந்தியில வெச்சோமனு இருப்பங்க.

No pains,No gains

ANANTHAGOWRI.G

சில தவிர்க்கமுடியாத காரணிகளால் பட்டிமன்றத்திற்கு சரியான நேரத்தில் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

தோழிகள் வாதத்தில் என்னை திணற வைத்திருப்பீர்கள் என்று பார்த்தால் எல்லோரும் வியாழக்கிழமைக்கு அப்புறம் அறுசுவைக்கு லீவ் விட்டுட்டு திரும்பி வரலை போல.......

சரி இந்தியாவில் மூன்று நாட்கள் லீவ் அதனால் திங்கள் வரை விடுவோம் என்று பார்த்தால் பதிவேதும் இல்லாததால் இருக்கும் பதிவிற்கு மட்டும் விளக்கமளித்து, பட்டிமன்றத்தை முடித்து தீர்ப்பையும் வெளியிடுகிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எங்கே பாராட்டோணும்,எங்கே வாய் மூடி இருக்கோணும் தெரியாதவயங்களா.....எல்லாம் பார்த்து சூதானமா நடக்கோணும் சொல்லி தானே கண்ணாலம் கட்டி விட்டிருப்பாங்க வீட்ல......

ஆண்கள் பாவம் கிணற்று தவளை போல நண்பர்கள் மட்டும் தான்.....நமக்கு அப்படியா ? அக்கம் பக்கத்துக்கு வீடு, டிவி,ரேடியோ,நியூஸ் பேப்பர், மேகசின், அப்படின்னு இப்படின்னு நாள் பூரா தகவல் தர தான் ஆயிரம் இருக்கே.....

இப்படி நடுவரையும் தின்னி பண்டாரம் என்று ஆதாரத்துடன் விளக்கியமைக்கு நன்றி >:(<

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நூறாவது பட்டிமன்றத்தில் வாதத்தை பதித்ததற்கு நன்றிகள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவருக்கு வயசாவுதோன்னோ அதனால் தான் நேராக உட்கார்ந்த குறுக்கு வலிக்குது,நான் இப்படி சாய்ந்து உட்கார்ந்து நீங்க சொல்லறதை தான் "ஊம்" கொட்டி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

என்கிட்டேயும் கூட சொல்லியிருக்க அதனால் தான் மாஞ்சி மாஞ்சி நானும் செய்து இடம் பிடிக்க இன்னமும் முயற்சி செய்யறேன்.......மிடியலை..........

அதே இலையில்/தட்டில் சாப்பிடுவதற்கு இது தான் அர்த்தமோ நான் கூட வேலை மிச்சம் பண்ண தான் என்று நினைத்திருந்தேன்......பாருங்க எப்படி வெகுளியா வளர்த்திருக்காங்க.....

அப்போ நீங்க சொல்றதை பார்த்தா அந்த காலத்தில் சொல்லாமல் (தங்க வளையல்) போட்டிருவாங்க, இப்போ சொல்றது மட்டும் தான்......ஹ்ம்ம்.....

ஹெல்ப் பண்றது சுவையான இல்லை சின்ன திருத்தம் வீட்டு சாப்பாடாவது கிடைக்குமே அதுக்கு தான்.....

நோ....நீங்க என்னை தவறாக புரிந்து வைத்திருக்கேள் .......நேக்கு இந்த காபி முறுக்கு சாமாச்சாரம் பிடிக்காது......அது எங்க புக்காத்து பழக்கமாக்கும்......

எனக்கு ஒரு சந்தேகம்.....டயட் என்று என் நம் அன்பர்கள் யாருமே தென்னிந்திய உணவை சுட்டி காட்டவில்லை? (இதற்க்கு ஒரு தனி பட்டி மன்றம் தான்!)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

// ஸேவிச்சுக்கறேன்// புரியறது...... சரி நன்னா இருங்கோ....

//நன்னா இருங்கோ, ஷேம்மா இருங்கோ.// கொழப்புறேளே மாமி.......

இரண்டு வாரம் விடலாம் தான் நடத்த நான் தயார் வாதாட நீங்க தயாரா? பாருங்க மூன்று நாள் லீவுக்கே பூட்டு போட்டுட்டு போயிட்டா.....

அதையே தான் எதிரணியினரும் சொல்றாங்கோ........ஆண்களும் அனைவர் செய்யும் சமையலின் சுவையும் அத்துபடியாமே?......இல்ல தெரியாம தான் கேக்குறேன்......அவாஅவா ஆத்துக்காரி சமையலில் எது பெஸ்ட்....யாரும் சொல்ல மாற்றாலோன்னோ?

ஓ ......இப்போ தான் நேக்கு நன்னா புரியறது......நீங்க ரெண்டு பேறும் அப்படியா? ஷரி ஷரி ......நோட் பண்ணிட்டேன்.......யார் ஆத்துலேயும் கூச்சமே படறதில்லை......ஷமத்து.....

எல்லா வாய்சும் மாத்தி மாத்தி படிச்சி நடுவருக்கு தொண்டை கட்டிடுது.......சுக்கு காபி கிடைக்குமா மாமி?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

// “சூப்பர்மா சமையல்”// உண்மையைத்தானே சொல்றாங்க......

உங்க வீட்ல அப்படியா......இங்கே தலைகீழ்.......நான் தான் இப்போ உப்பு உறைப்பு இல்லைனாலும் முழுங்கிடுவேன் :(

பின்னே இப்படி ருசியா சாப்பிட்டா......(நாக்குக்கும்) ரெஸ்ட் வேணாமா? அதான் ஸ்ட்ரைக் நடத்துது......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்